ஒரு முறைக்கு இரண்டு முறை, ஒரு பக்கத்திற்கு இரண்டு பக்கம் விசாரித்து மரண தண்டனை கூடாது என்று சொன்னது ‘விருமாண்டி’. விசாரணை, நீதிமன்றம், மனித உரிமைகள் எல்லாவற்றையும் தூக்கித் தூர எறிந்து விட்டு, தனக்குத் தீவிரவாதி என்று படுகின்றவர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்று சொல்கிறது ‘உன்னைப் போல் ஒருவன்’. இரண்டும் கமல்ஹாசனின் படங்கள்.

இரண்டு மணிநேரத்திற்கும் சற்றுக் குறைவாக எடுக்கப்பட்டுள்ள படம் உன்னைப் போல் ஒருவன்.தொடக்கம் முதல் இறுதிவரை, ஒரு குதிரைப் பந்தயத்திற்குள்ள விறுவிறுப்பு. மிக உயர்ந்த தொழில் நுட்ப நேர்த்தி.வழக்கமான காதல் பாடல்கள், ஆபாசக்காட்சிகள், இரட்டைப் பொருள் உரையாடல்கள் எதுவும் படத்தில் இல்லை. தசாவதாரத்தில் காட்சிக்குக் காட்சி வெவ்வேறு தோற்றங்களிலும் ஒப்பனைகளிலும் வெளிப்பட்ட கமல்ஹாசன், இந்தப் படத்தில், முதல் காட்சியில் இருந்து கடைசி வரையில் ஒரே உடை, ஒரே தோற்றம், எந்த மாற்றமும் இல்லை. மொட்டை மாடியில் அமர்ந்து தனியாகப் பேசிக் கொண்டிருக்கிற ஒரு பாத்திரம். தன்னைக் காட்டிலும், உடன் நடிக்கும் மோகன்லாலுக்கு கூடுதல் முக்கியத்துவம். தேர்ந்த கலைஞர்களின் திறன்மிக்க நடிப்பு. இதமான இசை.

இத்தனை சிறப்புகளும் கொண்ட அப்படத்தைப் பார்த்த பிறகு, ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சிதான் நமக்கு மிஞ்சியிருக்க வேண்டும். ஆனால், ஒரு பெரிய மன உளைச்சலையே என் போன்றவர்களிடம் அந்தப் படம் ஏற்படுத்தி உள்ளது.

தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்று திரும்பத் திரும்ப ‘சங்பரிவாரங்கள்’  உருவாக்கியுள்ள கருத்து மாயையை இப்படம் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்க முயற்சித்திருக்கிறது. படத்தில் காட்டப்படும் நான்கு  தீவிரவாதிகளில் மூவர் இஸ்லாமியர்கள், ஒரே ஒருவர் இந்து. அவரும்கூட பணத்துக்காக வெடிமருந்து வாங்கி விற்கும் ஒரு தவறான வணிகர் அவ்வளவுதான். தீவிரவாதிகள் எல்லோரும் கொல்லப்பட்டு படம் முடியும் வேளையில், திரையில் ‘சம்பவாமி யுகே யுகே’ பாடப்படுகிறது. கொல்லப்பட்டது இஸ்லாமியர்கள், கொன்றவர் இந்துக் கடவுள் போல இருக்கிறது. (சுட்டுக் கொல்லும் இன்பெக்டர் பெயர் ஒர் இஸ்லாமியப் பெயராக இருப்பது, மிகப் புத்திசாலித்தனமான தற்காப்பு)

கணிப்பொறித் துறையில் வல்லுனர் ஒருவர் வேண்டும் என்று கேட்கும் காவல்துறை ஆணையர் எப்படிக் கேட்கிறார் தெரியுமா?  ‘Call one expert from IIT’  ( ஐஐடியில் இருந்து ஒரு வல்லுனரைக் கூப்பிடுங்கள்). ஐஐடி-யைத் தவிர வேறு எங்கும் வல்லுனர்களே கிடையாதா? அதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன ? அங்கிருந்து வரும் ஒரு மகா மேதை படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். ஆனாலும் அவர்தான் மகா மேதை. அசல் அம்மாஞ்சியாக அப்படி ஒரு ஒப்பனை. பார்த்த உடனேயே ‘அவாள்’  என்று தெரியும் தோற்றம்.

காவல் துறை ஆணையர், உண்மையில் மட்டுமல்லாமல், படத்திலும் ஒரு மலையாளி. மகா கெட்டிக்காரர். தமிழக அரசின் தலைமைச் செயலாளரையே எள்ளி நகையாடும் அளவுக்கு கம்பீரமானவர்.

முதலமைச்சரின் கோபாலபுரம் வீடு காட்டப்படுகிறது. அவர் குரலைப் போலவே தொலைபேசியில் குரல் ஒலிக்கிறது. படத்தில் வரும் முதலமைச்சர் கலைஞர்தான் என்பது மறைமுகமாக நிறுவப்படுகிறது. முதலமைச்சரோ மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், எதிர்க் கட்சிகளுக்கு இந்தச் செய்தி தெரிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகளைக் கவனமாக வலியுறுத்துகிறார். அப்போது அந்தக் காவல் துறை அதிகாரியான மலையாளியின் முகத்தில் ஒளிவிடும் ஓர் அலட்சியப் புன்னகை தமிழகத்தையே கேலி செய்கிறது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கு, அல்காய்தா போன்ற இயக்கங்களின் பெயர்கள் வெளிப்படையாகவே பேசப்படுகின்றன.

இப்போது கமலிடம் நமக்கு மூன்று கேள்விகள்.

1.பஜ்ரங்தள் போன்ற, வன்முறையை வழியாகக் கொண்ட, இந்து பயங்கரவாத இயக்கங்களை மையமாக வைத்துப் படம் எடுக்கும் எண்ணம், விருப்பம், துணிச்சல் உங்களுக்கு உண்டா?

2.தனிமனிதர்கள்/குழுக்கள் கைகளில் ஆயுதங்களை எடுப்பது மட்டும்தான் தீவிரவாதமா?பயங்கரவாதிகளை உருவாக்குகிற அரச பயங்கரவாதம் பற்றியும் பேச உங்கள் பேனாவும் கேமராவும் முன்வருமா?

3.படத்தில் வரும் மோகன்லால் இரண்டு மூன்று முறை தொலைபேசி மூலம் உங்களிடம் கேட்கிறாரே, அந்தக் கேள்வியை மீணடும் ஒருமுறை உங்களைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது. யார் நீங்கள்? பெரியாரின் பிள்ளையா? பெரியவாளின் சிஷ்யரா?

Pin It