மராட்டிய மாநிலத்தில் வீர சிவாஜியின் வாரிசான மூன்றாம் சிவாஜி என்பவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் போகவே, அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆளுநர் அப்பா சாகிப் காத்தே என்பவரின் மகன் யசுவந்த ராவ் என்ற 10 வயது சிறுவனைத் தத்து எடுத்து அரசரின் வாரிசாக அறிவித்தனர், அரச குடும்பத்தினர்.
26.7.1874-ல் கோல்காபூரில் பிறந்த யசுவந்த ராவிற்கு 17.3.1884-இல் கோல்காபூர் அரண்மனையில் முடிசூட்டு விழா நடந்த போது அரண்மனை இராணிகள் இவருக்கு ‘சாகு மகாராஜ்' என்ற பட்டத்தை அளித்தனர். இதை ஆங்கில அரசும் ஏற்றுக் கொண்டது. ஆனால் திலகர் மட்டும் இதைக் கடுமையாக எதிர்த்து வழக்குத் தொடுத்தார்.
பத்தொன்பது குண்டுகள் முழங்க 10 வயது சிறுவனான சாகு கோல்காபூர் அரச சிம்மாசனத்தில் அமர்ந்தார். இவர் சிறுவயதாக இருக்கவே அரசாங்க நிர்வாகத்தை ஒரு குழுவினரே வழி நடத்தினர்.
1894 ஏப்ரல் 24-ஆம் நாள் சாகு, நிர்வாகக் குழுவினரிடமிருந்த அனைத்துப் பொறுப்புகளையும் தாமே ஏற்றுக் கொண்டார்.
1895 ஆம் ஆண்டு சூன் மாதம் 1-ஆம் தேதி சாகு தன்னுடைய அரசின் உயர் அலுவலராக பாஸ்கர் விதோஜி ஜதாவ் என்ற எம்.ஏ. படித்த பார்ப்பனரல்லாத இளைஞரை நியமித்தார். இதைப் பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
1899 -ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் புனித நீராடலுக்காக சாகு ஆற்றங்கரைக்குச் சென்றார். அங்கே இவருக்குச் சடங்கு செய்ய வந்த பார்ப்பனன், சாகுவிற்கு வேத மந்திரம் ஓதாமல் புராண மந்திரங்களை ஓதினான். சாகுவுடன் வந்த ராஜாராம் சாஸ்திரி என்பவர் இதை சாகுவிற்குத் தெரிவித்தார்.
சாகு உடனே அந்தப் பார்ப்பனனை நோக்கி, “ஏன் அவ்வாறு செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு அந்த பார்ப்பனன், “நீ சூத்திரன்; எனவேதான் வேத மந்திரம் ஓதாமல் புராண மந்திரம் ஓதினேன்” என்றான். சாகுவும் அவர் சகோதரரும் தாங்கள் சத்திரியர் என்று கூறியும் அந்தப் பார்ப்பான் அதை ஏற்க மறுத்தான்.
வழக்கம்போல் ஆண்டுதோறும் அரண்மனையில் நடைபெறும் இறந்தவர்களை மகிழ்வூட்டும் சடங்கிற்கு (திதி (அ) திவசம்) வரவேண்டிய அரண்மனைப் புரோகிதன் 1901-ஆம் ஆண்டு அச்சடங்கிற்கு வரமறுத்தான். அக்டோபர் 7-ஆம் தேதி சாகு அந்த புரோகிதனை தொடர்ந்து பணியில் ஈடுபடுமாறு உத்தரவிட்டார். ஆனால் அவன் பணியவில்லை.
அந்த நேரத்தில் நாராயணதத் என்ற பார்ப்பனன் மராத்தியர்களின் இல்லங்களில் வேத மந்திரம் ஓதி, சடங்குகளைச் செய்து வந்தான். எனவே மற்ற பார்ப்பனர்கள் அவனைச் சாதி விலக்கம் செய்தனர். சாதி விலக்கம் செய்யப்பட்டவன் கோவில் பூசை செய்தால் கடவுள் சிலை தீட்டுப் பட்டுவிடும், எனவே அவனை பூசை செய்வதிலிருந்து நீக்க வேண்டும் என 14 பார்ப்பனர்கள் சாகுவிடம் கோரிக்கை விண்ணப்பம் கொடுத்தனர். சாகு அவற்றைப் பொருட்படுத்தவில்லை.
சாகுவின் அரண்மனைப் புரோகிதர், சிவாஜி முதல் சாகுவரை, இவர்களில் யாருமே சத்திரியரல்ல என்று தெரிவித்தார். சாகுவிற்கு வேத மந்திரம் ஓதப்பட வேண்டுமானால், சங்கேஸ்வரில் உள்ள சங்கராச்சாரியாரிடம் அனுமதி வாங்கி வரும்படிக் கூறி விட்டான். சாகுவிற்கு வேதமந்திரம் ஓதுவதா இல்லையா என்பதைக் கண்டறிய ஒரு குழு அமைக்கப்பட்டது. இரண்டு நீதிபதிகளும் அரண்மனைப் புரோகிதரும் அக்குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர்.
1902 -ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் நாள் அக் குழு சாகுவிற்கு வேதமந்திரம் ஓதப்படலாம் என்று தீர்ப்பளித்தது. அக்குழுவில் உறுப்பினராக இருந்த புரோகிதன் எதையும் கூறாமல் இருந்தான். அக்குழு தீர்ப்பளித்த பிறகும் அரண்மனைப் புரோகிதப் பார்ப்பான் ராஜாபடே என்பவன் திலகருடன் சேர்ந்து கொண்டு, சாகுவிற்கு வேத மந்திரம் ஓத மறுத்துவிட்டான்.
எனவே சாகு அரண்மனைப் புரோகிதப் பார்ப்பானை 6.5.1902-இல் வேலையிலிருந்து நீக்கினார். அது மட்டுமல்லாமல், அவனுக்கு இனாமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலங்களை அரசுடைமையாக்கினார். அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நீதிபதிக்கு இணையான அதிகாரத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
சாகுவின் காலத்தில் 1901 -ஆம் ஆண்டு முதல் அரசின் உதவியுடன் இயங்கிய விடுதியுடன் இணைந்த கல்லூரி ஒன்று கோல்காபூரில் இருந்தது. தொடர்ந்து 10 ஆண்டுகளாகப் பார்ப்பனரல்லாத மாணவர்கள் ஒருவர்கூட அதில் சேர்க்கப்படவில்லை. எனவே 1911-இல் சாகு அந்த கல்லூரியையும் விடுதியையும் மூடிவிட்டார்.
1901-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-இல் சாகு பார்ப்பனரல்லாதாருக்கு என ஒரு மாணவர் விடுதியை நிறுவினார். அதில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையும் கொடுக்கப்பட்டது. சாகுவின் காலத்தில் இதைப்போல் 300 விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன.
ஏழாம் எட்வர்டு மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக, சாகு 1902 -ஆம் ஆண்டு சூன் 2-ஆம் நாள் இலண்டன் போய்ச் சேர்ந்தார். அங்கிருந்தபோதுதான் சாகு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் 50% இடங்களை ஒதுக்கி உத்தரவிட்டார். 1902-ஆம் ஆண்டு சூலை 26 ஆம் நாள் அவருடைய அரசின் சிறப்பிதழில் (State Gazeti of july26 1902) இவ்வுத்தரவு வெளியிடப்பட்டது.
அவ்வுத்தரவின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள் 50% க்கு ஒருவர் குறைவாக இருந்தால்கூட, அடுத்தமுறை தேர்வு செய்யும்போது அந்த இடத்தையும் பிற்படுத்தப்பட்டவரைக் கொண்டு நிரப்ப வேண்டும்; அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தெளிவு படுத்தினார் சாகு மகாராசா. பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதைப் பின் கண்டவாறு தெளிவுப்படுத்தினார். (பார்ப்பனர்கள், பிரபுக்கள், பார்சிகள் தவிர்த்த மற்றவர்கள்)
சாகு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுத்த உடனேயே, அதை மிகவும் வன்மையாகக் கண்டித்தவர், திலகர். தகுதி, திறமை என்ற வார்த்தைகளை திலகர் அப்போதே பயன்படுத்தினார். ‘கேசரி' ஏட்டில் சாகுவின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை வன்மையாகக் கண்டித்து எழுதினார்.
இலண்டன் சென்று திரும்பி வந்த சாகுவின் வரவேற்பு விழாக் கூட்டத்திற்கு ஒரு பார்ப்பனர் கூட வரவில்லை .
கோல்காப்பூர் ஆளுகைக்குட்பட்ட சங்கேவர் என்ற இடத்தில் சங்கரமடம் ஒன்று இருந்தது. அதில் சங்கராச்சாரியாக இருந்த வித்யா சங்கர் பாரதி என்ற பார்ப்பான், சங்கர மடத்திலுள்ள விலையுயர்ந்த, பொன், வெள்ளி, பட்டு போன்ற பொருட்களையும், சங்கர மடத்திற்குச் சொந்தமான நிலங்களையும் விற்று, அந்தப் பணத்தையெல்லாம் தன்னுடைய பிள்ளைகளுக்கும் சகோதரர்களுக்கும் கொடுத்து வந்தார். இது சாகுவிற்குத் தெரிய வந்தது. எனவே சாகு 1903-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் சங்கர மடத்தின் சொத்துக்களை அரசுடைமையாக்கினார்.
1903 ஆம் ஆண்டு மே மாதத்தில் சங்கராச்சாரியின் பதவியைப் பிடுங்கி, சங்கராச்சாரிக்கு இருந்த மத அதிகாரத்தையும் அறவே நீக்கி அவரை ஒரு சாதாரண மனிதராக்கினார்.
சாகுவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சங்கராச்சாரி மகாராட்டிரம் முழுவதும் சுற்றித் தனக்கு ஆதரவு திரட்டிக் கொண்டிருந்தான். அவன் பூனா சென்றிருந்தபோது, பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த அந்த சங்கராச்சாரியின் பல்லக்கை திலகர் தானே சுமந்து சென்று அவனுக்கு ஆதரவு திரட்டினார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட சங்கராச்சாரி எங்கெங்கோ சுற்றி அலைந்து ஆதரவு திரட்டியும் பலன் இல்லாமல் 2.5 ஆண்டுகள் கழித்து வந்து சாகுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
சாகுவின் வம்சமான போஸ்லே சத்திரிய வமிசம் என்றும், சாகுவிற்கு வேதமந்திரம் ஓதப்பட வேண்டும் என்றும் அறிவித்தான். இனி நான் தவறு செய்ய மாட்டேன் என்று உறுதிமொழியும் கொடுத்தான்.
எனவே சாகு 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி சங்கர மடத்தின் சொத்துக்களை மீண்டும் அந்தப் பழைய சங்கராச்சாரி வித்யா சங்கர் பாரதி என்பவனிடம் ஒப்படைத்தார்.
சாகுவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அரண்மனைப் புரோகிதப் பார்ப்பான் ராஜாபடே என்பவன் தன்னுடைய பதவி நீக்கம் செல்லாது என பம்பாய் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தான். அவ்வழக்கிலும் சாகுவிற்குச் சாதகமாகவே தீர்ப்பு கிட்டியது.
எனவே அரண்மனைப் புரோகிதன் இந்திய அரசுக்கு மேல் முறையீட்டு மனுச் செய்தான். 1905 ஆம் ஆண்டு மே மாதம் அவனுடைய மேல் முறையீட்டு மனு கர்சன் பிரபுவால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பிறகும் 10 ஆண்டுகள் சுற்றி அலைந்து அந்தப் பார்ப்பான் தனக்கு ஆதரவு திரட்ட முயன்று தோல்வியுற்று, 1916 சூலை மாதம் சாகுவிடம் வந்து தான் செய்த தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
அவனை மாதச் சம்பளத்திற்கு சாகு மீண்டும் பணியில் அமர்த்தினார்.
மகாத்மா ஜோதிராவ் புலே அவர்களால் 1873-இல் ஆரம்பிக்கப்பட்ட சத்திய சோதக் சமாஜத்திற்கு சாகு உயிரூட்டினார். 1913 - இல் மட்டும் கோல்காப்பூரில் பார்ப்பனரை அழைக்காமல் நடத்தப்பட்ட சடங்கு நிகழ்ச்சிகள் 1513 ஆகும். இதில் திருமணங்கள் 266 ஆகும்.
சிவாஜியின் பரம்பரை என்றாலே முசுலிம்களின் விரோதிகள் என்று செய்தி பரப்பப்படுகிறது. ஆனால் உண்மை அப்படி அல்ல. சாகு 1906 நவம்பர் 15 -இல் தொடங்கப்பட்ட ‘முகமதியர் கல்வி அறக்கட்டளையின்' முதல் தலைவராக இருந்து, அந்த அறக்கட்டளையின் மூலம் மாணவர் விடுதி கட்ட நிலமும் அதற்கு மானியமும் அளித்தார்.
1917 -ஆம் ஆண்டு சூலை 25 முதல் கட்டாய இலவசக் கல்வியை சாகு அறிமுகப்படுத்தினார். இந்தியாவிலேயே கட்டாய இலவசக் கல்வியை அமல்படுத்திய ஒரே சிற்றரசர் இவரே ஆவார்.
கோயில் நிலங்களைக் கடவுளின் பேரால் பார்ப்பனர்கள் கொள்ளையடிப்பதைத் தடுக்க, கோயில் நிர்வாகத்தையும், கோயில் நிலங்களையும், அரசாங்கமே நேரடியாக நிர்வகிக்க 1917 சூலை 9-இல் ஆணை பிறப்பித்தார். இதனால் பார்ப்பனர்களுக்கு இவர்மீது மேலும் ஆத்திரம் ஏற்பட்டது.
விதவைகள் திருமணம் செய்து கொள்ள 1917 சூலையில் சாகு சட்டம் கொண்டு வந்தார். கணவன்மார்களின் கொடுமைகளிலிருந்து விடுபட இந்துப் பெண்கள் எளிமையான முறையில் விவாகரத்துச் செய்து கொள்ள 1919 -ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ஆம் தேதி சட்டம் கொண்டு வந்தார்.
இந்தியாவிலேயே முதன் முதலாக இவர்தான் இந்தச் சட்டம் கொண்டு வந்தவர் ஆவார். ‘பரம்பரை கர்ணம்’ முறையை சாகு 1918 பிப்ரவரியில் ஒழித்தார். 1918 சூலை 17-இல் குற்றப் பரம்பரை முறையை ஒழித்தார்.
1918 ஆகஸ்டு 8-ஆம் தேதியிட்ட ஆணையின் மூலம் வேலை வாய்ப்புக்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்தார்.
தாழ்த்தப்பட்டவர்களை அடிமைப்படுத்தும் ‘வட்டன்தார்' (Wattandar) முறையை 18.9.1918 முதல் அடியோடு ஒழித்தார்.
1919 சனவரி 1-ஆம் தேதி முதல் மருத்துவத்துறையில் தாழ்த்தப்பட்டவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று சாகு உத்தரவிட்டார்.
1919 சனவரி 15-இல் மீண்டும் ஓர் உத்தரவில் கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மூன்றாவது உத்தரவில் நீதித்துறை, வருவாய்த்துறை, கல்வி, மருத்துவம், உள்ளாட்சி ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டவர்களைச் சமமாக நடத்த உத்தரவிட்டார்.
பொதுக் கிணறுகள், பொதுக் கட்டடங்கள், அரசாங்க விடுதிகள் போன்ற இடங்களில் யாரும் தீண்டாமையை அனுசரிக்கக் கூடாது என்று 6.9.1919 - இல் சாகு உத்தரவிட்டார்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று இருந்த தனிப்பள்ளிகளை மூடினார். எல்லாப் பள்ளிகளிலும் தாழ்த்தப்பட்டவர்களைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
கங்காராம் காம்ப்ளே என்ற தாழ்த்தப்பட்டவர் பொதுக் கிணற்றில் நீர் எடுத்தார் என்பதற்காகத் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு, மராத்தாக்களால் துன்புறுத்தப்பட்டார். இதைக் கேள்வியுற்ற சாகு, கங்காரம் காம்ப்ளே என்பவரை அடித்தவர்களை வரச்சொல்லி சாட்டையால் அடித்தார்.
பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட கங்காராம் காம்ப்ளே என்பவருக்கு உணவு விடுதி நடத்த சாகு பண உதவி செய்தார். அவர் தாழ்த்தப்பட்டவர். எனவே, அவ்வுணவு விடுதிக்கு யாரும் சரியாக வருவதில்லை. இதைக் கண்ட சாகு அவ்வழியாகப் போகும்போதெல்லாம் குதிரை வண்டியிலிருந்து இறங்கி அந்த உணவு விடுதிக்குச் சென்று தேநீர் அருந்தி விட்டு, மிகவும் சிறப்பாக உள்ளது என்று கூறிச் செல்வார். இதனால் மற்றவர்களும் அவ்வுணவு விடுதிக்குச் செல்லலாயினர்.
டாக்டர் அம்பேத்கர் மூக்நாயக் (ஊமைகளின் தலைவன்) என்ற பத்திரிகையைத் தொடங்க சாகு பணஉதவி செய்தார்.
22.3.1920 -இல் டெக்கானில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டு அம்பேத்கரை மிகவும் புகழ்ந்து பேசினார். “உங்களுடைய பாதுகாவலர் டாக்டர் அம்பேத்கர் ஒருவர்தான். அவர் பின்னால் நீங்கள் எல்லாம் செல்லவேண்டும், எதிர்காலத்தில் இந்தியாவில் அவர் ஒரு பெரிய தலைவராக வருவார்” என்று சாகு கூறினார்.
1920, மே 31, சூன் 1 ஆகிய நாள்களில் நாகபுரியில் நடைபெற்ற அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். இம் மாநாட்டில் சாகு பார்ப்பனர்களுக்குச் சரியாக பதிலடி கொடுத்தார். “இவர்கள் என்னை சூத்திரன் என்று கூறுகின்றனர். இனி என்னுடைய இராச்சியத்தில் புரோகித வேலைக்குப் பார்ப்பனர்களுக்குப் பதில், பார்ப்பனர் அல்லாதவர்களையே நியமிப்பேன்” என அறிவித்தார்.
மாநாட்டில் அறிவித்தவாறே, அதை நடைமுறைப்படுத்த, 1920 சூன் 15-இல் ஓர் அரசாணை பிறப்பித்தார். அந்த ஆணையின் படி, பார்ப்பனப் புரோகிதர்கள் அடியோடு நீக்கப்பட்டு, அந்த இடத்திற்குப் பார்ப்பனரல்லாத புரோகிதர்கள் நியமிக்கப்பட்டனர்.
பார்ப்பனரல்லாதார் வேத ஆகமம் பயில்வதற்கு 29.8.1919 - இல் வேத ஆகமப் பள்ளியைத் தொடங்கினார். 7.7.1920 - இல் 62 மாணவர்கள் அதில் பயின்று வெளியே வந்தனர். இதில் பல சாதிகளைச் சேர்ந்தவர்கள் பயின்றனர். அவர்கள் அனைவருக்கும் புரோகிதத் தொழில் கொடுக்கப்பட்டது.
பார்ப்பன சங்கராச்சாரிக்குப் பதிலாக ‘மராத்திய ஜகத்குரு' என்று பார்ப்பனரல்லாத சாதியைச் சார்ந்த சதாசிவ இலட்சுமணன் பாட்டீல் என்பவரை 1920 அக்டோபர் 12-ஆம் நாள் ‘ஜகத் குருவாக' நியமித்தார். அவருக்கு மானியமாக வருடத்துக்கு ரூ.1200 வீதம் அளித்து வந்தார். புதிய ஜகத்குருவிடம் சாகு கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இடைத்தரகன் இருப்பதை ஒழிக்கும்படிக் கூறினார்.
கடைசிக் காலகட்டத்தில் சாகு கடவுளுக்கு வழிபாடு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
சாத்திரம் என்பது ஏமாற்று என்று குறிப்பிட்டார். வருணாசிரம தருமம் பார்ப்பனர்களின் சுயநலத்தால் வந்தது; அது ஒரு ஏமாற்று என்ற முடிவுக்கு வந்தார்.
1920 அக்டோபரில் பம்பாய் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு இந்துச் சட்டத்தைத் திருத்தி இயற்றினார். இதனுடைய சிறப்பம்சம், சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழித்தல், விவாகரத்தை எளிமைப்படுத்துதல், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பவை ஆகும்.
1921 டிசம்பர் 21-இல் சாகு, தன் மனைவி இலட்சுமிபாய் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எழுதி, பார்ப்பனப் புரோகிதர்களை நீக்கி மராத்தியப் புரோகிதர்களை அமர்த்திக் கொள்ளும்படி வற்புறுத்தினார்.
1922 பிப்ரவரி 13 முதல் 16 வரை டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் சாகு உரையாற்றினார். 30,0000 பேர் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
சாகு அம்மாநாட்டில் பேசும்போது, “அம்பேத்கர் என்னை விட அதிகம் படித்தவர், அவர் உங்களுக்கு மிகவும் பயன்படக் கூடியவர். நீங்கள் அனைவரும் உங்களுடைய மிகப் பெரும் தலைவராகிய அம்பேத்கர் பின்னால் செல்ல வேண்டும்” என்று கூறினார்.
டாக்டர் அம்பேத்கரை 4 குதிரை பூட்டிய வண்டியில் தன்னுடன் அமர வைத்து விருந்துக்கு அழைத்துச் சென்ற ஒரே சிற்றரசர் சாகு சத்திரபதியே ஆவார்.
அவர் சாதித்த மிகப் பெரும் சாதனை என்ன? அவர் பதவிப் பொறுப்பை ஏற்ற 1894 -இல் கோல்காப்பூர் அரசின் உயர் அலுவலர்களின் மொத்த எண்ணிக்கை 71. அதில் 60 பேர் பார்ப்பனர்கள். சாகுவின் கடைசிக் காலத்தில் 1922-இல் மொத்த உயர் அலுவலர்களின் எண்ணிக்கை 95 பேர். அதில் 36 பேர் மட்டுமே பார்ப்பனர்.
சாகுவின் தொடக்க காலத்தில் அந்த இராச்சியத்தில் தனியார் துறையில் உயர் அலுவலர்கள் மொத்தம் 53 பேர். இதில் 46 பேர் பார்ப்பனர்; 7 பேர் பார்ப்பனரல்லாதார். 1922-இல் சாகுவின் கடைசிக் காலத்தில் தனியார் துறையில் இருந்த மொத்த உயர் அலுவலர்கள் 152 பேர். இதில் பார்ப் பனர்கள் 43 பேர். பார்ப்பனரல்லாதார் 109 பேர் ஆகும்.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சாகு உறுதியான நடவடிக்கை எடுத்ததால் இதைச் சாதிக்க முடிந்தது.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலனாகவும், சமூகப் புரட்சியாளருமாகவும் இருந்த சாகு சத்திரபதி, நீரிழிவு நோயின் கொடுமையாலும் ஓயாத அலைச்சல் காரணமாகவும் தன்னுடைய 48-ஆம் வயதிலேயே, 1922 மே மாதம் 6 ஆம் நாள் மறைவுற்றார். அன்னாரின் இறுதிச் சடங்குகள், அவருடைய விருப்பப்படி, பார்ப்பனரல்லாத புரோகிதர்களால் நடத்தப்பட்டன. பார்ப்பனர்கள் முற்றுமாகப் புறக்கணிக்கப்பட்டனர்.
வளர்க சாகுவின் புகழ்.
சான்று: தனஞ்செய்கீர் எழுதியுள்ள சாகு சத்திரபதி ஆங்கில நூல்.
- வாலாசா வல்லவன்