mtc strike 373

வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியில் அரசாங்கம் தொழில்துறை உறவுகள் சட்ட முன்வரைவை முன்வைத்துள்ளது. அது தொழில்துறை தகராறுகள் சட்டம் மற்றும் தொழிற்சங்கங்கள் சட்டம் ஆகிவற்றின் விதிகளை ஒன்றாக இணைக்கிறது. சில உடன்பாடான அம்சங்கள் இருந்தபோதும், அந்தச் சட்ட முன்வரைவு தொழிலாளர் உரிமைகளையும் தொழிற்சங்க உரிமைகளையும் மறுக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, சட்டவிரோத வேலைநிறுத்தங்களுக்காக தனிப்பட்ட தொழிலாளர்களுக்குத் தண்டனை விதிக்கவும், ஆனால் முதலாளிகளின் சட்டவிரோதக் கதவடைப்புக்கான அபராதத்தை ஒரு கூட்டு அமைப்புப் பொறுப்பேற்கச் செய்கிறது; இது பல ஏற்றத்தாழ்வான விதிமுறைகளில் ஒன்று மட்டுமே.

2014 தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதுமே, தொழில்துறையில் பெரிய மகிழ்ச்சி காணப்பட்டது. அதிகாரத்திற்கு வந்தபிறகு, பொருளாதார வளர்ச்சியே முதன்மையான குறிக்கோளாக இருக்கும் என்று பிரதமர் பல அமைப்புக்களின் மேடைகளில் திரும்பத் திரும்பக் கூறிவந்தார். இது தொழில்துறை மற்றும் வணிகத்தை ஊக்குவிக்கும், அதன் பங்குக்கு அது வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இதனால் பெரும் வளர்ச்சி ஏற்பட்டு, அதனால் தொழிலாளர்களுக்கு பயன்கள் கசிந்துவரும். அதேநேரத்தில், அரசாங்கம் வேலையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் (தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் என்று வாசிக்கவும்) அளவுக்கு மிகுதியாக இருப்பதாகவும் அவை மாற்றப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் வலியுறுத்தியது.

முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான ராஜஸ்தான் அரசாங்கம், தொழிலாளர் பாதுகாப்புத் தொடர்பான சட்டங்களும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது குறித்த சட்டங்களும் மிகவும் தாராளமாக இருக்க வேண்டும், அப்போதுதான் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று அறிவித்து முன்கையெடுத்தது. தொழிற்சாலைகள் சட்டம், தொழில்துறைத் தகராறுகள் சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டம் ஆகியவை கொடுக்கும் நெருக்கடியிலிருந்து முதலாளிகளை விடுவிக்கவும், தொழில்துறையில் முதலீட்டை அதிகரிக்கவும், அதன்மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யவும் ஏற்றவகையில் திருத்தப்பட வேண்டும் என்று 2014 ஜூலையில் அந்த மாநில சட்டப்பேரவை தீர்மானித்தது.

தொழிலாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பை அகற்றி, தொழிர்சாலைகளை விருப்பம் போல மூடுவதற்கு அனுமதிப்பது, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்பது புதிதோ அல்லது அசலானதோ அல்ல. உலக வங்கியின் 1995 க்கான உலக மேம்பாட்டு அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: லத்தீன் அமெரிக்கா, தெற்கு ஆசியா, மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் தொழிலாளர் சட்டங்கள் தொல்லைதரும் வேலைப்பாதுகாப்பு ஒழுங்குவிதிகளைக் கொண்டவையாக இருக்கின்றன, அவை தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் .முடிவுகளை மாற்றமுடியாதவகையில் அமைந்துள்ளன; மேலும் தொழிலாளர் பிரதிநிதித்துவ முறையும் தகராறு தீர்க்கும் முறையும் பலநேரங்களில் அரசாங்க முடிவுகளை முன்கூட்டியே அறியமுடியாதவகையில் இருக்கின்றன, அவை எதிர்கால தொழிலாளர் செலவு எவ்வளவு பிடிக்கும் என்பதை நிறுவனங்கள் மதிப்பிட முடியாமல் செய்கின்றன. அளவுக்கு மிகுதியான பாதுகாப்பை வழங்கும் விதிகள் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கமாட்டா, ஏனென்றால் ஒப்பீட்டளவில் குறைந்த கூலிக்கு ஆட்களை நியமிப்பது எளிதாக இருக்கலாம் என்றாலும், தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதை ஏறத்தாழ சாத்தியமில்லாமல் செய்கிறது என்று அது விளக்குகிறது. இது வக்கிரமான தர்க்கமாகத் தோன்றுகிறது. வேலைப் பாதுகாப்பைக் குறைப்பதும், கூலியை ஒழுங்குமுறைக்கு உட்படுத்தாமல் இருப்பதும் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் நாட்டுக்குப் பயனளிக்கவும் இட்டுச் செல்லும் என்று பொருள்படுகிறது.

நம்முடையதை விடக் கடுமையான முறையிலும் செயலூக்கமிக்க வகையிலும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்களைக் கொண்ட தொழில்மய ஐரோப்பிய நாடுகள் (எடுத்துக்காட்டாக, ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ் ஆகியவை) இன்னும் பெருமளவு வேலைவாய்ப்புக் கொண்டவையாக இருப்பது எப்படி என்று ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளர் சந்தையை ஆதரிக்கும் உலகவங்கியோ அல்லது இந்திய ஆர்வலர்களோ விளக்க இயலவில்லை. உண்மையில், “கண்ணியமான வேலை” நிலைமைகளில் தான் நியாயமான முறையிலான உயர்ந்த வளர்ச்சி சாத்தியம் என்று வாதிடமுடியும் (ஹேமான் மற்றும் ஏர்ல் 2010). அரசே வேலைப் பாதுகாப்பை வெற்றிகரமாகக் குறைத்துள்ள முதலாவது மாநிலமாக ராஜஸ்தான் இருக்கிறது. இது ஒரு பரிசோதனை நிகழ்வாகத் தெரிகிறது, ஏனென்றால் மத்திய அரசாங்கம் கடந்த சில மாதங்களில் தொழிலாளர்களைப் பாதிக்கும் பல மாற்றங்களை அறிவித்துள்ளது, அது ஏறத்தாழ ராஜஸ்தான் மாற்றங்களை முன்மாதிரியாகக் கொண்டதாக இருக்கிறது. ஏற்கெனவே இருந்துவரும் சட்டங்கள் திருத்தப்பட்டுவருகின்றன, அல்லது மிகவும் “இயங்காற்றல்” கொண்டவற்றைக் கொண்டு மாற்றப்படுகின்றன. தொழில்துறை உறவுகள் சட்ட முன்வரைவில் தொழிலாளர் சட்டவிதிகள் அரசாங்கத்தால் இப்போது முன்மொழியப்பட்டுள்ளன. அது தொழில்தகராறு சட்டத்தையும் தொழிற்சங்கங்கள் சட்டத்தையும் ஒரே சட்டமாக ஒன்றாக இணைக்கிறது. இந்தச் சட்ட முன்வரைவின் முக்கிய விதிமுறைகளை விவரித்து, அவை எப்படித் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கு எதிராக இருக்கின்றன என்பதையும் இங்கு விளக்குகிறோம்.

தொழில்துறை உறவுகள் பற்றிய சட்டம்

இந்தச் சட்ட முன்வரைவு தொழில்துறை உறவுகள் பற்றிய ஒட்டுமொத்த வாய்ப்பெல்லை குறித்து விளக்குகிறது. இது “தொழிற்சங்கங்கள் பதிவு, வேலை நிலைமைகள், தகராறுகளை விசாரித்துத் தீர்வு காண்பது மற்றும் தொடர்புடைய விடயங்கள் தொடர்பான சட்டத்தைப் பலப்படுத்துவதற்கும் திருத்துவதற்குமான” (சட்ட முன்வரைவு அறிமுகத்திலிருந்து மேற்கோள்) முயற்சியாகும். இரண்டாவது பகுதி இருதரப்பு அமைப்புக்கள் குறித்து விளக்குகிறது. இந்தச் சட்ட முன்வரைவு (பிரிவு 3 மற்றும் 4) அத்தகைய இரண்டு அமைப்புக்களை – அதாவது செயல் குழு மற்றும் குறைதீர் குழு – முன்வைக்கிறது. முன்னது தொழில்தகராறு சட்டத்தின் ஒரு பகுதியாகும், இந்தச் சட்ட முன்வரைவு, உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும் வடிவத்தில் மூலத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. 100 அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அனைத்துத் தொழில்களும் செயல் குழுக்களைக் கொண்டிருக்கும், அவை தொழிலாளர் மற்றும் நிர்வாகத்தின் சமஅளவு பிரதிநிதித்துவத்தைக் கொண்டவையாக இருக்கும் என்று அது தெரிவிக்கிறது. இருப்பினும், இந்தக் குழுக்களின் வாய்ப்பெல்லை குறித்த கருத்துவேறுபாடுகள் எழுகின்றன. தொழில்தகராறு சட்டம் செயல் குழுக்களின் செயல்பாடுகளை கணிசமான அளவுக்கு விதிக்கிறது. அவை வேலையிடங்களில், வெளிச்சம், தூய்மை, உணவக வசதிகள், ஆண்டு விடுமுறைகள் மற்றும் பிற குறிப்பான பிரச்சனைகள் குறித்து விளக்குகின்றன.

கூட்டுப் பேர உரிமைகள் குறித்த பிரச்சனைகளை செயல் குழுக்கள் விவாதிக்க முடியாது என்பது தெளிவாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அவற்றால் கூலி, போனஸ், தொழில்துறை தகராறுகள், இன்னபிறவற்றை விவாதிக்க முடியாது. இருப்பினும், “முதலாளிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் நட்புறவையும் நல்ல உறவுகளையும் பாதுகாப்பதற்கான நடவ்டிக்கைகளை செயல் குழுக்கள் மேற்கொள்வது” செயல் குழுக்களின் கடமையாக இருக்கும் (பிரிவு 3, உட்பிரிவு 2) என்று அந்த வரைவுச் சட்டம் தெரிவிக்கிறது. பொதுநலன் மற்றும் கருத்துவேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்வது போன்ற விடயங்களில் கருத்துத் தெரிவிப்பது தவிர்த்து வேறு எந்தக் குறிப்பான பணியும் செயல் குழுவுக்குக் கொடுக்கப்படவில்லை. செயல் குழுவின் முதன்மையான நோக்கம் நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் ஒத்திசைவை நிலைநிறுத்துவதும் கருத்துவேறுபாடுகளைத் தீர்ப்பதும் தான் என்றால், அதற்குமேலும் தொழிற்சங்கங்கள் தேவைப்படமாட்டா. கூட்டுப் பேரப் பிரச்சனை குறித்துப் பின்னர் பார்ப்போம்.

இன்னொரு அமைப்பு குறைதீர்க்கும் குழுவாகும். இந்தக் குழு 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட எந்த ஒரு தொழிலகத்திலும் அமைக்கப்படவேண்டும். இது தொழிலகங்களுக்கு, குறிப்பாக சிறிய தொழிலகங்களுக்கு, வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கையாகும் (தொழிற்சாலைகள் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் 20 அல்லது அதற்கும் கூடுதலான தொழிலாளர்களைக் கொண்டுள்ள, எரிசக்தியை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும்). மேலும் அந்தக் குழுவிடம் ஒரு புகார் தெரிவிக்கப்படுமானால், அது அதை விசாரித்து 45 நாட்களுக்குள் அதன் முடிவைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் குழுவில் தொழிலாளர்களும் நிர்வாகிகளும் சம அளவில் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பார்கள். இந்தக் குழுவின் செயல்பாடு பற்றி மேலும் ஆய்வு செய்தால், ஒரு தொழிலாளர் அந்தக் குழுவின் தீர்ப்பில் திருப்தியடையவில்லை என்றால் அவர் முதலாளியிடம் மேல்முறையீடு செய்யலாம், அவர் அதற்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணவேண்டும். இது விந்தையாக இருக்கிறது, ஏனென்றால் பெரும்பாலான குறைகள் முதலாளிக்கு எதிராகத் தான் தெரிவிக்கப்படும். முதலாளியே பிரதிவாதியாகவும் நீதிபதியாகவும் இருப்பதை இந்தச் சட்ட முன்வரைவு முன்மொழிகிறது. வழக்கு ஒரு சுதந்திரமான அதிகாரம் பெற்ற அமைப்புக்குக் கொண்டுசெல்லப்படுவதைப் பற்றிய குறிப்பு எதுவும் இதில் இடம்பெறவில்லை.

தொழிற்சங்கங்கள் பதிவு

ஒரு தொழிற்சாலையில் 10% தொழிலாளர்கள், அல்லது 100 தொழிலாளர்கள் இதில் எது குறைவோ அந்த எண்ணிக்கை இருந்தால் ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவுசெய்ய முடியும் என்று இந்தச் சட்ட முன்வரைவு (பகுதி 3, பிரிவு 5) குறிப்பிடுகிறது. பதிவு செய்வதற்கு மனுச் செய்வதற்கு குறைந்தபட்சம் ஏழு தொழிலாளர்கள் தேவை. இது குறித்து தொழிற்சங்கங்கள் கவலையடைந்துள்ளதாகவும், இதற்குப் பலமான எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் செய்தித்தாள் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தப் பிரிவு 1926 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் பிரிவுகளிலிருந்து பெரிதாக விலகிச் செல்லவில்லை. முதலாளி-தொழிலாளர் உறவு இல்லாத, அமைப்பாக்கப்படாத துறையில் 10% விதி பொருந்தாது என்று இந்தப் பிரிவு தெரிவிப்பது ஓர் உடன்பாடான அம்சமாகும். தெரு வியாபாரம், வீட்டிலேயே செய்யப்படும் தொழில், வீட்டு வேலையாட்கள், மற்றும் குப்பைகளில் பொருள் சேகரிப்போர் போன்ற சுயவேலை வாய்ப்பில் உள்ளவர்கள் தங்களுக்கென்று சொந்தமாக தொழிற்சங்கங்கள் வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் பொருளாகும். இந்தத் தொழிலாளர்களுக்கு முதலாளிகள் என்று யாரும் இல்லாததால் பல மாநிலங்கள் இவர்களுடைய தொழிற்சங்கங்களைப் பதிவு செய்ய மறுக்கின்றன என்பதால் இது முக்கியமானதாகும். குறைந்தபட்சம் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட முதலாளிகளின் சங்கங்கள் தொழிற்சங்கங்களாகப் பதிவு செய்துகொள்ளலாம் என்று இந்தச் சட்ட முன்வரைவு தெரிவிக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின் பிரிவு 7, தொழிற்சங்கங்களின் நிர்வாகம் பற்றிக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொழிற்சங்கங்களின் பதிவாளர் ஒருவர் இருப்பார், அவர் தொழிற்சங்கங்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு அதிகாரியாக இருப்பார் என்று கூறுகிறது. ஒரு கூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர், துணைப் பதிவாளர் போன்ற பிற அதிகாரிகள் இருப்பார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறிப்பான நடவடிக்கைப் பகுதி இருக்கும், மேலும் அவர்கள் பகுதியில் அவர்களுக்கு பதிவாளரின் அதே அதிகாரங்கள் இருக்கும். இதன் பொருள், ஒரு தொழிற்சங்கம் ஒரு துணைப்பதிவாளரின் முடிவுக்கு எதிராக மேல் அதிகாரிக்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்பதாகும். தொழிற்சங்கம் தொழில்துறைத் தீர்ப்பாயத்திடம் தான் மேல்முறையீடு செய்யவேண்டும், அதுவே அத்தகைய வழக்குகளில் இறுதி நீதி வழங்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும். உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், அல்லது தொழிற்சங்கங்களிடையே தகராறுகள் இருக்குமானால், இறுதி அதிகாரம் தொழிலாளர் தீர்ப்பாயத்திடமே இருக்கும். உடன்படிகை மீறப்படுமானால் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இழப்புக்கள் ஏற்படுமானால் அதைப் பெற்றுத்தருவதற்கும் உரிமையியல் நீதிமன்றங்களுக்கு இருந்த அதிகாரத்தை இந்தச் சட்ட முன்வரைவின் பிரிவு 21 இல்லாமல் செய்கிறது.

நீதி வழங்குவதில் தொழிலாளர் தீர்ப்ப்பாயங்கள் மீது இந்தச் சட்ட முன்வரைவு ஏராளமான பொறுப்புகளைச் சுமத்துகிறது. இப்போது, தொழிலாளர் தீர்ப்பாயங்களில் போதுமான அளவுக்கு ஊழியர்கள் இல்லை, போதுமான அளவுக்கு நீதிபதிகளும் இல்லை, இத்தகைய சூழலில் அவை கூடுதல் பணிகளை எப்படி ஏற்க முடியும் என்று தெரியவில்லை. பொதுவாக, தொழிலாளர்களும், குறிப்பாகத் தொழிற்சங்கங்களும் அவர்களுடைய குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு மேல்நீதிமன்றங்களை அணுகுவது தடுக்கப்படும். தொழிற்சங்கங்களின் பொது நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்று பிரிவு 18 கூறுகிறது. இது ஏறத்தாழ தொழிற்சங்கங்கள் சட்டத்தில் உள்ளது போலவே உள்ளது. அதில் 18 அ என்று ஒரு கூடுதல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு தொழிற்சங்கம் அரசியல் நடவடிகைகளுக்கு நிதியளிப்பதற்கு தனியாக ஒரு நிதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளுடன் இணைப்புக் கொண்டவையாகும், அவை மறைமுகமாக அவற்றுக்கு நிதியளிக்கலாம். இந்த நடவடிகைகளுக்கு தொழிற்சங்கங்களுக்குத் தனி நிதியை அனுமதிப்பது அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதை வெளிப்படையாக்கும். அந்த நிதி நிலையான நிதியிலிருந்து தனியாக இருக்கும், இதற்கான பங்களிப்புக்கள் தாமாக முன்வந்து அளிப்பவையாக இருக்கும். பெரும்பாலான நாடுகளில், தமது பிரச்சனைகளை முன்னெடுக்கும் என்று எண்ணுவதால் தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கின்றன. சில நேர்வுகளில், தொழிற்சங்கங்கள் தாமே அரசியல் கட்சிகளை உருவாக்கின. பிரிட்டனில், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான தொழிற்சங்க பேராயத்தால் தொழிலாளர் கட்சி தொடங்கப்பட்டது. அதேபோல, ஐரோப்பாவில் வேறு பிற நாடுகளில் அரசியல் கட்சிகளுடன் இணைப்புக் கொண்ட தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. பிற அம்சங்கள் (உரிமையியல் வழக்குகளிலிருந்து பாதுகாப்பு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் குற்றவியல் சதி தொடர்பான சில பிரிவுகளிலிருந்து பாதுகாப்பு) தொழிற்சங்கங்கள் சட்டத்தில் உள்ளது போலவே உள்ளன.

நிலையாணைகள்

இந்தச் சட்ட முன்வரைவின் பகுதி 7, நிலையாணை பற்றிக் குறிப்பிடுகிறது. இவை அதன் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அளிப்பதால் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. முன்மாதிரி ஆணைகள் மத்திய அரசால் வகுக்கப்படும், அதன் அடிப்படையில் மாநிலங்கள் அவற்றின் நிலையாணைகளை ஏற்படுத்திக்கொள்ளும். தொழில்துறையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் உழைப்புத் தொடர்பான வாழக்கையின் அனைத்து அமசங்களையும் உள்ளடக்கியிருக்கின்றன, ஆனால் இவை 100 தொழிலாளர்கள் அல்லது அதற்கும் மேல் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கும் தொழிற்சாலைகளுக்குத் தான் பொருந்தும். முதலாளிகளும் கூட தங்களுடைய தொழிற்சாலைகளில் நிலையாணைகளை வகுத்துக் கொள்ளலாம், அந்த நிலையாணைகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் சான்றளிக்கும் அதிகாரியால் சான்றளிக்கப்படும். சான்றளிக்கும் அதிகாரி அப்படிச் சான்றளிப்பதற்கு முன்னதாக அந்த நிலையாணைகளின் நியாயத்தன்மை குறித்து ஆய்வு செய்வார்.

முதலாளி ஒரு தொழிலாளருக்கு எதிராக ஒழுங்குநடவடிக்கையைத் தொடங்கும்போது, அந்தத் தொழிலாளி விசாரணை முடியும் வரை தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படலாம் (பிரிவு 45). அந்த விசாரணை 90 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட வேண்டும், அந்த நாட்களில் தொழிலாளருக்கு அரைச் சம்பளம் வழங்கப்படும். அந்த விசாரணை 90 நாட்களுக்கும் கூடுதலாக எடுத்துகொள்ளும் பட்சத்தில், அடுத்த 90 நாட்களுக்கு, அந்தத் தொழிலாளருக்கு 75% சம்பளம் வழங்கப்படும், அந்த 90 நாட்களும் கடந்துவிட்டால் முழுச் சம்பளமும் கொடுக்கப்படும். இருப்பினும், அந்த விசாரணை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும். இது விசாரணையைத் தாமதமின்றி முடிக்க முதலாளியை நிர்ப்பந்திப்பதால் ஒரு உடன்பாடான அறிகுறியாகும். தீர்ப்பாயம் தொழிலாளருக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்குமானால், அந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து முதலாளி ஒரு மேல்நிலை நீதிமன்றத்திற்குச் செல்கிறார் என்றாலும் கூட, அந்த மேல்முறையீட்டுக் காலம் முழுவதும், அந்தத் தொழிலாளிக்கு அவர் முழுச் சம்பளத்தையும் கொடுக்க வேண்டும்.

வேலைநிறுத்தங்கள், கதவடைப்புக்கள், அபராதங்கள்

வேலைநிறுத்தங்கள், கதவடைப்புக்கள் தொடர்பான (பகுதி 5) பகுதி அவை சட்டவிரோதமானவை என்ற கருதுகோளுடனேயே தொடங்குகிறது. இப்பகுதியின் முதலாவது பிரிவு (பிரிவு 71) பின்வருமாறு கூறுகிறது: இரண்டு நேர்வுகளிலும், வேலை நிறுத்தம் அல்லது கதவடைப்பு அறிவிக்கப்படுவதற்கு, தொடர்புடைய தரப்பினர் மறுதரப்பினருக்கு ஆறுவாரங்கள் முன்னதாக அறிவிப்புக் கொடுக்கவேண்டும். சமரசப் பேச்சுவார்த்தைகள நடந்துகொண்டிருக்கும் போது, கதவடைப்பு அல்லது வேலைநிறுத்தம் செய்யப்படக் கூடாது என்பது போன்ற இருதரப்பும் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் இருக்கின்றன. வேலை நிறுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது நிர்வாகம் கதவடைப்புச் செய்யக் கூடாது, அதேபோல, கதவடைப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் போது, வேலைநிறுத்தத்தை அறிவிக்கக் கூடாது.

இந்தச் சட்டமுன்வரைவு வேலை நிறுத்தங்களையும், கதவடைப்புக்களையும் ஒரே விதத்தில் நடத்துகிறது என்றாலும் கூட, அவற்றைச் சமமாகக் கருத முடியாது, ஏனென்றால், அவை சட்டவிரோதமானவை என்பதால், இரு நேர்வுகளிலும் பாதிக்கப்படுவது தொழிலாளர்களே. ஒரு வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்றால், அதில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்களை இழப்பார்கள் என்று பொருள். அதேநேரத்தில் ஒரு சட்டவிரோதக் கதவடைப்பு என்றால், தொழிலாளர்களுக்கு ஊதியங்கள் வழங்கப்படமாட்டாது. இந்த நிகழ்வில், முதலாளிக்கு அபராதம் விதிக்கப்படும், ஆனால் அது தொழிலாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை, ஏனென்றால் அவர்களுக்கு ஊதியம் கிடைப்பதில்லை. கதவடைப்புக் காலக்கட்டத்தின்போது, தொழிலாளர்களுக்கு முதலாளி முழு ஊதியத்தையும் வழங்கச் செய்வதன்மூலம் இதைச் சரி செய்யலாம், அல்லது அத்தொகையை மாநில அரசுக் கருவூலத்தில் செலுத்தச் செய்யலாம், பிரச்சனைக்குத் தீர்வு கண்ட பிறகு, அதை விடுவிக்கலாம். முதலாளிகள் தங்கள் விருப்பம்போல கதவடைப்பு அறிவிப்பதை இது உறுதியாகத் தடுக்கும்.

சட்டவிரோத வேலைநிறுத்தங்களுக்கு அபராதம் விதிப்பது

வேலைநிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புக்கள் சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப்படுமானால், அபராதங்கள் விதிக்கப்படுவது தொடர்பான பிரச்சனை மிகவும் முக்கியமானதாகும். ஒரு கதவடைப்பு சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படுமானால் நாளொன்றுக்கு ரூ.50/- அபராதமாக விதிக்கப்படும் என்று தொழில்தகராறுச் சட்டம் குறிப்பிடுகிறது. இந்தச் சொற்பத்தொகை, தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அச்சுறுத்தல் கொடுப்பதற்காக, நெருக்கடி கொடுப்பதற்கு, முதலாளிகள் கதவடைப்பை அறிவிப்பதற்கு ஊக்குவிக்கும். இந்தச் சட்ட முன்வரைவுப்படி, சட்டவிரோத வேலை நிறுத்தங்களுக்கும் கதவடைப்புக்களுக்கும் அபராதங்கள் ஒரே அளவாக இருந்தாலும், இரண்டு நேர்விலுமே சுமை தொழிலாளர்களுக்குத் தான்.

பகுதி 12, பிரிவு 103 அபராதங்கள் தொடர்பானது. உட்பிரிவுகள் 14-17 சட்டவிரோத வேலைநிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புக்கள் தொடர்பானவை. ஒரு முதலாளி, இந்தச் சட்டத்தின் படியான “சட்டவிரோதமான கதவடைப்பை அறிவித்து, தொடரும் அல்லது கதவடைப்பு தொடர்பான செயல்களை மேற்கொள்வாரானால், அவர் ரூ.20,000/- க்கும் குறையாமல், இது ரூ.50,000/- வரை உயர்த்தப்படலாம், அபராதத்துடன் கூடுதலாக ஒருமாத சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கப்படுவார்” என்று உட்பிரிவு 15 கூறுகிறது. சட்டவிரோத வேலை நிறுத்தத்திற்கும் இதே தண்டனை தான், ஆனால் ஒரு சட்டவிரோத வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் தொழிலாளர்கள் அனைவரும் அதே தண்டனையைப் பெறுவார்கள் என்று உட்பிரிவு 14 தெரிவிக்கிறது. இதன் பொருள், 500 தொழிலாளர்கள் சட்டவிரோத வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்களானால், ஒவ்வொருவரும் மேலே குறிப்பிட்ட அபராதத்தைச் செலுத்தவும், சிறைத் தண்டனையை அனுபவிக்கவும் வேண்டும், அதேநேரத்தில் சட்டவிரோதக் கதவடைப்பில் ஈடுபடும் முதலாளி ஒருவர் மட்டுமே அபராதம் செலுத்துவார் என்பதாகும். அதோடு, வேலைநிறுத்தத்தைத் தூண்டும் எந்த ஒரு நபரும் அல்லது பிறரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தூண்டும் எந்த ஒரு நபரும் இதே தண்டனையை எதிர்கொள்வார் என்று பிரிவு 16 தெரிவிக்கிறது. இது சந்தேகத்துக்கிடமின்றி, அந்தத் தொழிற்சாலையில் வேலையில் இல்லாத தொழிற்சங்கத் தலைவர்களைக் குறிவைப்பதாகும்.

எந்த ஒரு சட்டவிரோத வேலைநிறுத்தம் அல்லது கதவடைப்புக்கும் பண உதவி செய்யும் எந்த ஒரு நபருக்கும் இதே தண்டனை விதிக்கப்படும் என்று உட்பிரிவு 17 தெரிவிக்கிறது. ஒரு சட்டவிரோத கதவடைப்புக்கு ஒரு நிறுவனத்திற்கு பண உதவி வழங்கப்படுமா என்பது சந்தேகமே, ஆனால் அதுவே தொழிலாளர்களுக்கும் சட்டவிரோத வேலைநிறுத்தங்களுக்கும் பொருந்தாது. தொழிலாளர்கள் ஒரு வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது, அவர்களுடைய ஊதியங்கள் நிறுத்தப்படும்போது, யாரும் அவர்களுக்குப் பண உதவி செய்யக் கூடாது என்று இந்த உட்பிரிவு அடிப்படையில் தெரிவிக்கிறது. இது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்குப் பண உதவி செய்யும் துணைவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையும் உள்ளடக்கியதா? எழுத்தில் இந்த உட்பிரிவு அவர்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.

தொழிற்சங்கங்களுக்கு அபராதங்கள்

இந்தச் சட்ட முன்வரைவின் தொழிலாளர் விரோத- தொழிற்சங்க விரோத அணுகுமுறை பிரிவு 103, உட்பிரிவு 7 இல் காணப்படுகிறது. இது தொழிற்சங்கங்கள் கணக்குகள் சமர்ப்பிக்காமல் இருப்பது தொடர்பானதாகும். எந்த பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கமாவது, இந்தச் சட்டத்தின் படி அறிவிப்புக் கொடுப்பது, அறிக்கை அனுப்புவது, அல்லது கேட்கப்படும் ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் இருப்பது ஆகியவற்றில் தவறிழைக்குமானால், தொழிற்சங்கப் பொறுப்பாளர் அலல்து அதைச் செய்வதற்குக் கடமைப்பட்ட பொறுப்பில் உள்ள நபர், அல்லது அப்படிப்பட்ட பொறுப்பாளரோ நபரோ இல்லாதபட்சத்தில், தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ரூ.10,000/- க்கும் குறையாமல், அபராதம் விதிக்கப்படுவார், மேலும் இத்தொகை ரூ.50,000/- வரையிலும் அதிகரிக்கப்படலாம். தொடர்ந்து இவ்வாறு தவறிழைத்தால், தொடர்ந்து தவறிழைக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.100/- வீதம் செலுத்திவரவேண்டும். அவ்வாறு தொழிற்சங்கத்தால் சமர்பிக்கப்படும் கணக்கில் ஏதாவது தவறான குறிப்பு இருந்தால் அல்லது விதி மாற்றப்பட்டிருந்தால் சமர்ப்பிக்கும் நபருக்கு ரூ.5000/- அபராதம் விதிக்கப்படும் என்று அடுத்த உட்பிரிவு 8. தெரிவிக்கிறது.

உட்பிரிவு 9 இன்படி, தொழிற்சங்க உறுப்பினர் ஒருவரை தவறான தகவல் கொடுத்து ஏமாற்ற முற்படும், அல்லது பதிவு செய்யப்படாத தொழிற்சங்க உறுப்பினரிடம் அது உண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற நம்பச் செய்ய முற்படுவாரானால் அந்த நபர் ரூ.25,000/- அபராதம் விதிக்கப்படுவார். மேலே குறிப்பிட்ட உட்பிரிவுகள் தொழிற்சங்கங்கள் கணக்கு/அறிக்கை தாக்கல் செய்வது (பிரிவு 33) தொடர்பானவையாகும். குற்றங்கள் முக்கியத்துவம் கொண்டவையல்ல, ஆனால் விதிக்கப்படும் அபராதங்கள் அவற்றுக்குத் தொடர்பற்ற விகிதத்தில் மிகவும் அதிகமாகும். தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து நேர்வுகளிலும் அபராதங்கள் தனிநபர் (வழக்கமாக ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள்) மீது விதிக்கப்படுகின்றன, ஆனால் முதலாளிகள் தரப்பில் தவறிழைக்கப்படும்போது, அபராதம் நிறுவனத்தின் மீதுதான் விதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உட்பிரிவு 7 இன் கீழ் நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது, ஆனால் முதலாளிகள் தரப்பில் நிறுவனத்தின் மீதே அபராதம் விதிக்கப்படுகிறது, ஒவ்வொரு இயக்குனர் அலல்து அதிகாரி மீதும் விதிக்கப்படுவதில்லை. இது பாரபட்சத்தை எடுத்துக்காட்டுகிறது. வேலையை விட்டு நீக்குதல், வேலையளிக்காமல் இருப்பது தொடர்பான பகுதிகளும் விதிகளும் இருக்கின்றன. அவை ஏற்கெனவே உள்ள சட்டத்தில் உள்ள படியே இருக்கின்றன. வேலையை விட்டு வெளியேற்றப்படும் ஒரு தொழிலாளருக்கு ஆண்டுக்கு 45 நாட்கள் வீதம் கணக்கிட்டு இழப்பீடு வழங்கவேண்டும் என்பது மட்டும் விதிவிலக்காகும். இது தற்போதுள்ள விகிதத்தைவிடக் கூடுதலாகும்.

இந்தச் சட்ட முன்வரைவு சில உடன்பாடான அமசங்களைக் கொண்டுள்ளது, ஆனால் அவை நிறைவேற்றப்படுமா என்பதுதான் கேள்விக்குறியாகும். தொழில்துறை தீர்ப்பாயங்கள் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடியவையாக இருக்குமா? ஏற்கெனவே இருக்கும் வழக்குகளுக்கே தொழிலாளர் நீதிமன்றங்களில் போதுமான நீதிபதிகள் இல்லாமல், அவை தேங்கிக் கிடக்கின்றன. மாநிலங்களில் தொழிலாளர் துறை அலுவலகங்களில் போதுமான ஊழியர்கள் இல்லை. முதலாளிகள் தங்களுக்குத் தாங்களே சான்றிதழ் வழங்கிக்கொள்ளலாம் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். முதலாளிகள் சட்டங்களை நடைமுறைப்படுத்துவார்கள் என்று நம்பவேண்டும் என்று அவர் திரும்பத் திரும்பப் பல மேடைகளில் கூறிவருகிறார். தொழிலாளர்களோ அல்லது அவர்களுடைய பிரதிநிதிகளோ நம்பத்தகாதவர்கள் என்பதுதான் இதன் பொருளா? இருதரப்புக்களுக்கும் விதிக்கப்படும் அபராதங்களில் உள்ள பாரபட்சம் இப்படிதான் பொருள்கொள்ளச் செய்கிறது.

தற்போதைய வடிவில் இந்த சட்ட முன்வரைவு சட்டமாக ஆகுமானால், அது தொழிலாளர்களுக்குப் பெரிய பின்னடைவாக இருக்கும். ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டது போல, தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விதிக்கப்படும் அபராதங்கள் மிகவும் அதிகமாக இருப்பதால், அவர்கள் முதலாளிகளுக்கு எதிராகப் பிரச்சனைகளை எழுப்புவதற்கு அச்சம் கொள்ளச் செய்யும் அல்லது எந்த வடிவத்திலும் எதிர்ப்பைத் தெரிவிப்பது சடவிரோதமானதாக அறிவிக்கப்படலாம். இதுவரை தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தொழிற்சங்கப் பதிவு குறித்தே இருந்துவருகிறது, ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்கான குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கை குறித்துத் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாகச் செய்தித்தாள் செய்திகள் தெரிவிக்கின்றன. இது இந்தச் சட்ட முன்வரைவின் ஒரு சிறிய குறைபாடாகும். தொழிற்சங்கங்கள் பதிவு குறித்த பகுதியை ஒருவர் பார்த்தால், அவை ஏற்கெனவே உள்ள விதிகள் மற்றும் சட்டங்களில் உள்ளது போலவே தோன்றும். முக்கியப் பிரச்சனையாக இருப்பது, சிறிய குறைபடுக்ளுக்குக் கூட, தொழிற்சங்கங்கள் மீதும் தொழிலாளர்கள் மீதும் விதிக்கப்படும் கடுமையான அபராதத் தொகைகள் ஆகும். அனைத்து அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் இந்தச் சட்ட முன்வரைவின் ஜனநாயக விரோதப் பிரிவுகளை எதிர்க்கவேண்டிய சவாலை எதிர்கொள்ள வேண்டும்.

இரண்டு நிரந்தரப் பிரச்சனைகள்

தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் மற்றும் கூட்டுப் பேர உரிமை ஆகிய இரண்டும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் நிரந்தரப் பிரச்சனைகளாக இருந்துவருகின்றன. கூட்டுப் பேர உரிமை இந்தியாவின் எந்தத் தொழிலாளர் சட்டங்களிலும் அளிக்கப்படவில்லை. சங்கங்கள் அமைக்கும் உரிமை அடிப்படை உரிமையாக இருக்குமானால், கூட்டுப் பேர உரிமையும் ஏன் அடிப்படை உரிமையாக இருக்க முடியாது? ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் பெரும்பாலான நாடுகளில் இந்த உரிமை தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு வழியாக் இருந்துவருகிறது. இந்தியாவில் நாம் இன்னும் பின்தங்கியிருக்கிறோம்.

கூட்டுப் பேர உரிமை என்பது தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தொழிற்சங்கங்களும் பதிவுசெய்யப்படுவதை இந்தச் சட்ட முன்வரைவு கட்டாயமாக்குகிறது. தற்போது, குறிப்பான காரணங்களால் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கச் சட்டத்தின்படி பதிவுசெய்யப்படவில்லை. இந்தச் சட்ட முன்வரைவிலும் தொழிற்சங்கங்கள் சட்டத்திலும் தொழிற்சங்கங்களைப் பதிவுசெய்வதற்கான விதிமுறைகள் இருந்தாலும், அவற்றில் ஒரு தொழிற்சங்கத்திற்குப் பேரம் பேசும் முகவராக அங்கீகரிக்கும் விதிமுறைகள் இல்லை. தொழிற்சங்கங்களைப் பதிவுசெய்வதால் கிடைக்கும் ஒரே பயன், சில உரிமையியல் வழக்குகளிலும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகளிலும் விதிவிலக்கு உள்ளது என்பதுதான்.

கூட்டுப் பேரத்திற்கான பிரதிநிதியாகத் தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது முதலாளியிடம் விடப்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலையில் பெரும்பான்மைத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிற்சங்கம் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு உகந்ததாக இல்லை என்றால் அந்தச் சங்கத்தை முதலாளி அங்கீகரிக்காமல் போகலாம். அங்கீகராத்தில் உள்ள முக்கியமான பிரச்சனை பெரும்பான்மைத் தொழிற்சங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் முறையில் இருக்கிறது. அங்கீகாரத்துக்கான முதன்மையான வழியாக பெரும்பாலான சங்கங்கள் ரகசிய வாக்கெடுப்பு முறையை ஆதரிக்கும் வேளையில், காங்கிரசு ஆதரவு இந்திய தேசியத் தொழிற்சங்கப் பேரவை இதை எதிர்க்கிறது. உறுப்பினர் எண்ணிக்கை தான் பிரச்சனையைத் தீர்மானிக்க வேண்டும் என்று, அதாவது, அதிகபட்ச உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் (உறுப்பினர் ரசீதுகள் மூலமாக) அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருக்கவேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. இந்தப் பிரச்சனை ஐ.என்.டி.யூ.சி.யின் பிடிவாதத்தால் தீர்க்கப்படாமல் இருந்துவருகிறது.

அரசாங்கமும் முதலாளிகளும் இப்போதைய முறையை மாற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை, ஏனென்றால் இதனால் அவர்கள் பயனடைகிறார்கள். இந்தச் சட்ட முன்வரைவு தொழில்துறை நிகழ்ச்சிப்போக்கில் தொழிற்சங்களை இணைப்பதில் தீவிரம் காட்டுமானால், அங்கீகாரம் குறித்து அது அக்கறை காட்டியிருக்கும். இந்தச் சட்ட முன்வரைவின் தொழிலாளர் விரோதத் தன்மையைப் பொறுத்தவரை, அதன் கேடு விளைவிக்கும் பிரிவுகளை எதிர்த்து, தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடாவிட்டால், அது நிறைவேறப்படுமானால், தொழிலாளர்கள் தாம் பாதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகிறது.

குறிப்புகள்:

Heymann, Jody and Alison Earle (2010): Raising the Global Floor: Dismantling the Myth That We Can’t Afford Good Working Conditions for Everyone, Stanford University Press, Stanford.

World Bank (1995): World Development Report for1995: Workers in an Integrating World, Oxford University Press, Delhi.

நன்றி: Economic & Political Weekly, JULY 18, 2015 vol. No. 29 15

- ஷாரித் கே. பௌமிக், இந்திய சமூக அறிவியல் ஆய்வுப் பேரவை

தமிழில்: நிழல்வண்ணன்

Pin It