dhanush karnan8பலரும் “கர்ணன்” திரைப்படத்திற்கு விமர்சனங்கள் எழுதி உள்ளார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விசயங்களை, பல விசயங்களை மையப்படுத்தி எழுதப்படுகின்றன. வெகுசில எதிர்மறை விமர்சனங்களும் உண்டு.

கொடியங்குளம் பொடியங்குளமாக படைப்பின் பொது நன்மைக்காக பெயர் மாற்றப்பட்டு இருப்பது உண்மை.. இதற்கு அப்பாற்பட்டு மாரி செல்வராஜின் “கர்ணன்” திரைப்படத்தின் மையக்கருத்து எப்படி கொடியங்குளத்துடன் இணைகிறது? எந்த பார்வைக்கு அழுத்தம் தர வேண்டும்?

நிலவுகின்ற அரசு அதிகார கட்டமைப்பு அதாவது மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத நிர்வாக எந்திரம், காவல்துறை, நீதித்துறை போன்றவைகள் தலித்துக்களின் சுயமரியாதையை, உரிமைகளை மறுக்கின்றன என்பதற்கு ஓராயிரம் எடுத்துக் காட்டுகளை அடுக்க முடியும்.

கர்ணன் திரைப்படக் கதாபாத்திரங்களாக வரும் பேருந்து முதலாளியோ, மேல் சாதியினரோ பேருந்து நிறுத்த வேண்டும் என்று ஆட்சேபனைகளை ஏற்படுத்தும் இடத்தில் தான் தமிழ்நாட்டின் இருக்க முடிகிறது. இங்குள்ள சமூக வளர்ச்சி இத்தகைய சனநாயக உரிமைகளை மறுக்கும் நிலையில் அக் கதாபாத்திரங்கள் இல்லை. அதற்கு இங்குள்ள சமூக நிலைமைகளும் இடம் தர மறுக்கின்றன என்பது யதார்த்த உண்மை.

ஆனால் தலித்துக்களுக்கான பேருந்து நிறுத்ததை மறுப்பது அரசு கட்டமைப்பும் அதிகார வர்க்கங்களும்தான். பேருந்து நிறுத்த போர்டை அடித்து நொறுக்குவது போலிஸ் துறை, முதலாளி பேருந்து நிறுத்த ஏற்றுக் கொள்வதை வேண்டா வெறுப்பாக பார்ப்பது போலிஸ் துறை! பொடியங்குளம் மக்களின் நீண்ட ஆண்டுகள் கோரிக்கையான பேருந்து நிலைய நிறுத்தம் கோரிக்கையை மறுப்பது பல்வேறு அரசு நிர்வாக அமைப்புகளும், அரசு போக்குவரத்து நிர்வாக கட்டமைப்புதான் என்பதாக கர்ணம் படம் விவரிக்கிறது! மற்றவர்கள் அனைவரும் ஏதோ விதத்தில் இதை சமரசம் செய்ய தயாரான, ஏற்றுக் கொள்ள தயாரான நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளதை கர்ணன் படம் பூடகமாக சொல்லும் காட்சிகள் பல உண்டு.

இப்படி இவைகள் இருந்தாலும் அரசு கட்டமைப்பு அதை ஏற்க தயாராக இல்லை. இந்த அரசு கட்டமைப்பு மனுஸ்மிருதி கோட்பாட்டிலான படிநிலை ஏற்றதாழ்வுகளை, வேறுபாடுகளை உறுதியாக தாங்கி பிடிக்கும், அதற்காக ஒடுக்குமுறைகளை ஏவிவிடும் வலிமை பெற்றது என்பதுதான் அது. அதை கேள்விக்கு உள்ளாக்குவது தான் மாரி செல்வராஜின் “கர்ணன்” திரைப்படத்தின் மைய கருத்து!

அரசு என்பது பொதுவானது கிடையாது. அது குறிப்பிட்ட வர்க்கத்தின்- வகுப்பின் கருவி! இந்தியாவை பொறுத்த மட்டில் அரசு கட்டமைப்பு அதாவது காவல்துறை – நீதிமன்றம் - நிர்வாக துறைகள் என்பது பார்ப்பனர் முதலான மேல்சாதியினர், பெருமுதலாளிகள், பெரும்பணக்காரர்களின் நலனுக்காக வடிவமைக்கப்பட்டு, தொடர்ந்து சிற்சில மாற்றங்களுடன் அது கட்டி காப்பாற்றப்பட்டு வருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளான இந்தியாவின், தமிழ்நாட்டின் வரலாறுகள் இதைதான் நமக்கு பலவகைகளில் சுட்டிக்காட்டுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வான படிநிலை சனதன தர்மத்தை அரசு கட்டமைப்பு மூலம் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு தன்னை ஆளும் வர்க்கமாக தொடர்ந்து பார்ப்பனீயம்- (முதன்மையாக பார்ப்பனர்கள் மற்றும் அதனால் பயன்பெறும் பிற சாதியினர்) நீடிக்கிறது. அரசு கட்டமைப்பு சாதிய கட்டமைப்பு தக்கவைக்க எந்த கொடூரத்தையும் செய்யும் என்பது கடந்த காலத்தின் வரலாறுகள்!!

இதை அனைத்தும் தெரிந்தும், தெரியாமலும் ஒரு படைப்பாளி தனது படைப்புகளுக்குள் கொண்டு வர முடியும். அதற்கு ஒரே ஒன்றுதான் நிபந்தனை. ஓடுக்கப்பட்ட மக்களின் குரல்கள், வாழ்க்கையை அவர் காது கொடுத்தாலே போதும் இவை அவர் படைப்புகளில் தானாக வந்து விடும்.

அந்த படைப்பாளி சமூக நிகழ்வுகள் பகுத்தறிந்து பார்த்தாலே போதும் இயல்பாக அவரது படைப்புகளில் இயல்பாக ஊடுருவி நிற்கும். படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்கள் அவர் சிந்தனையில் தொடுக்கும் வலிகளின் ஆழம் அவர் படைப்புகளில் பொதித்து இருக்கும் என்பது உலகம் அறிந்த ரகசியம்!

சாலை வசதிகள். சுகாதார மேம்பாடு, குடிநீர், இதர அரசாங்க சேவைகளில் வட சென்னைக்கும் தென் சென்னை வேறுபாடுகள், பார்ப்பனர், மேல்சாதியினர், பெருமுதலாளிகள், பெரும் பணக்காரர்கள் குவிலாக உள்ள இடங்களில் (தி.நகர், அண்ணா நகர், அடையாறு, நங்கநல்லூர், பம்மல்..) உள்ள அரசாங்க கட்டமைப்பு வசதிகள், அங்கு அரசு பணங்கள் கொட்டி செலவிடப்படும் வசதிகள் என்பது இயல்பானதாக கடந்து போக நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொது கருத்துகளாக மாற்றப்பட்டு பழக்கப்பட்டு போய் உள்ளோம்!

அதை கேள்விகளுக்கு உள்ளாக்கும் படைப்புகள் வருபவைகள் மிகச் சிலதுகளே! அப்படி வருபவைகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதுடன், சிலரின் எரிச்சலையும் எதிர்கொள்ள நேரிடுகிறது என்பது உண்மை.

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு”

என்ற குறளை திரும்பத் திரும்ப படித்து இருப்போம். கேட்டு இருப்போம்.

பொடியங்குளம் பெரியவர்களை போலிஸ் அதிகாரி கண்ணபிரான் கொடூரமாக அடித்து சித்ரவதைகள் செய்கிறான். நாவினால் அதை விட கொடூரமாக ஏசி அவர்கள் மனித தன்மையை, சுயமரியாதையை சிதைக்கிறான்.

“ஆறாதே நாவினாற் சுட்ட வடுதான்” மாரிசெல்வாஜின் கதையின் மையம்! அதை மிக கூர்மையாகக் காட்சி மொழிகளில் வெளிப்படுத்துகிறது கர்ணன் படம்!!

ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மனிதர்களாக போலீஸ் நிலையம், சிறை, நீதிமன்றத்திற்குள் ஓரிரு முறைகள் சென்று நின்று பாருங்கள். மாரிசெல்வராஜின் படைப்பின் வலிகளும், வலிமையும் தீயாய் கொழுந்து விட்டு திகுதிகுவென எரிவது புரியும்;

இன்னும் பல விசயங்களை படைப்பின் நுணுக்கங்களை எழுத வேண்டும். பலரும் எழுதி உள்ளனர். அதில் இன்னும் காத்திரமாக சொல்ல வேண்டியவைகளுக்கு அழுத்தம் தந்து எழுத வேண்டும்! அப்படி எழுதினால் அந்த ஆறாதே நாவினாற் சுட்ட வடு வின் வலி புரியாமல் போய்விடும்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் : கர்ணன் படம்!!

- கி.நடராசன்