தமிழக அரசின் காவல் துறையில் உள்ள மனித உரிமை மற்றும் சமூக நீதிப்பிரிவுத் துறை அதிகாரிகள், ஊர் ஊராகச் சென்று ஏதேனும் ஒரு தேநீர்க் கடையில் ஒரு சிலரை அழைத்து ஒன்றாக நிற்க வைத்து, உடனடியாக தூக்கியெறியக்கூடிய "டிஸ்போசபிள்' குவளையில் தேநீர் குடிப்பது போல் ஒரு புகைப்படம் எடுத்து, "கிராமங்களில் எல்லோரும் சமமாக உள்ளார்கள்' என்று பத்திரிகைகளில் செய்திவெளியிட்டு, தங்களுடைய சமூகக் கடமையை முடித்து விடுகிறார்கள். சமூக ஒற்றுமையை உருவாக்குகிறோம் என்ற பெயரில் சமத்துவபுரம் கட்டுகிறது தமிழக அரசு. புதியதான ஒரு தலித் குடியிருப்பாகத்தான் அ து மாறுகின்றதே தவிர, சாதி இந்துக்கள் அங்கு வசிக்காமல் வீட்டை வாடகைக்கு விட்டு விடுகின்றனர்.

தலித்துகளுக்காக உருவாக்கப்பட்ட நலத்திட்டங்களின் பயன்பாடுகளை, தலித்துகளால் அனுபவிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை நிலை. அதே நேரத்தில் தலித்துகளுக்கு உரிமை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டத்தையும் சாதி இந்து சமூகம்/அரசு செயல்படுத்த மறுத்து முட்டுக்கட்டை போடுகிறது என்பதும் உண்மை. தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமை, பாகுபாடு உள்ளிட்ட வன்கொடுமைகளை தடுக்கும் நோக்கில் – இந்திய அரசு 1955ஆம் ஆண்டு "தீண்டாமைச் சட்டம்' கொண்டு வந்தது. இதிலுள்ள குறைபாடுகளை சரிசெய்து 1976 ஆம் ஆண்டு "குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம்' இயற்றப்பட்டது. தலித்துகள் மீது நிகழும் வன்கொடுமையினைத் தடுக்க இச்சட்டமும் போதுமானதாக இல்லாத நிலையில் – "பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – 1989 மற்றும் விதிகள் 1995' உருவாக்கப்பட்டது.

தற்பொழுது இச்சட்டம் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த செயல்படும் அமைப்புகள், செயல்பாட்டாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, இச்சட்டம் மேலும் வலுவானதாக அமையவும், இச்சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவும், அதன் செயலாக்கம் குறித்து மறு ஆய்வு செய்து, சட்டத்திலும், விதியிலும் அறிவுப்பூர்வமான சில திருத்தங்களை சேர்ப்பது அவசியம் என்று கருதி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

டெல்லியிலுள்ள தலித் சமூக நீதி இயக்கம் இம்முயற்சியில் ஈடுபட்டுள் ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 40 க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து இந்தக் கூட்டமைப்பை உருவாக்கியுள் ளனர். தமிழகத்திலிருந்து இக்கூட்டமைப் பில் உள்ள மனித உரிமை ஆராய்ச்சி நிறுவனம், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம், மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 7 அமைப்புகள் இணைந்து, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான மாநில மாநாட்டை நவம்பர் 30 அன்று சென்னையில் நடத்தின.

இம்மாநாட்டில் கருத்துரையாற்றிய அனைவரும், இக்கூட்டமைப்பு உருவாக்கியுள்ள வரைவு அறிக்கையில் உள்ள திருத்தங்கள் குறித்து விரிவாகப் பேசினார்கள். அவற்றை நாம் தொகுத்து இங்கு வகைப்படுத்தியுள்ளோம்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடை முறைப்படுத்துவதில் கண்டறியப்பட்டுள்ள பல்வேறு இடைவெளிகள் / குறைபாடுகள் :

வன்கொடுமைகள் குறித்து புகார் செய்ய விடாமல் பாதிக்கப்பட்டவர்கள் தடுக்கப்படுதல். காவல் துறை அதிகாரிகள் சட்டத்தின் உரிய பிரிவுகளில் புகார் பதிவு செய்யாமல் இருப்பது; மற்றும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்துவது. விசாரணை அதிகாரிகளால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்.

குற்றம் சாட்டப்பட்டவரை காவல் துறை கைது செய்யாமல் இருப்பது, மற்றும் அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுதல். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிராக போலியான, எதிர் வழக்குகள் பதிவு செய்யப்படுதல். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்படுதல் மற்றும் துன்புறுத்தப்படுதல்.

சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள இழப்பீடுகள் பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. சட்ட உதவி களுக்கு வாய்ப்பின்மை மற்றும் விரும்பிய வழக்குரைஞர்களை தேர்ந்தெடுக்க முடியாமை. உரிய அதிகாரிகளால் விசாரணை நடத்தப்படாத நிலை மற்றும் காவல் துறை ஆய்வாளர்களால் விசா ரிக்கப்படுதல். சட்டத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு குழுக்கள் இன்னும் அமைக்கப்படவில்லை அல்லது செயல்படவில்லை. மாநில மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் செயல்படுவதில்லை. சட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள்.

தேவையான திருத்தங்களும், நியாயங்களும் : இச்சட்டத்தின் பிரிவு 3(1)இல் கூறப்படும் வன்கொடுமைகள் அனைத்திற்கும் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்படுகிறது. ஆனால் குற்றங்களின் கடுமையும், இந்தச் சட்டத்தின் கீழ் வரும் வன்கொடுமைகளுக்கான தண்டனைகளின் அளவும் பெரும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. ஆகவே, இந்த சட்டத்தின் கீழ் தரப்படும் தண்டனைகளை, 2 ஆண்டுகளுக்கு குறையாத 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை நீட்டிக்கக் கூடிய அபராதமும் விதிக்கப்படக்கூடியதாக திருத்தப்பட வேண்டியுள்ளது.

சில குறிப்பிட்ட சொற்களைக் கையாளுவதில் உள்ள வரம்புகள் : இச்சட்டத்தில் உள்ள "நோக்கம்', "உள்நோக்கம்', "அடிப்படையில்', ö"பாதுமக்கள் முன்னிலையில்', "பொது இடம்' போன்ற சொற்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவே பயன்படுகின்றன. சட் டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் இச்சொற்களைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களை தப்பிக்கச் செய்கின்றனர். நீதித்துறையும் இச்சொற் களைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளன. தனி நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளில் 39 சதவிகிதம் வரை குற்றம் சாட்டப்பட்டவர் வன்புணர்ச்சி உள்ளிட்ட குற்றங்களைச் செய்யும்போது, பாதிக்கப்பட்டோரின் சாதியைச் சொல்லி இழிவுபடுத்தவில்லை என்ற காரணத்தைக் கூறியே வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, ஆந்திராவில் உள்ள மனித உரிமை அமைப்பின் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

"நோய்களை வருமுன் காப்போம்; வருமுன் தடுப்போம்' என்றெல்லாம் அரசு பிரச்சாரம் செய்கிறது. அதேபோல, தலித்துகள் மீது வன்கொடுமைகள் நிகழ்த்தப்படாமல் தடுப்பதற்கு, அரசு எந்த முன் முயற்சிகளையும் எடுப்பதில்லை. மாறாக, தொடரும் வன்கொடுமைகளுக்கு ஒரு நிவாரணமாகத்தான் இந்தச் சட்டம் அரைகுறையாக – சாதி இந்து அரசு எந்திரத்தால் பயன்படுத்தப்படுகிறது. 

– நம் செய்தியாளர்

(தலித் முரசு நவம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

Pin It