நீங்கள் அடித்து விரட்டிய அதே பாம்பு அன்றிரவு படுக்கையில் உங்கள் பக்கத்தில் உங்களை கொத்தாமல் படுத்து உறங்கினால் அது பரியேறும் பெருமாளாய் படமெடுக்கும். 

சட்டென்று தும்பி பிடித்து விளையாடுவதில் இருந்து விலகுகிறது வெளிச்சம். ரயில் கூவும் கொலை வழிப் பயணத்தில்.... எல்லா ஊரிலும்... ஒரு காதலன்... ஒரு நண்பன்... ஒரு எதிரி.... ஒரு இல்லாதவன் படுத்திருக்கிறான். கறுப்பி என்ற நாயின் சாவில் துவங்குவது முடிவது அல்ல. அது நிலத்தின் ஆட்சி. நீலத்தின் நீட்சி. எல்லாவற்றுக்கும் ஒரு மூன்றாம் கண் பார்வையை சொல்லிக் கொடுத்திருக்கும் மேல் தட்டு மையத்தின் சுழற்சி... நீண்டு நீண்டு வட்டமிடுகையில் கழுகின் சிந்தனையை பூட்டிக் கொண்டிருக்கிறது என்று புரிகிறது.

pariyerum perumal 350எல்லாக் கோணங்களிலும் முக்கோணத்தையே எதிர் நோக்குதல்.. உளவியல் குறை. 

அது தான் இங்கே நடப்பது. அப்படித்தான் இந்த படத்தில்... கதை நாயகனை சுற்றி நடக்கும் அத்தனை சம்பவங்களும். எல்லாம் மாறி விட்டதாக நம்பிக் கொண்டிருக்கும் பூச்சாண்டித்தனத்தின் வாயிலில் நின்று கொண்டு தான் ஒரு கோப்பையில்... கருப்பு தேநீரும் ஒரு கோப்பையில்... பருப்பு தேநீரும் சரி சமமாக இருப்பது போன்ற பாவ்லாவை அசைத்துக் கொண்டிருக்கிறது உலகக் குடி.

புதிதாக...கற்பனையாக எதையும் இயக்குனர் சொல்லி விடவில்லை. தொடர்ந்து நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும் மூடத்தனமான அறிவற்ற கிறுக்குத்தனங்களைக் தான் கோர்வையாக்கி படியேற்றி இருக்கிறார். புள்ளி நகர்ந்தாலும் உயிர் இல்லை என்ற பொருள் தான் இங்கே அவனுக்கு வாழ்வின் நிதர்சனத்தை துப்பிக் காட்டுகிறது. பேரன்பின் விளிம்பில் நின்று கதை நாயகி படும் பாடு.... எதையோ மறைக்க முடியாமல்....அவளின் அழுகை இந்த பூமியில் மீண்டும் மீண்டும் ரத்தத்தையே சிந்துகிறது.

இப்பெல்லாம் யாருங்க அப்டி இருக்கா என்று சொன்னால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது. நம்மை நாமே மிதித்துக் கொள்வது. கீழே இருந்தவனின் வளர்ச்சியை மேலே இருக்கும் சிலர் ஒப்புக் கொள்வதில்லை. அவர்களுள் இனம் புரியாத கட்டவிழ்ப்பு நடக்கிறது. அது காலம் காலமாக பாட்டன் பூட்டன் சேர்த்து வைத்த திமிரும்.. தான் என்ற அகங்காரமும் என்று புரிபடாமல் இல்லை. எலும்பும் ரத்தமும் சதையும் அறிவும் உள்ள மனிதனுக்கு எத்தனை ஆண்டு தான் தன்மானம் இல்லாமல் இருக்கும். தனக்கு கீழே ஒரு சாரரை வைத்துக் கொண்டே இருப்பது ஒரு வகை வக்கிரத்தின் வடிகால். குரூரத்தின் செவ்வியல் நிலை. வீழ்ந்தவன் எழுகையில்.... இப்படித்தான் இருக்கும். மானுட சமச்சீர் தன்னை சமன் படுத்துகையில் மேலுள்ளோருக்கு எதுவெல்லாமோ எரியும். என்ன செய்ய. கீழுள்ளோன் இது வரை எரிந்திருக்கிறானே...

இருக்கும் கட்டுக்களை எல்லாம் படிப்பென்ற ஆயுதத்தின் வாயிலாக உடைத்துக் கொண்டு எவனாவது ஒருவன் மேலே வரும் போது அவனை உடலாலும் உள்ளத்தாலும் சிதைத்து, அவன் எது செய்தாலும் அதில் குற்றம் கண்டு பிடித்து.. அவனை இல்லாமல் செய்து அவனை பொருளாதார ரீதியில் துன்புறுத்தி... அவனை மீண்டும் கீழே தள்ளி அவன் மீது ஏறி அமர்ந்து கொள்ளும் புத்திக்கு தான்... சாதி என்று பெயர். இன்னமும் இரட்டை கோப்பை முறையை ஒழிக்க முடியவில்லை. இன்னமும் ஊருக்கு நடுவே இருக்கும் கோட்டை அழிக்க முடியவில்லை. கேட்டால் தமிழன் என்று வாய் கிழிய சொல்லிக் கொள்கிறோம். 

படத்தில் காட்டி இருக்கும் அந்த கிழவன்.. ஆம்..  கிழவன்தான். 

அவனில் தான் ஆதிக்க சாதியின் ஆணிவேர் இன்னும் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. கொம்பு சீவும் முக்தியின் மீசையைத் தாண்டி மூச்சு விடுகிறது ஆண்ட சாதியின் பெருமை. அது சதா கறுப்பிகளுக்கு கன்னி வைத்துக் கொண்டே இருக்கிறது. முதல் காட்சியிலேயே பேருந்தில் இருந்து ஒரு காதலனை தள்ளி விட்டு கொல்லுகையில் ஆணவக் கொலையின் அசல் வேறு மாதிரியும் இருக்கும் என்று தெரிகிறது.

சக மனிதனின் வளர்ச்சியில் தாங்கொணா சாதியைத் தனக்குள்ளே வளர்த்துக் கொண்டு அதற்கு கால் கைகள் முளைக்க செய்து ஒப்பனை பூட்டி வீதிக்கு வீதி நகரத்துக்கு நகர் கிராமத்துக்கு கிராமம் தூக்கி அலைகிறது. கிடைக்கும் சந்திலெல்லாம் தன் நிறத்தை ஊற்றி விட்டு ஓலமிட்டு தானும் நுகர்ந்து ஒதுங்கி வேடிக்கை பார்ப்பது காலத்தின் மன சரிவு. சமன்படா எண்ணத்தின் மேட்டிமைத் தத்துவத்தின் மேய்ச்சல் இப்படித்தான் தேநீர் கோப்பைகளில் நிறைந்து அலைந்து கொண்டிருக்கின்றன.

நட்பில் இருக்கும் போதே கதை நாயகனை வஞ்சமாக அறைக்குள் அடைத்து அடிப்பதும்... மேலே சிறுநீர் கழித்து அவனை மனதளவில் ஒடுக்குவதும் திட்ட மிட்ட சதியின் உச்சம். காதல் என்ற ஆயுதத்தின் மீது கொண்ட பயம். அது தான் வெறுப்பின் சின்னம். ஒதுக்குதலின் குரூரம் தன்னை இப்படித்தான் சிறுநீராக காட்டிக் கொள்ளும். அது சக மனிதனின் வாழ்வை சகிக்க இயலாதவர்களின் ஆயுதம். ஒரு மனிதனை படிக்க விடாமல் செய்ய எத்தனை வட்டங்கள்.... எத்தனை முக்கோணங்கள்....எத்தனை முட்டு சந்துகள்.....எத்தனை தியரிகள். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி தான் வர வேண்டி இருக்கிறது.... இல்லாதவன் வாழ்வு. அடிச்சா திருப்பி அடிக்கட்டுமே என்று சொல்லும் பிரின்சிபாலின் கதாபாத்திரம்.. அப்படிப்பட்டது. செருப்பு தைப்பவரின் மகனாக இருந்து இந்த  இடத்துக்கு வந்தவர்......என்கையில் அது முயற்சியின் ஊற்று என்று நம்பிக்கை ஊற்றுகிறது. 

என் சீட். என் ஊர்.. என் மண். என் காற்று. என் தண்ணீர்.. என் உலகம்....என்பதெல்லாம் அவுட் டேட்டட் ஸ்டேட்மென்ட் என்று இந்த கார்பரேட் உலகத்திலும் புரியாத மனிதர்களை சாதி கொண்டு எதையாவது நம்ப வைப்பது கீழ்த்தரமான அரசியல். அது தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. 

கதை நாயகியின் அப்பாவை கதை நாயகனும் அப்பா என்றுதான் அழைக்கிறான். ஆனால் அவரின் அடிமனதில் அப்பா இல்லவே இல்லை. இருப்பதெல்லாம்  மீசை கொண்ட நான்கு பேர்தான். சந்தேகமே அவரின் முதல் ஆயுதமாக இருக்கிறது. பெரும்பாலும் பெண் பிள்ளைகளின் அப்பாக்கள் ஆயுதமாக்கப்படுகிறார்கள்.... என்ற அரசியல் இங்கே அலசப்படுகிறது. இரு பக்கமும் மாட்டிக் கொண்டு சொந்த புத்தியை கடன் கொடுக்கும் கதை நாயகியின் அப்பா...நல்லவருக்கும் கெட்டவருக்கும் இடையே பலியானவர். அதை சமயோசிதமாக உருவி எடுக்கும் குள்ளநரிகள் சூழ் உலகு இது.

அவமானம்.... ஒரு மனிதனை இல்லாமல் செய்து விடும். அதைத்தான் இந்த படத்தில் கதை நாயகனுக்கு ஒவ்வொரு காட்சியிலும் எதிர்மறை பிம்பங்கள் செய்கின்றன.  வெறுங்கைகள் கொண்டு நிற்கையிலும் கைகளே ஆயுதம் என்று அவர்களே கதை நாயகனுக்கு கற்றுத் தருகிறார்கள். ஒதுங்கி ஒதுக்கி போகிறவனை அவர்களின் சந்தேகமும்... சமநிலை இன்மையும் தடுமாறும் புத்தியும் அவனை சதா கண் காணிக்கிறது. 

கதை நாயகி தேவதை தான். என்ன செய்வது.... தேவதைகள் சாத்தான்கள் வீட்டில் தான் பிறக்கிறார்கள். ஒற்றைக் கடவுள் உள்ளூர அழுது தான் தீர்க்க வேண்டி இருக்கிறது.

இந்த படத்தில் மிக முக்கியமான காட்சி கதை நாயகனின் அப்பாவின் காட்சிகள்தான். அது மிகைப்படுத்தப்பட்டது அல்ல. எல்லா ஊரிலும் ஒரு வீட்டில் அப்படி ஒரு அப்பா இருக்கிறார். நான் எங்களூரில் பார்த்திருக்கிறேன். நிறைய கேள்விகளுக்கு அவரிடம் பதில் தேடி இருக்கிறது ஊர். ஆனால் அவரைப் போன்றோருக்கு கேள்விகளே இல்லை என்பதுதான் நிம்மதி. மனம் உடைந்து இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்தேன். விழும் முன் துடைத்துக்கொண்ட கண்ணீரில்...ஒதுக்கப்பட்ட தேநீரின் சுவை. நான் அறிந்ததை நீங்கள் அறிவீர்களா நேற்று தெரியவிலலை. பரியேறிய பெருமாளின் வெள்ளை சட்டையில் அன்பும் தூய்மையும் மட்டுமே.... எனக்கு புரிகிறது.

ஆயுதங்களில் என்ன இருக்கிறது. அதை ஏந்தும் தத்துவங்களில் தான் வரலாறு இருக்கிறது.

- கவிஜி

Pin It