கதைகளோடு கற்பனைகளையும் சேர்த்து கொண்டு கதாபாத்திரங்களை வைத்து பொழுதைப் போக்கும் படங்கள் ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்றன.  
 
pariyerum perumal 260சமூகத்தில் நிலவும் சிக்கல்களை சமூக மாற்றத்திற்கான பார்வையோடு வெளிக்கொண்டுவரும் திரைப்படங்கள் அவ்வப்போது வருவதுண்டு.  அப்படி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "பரியேறும் பெருமாள் பிஏபிஎல் மேல் ஒரு கோடு".
 
உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும், இதுவரை ஊடகங்களால் பேசப்படாத  மாணவர்களின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டுகிறார் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ்.
 
தனது கலைப் படைப்புகள் மட்டுமல்லாது களத்திலும் தனது கருத்தை உரக்கச் சொல்லி சமூகத்தின் பார்வையை தன் மீது விழச் செய்த இயக்குனர் ப ரஞ்சித் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
 
 தயாரிப்பாளரையும் இயக்குனரையும் பாராட்டும் பல அம்சங்கள் இந்த திரைப்படத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
 
 சாதிய வன்மம், மொழி அரசியல், ஊரக நகரிய மாணவர்களுக்கு இடையேயான சிக்கல்கள் என பல கோணங்களில் உயர்கல்வி நிறுவனங்களில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் இயக்குனர்.
 
சாதிய அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் பரியன் என்றும் KSL என்றும் கதாபாத்திரங்களுக்கு பெயரிட்டு கல்லூரிகளுக்குள் நடக்கும் சாதிய வன்முறைகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் இயக்குனர்.
 
உயர்கல்வி நிறுவனங்களில் பணி செய்யும் கல்வியாளர்களின் சாதி ரீதியான வன்மமான மனநிலையை,  இட ஒதுக்கீட்டின் நியாயங்களை மறுக்கும் உயர்சாதி மனநிலையை பல காட்சிகள்  படம்பிடித்து காட்டுகிறது.
 
சமூகத்தில் நிலவும் சாதி ஆணவக் கொலைகள் எந்த மனநிலையில் செய்யப்படுகிறது என்பதை கொலைகார தாத்தா கதாப்பாத்திரம் வெளிப்படுகிறது. கொலைகார தாத்தாவின் லாவகமான கொலைகள் மனதை பதைபதைக்கச் செய்கிறது.   "நான் கூலிக்காக கொலை செய்வதில்லை நம்ம குல  சாமிக்கு செய்யற பணியா நினைச்சுத்தான் இதை செஞ்சுக்கிட்டு இருக்கேன்" என்று  கொலைகார தாத்தா பேசும் வசனங்கள் சமூகத்தில் நிலவும் ஆணவக் கொலைக்கான  நியாயங்களாக இன்றும் கற்பிக்கப்படுவதை உணர முடிகிறது. சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இன்னுமொரு பெரியார் வர மாட்டாரா என்ற ஏக்கத்தை வரவழைக்கிறது. 
 
இந்து மதத்தின் இடை சாதி பெண்ணை காதலிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பையன் எப்படி எல்லாம் ஆதிக்க சாதி வெறியர்களால் அவமானப் படுத்தப் படுகிறான் என்பதை பரியன் கதாபாத்திரத்தை கொண்டு மிக உருக்கமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
 
"இப்படி எல்லாமா நடக்கும்?" என்று சமூகத்திற்கு தெரியாத பல்வேறு அவலங்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
 
 கரகாட்ட கலைஞர்களின் வாழ்வியலை காட்டும் ஒரே ஒரு காட்சி நம்மை நெகிழச் செய்கிறது.
 
இளவரசன் திவ்யா, சங்கர்  கௌசல்யா என சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளான இளம் காதல் ஜோடிகளை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது ஒரு பாடல் காட்சி.
 
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, சாதிப் பெருமிதங்களுக்காக, நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளின் தாக்கங்களை தனது அபாரமான நடிப்பாற்றல் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் படத்தின் நாயகன்.
 
 பாரதி கண்ணம்மா போன்ற திரைப்படங்கள் உயர்சாதி மனநிலை கொண்ட மனிதர்களுக்கும் அவர்களிடம் விசுவாசமாக நடந்து கொள்ளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையேயான வாழ்வியலை காட்டியது என்றால் "பரியேறும் பெருமாள் பிஏபிஎல்" கல்வி நிறுவனங்களில் நிகழ்த்தப்படும் சாதிக் கொடுமைகளை சுட்டிக்காட்டுகிறது.
 
வேதம் புதிது திரைப்படத்தில் "பாலு என்பது உங்கள் பெயர் தேவர் என்பது நீங்க படிச்சு வாங்குன பட்டமா?" என்ற வசனத்தின் மூலம் ஒரு பார்ப்பன பையனிடம் பாடம் கற்கும் இடை சாதி வகுப்பு, " நீங்க நீங்களா இருக்கிற வரைக்கும் நாங்க நாயா தான் இருக்கணும்" என்ற வசனத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட இளைஞர் இடமிருந்து பாடம் கற்க வைத்திருக்கிறது இத்திரைப்படம்.
 
பார்ப்பனியம் புரையோடிப்போயுள்ள சமுதாயத்தில் சாதிப் படிநிலைகளில் ஆக கீழ் உள்ளவர்களின் குரலாக அவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய எந்த ஒன்றும் மறுக்கப்படும் போது அவர்கள் காட்டும் எதிர்வினை அவர்களின் எதிர்வினைக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் வன்முறை வெறியாட்டங்கள் எல்லாவற்றையும் நம்முன் படைத்திருக்கிறார் இயக்குனர்.
 
  இளைஞர்களிடம் தொற்றிக்கொண்டுள்ள சாதிப் பெருமிதங்கள்,  கலர்கலராக கைகளில் கயிறுகளை கட்டிக் கொண்டு தங்களது சாதியை வெளிப்படுத்திக்கொண்டு திரியும் அவல நிலை இவைகளிலிருந்து எல்லாம் இளைஞர்களை  நெறிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை, அவர்களிடம் விவாதிக்க வேண்டிய செய்திகளை முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கு சுட்டிக்காட்டுகிறது இத்திரைப்படம்.
 
திரையில் சென்று காணுங்கள்.
 
- மெய்ச்சுடர், பேராவூரணி