Aadhavan Dheetchanya(தனியாரி கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த வேளையில் எழுதப்பட்ட கட்டுரை இது. இக்கட்டுரை விவாதிக்கும் பல கருத்துக்கள், உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்று ஆதிக்க சாதியினர் போராடி வரும் இன்றைய சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் இங்கு வெளியிடப்படுகிறது)

“உலகிலுள்ள அனைத்துமே பார்ப்பனர்களின் உடமையாகும். பார்ப்பனனது மிக உயர்ந்த பிறப்பின் காரணமாக உண்மையில் அவனே எல்லாவற்றுக்கும் உரியவனாகிறான்....”

- மனுஸ்மிருதியின் இந்த வாசகம் சமூகத்தின் எல்லா வளங்களையும் வசதிகளையும் பார்ப்பனனுக்கு மட்டுமே தாரை வார்த்தது. மற்றவர்களை வெறுங்கையர்களாய் தாழ்த்தியது. உடலுழைப்பில் ஈடுபடாமலும் தகுதி திறமை எதையும் நிரூபிக்காமலும் பார்ப்பனனனாய் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு தேவையான எல்லாமும் கிடைத்தன.

வாழ்க்கைத் தேவைகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான விவசாயம் தொழில் சார்ந்த அறிவைக் கொண்டிருந்த உழைப்பாளி மக்களை கீழ்மைப்படுத்த, வேதங்களை கற்பதும் ஓதுவதுமே ஆகச்சிறந்த அறிவென உயர்த்தினர் பார்ப்பனர்கள். வேதத்தின் முப்பதாயிரம் வரிகளை 2496 நாட்களில் படிக்கின்றன பார்ப்பனக் குழந்தைகள். அதாவது நாளொன்றுக்கு 12 வரிகள் படிப்பதைத்தான் தங்கள் சாதியால் மட்டுமே முடியுமென்று வேலி கட்டிக் கிடந்தனர்.

ஆட்சியில் நீடிக்க வேண்டுமென்றால் வேத பாராயணங்களோடு வேள்விகள் நடத்த வேண்டுமென்று அரசர்களின் பதவிவெறியை கிளப்பிவிட்டு ஆதாயம் அடைந்தனர் பார்ப்பனர்கள். யாகங்களின் மூலம் எடைக்கு எடை தங்கம் (துலா புருஷ தானம்), தங்கத்திலான பசு (ஹிரண்ய கரபா) என்று பரிகாரப் பொருட்கள் கிடைத்தன. கடவுளோடு ஹாட்லைன் தொடர்பில் இருப்பதாய் கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களை தாஜா செய்து கொள்ள விரும்பிய ராஜாக்கள் அவர்களுக்கு பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம், அக்ரஹாரம் போன்ற பெயர்களில் ஏராளமான விளைநிலங்களையும் குடிநிலங்களையும் ஒதுக்கினர். தங்கத்தையும் நிலத்தையும் மட்டுமல்லாது அரசனுக்கு வேண்டியவர்கள் என்ற அந்தஸ்தையும் அதிகாரத்தையும் பெற்றுத் தருகிற வேதத்தை மற்றவர்கள் கற்பார்களேயானால் அவர்கள் தமக்கு போட்டியாளர்களாக வரக்கூடும் என்று அஞ்சினர் பார்ப்பனர்கள்.

வேதங்களை கற்பதே கல்வி என்றால் அதை நாங்களும் கற்போம் என்று துணிந்த சம்பூகன் தலையை ராமனே வெட்டிக் கொன்றதாய் வால்மீகி ராமாயணம் கூறுகிறது. பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் வேதம் கற்பிக்க முயற்சித்தவன் நாக்கை துண்டாக்கியும், வேதம் ஓதுவதை கேட்பவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியும் தங்களுக்கு போட்டியாளர்கள் யாரும் உருவாகிவிடாமல் பார்த்துக் கொண்டனர் பார்ப்பனர்கள். இதன் காரணமாக (வேதக்)கல்வியிலும், அது சார்ந்த அரண்மனை வேலைவாய்ப்பிலும் நூறு சதவீத இட ஒதுக்கீடு பார்ப்பனர்களுக்கு மட்டுமே இருந்தது. பார்ப்பனர்கள் ஆக்ரமித்து அனுபவித்து வந்த நூறு சதத்தில் பங்கு கேட்டு பார்ப்பனரல்லாதார் காலங்காலமாக நடத்தியப் போராட்டமே இடஒதுக்கீட்டின் வரலாறாகும்.

பார்ப்பனர்களையே ராஜகுருக்களாகவும் ஆலோசகர்களாகவும் கொண்டு ஐம்பத்தாறு தேசங்களாகவும் பேரரசுகளாகவும் அறுநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாகவும் பிளவுண்டு கிடந்த இந்த துணைக்கண்டமே பிற்காலத்தில் பிரிட்டிஷாரால் இந்தியாவாக்கப்பட்டது. தமது கொள்ளையை செவ்வனே நடத்தவும், அதற்கெதிராய் எழும் கிளர்ச்சிகளை அடக்கவும் தேவையான நிர்வாக ஊழியர்களையும் படையையும் தன் சொந்த நாட்டிலிருந்தே அழைத்து வருகின்ற கடும் செலவினத்தை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு. மனித ஆற்றல் மலிந்து கிடக்கும் இந்தியாவிலிருந்தே தனக்கான ஊழியர்களையும் படையினரையும் திரட்டும்போது அவ்வாறு திரள்பவர்களை இயல்பிலேயே தமக்கு விசுவாசமானவர்களாக மாற்றக்கூடிய வகையிலான மெகாலே கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சி.

வேதசுலோகங்களை மனனம் செய்வதில் பரம்பரை பயிற்சியுடைய பார்ப்பனர்கள் மனப்பாட அடிப்படையிலான ஆங்கிலேயரின் கல்விமுறைக்குள் மிக எளிதாக தம்மை பொருத்திக் கொண்டனர். வேதம் ஓதுதலைத் தவிர வேறொரு காரியத்தில் ஈடுபடுவதையும் தமது சாதியத் தருமத்திற்கு விரோதமானது என்று அதுவரை அலட்டிக் கொண்டிருந்தவர்கள் எவ்வித உறுத்தலுமின்றி படிக்கப் போயினர். கூடவே மற்றவர்கள் படிப்பதையும் முடிந்த மட்டிலும் தடுத்தனர். இதனால் ஆரம்ப காலத்தில் பள்ளிகளும் கல்லூரிகளும் கூட பார்ப்பனர்களால் நிறைக்கப்பட்ட அக்ரஹாரங்களாகவே செயல்பட்டன. 1914 ம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட 650 பட்டதாரிகளில் 452 பேர் பார்ப்பனர்களாகவே இருந்தனர். 1915ல் படித்தவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 7-8 சதமே. அதில் 75 சதவீதம் பார்ப்பனர்களாகவே இருந்தனர்.

இப்படி மிலேச்சனின் கல்வியை கற்றுத் தயாரான பார்ப்பன மற்றும் மேட்டுக்குடி இளைஞர்களுக்கு பொருத்தமான வாய்ப்பினை கேட்கத்தான் காங்கிரஸ் போன்ற இயக்கங்கள் தொடங்கப்பட்டன. கலெக்டர், ஜட்ஜ் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கெடுக்க இந்தியர்களுக்கும் வாய்ப்பு கோரியது காங்கிரஸ். அவ்வாறு நடக்குமானால் பார்ப்பனர்களும் மேட்டுக்குடியினரும் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவது அவர்களது சாதியாதிக்கத்தை வலுப்படுத்தவே உதவும் என்றும் அரசை எச்சரிக்கும் வகையில் 1893 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ந்தேதி 3412 பேர் கையொப்பமிட்ட 112 அடி நீளமுள்ள மனு ஒன்று சென்னையிலிருந்து பறையர் மகாஜன சபையால் அனுப்பப்பட்டது. ஆனாலும் என்ன பார்ப்பனர் ஆதிக்கம் தடுத்த நிறுத்த முடியாத ஒன்றாய் மூர்க்கம் கொண்டிருந்தது. அந்த மனுவில் வெளிப்பட்ட அச்சம் உண்மையே என்பது நிரூபணமானது. 1892 முதல் 1904 வரை மாகாண சிவில் சர்வீசுக்கு நடத்திய போட்டித் தேர்வில் தேறிய 16 பேரில் 15 பேர் பார்ப்பனர்களாகவே இருந்ததை சுட்டிக்காட்டிய சென்னை நிர்வாக சபை உறுப்பினர் சர்.அலெக்சாண்டர் கார்ட்யூ, சிவில் சர்வீஸ் முழுவதும் ‘கடும் வகுப்புணர்ச்சி’ கொண்ட பார்ப்பனர்கள் கைக்குள் இருப்பது குறித்து எச்சரித்தார்

Slavesதனது சொந்தத் தேவையிலிருந்து கல்வியை ஜனநாயகப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சி. ஆனாலும் பார்ப்பனரல்லாதார் தங்களது பாரம்பரிய அல்லது குலவயப்பட்ட தொழில்களை கைவிட்டு வெளியேற முடியாதபடியான சமூகத் தடைகள் நீடித்தன. இம்மக்களை தங்களது அடிமைகளாகவும் சேவகர்களாகவும் கொண்டிருந்த பார்ப்பனர்களும் மேட்டுக்குடியினரும் அவர்களது கற்கும் உரிமையை மறுத்தனர். கல்வியில் பங்கெடுக்கும் உரிமை கோரி ஜோதிராவ் பூலே, அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் போன்றோர் தாழ்த்தப்பட்ட மக்களையும் பெண்களையும் அணிதிரட்டியதோடு சாத்தியப்பட்ட இடங்களில் கல்விச் சாலைகளை தொடங்கவும் செய்தனர். ஆனாலும் என்ன, மிலேச்சனின் கல்வியையும் அதிலிருந்து வருமானம் ஈட்டித் தரும் வேலைகளையும் பார்ப்பனர்களே கைப்பற்ற முடிந்தது. ஆட்சியாளர்களோடு சேர்ந்து சமூகத்தின்மீது அதிகாரம் செலுத்துபவர்களாக பிரிட்டிஷ் ஆட்சியிலும் அவர்களால் தொடர முடிந்தது. 1881ல் மக்கள் தொகையில் 3.6 சதம் மட்டுமே இருந்த அவர்கள் பத்து ரூபாய்க்கு மேல் (அன்றைய நிலவரத்தில் அதிக சம்பளம்) மாதச்சம்பளம் கிடைக்கும் வேலைகளில் 42.2 சதவீதத்தை ஆக்ரமித்திருந்தனர்.

கல்வி பொதுமைப்படுத்தப்பட்டதன் விளைவாக தடைகளையும் மீறி பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முகமதியர்கள் மத்தியிலிருந்து படித்த ஒரு பகுதியினர் உருவாகி வந்தனர். காலங்காலமாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்ட அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்து வலுவடைந்து வந்தது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நிலவும் பார்ப்பன மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் இயக்கங்கள் தோன்றின. அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (பார்ப்பனரல்லாதாருக்கு?) இடஒதுக்கீடு வழங்கும் முறையை 1870ல் மைசூர் சமஸ்தானம் அறிமுகப்படுத்தியதாகத் தெரிகிறது. அனைத்து நிர்வாகப் பதவிகளையும் சில குடும்பங்களே ஆக்ரமித்திருக்கும் நிலையை மாற்றிடும் வகையில் மாவட்ட கலைக்டர்கள் தங்கள் கீழுள்ள பதவிகளை எல்லா சாதியாருக்கும் பிரித்து வழங்குமாறு 1884ல் ஆங்கிலேய அரசு ஆணையிட்டது. சென்னை வருவாய்த்துறை அலுவலக ஆணை எண் 128(2) என்று வெளியான ஆணையையே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பதன் தோற்றுவாயாகக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முனிசிபாலிட்டி நிர்வாகத்திலும் பங்கு கேட்கும் விண்ணப்பம் ஒன்றை அயோத்திதாசரும் ரெட்டைமலை சீனிவாசனும் திராவிட சபையோர் சார்பாக 1891 ம் ஆண்டிலேயே காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பியிருந்தனர். ஆனாலும் நிலைமையில் பெருத்த மாற்றமில்லை. நான்காம் பிரிவிலான கீழ்நிலைப் பணிகளே பார்ப்பனரல்லாதாருக்கு கிடைத்தன.

பொதுப்பணித்துறையில் 74%, வருவாய்த்துறையில் 50%, நிதித்துறையில் 66%, கல்வித்துறையில் 79% பதவிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே இருந்தனர் என்று 27.1.1919ல் வெளியான அரசாங்க பதிவேடு கூறுகிறது.

இதே காலகட்டத்தில்தான் பார்ப்பனரல்லாத சாதியார் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பெயரில் அமைப்புரீதியாய் திரண்டு கல்வி, வேலை, நிர்வாகச் சபைகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்து 1920ல் ஆட்சிக்கு வருகின்றனர். (இவ்வமைப்பு ஆங்கிலத்தில் நடத்திய ஜஸ்டிஸ் பத்திரிகையின் பெயரால் இவர்கள் ஜஸ்டிஸ்- நீதிக்கட்சியினர் என்றழைக்கப்பட்டனர்). தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சியின்போது 1922ல் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம் அரசுப்பணிகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செயல்முறைக்கு வந்தது.

இதுவரை பெரும்பான்மையான அல்லது முழுமையாக பணியிடங்களை கைப்பற்றி வந்த பார்ப்பனர்கள் கட்டுக்குள் நிறுத்தப்பட்டனர். இந்த ஆணையின்படி, நியமிக்கப்படும் 12 பேரில் 2 பேர் மட்டுமே பார்ப்பனர்கள் என்றும் மற்ற இடங்கள் பார்ப்பனரல்லாதார்- 5, முஸ்லிம்- 2, ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறித்துவர்- 2, ஒடுக்கப்பட்டவர்கள்- 1 என்று பிரித்தளிக்கப்பட்டது. மக்கள்தொகைக்கு ஏற்றாற்போன்ற பிரதிநிதித்துவம் என்று இது அழைக்கப்பட்டாலும் மக்கள் தொகையின் கால்பங்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு இடம் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. ஆனாலும் பார்ப்பனர்களின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது என்ற வகையில் இவ்வாணை மிக முக்கியமானது.

தங்களது ஏகபோகத்தில் இருந்த கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் போட்டியாளர்கள் வந்துவிட்டதைக் கண்டு பதைத்த பார்ப்பனர்கள் தகுதி திறமை தரம் என்று கிளப்பிய கூப்பாடு இன்றுவரை ஓயவேயில்லை. (படிப்புக்கும் பார்க்கிற வேலைக்கும் எந்தத் தொடர்புமில்லாத நிலையில் அதில் என்ன தகுதியையும் திறமையையும் இவர்கள் கண்டார்கள் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்). இத்தனைக் காலமும் ஒட்டுமொத்த சமூகத்தின் வளங்களையும் உறிஞ்சி கொழுத்தது குறித்து எந்த குற்றவுணர்ச்சியும் மறுசிந்தனையும் அவர்களுக்கு ஏற்படவேயில்லை. அப்பட்டமான சாதிவெறியும் துவேஷமுமே பார்ப்பனர்களை இயக்கியது. அவர்கள் படித்த எந்த கல்வியிலிருந்தும் சமூகநீதி என்கிற பாடத்தை கற்கவேயில்லை. இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதில்தான் தங்களது நலன் அடங்கியிருக்கிறது என்பதில் அவர்களுக்குள் சாதிரீதியான ஒரு கருத்தொற்றுமை நிலவியது.

நிர்வாகத்திலும் நீதித்துறையிலும் பத்திரிகைகளிலும் பரவியுள்ள அவர்களது செல்வாக்கைப் பயன்படுத்தி கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிடாமல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். சுதந்திரத்திற்கு பிறகு இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. State of Madras Vs Champakam Dorairajan, April 1951 என்ற இவ்வழக்கு உச்சநீதி மன்றத்திற்கும் சென்றது. அரசியல் சட்டத்திற்கு முரணாக இருப்பதாக கூறி உச்சநீதிமன்றம் இவ்வாணையை ரத்து செய்தது. தந்தை பெரியார் தலைமையில் நடந்த போராட்டத்தின் விளைவாக அரசியல் சட்டத்தில் முதன்முறையாக திருத்தம் கொண்டுவரப்பட்டு பார்ப்பனரல்லாதாருக்கான ஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது.

தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பது அவர்களது வாடிக்கையாயிருந்தது. பாலாஜி எதிர் மைசூர் மாநில அரசு- 1962 சித்ரலேகா எதிர் மைசூர் மாநில அரசு-1964, ஜெயஸ்ரீ எதிர் கேரள அரசு - 1976, கேரள அரசு எதிர் என்.ஹெச். தாமஸ் - 1976, ரங்காச்சாரி வழக்கு- 1962, தேவதாசன் வழக்கு- 1964 போன்ற வழக்குகளின் விசாரணைகள் தீர்ப்புகளுக்கு ஏற்ப அவ்வப்போது இடஒதுக்கீடு குறித்த வாதப் பிரதிவாதங்கள் எழும்பியடங்கின.

‘சமூகத்திலுள்ள அனைத்து சாதியினரையும் சமமாக கொண்டுவர வேண்டும் என்று உறுதிபூண்டால், சமத்துவம் என்ற கொள்கையையே எப்போதும் முழங்கிக் கொண்டிராமல், சமூகத்தில் பிற்பட்டவர்களுக்கு கூடுதல் வசதிகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். உயர் வர்க்கத்தவர்களுடைய வசதி வாய்ப்புகளை குறைத்து விடவேண்டும். எதிர்காலத்தில் சமத்துவம் ஏற்பட நிகழ்காலத்தில் இவ்வாறு சமத்துவமின்மை கொள்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்று 1927ம் ஆண்டு சட்டமன்ற மேலவையில் பட்ஜெட் விவாதத்தின் போது அண்ணல் அம்பத்கர் தெரிவித்த கருத்தில் கடைசிவரை உறுதியோடு இருந்தார். அரசியல் சட்டம் இயற்றுவதில் அம்பேத்கர் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு கிட்டியது. பரிவின் அடிப்படையிலல்லாமல் சாதியப் படிநிலையின் பேரால் சமூகம் இழைத்தக் கொடுமைக்கு பரிகாரம் தேடிக்கொள்ளும் வகையாக, இதுவரை மறுக்கப்பட்ட உரிமைகளுக்கு ஈடாகத்தான் இடஒதுக்கீடு என்ற கருத்தை உருவாக்குவதில் அம்பேத்கர் நடத்திய போராட்டம் ஒப்பிடற்கரியது.

பிற்படுத்தப்பட்டோர் நிலையை ஆய்ந்திட மத்திய அரசால் காகா கலேல்கர் தலைமையில் 1953 ஜனவரி 29ல் முதல் பிற்பட்டோர் கமிஷன் அமைக்கப்பட்டது. 2399 சாதிகளை பிற்படுத்தப்பட்டவை என்று பட்டியலிட்ட கமிஷன் அவற்றில் 837 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டவை என்றது. 1.1961 மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக கணக்கிட வேண்டும் 2. இந்து சமூகத்தின் சாதியப்படிநிலையில் ஒரு சாதி எந்தளவிற்கு கீழாக இருக்கிறதோ அந்தளவிற்கு அது பிற்பட்ட வகுப்பாக கருதப்பட வேண்டும் 3.பெண்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்டவர்களாக கருதப்பட வேண்டும் - என்று கமிஷன் பரிந்துரைத்தது. அனைத்து பொறியியல் மற்றும் தொழிற்கல்வியில் 70 சதம் இடங்களை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றதோடு, அரசுப்பணிகளிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் பின்வரும் அளவில் ஒதுக்கீட்டை பரிந்துரைத்தது: முதல்நிலை- 25 சதம், இரண்டாம்நிலை- 33 1/3, மூன்று மற்றும் நான்காம் பிரிவுகளில் 40 சதம்.

பரிந்துரையை அரசுக்கு அனுப்பிய காகா கலேல்கர் அதன்பின் குடியரசுத் தலைவருக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தில், கமிஷனின் பெரும்பான்மைக்கு கட்டப்பட்டு தான் அவ்வாறு பரிந்துரைத்ததாகவும், உண்மையில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் தெரிவித்திருந்தார். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஏற்காத நேருவின் விருப்பத்திற்கு ஏற்பவே இக்கடிதத்தை அவர் எழுதியதாக மறைந்த சோசலிஸ்ட் தலைவர் மதுலிமாயி குற்றம் சாட்டினார் (தி இந்து 19.09.1990). இறுதியில் அக்கமிஷனின் பரிந்துரைகளை அரசு நிராகரித்தது. பிற்படுத்தப்பட்டடோருக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு ஒதுங்கிக் கொண்டது.

மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்த அவசரநிலையை முறியடித்து 1977ல் அமைந்த ஜனதா அரசு பிற்படுத்தப்பட்டோர் நிலையை ஆய்ந்திட B.P. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் கமிஷனை அமைத்தது. 1.1.79 ல் அமைக்கப்பட்ட இக்கமிஷன் சமூக அந்தஸ்திலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மக்கள் பிற்படுத்தப்பட்டமைக்கான பல்வேறு காரணிகளை ஆழ்ந்து பரிசீலித்து 31.12.1980ல் தனது பரிந்துரையை அரசுக்கு கொடுத்தது. மக்கள் தொகையில் 52 சதமாயிருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுப்பணிகளில் 27 சதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற அதன் பரிந்துரையை பத்தாண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டனர். 1990ல் வி.பி.சிங் அரசு தான் செயல்முறைக்கு கொண்டு வந்தது. உயர்சாதி மேலாதிக்கத்தை தனது ஆதாரக் கொள்கையாக கொண்டியங்கும் பாரதீய ஜனதா கட்சி இதன் காரணமாகவே அரசை கவிழ்த்தது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தங்களது ஆதிக்கம் மேலும் மேலும் சுருங்குவதைக் கண்டு பதற்றம் கொண்டவர்கள் மண்டல் பரிந்துரைக்கு எதிராக கலகங்களை நடத்தினர். நந்தனை எரித்த நெருப்பின் மிச்சத்தில் யாரை கொளுத்துவது என்று அலைந்தவர்கள் தங்கள் சொந்த மாணவர்களையே எரித்தனர். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா சவானி வழக்கு தொடுத்தார்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஒருபுறமிருக்க, பல்வேறு மாநில அரசுகளும் வெவ்வெறு அளவீடுகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50%. (இந்த வரலாறு தெரியாமல் இடஒதுக்கீடு என்றாலே அது ஏதோ தலித்களுக்கு மட்டும்தான் என்று நினைத்துக்கொண்டு தலித்களை கவர்மெண்ட் மாப்பிள்ளைகள் என்றும் கவர்மெண்ட் பார்ப்பனர்கள் என்றும் கேலிபேசும் வழக்கம் பிற்படுத்தப்பட்டவர்களிடமும் உள்ளது).

இந்திரா சவானி வழக்கில், எல்லாவகையான இடஒதுக்கீடுகளும் 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்று 16.11.1992 ல் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாட்டில் 69 சதம் நீடிக்கத் தேவையான சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சமூகநீதி காத்த வீராங்கனைகள், வீராங்கன்கள் போன்ற பட்டங்களை ஆட்சியாளர்களுக்கு பெற்றுத் தந்த இச்சட்டத்திருத்தம் உள்ளிட்ட இடஒதுக்கீடு சட்டங்கள் எல்லாமே வெறும் ஏட்டளவு எண்ணிக்கையாக மாறிக் கொண்டிருப்பதும், அந்த ஏட்டளவு இடஒதுக்கீட்டையும் இல்லாமல் ஆக்குவதுமாகிய நிலைமையுமே இப்போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஆகும்.

மத்திய மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பணிநியமனம் நடைபெறுகிற போதே ஏட்டில் இருக்கும் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். ஆனால் பணியாளர் தேர்வு வாரியங்கள் அனைத்தும் தொடர்ந்து ஆளெடுத்து வந்த காலத்திலேயே சட்டப்பூர்வமான இடஒதுக்கீடு பூர்த்தி செய்யப்படவில்லை. பல்வேறு குளறுபடிகளை உருவாக்கி நடைமுறையில் இடஒதுக்கீட்டின் பலன் உரிய மக்களுக்கு கிடைக்காமல் பார்த்துக் கொள்வதில் உயர்சாதி மனோபாவம் தனது வன்மத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இடஒதுக்கீட்டின்படியான வேலைவாய்ப்பை மறுப்பதன் மூலம், தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் கையில் ஊதியமாகவும் சலுகைகளாகவும் புழங்கவேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை முடக்கி அவர்களை சமூகரீதியிலும் பொருளாதாரத்திலும் மேலெழ முடியாதவர்களாக ஒடுக்கும் புதிய தந்திரம் மிக நுட்பமாக கையாளப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடிகளுக்குமான இடஒதுக்கீடு செயல்முறைக்கு வந்த கடந்த 55 ஆண்டுகாலத்தில் ஒருபோதும் அதன் முழு அளவை எட்டியதேயில்லை. நான்காம் பிரிவு ஊழியர்களில் மட்டுமே அவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் நிரப்பப்பட்டுள்ளனர். உயர்பதவிகள் பெரும்பகுதியிலும் மக்கள் தொகையில் மூன்றுசதவீதமே இருக்கும் பார்ப்பனர்கள்தான் நிரம்பியுள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இவ்விசயத்தை தலித் தகவல் ஒருங்கிணைப்பு சார்பில் 2000ல் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை காத்திரமாக அம்பலப்படுத்துகிறது. செடியை நட்டு அதை கடிக்கிற ஆட்டையும் அதிலேயே கட்டிவைத்த மாதிரி தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையில் உள்ள உயர்மட்ட ‘ஏ’ பிரிவு அதிகாரிகள் அவ்வளவு பேருமே தலித் அல்லாதவர்களாக நியமிக்கப்பட்டிருந்ததையும் இடஒதுக்கீடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருந்ததையும் இவ்வறிக்கை வெளிச்சமிட்டுள்ளது. ஐஐடி போன்றவற்றில் இடஒதுக்கீடு இன்றளவும் கொள்கையளவிலும்கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் இந்தியாவை இருபத்தோராம் நூற்றாண்டுக்கு இட்டுச்செல்லும் ராக்கெட்டுகளாய் கண்மூடித்தனமான நவீனமயம் திணிக்கப்பட்டது. சிக்கலான பணிகளை லகுவாக்கவும் மனிதர்களால் செய்யமுடியாதப் பணிகளில் ஈடுபடுத்தவுமே நவீனமயம் என்கிற கருத்தாக்கம் தவிடுபொடியானது. மனித ஆற்றல் மலிந்து கிடக்கும் இந்நாட்டில் நவீனமயம் ஆட்குறைப்புக்கே வழிவகுத்தது. அதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த கொள்கைகளினால் நாடு முன்னேறவேயில்லை என்று சொல்லிக்கொண்டு 1991ல் புதிய பொருளாதாரக் கொள்கை, புதிய தொழிற்கொள்கை என்று எல்லாமே புதிய என்னும் அடைமொழியோடு வந்தன. உற்பத்தி செலவை குறைப்பது, நிர்வாகச் செலவினங்களை குறைப்பது, ஜீரோ பட்ஜெட், Down Sizing, Right Sizing, VRS என்றெல்லாம் நூற்றியெட்டு சொற்களில் பேசப்பட்டாலும் அவையெல்லாமே ஆட்குறைப்பையும், ஆளெடுப்பதை தடுப்பதையுமே நோக்கமாய் கொண்டிருந்தன. இந்திரா காந்தி கொண்டுவந்த ஆளெடுப்புத் தடைச்சட்டம் இன்றுவரை அமலில் இருக்கிறது. (Job or Jail என்று போராடிய இளைஞர் அமைப்புகளுக்கு ஜெயில் தான் கிடைத்தது. பிரச்னையை ஜெயிலா பெயிலா என்று திசைதிருப்பிய இந்திரா காந்திக்கு பிறகு எத்தனையோ பிரதமர்கள் ஆட்சிகள் வந்துவிட்டாலும் நிலைமையில் முன்னேற்றமில்லை.)

வளர்ந்த நாடுகளின் நவகாலனியாதிக்க ஏற்பாடான உலகமயமாக்கலுக்கு தோதாக நாட்டை தகவமைப்பதில் புதிய பொருளாதாரக் கொள்கை அடைந்த வெற்றியானது நாட்டு மக்களின் வாழ்வில் பலத்த அரிமானங்களை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு சேமநல அரசு என்கிற பொறுப்பிலிருந்து விலகி வெறுமனே சட்டம் ஒழுங்கை பராமரிக்கக்கூடிய அரசாக தன்னை சுருக்கிக் கொண்டுள்ளது. இவ்வளவு காலமும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்கி இந்திய உடமை வர்க்கத்தாரின் சுரண்டல் தடையின்றி நடப்பதற்கான சட்டம் ஒழுங்கையும் சமூக அமைதியையும் நிலைநிறுத்திய மத்திய மாநில அரசுகள், ஹீரோ ஹோண்டா தொழிலாளர் போராட்டத்தின் போது அன்னிய முதலாளிக்காக சொந்தநாட்டு மக்களின் மண்டையைப் பிளக்கும் அடியாள்படையாக வெளிப்படுத்திக் கொண்டன. நாட்டின் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வை போக்குவதில் ஒரு அரசுக்குரிய சட்டப்பூர்வமான கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து அது வெகுவாக விலகிவிட்டது. விதை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து, சாலை என்று எதையும் மக்களுக்கு இலவசமாகவோ மானியத்துடனோ வழங்குவதில்லை என்ற அரசின் முடிவிலிருந்தே தனியார்மயம் ஊக்கம் கொண்டுள்ளது.

அரசுத்துறைகள் இருக்கும், ஆளெடுப்பு இருக்காது என்கிற நிலை மாறி அரசுத்துறைகளே இல்லாது போகும் நிலை உருவாகிவிட்டது. லாபமீட்டும் அரசுத்துறைகள் தனியார் மயமாகின்றன. நஷ்டத்தில் உள்ளவை மூடப்படுகின்றன. அரசுத்துறைகள் இயங்கும் பணிகளிலும் சேவைத்தளங்களிலும் தனியார் நிறுவனங்கள் போட்டியாக அனுமதிக்கப்படுகின்றன. இப்படியான கொள்கைகளின் நீட்சியாகத்தான் சுயநிதிக் கல்லூரிகள் உருவாகின. தமிழ்நாட்டில் உலகமய, தனியார்மய நடவடிக்கைகளின் தீவிரத்திற்கேற்ப சுயநிதிக் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

வசதியுள்ளவர்களால் வாங்கப்படும் சரக்காக உயர்கல்வி இப்போது மாற்றப்பட்டாகி விட்டது. பல லட்சங்களில் நடக்கிறது இந்த பரிவர்த்தனை. உலகமயக் கொள்கைகளின் காரணமாக உள்நாட்டுத் தொழில்கள் நலிவடைவதும் புதிய வேலைவாய்ப்புகள் அருகிப்போவதுமான புதிய சூழல் உருவாகியுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு என்பதால் ஏற்பட்டுள்ள கடும்போட்டியில் தமது பிள்ளைகள் பின்தங்கிவிடக்கூடாது என்கிற பதற்றத்தில் நடுத்தர குடும்பங்களும் கூட தமது வருமானத்தின் பெரும்பகுதியை பணயம் வைத்து இந்த சூதாட்டத்தில் பங்கெடுக்கின்றன. படிக்கிற எல்லோருக்கும் வேலை என்ற சிந்தனையோ கேள்வியோ எழுவதில்லை. ஒரே ஒரு இடத்திற்குத்தான் ஆளெடுப்பு நடக்கிறதென்றால் அதை தட்டிப் பறிப்பவர் தன் பிள்ளையாக இருக்கவேண்டும் என்கிற அளவுக்கு இவர்களது சிந்தனை குறுகிவருகிறது. அல்லது உள்நாட்டில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி படித்துவிட்டு வெளிநாட்டுக்கு பறக்க வைப்பது. தங்கள் குடும்பத்திலிருந்து ஒருவர் வெளிநாட்டுக்கு போய்விட்டால் போதும், வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆகிவிடலாம் என்கிற இவர்களது ஏக்கத்தை நிறைவேற்றுவதாய் தோற்றம் காட்டுகின்றன சுயநிதிக் கல்லூரிகள்.

அங்கே பயிற்றுவிக்கப்படும் கல்வியின் தரம் எப்படியானது என்பதைவிடவும் அங்கே எப்படியான மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும். ராணுவத்துக்கும் கைதிகளுக்குமான கட்டுப்பாடுகளையும் ஒழுக்கங்களையும் கலந்து ஒருவகையான புதிய ஒழுங்குள்ள மாணவர்களை இக்கல்லூரிகள் உருவாக்குகின்றன. இந்த ஒழுங்கை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை பல கல்லூரிகளில் பெரும் வருமானமாக இருக்கிறது. ஒரு மாணவன் சகமாணவியோடு பேசுவதும்கூட கடும் குற்றங்களாக பாவிக்கப்படுகிறது. நூதனமான பல தண்டனை முறைகளும் கூட உண்டு. இப்படியான கட்டுப்பாடுகள்(?) நிறைந்த சூழ்நிலையில் படித்தால்தான் தன்பிள்ளை பணயத் தொகையை மீட்கும் குதிரையாக முடியும் என்று பெற்றோர் மத்தியில் ஒப்புதல் இருக்கிறது. இக்கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் கூட தினந்தோறும் தமது கற்பிக்கும் திறனை நிரூபிப்பதன் மூலமே மறுநாள் வேலையில் நீடிக்க முடியும் என்ற நிலையிலிருப்பதால் மாணவர்கள் மேலும் மேலும் இயந்திரகதிக்கு ஆட்படுத்தப்படுகின்றனர்.

உண்மையில் இப்படிப்பட்ட மாணவர்கள்தான் இன்றைய முதலாளிகளுக்குத் தேவை. அதனால்தான் பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் இச்சுயநிதிக் கல்லூரிகளிலேயே கேம்பஸ் இன்டர்வியூக்களை நடத்துகின்றன. தொழிலாளியின் ஊதியம் சலுகைகள் உரிமைகள் போன்றவற்றை தீர்மானிக்கும் தொழிற்சங்கம், கூட்டுபேர சக்தி, தொழிலாளர்நலச் சட்டங்கள் போன்றவற்றுக்கு இடமளிக்காமலே புதுவகையானதொரு தொழிலாளிப் பட்டாளத்தை முதலாளிகள் உருவாக்கி வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் சம்பந்தப்பட்ட ஊழியரோடு தனிப்பட்ட முறையில் பேசி முடிக்கப்படுகிறது. தன்னையொரு சமூக மனிதனாக உணராமல் தனித்தொதுங்கும் மனநிலை கொண்ட, வெளியுலக நடப்புகளை ஏறெடுத்தும் பார்க்காத, தானுண்டு தன் வேலையுண்டு என்று மிகுந்த கீழ்ப்படிதலுள்ள மாணவர்கள் தொழிலாளிகும்போது தமது சுரண்டலுக்கு எந்த ஆபத்தும் தடங்கலும் ஏற்படாது என்ற முதலாளிகளின் நம்பிக்கையை நிறைவு செய்கின்றன சுயநிதிக் கல்லூரிகள். அதாவது பிற முதலாளிகளுக்குத் தேவையான சைபர்கூலிகளை அவர்கள் விரும்பக்கூடிய வகையில் தயாரிக்கின்றனர் கல்வி முதலாளிகள். முதலாளிகள் தமக்குள் வகுத்துக் கொண்ட வேலைப் பிரிவினைதான் இது. எனவே சுயநிதி கல்லூரிகள் நடத்தப்படும் விதம் குறித்தோ அதில் உருவாக்கப்படும் மாணவர்கள் குறித்தோ அரசோ பிற சமூக அமைப்புகளோ மாணவர் சங்கங்களோ கேள்வியெழுப்ப முடியாத காட்டாட்சி சுதந்திரம் வேண்டும் என்பது கல்வியாலை முதலாளிகளின் கிடக்கையாக இருக்கிறது.

சமூகத்தின் மேலே தம்மை இருத்திக்கொண்டு அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளத்தில் தமது மேலாதிக்கத்தை நிறுவிக்கொண்ட பார்ப்பனர்களும், மேல்தட்டு சொத்துடமையாளர்களும், குறுகிய சிந்தனை கொண்ட நடுத்தர வர்க்கத்தினரும் மட்டுமே இச்சுயநிதிக் கல்லூரிகளில் இடம் பிடிக்கும் வசதி பெற்றுள்ளனர். சாதியப் படிநிலையில் கீழ்ப்படுத்தப்பட்டதால் பொருளாதாரத்திலும் நலிந்து கிடக்கும் மற்றவர்கள் நுழைய வேண்டுமானால் அரசாங்கத்தின் தலையீடும் துணையும் தேவை. சுயநிதிக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் அரசானது தனக்கொரு பங்கை எடுத்துக்கொள்வதன் மூலமே தலித்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் அங்கே நுழைவதற்கான வாய்ப்பு உருவாகும். ஆனால் உச்சநீதிமன்றமோ சுயநிதிக் கல்லூரிகளின் விவகாரங்களில் தலையிட அரசுக்கு உரிமையில்லை என்றும், கட்டணம் உள்ளிட்டவற்றை நிர்வாகங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும், அங்கே இடஒதுக்கீட்டை அமல்படுத்தத் தேவையில்லை என்றும் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. சொந்தநாட்டு மக்களுக்கு இடஒதுக்கீட்டை மறுத்த அதே தீர்ப்பில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு 15 சதம் ஒதுக்கீடு தேவை என்று கூறியதில் என்ன நீதி இருக்கிறது? வெளிநாட்டுவாழ் இந்தியர்களை சுரண்டிக் கொழுக்க தமக்கு கிடைத்த சட்டரீதியான அனுமதி என்று கல்வியாலை முதலாளிகள் இத்தீர்ப்பை வரவேற்று கொண்டாடியதில் ஆச்சர்யமேதுமில்லை.

சுயநிதிக் கல்லூரிகள் அந்தரத்திலிருந்து வந்தவையல்ல. சுயநிதி கல்லூரி முதலாளிகள் தம்முடைய கைக்காசை கொட்டியாவது இந்த சமூகத்திற்கு கல்வி புகட்டியேத் தீர்வது என்கிற லட்சியவாதிகளுமல்ல. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு நேர்காணலில் சொன்னதுபோல கல்விச்சாலையை நடத்துவதைவிட சாணியுருண்டை விற்பதுதான் லாபம் என்ற சூழ்நிலை உருவாகுமானால் இவர்களெல்லாம் மாடுமேய்க்கும் தொழிலுக்குப் போய்விடக்கூடியவர்களே. இந்த சமூகத்தின் பல்வேறு வளங்களையும் பயன்படுத்தியே கல்லூரி தொடங்குவதற்கான மூலதனத்தை திரட்டியுள்ளனர். ஏற்கனவே அரசு உருவாக்கியிருக்கும் கட்டமைப்பை பயன்படுத்துகின்றனர். அரசின் பல்வேறு கல்விச்சாலைகளில் உருவான அறிவாளிக்கூட்டத்தை தமது கூலியடிமைகளாகப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் இம்முதலாளிகளின் கல்விக்கொள்ளை தொடருவதில் ஏதேனும் பிரச்னைகள் எழுமானால் சட்டம் காவல் நீதி நிர்வாகம் என எல்லா முனைகளிலிருந்தும் அரசின் உதவியை பெறுகின்றனர். ஆகவே சமூகத்தின் பொதுவளங்களை, அரசின் உதவிகளை மிகுதியாக பயன்படுத்தி நடக்கும் ஒரு துறையில்அல்லது தொழிலில் அரசின் தலையீடும் அரசுக்கான பங்கும் தேவையாயிருக்கிறது. ஒருவேளை சுயநிதிக் கல்லூரி நடத்துவதை கொள்ளைத்தொழிலாக அறிவித்துவிடும் பட்சத்தில் அத்தகைய குற்றத்தில் பங்கு கேட்பது ஒரு அரசின் தார்மீகநெறிகளுக்கு புறம்பானது என்று வேண்டுமானால் ஒதுங்கிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.

இந்த அம்சங்களையெல்லாம் கணக்கில் கொண்டே சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நாடெங்குமுள்ள சமூகநீதி ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். நாடாளுமன்றமும் கூட மக்களின் உணர்வுநிலையோடு ஒத்திசைந்து தீர்ப்பின் மீது அதிருப்தி தெரிவித்தது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியையே கவிழ்த்த பாரதிய ஜனதா கட்சி கூட அடக்கி வாசித்தது. சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டுக்கு வழிகோலும் வகையிலான சட்டத்திருத்தம் கொண்டு வரப்போவதாக மத்திய அரசு அறிவித்தபோது உச்சநீதிமன்ற நீதிபதி தன்னுடைய ஸ்தானத்திலிருந்து வெகுவாக விலகி ஒரு கல்லூரி முதலாளியைப்போல சீறியது கண்டு நாடு மீண்டும் அதிர்ச்சியடைந்தது.

புதிய தொழிற்கொள்கை தொடங்கி இன்றைய உலகமயமாக்கல் வரையான இக்காலகட்டம் என்பது இந்நாட்டில் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் மறுத்து முதலாளிகள் கொழுக்கும் காலமாகவே இருக்கிறது. நிரந்தர வேலை, வேலைநேரம், பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம் என்ற பலன்களை எய்திய அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து பலமிழக்கச் செய்வது, காஷூவல், காண்டிராக்ட் தொழிலாளர்களை ‘அமர்த்து- துரத்து’ (Hire and Fire) அடிப்படையில் பணியமர்த்துவது, பணி உத்தரவாதமற்ற நிலையில் தொழிலாளர்களை இருத்துவதின் மூலம் தொழிற்சங்க இயக்கத்தில் அணிதிரள முடியாதபடி அச்சத்தில் ஆழ்த்துவது, அவுட் சோர்சிங் என்கிற வகைகளில் உழைப்புச் சுரண்டல் தீவிரமடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இச்சுரண்டல் கடுமையாக உள்ளது. எனவேதான் இத்துறையில் தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும், கூட்டுபேர சக்தியை பயன்படுத்தும் வகையில் தொழிற்சங்க உரிமை வேண்டும் என்று இப்போது இடதுசாரி அமைப்புகள் சொன்னதுமே மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி பதற்றமடைந்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் தொழிற்சங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் (தி இந்து 28.10.2005). ஆனால் அசோசெம், பிக்கி, சிஐஐ, நாஸ்காம் என்று முதலாளிகள் சங்கம் வைத்துக் கொள்வார்களாம். தங்களது கட்டற்ற சுரண்டலுக்கு தடையாக எதிர்ப்போ போராட்டமோ எழக்கூடாது என்று இந்திய ஆளும் வர்க்கமும் அவர்களது அன்னியக் கூட்டாளிகளும் விரும்புகின்றனர். அதற்கு ஒத்திசைவான பல தீர்ப்புகளையும் கருத்துக்களையும் வெளியிடும் இடமாக நீதிமன்றங்கள் மாறிக்கொண்டுள்ளன. அரசுத்துறை, வேலைவாய்ப்பு முற்றாக முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள் தனியார்துறையிலும் இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை எழுப்புகின்றனர். இதுகுறித்து விவாதிப்பதற்காக மத்திய சமூகநலத்துறை அமைச்சர் சில ஆலோசனைக்கூட்டங்களை நடத்தியதற்கே முதலாளிகள் சங்கத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதையும், சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளிப்பதற்கும் இடையேயுள்ள கருத்தியல் ஒற்றுமை தற்செயலானதல்ல.

நாட்டின் திட்டமிடுதலிலும் செயல்படுத்துவதிலும் மேலோங்கியிருக்கும் ஒற்றைச்சாதியின் சிந்தனைமுறையும் குறுகிய சுயசாதி அபிமானமுமே எல்லா வளங்களும் நிறைந்த இந்தநாடு ஒவ்வொன்றுக்கும் அன்னியரைச் சார்ந்தியங்க வேண்டிய அவலநிலைக்குள் வீழ்வதற்கு காரணம். கொள்கை முடிவெடுக்கும் அதிகார மையங்கள் முழுவதிலும் வதிந்து கிடக்கும் பார்ப்பனர்களது தகுதியும் திறமையும் இந்தநாட்டை விடுதலை பெற்ற அரைநூற்றாண்டு காலத்திற்குள் மீண்டும் ஒருமுறை அடிமைப்படுத்தும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. முடியரசாயிருந்தாலும் குடியரசாயிருந்தாலும் தங்களது இருப்புக்கும் ஆதிக்கத்திற்கும் எந்த பாதிப்பும் வராத நிலையை காப்பாற்றிக் கொள்வதிலேயே கவனம் குவித்திருக்கும் அவர்களால் இந்தநாட்டுக்கு ஆக்கப்பூர்வமான எந்த பங்களிப்பையும் தரவியலாது.

சமூகத்தின் பன்முகப்பட்ட ஆற்றல்களையும் அனுபவங்களையும் சிந்தனை மரபுகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் உள்வாங்கி வளரவேண்டிய நாடு, பெரும்பான்மை மக்களை விலக்கிவைத்து எப்படி உயரமுடியும் என்கிற சிந்தனையே அவர்களுக்கு கிடையாது. எனவேதான் சமூகவளர்ச்சியில் எல்லோரும் பங்கெடுக்கவும், சமூகத்தின் பொதுவளங்களை பகிர்ந்து வாழவும் வகைசெய்யும் இடஒதுக்கீடு என்ற கோட்பாடு உருவான காலத்திலிருந்து இன்றுவரை அதை ஒழித்துக்கட்ட நானாவித ரூபங்களிலும் வெறிகொண்டு அலைகின்றனர். நாடாளுமன்றமா நீதிமன்றமா கழிப்பறையா காபிக்கடையா என்றெல்லாம் அவர்களுக்கு எந்த பேதமும் இல்லை. எல்லா இடங்களிலும் ஊடுருவி இடஒதுக்கீட்டுக்கு எதிரான தங்களது கருத்தை வெளிப்படுத்துகின்றனர். பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும் அதை வீழ்த்துவதற்கும் இடையேயான போராட்டம் சமூகநீதி என்ற புள்ளியில் மையம் கொண்டிருக்கிறபோது இந்த நாட்டின் உயரிய நீதிபரிபாலன அமைப்பான உச்சநீதிமன்றத்திலிருந்து வெளிப்படும் குரலின் சார்புநிலை குறித்து யாரும் ஆச்சர்யம் கொள்ளத் தேவையில்லை. ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கு மண்டலத்தைத் தாண்டி ஒரு சமூகத்தின் எந்த அமைப்பாலும் சிந்திக்க முடியாது என்பது மீண்டும் அம்பலமாகியிருக்கிறது. அவ்வளவே.

ஆனால் சுயநிதிக்கல்லூரிகளில் இடஒதுக்கீடு கூடாது என்கிற உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அத்தோடு முடிந்துவிடக் கூடியதல்ல. பெண்களுக்கான இடஒதுக்கீடு, தனியார்துறையில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கைகளில் பொதிந்துள்ள ஜனநாயகப் பரவலையும் அதிகாப் பங்கீட்டையும் கூட மறுக்கும் அராஜகமாக அதை விரித்து அர்த்தம் கொள்ளமுடியும். சமூகநீதியில் அக்கறையுள்ளவர்கள் எதிர்கொள்ள வேண்டிய மிகச் சவாலான சூழலை உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ளது. சமத்துவத்தின் சாரத்தையும் கனவையும் தமது பாடுபொருளாகக் கொண்ட கலை இலக்கியவாதிகளும் கூட சமூகநீதிக்கான இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு காலம் வேண்டி நிற்கிறது.

ஆதாரம்:

1. இடஒதுக்கீடு அவசியம்- ஏன்? - வி.எஸ்.தளபதி
2. தலித் இடஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை - தலித் தகவல் ஒருங்கிணைப்பு
3.தனியார் துறையில் இடஒதுக்கீடு: ஏன்? - விடுதலை இராசேந்திரன்
4. இரட்டைமலை சீனிவாசன் வரலாறு - வே.பிரபாகரன்
5. உலகமயமாக்கலும் பணி அமர்வுத்தரத்தில் ஏற்பட்டுவரும் மாற்றமும் - விஜயராகவன்
6. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், வசந்த்மூன்

7. அயோத்திதாசர் சிந்தனைகள்- I
8. Moments in a History of Reservation, Bagwan Das, EPW, Oct 28, 2000
9.The Pangs of Change, M.N.Srinivas, The Hindu, Vol. 14 :: No. 16 :: Aug. 9-22, 1997
10.TAMIL NADU STATE COUNCIL FOR HIGHER EDUCATION,POLICY NOTE - 2005 – 2006

- ஆதவன் தீட்சண்யா

Pin It