pariyerum perumal

மனிதன் ஒரு சமூக விலங்கு என்றார் அரிஸ்டாட்டில். அதனோடு சேர்த்து சமூகம் ஒரு மனித விலங்கு என்று தனது கருத்தைப் பதிவு செய்கிறார் புதுமுக இயக்குநர் "மாரி செல்வராஜ்".

சாதியம் வேண்டாமென்றாலும் சரி, சாதியத்தைத் தூண்டிவிட வேண்டுமென்றாலும் சரி சாதியைப் பற்றி அவசியம் பேசித்தான் தீர வேண்டும். சாதியம் என்பது பேச்சில் மட்டுமே தீர்ந்துவிடக் கூடிய பிரச்சினை அல்ல என்னும் விடயம் நம் மனதில் நிலைநிறுத்தப்பட வேண்டிய ஒன்று . பிரச்சினை என்பது தனிப்பட்டதாகவோ அல்லது சமூகம் சார்ந்தோ இருக்கலாம். எப்பேர்ப்பட்ட பிரச்சினையாக இருப்பினும் அதற்கென ஒரு தீர்வு நிச்சயம் உண்டு. அத்தகைய சமூகப் பிரச்சினைகளுள் தலையாய ஒன்றான சாதியம் ரீதியான பிரச்சினையினைக் கலந்தாலோசிப்பதற்கான ஒரு முன்னெடுப்பென இத்திரைப்படத்தினைக் குறிப்பிடலாம்.

ஒரு நீண்ட கம்பின் முனையில் துணி சுற்றி தீப்பந்தமாக்கி , அதை மனதின் உக்கிரங்களில் தோய்த்தெடுத்து மிகுந்த வலியோடு பற்ற வைத்து உயர்த்திப் பிடித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இன்றியமையாத தனது இருப்பை பெரும்பான்மையான காட்சிகளில் உச்சபட்சமாகப் பதிவு செய்து தன்னை முன்நிறுத்திக்கொள்ள முயன்று, அதற்காய் அறிவின் மெனக்கெடல்களை முதலீடு செய்துள்ளார்.

படத்தைப் பொருத்தவரை, உள்ளீடென்பது பழைமையானதாக இருப்பினும் மலர்ச்சியான சில உயிரோட்டம் நிறைந்த கதாபாத்திரங்களின் தேர்வும், அவர்களின் மெச்சும்படியான நடிப்பும், தெளிவானதும் நுணுக்கமானதுமான கதையமைப்பும் , கலைசார்ந்த நுண்ணுணர்வும் இத்திரைப்படத்திற்கு வலிமையான அடித்தளத்தை தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டுள்ளன.

முதல் காட்சியிலேயே கருப்பியைத் தொலைத்தாலும், கைப்படாமல் பருகும் காட்சியில் பரியனும், வில்லனும் கருப்பியை நினைவுபடுத்துகிறார்கள். இருவரும் பரிசுத்தமான நீரைத்தான் ஒன்றுபோல் பருகுகிறார்கள். ஆனால் , அவற்றுள் நீர் பருகும் ஒரு மனிதனின் உடலெங்கும் நீலம் வியாபிக்கிறது . மற்றொருவனது உடலின் ஒவ்வொரு அணுவிலும் அதே நீர் சாதிக் கொலையினைத் தூண்டும் செஞ்சிவப்பாக நிறம்கொள்கிறது. பெரிதென ஒரு காரணமுமின்றி விசுக்கென எண்ணற்ற எண்ண அலைகளை மலர்த்துகிறது இக்காட்சி. மனதின் ஆழத்தில் இக்காட்சி அவ்வளவு பாதிப்பை உண்டு செய்கிறது. மனிதனும், மிருகமும் ...வலியதும் , எளியதும்... அமுதமும், விஷமும்....இப்படியாய் நீண்டுகொண்டே செல்கிறது கற்பனை.

pariyerum perumal 1பரியன் கதாபாத்திரம் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மொத்த வலியினையும் படம் முழுக்க சுமந்து அலைகிறது. சாதியல் சகதியில் பரியனைப் புரட்டி பாடாய்ப் படுத்தும் ஒவ்வொரு காட்சியும் ஆடையுருவி அவமானப்படுத்துவதைக் காட்டிலும் கூடுதல் வலியை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட ஒரு மனிதனை மீண்டும் மீண்டும் சம்மட்டியால் அடிப்பது போன்றதான மரணவேதனை அது.

வில்லன் கதாபாத்திரமானது முழுக்க முழுக்க சாதி மற்றும் மரணத்தின் குறியீடாக உலவுகிறது. சில காட்சிகள்தான். ஆனாலும் பரியன் தந்தைக்கு அடுத்தபடியான நல்ல கனமான கதாபாத்திரம்.

திரைப்படத்தின் நாயகனான பரியனின் தந்தையை நாம் தரிசிக்கும் காட்சிகள் சொற்பமேயானாலும், ஒவ்வொரு காட்சியிலும் இதயத்தின் "லப்டப்" மத்தியில் விதவிதமான அதிர்வலைகள் அனிச்சையாய்த் தோன்றி விரிகின்றன. ஒவ்வொரு அதிர்வும் கனமாய் கனக்கிறது. பரியனின் வலியானது படம் முழுக்க தொடர்ந்தாலும் , ஒரு சில காட்சிகளில் மட்டுமே வாழ அனுமதிக்கப்பட்ட பரியனின் தந்தை கதாபாத்திரம் பசிய அச்சுபோல் தெள்ளத்தெளிவாக மனதில் பதிகிறது. பரியனின் கலைநயமிக்க தாயுமானவன், சட்டக்கல்லூரியில் சந்திக்கும் சம்பவம் பிரசவ வலியினை உள்வாங்கும் உணர்வினை மனதினுள் உண்டுசெய்கிறது. ஒருபோதும் செரிக்க முடியாத உச்சகட்ட வலி அது.

நிர்வாணம் என்பது ஒவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொரு மாதிரி. ஆனால், நிர்வாணம் நிர்வாணம்தான். தனித்திருக்கும் சூழலில் தனித்திருக்கும் ஒருவர் நிம்மதியாய் அனுபவிக்கும் உடலியல் அழகுதான் நிர்வாணம். சாதியல் ரீதியாய் அப்பேர்ப்பட்ட அழகியல் குத்திக் குதறப்பட்டு நடுத்தெருவில் அநாதையாய் ....நிராதரவாய்.. ஓடுவதைக் காண்கையில் மனிதம் மிகுந்த எப்பேர்ப்பட்ட மனமும் குலைநடுங்கிச் சாகும். தன் வாழ்வியலில் மிகப்பெரும் உடலியல் அவமானத்தைச் சந்திக்கும் ஒரு தாய்க்கலைஞனை ஆதரவுடன் தழுவி அவனுடன் கைகோர்க்க ஒரு நாதியுமற்ற சூழல் நிலவும் தருணமென்பது , அவனது சொச்ச உயிரும் அனுபவிக்கும் வேதனையின் உச்சம். "The Pianist" திரைப்படத்தில், கண்முன் பியானோ இருந்தும் அதை வாசிக்க இயலாத ஒரு அடக்குமுறை சூழலில் , கைவிரல்களை வெறும் காற்றில் இயக்கி வாசிக்க முயற்சித்த ஒரு கலைஞனின் வலியை நமக்கு நினைவுகூர்கிறது.

ஒரு சமூகத்தின் மீதான ஒடுக்குமுறை என்பது வெறும் மக்கள் மீதான ஒடுக்குமுறை மட்டுமன்று. அவர்களது பிரதானக் கலையின் மீதான ஒடுக்குமுறையும் கூட. ஒவ்வொரு இனமும் வாழும்வரை அவர்களின் கலையும் உயிர்வாழும். ஒரு சகமனிதனை, அவனது கலையை அவமதிக்கும் உரிமையைத் தான்தோன்றித்தனமாய்க் கையிலெடுக்கும் ஓர் ஆதிக்க வர்க்கத்திற்கு அஹிம்சை முறையில் ஹிம்சை தருகிற வசனங்கள் அளவுமீறாமல் படக்காட்சிகளில் இடம்பெற்றுள்ளது சிறப்பு.

கருப்பியுடனான கதாபாத்திரங்களின் வாழ்வு ஒரு பாடலோடு முடிந்துபோனது சற்றே ஏமாற்றமளிக்கக் கூடியதாக இருந்தது. ஏனெனில் "பரியேறும் பெருமாள்" போஸ்டரானது , எண்ணற்ற எதிர்பார்ப்புகளுக்கிடையே கதாபாத்திரங்களுக்கும் , கருப்பிக்கிடையேயுமான வாழ்வு சற்றேனும் நீண்டிருக்குமென்ற எண்ணம் மனதில் தவிர்க்க இயலாத ஒரு எதிர்பார்ப்பை அரும்பச் செய்திருந்தது.

பாடல் வரிகள் , படக்காட்சியோடும் கதையோடும் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன. அந்தந்த பாடலுக்குத் தகுந்தாற்போல் மெருகேற்றியுள்ளது இசை.

இத்திரைப்படத்தில் , சாதியத்தைத் தாண்டிய ஓர் அற்புதமான மனிதம் அழகியல் நிறைந்ததாகவும், எதார்த்தமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மனிதம் மிகுந்த வெள்ளந்தி மனம் "ஆனந்தி". இவள் "ஜோ"வாக மாற , இன்னும் கூடுதல் அழுத்தம் இருந்திருக்க வேண்டும். பரியனின் தந்தை பற்றிய விவரணைகளை சிவாஜியின் பாவனைகளுடன் உள்வாங்கும் "சண்முகராஜா" கதாபாத்திரம் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே இடம்பெற்றிருப்பினும் தனக்குரிய போர்ஷனை மிகவும் நிறைவாய்ச் செய்திருக்கிறார். யோகிபாபு கதாபாத்திரமானது படத்தின் இறுக்கத்தை தளர்த்தி அவ்வப்போது நம்மைக் குதூகலிப்பில் ஆழ்த்தியதோடு, சாதியம் தாண்டி தன் நண்பனுடன் கைகோர்த்து எதிரியை சீரியஸாகத் தாக்கத் தயாராகும் ஒரு காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.

ஒவ்வொரு சினிமாவும் சொல்லிவிட்டுப்போன கதைகளையே இப்படம் சொல்லியிருப்பினும், சில சொல்லப்படாத மற்றும் மனதை உலுக்கும் காட்சிகளையும் பரியன் பதிவு செய்திருப்பதன் மூலம் "பரியேறும் பெருமாள்" தனித்துவம் பெறுகிறது. க்ளைமாக்ஸில் தலித்தியத்தையும், ஆதிக்க வர்க்கத்தினரையும் மிகவும் எளிமையாக ஓர் உதிரிப்பூ மற்றும் இரு டீ க்ளாஸ் கொண்டு நிறைவு செய்திருப்பதில் நல்ல ஒரு கவித்துவம் இழையோடுகிறது.

சென்னை மெரீனாவில் , பெரும் தமிழினப் புரட்சியின் ஒருநாளில் அத்தனை மக்களையும் இருளில் தள்ளி வேடிக்கை பார்த்தது நம் அரசு. அந்தக் கரிய இரவில் , ஒரு கருப்பு நிழலானது கைப்பேசியின் சிறுஒளி ஏந்தி தனது இருப்பை உரக்கச் சொன்னபோது அதைத் தொடர்ந்து ஒரு பேரொளி முளைத்ததே அதுபோல் இச்சமூகம் இப்போது கைகோர்க்க வேண்டும். பேரொளி பூக்கவேண்டும். மனித மனங்கள் "புத்துயிர்ப்பு" பெறுமாயின் எவ்வகையான அசாதாரண நிகழ்வையும் நொடியில் நிகழ்த்திக் காட்ட இயலும்.

வாழ்த்துகள் Mari Selvaraj B.A.B.I மேல ஒரு கோடு and Team

- வான்மதி செந்தில்வாணன்

Pin It