thupparivalan

பிசாசுக்கு அப்புறமா வர்ற மிஷ்கின் படம். மிஷ்கின் இதுவரை எடுத்த படங்கள்லயே முகமூடியைத் தவிர எதுவுமே மொக்கை இல்ல. இந்தத் துப்பறிவாளனும் அவருடைய ஸ்டைல்ல வந்துருக்க ஒரு நல்ல படம்தான்.

கணியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ் ஒரு நாயின் மர்ம மரணத்தை துப்புத் துலக்க செல்லும் இடத்தில் சில மரணங்கள் ஏற்படுத்திய மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார். அது நமக்கு ஆங்காங்கே மிஷ்கினின் பழைய திரைப்படங்களை நினைவுபடுத்தியபடியே இருந்தாலும் படம் முடிந்தவுடன் ஒரு திருப்தியை அளித்தது.

ஷெர்லாக் வகையறா டிடெக்டிவ் கணியன் பூங்குன்றனாக விஷால் நடித்திருக்கிறார். பாண்டியநாடு திரைப்படத்திற்குப் பிறகு அவர் இயக்குனர்களின் நடிகராகவும் மாறியிருக்கிறார். இதில் வித்தியாசமான விஷால் என்று சொல்லிவிட முடியாது ஆனால் அவர் இதுபோன்ற திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பதே வித்தியாசமான நல்ல தொடக்கம்தான். நன்றாகவே நடித்திருக்கிறார். விஷாலின் தோழனாக பிரசன்னா பெரிதாக எதுவும் செய்யவில்லை என்றாலும் கெத்தாக இருக்கிறார். செம ஸ்டைலான ஒரு கவர்ச்சி வில்லனாக வினய். குரலிலேயே பயத்தை ஏற்படுத்துகிறார். இதுவரை யாருமே பார்க்காத ஒரு வேடத்தில் பாக்யராஜ். இவர்கள்தான் மொத்தப் படத்தையும் தாங்குகிறார்கள். அதோடு மிஷ்கினின் சுவாரஸ்யமான அறிவியலும் எமோசனையும் தேவைக்கேற்ப கலந்து அளித்த திரைக்கதையும். மரணங்களை காட்சிப்படுத்துவதில் மாஸ்டர் மிஷ்கின்தான். இறப்பது வில்லனாக இருந்தாலும் கண்ணீரை வரவழைத்து விடுகிறார்.

மைனஸ் - மிஷ்கினிஸம்

மிஷ்கின் இதுவரை எட்டுப் படங்களை இயக்கியிருக்கிறார். எல்லாத் திரைப்படங்களிலும் தன்னுடைய அடையாளத்திற்கென சில காட்சிகளை/ஷாட்களை வைக்கிறார். உதாரணமாக சண்டைக்காட்சியில் ஒவ்வொருவராக வரிசையில் வந்து அடிப்பது, கால்களை மட்டுமே காட்டும் கேமரா, ஒரு காட்டுப்பகுதிக்குள் வில்லன்கூட்டத்தைத் தேடிச்செல்லும் போலீஸ், மொட்டைத்தலை வில்லன்கள், போன்றவை. மேலும் சித்திரம் பேசுதடி நரேன், நந்தலாலாவில் வரும் சிறுவன், பிசாசு ஹுரோ, இதில் விஷால் வரை ஏன் தலையை சாய்த்துக் கீழே பார்த்தபடியே பேசுகிறார்கள். அது ஏன்?. . ஒரே வகையான இந்த மேனரிசங்கள் ஏன் எல்லாப் படங்களிலும் வருகிறது. இதை அவரின் அடையாளம் என எடுத்துக் கொள்வதா இல்லை அதைத் தாண்டி வேறு எதையும் யோசிக்க முடியவில்லை என எடுத்துக் கொள்வதா?. அடையாளத்தை உருவாக்குவதென்பது ஒரு முறை செய்ததை மீண்டும் மீண்டும் செய்வதா எனப் புரியவில்லை(அதே மிஷ்கின்தான் நம் பாக்யராஜை அவர்தானா என்று தெரியாத வண்ணம் நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் அவரின் கதாநாயகர்களுக்கு மட்டும் ஒரே மேனரிசத்தைக் கொடுத்து சலிப்பை ஊட்டுகிறார்). இதை அவர் நிறுத்துவார் என்ற நம்பிக்கையும் இல்லை.

கணியன் பூங்குன்றனுக்கான ஒரு பில்ட் அப் டைட்டில் பாடல் இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றியது. தீம் மியூசிக்கையும் வீண் செய்துவிட்டார்கள்.

ஆவரேஜான முதல்பாதியுடன் இரண்டாம் பாதியில் பார் ஃபைட்டிலிருந்து சூடுபிடிக்கும் படம் பரபரவென நகர்ந்து சதுப்புநிலக் காடுகளில் இன்ட்ரெஸ்டிங்காக முடிகிறது.

மிஷ்கினின் துப்பறிவாளன் பார்க்க வேண்டிய ஒரு நல்ல என்ட்டடெய்னர்.

- சாண்டில்யன் ராஜூ

Pin It