பாலக்காட்டு பார்ப்பன வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஒரு சாதி வெறியன். வழக்கறிஞர் தொழில் மூலமாக தன்னுடைய சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் ஆசை கொண்டவர். சமூக நீதிக்கு எதிரான வழக்குகள் எல்லாவற்றிலும் இவருடைய பங்கு நேரடியாக அல்லது மறைமுகமாக இருக்கும். மண்டல குழு அறிக்கையைத் தொடர்ந்து நடுவண் அரசு, தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அரசு கல்லூரிகள், உயர்கல்வி மையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு செய்தது. இந்த இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் 10 வருடங்களுக்கு முன்பே ஒத்துக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால் அதை நடைமுறைப்படுத்த சட்ட விதி இப்பொழுதுதான் வருகிறது. ஆனால் அதையும் முறையாகச் செயல்படுத்தவிடாமல் தடுப்பதற்கு என்று ஒரு பார்ப்பனக் கூட்டம் உள்ளது. அந்த வழக்கிலும் சமூக நீதியை எதிர்த்து வழக்காடிக் கொண்டிருப்பவர் திருவாளர் கே.கே.வேணுகோபால் அவர்கள்தான். வழக்குத் தொடுத்தவர் சென்னை தொழில் நுட்ப கழகத்தின் முன்னாள் இயக்குனர் பி.வி. இந்திரேசன் அவர்கள். சாதி வெறியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதிலும் இவருக்கு இணை இவரே.

மண்டல குழு அறிக்கை வெளிவிடப்பட்டபோது சாதி வெறியும் பார்ப்பனிய மேலாதிக்கமும் சொட்ட சொட்ட அவர் இந்து நாளிதழில் எழுதிய கட்டுரைகள் மிகக் கொடியவை. பிற்படுத்தப்பட்டோர் வயிற்றில் வைத்த தீ. இந்த இரட்டையர்கள் தான் தற்பொழுது பிற்படுத்தப்பட்டோருக்கு உயர் கல்வி மையத்தில் இட ஒதுக்கீடு கூடாது. அப்படிக் கொடுத்தாலும் அது எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்ற தர வரிசையில் தான் கொடுக்கப்பட வெண்டும் என்று வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்படும் மாணவர்களின் மதிப்பெண் எவ்வளவு என்று கணக்கிட்டு அதில் 10% விழுக்காடு மதிப்பெண் குறைத்துப் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டும்தான் 27% இட ஒதுக்கீடு இடம் வழங்க வேண்டும். அதற்கும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இடம் வழங்கக்கூடாது என்பது இவர்கள் வாதம் ஆகும்.

மேலும் இங்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பவர்கள் வடிக்கட்டப்பட்டவர்கள் ஆகும். அதாவது கிரிமிலேயர் எனப்படும் பணக்கார பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இந்த 27% பொருந்தாது. பணக்கார பிற்படுத்தப்பட்டோர் என்பவர்கள் யார்? சற்று கல்வி அறிவு பெற்று அரசு பணியில் உள்ள கடை நிலை ஊழியர்கள் கூட பணக்காரர்கள்தாம். எனவே இவர்களின் வாரிசுகளுக்கும் இந்த இட ஒதுக்கீடு பயன்படாது. அவர்களிலும் கீழானவர்கள் யாராக இருக்க முடியும்? அவர்கள் கல்வி அறிவு பெறுவதற்கு என்று நடுவண் அரசின் உயர் மையக் கல்வி நிலையங்களைப் பற்றி கனவிலும் நினைக்க இயலுமா? ஆனால் அவர்களுக்கு மட்டும்தான் 27% இட ஒதுக்கீடு. அதையும் தடுக்கிறது பார்ப்பனீய கூட்டம். அந்தக் குழுவின் தலைவர்கள் தான் வேணு கோபால். இவருடைய வாதம் இப்படி இருக்கிறது.

வடிக்கட்டப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவன் ஒருவன் 99% விழுக்காடு மதிப்பெண் பெற்று நடுவண் அரசின் உயர் கல்வி மையத்தில் சேர வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். தர வரிசைப்படி 100% விழுக்காடு பெற்ற மாணவர்கள் என்பது இப்பொழுது மிக எளிய செய்தியாகிவிட்டது. எனவே அவர்களுக்கு இடம் ஒதுக்கிய பிறகு தரவரிசையில் (MERIT LIST) இந்த மாணவனுக்கு தர வரிசையில் இடம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது இரண்டு கேள்விகள் எழுகின்றன.

1. அவரை தரவரிசையில் சேர்ப்பதா? அல்லது 27% இட ஒதுக்கீட்டில் சேர்ப்பதா? வேணுகோபால் வாதப்படி அவருக்கு 27% இட ஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும். அந்த இடத்தை 98.9% மதிப்பெண் பெற்ற உயர் சாதி மாணவர் இருந்தால் அவருக்கு வழங்கிவிட வேண்டும்.

2. இப்பொழுது இட ஒதுக்கீட்டிற்கு தகுதியுடைய பிற்படுத்தப்பட்ட மாணவர் யார்?

எந்த அளவு மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு உரியவர்கள்? இந்த கல்வி மையத்தில் தகுதி மதிப்பெண் எது? அதை எப்படி நிர்ணயிப்பது? கே.கே. வேணுகோபால் வாதப்படி தரவரிசையில் கடைசி மதிப்பெண் 98.9%. எனவே இதில் இருந்து 10% குறைத்து 88.9% மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான் தகுதி பெற்றவர்கள். அதாவது தகுதி மதிப்பெண் என்பதே 88.9% என்று இருக்க வேண்டும். (இந்த வாதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு மட்டும் அட்டவணைப்பட்டியலில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அல்ல. அவர்களுக்கு வேறு ஒரு தகுதி மதிப்பெண் இருக்கும்.)

இவர் வாதப்படி 88.9% மதிப்பெண் பெற்ற மாணவர்கள்தான் இட ஒதுக்கீட்டிற்கு தகுதி உடையவர். ஒரு மாணவன் 87% மதிப்பெண் பெற்று இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராயிருந்தாலும் அவர் தகுதி படைத்தவர் அல்ல. அவருக்கு இட ஒதுக்கீட்டில் இடம் கிடையாது. அதாவது அவர் அந்த உயர் கல்வி மையத்தில் நுழைய இயலாது. அப்படி என்றால் காலியான இடம் இருந்தால் என்ன செய்வது? அதை அப்படியே விட்டுவிடலாம். அல்லது அதை பொதுப்பட்டியலில் தரவரிசையில் உள்ள உயர் சாதி மாணவனுக்கு அளிக்க வேண்டும். இப்படிப்பட்ட வாதத்தை கேட்ட‌ உச்ச நீதிமன்ற நீதிபதிகளே திகைத்துப்போய் விட்டனர். இப்படி அளவுகோல் வைத்தால் 27% பயன் எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கிடைக்காதே என்று வெளிப்படையாகச் சொல்லும் அளவிற்கு திகைத்துப்போய் விட்டனர். இதை எதிர்த்து இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வாதமிடும் வழக்கறிஞர் தகுதி மதிப்பெண் என்ன இருக்கிறதோ அதிலிருந்து 10% விழுக்காடு குறைத்துக் கொண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று வாதிட்டு வருகிறார். அதாவது 75% மதிப்பெண் (நுழைவுத் தேர்வில் அல்லது தகுதித் தேர்வில்) இருந்தால்தான் விண்ணப்பிக்கலாம் என்பது விதியாக இருப்பின் அதில் இருந்து 10% விழுக்காடு குறைத்து 65% மதிப்பெண் இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டின்படி அவர்களுக்கு இடம் கிடைத்தால் அவர்கள் அந்த உயர் கல்வி மையத்தில் பயிலலாம் என்று வாதிட்டு வருகின்றனர். ஆனால் 10% விழுக்காடு தகுதி மதிப்பெண் குறைந்தால் உயர் கல்வி மையத்தின் தகுதியும் தரமும் உன்னதமும் குறைந்துவிடும் என்று ஊளையிடுகிறது பார்ப்பனர்கள் கூட்டம்.
K.K.வேணுகோபால் P.P.ராவ் போன்ற வழக்கறிஞர்களின் அதிரடியான வாதத்தால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (இருவர் கொண்ட குழு) இட ஒதுக்கீடு பற்றி வழக்கினையே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அனுப்பிவிட்டது. இறுதி முடிவை அதாவது நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி மையங்களில் (மேலாண்மைக்கழகம்...IIM......) தொழில் நுட்பக்கழகம்.. IIT.. உயர் மருத்துவக்கழகம் (AIIMS........) ஆகியவற்றில் நுழைய முயல்கின்ற ஒரு பிற்படுத்தப்பட்ட மாணவனின் தகுதி மதிப்பெண் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற முடிவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும்.

இதில் இருந்து நாம் அறிய வேண்டிய சில செய்திகள்

1. பார்ப்பனர்கள் தங்களுடைய நலன் பறிக்கப்படும்போது எவ்வளவு கடுமையாக விடாப்பிடியாக போராடுகிறார்கள்.

2. உச்ச நீதிமன்ற நீதி அரசர்களையே அலற வைக்கும் திறன் படைத்த பார்ப்பன வழக்கறிஞர்கள் உண்டு.

3. இட ஒதுக்கீட்டின் மூலம் படித்துவிட்டு சற்று மேல்நிலை அடைந்தவுடன் தம்மையும் புதிய பார்ப்பனர்களாக எண்ணிகொண்டு இருக்கும் சிலர் உண்டு. குறிப்பாக அரசுப்பணியில் இல்லாத ஊடகம் மற்றும் சிறிய / பெரிய திரைகள் (டிவி மற்றும் சினிமா துறைகள்) போன்ற துறைகளில் காலூன்றி தடம் பதிக்கும் இவர்கள் இட ஒதுக்கீட்டை கேலி செய்து தங்களுடைய பார்ப்பனியத்தைப் பதிவு செய்துகொள்ளுகிறார்கள். அதை ஒரு பெருமையாகவும் நினைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு இன்றும் போராட வேண்டிய நிலை இருப்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

வழக்கு நடைபெற்று வருகிறது. முடிவினைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Pin It