இத்திரைப்படத்திற்கான விமர்சனம் எழுதுவதற்கு முன் நம் இஸ்லாமிய அமைப்புகள் எதற்காக இத்திரைப்படத்திற்கு தடைகோரி போராடினார்கள்? என்கிற கேள்வியை கேட்கத் தோன்றுகிறது. இப்படத்திற்கு எந்தவித ஆர்பார்ட்டமும் செய்யாமல் இருந்திருந்தால் கமலஹாசனின் முந்தைய படங்களைப்போல் மக்களே இப்படத்தையும் நிராகரித்திருப்பார்கள். சமூக மாற்றச் சிந்தனையுடன் வெளிவந்த அரவான், வழக்கு எண் போன்ற திரைப்படங்களை விமர்சனம் செய்தபோது ‘டாக்குமென்ட்ரி' சாயலை தவிர்த்திருக்கலாம் என்று பதிவு செய்த ஊடகங்கள் ‘விஸ்வரூபம்' போன்ற முழு நீள டாக்குமெண்டரியை வெற்றிகரமான திரைப்படம் என்று எழுதுவது ஏன்? அமெரிக்காவை திருப்திபடுத்துவதற்காக கமல் எடுத்த விஸ்வரூப டாக்குமென்ட்ரிக்கு இந்திய ஊடகங்கள் அதிக மதிப்பெண்கள் கொடுத்து வரவேற்கின்றன. உன்னைபோல் ஒருவன், மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு போன்ற திரைப்படங்களைப்போல் ஒரு வாரத்திற்குள் பெட்டிக்குள் போக வேண்டிய இத்திரைப்படத்தை மிகப் பெரிய வெற்றியாக்கியதற்கு நமது இஸ்லாமிய அமைப்புகளுக்கு கமல் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

kamal_vishwaroopam_350இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை திரைப்படங்களில் மிகப்பெரிய வணிக சந்தையாகிவிட்டது என்பதை கமல் புரிந்து கொண்டுள்ளார். பெயரளவில் அமெரிக்க எதிர்ப்பு பேசும் ஊடகங்கள் முதல் அமெரிக்க எதிர்ப்பை பிரதான அரசியலாய் கொண்ட இடதுசாரிகள் வரை இத்திரைப்படத்தின் அமெரிக்க சார்பு எவ்வளவு ஆபத்தானது என்பதை பதிவு செய்யவில்லை. இத்திரைப்படம் வெளியீட்டிற்கு முன் தமிழக மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக கமல் கொடுத்த பேட்டிகள் தமிழக அரசியல்வாதிகளை மிஞ்சும் விதமாக இருந்தது. இத்திரைப்படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டால் ‘மதச்சார்பற்ற நாடு தேடி செல்வேன்' என்று கமல் சொன்னதும் தமிழகமே திரண்டு அவருக்கு ஆறுதல் கூறியதும், கமல் ஒரு ஆகச்சிறந்த நடிகன் என்பதை நான் உணர்ந்து கொண்ட தருணம். இத்திரைப்படம் தடைபட்டால் கமலுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட தமிழக ரசிகர்கள் காசோலை அனுப்பினார்களாம். உலக நாயகனின் வறுமையைப் போக்க காசோலை அனுப்பிய தமிழ் சொந்தங்களே உள்ளூர் விவசாயி அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் அன்றாடம் தற்கொலை செய்து கொண்டிருக்கும் செய்தி உங்களுக்குத் தெரியுமா? விவசாயிகளின் பிரச்சனை விஸ்வரூபமாக உங்களுக்கு காட்டப்படவில்லை என்றாலும் அதனை உணரவேண்டியது உங்கள் கடமை.

நமது ஊடகங்களுக்கு ஆழ்வார்பேட்டை அரசனின் வர்த்தக நலனுக்கு முன் அய்யம்பேட்டை விவசாயிகளின் நிலன் முக்கியமல்ல என்பது நாம் அறிந்தது. சொந்த தேசத்தில் விவசாயிகள் மடிந்து கொண்டிருக்க, கமலஹாசன் வேறு தேசம் தேடிச் செல்வேன் என்று சொன்னது ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. 1920களில் நீதிகட்சி ஆட்சிக்கு வந்ததும் தங்களுடைய எதேச்சதிகார நடவடிக்கைக்கு ஆபத்து வந்ததாக உணர்ந்து பார்ப்பனர்கள் பெரும்பாலானோர் வட இந்தியா நோக்கி நகர்ந்தார்கள். டெல்லி கணேஷ், பாம்பே குமார் போன்ற பெயர்கள் பார்ப்பனர்களிடம் அதிக அளவில் இருப்பதை நாம் உணரலாம். உலகமயாக்கலுக்குப் பிறகு பெரும்பாலான பார்ப்பனர்கள் அமெரிக்காவில் குடியமர்ந்து விட்டனர். இச்சூழ்நிலையில் கமல் ‘வேறு தேசம்' நோக்கிச் செல்வேன் என்று சொன்னது அவர்கள் உறவினர்கள் தேசத்திற்குத் தானே?

பொருள் தேடி பார்ப்பனர்கள் ‘பரதேசம்' செல்வது 2500 ஆண்டுகால மரபுதான். ஆனால் தமிழகத்தை மதச்சார்ப்புள்ள தேசம் என்று அவர் சொல்லியிருப்பதுதான் விமர்சனத்திற்குரியது. தலிபான்களை அழித்து ஒழிக்கும் அமெரிக்காவின் மதச்சார்பற்ற தன்மை முன் தமிழகம் மதச்சார்புள்ள தேசமாகிவிட்டது போலும். அமெரிக்கா, விஸ்வரூப நாயகனைப் போல் நல்ல முஸ்லீம்களை வரவேற்கிறது. அமெரிக்க எதிர்ப்பு பேசும் கெட்ட முஸ்லீம்களை அழிக்கிறது. இந்த உண்மையைத்தான் இத்திரைப்படம் சொல்ல விழைகிறது.

92ல் பாபர் மசூதி இடிப்பு, 93ல் பால் தாக்ரே ஏற்படுத்திய கலவரம், தேனி மாவட்டம் மீனாட்சிபுரம் கலவரம், குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரம், தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, ஆஜ்மீர் பள்ளிவாசல் தாக்குதல் என இந்தியாவில் நடந்த மிகப்பெரிய கலவரங்கள் அனைத்திற்கும் இந்துத்துவ அமைப்புகளே பின்புலமாக இருந்திருக்கின்றன. தேசபக்தி உள்ள கமலஹாசனுக்கு இந்த தீவிரவாதிகளை அழிக்கவேண்டுமென ஏன் தோன்றவில்லை? அவருடைய களம் ‘அமெரிக்கா' என்பதால் இந்துத்துவ அமைப்புகள் தீவிரவாதிகளாகத் தெரியவில்லை போலும்! இந்திய உளவுத்துறை நாயகனுக்கு தன் உயிரைப் பணயம் வைத்து அமெரிக்காவை காப்பாற்றவேண்டிய அவசியம் என்ன? இந்திய தேசிய பக்தி அமெரிக்க நலன் சார்ந்தது என்பதை குறிப்பால் உணர்த்துகிறாரோ!

90களுக்குப் பிறகு தலிபான்களை அழிக்கும் Rambo ரக திரைப்படங்களை மேற்கு உலகம் அதிக அளவில் தயாரித்தது. உலகம் அழியப்போகிறது என்ற அச்சுறுத்தலோடு கூடிய ‘ஓமன்' போன்ற திரைப்படங்களும் கத்தோலிக்க திருச்சபைகளால் வெளியிடப்பட்டது. தங்களுடைய அரசியல் அதிகாரத்தையும், மத ஆதிக்கத்தையும் உலகெங்கும் நிறுவ சினிமாவை மிகப்பெரிய ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கர்களின் அரும்பணிக்கு தேச பக்தி உள்ள இந்தியனாய் தன்னால் இயன்ற உதவியை கமலஹாசன் செய்திருக்கிறார். ஆஸ்கார் விருதை கருத்தில் கொண்டு கமலஹாசன் அமெரிக்காவை திருப்திபடுத்தியிருக்கிறார் என்று சொல்லி அவரின் தேசபக்தியை கேவலப்படுத்தக்கூடாது? உலகெங்கும் உள்ள பயங்கரவாத சக்திகளை அழிக்க அமெரிக்கா தனி நாடாய் நின்று போராடிக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்தியா போன்ற நாடுகள் அதற்கு உதவ முன் வரவேண்டும் என்பதாகவே இந்த ‘விஸ்வரூபம்' எடுத்திருக்கிறார் கமல். இந்தியா முழுவதும் இருக்கிற இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை தனது வணிக சந்தைக்கு உதவும் என்பதையும் அவர் உணர்ந்திருக்கிறார். எந்த குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில் இந்திய மக்களின் கூட்டு மனசாட்சிக்காக "’அப்சல்குரு' வை தூக்கிலேற்றும் இந்தியத் திருநாடல்லவா இது.

அப்சல் குருவிற்கு பதில் பார்த்தசாரதியோ, சீனிவாசனோ இருந்திருந்தால், இந்திய மக்களின் கூட்டு மனசாட்சி இடம் கொடுத்திருக்காது. டில்லி  போன்ற நாட்டின் பிற பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் ‘இந்நாட்டின் கூட்டு மனசாட்சி' தூக்கில் போட அனுமதித்திருக்காது. காஷ்மீரைச் சேர்ந்த இசுலாமியர் என்பதால் அவர் தீவிரவாதியாகத் தான் இருப்பார் என்று இந்திய மக்களின் கூட்டு மனசாட்சி இடம் கொடுத்துவிட்டது. இதுபோன்ற "கூட்டு மனசாட்சி''யை ஏற்படுத்துவதில் இந்தியத் திரைப்படங்களுக்கு அளப்பரிய பங்கு உண்டு. இருபது வருடங்களாக மணிரத்னத்தின் ‘ரோஜா' முதல் கமலின் ‘விஸ்வரூபம்’ வரை இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து உருவாக்கியது தான் இந்த ‘கூட்டு மனசாட்சி'.

தேசப்பிதா என்று கமல் போன்றோர்களால் அழைக்கப்படும் காந்தியடிகளை சுட்டுக் கொன்றது முதல் குஜராத் சம்பவம் வரை இந்தியாவை உலுக்கிய சம்பவங்களை அரங்கேற்றியது இந்துத்துவ சக்திகளே. இந்தியாவின் உண்மையான அச்சுறுத்தலாக இருக்கும் ‘இந்துத்துவ சக்திகளை' தோலுரிக்காமல் ஆப்கான் தீவிரவாதிகளை ஒழிப்பதன் மூலம் யாருக்கு விசுவாசத்தைக் காட்டுகிறார் கமல்?

தீவிரவாதத்தை ஒழிக்க இந்திய உளவுத்துறையும், அமெரிக்க உளவுத்துறையும் மேற்கொள்ளும் சிரமரங்களை கமலஹாசன் இந்தியர்களுக்கு உணர்த்துகிறார். ஈழத்தில் அமைதிப்படை என்கிற பெயரில் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்தது இந்திய உளவுத்துறை. கூடங்குளம் போராட்டத்தில் தமிழக மீனவர்களை தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தியது இந்திய உளவுத்துறை. அமெரிக்காவின் எண்ணெய் அரசியல் நலனுக்காக ஈராக்கில் இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த மனிதாபிமானிதான் அமெரிக்கா உளவுத்துறை. இந்த இரண்டும் இணைந்த உலக அமைதிக்காக எடுக்கும் முயற்சியே ‘விஸ்வரூம்'.

kamal_vishwaroopam_448

குழந்தைகள் மீது குண்டு போட்டதற்காக அமெரிக்கா உளவுத்துறை அதிகாரி வருத்தப்படும் காட்சி படத்தின் மிகப்பெரிய நகைச்சுவை. ‘செஞ்சோலை குழந்தைகள் மீது தவறுதலாக குண்டு போட்டுவிட்டோம்' என்று இராசபக்சே புலம்புவது போல் காட்சிகளை கமலஹாசனால் எடுக்க முடியும். இலங்கை உளவுத்துறையுடன் இணைந்து அடுத்து படம் எடுக்க கமல் திட்டமிட்டிருக்கலாம். “நான் தமிழர்களை எதிர்க்கவில்லை. அவர்களை கேடயமாகப் பயன்படுத்தும் தீவிரவாதிகளைத் தான் எதிர்க்கிறேன்'' என்று தன்னிலை விளக்கம் கொடுக்கலாம்.

இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் அனைத்திற்கும் பின்னால் ‘தலிபான்' தீவிரவாதிகளுக்குத் தொடர்பிருக்கிறது என்று உணர்த்துவதன் மூலம் இந்துத்துவ சக்திகளை திருப்திபடுத்துகிறார். உலகின் ஒரே அச்சுறுத்தல் ‘ஆப்கான்'; அதிலிருந்து மக்களை மீட்கும் இரட்சகன் அமெரிக்கா என்று சொன்னதன் மூலம் அமெரிக்காவை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார். தேசிய இனங்களின் போராட்டங்களை ஒடுக்கும் இந்திய உளவுத்துறையை கதாநாயகத் தகுதிக்கு உயர்த்தியதன் மூலம் ஆளும் காங்கிரசு அரசை திருப்திபடுத்தியிருக்கிறார். படத்தில் ஒரு காட்சியில் தொழுவதன் மூலம் தேசப்பக்தி உள்ள இசுலாமியர்களை திருப்திபடுத்தியிருக்கிறார். படத்தில் அவ்வப்போது வரும் ‘கடவுள்' குறித்த விமர்சனங்கள் மூலம் முற்போக்குவாதிகளாக தங்களை சொல்லிக் கொள்பவர்களை திருப்திபடுத்தியிருக்கிறார். கடவுள் நம்பிக்கையுள்ள இசுலாமியர் வேடம் என்பதால் கமல் பேசும் ‘கடவுள்' விமர்சனங்கள் படத்தில் எடுபடவில்லை என்பது வேறு.

கமல் ஒரு ‘முசுலீம்' என்பது இப்படத்தில் திட்டமிட்டு திணிக்கப்பட்டிருக்கிறது. கமல் ஒரு முசுலீம் என்கிற உணர்வினை இத்திரைப்படம் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை ‘தேசபக்தி’ உள்ள இசுலாமியர்கள் இப்படித்தான் இருப்பார்களோ? இந்திய உளவுத்துறையும், அமெரிக்க உளவுத்துறையும் பணம் போட்டு எடுக்க வேண்டிய ஒரு திரைப்படத்தை ‘கமலஹாசன்' எடுத்ததிலிருந்து அவருடைய எதிர்பார்ப்பு என்ன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ‘கமல்' என்கிற தனிப்பட்ட கலைஞனின் சர்வதேச அங்கீகாரத்திற்காக நம் சகோதரர்களான சிறுபான்மையினர் தனிமைப்படுத்தப்படும் போக்கு கண்டனத்திற்குரியது.

‘இசுலாமியப் பெயர் இருந்தால் போதும், போராளி அமைப்பைச் சேர்ந்தவன் என்றால் போதும், அவன் தூக்கிலிடப்படலாம்' என்கிற கருத்து இருக்கிற நாட்டில் ‘விஸ்வரூபம்' போன்ற திரைப்படங்கள் விதைக்கும் கருத்தியல் சமூகத்திற்கு நஞ்சு; சமூக மாற்றத்திற்கான செயல்பாடுகளை மடைமாற்றம் செய்யும் முயற்சிகள் என்பதை நாம் உணர வேண்டும். சரி, ஆயிரம் இருந்தாலும் இப்படத்தின் தொழில் நுட்பத்திற்காகாவும், Digital 3D Auro Sound Systemத்திற்காகவும் இப்படத்தை பாராட்ட வேண்டும் என்றால், சென்னை சத்யம் திரை அரங்கில் படம் பார்ப்பவர்களுக்கு சரி, உசிலம்பட்டி மலையாண்டி திரையரங்கில் படம் பார்ப்பவர்களுக்கு அந்த அனுபவமும் கிடைக்க வாய்ப்பில்லையே.

Pin It