சினிமா இசை என்றாலே செவ்வியல் இசைக் கலைஞர்களுக்கு வேப்பங் காயாகக் கசந்த காலம் அது. செவ்வியல் பக்க வாத்தியக்காரர்கள் சினிமாக்காரர்களுக்கு வாசிக்கமாட்டேன் என்றெல்லாம் பிடிவாதம் பிடித்ததும் உண்டு. அந்த நிலைமைகளையெல்லாம் எதிர்நீச்சல் போட்டே சினிமா சங்கீதம் எனும் வகைமை வளர்ந்தது வரலாறு. வெகுமக்கள் ரசனைக்கு எதிரான கர்நாடக இசைக் கலைஞர்களின் இந்தப் போக்கிற்கு எதிராக விடாப்பிடியாக தமிழ் சினிமா தனக்கான இசையை வளர்த்துக்கொண்டது. செவ்வியல் இசை எனும் பெயரால் பலரும் நடத்திய கூத்துக்களை மகாகவி பாரதிகூட இப்படிக் கிண்டல் செய்து விமரிசிக்கிறார்:

“இங்கே ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்றபடி பொதுவாக வித்வான்களுக்கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வியப்பு உண்டாயிற்று. ஒன்றுபோல எல்லோரும் இப்படித் தொண்டை வலிமை குறைந்தும் நயங்குறைந்தும் இருப்பதன் காரணமென்ன? இதைப்பற்றி சில வித்வான்களிடம் கேட்டேன்”.

இதற்கு மாறாக கர்நாடக இசையினையே அடிப்படையாகக் கொண்டு அந்நாளில் ஜி.ராமநாதன், ஜி.என்.பாலசுப்பிரமணியம் போன்றோர் தமிழின் சினிமா இசையை வளர்த்தெடுக்கும் அரும்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். நாடகமும் சினிமாவும் மக்களுக்கு நெருக்கமான இசையை உருவாக்கி வளர்த்த காலத்தில் எஸ்.ஜி.கிட்டப்பா, பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், கே.பி.சுந்தராம்பாள் என்று ஒரு குரல்வளம் நிறைந்த கலைப் பெரும்படையே உருவாகி மக்களால் கொண்டாடப்பட்ட நிலையில் 1945ல் தனது 23 வயதில் மேடைக் கச்சேரிகளில் தியாகராஜ பாகவதரின் பாடல்களைப் பாடத் தொடங்கியவர் டி.எம்.சௌந்தர ராஜன். அசல் பாகவதரின் நகலாக அவரது குரல் இருந்ததால் ரசிகர்களின் வியப்புக்கு உள்ளானார் டி.எம்.எஸ்.

பாகவதரை மானசீகமாகக் கொண்டதால் அவருக்கும் சினிமாவில் பாட, நடிக்க ஆசை வந்தது. முதலில் அவரது தொண்டையைத் தமிழ் சினிமா ஏற்கத் தயங்கியது. அவரது விடா முயற்சியால் 1946ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடு மூலமாக ஒரு வாய்ப்பு கிட்டியது. அந்தப் படமோ 1950ல் தான் வெளிவந்தது. அதில் ராதே என்னை விட்டு ஓடாதேடி என்ற பல்லவியில் தொடங்கிடும் பாடலை டி.எம்.எஸ். பாடினார். அன்றிலிருந்து அண்மையில் செம்மொழி மாநாட்டிற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவர் பாடிய ஓரடி வரையில் அவரது இசை ஓட்டம் மகத்தான விளைவுகளை ஏற்படுத்தியதென்றால் அது மிகையில்லை.

டி.எம்.சௌந்தரராஜனின் குரலுக்கு இணையான குரலொன்றைச் சொல்வது இயலாதது. அவரது தமிழ் உச்சரிப்பு மிகமிக அலாதியானது. அன்றும் இன்றும் என்றும் ஒருவருக்குத் தமிழை எப்படிச் சரியாக உச்சரிக்க வேண்டும் என்று கற்றுத்தரும் ஒரு பெருங்கலாச்சாலையாகவே அவரது குரல் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் அவரது தலைமுறையில் அவர் பிறந்த சௌராஷ்டிர சமூகத்தில் தமிழ் உச்சரிப்பு சிறுபிள்ளைகளும் நகும் மழலைத் தன்மையில்தான் இருந்தது. அந்தச் சூழலில் ஒரு மனிதர் இசையையும் செவ்வனே கற்று, தமிழ்ப் பயிற்சியிலும் மிகச் சிறந்து விளங்கியது நம்மையெல்லாம் வியக்கச் செய்யும் இயல்பினது. அவர் ஒரு சுயமான கலைஞர் என்பதை இது காட்டுகிறது.

மதுரையில் பிறந்த அவரது இயற்பெயர் துகுலுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் என்பது. சௌராஷ்டிர சமூகத்தின் புரோகிதக் குடும்பத்தில் அவர் பிறந்தார். அவரது மூத்த சகோதரர் வேத விற்பன்னர். டி.எம்.எஸ். தனது ஏழு வயதில் சின்னக்கொண்ட சாரங்கபாணி பாகவதரிடம் இசை பயின்றார். பின்னர் அரியக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் தொடர்ந்து பயிற்சி பெற்றார்.

டி.எம்.சௌந்தரராஜனின் பாடல்கள் காலம்கடந்தும் வாழும் தன்மையின. காதலை, வீரத்தை, துயரத்தை, நகைச்சுவையை என்று வாழ்வின் அனைத்துத் தருணங்களின் உணர்வுகளையும் அவரது குரல் பதிவு செய்திருக்கிறது. தமிழனின் இசைக்குரல் என்பது இதுதான் என்று ஒவ்வொரு தமிழனும் அவரது குரலில் தன்னையே அடையாளம் கண்டது அவருடைய சிறப்புகளுக்கெல்லாம் சிறப்பென்றால் அது பொய்யில்லை.

பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ள அவரது சாதனைப் பயணத்தில் ஏதாவது ஒரு சில பாடல்களை மேற்கோளுக்குப் பயன்படுத்தினால் நாம் பயன்படுத்தாமல் விடுபடும் பாடல்களின் தரம் குறித்த சந்தேகம் எழக்கூடும் என்பதால் நான் அவரின் எந்தவொரு பாடலையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்வதைத் தவிர்க்கிறேன். தவிரவும் எவருக்கும் தெரியாத புதிய விஷயம் ஒன்றையும் நான் சொல்லிவிடப் போவதும் இல்லை.

தூக்குத் தூக்கி படத்தில் அவருக்குப் பாட வாய்ப்பு கிடைத்தபோது சிவாஜி கணேசனுடன் டி.எம்.எஸ். சில மணித்துளிகள் பேசிக் கொண்டிருந்தார். அந்த சில மணித்துளிகளிலேயே சிவாஜியின் குரலை மனதினுள் வாங்கிக் கொண்டார். சிவாஜியின் குரலின் சாயலிலேயே அந்தப் படத்தின் பாடல்களைப் பாடினார். இப்படித்தான் சி.எஸ்.ஜெயராமன் குரலிலிருந்து விடுபட்டு, டி.எம்.எஸ்ஸின் குரலில் தன்னை அடையாளம் கண்டார் சிவாஜி. அவர்தான் டி.எம்.எஸ். அதுதான் அவரது தனித்துவம்.

தமிழ் அழகும், ஆண்மை நிறைந்த குரல் கம்பீரமும், விடாப்பிடியான கலைத் தாகமும்தான் அவரது இயல்பான சொத்துக்கள். டி.எம். சௌந்தரராஜன் இன்று நம்மோடு இல்லை. ஆனால் அவரது குரலும் தமிழும் இன்னும் பலகாலங்களுக்கு தமிழரோடும் தமிழ் மண்ணோடும் இரண்டறக் கலந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

- சோழ.நாகராஜன் 

Pin It