தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க் என்னும் நகரில் 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் நாள் பிறந்தார் நாதின் கார்டிமர். இவரின் தந்தை ஒரு யூதர். தாயார் பிரிட்டிஷ்காரர் தனது தொடக்கக் கல்வியை ஆங்கில மொழிப் பள்ளியில் பயின்றார்.

             nadine gordimer  கல்லூரியில் படிக்கும்போது இதய நோயால் பாதிக்கப்பட்டதால், படிப்பை வீட்டிலேயே தொடர்ந்தார்.

               நாதின் தமது ஒன்பதாவது வயதிலேயே கதைகள் எழுதத் தொடங்கினார். ஜோகனஸ்பர்க்கிலிருந்து வெளிவந்த குழந்தைகளுக்கான இதழில், Come Again Tomorrow என்னும் முதல் கதையை தமது பதினான்காவது வயதில் வெளியிட்டார்.

               ‘Face to Face’ என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பு 1949 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவரது படைப்புகள் இனப்பிரச்சனையால் சமூகம் எப்படி பிளவுபட்டு பாதிக்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துபவைகளாக அமைந்திருந்தது.

               நியூயார்க் நகரிலிருந்து வெளிவந்த இதழ்களில் 1951 ஆம் ஆண்டு முதல் இவரது கதைகள் வெளியிடப்பட்டன. நியூயார்க் மக்கள் விரும்பிப் படித்தனர்.

               ‘தி சாப்ட் வாய்ஸ் ஆப் தி செர்பென்ட்’ என்னும் சிறுகதைத் தொகுப்பை 1952 ஆம் ஆண்டு வெளியிட்டார். பின்னர், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு ‘தி லையிங் டேஸ்’ என்ற நூலை 1953 ஆம் ஆண்டு வெளியிட்டார். பத்துக்கும் மேற்பட்ட நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

               நாதின் கார்டிமரின் கதைகள், நாவல்கள் அனைத்துமே இனப்பிரச்சனை. கறுப்பர் வெள்ளையர் உறவு, கலப்புத் திருமணம் முதலியவைகளை அடிப்படையாகக் கொண்டு விளங்குபவைகள். மேலும் நீதியைப் போதிப்பவையாகவும் உள்ளன. இரண்டு இனங்களுக்கு இடையே ஒற்றுமையை உண்டாக்கும் நோக்கத்தினை இவரது கதைகள் பிரதிபலிக்கும். தென் ஆப்பிரிக்காவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இவரவது படைப்புகள் பிரபலம் அடைந்தது.

               இவரது கதைகள் தொலைக்காட்சிக்காக ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டன. இவரது மகனான ஹாகோ கேஸிரிரர் உடன் இணைந்து ‘சூசிங் ஜஸ்டிஸ்’ என்னும் தொலைக்காட்சிப் படத்தைத் தயாரித்து ஒளிபரப்பினார். ‘இன் தி ஹவுஸ் கன்’ என்னும் தொலைக்காட்சி படத்திற்கு கதை எழுதினார்.

               அமெரிக்காவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் சொற்பொழிவாற்றினார். மிகச் சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார்.

               நாதின் கார்டிமருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1991 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெறும் எட்டாவது பெண்மணியாவார்.

               அமெரிக்காவில் உள்ள யேல், ஹார்வார்டு, கொலம்பியா முதலிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தன. மேலும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லியூவான் பல்கலைக் கழகம், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யார்க் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேப் டவுன் பல்கலைக்கழகம், விட் வாட்டர் ‘ஸ்ரான்ட் பல்கலைக்கழகம் ஆகியவைகள் நாதின் கார்டிமருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

               1998 ஆம் ஆண்டு ‘ஆரஞ்சு அவார்டு’ அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விருதை பெண் எழுத்தாளர்கள் வாங்க மறுத்ததால், இவரும் அந்த விருதை வாங்க மறுத்து விட்டார்.

               நாதின் கார்டிமர் தென் ஆப்பிரிக்கா எழுத்தாளர்கள் சங்கத்தை உருவாக்கி, அதன் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். ‘PEN’ என்னும் சர்வதேச அமைப்பில் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

               இவரது அண்மைக் காலக் கதைகள் புதிய சீர்திருத்தக் கருத்துகளையும், மாற்று சிந்தனைகளையும் உலகிற்கு அளிப்பவைகளாக உள்ளது. ‘நியூயார்க் ரிவியூ ஆப் புக்ஸி’ற்கு எழுதி வருகிறார். இவரது கதைகள் சில திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எழுதி வருகிறார்.

- பி.தயாளன்

Pin It