விஜய் ஆன்டனியின் முதல் படமான "நான்" படத்தை இயக்கிய ஜீவாசங்கரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்தான் "எமன்". இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் போன்ற வேறு துறைகளிலிருந்து நடிப்பிற்குத் தாவியவர்களில் ரசிகர்களிடம் மிகுந்த நம்பிக்கையை சம்பாதித்திருப்பவர் விஜய் ஆன்டனி. அந்த நம்பிக்கையின் சாட்சியாக திரையரங்கில் அதிகளவில் குடும்ப ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

yeman vijay antony

எளிய மனிதன் ஒருவனின் ரவுடிசம் முதல் அரசியல் பிரவேசம் வரையிலான வாழ்க்கைப் பயணமும் அதில் அவனுக்கு ஏற்படும் இழப்புகளும், அவன் ஏற்படுத்தும் இழப்புகளுமே "எமன்''. இது பழக்கப்பட்ட கதைதான் என்றாலும் சிறிதளவு கமர்சியல் அம்சங்களையும் சேர்த்து ரசிக்கும்படியாகவே எடுத்திருக்கிறார் இயக்குனர். அதே சமயத்தில் ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் என வந்துவிட்டாலே காட்ஃபாதரரின் தாக்கம் இல்லாமல் இருக்கமுடியாது. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல.

படத்தில் ப்ளஸ்களும், மைனஸ்களும் சரிவிகித அளவிலேயே கலந்திருக்கிறது. படத்தின் முதல் காட்சி எவ்வாறு ஆரம்பிக்கிறதோ அதே போலதான் இறுதிக்காட்சியும் அமைந்திருக்கிறது. முதல் பாதியில் நன்றாக செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியின் இறுதிக் காட்சிகளில் தடுமாறுகிறது. சார்லி, தியாகராஜன், மியாஜார்ஜ், சங்கிலி முருகன், தங்கபாண்டியன் கதாபாத்திரம் என ஒவ்வொருவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். "அரசியல்ல எதிரி விசுவாசியா உன் பக்கத்துலயேதான் இருப்பான்" போன்ற நிகழ்காலத் தமிழக அரசியலை ஒட்டிய வசனங்கள் பலம்.

விஜய் ஆன்டனியின் மசாலாத்தனமான நடிப்பில் குறை ஏதும் இல்லை என்றாலும் சாந்தமான பேச்சு, தாடியுடன் நீண்டகாலம் இதையே செய்து கொண்டிருக்க முடியாது. மேலும் தான் திரையில் நடந்து வரும்போது தானே அதற்குரிய மாஸ் பின்னனி இசையை அமைப்பதற்கான வாய்ப்பு எத்தனை பேருக்கு அமையும். அவரின் கதைத்தேர்வு வெவ்வேறாக இருந்தாலும் இசை, ஒளிப்பதிவு, படத்தின் தன்மை ஒரே போலவே காட்சியளிக்கிறது. உதாரணமாக விஜய் ஆன்டனி இதுவரை நடித்த படங்களின் டீசர்களைப் பார்த்தாலே அது புரியும். இந்தியா பாகிஸ்தான் மட்டுமே அவர் நடித்ததில் சற்று மாறுபட்டு இருந்தது. மற்ற படங்கள் அனைத்துமே அவரின் முதல் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் போலவே தெரிகிறது. நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன். அதன் விளைவைத்தான் இப்பொழுது சைத்தானிலும் எமனிலும் அறுவடை செய்கிறார். பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

சைத்தானை விட சற்று நன்றாக இருக்கின்ற, முகம் சுளிக்க வைக்காத, ஒரு முறை பார்ப்பதற்கு ஏற்ற படம்தான் எமன். சுமாரான வெற்றியைப் பெறலாம். ஆனால் இதுதான் விஜய் ஆன்டனிக்கு இறுதி எச்சரிக்கை. வீ வாண்ட் மோர் எமோசன்.

- சாண்டில்யன் ராஜூ

Pin It