காவிரியில் மீண்டும் கல் எறிந்து குழப்பத்தை விளைவிக்கும் முயற்சியில் இரு நடிகர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். பல ஆண்டு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆணையம் தன்னாட்சி பெற்றதாக இருக்க வேண்டும், கர்நாடக அரசின் தலையீடு இல்லாமல் செயல்பட வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கும் இந்நிலையில் ஏட்டிக்குப் போட்டியாக “இரு மாநில மக்களும் சகோதர உணர்வுடன் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். காவிரி பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க வேண்டும்.” என்று கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்த பின் கமலஹாசன் கருத்துத் தெரிவித்திருக்கிறார். கருத்து தெரிவித்த அதே கையோடு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் ஆகியோரின் கண்டனங்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார். ஆனால் ரஜினி மட்டும் அவர் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

rajini and kamal 175உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கும் வேளையில், தீர்ப்பை முடக்கும் வகையில் கமல்ஹாசனும், குமாரசாமியும் பேச்சுவார்த்தை என்ற கருத்தை வெளியிட்டிருப்பது உள் நோக்கம் கொண்டது. இது கமலஹாசன் தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்.

அண்டை மாநிலத் தலைவர்களோடு இன்னுறவைப் பேணத் தெரியாதவர்களா தமிழகத் தலைவர்கள்? ஓர் எடுத்துக்காட்டு. முன்னாள் பிரதமர் தேவகவுடா கலைஞரைப் பற்றிய பேட்டியில், “இங்கே தேவராஜ் அர்ஸ் முதல்வராக இருந்தபோது, அங்கே முதல்வர் கருணாநிதி. தேவராஜ் அர்ஸை நேரில் சந்தித்து, ‘தமிழக விவசாயிகள் தவிக்கிறார்கள்; மறுத்துவிடாதீர்கள்’ என்று உருக்கமாகத் தண்ணீர் கேட்டார். நான் அப்போது எதிர்க்கட்சித் தலைவர். ‘எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது’ என்று தேவராஜ் அர்ஸிடம் எச்சரித்துவிட்டு வந்திருந்தேன். முதல்வரைச் சந்தித்ததோடு, யாருமே எதிர்பார்க்காத சூழலில், என்னையும் வந்து சந்தித்தார். ‘நீங்களும் ஒரு விவசாயி. சக விவசாயிகளின் வலியைக் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்... மனது வையுங்கள்’ என்று என் கையைப் பற்றிக்கொண்டார். இந்த அணுகுமுறை என்னை நெகிழச் செய்துவிட்டது. அன்று தொடங்கி கவனித்துவருகிறேன். அவர் முதல்வராக இருக்கும் காலகட்டத்தில் இதுபோன்று எப்படியாவது தண்ணீரை வாங்கிவிடுவார்.” என்று கலைஞரின் அரசியல் நாகரிகத்தையும் சாதுரியத்தையும் பாராட்டினார். அரசியலில் இப்போது அடியெடுத்து வைத்திருக்கும் கமலஹாசனும், அடியெடுத்து வைக்கலாமா வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தும் அரசியல் ஆழம் கண்ட தலைவர்கள் இருக்கும் தமிழ்நாட்டில் உளறிக்கொட்டுகிறார்கள்.

இந்திய மாநிலங்களில் அரசியலில் முதிர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு. இந்தியத் தலைவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள். தந்தை பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின் பாதையில் இங்கு அரசியல் களம் அமைந்திருக்கிறது. உரிமைகளுக்காகப் போராடும் அதே வேளையில் சகோதர உணர்வுடனே அண்டை மாநிலங்களோடு உறவைப் பேணி வருகிறது தமிழ்நாடு. அண்டை மாநிலத்தோடு இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையிலும் இவ்வளவு இணக்கமாகத் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலமும் இருக்க முடியாது.

இந்த விவரங்கள் தெரியாமலா கமலும் இரஜினியும் பேசி வருகிறார்கள்? பல ஆண்டுகளுக்கு முன் சேர்ந்து நடிப்பதை விடுத்த கமலும் ரஜினியும் இப்போது ஒரு பெருந்தயாரிப்பாளரின் முதலீட்டில் மீண்டும் அரசியலில் கை கோர்த்திருக்கிறார்கள். நடிகர்களாகத் தங்கள் பணியைச் சரியாகச் செய்கிறார்கள்.

Pin It