சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை
நமக்கெல்லாம் உயிரின் வாதை.


Road workersபாவேந்தர் பாரதிதாசன் (‘புரட்சிக்கவி’யில்)

அது அந்தக் காலத்தில் மிகவும் பேசப்பட்ட திரைப்படம். வீட்டில் அவரது பெண்ணை மணம் பேசி முடிக்க மதியம் மாப்பிள்ளை வீட்டார் வர இருக்கிறார்கள். எப்போதும் போல் அன்றும் காலையில் வேலைக்குப் போகிறான் கதாநாயகன். மகாலட்சுமி பாங்க் வாசலில் ஒரே கூட்டம். கூட்டத்தை விலக்கிப் பார்த்தால் திறந்து இருக்க வேண்டிய அலுவலகத் கதவுகள் இழுத்தப் பூட்டப்பட்டு இருக்கும். அதில் ஒட்டப்பட்ட நோடீயைப் படிக்கவே அத்தனை கூட்டம். இடி விழுகிறது அவன் தலையில். வங்கி திவால். அவனது வேலை போய்விட்டது. போயே விட்டது. அவன் எப்படி, எந்த முகத்தோடு வீட்டுக்குப் போக முடியும்... தற்கொலை என்ற முடிவுக்குப் போகிறான். தற்கொலைக்குப் பிறகு தன் குடும்பம் எப்படி திணறி திண்டாடி நாசமாகிறது என்பதை, ஆவி உருவத்தில் பார்த்து அவன் துடிக்கிற மாதிரி போகிறது படம். ‘முதல் தேதி’ வெறும் திரைப்படம். படம் பார்த்து அந்த அவஸ்தையில் கொஞ்சம் உறைந்தாலும் நிஜ வாழ்க்கைக்குத் திரும்பிவிட அதிக நேரம் பிடிப்பதில்லை. உண்மையான வாழ்க்கைதான் அதைவிட கொடூரமாக நின்று மிரட்டுகிறது.

ஒரு ஜோடி கால்கள் உலகின் அடுத்த முனையைத் தொடுகிற வேகத்தில் நடந்து கொண்டே இருக்கின்றன. மழிக்காத முகம். பார்க்கிறவரை சுட்டு துளைபோட்டு ஊடுருவுவது போன்ற கண்கள். சொற்களையும் சொந்த உலகத்தையும் இழந்து ஒரு சித்தரைப் போல காற்றிடம் பேசிக் கொண்டு நம்மைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறார். அவர், திண்டுக்கல் நாக்ராஜ் சாலை பணியாளராக இருந்தார் என்பதை வேறு யாராவது தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ‘என்னிடம் பேச ஒன்றுமில்லை’ என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டுப் போகிற அவரது தாயிடம் கோபித்துக் கொள்ள என்ன இருக்கிறது அல்லது ஆறுதல் சொல்ல என்ன விட்டுவைத்திருக்கிறது நமக்கு.

கொல்கிறது ஒரு சிறுமியின் அப்பாவிப் புன்னகை. தாயின் சேலையோடு தன்னை இழைத்துக் கொள்கிற அந்தக் குழந்தை தந்தையைப் பறியோடு தன்னை இழைத்துக் கொள்கிற அந்தக் குழந்தை தந்தையைப் பறிகொடுத்துவிட்டது. இன்னொரு வீடு இன்னொரு குழந்தை. தீப்பெட்டி அடுக்கிக் கொண்டிருக்கிறது. வேறு ஒரு வீடு. மற்றுமொரு குழந்தை. கள்ளம் கபடமில்லாமல் உலர்ந்த சிரிப்போடு நம்மை நோக்குகிறது. இற்று அறுந்து விழுகிறது நமது மனசு.

மனிதர்கள், மனிதர்கள், வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்... நிரம்பி நிற்கிறார்கள் திரையில். சாத்தூர் தமுஎச கிளையின் ‘இரவுகள் உடையும்’ நாம் தவிர்க்க விரும்புகிற கேள்விகளைச் சுற்றித்தான் பின்னப் பட்டிருக்கிறது. நீட்டி முழக்கப்படுகிற உலகமயம் சாதாரண மக்கள் வாழ்வை ஈவிரக்கமின்றி கூறு போடுவதை மிக மெல்லிய குரலில் நாம் நிராகரித்துவிட முடியாத களத்தில் நின்று கொண்டு நம்மோடு பேசுகிறது.

‘ஒரு மூன்று வயது குழந்தையை, நம்பி வீட்டில் தனியாக விட்டு விட்டுப் போகமுடியும். இவர விட்டுவிட்டுப் போகமுடியாது’ என்று கண்ணீர் கசிய சொல்கிற ஒட்டபிடாரம் வீரப்பனின் மனைவி கரி மூட்டை சுமந்து குடும்பத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார். வீரப்பனோ, தான் இன்னும் வேலையில் இருப்பதாகவே உணர்கிற மனநிலையில் தொடர்பற்ற செய்திகளை யோசித்து யோசித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய தாய் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத வயதில், வயதில், ‘அய்யோ எம்புள்ள கூமுட்டையாப் போயிட்டே எப்படி இருப்பான். ரொம்ப நல்லவன் சார், நல்ல கொணம்..’ என்று கதறிக் கொண்டிருக்கிறார்.

ஒரு மெழுகுச்சுடர் ஒளிர்கிறது திரையில். அதன் தழலைவிட, பார்ப்பவர் கவனம், மோதும் காற்றில் அந்தச் தழல் அலைபாய்வதில் போய் நிலைபெறுகிறது. இப்போது சுடர் பேசத் துவங்குகிறது. எதிர்பாராத தொடக்கக் காட்சியில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் சாலைப் பணியாளர் மாநாட்டில் இப்படி தமது பேச்சைத் துவக்குகிறார். ‘நீங்க கதையெல்லாம் படிப்பீங்களா, உங்க கதைய தான் சொல்லப் போறேன்’ கவித்துமான முன்னோட்டமாக அமைகிறது இது. சின்னஞ்சிறு புகைப்படங்கள், நாளேட்டு செய்திகள் என இலகுவாக அடையாளம் காட்டப்படுகிறது உலகமயம்.

கடலூரில் ராணுவப் பணியில் சேர முட்டி மோதும் இளைஞர் பட்டாளத்திலிருந்து விடுதலை பெற்றுச் சிதறிப் போய்விழும் செருப்புகள், பன்னாட்டு நிறுவனத்தின் பணியாளர்களை அடித்து நிமிர்த்தும் உள்நாட்டு காவல் துறை, வறண்ட கிராமத்திலிருந்து சூனியத்தை வெறிக்கும் கண்கள்...என காட்சித் தொகுப்புகளில் உலகமய கேன்வாஸ் கவனத்தோடு படிவமைக்கப்பட்டுவிடுவதால், சாலைப் பணியாளர் சித்திரம் அதன் மீது நேர்த்தியாக அமர்ந்து கொள்கிறது.

ஆவணப் படத்திற்கான வரையறை இருப்பதால் வெறும் உணர்ச்சிக் கலவையாக இதை உருவாக்கி விடக் கூடாதென்ற எச்சரிகையும் தேவைப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஆவணமாகிற விஷயங்களும் உறுத்தாத இசையின் பின்புலத்தில் அலுப்பூட்டாத வண்ணம் வந்து போகின்றன.

எந்தச் செலவுமின்றி தகுதி அடிப்படையில் கிடைத்த வேலையின் சந்தோஷ கணங்களை மறக்கவில்லை யாரும். சங்கத் தலைவர் சண்முக ராஜாவும் பொதுச் செயலாளர் மாரிமுத்துவும், உபரி பாத்திரங்களாகத் துருத்தி நிற்காமல் ‘கதை சொல்லி’ சுடரின் இளைய சகோதரர்களாகி விடுகின்றனர். சாலைப் பணியாளரின் வேலைகல் தான் என்ன என்பதும் கட்சியுருவில் சொல்லப்படும்போது அவர்களின் இன்றியமையாமையை அங்கீகரிக்கிறார் பார்வையாளர். வெள்ளம் அரிக்கிற சாலையைப் பழுதுபார்த்து செப்பனிட நள்ளிரவு கதவு தட்டலுக்கும் தயாராயிருக்கிற பிறவியாக இயங்கிவன் தான் அவன். அப்படியானதொரு இரவில் போடப்படுகிற ஒரு கையெழுத்து அவனது வேலையைப் பறித்து வாழ்கைக் குடிக்கும் நஞ்சாக வந்து சேருகிறது.

முடிவற்றதான் சங்கிலித் தொடர் போன்ற இந்தப் பயணத்தில் தாள மாட்டாத சோகமும், பரிதவிப்பும் கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும், வாழ்வை எதிர்கொள்கிற நம்பிக்கை கீற்றுகள், கணவனின் மறைவைப் பேசியபடியே தீப்பெட்டி ஒட்டுகிற பெண்ணின் கைவழியாக பளிச்சிட்டுக் கொண்டிருக்கின்றன.

‘ஏன் இந்த வேலை போனது, என்னது அந்த உலக மயம்’ என்ற கேள்விக்குப் பதில் தெரியாத குடும்பங்கள் வெற்றுப் பார்வைகளைத் திருப்புகின்றன. தொழிற்சங்கம் விளக்குகிறது. வேலையை மீட்டெடுக்கின்றனர் சாலைப் பணியாளர்கள். ஆனால் 10000 பேர் நடந்து வந்த பயணத்தில் திரும்பிப் பார்க்கையில் ஒரு எண்பது பேர் போல காணவில்லை. அவர்களில் ஒருவர் கருப்பசாமி. கடைசி காட்சியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகளில் கருப்பசாமியின் வாரிசுகளும் அவர்களை நோக்கிப் போய் விழுகிறது ஒருகேள்வி: ‘அப்பா எங்கே..!’ பதில் இல்லை. மாறுகிற முக பாவங்களும் வீட்டை நோக்கிய நடையும்.. இந்தக் கேள்வி இரக்கமற்றதோ என்று பட்டது. ஆனால் இன்னும் காலத்திற்கும் அவர்கள் மீது வாட்டுகிற கேள்வியாக இது வந்து விழக்கூடும். பத்தாயிரம் பேரை எடுத்தேன். திரும்ப வேலை கொடுத்தேன் என்கிற அரசியல் சாதுர்யங்களிலிருந்து கசியும் ரத்தம் யாருடையது என்பது அம்பலமாகிறது.

சமகாலத்தில் நிகழ்ந்திருக்கும் வன்முறை – உலகமய வன்முறை – அரசியல், சமூக, பொருளாதார தளங்களில் உரிய பரிமாணத்தோடு பதிவாகி இருப்பது குறும்படங்களின் சாத்தியங்களை பிரமிப்போடு நோக்க வைக்கிறது. தொடக்க முயற்சியிலேயே இத்தனை உருக்கத்தை, ஆவேசத்தை, சிந்தனையைக் கிளர்த்த முடிந்திருப்பது இன்னும் தேர்ந்த படைப்புகளுக்கான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. நேரடி தொடர்புள்ள அரசியல்வாதிகளை, கட்சிகளை கொச்சையாக அடையாளம் காட்டுவதைத் தவிர்த்து, அடிப்படை அரசியலை இனம் காண எடுத்துக்கொண்ட இடதுசாரிப் பார்வை பாராட்டுதலுக்கு உரியதாகிறது.

சாத்தூர் தமுஎச கிளை, கரிசல் வழங்கும் ‘இரவுகள் உடையும்’ ஆவணப் படம்
இயக்கம்: மாதவராஜ்
ஒளிப்பதிவு: ப்ரியா சக்தி
விலை: ரூ.75
வெளிநாட்டு வாசகர்களுக்கு: ரூ.200
அணுகவேண்டிய முகவரி:
தமுஎச கிளை,
720, மெயின் ரோடு,
சாத்தூர் - 626203,
விருதுநகர் மாவட்டம்.

Pin It