farmers ladiesபல ஆண்டுகளுக்கு முன் மேக்ஸ் வீபர் என்ற சமூகவியல் மேதை ‘அரசியல் முதலாளித்துவம்’ என்ற ஒரு சொல்லாடலை தன்னுடைய புத்தகத்திலே கையாண்டிருந்தார். இந்தச் சொல்லாடல் கார்ல் மார்க்ஸ் மூலதனம் எழுதிய காலத்திற்குப் பிறகு கையாண்ட சொல். இந்த மேக்ஸ் வீபரும் ஒரு ஜெர்மானியர்.

அது மட்டுமல்ல உலகில் சமூகவியல் என்ற துறை கல்விக் கூடங்களில் உருவாவதற்குக் காரணமானவர் என்று ஆய்வாளர்கள் கூறுவார்கள். கார்ல் மார்க்ஸ் பொதுவுடமைக் கோட்பாட்டை உருவாக்கி எழுதி வந்தபோது அதற்கு சமகாலத்தில் பதில் கூறுவதற்காக எழுதப்பட்ட கருத்துக்கள்தான் பிற்காலத்தில் சமூகவியல் கோட்பாடுகளுக்கு அடிப்படையாக அமைந்தன.

இருந்தபோதிலும் இவர் கையாண்ட ‘அரசியல் முதலாளித்துவம்’ என்ற கருத்தாக்கம் பற்றி பல ஆண்டுகள் ஆய்வுகள் செய்யப்படாமலேயே இருந்திருக்கின்றது. மேக்ஸ் வீபரும்கூட அரசியல் முதலாளித்துவம் பற்றி ஒரு சிறு வரையறையாகத்தான் கையாண்டிருந்தாரே தவிர, ஒரு விளக்கமான கோட்பாட்டுக்கு இந்த வரையறையை எடுத்துச் செல்லவில்லை.

ஆனால் இன்று இந்தக் கருத்து ஒரு சொல்லாடல் என்ற நிலையிலிருந்து பிரபலமாக விவாதிக்கப்படும் பெரும் பொருளாக மாறியிருக்கிறது. பெரும்பாலும் பல கருத்துக்கள் மற்றும் வரையறைகள் அவைகள் உருவாக்கப்பட்ட காலத்தில் பிரபலம் அடைவதில்லை. காரணம் அந்தக் கருத்தாக்கங்கள் உருவாக்கப்படும் போது அவைகளை விளக்குவதற்கான சமூகச் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பதுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அன்று அது ஒரு கருதுகோளாகவே நின்று விடுகின்றது. ஆனால் கோட்பாடுகளை உருவாக்கும் வல்லமை பெற்றவர்கள் எதிர்காலத்தில் நிகழப்போவதை அனுமானித்து அப்படிப்பட்ட கருதுகோள்களை உருவாக்கி விடுகின்றனர். அந்த நிலையில்தான் இந்த சொல்லாடலையும் மேக்ஸ் வீபர் உருவாக்கி வைத்திருந்தார். ஆனால் இன்று சமூக அறிவியல் ஆய்வாளர்கள் இந்த சொல்லாடலை பெருமளவு மக்களாட்சியில் நடைபெறும் ஆளுகையுடன் இணைத்து ஆய்வு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

மேக்ஸ் வீபர் இந்தச் சொல்லாடலை உருவாக்கியபோது அதற்கு ஒரு சிறு விளக்கமளித்துள்ளார். அரசாங்கப் பதவிகளில் கிடைக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி எல்லை இல்லா அளவுக்கு பணம் சம்பாதிப்பது, அதற்காக அந்த அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துவது, அதிகாரத்தை பிடிப்பதற்காக குற்றம் புரிவது, மற்றும் கலகங்களை விளைவிப்பது, இவைகள் மூலம் அரசியலிலும், ஆட்சியிலும், நிர்வாகத்திலும் ஒரு புதுமையை உருவாக்கி சட்டத்தின்படி ஆட்சி என்பதிலிருந்து அதிகாரத்தைப் பிடித்தவர் செய்வது ஆட்சி என்ற நிலைக்குக் கொண்டு வருவது என்று விளக்கமளித்துள்ளார்.

அவர் எழுதிய பிராட்டஸ்டண்டின் ஒழுக்க நெறியில் உருவான முதலாளித்துவத்தில் குரோனி முதலாளித்துவம் இடம் பெறவில்லை. ஆனால் மக்களாட்சியில் இந்த முதலாளித்துவத்தை ஒரு நிலையில் மிக மோசமான செயல்பாடுகளில் கொண்டு நிறுத்தப்போகிறார்கள் எதிர்காலத்தில் என்ற அவதானிப்பு அவரிடம் இருந்திருக்கிறது. அதைத்தான் அவர் இப்படி ஒரு சொல்லாடலை உருவாக்கி வரையறுத்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

இந்த மூலக் கருத்தை 20 ஆண்டுகளுக்கு முன் கனேவ் என்ற சமூகவியல் ஆய்வாளர் எடுத்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார். 1999 ஆம் ஆண்டு எப்படி கம்யூனிசத்தை கிழக்கு ஐரோப்பிய மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் ஊழல் மூலம் வீழ்த்தினர் என்பதை வைத்து ஆய்வு செய்து விளக்கியுள்ளார்.

இதேபோலத்தான் இந்த உலகமயமான பொருளாதாரமும் எல்லையில்லாமல் நடக்கும் ஊழலால் வீழப்போகிறது. இந்த ஊழலால் நம் மக்களாட்சியும் எவ்வளவு வீழ்ச்சியைச் சந்திக்கப் போகிறது என்பதை மேக்ஸ் வீபர் கொண்டுவந்த அரசியல் முதலாளித்துவம் என்ற கருதுகோளை பின்புலத்தில் வைத்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர் மேற்கத்திய நாட்டுப் பல்கலைக்கழகங்களில்.

தற்போது கூட கேம்பிரிட்ஸ் பதிப்பகத்தால் புதிய வெளியிடு ஒன்று ரன்டால் ஹால்கேம்பே என்பவரால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆய்விலும் எல்லை இல்லா ஊழல் அரசியல் பொருளாதாரத்தை எப்படி சிதிலமடைய வைக்கின்றது என்பதைத்தான் ஆய்வு செய்து விளக்கியுள்ளார்.

இந்த சமீபத்திய ஆய்வுகளில் விக்கிலீக்ஸ் அஸ்சான்சே பயன்படுத்திய முறைமைகளைப் பயன்படுத்தி அதிகாரத்திலிருப்பவர்களின் ஊழல் செயல்பாடுகளை கண்காணித்து தரவுகளைச் சேர்த்து எப்படி ஆளுகையையும், ஆட்சியையும், நிர்வாகத்தையும் சந்தைச் செயல்பாடுகளுக்குச் சாதகமான முடிவுகளை எடுத்து செயல்படுகின்றனர் என்பதை விளக்குகின்றனர்.

இந்த முறை ஆய்வுகளுக்கு மிகப்பெரிய விலைகள் கொடுத்துத்தான் மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் தங்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். ஆய்வு செய்து கொண்டுவந்த அறிக்கைகளை பதிப்பிப்பதற்குள் அவர்கள் சமாளிக்க வேண்டிய சவால்கள் என்பது கொஞ்சமல்ல.

இந்தியாவில் அப்படிப்பட்ட ஆய்வுகள் நடப்பது மிக அரிது. நம் நாட்டில் உள்ள சமூக விஞ்ஞானிகள் இப்படிப்பட்ட ஆய்வுகளை நடத்துவது என்பதை நினைத்துக்கூட பார்ப்பது இல்லை. எதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக பேராசிரியர் அருண் குமார் போன்றவர்கள் கறுப்புப் பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து வெளியிட்டது போன்று மிகப்பெரிய ஆய்வுகளை மேற்கொள்வது கிடையாது.

ஏனென்றால் நம் ஆய்வாளர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களைப் பார்த்து மிரட்சியில் செயல்படுவதால். அத்துடன் அப்படிச் செயல்பட்ட நடுத்தர வர்க்கத்தை இன்று சந்தை அரசியல் தன் வயப்படுத்திக் கொண்டுவிட்டது.

அதையும் தாண்டி நம் அரசாங்கம் அப்படிச் சிந்தித்து செயல்படும் நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகளை வேறுபக்கம் சிந்திக்கத் தேவையான மூலதனத்தை, ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மேல் தட்டு மத்தியதர வர்க்கமாக மாற்றிவிட்டது.

எனவே இன்றைய சூழலில் நடுத்தர வர்க்க உயர்கல்வி நிறுவன அறிவுஜீவிகள் பெருமளவு சந்தைக்குள் புகுந்து விட்டதால் நம் அரசியல் பொருளாதாரத்தையும், மக்களாட்சியையும் சிதைக்கும் காரணிகளைப் பற்றி ஆய்வு செய்ய முயலவும் இல்லை, துணியவும் இல்லை.

அதன் விளைவு ஆய்வுக் கழகங்களும் சந்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டன. உயர்கல்வி ஆய்வு நிறுவனங்களும் சந்தை நிறுவனமாக சந்தைப் படுத்தப்பட்டு விட்டன.

ஆனால் எங்கோ ஒரு மூலையில் மிகப்பெரிய போராட்டங்களுடன் நடைபெறும் ஆய்வுகள் நம் அரசியல் கட்சிகளின் தடம்புரண்டு சந்தைக்குச் செயல்பட்டு பெரிய அளவில் மூலதனம் பெற்று கட்சிகளையே கம்பெனிகளாய் மாற்றி, வாக்குகளையும் வேட்பாளர்களையும் சந்தைப்படுத்த எடுத்த மக்களாட்சி விரோத செயல்பாடுகளை கொண்டு வரப்போகிறது என்பதற்கு கம்யூனிச நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகள் கட்டியம் கூறுகின்றன.

தேர்தலையே அரசியலாகவும், தேர்தலையே மக்களாட்சியாகவும் நடத்தி வந்த பெரும்பாலான நாடுகளில் தேர்தல் செயல்பாடுகளை சந்தைப் பொருளாதாரத்தில் பெற்ற மூலதனத்தில் அரசியல் கட்சிகள் நடத்தி வருவதுதான் மக்களாட்சியை இன்று பீடித்துள்ள நோய் என்பதை மக்களாட்சியின் மாண்பு பற்றி ஆய்வு செய்யும் ஆய்வாளர்களின் அறிக்கைகள் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

மக்கள் பிரச்சினைகளுக்காக மக்களாட்சியின் மாண்புகளை கைக்கொண்டு செயல்படும் அரசியல் கட்சிகளும்கூட தேர்தல் அரசியலில் கூட்டணி என்ற பெயரில் சந்தை அரசியல் நடத்தும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது தங்களின் இயல்பினை இழந்து, சந்தை அரசியலில் ஈடுபட்டிருக்கும் கட்சிகளின் பிம்பத்துக்குள் வந்து தங்களின் சுயங்களை இழந்து செயல்படுவதுதான் மக்களாட்சியில் நாம் இன்று சந்தித்துவரும் மிகப்பெரும் சோக நிகழ்வு.

இன்று உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால்கள் பல. அவைகளில் மிக முக்கியமானவைகள் என்று பட்டியலிட்டுப் பார்த்தால் நம் முன் நிற்பவை: (அ) நம் மக்களாட்சி சிதிலமடைவது; (ஆ) சுற்றுச்சூழல் பாழ்படுவது; (இ) இயற்கை வளங்கள் எல்லை இல்லா அளவில் சுரண்டப்படுவது; (ஈ) உயர்ச்சூழல் பாதிப்படைதல் புவி வெப்பமயமாதல்; (ஊ) எல்லையில்லா ஏற்றத்தாழ்வுகள் மானுட சமூகத்தில்; (எ) இயற்கைப் பேரிடர்; (ஏ) மக்களின் நுகர்வுக் கலாச்சாரம்; (ஐ) 60மூ மக்கள் ஆரோக்கியப் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்தல்; (ஒ) இன்று சந்திக்கும் புது வகை கிருமியால் உருவாக்கப்படும் விளைவுகள்.

இன்றைய சூழலில் உலக நிறுவனங்களிலிருந்து உள்ளூர் அமைப்புக்கள் வரை முடிவுகளைத் தீர்மானிக்கும் பின்புலக் காரணியாக விளங்குகின்றது சந்தைச் செயல்பாடு. இந்தச் சூழலில் அரசியலை இதுவரை பயணித்த தளத்தில் நடத்தி, இன்று பெரும்பான்மை மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணமுடியாது என்பதை சந்தையும் அரசும் சாதிக்கும் என்று கோட்பாடுகளை உருவாக்கிச் செயல்பட்டவர்களே இன்று விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். சந்தையும், அரசும் தோற்றுப்போய் நிற்கின்றன.

ஆனால் சந்தையும் அரசும் செயல்படுவதை நிறுத்திக் கொள்ளவில்லை, நிறுத்திக் கொள்ளவும் முடியாது. இந்த இரண்டு மிகப் பெரிய அமைப்புக்களையும் மக்களுக்காகச் செயல்பட வைக்க வேண்டும். அப்படிச் செயல்பட வைக்க வேண்டுமென்றால் மக்களிடம் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை. அப்படி மக்களிடம் செல்வது என்பது மக்களிடம் பொதுக் கருத்தினை உருவாக்க.

அந்தப் பொதுக் கருத்து என்பது சிந்திப்பதற்காக மட்டுமல்ல, சிந்தித்து செயல்படுவதற்காக. இதைச் செய்வதற்கு மக்கள் பிரச்சினைகளுக்கு சந்தையின் உதவியை நாடாத மக்களுடன் பயணிக்கத் தயாராக இருக்கின்ற மக்கள் இயக்க சக்திகள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் அரசியலிலிருந்து முன்னேறி மக்கள் அரசியலைக் கட்ட முனைய வேண்டும். இது ஒரு பெரு முயற்சி.

இந்த முயற்சியை நாம் செய்யத் தவறினால் இந்த அரசியல் முதலாளித்துவம் மக்களாட்சி என்ற பெயரில், மக்களைச் சுரண்டி பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் சந்தைச் சக்திகள்தான் கோலோச்சும். இந்தச் சூழலை மாற்ற மக்கள் அரசியலுக்கான மக்கள் இயக்கங்களைக் கட்டத் தேவையான பொது விவாதத்தை உருவாக்க வேண்டும்.

இதில் மையக் கருத்தாக சந்தையின் பிடியிலிருந்து அரசியலை வெளியேற்றுவதும், அரசாங்கத்தை மனிதாபிமானப் படுத்துவதும், மக்களை பார்வையாளர்களாக இல்லாமல் பொறுப்புமிக்க செயல்படும் குடிமக்களாக மாற்றுவதற்குமான புதுயுக அரசியல் கட்சிகளைத் தாண்டி தேவைப்படுகிறது.

அதனை நோக்கிப் பயணிக்க புதுச்சிந்தனை கொண்ட தலைவர்கள் முன்னெடுப்புச் செய்ய வேண்டும். இதன் மூலமாக கட்சிகள் சமீப காலமாக இழந்த சிந்தனை மூலதனம் மீண்டும் வந்து நம் அரசியல் கட்சிகளை சீரழிவிலிருந்து மீட்டெடுக்கும். அந்தச் சூழலை இன்று அரசியலில் உருவாக்க வேண்டும். அதுதான் இன்றைய நம் அரசியல் தேவை.

- க.பழனித்துரை

Pin It