இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘காலா’ - ‘பம்பாய் ‘தாராவி’ப் பகுதியில் வாழும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் நில உரிமைக்கான போராட்டக் களத்தை பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். ஆசியாவின் மிகப் பெரும் ‘சேரி’யாகக் கூறப்படும் ‘தாராவி’யில் நெருக்கடியில் அடிப்படை வசதிகளின்றி வாழும் குடிசைகளை அகற்றி அவர்களுக்கு குடியிருப்புகள் கட்டும் திட்டத்துடன் முன் வருகிறார், ஒரு மராட்டிய உயர்ஜாதி - உயர் வர்க்க தொழிலதிபர். வசதி படைத் தவர்களின் விளையாட்டான ‘கோல்ஃப்’ விளையாட்டு மைதானம், நீச்சல் குளம், மருத்துவமனைகளோடு வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் பின்னணியில் ஒடுக்கப்பட்ட மக்கள் காலங்காலமாக வாழ்ந்து கொண் டிருக்கும் நில அபகரிப்பு அடங்கி யிருப்பதைக் கண்டு பெரும்பான்மை மக்கள் திட்டத்தை எதிர்க்கிறார்கள். இந் நிறுவனத்துக்கு இயக்குனர் ரஞ்சித் சூட்டியுள்ள பெயர் ‘மனு ரியாலிட்டி’. மனுதர்மத்தின் மறுவடிவமாக இதை சித்தரிக்கிறார். காலாவின் தலைமையில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை ஒடுக்குவதற்கு அமைச்சர்கள், காவல்துறை, விலை போகக்கூடிய துரோகிகள், மதவாத அரசியல் என்று அத்தனை வியூகங்களையும் பயன்படுத்துகிறார் தொழில் அதிபர். காலாவின் மனைவியும் மகனும் கொல்லப்படுகிறார்கள். போராடும் மக்கள் மீது துப்பாக்கி சூடு; காலாவைக் கொல்ல சதி என்று காட்சிகள் விறுவிறுப்பாக நகருகின்றன.

பிளாஸ்பேக் காட்சிகளை கார்ட்டூன் வடிவத்தில் சில நிமிடங்களில் சொல்லிவிட்டு கதையை நகர்த்துவ திலும், ரஜினிக்கும் ஹீமாகுரோசிக்குமான பழைய காதலை கவித்துவமாக சித்தரித்ததிலும், ரஜினியின் முழுமையான ஆற்றலை இயல்பாக வெளிக் கொண்டு வந்திருப்பதிலும், பாடலோடு கதையை நகர்த்துவதிலும் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. ரஜினியின் மனைவியாக நடித்து வாழ்ந்திருக்கிறார் ஈஸ்வரி ராவ். நெல்லை வட்டார மொழியில் வெளுத்து வாங்குகிறார். ரஜினி தனது முன்னாள் காதலியை சந்தித்துத் திரும்பிய போது, ரஜினி மனைவி செல்வி (ஈஸ்வரி ராவ்) தானும் தனது முன்னாள் கிராமத்து காதலனைச் சந்திக்க கிராமத்துக்குப் போவதாகக் கூறும் ‘பெண்ணுரிமை’ காட்சி அமர்க்களப்படுத்துகிறது.

ரஜினியின் முன்னாள் காதலி தொழிலதிபரின் காலைத் தொட்டு வணங்க கட்டாயப்படுத்தப்படும் போது மறுக்கிறார். உன்னுடைய கணவர் யார் என்ற தொழிலதிபரின் கேள்விக்கு “நான் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுள்ள பெண்” என்று கம்பீரமாக பேச வைத்து, பெண் விடுதலைக்கு பெருமை சேர்த்துள்ளார் இயக்குனர்.

எப்போதும் குடிமயக்கத்திலேயே இருக்கும் ரஜினி யின் மாப்பிள்ளையாக நடிகர் சமுத்திரக்கனியின் கூர்மையான வசனங்கள் படத்துக்கு வலிமை சேர்க்கின்றன.

கதையின் வில்லனாக தொழிலதிபராக வரும் நானா படேகர், நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

சென்னை பூந்தமல்லி பகுதியில் ‘தாராவி’ பகுதியை இயல்பாக உருவாக்கிக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதி வாளர் முரளி. அவரது திறமைக்கு ‘சபாஷ்’ போட வேண்டும்.

கரிகாலனாக வரும் காலா, தனது மகனுக்கு புரட்சியாளர் லெனின் பெயரை சூட்டியிருக்கிறார். மண்ணையும் மக்களையும் புரிந்து கொள்ளாத புரட்சி ஒரு போதும் வெற்றி பெறாது என்று மகன் லெனினுக்கு எடுத்துக் கூறுகிறார். ஒரு கட்டத்தில் தந்தையின் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறார் லெனின்.

‘தூய்மை பாரதம்’ என்ற காவி அரசியலின் பின்னால் உள்ள ஆதிக்க சுரண்டல்; மதமோதல்களைத் தூண்டி விட்டு மக்களை பிளவுபடுத்தும் ‘இந்துத்துவ’ அரசியல்; காலாவின் வீடு தேடி வரும் தொழிலதிபர், வீட்டில் தண்ணீர்கூட குடிக்காததை சுட்டிக் காட்டி காலாவின் மனைவி பேசும் வசனம்; கரிகாலன் என்று தமிழில் பெயர் சூட்டியிருக்கும் சிறப்பு; குழந்தைகளை நன்றாகப் படிக்க வைப்பதற்கே முன்னுரிமை தர வேண்டும் என்ற காலாவின் வசனம்; காலாவின் மனைவி, மகன் கொல்லப்பட்ட பிறகு அவர்களுக்கு மதச் சடங்குகளின்றி ‘படத்திறப்பு’ வழியாக இல்லத்தில் நடத்தப்படும் அஞ்சலி; எங்கள் நிலத்தைப் பறிக்க கடவுளே வந்தாலும் தடுப்போம் என்ற வசனம் என்று நுணுக்கமாக முற்போக்குக் கருத்துகளைப் படம் முழுதும் நிரப்பியிருக்கிறார் இயக்குனர்.

“நாங்கள் ஆளுவதற்கே பிறந்தவர்கள்” என்று தொழிலதிபர் திரும்ப திரும்ப கூறுகிறார். இராமாயணம் என்பது ஆரிய-திராவிடப் போராட்டத் தின் கதை என்று பெரியார் கூறிய கருத்தை, மிகத் துணிவோடு நில உரிமைப் போராட்டத்தின் பின்புலமாக்கியிருக்கும் இயக்குனர் ரஞ்சித்தைப் பாராட்ட வேண்டும். வில்லனாக வரும் தொழிலதிபர் வீட்டில், ‘இராமாயண உபன்யாசம்’ நடத்துகிறார்.

அரக்கர்கள் அழிக்கப்பட வேண்டும் என்று இராமகாதை பேசுகிறது; கரிகாலன் தனது மேஜையில் ‘இராவண காவியம்’ நூலை வைத்திருக்கிறார்.

தலித் - ஒடுக்கப்பட்ட மக்கள் பார்ப்பனிய - உயர்ஜாதி - உயர் வர்க்கத்துடன் நடத்தும் உரிமைப் போராட்டத்தை இராமாயணத்தின் ‘தேவ-அசுரப்’ போராட்டத்தோடு இணைத்து ஆரிய - திராவிட போராட்ட வரலாற்றின் தொடர்ச்சியாக துணிவோடு வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

பெரும் முதலீட்டில் ‘சூப்பர் ஸ்டாரை’ வைத்து இயக்கும் படத்தின் வாய்ப்பு தனக்குக் கிடைத்தபோது, அதை ஜாதி எதிர்ப்பு இலட்சியத்துக்குப் பயன்படுத்த முன் வந்திருக்கிறார்.

இது வரை ரஜினியின் படங்கள், ஜாதி எதிர்ப்பையோ சமூக எதார்த்தங்களையோ பேசாமல், அவைகளை மூடி மறைத்து மேலோட்டமான சமூக அநீதிகளுக்குப் போராடும் நாயகராகவே ரஜினியை சித்தரித்து வந்திருக்கின்றன. அந்த மனநிலையில் கட்டமைக்கப்பட்ட ரஜினி ரசிகர்கள், ரஜினியை தலித் மக்கள் போராளியாகப் பார்க்க விரும்புவார்களா என்பது கேள்விக்குறிதான். பெரும்பாலான ரஜினி ரசிகர்களின் சாதிய உளநிலை இதை ஏற்குமா என்பதையெல்லாம் புறந்தள்ளி, இயக்குனர், ரஜினியை ‘ஜாதி எதிர்ப்பு’ப் போராளியாகப் பேச வைத்திருக் கிறார். அதனால்தான் ரஜினியின் துணைவியார் லதா, கரிகாலன் பேசும் வசனங்கள், ரஜினியின் சொந்த கருத்துகள் அல்ல என்று படம் வெளி வந்த அன்றே கூறி விட்டார்.

‘காலா’ பாத்திரத்iதை ஜீரணிக்க முடியாத பா.ஜ.க. வினரும், சங் பரிவாரங்களும் வெளிப்படையாக எதிர்க்க முடியாமல் கள்ள மவுனம் சாதித்து வரு கின்றனர். ‘மெர்சல்’ திரைப்படத்தில் ‘ஜி.எஸ்.டி.’க்கு எதிராக நடிகர் விஜய் பேசும் காட்சிக்காக அப்படத்துக்கே தடை போட வேண்டும் என்று ‘துள்ளிக் குதித்த’ பா.ஜ.க.வினர், இந்து முன்னணிகள் அதைவிடப் பல மடங்கு கடுமையான ‘காவி எதிர்ப்பு’ அரசியலைப் பேசும் ‘காலா’வை எதிர்க்க முடியாமல், வாய்மூடிக் கிடக்கிறார்கள். இதிலும் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

‘போராட்டமே உரிமைகளைப் பெற்றுத் தரும்’ என்ற மய்யக் கருத்தை வலியுறுத்தும் இந்தப் படத்தில் நடித்து முடித்து படம் திரைக்கு வரும் நிலையில் தான், ‘எதற்கெடுத்தாலும் போராடினால் நாடு சுடுகாடாகி விடும்’ என்று ரஜினிகாந்த் தனது சொந்த உணர்வுகளைக் கருத்தாக வெளிப்படுத்தினார்.

ஆக காலாவின் காட்சியும் வசனங்களும் தனது சொந்த கருத்து அல்ல என்பதை அவரது மனைவி லதாவோடு சேர்ந்து ரஜினியும் வெளிப்படுத்தி விட்டார்.

ஆக, இது ரஜினியின் படம் அல்ல; இயக்குனர் ரஞ்சித்தின் படம். ஆனாலும், மாறுபட்ட கருத்துகளையும் மனமுவந்து ஏற்று நடிக்க வந்த ரஜினியைப் பாராட்டலாம்.

வாய்ப்புகள் கிடைத்தால் நாங்களும் சாதித்துக் காட்டுவோம் என்று நிரூபித்து சமூக நீதிக் கொள்கைக்கு மகுடம் சூட்டி விட்டார் ரஞ்சித்.

- கண்டு வந்தவன்