தமிழனுக்கு தீபாவளி நாள் கொண்டாட்டங்களின் பட்டியலில் புது சினிமாக்களும் முக்கியமானதாக இருந்து வருவது ஒரு நீண்டநாள் வழமைதான். இந்தாண்டு அப்படி வெளியான படங்கள் வெறும் மூன்று மட்டும்தான். விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள துப்பாக்கி, சிம்புவின் போடா போடி, தங்கர்பச்சானின் அம்மாவின் கைப்பேசி. இவற்றில் நம்மை அதிகமாக எதிர்பார்ப்புக்குள்ளாக்கிய படம் அம்மாவின் கைப்பேசிதான்.

santhanu_iniya_500

தங்கர்பச்சானின்மேல் நாம் அவ்வளவு நம்பிக்கை வைத்துத்தான் தியேட்டருக்குள்ளே சென்றோம். படம் துவங்கப்போகும் சமயத்தில் நான் தியேட்டருக்குள் தலைகளை எண்ணிப் பார்க்க விரும்பி எழுந்தேன். அது தீபாவளி முடிந்து நான்கைந்து நாட்களாகிய சமயம். நாற்பது பேர்தான் இருந்தார்கள் அந்த மாலை நேரக் காட்சிக்கு. இவ்வளவும் எதற்காகச் சொல்கிறேன் என்றால், படம் வெளிவருவதற்கு முன்னர் ஒரு தொலைக்காட்சிச் சேனலில் தங்கர் மிகவும் கொதித்துப்போய்ப் பேசிக் கொண்டிருந்தார், தனது படத்தைத் திரையிடத் தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பாதாக. துப்பாக்கி படத்துக்கும், போடா போடிக்கும் பெரும்பாலான நல்ல திரையரங்குகள் போய்விட்டன என்றும் அவர் வருத்தம் வெளியிட்டார். நல்ல கருத்துள்ள படங்களுக்கு இங்கே தரமற்ற அரங்குகளே கிடைப்பதாகவும் சொன்னார். நமக்கும் அவரது வருத்தம் வருத்தத்தையே தந்தது.

இந்தப் பின்னணியும் சேர்ந்துகொள்ள, நமக்கும் நல்ல படங்களையே விரும்பும் இன்னும் சில நண்பர்களுக்கும் 'அம்மாவின் கைப்பேசி' படத்தைப் பார்க்கிற ஆர்வம் கூடியது. படம் துவங்கி முதல் பத்து நிமிடங்களுக்குள் நாமும் நெளியத் தொடங்கினோம், பக்கத்தில் நமது நண்பர்களும் அப்படித்தான். 'அம்மாவின் கைப்பேசி' எனும் தலைப்பே என்ன ஒரு கவிதை. அது நம்முள் என்னென்னவோ எதிர்பார்ப்புகளை உண்டு பண்ணித்தான் இருந்தது.

பொறுப்பற்றுத் திரியும் மகன் தன் அண்ணன்களாலேயே திருட்டுப்பட்டம் சூட்டப்பட்டு, வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். வெளியேறி அப்படியொன்றும் சாப்பாட்டுக்கும், பணத்துக்கும் கஷ்டப்படாமல் ஒரு கிரானைட் குவாரியில் வேலைக்குச் சேர்ந்து, அதன் முதலாளியின் நன் மதிப்பைப் பெற்று, அங்கே நடக்கும் முறைகேடுகளை முதலாளிக்கு அம்பலப்படுத்தி, அதனால் வில்லன்களுக்கு வில்லனாகி...... என்று எங்கேயோ தொடங்கி எங்கேயோ போய்க்கிட்டே இருக்கிறது படம்.

நாயகனாக பாக்கியராஜ் மகன் சாந்தனு நடிக்கிறார். அவருக்கு இனியா மாமன் மகள்+காதலி+முன்னாள் காதலி. சாந்தனுவின் அம்மாவாக ரேவதி. கிரானைட் குவாரியில் தொழிலாளியாக தங்கர் பச்சான் படம் முழுக்க ஆக்கிரமிக்கிறார். அவரது இணையாக, உடல் மொழியசைவில் தமிழ்த்தனமே இல்லாமல் மீனா. நாயகன் சாந்தனு பொறுப்பற்றவன் மட்டுமில்லையாம். கோபக்காரன்கூடவாம். இப்படியொரு உடான்ஸ் விட்டது எதற்காகவென்றே கடைசிவரையில் தெரியாத அளவுக்கு அவரது பாத்திரத்தின் குழப்படி கொஞ்சநஞ்சமல்ல. ஏழெட்டுப் பிள்ளைகளைப் பெற்ற அம்மாவுக்குக் கடைக்குட்டி சாந்தனு மேல் பாசம் இருப்பது வியப்பல்லதான். ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியேறும் நாளில் தொடங்கிய அம்மாவின் அழுகை கடைசி மூச்சு நிற்கும் வரையில் ‘நான் ஸ்டாப்’ ஆக படம் முழுவதும் இப்படியா ஒரே அழுவாச்சி? ரொம்ம்ம்ம்ம்ப ஓவர்.

இத்தனை பிள்ளைகள் இருந்தும் ஒரேயொரு பையன் வீட்டைவிட்டுப் போனதற்கா இவ்ளோ சோகம்? அதுவும் கடைசி வரையில் யாருமற்ற தனிமையில் ஒரு பிச்சைக்காரி போல அந்த அம்மா வாழ்க்கையைக் கடத்தவேண்டிய காரணம் என்னவென்று தங்கருக்காவது தெரியுமா என்று தெரியவில்லை. அந்த அம்மாவோடு சேர்ந்துகொண்டு அவரது பொலிவான அந்த கிராமத்து வீடுமல்லவா பாழ் மண்டபமாகிப் போகிறது! போதாக்குறைக்கு ஒரு மகன் வந்து அந்த வீட்டை இடிக்கிறேன் என்று பயமுறுத்துகிறார். தொடர் அழுகை விரதத்தில் இருக்கிற அம்மாவின் கண்ணீர் இன்னும் கொஞ்சம் கூடுதல் உற்பத்தியில் இறங்குகிறது.

இரவு நேரத்தில் ரெண்டுங்கெட்டான் பொழுதில் புல்டோசர்கள் வந்து வீட்டை முற்றுகையிட்டு அம்மாவோடு நம்ம வயிற்றையும் கலக்க முயற்சிக்கின்றன. என்னடா இது சோகத்துக்கே சோகமா என்று நாம் திக்குமுக்காடிக் கிடக்கையில் அந்த மகன் கூலாக 'இதோ பார், இந்த வீட்டை இடித்துவிட்டு இந்த இடத்தில் எவ்வளவு அழகான பெரிய மாளிகையைக் கட்டப்போகிறேன். இதில் உனக்கும் ஒரு நல்ல அறை உண்டு' என்று சொல்லி நம்மை “ப்பூ... இப்ளோதானா..?” என்று ரிலாக்ஸ் படுத்தும் இடம் அடடா... முடியலண்ணே! அத்தோடு அம்மா இறந்துபோனபோது எல்லா மகன்களும் திடீரென திமுதிமுவென வந்துசேர்கிறார்கள். அம்மாவை வறுமைக்கோட்டுக்குக் கீழே சிக்கிச் சின்னாபின்னப்பட வைத்துவிட்டு இத்தனை நாட்களாக இவர்கள் எங்கே போனார்களாம் என்று நாம் பதைபதைக்கிற வேளையில் ‘நாங்கள் துபாய் போனோம். உன்னையும் கூப்பிட்டோம். நீ வரமாட்டேன்னு சொல்லிட்டியேம்மா’ என்று ஒப்பாரி வைக்கும் சாக்கில் சல்லியடிக்கிற இடம் இருக்கிறதே... போதும் போதும் என்றாகி விடுகிறதடா சாமி!

thangarbachan_640

இது இப்படிப் போக, சாந்தனு இறந்துவிட்டதாகச் சொல்லி, காதலி இனியாவுக்கு வேறு இடத்தில் திருமணம் முடிய, இனியாவோ அந்தக் கணவரின் அனுமதியோடு தன் பழைய காதலன் கம் முறை மாமன் மீது பாசத்தைத் தொடருகிறார். அம்மாவின் நிலைமையையும், அந்த வீட்டை இடிக்கப் போகிற செய்தியையும் இனியா சாந்தனுவுக்குக் அந்த ‘அம்மாவின் கைப்பேசி’ மூலம் சொல்ல முயலுகிறார். ஆனால் சாந்தனு அந்தப் பக்கம் ரொம்ப பிஸி. இப்படி சோகம் ஒரு பக்கமும், பரபரப்பு மறுபக்கமுமாக இருக்க, குவாரி முதலாளி சாந்தனுவின் விசுவாசத்தால் கவரப்பட்டு சாந்தனுவுக்கு ஒரு குவாரியையே எழுதி வைக்க முடிவு செய்கிறார். பத்திரப் பதிவுக்காக நிறையப் பணத்தை எடுத்துக்கொண்டு சாந்தனு காரி காடு, மலை, கரடு, முகடு என்று வருகிறார். வில்லன்கள் அவரைச் சூழ்ந்துகொள்ள, ‘கோபக்கார’ சாந்தனு அலறியடித்து ஓட, ஒரு கட்டத்தில் பணத்தையெல்லாம் கொள்ளையடிப்பதோடு சாந்தனுவையும் தீர்த்துக் கட்டுகிறார்கள். இந்த வில்லன் கோஷ்டியில் மனமில்லாமல் தங்கர் பச்சானும் இணைகிறார். அவரது பங்குக்கு சாந்தனுவின் வயிற்றில் கத்தி பாய்ச்சுகிறார். பணத்தில் பங்கு கிடைக்கிறது. அந்தப் பணத்தைப் பார்த்த அவரது மனைவி கடிந்துகொள்ள, அந்தப் பணத்தை சாந்தனு வீட்டிலே கொண்டுபோய் வைப்பதற்காக தங்கர் பச்சான் நடையாய் நடக்கிறார். மிச்சப்பட்டிருக்கும் பிலிம் ரீல் தீரும்மட்டிலும் நடக்கிறார். அங்கே அம்மாவின் சாவு வீட்டில் பணத்தை வைத்துவிட்டு ஐயனார் கோவிலில் ஆணிச் செருப்பில் நடந்து பாவம் தொலைக்க முயல்கிறார் தங்கர்.

படத்தில் நிறைய மக்கள் தொலைக்காட்சி ஊழியர்களைப் பார்க்க முடிகிறது. படத்தின் ஆரம்பத்தில் கைப்பேசியைக் கண்டுபிடித்தவருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. இது எதற்கோ? நல்ல தமிழை - சார் என்பதற்கு பதிலாக ஐயாவை - விரும்பும் குவாரி முதலாளி ரொம்ப நல்லவர். தெலுங்கு வாசனையோடு பேசுகிறவன் வில்லன். கூட இருக்கிற தங்கரும் பணக்கட்டை எண்ணும்போது “ஒக்கட்டி, ரெண்டு, மூடு...” என்று தெலுங்கில் எண்ணுகிறார். திடீரென ஒரு காட்சியில் பஸ்ஸில் வடநாட்டு மார்வாடி ஒருவர் ஒரு தமிழ் இளைஞனைப் போட்டு உதை உதையென அடித்து நொறுக்குகிறார். பிறகு அந்த மார்வாடிதான் நகையைத் திருடிவிட்டு, அந்த அப்பாவி இளைஞனை அடிப்பதாக நாயகி சொல்கிறாள். தெலுங்கு வாடை வில்லன் வடநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட அரைகுறை ஆடைப் பெண்களின் ஆபாச நடனத்தை ரசிப்பதாகவும் ஒரு காட்சி. தமிழனை உயர்த்துவதற்காகச் செயற்கையாக வலிந்து எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகள் வாயிலாக இயக்குநர் என்ன சொல்ல நினைக்கிறார்?

அந்த அம்மாவுக்கு அடுத்து மிகவும் கொடுமைக்கு உள்ளாகியிருப்பது நாயகி இனியாதான். இந்த இளம் நடிகையைக் கதறவிட்டே காலம் தள்ள வைத்திருக்கும் இயக்குநருக்கு பெண்கள் அமைப்பினர் ஏதாவது அபராதம், கண்டன முழக்கம் செய்தால் தேவலாம்.

அழகி என்ற அற்புதப் படத்தின் வாயிலாக காதலின் உன்னதத்தை முற்றிலும் புதிய வடிவில் தந்த தங்கர்பச்சானா இப்படி என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. பள்ளிக்கூடம் என்ற நல்ல சினிமாவைத் தமிழுக்குத் தந்த தங்கர்பச்சான் இப்படியொரு சிம் கார்டே இல்லாத கைப்பேசியை எடுத்துக்கொண்டு டவரே இல்லாத ஒரு இடத்துக்குப் போய்விட்டாரே என்றுதான் நமக்குக் கவலை. படம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது நம்பிக்கை வறட்சி. மனிதர்களின் சோக வாழ்க்கையை இப்படியா சொல்லவேண்டும்?

அடுத்த முறை நன்கு அமைய வாழ்த்துக்கள் அண்ணே!

- சோழ.நாகராஜன்

Pin It