இன, மொழி வெறி காரணமாகத் தமிழர்களுக்கு எதிராக அல்லது தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படுவதையே சாணக்கியம் என்று கருதுகிறது கருநாடகம். ஒவ்வொரு மனிதனின் அடிப்படை தேவை களில் ஒன்று குடிநீர். அந்த அடிப்படை தேவை களுக்குக் கூட நாம்மனிதநேயமற்ற கருநாடக அரசால் பாதிப்புக்குள்ளாகி வருகிறோம்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்களுக் குட்பட்ட 30 இலட்சம் மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காகப் போடப்பட்ட திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். ஜப்பான் நாட்டின் நிதி உதவியோடு ஏறத்தாழ 1928.80 கோடி திட்ட மதிப்பீட்டில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது இந்தத் திட்டம். இத்திட்டத்தை எதிர்ப்பதே கருநாடக அரசின் தலையாய பணிகளில் ஒன்றாக இருக்கிறது.

ஏற்கனவே காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சினையில் காவிரி நடுவர் மன்றக் கூட்டத்தில் இரு மாநில அமைச்சர்கள் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்ட பேச்சு வார்த்தைக்குப் பின், நடுவர் மன்றம் 1991 இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின் அடிப்ப டையில் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய 235 டி.எம்.சி. தண்ணீரை இதுவரை கருநாடகம் தந்ததில்லை. இது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்கவில்லை. இது ஒரு வகையில் நீதிமன்ற அவமதிப்பாகும்.

இந்நிலையில் கருநாடக மாநிலத்தின் அண்டைப்புற கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய தமிழக மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய வேண்டிய அவசியம் தமிழக அரசின் கடமையாயிற்று.

தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் மக்கள் நலத்திட்டங்களை முனைப் போடு நிறைவேற்றிக் கொண்டு வரும் நிலையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவில் முடித்திட உரிய நடவ டிக்கையை மேற்கொண்டுள்ளார்.

ஆனால் இதைப் பொறுக்கமுடியாத கருநாடக ரக்­ன வேதிகே அமைப்பின் வாட்டாள் நாகராஜன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்துத் தமிழகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

கன்னடரான வாட்டாள் நாகராஜனின் உரிமை கருநாடக எல்லைவரை மட்டுமே பொருந்தும். அதையும் மீறித் தமிழ் மாநிலமான தமிழகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்துவதாக அவர் அறிவித்திருப்பது தமிழர்களின் உரிமையை மீறிய செயலாகும்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கிருஷ்ணகிரி, தருமபுரி வாழ் 30 லட்சம் மக்களின் அடிப்படை வாழ்வாதாரக் குடிநீர்த் தேவைக்காகத் தமிழக அரசு ஏற்படுத்திய மிகப்பயனுள்ள திட்டம்.

இத்திட்டத்திற்கு எதிராகக் கருநாடக முதல் அமைச்சர் ஜப்பான் நாட்டிற்கே கடிதம் எழுதுகிறார். அதாவது தமிழக அரசையும் மத்திய அரசையும் இவர் மதிக்கவில்லை என்பதற்கு இதுவே சான்று. கருநாடக எதிர்க்கட்சிகளும், கன்னட அமைப்புகளும் தமிழ் நாட்டிற்கும் தமிழர்களுக்கும் எதிராக ஓரணியில் நின்று போராடுகிறார்கள், சில சமயம் வன்முறைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒன்றுபட்டு ஓரணியில் நின்று போராட வேண்டும் என்ற எண்ணமோ, தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்குத் துணைநிற்க வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, தத்தம் அரசியல் காரணங்களுக்காக இது போன்ற தலையாயப் பிரச்சினைகளைப் பயன்படுத் துவது உகந்ததல்ல என்பதை ஏனோ அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

ஏற்கனவே காவிரி நதிநீர்ப்பிரச்சினையால் முப்போகம் விளைந்த காவிரி டெல்டா மாவட்டங்களில் இப்போது ஒரு போக விளைச்சலுக்கே போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இந்தக் காரணத்தால் விவசாய நிலங்கள் பாலைவனங்களாகி வருகின்றன. காவிரி வேளான் விவசாயிகள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்காத காரணத்தால் குறைந்த காலப்பயிர் விளைச்சலுக்காக, ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகள் மிகுதியாகப் பயன்படுத்துவதால் மண்வளமும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இது எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்படுத்திவிடும்.

தவிர தமிழக எல்லைக்குள் இருக்கும் தமிழகத்திற்குச் சொந்தமான நிலத்தில் அணைகட்டும் உரிமை தமிழக அரசுக்கு இருக்கிறது. இதில் தலையிட பிற மாநிலங் களுக்கு மட்டுமல்ல, வாட்டாள் நாகராஜன் போன்ற இனவெறியாளர்களுக்கும் எந்த உரிமையும் இல்லை.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கலைஞர் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேறும். இதை யாராலும் தடுத்துவிட முடியாது.

Pin It