'வானம் பாத்த பூமி' என வட்டார மக்களாலும், "தண்ணி இல்லா காடு' என ஏனைய பகுதி மக்களாலும், "மிகவும் பின்தங்கிய மாவட்டம்' என அரசாங்கப் பதிவேடுகளிலும் நீண்ட காலமாகப் புழக்கத்தில் வழங்கப்படும் மாவட்டம் ராமநாதபுரம். மேற்குறிப்பிடப்படும் அடைமொழிகளையெல்லாம் கடந்து, இம்மாவட்டத்திற்கு பூசப்பட்டிருக்கும் அடையாளம் "கலவர பூமி'. 1947 முதல் 2011 வரையான இப்பகுதியின் மக்கள் வரலாற்றை எழுத விழையும் எவரொருவரும் – அரசாங்கப் பதிவேடுகள்,காவல் துறை வழக்குகள், பத்திரிகை செய்திகள், தன்னார்வ அமைப்புகளின் ஆவணங் கள், வாய் வழி கதையாடல்கள், அரசியல் கட்சிகளின் அறிக்கைகள், போராட்டக் கள ஆய்வுகள் இன்னபிறவற்றைக் கொண்டு ஆய்வு செய்ய முற்படுவாöரனில், அதிர்ச்சியளிக்கும் வகையிலோ, ஆச்சரியப்படுத்தும் விதத்திலோ அவரை ஆட்கொள்ளும் ஒரு சொற்றொடராக "சாதிக் கலவரம்' என்பதே புலப்படும்.
தமிழ்ச் சமூகத்தில் நிலவும் தீண்டாமை மற்றும் சாதி வேற்றுமைகள் குறித்து ஓர் ஆய்வை கால வரிசைப்படி வகுத்துக் கொள்வோமெனில், பார்ப்பனிய சமூக அமைப்பு நிலை நிறுத்தப்பட்ட ஈராயிரம் ஆண்டுகளின் வரலாற்றுப் பின்புலத்தையும் உள்ளடக்கியே ஆகவேண்டும். ஆயிரமாண்டு கால சாதியச் சமூக ஒடுக்குமுறையில் ஆதிக்க சமூகங்களும், அவ்வப்போதைய அரசுகளும் கரம் கோர்த்தே செயல்பட்டு வருகின்றன என்பதற்கான ஆய்வுகள் நிறுவப்பட்டு விட்டன.
தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலம், தமிழ் மண்ணில் வந்தேறிகளின் ஆட்சிக் காலம், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலம், 1947க்குப் பிந்தைய சுதேசி ஆட்சிக்காலம் என சாதி வேற்றுமைகள் வேர் பிடிக்கத் தொடங்கியதிலிருந்து, நவீன வடிவம் பெற்று, இறுகி கெட்டித் தட்டிப் போன இன்றைய நாளதுவரை இக்கால வரிசைப்படி நாம் வரையறுத்துக் கொள்ள முடியும்.
சுருக்கமான இவ்வரலாற்றுப் பின்னணியின் கீழ், தமிழகத்தில் தென்மாவட்டங்களின் சமூக – அரசியல் வரலாற்றையும், அதிலும் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தின் சமூக – அரசியல் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் அவதானிக்க வேண்டும். சாதி இந்துக்களுக்கு ஆதரவான வரலாற்று ஆய்வாளர்களாலும் சமூக – அரசியல் அமைப்புகளாலும் சில பல, பத்தாண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டம் "சேதுபதி சீமை' என வழங்கப்பட்டு வருகிறது. வந்தேறிய நாயக்கர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து, உழைக்கும் மக்களை ஒடுக்கி, சுரண்டிப் பிழைக்க ஏதுவாக பாளையப் பகுதிகள் அவ்வப்பகுதி ஆதிக்க சாதியினரைக் கொண்டு உருவாக்கப்பட்டன. அவ்வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரையிலான ஆட்சி அமைப்புகளாக நிலை நிறுத்தப்பட்டவைதான் "சேதுபதி சீமை', "சிவகங்கை சீமை', "நெல்லைச் சீமை' என்ற பெயர்களில் இன்றளவும் அறியப்படும் பகுதிகள்.
இப்பகுதிகளில் வந்தேறிய நாயக்கர்களுடன் இணைந்து கொண்டு, இம்மண்ணின் தொல்குடி மக்களை ஒடுக்கியும் சுரண்டியும் தங்களை வளப்படுத்திக் கொள்ள, ஆக்கிரமிப்புக்குத் துணை போனவர்கள்தான் – "முக்குலத்தோர்' என இன்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் சாதி இந்துக்கள்.
வந்தேறிய சாதி இந்துக்களும் தமிழ் சாதி இந்துக்களும் ஓரணியில் நின்றபோது, தொல்குடி தமிழர்களின் வாழ்வையும் நிலப்பகுதிகளையும் காக்க – குறிப்பாக, தமிழகத்தின் தென்பகுதியில் – உழைக்கும் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து, ஆக்கிரமிப்பிற்கு எதிரான போர்க் களத்திற்கு உருவம் தந்தவர்கள் அன்றைய வேளாண் குடி மக்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்குப் பின்னும் நவீன அரசமைப்புக் காலமான இன்றுவரை, வேளாண்மைத் தொழிலையே தமது குடித் தொழிலாகக் கொண்டு வாழும் அவர்கள் – "பள்ளர்' என இழிவாகப் பழித்துரைக்கப்படும், "மள்ளர்' என சங்க காலக் குறிப்புகளில் அறியப்படும் சமூகத்தவரே. இயல்பிலேயே போர்க்குணத்துடன் வாழ்ந்து வந்த இம்மக்களை அடக்கி, ஒடுக்கி, தீண்டாமைப் புதைகுழியில் உழலவிடுவதன் மூலமே, உழைக்கும் வர்க்கப் பிரிவினரின் எதிர்ப்பை நிர்மூலமாக்க முடியும் என்ற பார்ப்பனிய வழிகாட்டலில் செயல்பட்டு வருபவர்களே – வந்தேறிய சாதி இந்துக்களும், தமிழ்ச் சாதி இந்துக்களும்.
வரலாற்றின் காலப் போக்கில், இந்த சாதி இந்துக்கள் நில உரிமை, மொழிப் பாகுபாடு, பண்பாட்டு வேற்றுமைகள் என யாவற்றையும் கடந்து அல்லது உண்டு செரித்து அல்லது முதன்மைப்படுத்தாது தமிழ்ச் சமூக சாதி இந்துக்கள் என கலந்து ஒன்றுபட்டனர். இவர்களே இன்று தம்மை "தமிழர்கள்' எனவும் அடையாளப்படுத்தி, அனைத்துத் துறைகளிலும், நிலைகளிலும், வாய்ப்புகளிலும் முன்னின்று வருகின்றனர். ஆக, பழந்தமிழர் சமூகங்களை ஒடுக்கி, அரசதிகாரத்தில் வீற்றிருந்து மேலாண்மை செய்பவர்களாக இருப்பவர்கள், துரோகத் தமிழர்களையும் உள்ளடக்கிய சாதி இந்துக்களே என்பதை "இனவழி' அரசியல் பேசுபவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.
பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக, பார்ப்பனிய அரசமைப்புக்கு எதிராக, சாதி – தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராக என, இந்து மதக் கொடுங்கோன்மைக்கு – சாதி இந்துக்களின் ஒடுக்குமுறைக்கு – அதிகார வர்க்கத்தின் சுரண்டலுக்கு எதிராக, வரலாற்றுக் காலம் தொட்டு போராடி வருபவர்கள் உழைக்கும் சமூகப் பிரிவினரே. சாதிய சமூக அமைப்பில் இவ்வர்க்கப் பிரிவினர் பல சாதியினர் என்பதையும், ஒவ்வொரு சாதியினருக்கும் ஒப்பளிக்கப்பட்ட சமூக – அரசியல் பாத்திரம் என்னவென்பதையும் எவரும் மூடி மறைத்து விட முடியாது.
இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டுதான், சமூக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சாதி உணர்வு என்பதற்கும், ஆய்வு நோக்கிலான கண்ணோட்டம் என்பதற்குமான இடைவெளியைக் கடக்க முடியாமல்தான் பல்வேறு ஆய்வுகள் தேங்கி நிற்கின்றன. ஆனால், நாம் இங்கு பதிவு செய்து கொண்டிருப்பது ஓர் ஆய்வுக் கட்டுரையோ, ஓர் இலக்கிய விசாரணையோ அல்ல. ரத்தமும் சதையுமான வரலாற்றுக் குறிப்பு. இப்படி அறுதியிட்டுக் கூறுவதற்கான அனுபவத் தொகுப்புணர்வோடும், வரலாற்றுக் காயத்தோடும், பச்சை ரத்தம் வழியும் இதன் சொற்கள் – உங்களை ஆட்கொள்ளாமலும் உங்கள் நம்பிக்கையைப் பெறத் தவறவும் கூடலாம்.
ஆனால், வரலாற்றின் – இந்து சமூக வரலாற்றின் – தமிழ்ச் சமூக வரலாற்றின் பக்கங்களில் மூழ்கடிக்கப்பட்ட, இருண்ட அத்தியாயமாக்கப்பட்ட பகுதிகள் ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும். அறிவு ஒளி பரவி விடாமல் தடுப்பதில் அரசதிகாரமும் அதன் துருப்புகளான சாதி இந்துக்களும் மட்டுமல்ல; தமிழ்க் குடிகளின் துரோகிகளும் இன்றுவரை கவனம் பிசகாமல் பார்த்துக் கொள்கின்றனர். ஆளும் வர்க்கத்தின் அரண்களை உடைத்து, உண்மைகளை உலகுக்கு கொண்டு வரும் கடப்பாட்டில் இந்த எழுத்துகள், ஓர் ஆவணமாக நிலைப்பெறவும் வாழ்வை இழந்து கொண்டிருக்கும் பழந்தமிழ்க் குடிகளின் குரலை உயர்த்திப் பிடிக்கவும் நிச்சயம் உதவும்.
கல்வி மறுக்கப்பட்டு, ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, பொதுத் தள இருப்பு முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் – அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் போல, மள்ளர் சமூகத்தின் வரலாறும் பேசாப் பொருளாக்கப்பட்டது. சாதியின் பெயரால் நிகழும் வன்கொடுமைகள் தமிழ் நிலத்திற்கு மட்டுமேயான ஒன்றல்ல. இந்தியத் துணைக்கண்டமே இதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியத் துணைக்கண்ட விடுதலைப் போராட்டத்தில் பார்ப்பன மற்றும் சாதி இந்துக்களின் அணியினர் ஒருபுறம், மதச் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் இஸ்லாமியர் மற்றொருபுறம், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பழங்குடி மக்கள் இன்னொருபுறம் என, மூவகைப் போராட்ட மரபுகள் அய்ரோப்பியரின் காலனியாதிக்கத்தின் விளைபொருட்களாக முகிழ்த்தன எனலாம். ஆனாலும், இம்மூவகை மரபுகளும் தீவிரத்தன்மை, மிதவாதத் தன்மை என்ற இருவிதப் போக்குகளையும் உள்ளடக்கி இயங்கின. மிதவாத காங்கிரசு கட்சிக்கு எதிராக தீவிரவாத இந்து தேசியம் இயங்கியது போலவே, இஸ்லாமியர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வகையினர் மரபிலும் இருவிதப் போக்குகளும் நிலைக் கொண்டிருந்தன.
சங்க காலம் முதல் நாயக்கர் காலம் வரையான ஆய்வுக் கண்ணோட்டம் ஒருபுறம் இருக்கட்டும். நாம் பேசத் தளைப்பட்டிருக்கும் ராமநாதபுரம் நிலப்பகுதியின் சமூக – அரசியல் பாத்திரம் என்னவென்பதை, இப்பகுதி வாழ் மக்களின் சமூக இருப்பிலிருந்தும் காலனியாதிக்க அய்ரோப்பிய அரசமைப்பு சட்ட காலத்திலிருந்தும் அணுகினால், இன்றைய நவீன கால சமூக இருத்தல், (சாதி) முரண்கள் மற்றும் ஒழுங்குகள் குறித்து ஒரு முடிவுக்கு வர இயலும்.
தமிழகத்தின் ஓர் உட்கூறான ராமநாதபுரம் மாவட்டமும் பார்ப்பன – சாதி இந்துக்களின் அணிசேர்க்கை, இஸ்லாமியர் தனித்துவம், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்நிலை என்ற பிளவுகளைப் பெரிதும் உள்ளடக்கியதாகத்தான் இன்றளவும் இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தின் கடல் தீவுப் பகுதியான ராமேசுவரத்தில் உள்ள "புகழ்பெற்ற' இந்து கோயில், பார்ப்பன – சாதி இந்துக்களின் கூட்டுணர்வை இன்றளவும் காத்து நிற்கிறது. ராமேசுவரம் கடல் தீவுப் பகுதியாக இருப்பினும், இந்நிலத்தின் தொல்குடி மக்களான மீனவ சமூகம் மூன்றாம் தரக் குடிமக்களாகவே வாழ நேரிட்டுள்ளது.
மகாராட்டிர சித்பவன் பார்ப்பனர்கள் மட்டுமே, கோயிலின் கருவறைக்குள் பூசை – புனஸ்காரம் செய்ய உரிமை வழங்கப்பட்டுள்ள இக்கோயிலின் அறங்காவலராக நிரந்தரமாக இருப்பவர்கள் – "சேதுபதி சீமை' எனும் பாளையத்தின் வழிவருபவர்களே. மறவர் எனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த இப்பாளையத்தார் இன்றும் தம்மை "மன்னர்' என்றே அழைத்துக் கொள்கின்றனர். "கிழவன் சேதுபதி' எனும் ஒரு பாளையக்காரனுக்கு, 46 மனைவிகள் இருந்தனர் என்பதும், அவர்கள் அனைவரும் அவரோடு உடன்கட்டை ஏறி உயிர் நீத்தனர் என்பதும், பெண் ஒடுக்குமுறையில் இவர்கள் எத்தகையவர்கள் என்பதற்கான சான்றாக விளங்குகிறது. இங்கு மறவர், அகமுடையார், வெள்ளாளர், நாடார், செட்டியார், யாதவர் என சாதி இந்துக்கள் "சேதுபதி' வகையறாக்களின் துணையுடன் நில உடைமை, வர்த்தகம், அரசியல் கட்சிகள், அரசுப் பதவிகள், பொதுக் கோயில் மற்றும் சொத்துகளின் பங்காளிகள் எனப் பார்ப்பனிய சமூக அமைப்பை வலுவாகக் கட்டி எழுப்பியுள்ளனர்.
ராமேசுவரம் கோயில் என்பது, ராமநாதபுரம் நிலத்தின் சாதிய இந்து சமூக அமைப்பின் ஒரு குறியீடாக இருக்கிறது. இக்கோயிலைச் சார்ந்தும், தழுவியும் பிழைக்கும் பார்ப்பன – சாதி இந்துக்கள் ஒருபுறம் எனில், தனித்துவத்துடன் இசுலாமியரும் சாதி இந்துக்களின் கண்காணிப்பில் ஒடுக்கப்பட்ட சமூகங்களும் குறிப்பாக, அருந்ததியர், ஆதிதிராவிடர், முடிதிருத்துவோர், வண்ணார் ஆகியோரும் இங்கு வாழ்கின்றனர். தீவுப் பகுதியான இங்கு வேளாண் தொழிலுக்கு இடமில்லை என்பதால், பள்ளர் எனப்படும் மள்ளர் இங்கு நீண்டகாலமாகவே இல்லை. ஆனால், ராமேசுவரம் தவிர்த்து, (பழைய) ராமநாதபுரம் மாவட்டம் முழுவதுமே, மேற்சொன்ன சாதிகளும், இதர சாதி இந்து சமூகங்களும் உள்ளடங்கிய நிலப் பகுதியே ஆயினும், இந்நிலப்பரப்பில் தனிப்பெரும் சாதியாக வரலாற்றுக் காலம் முதல் வாழ்ந்து வருபவர்கள் மள்ளர் சமூகத்தினர். தேவைக்கேற்ப நில உடைமையாளர்களாக இருந்த இம்மக்கள், கால ஓட்டத்தில் தமது நிலங்களில் பெரும்பான்மையை இழந்தவர்களாக, விவசாயக் கூலிகளாகவும் மாறிப் போயினர். நில உடைமை இழப்பு என்பதே, நாயக்கர் – மறவர் என்ற சாதி இந்துக் கூட்டுறவு, மள்ளர் சமூக மக்களிடமிருந்து உடைமைகளை அபகரிக்கத் தொடங்கியதன் விளைவே எனலாம்.
வேளாண்குடி மக்களாக, தன்மான – தனித்துவ வாழ்நிலையைக் கொண்டிருந்த மள்ளர் சமூகம், பாளையங்களின் படையெடுப்பில் தமது உடைமைகளை இழக்க முற்பட்டபோது, தீவிரத்துடன் எதிர்த்துப் போராடத் தொடங்கியது. இப்போராட்டங்களின் தேவைகள் ராமநாதபுரம் மட்டுமல்ல, தென் தமிழகம் முழுவதுமே இருந்தன. குறிப்பாகச் சொல்வதெனில், புதுக்கோட்டை மாவட்டம் முதல் திருநெல்÷வலி மாவட்டம் வரையான நிலப்பகுதிகள் இத்தகைய போராட்ட நிகழ்வுகளுக்குள் அடங்கின.
இந்தியத் துணைக்கண்டத்தின் பிற பகுதிகளிலெல்லாம் சமூக மற்றும் சமய சீர்திருத்தவாத இயக்கங்களும் அறவழிப்பட்ட மற்றும் அரசியல் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களும் தொடங்கிய காலகட்டத்தில், ஏறத்தாழ 1810 ஆம் ஆண்டில் ராமநாதபுரத்திற்கு அருகில் சாதி இந்துக்களுக்கு எதிரான சமூக உரிமைப் போராட்டம் ஒன்றை இச்சமூகம் நிகழ்த்தியதற்கான சான்றுகள் இருக்கின்றன. தொடர்ந்த நெருக்கடியான சமூக வாழ்வு, கல்வியின்மை, ஏனைய பகுதிகளுடனான தொடர்பின்மை போன்ற அடிப்படையான காரணங்களால், இம்மக்கள் சமூகமயப்படும் ஒருங்கிணைப்பின்றி சாதி இந்து எதிரிகளால் நசுக்கப்பட்டனர்.
காலனியாதிக்க அரசமைப்பால் பின்னாளில் கிடைக்கப் பெற்ற தொடக்க நிலைக் கல்வி, இம்மக்களின் சமூக ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கியது எனலாம். காலனியாதிக்க சட்டங்களின் வழி இம்மக்கள் பிந்தைய நாளில், தம்மையும் ஓர் சாதி சங்கமாக அல்லது சட்டப்பூர்வ சமூக அமைப்பாக நிறுவிக் கொண்டனர். இக்காலகட்டத்தில் அவ்வப்போது நிகழ்த்திய, சாதி இந்துக்களுக்கு எதிரான போராட்டங்களின் ஊடே தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். இத்தகைய வரலாற்றுச் சூழலில்தான், முதுகுளத்தூர் மற்றும் கமுதி ஆகிய ஊர்களுக்கு இடையிலுள்ள பேரையூர் என்ற கிராமத்தில், இம்மக்களின் தலைவராகயிருந்த பெருமாள் பீட்டர், "பூ வைசிய இந்திரகுல சங்கம்' என இம்மக்களை ஒருங்கிணைப்பதில் வடிவம் கண்டார்.
இந்தியாவின் ஏனைய பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கங்கள் வளரத் தொடங்கியிருந்த 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சற்றும் தளராத அளவில் ராமநாதபுரம் நிலப் பகுதியிலும் மள்ளர் சமூகம் தனித்துவத்துடன் செயல்பட்டு வந்தது. அச்சு, எழுத்து, பதிப்பு ஆகிய துறைகள் குறித்த போதிய விழிப்புணர்வும் அறிமுகமும் கிடைக்கப் பெறாததால், இம்மக்களின் பல்வேறு போராட்ட நிகழ்வுகள் வரலாற்றில் பதியப் பெறாமல் போயின. இத்துறைகளைக் கைப்பற்றியிருந்த சாதி இந்துக்கள் – அவர்களின் முதன்மை எதிரிகளாயிருந்த, இம்மக்களின் நிகழ்வுகளையோ, தரவுகளையோ பதிவு செய்யாமல் போனதில் ஆச்சரியம் எதுவு மில்லை. பின்னாளில் முற்போக்கு அடையாளங்களுடனும், நடுநிலை உணர்வுகளுடனும் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் பதிவுகளும் இம்மக்களை திட்டமிட்டே புறக்கணித்தன.
இந்தியத் துணைக்கண்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவரும் பேரறிஞருமான அம்பேத்கர், மகாராட்டிராவின் அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங் களின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த காலகட்டத்தில், தென் தமிழகத்தின் அரசியல் தலைநகரமாக விளங்கி வரும் மதுரை மாநகருக்கு அவரை அழைத்து வந்து மாநாடு நடத்தியவர், தென்மேற்கு மாவட்டங்களில் மள்ளர் மக்களை ஒருங்கிணைத்த தலைவர் பாலசுந்தரராஜ் அவர்கள். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து வந்த மள்ளர் சமூகத்தினரின் போராட்டங்கள், ஒருங்கிணைக்கப்படாமல் தகவல் தொடர்பு என்ற நிலையில் மட்டுமே இருந்தன.
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள், தங்கள் தகவல் தொடர்புகளுக்கு உட்பட்ட எல்லைக்குள் அமைப் பாகத் தங்களை திரட்டிக் கொண்ட காலம் எனலாம். தமிழகத்தின் அட்டவணைச் சாதியினரில் பெரும்பான்மையினராக இருக்கும் பள்ளர், பறையர், சக்கிலியர் என அறியப்படும் சமூகத்தினர், தாம் வாழுமிடங்களில் – தேவைக்கொப்பவும் சூழலுக்கேற்பவும் சுய சாதி அடையாளத்துடன் தங்களை அணியமாக்கிக் கொண்டனர். சாதி இந்துக்களின் கூட்டு சேர்ந்த ஒடுக்குமுறைகள் நிகழும் போதெல்லாம், இம்மக்கள் சாதி கடந்து, தங்களுக்குள் ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஆயினும், சாதி எனும் வடிவம், அதன் உள்ளார்ந்த எதிர்மறையான பண்புடனேயே வேர் கொண்டிருப்பதால், பட்டியலின சாதிகள் தனித்தனியான சமூக அமைப்புகளாகவே வரலாற்றுப் போக்கில் வளர்ந்து வந்தன.
ஆங்கிலேயர் தமது ஆட்சியதிகார சமூக ஒழுங்குகளைப் பேண, பார்ப்பனர் மற்றும் சாதி இந்துக்களை மட்டுமின்றி, அனைத்து சமூகங்களையும் தங்கள் சட்ட வரம்புகளுக்குள் வகைப்படுத்தினர். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, சாதி வாரிக் கணக்கெடுப்பு ஆகியவைகூட, அவர் தம் நிர்வாக வசதிகளுக்காக பின்னாளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே. அவ்வகையில்தான், ராமநாதபுரம் மாவட்டத்தில் பாளையக்காரர்களாகவும், முதன்மை ஆதிக்க சாதியினராகவும் இருந்த முக்குலத்தோர் சாதியினர், சிறு அளவிலான குறுநிலப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் "நாடு' எனும் கட்டமைப்பை மய்யப்படுத்தி, பகுதி அளவிலான சாதி சங்கங்களாகப் பதிவு செய்து கொண்டனர்.
சமூகத் தளத்தில் சாதி இந்துக்கள் முதன்மைப் பாத்திரம் வகிக்கத் தொடங்கிய, ஆங்கிலேயரின் நவீன ஆட்சியின் காலகட்டமான 1910 – 20களில்தான் காந்தியின் வருகையோடு காங்கிரசு புதிய வடிவம் பெற்றதும், தமிழகத்தில் "பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம்' தொடங்கப்பட்டதும், ராமநாதபுரத்தில் "ஆப்பநாடு மறவர் சங்கம்' பதிவு செய்யப்பட்டதும் நடந்தேறின என்பது ஒப்புநோக்கத்தக்கது. பார்ப்பனர்களுக்கு இணையாக சமூக – பொருளாதார – அரசியல் தளங்களில் சாதி இந்துக்கள் தங்களை நிறுவிக் கொள்ள முயன்றதன் பின்னணியில், துணைக் கண்டம் முழுவதும் உழைக்கும் வர்க்கப் பிரிவினர் குறிப்பாக, தொல்குடி சமூகங்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படும் நிலையை எய்தினர். ஆயினும், இத்தகைய சூழலைக் கடக்க வேண்டிய நிர்பந்தம் தொல்குடி மக்களுக்கு இருந்தது.
தன்னிறைவு அடையாதிருந்த தொல்குடி சமூகங்களின் தற்சார்பு வாழ்க்கையும், சாதி இந்துக்களின் நவீன நிறுவனமயமாக்கலால் சீர்குலைக்கப்பட்டதன் விளைவாக, ஒடுக்குமுறையும் சுரண்டலும் சமூகக் கட்டுமானத்தின் நிரந்தர விதிகளாக மாறின. ஆங்கிலேயருக்கு எதிரான பார்ப்பனர் மற்றும் சாதி இந்துக்களின் அதிகாரப் போட்டியே, இந்தியத் துணைக்கண்ட விடுதலைப் போராட்டமாக முன்மொழியப்பட்டது. இது, தொல்குடி சமூகங்களின் மீதான சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமைக் கொடுமைகளை மூடி மறைக்கும் திரையாக வலுப்பட்டது.
ஆனால் ஜோதிபா புலே, நாராயணகுரு போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் முன்னெடுத்த வேலைத் திட்டங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பின் தொடர்ச்சியாக, தென் இந்தியாவில் தந்தை பெரியாரும் துணைக்கண்ட அளவில் அண்ணல் அம்பேத்கரும் இயங்கத் தொடங்கியிருந்தனர். துணைக்கண்ட தொல்குடி சமூகங்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக அம்பேத்கர் மட்டுமே இருந்தார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தென் தமிழகத்தில் குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் தொல்குடி சமூகங்களின் உரிமைப் போராட்டங்களுக்கான அடையாளமாக, மள்ளர் சமூக இயக்கம் வேர்கொள்ளத் தொடங்கியது. 1922இல் அதாவது, "ஆப்பநாடு மறவர் சங்கம்' தொடங்கப்பட்டதன் உடனடி எதிர்வினையாக, "பூவைசிய இந்திர குல சங்கம்' தனது முதல் மாநாட்டை முதுகுளத்தூர் வட்டம் செங்கோட்டைப்பட்டி எனும் கிராமத்தில் நடத்தியது. இதன் மூன்றாவது மாநாடு 6.6.1923 அன்று நடத்தப்பட வேண்டிய அளவுக்கு, சாதி இந்துக்களின் குறிப்பாக, மறவர்களின் சமூக ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்திர குல சங்கம், இப்பகுதி வாழ் மள்ளர் சமூகத்தினரை ஒருங்கிணைப்பதையும், நெறிப்படுத்துவதையும் தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. மறவர்களின் சமூக மேலாதிக்கத்திலிருந்தும், வன்முறை நடவடிக்கைகளிலிருந்தும் தம் மக்களைப் பாதுகாப்பதில் பெருமாள் பீட்டர் அவர்களின் முழுமையான அக்கறை, வரலாற்றில் பதிவு செய்யப்படாமலேயே இருக்கிறது. அவரின் அறிவார்ந்த செயல்பாடுகள், மள்ளர் சமூகத்தினரின் வாழ்வியல் பண்புகளைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன.
இந்திர குல சங்கம் பதிவு செய்யப்பட்ட இரண்டு மாதங்களில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் எனும் கிராமத்தில் 9.10.1924 அன்று பள்ளி ஆசிரியரான வேதநாயகம் – ஞானசவுந்தரி ஆகியோரின் மகனாகப் பிறந்தார் இம்மானுவேல் சேகரன். தனது 18 ஆவது வயதிலேயே "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கெடுத்து, மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்தார். இதம்பாடல் கிராமத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியரான அமிர்தம் கிரேஸ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் பிறந்தனர். 1945இல் இந்திய ராணுவத்தில் ஹவில்தார் மேஜராகப் பணியில் சேர்ந்தார். பெருமாள் பீட்டர் அவர்களின் கடைசி மகனான திரு. வில்லியம் அவர்களின் பள்ளித் தோழரான இம்மானுவேல் சேகரன் பின்னாளில், சமூக அக்கறை கொண்டு பெருமாள் பீட்டரின் அரசியல் வாரிசாக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேக்கம்பட்டி பாலசுந்தர்ராஜ் அவர்கள் அண்ணல் அம்பேத்கரை அழைத்து மதுரையில் 29.12.1946 அன்று நடத்திய தேவேந்திர குல வேளாளர் சங்க மாநாட்டில், பெருமாள் பீட்டரோடு இம்மானுவேல் சேகரனும் கலந்து கொண்டார் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அம்பேத்கரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டும், பெருமாள் பீட்டரின் வேலைத் திட்டங்களில் ஒன்றியும், ராமநாதபுரம் பகுதிவாழ் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டும் தனது ராணுவப் பணியைத் துறந்து விட்டு, 1951இல் நேரடியான சமூகப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1953 இல் ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை உருவாக்கி, மள்ளர் சமூகத்தினரை மட்டுமல்லாமல், அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கியதாக அவரின் சமூக விடுதலைப் போராட்டங்கள் உருவெடுத்தன. அம்பேத்கரின் பிறந்த நாள் அன்று, ராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டினை நடத் தினார். சாதி ஒழிப்பு, விதவை மணம், கலப்பு மணம் ஆகியவற்றை வலியுறுத்தும் தீர்மானங்களை மாநாட்டில் நிறைவேற்றினார்.
26.5.1954 அன்று இரட்டைக் குவளை ஒழிப்பு மாநாட்டை அருப்புக் கோட்டையில் நடத்தினார். 2.10.1956 அன்று, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பங்கேற்பு மாநாட்டை முதுகுளத்தூரில் முன்னெடுத்தார். 6.12.1956 அன்று அண்ணல் அம்பேத்கரின் மறைவையொட்டி மாபெரும் இரங்கல் கூட்டத்தை நடத்தினார். அருந்ததியர் சிலர் மீது மறவர் சமூகத்தினர் நடத்திய வன்முறைக்குப் பதிலடி தரும் விதமாக, மள்ளர் சமூக இளைஞர்களைக் கொண்டு திருப்பித் தாக்கிய அவரின் செயல்பாடு, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின்பால் அவர் கொண்டிருந்த அன்பைப் புலப்படுத்தும். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தனது சமூக விடுதலைப் போராட்டங்களுக்கு ஆளும் கட்சியாகயிருந்த காங்கிரசு அரசும், முதலமைச்சராகயிருந்த காமராசரும் உறுதுணை யாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையே, அவரை காங்கிரசு கட்சியோடு இணைத்தது.
1957 இல் பசும்பொன் முத்துராமலிங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அவர் பதவி விலக, மறு தேர்தல் நடந்தது. காங்கிரசுக்கு ஆதரவாக இம்மானுவேல் பிரச்சாரம் செய்தார். ஆனால், பார்வர்டு பிளாக் வேட்பாளரான சசிவர்ண (தேவர்) வெற்றி பெற்றவுடன், மறவர்கள் முதுகுளத்தூர் பகுதியில் வன்முறையில் இறங்கினர். தேர்தலில் தமக்கு எதிராக வாக்களித்த மள்ளர் சமூக மக்களை குறிவைத்துத் தாக்கத் தொடங்கினர். இம்மோதலில் மள்ளர் சமூகத்தினர் 42 பேர் கொல்லப்பட்டனர்.
1957 செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முத்துராமலிங்கம் வந்தபோது, மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை தெரிவித்த நிலையில், இம்மானுவேல் சேகரன் தனது மக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, அத்தகைய மரியாதையைத் தரவில்லை. மேலும், தன்னைக் குறைவு படுத்திப் பேசிய முத்துராமலிங்கத் (தேவர்) துடன் சரி நிகராக நின்று, இம்மானுவேல் வாதம் புரிந்தது, மறவர் சமூகத்தினர் அவரை அடுத்த நாளே படுகொலை செய்யும் அளவிற்குத் திட்டமிடத் தூண்டிய நிகழ்வாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், 33 வயதேயான இம்மானுவேலின் துணிவும், எதிர்ப்பு மனநிலையும், சுயமரியாதை உணர்வுமே அவரை இன்றைய நாளிலும் – மள்ளர் சமூக மக்களின் இணையற்ற தலைவராக இருத்தியுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு எதிராக, அரசியல் அரங்கில் இம்மானுவேல் சேகரனை களப்பலி கொண்ட காங்கிரசு கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திடம் ஆட்சியை பறிகொடுத்த பிறகு, மள்ளர் சமூக மக்களை நாளடைவில் கைகழுவி விட்டது. ஆனால், பசும்பொன் முத்துராமலிங்கத்தின் மரணத்திற்குப் பிறகு, திராவிடக் கட்சிகளின் பொறுப்புகளைக் கைப்பற்றிக் கொண்ட மறவர் சாதியினர், ஆளும் வர்க்கத் துணையோடு மள்ளர் மக்களின் மீதான வன்முறைகளைத் தொய்வின்றி தொடர்ந்தனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி மற்றும் அமைச்சுப் பொறுப்புகளில் இடம்பெறத் தொடங்கிய பிறகு, மறவர், கள்ளர், அகமுடையார் சாதியினரிடையே ஏற்கனவே நிலவி வந்த சமூக ஒருங்கிணைவு வலுவடைந்து, "முக்குலத்தோர்' எனும் முழக்கத்தின் மூலம் அதிகார மய்யமாக அவர்களை வளர்த்தெடுத்தது. தி.மு.க.விலிருந்து நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் விலகி, அ.இ.அ.தி.மு.க என்ற தனிக் கட்சியைத் தொடங்கியபோது, தென் தமிழகத்தில் அக்கட்சியின் அடித்தளமாக இச்சாதியினரே பங்கெடுத்தனர். எம்.ஜி.ஆர். முதலமைச்சராகப் பணியாற்றிய காலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அரசுப் பதவிகளிலும் – ரெவின்யூ, காவல் துறை போன்ற அதிகாரப் பொறுப்புகளிலும் திட்டமிட்டு இச் சாதியினர் நுழைந்தனர். எம்.ஜி.ஆர். அவர்களுக்கான கதவைத் திறந்தே வைத்திருந்தார்.
1957க்குப் பிறகு, தற்காப்பு நிலையிலிருந்து முன்னேறி, எதிர்த் தாக்குதல் என்ற அளவில் மீண்டும் செயல்பட வேண்டிய சூழல் மள்ளர்களுக்கு 1982இல் ஏற்பட்டது. "முக்குலத்தோர்' சாதியினரில் ஒன்றான அகமுடையார் சாதியினர், ராமநாதபுரம் நகரில் மள்ளர் சாதியினரோடு மோதலில் இறங்கி, அம்மக்களின் பதிலடியை எதிர்கொள்ள இயலாமல், மறவர் சாதி வெறியர்களைத் துணைக்கழைத்ததன் விளைவாக, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதுமான மோதலாக 82 – 83 ஆம் ஆண்டுகளில் வெடித்தது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் தொடர்ந்து இரு ஆண்டுகளும் மோதல்கள் நிகழ்ந்தன. ராமநாதபுரம் மேல்கீழ்கரை எனும் ஊரில் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று திரும்பிய மள்ளர் சமூக இளைஞன் ஒருவர் "ஷû' அணிந்து சென்றதை, அவ்வூரிலிருந்த மறவர் சமூகத்தினர் அனுமதிக்காததன் விளைவாக எழுந்த பிரச்சனையில், மறவர்களுக்கும் மள்ளர்களுக்கும் இடையிலான போர் 1985 – 86 ஆம் ஆண்டுகளில் மீண்டும் தொடர்ந்தது. இம்மோதலில் இரு தரப்பினரும் சம அளவில் இழப்புகளைச் சந்தித்தனர். சில கிராமங்களில் வலு குறைந்திருக்கும் பிரிவினர் தொடர்ந்து வாழ இயலாமல் இடம் பெயர வேண்டி வந்தது.
1982 – 83 மோதல்களின் காலகட்டத்தில், மள்ளர் சமூகத்தினரின் தலைவராக உருவானவர்தான் ஜான் பாண்டியன். 1989இல் போடி – தேவாரம் பகுதியில் நிகழ்ந்த, மள்ளர் சமூகத்தினருக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையிலான மோதல்களின்போது, மிகுந்த கவனம் பெற்றவராக இவர் இருந்தார். 1982 முதல் 1992 வரையான பத்து ஆண்டுகளில் நிகழ்ந்த மோதல்களில் மள்ளர் சமூகத்தினருக்கு ஏற்பட்ட இழப்புகள் அதிகமெனினும், சாதி இந்துக்களின் கூட்டு ஒடுக்குமுறைகளை பணபலம், படைபலம், அதிகார மய்யம் எதுவுமின்றி எதிர்த்து களம் கண்டனர். சுயமரியாதையான வாழ்வுக்கு அளப்பரிய ஈகம் புரிந்தனர். இக்காலகட்டத்தின் அரசு மற்றும் சாதி இந்துக்களின் முழு எதிர்ப்பையும் முறியடிக்கும் வகையில், மள்ளர் சமூகத்தை வழிநடத்தியதில் ஜான்பாண்டியனின் பங்கு மதிக்கத்தக்கது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது கட்சியைக் கைப்பற்றிய ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். ஒரு நடிகரின் வாரிசாக ஒரு நடிகை என்ற அளவில் மட்டுமில்லாமல், திராவிடக் கட்சி ஒன்றின் தலைமையைக் கைப்பற்றிய பார்ப்பனராகவும் ஜெயலலிதா இருந்தார். ஜெயலலிதாவின் நிழலாக – உற்ற தோழியாக – அரசியல் ஆலோசகராக அன்றிலிருந்தே செயல்பட்டு வந்த சசிகலா "நடராஜ ன்' கள்ளர் சாதியைச் சேர்ந்தவராக இருந்ததும், அ.தி.மு.க.வின் அடித்தளமாக முக்குலத்தோர் சாதியினர் வலுப்பெற்றிருந்ததும் தற்செயலான ஒன்றாகக் கருத முடியாது. ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை "சசிகலா' நடராஜன் திட்டமிட்டுக் கைப்பற்றிய பின், அ.தி.மு.க. முக்குலத்தோரின் காலடியில் கிடத்தப்பட்டது. இச்சூழலில் தான் 1991 இல் நிகழ்ந்த ராஜிவ் காந்தி படுகொலை நிகழ்வு, 90 விழுக்காடு பெரும்பலத்துடன் ஜெயலலிதாவை அரியணையில் ஏற்றியது.
ஜெயலலிதா – சசிகலா கூட்டணியின் ஆட்சி அதிகாரம், முக்குலத்தோர் சாதியினருக்கான அனைத்து கதவுகளையும் திறந்து விட்டது. காவல் துறை அவர்களின் ஏவல்துறையாக மாற்றப்பட்டது. தங்கள் சாதியினரின் மேலாதிக்கத்தை வரலாற்று ரீதியாக எதிர்த்துக் களமாடி வந்த மள்ளர் சமூகத்தினரை ஒடுக்கி, முடக்கி வைக்க வேண்டும் என்பதை தங்கள் வேலைத் திட்டங்களில் முதன்மையானதாக, முக்குலத்தோர் முடிவாக்கினர்.
ஆட்சி அதிகாரங்களில் விரிவடைந்த ஊழல், மதுபானக் கடைகளின் உரிமம், உள்ளாட்சி மற்றும் மாநிலத் திட்டங்களின் பணி உரிமம், அரசு வேலை வாய்ப்புகளை கொல்லைப்புறமாகக் கைப்பற்றல், கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து, சொத்துகளை மிரட்டிக் கையகப்படுத்துதல், கள்ளச் சாராய விற்பனை, ஆற்று மணல் கொள்ளை என சட்டவிரோத வழிகள் அனைத்திலிருந்தும் தமக்கான பொருளாதார பலத்தை பெருக்கிக் கொண்டனர். அரசு எந்திரத்தின் துணையும் காவல் படைகளின் இணக்கமும் முக்குலத்தோர் சாதியினருக்கு, பிற சமூகங்கள் அச்சத்துடன் அடிபணிய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.
சசிகலா நடராஜனின் சாதியாதிக்க பின்புலத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வந்த ஜெயலலிதா, 1995 இல் மள்ளர் சமூகத்தினரை ஒடுக்கி அழிக்க வேண்டுமென்ற சதித் திட்டத்தின் செயல் வடிவத்தை கொடியங்குளத்தில் அரங்கேற்றினார். இக்கிராம மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டும், உடைமைகள் அழிக்கப்பட்டும், சேகரிப்புகள் கொள்ளையடிக்கப்பட்டும் இம்மக்கள் நிராதரவாக்கப்பட்டனர். குடிநீர் கிணற்றில் நஞ்சு கலக்கப்பட்டது. சாதி வெறியர்களும் காவல் படைகளும் இணைந்து – "இன அழிப்பு' என்று சொல்லத்தக்க அளவில் கொடூரங்களை கட்டவிழ்த்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைப்பு வடிவம் கொண்டிருந்த மள்ளர் சமூகத்தினரின் பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, "தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு' என 90களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இதன் தலைவராகப் பொறுப்பிலிருந்த மருத்துவர் கிருஷ்ணசாமி, கொடியங்குளம் சாதி வெறி வன்முறைக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தினார். இப்போராட்டங்களை ஒருங்கிணைத்தும், கீழ்மட்ட அளவில் பரவலாக்கம் செய்தும் தமிழக அளவில் பல்வேறு அமைப்புகளையும் கவனம் குவிக்கச் செய்தவராக, தியாகி இம்மானுவேல் பேரவையின் பொதுச் செயலாளர் சந்திரபோஸ் அவர்களின் உழைப்பு போற்றத்தக்கது.
1997இல் தமிழ்நாட்டின் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் பொதுத் தொண்டாற்றிய பல்வேறு சமூகத் தலைவர்களின் பெயர்களை, ஆட்சியிலிருந்த கருணாநிதி அரசு சூட்டியது. அவ்வகையில் விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு, "வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம்' தொடங்கப்பட்டது. அனைத்து சாதித் தலைவர்களின் பெயர்களையும் ஏற்றுக் கொண்ட சாதி இந்துக்கள், மள்ளர் சமூக மக்களின் குறியீடாக விளங்கும் சுந்தரலிங்கனார் பெயர் சூட்டப்படுவதை ஏற்றுக் கொள்ளாமல், விருதுநகரில் கலவரத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்புத் தெரிவித்து களத்திற்கு வரவேண்டிய கட்டாயத்திற்கு மள்ளர் சமூகம் ஆளானது. தென் தமிழகத்தில் ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும் பற்றிப் பரவிய சாதி மோதல் இது எனலாம். மள்ளர் சமூக மக்களுக்கு எதிராக, அனைத்து சாதி இந்துக்களும் ஓரணியில் நின்றனர்.
சாதி இந்து தமிழ் மனத்தில் குடி கொண்டிருக்கும் "தீண்டாமை' என சமூக ஆய்வாளர்களால் "சுந்தரலிங்கம்' பெயர் புறக்கணிப்பு குறிப்பிடப்பட்டது. ஆனால், அது எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சொல்லாடலே. வீரன் சுந்தரலிங்கம், காலனியாதிக்க எதிர்ப்புப் போர் மரபில், பாளையக்காரனான கட்டபொம்முவின் தோளோடு நின்ற தளபதிகளில் ஒருவர். தன்னையே எரியூட்டிக் கொண்டு, ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை சாம்பலாக்கி, சர்வதேச சமூகங்களின் வரலாற்றில் "தற்கொலைப் படையணி' என்ற போராட்ட மரபை உருவாக்கியவர்.
கோழைத்தனத்தையும் துரோகத் தனத்தையும் தமது வாழ்வியல் பண்புகளாகக் கொண்டிருக்கும் சாதி இந்து தமிழ்ச் சமூகம், தன்னை இழந்தாவது மண்ணைக் காக்க வேண்டுமென்ற சங்ககால தமிழ்ச் சமூக வீரமரபை உயர்த்திப் பிடித்த ஒருவனைக் குறியீடாக ஏற்றுக் கொள்ள மறுத்தது என்பதே, மாவீரன் சுந்தரலிங்கம் என்ற பெயர் மறுதலிக்கப்பட்டதற்கான உள்ளார்ந்த உண்மை வெளி. சமரசமில்லாத மள்ளர் சமூக மக்களின் போராட்ட மரபை எதிர்கொள்ள முடியாத கருணாநிதி அரசு, சுந்தரலிங்கம் உள்ளிட்ட அனைத்துப் பெயர்களையும் திரும்பப் பெற்றது. தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு இரண்டு கண்களும் பாழாகட்டும் என்ற "உன்னத' நோக்கை தமிழ்ச் சமூகம் ஈடேற்றிக் கொண்டது.
மதுரை மாவட்டம் உத்தப்புரம். இங்கு மள்ளர் சமூகத்தினரோடு ஒரே ஊரில் வாழும் சாதி இந்துக்கள் (வெள்ளாளர்) ஊரின் நடுவில் சுவர் எழுப்பி, மள்ளர் குடியிருப்பை தனிமைப்படுத்தி இருக்கின்றனர். இச்சுவரை இடிக்க வலியுறுத்தி, பல்வேறு ஒடுக்கப்பட்டோர் இயக்கங்களும் புரட்சிகர அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நீதி கேட்டு களத்தில் இறங்கிப் போராடிய மள்ளர் சமூகத்தினர் மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. சுரேஷ் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். "தீண்டாமைச் சுவர்' என வர்ணித்து, இப்பிரச்சினையின் மீது பொது சமூகத்தை கவனம் குவிக்கச் செய்ததில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடத்தக்க பங்காற்றியது.
சாதி இந்துக்களின் அரசு, சுவரை இடிக்கவில்லை. மள்ளர் சமூகத்தினரின் கோரிக்கை குப்பையில் வீசப்பட்டுள்ளது. 2008 முதல் 2010 வரையான இரண்டே ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் சாதி வெறியர்கள் மற்றும் காவல் துறையால் அங்கும் இங்குமாக இருபதுக்கும் மேற்பட்ட மள்ளர் சமூகத்தினர் தொடர்ந்து கொல்லப்பட்டு வந்தனர். சில இடங்களில் மள்ளர் சமூகத்தினர் திருப்பித் தாக்கவும் முடிந்தது. ஆனால், தாமிரபரணி படுகொலைகளுக்குப் பிறகு, சாதி இந்துக்கள், அரசு எந்திரம், காவல் படைகள் ஆகியோருக்கு இடையேயான உறவு வலுப்பட்டிருக்கிறது. மள்ளர் சமூக மக்களை தனித் தனியாக எதிர்கொள்வதில் இம்மூன்று நிறுவனங்களுக்கும் இருக்கும் உளவியல் அச்சமே, இவர்களைக் கூட்டாக செயல்பட வைக்கிறது.
தமிழக ஓட்டுப் பொறுக்கி அரசியலின் தலைமைக் கூலிப்படைகளான முக்குலத்தோரை முதன்மைப்படுத்தும் சசிகலா – ஜெயலலிதா கூட்டணி, மூன்றாவது முறையாக மே, 2011 முதல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு முக்குலத்தோர் சாதியினரின் வாக்கு வங்கியை வைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., தாமிரபரணிக் கரையில் மள்ளர் சமூகப் போராளிகளை நிராயுதபாணிகளாகச் சுட்டுக் கொல்லும்போது, மூன்றில் இரண்டு பங்கினரை அடித்தளமாகக் கொண்டிருக்கும் அ.தி.மு.க., முக்குல சாதியினரின் மனம் குளிர வைக்கத் திட்டமிட வேண்டாமா? இச்சதிகாரர்கள் தங்கள் திட்டத்தை நிகழ்த்தி முடிக்கத் தேர்ந்தெடுத்த நாள், இம்மானுவேல் சேகரனை அவர்கள் படுகொலை செய்த நாள்.
இருமடங்கு ஓட்டுவங்கி எனும் போது இன்பமும் இரட்டிப்பாக இருக்க வேண்டாமா? இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் நோக்கி, 90 களின் தொடக்கத்தில் சில ஆயிரங்களில் அணிவகுத்த மள்ளர் சமூகம், அவரது 50 ஆம் ஆண்டு நினைவு நாளில் பல்லாயிரக்கணக்கில் ஆர்ப்பரித்தது. வரலாற்றின் நினைவுகளில் சாதிவெறியர்களுக்கு எந்நாளும் அச்சமூட்டிக் கொண்டிருக்கும் – இழப்பதற்கு இனியும் ஏதுமற்ற – மள்ளர் சமூகம் எண்ணிறந்த அளவில் கூடிக் களிப்பதை சாதிவெறிக் கூட்டம் பொறுத்துக் கொள்ளுமா என்ன? தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஜான் பாண்டியன், ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைவதற்குத் தடை விதித்து, கைது செய்து, அவரது ஆதரவாளர்கள் அவரை விடுவிக்க வேண்டுமென பரமக்குடியில் மறியலில் ஈடுபட்டபோது, தங்கள் சதித்திட்டத்தின் காய்களை நகர்த்தத் தொடங்கினர்.
ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது ஒருபுறம் இருக்க, இருநூறு, பேருக்கும் குறைவான அளவில் "மறியலில்' ஈடுபட்டிருந்தவர்களை பேசித் தீர்த்தே கலைந்து செல்லவிட்டிருக்கலாம்; கைது செய்து அப்புறப்படுத்தியிருக்கலாம்; எல்லை மீறினால் தடியடியும் செய்து கலைத்திருக்கலாம்; திருப்பித் தாக்கினால் துப்பாக்கியால் வானில் சுட்டு அச்சமூட்டியிருக்கலாம்; கண்ணீர் புகை குண்டுகள் எறிந்திருக்கலாம். கூட்டங்களை கலைப்பதற்கான காவல் துறையின் ஒழுங்கு விதிகள் கால இடைவெளிகளில், பொறுப்பான அதிகாரிகளின் முறையான அனுமதி பெற்று ஒன்றன்பின் ஒன்றாக நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
இந்த கால இடைவெளி, கூட்டத்தினரின் உளவியலில் பின்வாங்கிச் செல்ல வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், நடந்தது என்ன? கடைப்பிடித்திருக்க வேண்டிய ஒழுங்கு விதிகளை காவல் துறையினர், கால இடைவெளிகள் ஏதுமின்றி, ஒரே நேரத்தில் – சில நிமிட நேரங்களுக்குள் மீறி செயல்பட்டனர். வாய்ப்புக்காக காத்திருந்தவர்களைப் போல, குறிவைத்து சுடத் தொடங்கினர். சாதி வெறியர்களின் மனம் குளிர வைக்கும் சதித் திட்டங்களை அரங்கேற்றத் தொடங்கினர்.
“நண்பகல் 12.40 முதல் மாலை 5.15 மணி வரை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்'' ("பிரண்ட்லைன்' அக்டோபர் 7, 2011). ஏறத்தாழ நான்கரை மணி நேரம் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை என்ன? “வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கட்டடத் தொழிலாளி பாண்டி (வயது 60) கலவரம் செய்தவராகப் பிடிக்கப்பட்டு, காவல் துறையினர் கூட்டாகச் சேர்ந்து தாக்கியதில் – ஒரு காலும் ஒரு கையும் முறிக்கப்பட்டவராக மருத்துவமனையில் இருக்கிறார்'' ("பிரண்ட்லைன்' அக்டோபர் 7, 2011). 70 வயதான வெள்ளைச்சாமி என்ற ஓய்வு பெற்ற தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை கலவரச் சூழலில் இழுத்துச் சென்ற காவல் துறையினர் ஈவிரக்கமில்லாமல் தாக்கியுள்ளனர். சீருடை அணியாத ஒருவன் கூட, அக்காவல் கூட்டத்தின் நடுவே அவரைக் கடுமையாகத் தாக்கும் ஒளிப்படப் பதிவு சாட்சியமாக இருக்கிறது. “கை, கால்கள் உடைக்கப்பட்ட நிலையிலும் காவல் நிலையத்திற்கு இழுத்து வரப்பட்ட பலர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் முன்னும் கூட, மனிதாபிமானமில்லாமல் தாக்கப்பட்டனர்'' என "இந்து' பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார் வெள்ளைச்சாமி.
“நாலு மூலைக்கிணறு, கொடியங்குளம், தாமிரபரணி என ஒடுக்கப்பட்ட சமூக மக்களை குறிவைத்துத் தாக்கும். தலித் விரோத உளவியல், காவல் துறையில் மேலோங்கியுள்ளது'' என்கிறார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் சம்பத். “கடுமையான தடியடிப் பிரயோகம் செய்த பிறகும், துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது? எந்த அதிகார அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டது? மதுரையில் ஒரு காவல் அதிகாரி தனது கைத்துப்பாக்கியால் கூட்டத்தினரைச் சுட்டது சட்டவிரோதமான ஒன்று'' என்கிறார் பி.யூ.சி. எல். அமைப்பின் மதுரை பொறுப்பாளர் முரளி. பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பட்டியலின மக்களுக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் லதா பிரியகுமார், “காவல் துறை இப்பிரச்சனையை தவறாகக் கையாண்டுள்ளது. அப்பாவி மனித உயிர்கள் பலியாக காவல் துறையே காரணம். இடுப்புக்கு மேலே பலரும் சுடப்பட்டுள்ளனர். வாகனங்கள் எரியூட்டப்பட்டன என்கிறது காவல் துறை. அவற்றை திரும்ப வாங்கிக் கொள்ள முடியும். கொல்லப்பட்ட மனித உயிர்களை எவரும் கொண்டு வர முடியாது'' என தனது வருத்தத்தை தெரிவிக்கிறார் ("பிரண்ட்லைன்' அக்டோபர் 9, 2011).
துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தி முடித்த கையோடு பிரச்சனைக்குரிய பரமக்குடி மட்டுமல்ல, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடையுத்தரவை அரசு நிர்வாகம் பிறப்பித்தது. ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த 3000 காவல் படையினரோடு 24 கம்பெனி (2500 பேர்) தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் மற்றும் கமாண்டோ படை என, ஏறத்தாழ 7000 பேர் மாவட்டம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்களையே நியாயப்படுத்த முடியாத காவல் துறை, மதுரையிலும் இளையான்குடியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தியதை – திட்டமிட்ட சதிச்செயல் என்று தானே கூற முடியும்.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என குற்றம் சாட்டி 307 (கொலை முயற்சி), 324 (ஆபத்தான ஆயுதங்களை வைத்திருத்தல்), 435 (தீ வைத்தல், வெடிக்கும் பொருட்களை வைத்திருத்தல்), 427 (சொத்துகளை நாசமாக்குதல்), 147 (கலவரம் செய்தல்), 148 (கலவரம் செய்தல் மற்றும் ஆயுதங்கள் வைத்திருத்தல்), 149 (சட்டவிரோதமாகக் கூடுதல்) மற்றும் 174 (குற்றச் செயல்கள் புரிதல்) ஆகிய பிரிவுகளின் கீழ், 1500 பேர் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. இவர்களைக் கைது செய்ய வேண்டுமென, மள்ளர் சமூகத்தினர் வலுவாக இருக்கும் கிராமங்களில் சட்ட விரோதமாக தேடுதல் வேட்டை நடத்தியது, சசிகலா நடராஜன் ஆதரவு பெற்ற காவல் துறை.
துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட, கைது செய்து அழைத்து செல்லப்பட்டவர்களில் மூவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டையின் போது, மேலும் இருவர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களும் காயம்பட்டவர்களும் மனித உரிமைகளுக்கு மாறாக, விலங்குகளைப் போல தூக்கிச் செல்லப்பட்டு, மருத்துவமனையில் குவியலாகக் கிடத்தப்பட்டிருக்கின்றனர். படுகாயமுற்று மயக்கமடைந்திருந்த ஒருவர், இறந்தவராகக் கருதப்பட்டு, பிணவறையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் கூட, காவல் துறையினரின் விருப்பத்திற்கேற்பவே செயல்பட்டிருக்கின்றனர்.
இத்தனை கொடுமைகள் நிகழ்ந்த பிறகும், துளியும் பதற்றமின்றி, “தற்காப்புக்காகவும் பொதுச் சொத்துகளைப் பாதுகாக்கவும் தான் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்'' எனக் கூறி முதலமைச்சர் ஜெயலலிதா ("தினத்தந்தி' 12.09.2011) வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார். இது குறித்து மறுநாள் சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர், 9.9.2011 அன்று, மண்டலமாணிக்கம் அருகில் குண்டாற்றின் கரையில் நள்ளிரவில் மறவர் சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட, பச்சேரியைச் சேர்ந்த மள்ளர் சமூக மாணவன் பழனிக்குமார் "முத்துராமலிங்கம்' குறித்து சுவற்றில் இழிவாக எழு தியதே சமூகப் பதற்றம் நிலவக் காரணமாக இருந்தது என – முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போட நினைத்தார்.
ஆனால், ஜெயலலிதாவின் இந்தக் கூற்று, முக்குலத்தோர் சாதியினரின் உள்ளார்ந்த விருப்பமே, காவல் படைகளின் அட்டூழியம் என்பதை அம்பலப்படுத்துவதாக இருந்தது. மேலும், இதை உறுதிப்படுத்தும் விதமாக, “நன்றி! நன்றி! பரமக்குடியில் நடந்த கலவரத்தை ஒடுக்கிய மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கும், தென் மண்டல காவல் துறைக்கும் நன்றி! நன்றி! இவண் – தேவர் தேசிய பேரவை, தமிழ்நாடு'' என்ற பெயரில் சாதி வெறியர்கள் படுகொலைகள் நடந்த ஓரிரு நாட்களில் மதுரையில் சுவரொட்டி ஒட்டியிருந்தனர் (சாதி ஆணவத்தின் "நாகரிகம்' இதுதான்). “அவர் ஒரு ஜாதிக்கு மட்டும் முதலமைச்சர் அல்லர்; ஒரு சாராரை திருப்திப்படுத்த முதலமைச்சர் பேசுவது எங்களைப் புண்படுத்துகிறது. இது முழுக்கவும் காவல் துறையின் காட்டுமிராண்டித்தனம்'' என்று ஜான்பாண்டியனும் இக்கூற்றை கடுமையாக ("இந்தியா டுடே' செப்டம்பர் 28, 2011) விமர்சித்திருக்கிறார்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த மஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால், கர்ப்பிணியாக மாமியார் வீட்டிலிருக்கும் தனது மனைவியைப் பார்க்க பரமக்குடிக்கு வந்த இடத்தில் கொல்லப்பட்டவர். பல்லவராயநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், பரமக்குடியிலுள்ள தன் உறவினர்களுக்கு, தன்னுடைய மகனின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்த நேரத்தில் கொல்லப்பட்டவர். கீழக்கொடுமளூர் கிராமத்தைச் சேர்ந்த தீர்ப்புக்கனி, பரமக்குடி முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த மாணவர். பன்னீர்செல்வம், வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், காந்திபுரத்திலுள்ள தன் மகளின் வீட்டிற்கு வந்தவர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இவ்விருவரும் "அநியாயமாக'க் கொல்லப்பட்டவர்கள். இவ்வகையில் கொலை செய்யப்பட்டவர்களுக்கும் மறியல் பிரச்சனைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது ஒருபுறமிருக்க, கலவரச் சூழலை உருவாக்கி, இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளை கருப்பு நாளாகப் பதிந்து விட வேண்டுமென்ற முக்குல சாதி வெறியர்களின் அதிகாரச் சதி அல்லாமல் வேறென்ன?
“பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் வெளியிட்ட அறிக்கையிலோ, மறுநாள் சட்டசபையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது ஆற்றிய உரையிலோ, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் எத்தனைபேர் என்பதை முதல்வர் தெரிவிக்கவில்லை'' என்பதையும் "ஜுனியர் விகடன்' (21.9.2011) சுட்டிக்காட்டுகிறது. உண்மைதான். மதுரை அரசு மருத்துவமனையிலும், அப்பல்லோ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் தவிர, “இன்னும் நிறைய பேர் காயம்பட்டவர்கள். ஆனால், அரசு மருத்துவமனைக்கு வந்தால் கலவர வழக்கில் சேர்த்து விடுவார்கள் என்று அவர்களது உறவினர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு அவர்களை அழைத்துச் சென்றுவிட்டனர்'' என மதுரை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் ("ஜுனியர் விகடன்' 21.9.2011) கூறுவது போல, கணக்கில் வராதவர்களையும் சேர்த்தால் – காவல் படைகளின் கண்மூடித்தனமான (சதி) திட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
துப்பாக்கிச் சூடு நடந்த அன்றே, அரசுக்கு கண்டனமும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் இழப்பீடும் உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணையும் வேண்டுமெனக் குரல் கொடுத்தவர், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒருவரே. மறுநாள் துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், மதுரை மருத்துவமனையில் காயமடைந்திருப்பவர்களைப் பார்த்து ஆறுதல் கூறிய ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான வைகோ, ஜெயப்பிரகாஷ் எனும் இளைஞரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து, தானே முழு மருத்துவச் செலவையும் ஏற்றுள்ளார்.
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான தா. பாண்டியன், “காவல் துறையினரும் காயம் அடைந்துள்ளனர் என்றும் வாகனங்கள், பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் வந்த செய்தி கவலைக்குரியதாக இருக்கிறது. அமைதி தவழ வேண்டிய தமிழகத்தில் இந்த சம்பவங்கள் சாதிக் கலவரமாக வளர்ந்து விடாமல் உடனடியாக அமைதி நிலைநாட்டப்பட வேண்டும்'' என ஜெயலலிதாவே வெட்கப்படும் அளவுக்கு, தனது விசுவாசத்தைக் காட்டினார். கள்ளர் சாதியைச் சேர்ந்தவரான தா. பாண்டியன், காவல் துறையின் மீது கரிசனத்தைக் காட்டி, தனது சாதி (ஆதரவு) இந்து முகத்தை அம்பலப்படுத்தினார். இது இவருக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளராக இவரைப் போன்றவர்கள் இருப்பது வேதனைக்குரியதும், ஏளனத்திற்குரியதுமாகும். காவல் துறையின் வன்முறைகள் குறித்து, தமிழக சட்டப்பேரவையில் பேச முற்பட்டபோது, புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி அனுமதி மறுக்கப்பட்டதால், வெளிநடப்பு செய்தார்.
அவைக்குறிப்பில் இடம் பெற்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில், தானே முடிவுகளை எடுக்க வேண்டுமென்றே திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் ஜெயலலிதா. தன்னை துதிபாடும் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரான செ.கு. தமிழரசன் போல, தலித் தலைவர்கள் இருக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதியின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டதைப் போலவே, புதிய தமிழகம் கட்சியின் உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக மட்டுமே செயல்படவேண்டும் என அவர் எண்ணுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை, எழும் பிரச்சனைகளை பேசுவதை ஆளும் தரப்பினர் விரும்பவில்லை என்பதை இச்சூழல் தெளிவுபடுத்துகிறது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பல்வேறு கட்சியினரும் சந்தித்து திரும்பியிருக்கின்றனர். பா.ம.க., பா.ஜ.க., காங்கிரஸ், சி.பி.அய்., சி.பி.எம்., தி.மு.க. ஆகிய கட்சிகளின் குழுவினரும், பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மற்றும் மக்கள் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் பல குழுக்களாக சென்று, மக்களை சந்தித்து விட்டு அறிக்கைகள் தந்திருக்கின்றனர். ஏறத்தாழ அனைவருமே, காவல் துறையே துப்பாக்கிச் சூட்டிற்கு முழு பொறுப்பு ஏற்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி ஒருவரின் தலைமையிலான விசாரணை ஆணையத்தை பல கட்சியினரும் வலியுறுத்திய நேரத்தில், தே.மு.தி.க. வின் சட்டமன்ற துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் விசாரணையே தேவையில்லை எனக் கூறியிருப்பது, அக்கட்சியின் முக்குலத்தோர் சாதியினர் மற்றும் காவல் துறைக்கு ஆதரவான வெளிப்படையான நிலைப்பாடே.
தமிழ் உணர்வு, தமிழர் இனமானம் என ஆவேசமாகப் பேசி வரும் "நாம் தமிழர்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணமாக 1 லட்சம் அறிவித்துள்ள "மனிதாபிமானம்' கொண்ட தமிழக முதல்வர் இந்த நிவாரணத் தொகையை உயர்த்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினர் நலிவைப் போக்க வேண்டும்'' என அறிக்கை வெளியிட்டார் ("தினத்தந்தி' 14.9.2011).
கடந்த ஆகஸ்டு 24 அன்று, தமிழக சட்டப் பேரவையின் நிதிநிலை அறிக்கை விவாதத்தின்போது, “150 ஆண்டுகள் பாரம்பரியமிக்க தமிழகக் காவல் துறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானத்துடன் மக்கள் பிரச்சனைகளை அணுகும் விதத்தில் சீரமைக்கப்பட்டுள்ளது'' என ஜெயலலிதா பேசினார். சீமான் போற்றும் ஜெயலலிதாவின் மனிதாபிமானமும், ஜெயலலிதா போற்றும் காவல் துறையின் மனிதாபிமானமும் இதைவிடக் கொடூரமாக இனி வெளிப்படுமோ, என்னவோ? இவர்கள் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்வதன் உள்ளடக்கத்தை சாதியொழிப்பு, சனநாயக அரசியல், மனித உரிமைகள் ஆகியவற்றை உண்மையாகவும் நேர்மையாகவும் முன்னெடுப்பவர்கள் மட்டுமே உணர்ந்துள்ளனர். இவர்கள் சிறுபான்மையினரே!
பார்ப்பன சாதி இந்து சமூகத்தின் பெரும்பான்மையினரோ, ஒருவரையொருவர் அண்டிவாழும் பிழைப்புவாதத்தின் பொருட்டு, மனித மாண்புகளை உதட்டளவிலும், சாதி ஆதிக்க உளவியலை சிந்தனை முறையாகவும் கொண்டிருப்பவர்கள். சமச்சீர் கல்வி, ஆட்சியில் தாய்மொழியாக்கம், அறிவியல் சிந்தனைகள், "ரொபோடிக் டெக்னாலஜி' உட்பட நவீன தகவல் தொழிற் நுட்பம், பெண்களுக்கு சம உரிமைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்புகள், "திருநங்கைகள்' என்ற நாகரீக மரபு என தமிழ்ச் சமூகத்தில் முற்போக்கான கூறுகள் முன் வைக்கப்படும் நிலையில், ஒடுக்கப்பட்ட சமூகங்களை மட்டும் தனிமைப்படுத்துவதும் கொன்றொழிக்கத் துடிப்பதும், பார்ப்பன – சாதி இந்துக்களின் கூட்டுறவு சமூகத்தில் இம்மக்களுக்கு இடமில்லை என்பதையே உணர்த்துகிறது.
பார்ப்பனர்களின் அதிகாரம் ஓங்கத் தொடங்கிய பிற்காலச் சோழர்களின் சூத்திர ஒடுக்குமுறை ஆட்சி இன்னும் முடிவுக்கு வரவில்லை. அது, "பாப்பாத்தி' என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஜெயலலிதாவின் தலைமையில் புனரமைக்கப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டு தமிழ்ச் சமூக வாழ்க்கையிலும் நமக்கான இடம் கூலியும், கொத்தடிமைத்தனமும், நாதியற்ற படுகொலைகளுமே என்பதையும் – அதனின் மீண்டெ ழும் வழிகள் நம்மிடமேயன்றி, வேறொருவரிடத்திலும் அல்ல என்பதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் உணர வேண்டும்.
*****
இக்கட்டுரையில், தலித் மக்களைக் குறிக்க "மள்ளர்' என்ற சொல் கட்டுரையாளரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாதி இந்து சமூகம் இம்மண்ணின் தொல்குடிகளை – பறையர், பள்ளர், சக்கிலியர் (பஞ்சமர்) என பல நூற்றாண்டுகளாக, வெவ்வேறு பெயர்களை நம்மீது திணித்து இழிவுபடுத்தி வந்திருக்கிறது. இப்பெயர்களை ஏற்க மறுப்பதால்தான் நாம் "தலித்' என்ற சொல்லை – இந்தியா முழுவதும் உள்ள பட்டியல் சாதியினரைக் குறிக்கும் வகையில் பயன்படுத்துகிறோம்.
அதே நேரத்தில், பள்ளர், சக்கிலியர் என்பதற்கு மாற்றாக – இந்து மத அடையாளங்களிலிருந்து விடுபடாத – தேவேந்திரர், அருந்ததியர் என்ற பெயர்களைப் பயன்படுத்துவதிலும் நமக்கு உடன்பாடில்லை. இருப்பினும், சில தவிர்க்க இயலாத சூழலில், "தலித் முரசு' இதழில் பதிவு செய்யப்படும் சில கட்டுரையாளர்களின் கருத்தாக மட்டுமே இதை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அப்படியான கட்டுரைகளில்கூட, தலித்/பட்டியல் சாதியினர் என்றே தலைப்பிட்டு, நம் நிலைப்பாட்டை உணர்த்தி இருக்கிறோம்.
சமற்கிருதமயமாக்கலால் விளைந்த "தேவேந்திரர்' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் அதற்கு மாற்றாக அண்மைக் காலமாக "மள்ளர்' எனப் பயன்படுத்தப்படும் பெயரையும் நாம் ஏற்கவில்லை. இதுபோன்ற புதிய புதிய விளக்கங்களும், நுண் அடையாள அரசியலும், தங்களை மட்டுமே உயர்த்தி தனிமைப்படுத்திக் கொள்ளும் வரலாற்றுக் கண்ணோட்டங்களும் – அம்பேத்கரியத்தின் பாற்பட்டவை அல்ல. இத்தகைய கருத்தியல்கள், தலித் ஓர்மைக்கு குந்தகம் விளைவிக்கும் ஆபத்தை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. எனவே, நமக்கு உடன்பாடில்லாத நிலையிலும், கட்டுரையாளரின் கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படையிலேயே இதை நாம் அனுமதிக்கிறோம்.
– ஆசிரியர்