மிகப் பெரிய அளவில் கடன்களைக் கட்டாமல் இருப்பவர்களுடைய பட்டியலை உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசாங்கம் ஏப்ரல் 17 அன்று கொடுத்தது. ஒவ்வொரு வங்கிக்கும் ரூ 500 கோடிக்கு மேல் கடனைக் கட்டாமல் வைத்திருக்கும் எல்லா பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுடைய பெயர்களும் இந்தப் பட்டியலில் உள்ளன. “நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்காக” என்று சொல்லிக் கொண்டு, மிகப் பெரிய அளவில் கடன்களைக் கட்ட மறுக்கும் இவர்களுடைய பெயர்களை பொது மக்களிடமிருந்து மறைத்து வைக்க வேண்டுமென இந்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் கூறுகின்றன. உச்ச நீதி மன்றமும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.

சனவரியில் உச்ச நீதி மன்றம் கொடுத்த ஆணைக்கு பதிலாக, கடனைத் திருப்பியடைக்காத நிறுவனங்களுடைய பட்டியலை முத்திரையிட்ட ஒரு உறையில் வைத்து மத்திய நிதி அமைச்சகம் நீதி மன்றத்தின் பார்வைக்காக மட்டும் கொடுத்திருக்கிறது. கடனைத் திருப்பியடைக்காத 2277 வழக்குகள், கடன் வசூலிக்கும் தீர்ப்பாயத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தேங்கிக் கிடக்கின்றன என்பதை நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இவ்வாறு வசூலிக்க வேண்டிய கடன் தொகையானது ரூ 5 இலட்சம் கோடிக்கும் மேல் இருக்கிறது.

மிகப் பெரிய அளவில் இந்த “வாராக் கடன்கள்” அல்லது மோசமான கடன்களால் இந்திய வங்கி அமைப்பு தத்தளித்து வருகிறது. அதிகரித்துவரும் இந்த வாராக் கடன்கள் காரணமாக இந்திய பொதுத் துறை வங்கிகள் சந்தித்து வரும் நெருக்கடி கடந்த சில ஆண்டுகளில் பொது விவாதப் பொருளாகவும், கவலைக் குறிய செய்தியாகவும் ஆகியிருக்கிறது. இந்தப் பின்னணியில், கடனைத் திருப்பியடைக்காத முதலாளிகளுடைய பெயர்களை வெளியிடுவது நாட்டின் நலன்களுக்கு எதிராகச் செல்லுமென மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் கூறியிருப்பதும், அதை உச்ச நீதி மன்றம் ஒப்புக் கொண்டிருப்பதும், இந்த நிறுவனங்களுடைய வகுப்பு குணத்தைக் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.

குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, வாராக் கடன் நெருக்கடிக்கு அவர்களைக் கொடுக்க வைப்பது தொழிலாளி வகுப்பு மற்றும் பெரும்பான்மையான மக்களின் நலத்திற்கு உகந்ததாகும். கடனைத் திருப்பிக் கட்ட மறுக்கும் பெரு முதலாளிகளின் சொத்துக்களை வலுக் கட்டாயமாகப் பறிமுதல் செய்வது உட்பட அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த காரணத்திற்காகவே, பொது மக்களுடைய பணத்தைக் கொள்ளையடித்துள்ள பெரு முதலாளிகளுடைய பெயர்களைப் பொது மக்களுக்கு வெளியிட அவர்கள் விரும்பவில்லை. எனவே இந்தப் பட்டியலை வெளியிடுவது பெரு முதலாளிகளுடைய நலன்களுக்கு நல்லதல்ல.

“நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுப்பது” என்ற பெயரில் கடனைத் திருப்பிக் கட்டாத பெரு முதலாளிகளைப் பாதுகாப்பது என்பது, ஏகபோகக் குடும்பங்களின் தலைமையில் இயங்கும் முதலாளி வகுப்பின் சர்வாதிகாரம் தான் இந்திய அரசு என்பதைக் காட்டுகிறது. மத்திய அரசாங்கம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உச்ச நீதி மன்றம் உட்பட இந்த அரசின் பல்வேறு அங்கங்களும் பொது மக்களுடைய நலன்களைப் பிரதிபலிக்கவில்லை. அவை ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்டு, பொது மக்களுடைய பணத்தைத் திருடி வருபவர்களுடைய நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

“நாட்டின் பொருளாதார நலன்கள்” குறித்து பிரதமரோ, பிற அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ பேசும் போது, ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளித்துவ வகுப்பின் நலன்களை மனதில் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Pin It