கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

migrant workers long marchஇந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக ஊடறுத்துச் செல்லும் பெருவழிச் சாலைகள் எங்கும் மனித இரத்தத்தின் சுவடுகள் காயாமல் கனத்துக் கிடக்கின்றன. வெப்பத்தில் தகித்து வெம்மையில் உருகும் தார்ச் சாலைகள் கனமான ரத்தத்தின் அழுத்தம் தாளாமல் உள்வாங்கிக் கொண்டு இருக்கின்றன. எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே என்பதுபோல இந்தியாவின் எல்லா பெருவழிச் சாலைகளும் சுடுகாட்டை நோக்கியே செல்வதாக மனம் பிரம்மை கொள்கின்றது.

தனித்து விடப்பட்ட பாலைவனத்தில் ஒற்றை எறும்பென, வழிமறந்த ஆழ்கடலில் ஒற்றைப் படகென கால்கள் நடக்கும் திசையே வழியாக உருக் கொள்கின்றது. புலம்பெயர் தொழிலாளர்களின் பாதங்களின் தோல்களும், சதைகளும் உருகி எலும்புகள் சாலைகளின் மீது மோடியின் புதிய இந்தியாவின் துயரத்தை எழுதிச் செல்கின்றன.

வாழ்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் மறைந்து, அவர்களது வானம் நிர்மூலமாய் காட்சி அளிக்கின்றது. சாலையின் ஏதாவது ஒரு வளைவில், தண்டவாளங்களின் ஏதாவது ஒரு திருப்பத்தில் வீடு வந்து விடும் எனக் குழந்தைகள் ஏக்கத்தோடு நடை போடுகின்றார்கள். அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும் குழந்தைகளைத் தேற்றுவதற்கான சிறுவர் கதைகள் எல்லாம் வற்றி, இப்போது மரணத்தை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய தத்துவ உபதேசங்களை குழந்தைகளுக்குப் புரியும் மொழியில் சொல்ல முயன்று கொண்டிருகின்றார்கள். அவர்களுக்கு நன்றாகத் தெரியும், ஏதாவது ஒரு பாதையின் முடிவில் மரணத்தின் வாசலைத் தரிசிக்கும் வாய்ப்பு குடும்பத்தில் ஒருவருக்கு நிச்சயம் கிடைக்கும் என்று.

புலம்பெயர் தொழிலாளர்களின் இந்தப் பெரும்பயணம் நிச்சயம் அவர்களின் சொந்த ஊரில் கிடைக்கப் போகும் நல்ல வாழ்க்கைக்கானது அல்ல... அவர்களுக்கு நன்றாகவே தெரியும், சொந்த ஊரில் தங்களின் குடும்பமும் பட்டினியால் நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றது என்று. பிறகு எதற்கு உடலையும் உயிரையும் உருக்குலைக்கும் இந்தப் பெரும் பயணம்? அது ஒரு கெளரவமான சாவுக்கானது. மதிப்புமிக்க நல்லடக்கத்துக்கானது. அடையாளமற்ற ஊரில் அனாதைப் பிணமாய் முடியப் போகும் தங்களின் வாழ்க்கையை ஏன் சொந்த ஊரில் தங்களை அரவணைத்த, அன்பு செலுத்திய முகங்களுக்கு மத்தியில் முடித்துக் கொள்ளக் கூடாது என்ற பரிதவிப்பினால்தான் இந்தப் பயணம்.

ஆனால் கனவுகள் எல்லா சமயங்களிலும் மெய்ப்பட்டு விடுவதில்லை. சொந்த ஊர்களுக்குச் சென்று தனக்குப் பிடித்தவர்களின் முகங்களைக் காண சென்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கனவுகள் வழியிலேயே களைந்தன. ஒரு போதும் வார்த்தைகளால் கொண்டு வரப்பட முடியாத துயரமாக தொழிலாளர்களின் வலி இருக்கின்றது.

நாய்களுக்காகவும், மாடுகளுக்காகவும் ஒலிக்கும் குரல்கள் கூட இந்த உலகில் செல்வங்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்காக ஒலிப்பதில்லை. ஒவ்வொரு முதலாளியும் இயந்திரத்தின் ஓர் உறுப்பாகவே தொழிலாளியைப் பார்க்கின்றான் என்பதும், இயந்திரம் பயனற்று நிற்கும் போது அந்த இயந்திரத்தை இயக்கும் மனிதனும் ஒரு தேவையில்லாத பொருளாகவே நினைத்து உதாசீனப்படுத்தப் படுகின்றான் என்பதும் இந்தக் கொரோனோ காலத்தில் மீண்டும் மீண்டும் உறுதியாகி வருகின்றது. ஒருவேளை உணவுக்குக் கூட வழியற்று விரட்டப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் துயரத்தின் விசும்பல் காற்றுவெளி எங்கும் கலந்துள்ளது.

டெல்லியிலுள்ள தனியார் உணவகம் ஒன்றில் ஹோம் டெலிவரி செய்யும் பணியைச் செய்து வந்த ரன்வீர் சிங், அங்கிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மத்தியப் பிரதேசத்தின் மொரோனா மாவட்டத்திற்கு நடந்தே செல்லத் திட்டமிட்டுள்ளார். டெல்லி - ஆக்ரா நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையில் சுருண்டு விழுந்தார். அருகிலிருந்த கடைக்காரர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 39 வயதுடைய ரன்வீர் சிங்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் பணிபுரிந்து வந்த ஒடிசாவின் மல்கங்கிரியைச் சேர்ந்த 21 வயதாகும் ஒரு தொழிலாளி தனது நண்பர்கள் மூன்று பேருடன் சொந்த ஊருக்கு நடந்து செல்லத் தீர்மானித்து, ஐதராபாத்தில் இருந்து கிளம்பிய நான்கு பேரும் கால்நடையாக 310 கி.மீ. தொலைவில் உள்ள பத்ராச்சலம் சென்றடைந்தனர். அப்போது நெஞ்சு வலிப்பதாகக் கூறிய அந்தத் தொழிலாளி வாந்தி எடுத்து நிலைகுலைந்து சாலையில் விழுந்து இறந்துள்ளார். அவரைச் சோதித்த மருத்துவர்கள் வெயில் தாங்காமல், தோல் மற்றும் உதடுகள் வறண்டு அவர் இறந்ததாகத் தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வேலை செய்து வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஷ் பாலசுப்ரமணியன் (21) அங்கிருந்து தனது சொந்த ஊரான நாமக்கலுக்கு சாலை வழியாக நடந்தே வர முடிவு செய்து தன்னைப் போலவே வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்த 26 பேருடன் இணைந்து சாலை வழியாக நடைபயணத்தைத் தொடங்கினார். மூன்று நாட்களாக நடைபயணம் மேற்கொண்ட லோகேஷ் 454 கிலோமீட்டர் பயணத்தின் முடிவில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் வந்தடைந்தார். நடைபயணம் மேற்கொண்ட அனைவரும் அங்கு உள்ள சமுதாய நலக் கூடத்தில் இரவு தங்கியுள்ளனர். தொடந்து மூன்று நாட்கள் வெயிலில் நடந்ததில் மிகவும் சோர்வடைந்திருந்த லோகேஷ் சக நடைபயணிகளுடன் முகாமில் உள்ள ஓர் இருக்கையில் அமர்ந்திருந்த போது நிலைகுலைந்து மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டார்.

மகாராஷ்டிராவின் ஜல்னாவில் உள்ள ஓர் இரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஜல்னாவில் இருந்து 170 கி.மீ. தொலைவில் இருக்கும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர். அருகில் உள்ள புசாவலுக்கு நடந்து சென்று, அங்கு இருந்து ரயில் மூலம் மத்தியப் பிரதேசம் செல்லத் திட்டமிட்டனர். அதன்படி, தண்டவாளத்தை ஒட்டியவாறே புசாவலுக்கு அவர்கள் நடக்கத் தொடங்கினர். கிட்டத்தட்ட 45 கி.மீ. தொலைவு நடந்தபின் அசதியில் தண்டவாளத்திலேயே தூங்கி இருக்கின்றனர். அதிகாலை 5.15 மணியளவில் அவ்வழியாக வந்த சரக்கு ரயில் உறங்கிக் கொண்டு இருந்தவர்கள் மீது ஏறியதில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். ஊரடங்கால் வேலை இழந்த நிலையில் தங்களது சொந்த ஊருக்கு லாரியில் சென்றிருக்கின்றனர். உத்தரப் பிரதேச தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் சென்ற லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த மற்றொரு லாரி ஒன்று திடீரென மோதியதில் சம்பவ இடத்திலேயே 24 பேர் உயிரிழந்தனர்.

இவை எல்லாம் சில சம்பவங்கள் மட்டுமே. இன்னும் இது போன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இந்தியா முழுவதும் நடந்துள்ளன. இவை எல்லாம் வெறும் மரணச் செய்திகள் அல்ல. இந்திய அரசாலும் அவர்களால் மக்களின் வரிப்பணத்தில் ஊட்டி வளர்க்கப்படும் இந்தியப் பெருமுதலாளிகளாலும் செய்யப்பட்ட அப்பட்டமான படுகொலைகள் ஆகும். இந்த நாட்டின் நீதிமன்றங்கள் உள்பட அனைத்து அரசு உறுப்புகளுமே முதலாளிகளின் ஏவல் படையாக மாறி விட்ட சூழ்நிலையில், தொழிலாளர்களின் உயிர் என்பது முதலாளிகளின் மூலதனத்துக்கு உள்ளடங்கியதாக மாற்றப் பட்டுள்ளது. முதலாளிகளுக்கு லாபம் வரும் வரைதான் தொழிலாளர்கள் உயிர் வாழ அனுமதிக்கப் படுவார்கள். இல்லை என்றால் தொழிலாளர்கள் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்.

தொழிலாளர்கள் தங்களை அமைப்பாக்கிக் கொள்வதும், தொழிலாளர்களை அமைப்பாக்குவதும் எவ்வளவு முக்கியம் என்பதை நடப்பு நிலைமைகள் உணர்த்தியுள்ளன. மனிதத் தன்மையற்ற, பணவெறி பிடித்த, குரூர மனம் படைத்த அரசையும், அதை வழிநடத்தும் பெருமுதலாளிகளையும் பணிய வைக்க வலுவான தொழிற்சங்கங்களால் மட்டுமே முடியும். வலுவான தொழிற்சங்கம் என்பது பொதுவுடமைக் கட்சிகளால் மட்டுமே செய்ய முடிந்த பணியாகும். தொழிலாளர்களை சித்தாந்த மையப்படுத்துவதும், அவர்களை அமைப்பாக்குவதும், தொழிலாளர்களின் நலன்கள் காவு வாங்கப்படும், அவர்களின் உரிமைகள் மறுக்கப்படும் இந்தக் காலத்தில் அதிமுக்கியமான பணியாகும். அப்படி செய்யாத பட்சத்தில் பாட்டாளி வர்க்கத்தின் மீது பார்ப்பன பாசிச பாஜக அரசால் தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தாக்குதலை ஒருபோதும் நம்மால் முறியடிக்க முடியாது.

தொழிலாளர்கள் தங்களின் கண்ணீரால் ஒருபோதும் தங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாது. அமைப்பாய் திரண்டு தங்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்துவிட்டு, இன்று தங்களை வீதிகளில் வீசி எறிந்த முதலாளி வர்க்கத்துக்கு எதிராகவும், அவர்களுக்கு ஏவல் நாய்களாய் வேலை பார்க்கும் அரசுக்கு எதிராகவும் காத்திரமான போராட்டங்களை நடத்தினால் மட்டுமே உரிமைகளை மீட்டெடுக்க முடியும். அனைத்து பொதுவுடமை அமைப்புகளும் இணைந்து இதற்கான பணியை செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் காலத்தின் தேவையாக உள்ளது.

- செ.கார்கி