"இனி நாம் செல்லும் பயணம் மிக கடுமையானது. நான் சொல்லும் வரை கண்களைத் திறக்க கூடாது. கண்களில் இருக்கும் கட்டை அவிழ்க்க கூடாது..."

மெலோரி தன் இரு குழந்தைகளோடு படகில் ஒரு நதியில் பயணிக்கிறாள். அதற்கு முன் அவள் தன் குழந்தைகளிடம் பேசும் வார்த்தைகள் தான் படத்தின் முதல் கியர். முதல் வரி. நுண்ணிய கூர்களின் தூரத்து தவிப்புகளைக் கொண்ட பயணத்துக்கு அடித்தளம்.

நதி என்றால்... அது ஆழமான காடுகளின் நடுவே ராட்ச கால்களில் மிதக்கும் மாபெரும் நீரின் தொகுப்பு.

அவர்கள் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். நீரின் சப்தமும்... காட்டின் நிசப்தமும்....அவர்களின் உடலோடு... உயிர் பிடித்து விளையாடுகிறது. மூவருமே கண்களை துணியால் கட்டி இருக்கிறார்கள். பால் பொங்கும் ஆற்றின் நுரைகளில்..... பரிதவிப்போடு மானுட பயங்கரங்கள்... ஆசாரீரியாய் கேட்கின்றன.

படகு முன்னோக்கி நகர...கதை பின்னோக்கி நகர்கிறது.

bird boxமெலோரி..(நம்ம SPEED பட நாயகி 'சாண்ரா புல்லக்') நிறைமாத கர்ப்பிணி. பரிசோதனைக்கு மருத்துவமனை செல்கிறாள். பரிசோதனை முடிந்து வெளியே வருகையில்... ஒரு பெண்...... வெளியே சூனியத்தை....... வெறித்துக் கொண்டிருக்கிறாள். அவள் கண்களில் குரூரம் கொடூரமாய் கவ்வுகிறது. அவள் கண்களில் பச்சை வண்ண நரம்புகள் மடமடவென நிழல் படிகின்றன.

மெலோரிக்கு தெரிந்து விடுகிறது. எதுவோ சரியாக இல்லை. என்னவோ நடக்க போகிறது. அவள் சொல்லவே சொல்லவே... அந்த பெண் அருகிலிருக்கும் கண்ணாடியில் தலையை பலமாக முட்டி முட்டி ரத்தம் சொட்டுகிறாள். மற்றவர் என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள் அதன் நீட்சியாக மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அதே கணம் அங்கிருந்து தப்பித்து மேலொரி தன் தோழியோடு வண்டியில் பயணிக்கிறாள். ஆனால் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் தோழி வண்டியை தாறுமாறாக ஓட்டுகிறாள். அவள், அந்த மேலிருந்து குதித்த பெண்ணின் கண்களை சற்று முன் உற்று நோக்கியதை மெலோரி புரிந்து கொள்கிறாள். வேண்டாம் வேண்டாம் என்று கத்த கத்தவே தோழி.. சூனியத்தை வெறித்துக் கொண்டே வண்டியை வேறொரு வண்டி மீது மோதி கவிழ்க்கிறாள். வண்டி தலை குப்புற விழுகிறது. அவர்களுக்கு உதவி செய்ய வருகிறாள்... அங்கே அருகே இருக்கும் ஒரு வீட்டிலிருக்கும் ஒரு பெண். அவளும் நொடியில் வெறித்துக் கொண்டே இந்த வண்டியைத் தாண்டி.. சற்று தள்ளி எரிந்து கொண்டிருக்கும் வண்டிக்குள் சென்று அமர்ந்து தன்னை எரித்துக் கொள்கிறாள்.

ஊரே பற்றி எரிகிறது. மாற்றி மாற்றி சுட்டுக் கொள்கிறார்கள். ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு சாகிறார்கள். கண்களை நேர் கொண்டு கண்டால் கண்டவர் அடுத்த நொடியில் கொலையோ தற்கொலையோ செய்து கொள்கிறார். ஆங்காங்கே கூட்டு தற்கொலைகளும் நிகழ்கின்றன. கண்ணுக்குத் தெரியாத ஒன்று உலகை விரட்டுகிறது. அது காற்றில் சுழன்று கொண்டே வருகிறது. அதை நேர் கொண்டு காண்போர் சடுதியில் அருகில் உள்ளோரைக் கொன்று விட்டு தானும் தற்கொலைத்துக் கொள்கிறார்கள்.

தட்டுத்தடுமாறி..... செத்துப் பிழைத்து.....அழுது புரண்டு அப்போதைக்கு ஒரு வீட்டுக்குள் தஞ்சமடைகிறாள் மெலோரி. அங்கு இவளை போலவே தப்பித்த ஒரு பத்து பேர் கொண்ட கும்பல் அடைக்கலமாகி இருக்கிறது. விஷயம் ஓரளவுக்கு தெளிவாகி விடுகிறது. வெற்றிடத்தில்.... வெறும் கண்களால் எதையோ பார்த்தால்.... அல்லது பாதிக்கப்பட்டவர்களின் கண்களை பார்த்தால்.....அவர்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகி கொலையும் செய்து விட்டு தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். ஆக வீட்டின் உள்ளே கதவுகள் அடைக்கப்பட்டு ஜன்னல்களை மூடி கண்ணாடிகளை பேப்பர் வைத்து மறைக்கிறார்கள்.

அவர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்கிறார்கள்.

இதற்கிடையே படகு நதியில் ஒரு நாளை கடந்து போய்க் கொண்டிக்கிறது. இடையே கரையோரத்தில் இருந்து மனித குரல் கேட்கிறது. நுட்பமான புள்ளியில் இருந்து எழும் குரலில் அத்துமீறும் அச்சுறுத்தல். அக்குரல் வழியே வழியும் மரணத்தை அவள் அறிவாள்.

"வாங்க... உங்களை நான் காப்பாத்தறேன்... வாங்க... " என்று தொடர்ந்து கேட்கிறது. காதிரையும்.... சப்தத்தில்.... சாவுக்குருவி அழைக்கிறது. சாக கிடக்கும் உயிர்கள் தனித்த சாவுக்கு துணை தேடி பிசாசுகளாக அலையும். அது தான் நடக்கிறது. கிட்டத்தட்ட ஜாம்பிகள் போல கொலைக்கும் தற்கொலைக்கும் அலைகின்றன. அதில் இருக்கும் ஆசுவாசத்துக்கு வெறி ஏறி இருக்கிறது. ஏற்கனவே அவளுக்கு அவர்கள் பற்றிய தெளிவு இருக்கிறது. கையிலிருக்கும் துப்பாக்கி கொண்டு கண்களைக் கட்டிக் கொண்டு கிட்டத்தட்ட ஐந்து வருட கால பயிற்சிகளை புல்லட்டுகளாய் சிதற விடுகிறாள். சாவுக்காரனை வீழ்த்துகிறாள்.

படகு பயணம் தொடர்கிறது.

பச்சை மரங்களின் மானுட பசி கிரீச் கி ரீச்.... என்று அவர்களை சுற்றி நா நீட்டி தவிக்கிறது. நதியின் கோட்டோவியம் அசைந்து கசிந்து... ஆர்ப்பரித்து...வெளியின் அகவலை அதிகமாக்குகிறது. மூடியிருக்கும் கண்கள் வழியாக இவ்வுலகை அவள் தரிசிக்கிறாள். பயணம் தொடர்கிறது. கண்களை மூடிய கட்டோடு அம்மாவின் முன்னால் படகை கெட்டியாய் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் குழந்தைகள்... சாவின் நெருக்கத்தை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இரவில்.. ஆளில்லாத.... கைவிடப்பட்ட... ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்ட கடைகளில் புகுந்து தேவையான பொருள்களை எடுக்கையில் இருக்கும் ஆனந்தம்.. படபடப்பு.. மானுட சாபம். இத்தனை காலம் சேர்த்து வைத்த எல்லா பரிணாமமும் பறி போகும் இடம் இது.

இங்கே வீட்டில்... எல்லாரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறார்கள். டாம்-ன் அன்பும் அரவணைப்பும் மெலோரிக்கு தேவையாக இருக்கிறது. மெலோரிக்கு பிரசவ வலி. அதே போல அவர்கள் கூட்டத்தில் இன்னொரு பெண்ணுக்கும் பிரசவ நேரம். ஒரே நேரத்தில் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைகள் பிறந்த சந்தோஷ தருணங்கள் தீரும் முன்னே அந்த கூட்டத்தில் ஒருவனை "அது" பீடிக்கிறது. அவன் எப்படியோ வெளியே பார்த்திருக்கிறான். புத்தியில் அது ஏறி விடுகிறது. அவன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுடுகிறான். அடித்து கொள்கிறான். ஜன்னலை திறந்து விடுகிறான். அதன் பின் ஊழிக்காற்று தான். ஆழிக்கூத்து தான். கிடைக்கும் மனிதர்கள் எல்லாருக்கும் சாவு தான்.

சாவின் விளிம்பிலிருந்து டாம்....மெலோரி மற்றும் அந்த பிறந்த இரண்டு குழந்தைகள் மட்டுமே தப்பிக்கிறார்கள். அந்த இன்னொரு குழந்தையின் அம்மா... அவள் தான் நடந்து முடிந்த பலிகளில் முதல் பலி. பிறகு.....குழந்தைகளோடு டாமும் மேலோரியும் கண்களைக் கட்டிக் கொண்டே அங்கிருந்து தப்பித்து வேறொரு வீட்டில் பதுங்குகிறார்கள்.

5 வருடம் கடந்து விடுகிறது. அதே வாழ்க்கை முறை தான். ஆனாலும் "அது" விட்டபாடில்லை. கண்ணுக்கு தெரியாத "அது" அவர்களை சுற்றி சுற்றி வந்து காவு வாங்க காத்திருக்கிறது. அவர்களும் இருக்கும் சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள். வெளியே செல்லும் போதெல்லாம் கண்களில் துணி தான். கண்களில் இருந்து துணி எடுக்க நேரிட்டால் சாக நேரிடும் என்பது தொடரும் விதி. பாதிக்கப்பட்ட மனிதன் நன்றாக இருக்கும் மனிதர்களை கொல்லும் வேலை தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது. கண்ணுக்கு தெரியாத மனித வேட்டை அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. அதன்படி எங்கிருந்தோ வந்து நிற்கிறது ஒரு கார். டாம் க்கு நடக்க போகும் அசம்பாவிதம் தெரிந்து விடுகிறது. தனக்கு என்ன ஆனாலும் உங்கள் பயணம் தொடர வேண்டும் என்று மெலோரியிடம் கட்டளையிடுகிறான். அவன் அவளை ஆழமாக நேசிக்கிறான். நடக்கும் ஒரு தாக்குதலில்...அதே போல டாம் சாக நேரிடுகிறது. எல்லாரையும் சுட்டு விட்டு தப்பிக்க முயற்சிக்கையில் "அது" வந்து விடுகிறது. "அதை" நேருக்கு நேர் பார்த்து விடுகிறான். அவன் கண்கள் பச்சை பூத்து நரம்பு சுருள ஆரம்பிக்கிறது. கண நேரத்தில் கழுத்தில் சுட்டுக் கொண்டு செத்து போகிறான்.

அதன் பிறகு... நிலைமையை புரிந்து கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஏற்கனவே போட்ட திட்டத்தின் படி.. டாம் இல்லாமலே படகு பயணம் மேற்கொள்கிறாள். இது தான் படத்தின் முதல் காட்சி.

பயணம் ஆரம்பித்து 2 நாட்கள் முடியும் சமயத்தில்.. ஆற்றின் வேகம்... அதிகரிக்கிறது.

ஒரு வளைவில் கல்லில் மோதி படகு கவிழ்ந்து விடுகிறது. ஆற்றில் தளுதளுக்கிறாள் அவள். குழந்தைகள் ஆளுக்கொரு பக்கமாக சிதறி விடுகிறார்கள். ஆனாலும் கண் கட்டை அவிழ்க்க கூடாது. ஆறு பேயாட்டம் ஆடுகிறது. ஆர்ப்பரிப்பில் சாவு மணி. யாருமற்ற போது நெடு மரங்களில் முகம் இருக்கும். அசைவில் கழுத்திருகிய கனத்த குரல் இருக்கும். எப்படியும் தப்பிக்க வேண்டும். பையனின் குரல் வழியே நீந்தி நீந்தி அவனை பிடிக்கிறாள். பெண் குழந்தை அடித்து வீசப்பட்டதில் கரை ஒதுங்கி கிடக்கிறது. கையில் இருக்கும் மணியை அடித்து ஒலி எழுப்பி தன் இருப்பை காட்டிக் கொடுக்க...குழந்தையை கண்டு பிடித்து விடுகிறாள். இருவரையும் அணைக் கொண்டு உடல் நடுங்க நிற்கும் ஒரு தாயின் தவம் அங்கே அதிரும். இந்த படத்தின் மிக அற்புதமான காட்சி ஈரம் சொட்ட உயிர் நடுங்க நிற்கும் அந்த முக்கோண அரவணைப்பு. கண்களற்ற உலகில் உணருதலெல்லாம் காட்சிகள் தான். பிறகு காட்டுக்குள் தடவி தடவி நடக்கிறார்கள். ஆனால் காதுக்குள் எதுவோ இரைகிறது. "அது" விரட்ட ஆரம்பிக்கிறது. காற்றில் இலைகள் கொப்பளிக்க தொடங்குகிறது. பழுத்த இலைகளின் குதிப்பு.... காற்றில் முகமற்ற ஒரு அணத்தல். கண்கள் திறந்திருக்கும் காடு ஆவென எல்லாம் திறந்து கிடக்கிறது. கண்களை கட்டிக் கொண்ட பயம் அசாதாரணமாக அங்கும் இங்கும் அலைகிறது. "அது" காதில் இரைச்சல் ஏற்படுத்தி அவர்களை சுற்றி சுழலுகையில்.... அதிர்ந்த உருவத்தை நாம் கொண்டிருக்கிறோம்.

அப்போது அப்போது.. அப்போது........ படத்தின் இறுதிக் காட்சி அங்கே ஓர் ஆச்சரியத்தை திறக்கிறது. யாரின் மூலம் இந்த உலகுக்கு விடியல் என்பது மெல்ல வெளிச்சத்துக்கு வருகிறது. இருட்டு தன் ஆதிக்கத்தை கை கழுவுகிறது.

படம் நெடுக குழந்தைகளுக்கு பெயர்கள் இல்லை. பாய் கேர்ள் தான். அதற்கான சந்தர்ப்பம் கடந்த 5 வருடங்களில் இல்லவே இல்லை. இதில் எந்த குழந்தை மெலோரி குழந்தை எது அந்த இறந்து போன பெண்ணின் குழந்தை என்று நமக்கு எப்போதுமே சொல்வதில்லை. ஒரே ஒரு காட்சியில்... உள்ளம் ஒடுங்கி பயம் நிறைந்த முகத்தோடு பாவமாய் கண்கள் மிரள தன்னை பார்க்கும் பெண் குழந்தையை பார்க்கையில்.. தன்னோடு பிரசவித்து "அது" பிடித்து இறந்து போன பெண்ணின் முகம் வந்து போகிறது மேலோரிக்கு. அவ்ளோ தான்.

அவள் பெயரையே அந்த குழந்தைக்கு சூட்டுகிறாள். டாம் பெயரை பையனுக்கு சூட்டுகிறாள். மரணத்தின் சுவடுகள் பெயர்களாகின்றன.

படம் நெடுக இவர்களோடு மூன்று பறவைகள் இருக்கும் கூண்டு ஒன்றும் பயணிக்கிறது. இறுதியில்.. அந்த கூண்டு திறந்து பறவைகள் மரங்களுக்கு தாவுகின்றன. விடுதலை என்பது எங்கும் வியாபித்திருக்கும் இயல்பல்ல. அது தனித்த உணருதல்.

ஏதேதோ படத்தை தேட போய் சம்பந்தமே இல்லாமல் (கூகுள் அண்ணாச்சியின் கண்காணிப்பாகவும் இருக்கலாம்) இந்த படத்தை பார்க்க நேரிட்டது. படம் அப்படியே இன்றைய வாழ்வின் நகல் போல இருக்க.. மிகவும் பயந்து தான் பார்க்க முடிந்தது.

பயணிக்கத் தொடங்கியவனுக்கு பாதைகள் பற்றிய கவலைகள் கூடாது. நிர்பந்தித்துக் கொண்ட காரணங்கள் எல்லாவற்றுக்கும் வேண்டுமா என்ன...?

இப்போதைக்கு "அது" விடம் இருந்து தப்பிக்க வேண்டும். அவ்வளவே...!

Film: Bird Box
Director: Susanne Bier
Year: 2018
Language: English

- கவிஜி

Pin It