தமது வாழ்நாள் முழுவதும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கியவர் ஏலியன் ஜெர்ட்ரூடு பெல்லி! ஆனால், இவரை ஆராய்ச்சியாளராக சேர்த்து கொள்வதற்கு எந்தவொரு பல்கலைக் கழகமும் முன்வரவில்லை. ஏனெனில் அக்காலத்தில் பெண்களை ஆராய்ச்சியாளராக ஆய்வுக் கூடத்தில் அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்த ஏலியன் ஜெர்ட்ரூடு பெல்லி தான் பின்னாளில் ஓர் அறிஞராக, உலகம் போற்றும் அறிவியலாளராக, நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் நாட்டுப் பெண்மணி ஆவார்!

gertrude elionஏலியன் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 1918 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 23 ஆம் நாள் பிறந்தார். இவர் பள்ளிப் படிப்பையும், பட்டப்படிப்பையும் நியூயார்க் நகரில் முடித்தார்.

பள்ளி இறுதி ஆண்டில் படிக்கும்போது, மேற்கொண்டு எந்தப் பாடத்தை எடுத்துப் படிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, அவரது தாத்தா புற்று நோயால் இறந்துவிட்டார். அவரின் பிரிவை ஏலியாவினால் தாங்க முடியவில்லை. இந்த கொடிய நோயை அழித்து ஒழித்திட வேண்டுமென உறுதி பூண்டார். எனவே, வேதியியல் படிக்க முடிவு செய்து, 1933 ஆம் ஆண்டு ‘கண்டர் கல்லூரி’யில் சேர்ந்தார். கல்லூரி படிப்பை முடித்தவுடன், ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்திட பல பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பித்தார். ஆனால், இவருக்கு ஆய்வு உதவியாளராகத்தான் பணி கிடைத்தது.

பின்னர், நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் மருத்துவமனை செவிலியர் பயிற்சிப் பிரிவில் உயிர் வேதியியல் கற்பிப்பதற்கான பணியில் சேர்ந்தார். தமது வருமானத்தைக் கொண்டு, 1939 ஆம் ஆண்டு நியூயார்க் பல்கலைக் கழகத்தில் வேதியியல் படிப்பில் சேர்ந்தார். அந்த வகுப்பில் ஏலியன் மட்டுமே பெண் ஆவார். இவர், பின்னர் நியூயார்க் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பணி புரிந்து கொண்டே, மேல் பட்டப் படிப்பையும் முடித்தார்.

பரோக்ஸ் (Burroughs) ஆய்வுக் கூடத்தில் 1944 ஆம் ஆண்டு உதவியாளராகச் சேர்ந்தார். அங்கு ஜார்ஜ் ஹிட்சிங்குடன் இணைந்து அங்கக வேதியியல் ஆய்வில் ஈடுபட்டார். பின்னர், நுண் உயிரியலில் மிக ஆர்வம் கொண்டு, உயிர் மூலக்கூறுகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், உயிர் வேதியியல், மருந்தியல், நோய் எதிர்ப்பியல் மற்றும் வைராலஜி முதலியவற்றில் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டார். இவரது ஆய்வுகளை அங்கீகரித்தும், பாராட்டியும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகம், பிரவுன் பல்கலைக் கழகம், மிக்சிகன் பல்கலைக் கழகம் முதலிய பல்கலைக் கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்களை அளித்துச் சிறப்பித்தன.

நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கப் புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை அதிகமாகியது. ஏலியனும், ஜார்ஜ் ஹிட்சிங்கும் இணைந்து புதிய மருந்து வரிசையைக் கண்டுபிடித்தனர். இரத்தப் புற்று (Leukemia), சிறுநீரக தொற்று நோய் (Urinary – tract infections), கீழ் வாதம் (gout), மலேரியா மற்றும் வைரஸ் அக்கிகள் (Viral herpes) முதலிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தனர்.

இவர்கள் இருவரும் மிகவும் நுணுக்கமாக உயிர் வேதியியல் மூலம் மனித செல் மற்றும் புற்றுநோய் செல், பாக்டீரியா, வைரஸ் முதலிய நோயை ஏற்படுத்தும் காரணிகளை நன்கு ஆய்வு செய்து வெளியிட்டனர். தங்கள் ஆய்வுகள் மூலம், நோயை ஏற்படுத்தும் கிருமிகளை புதிய வகை மருந்துகளைக் கொண்டு அழித்தனர். நோய்க் கிருமிகள் உடலில் இனப்பெருக்கம் செய்யாமல் தடுத்தனர். இதனால், மனிதனின் உடலில் உள்ள செல்கள் அழியாமல் பாதுகாக்க முடிந்தது.

ஆராய்ச்சி மூலம் நோயைக் குணப்படுத்தும் பிரிவின் தலைவராக 1967 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இப்பதவியில் பதினாறு ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டு, 1983 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

பணி ஓய்வு பெற்றாலும், தமது அறிவியல் ஆய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டார். தமது ஆய்வகத்தில் வேதியியல், நொதியியல், மருந்தியல், நோய் எதிர்ப்பியல், வைராலஜி மற்றும் திசு வளர்ப்பு முதலியவற்றில் ஆய்வுகளை நடத்தினார். மேலும், ‘டக் பல்கலைக் கழகத்தில்’ மருந்து மற்றும் மருந்து தயாரிப்பு பிரிவின் ஆராய்ச்சிப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். மருத்துவத்துறை ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக விளங்கினார்.

இவர், அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநராகவும், தலைவராகவும் பணியாற்றினார். உலக சுகாதார அமைப்பின் வெப்ப மண்டல நாடுகளின் நோய் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக விளங்கி, மலேரியா நோயைக் கட்டுப்படுத்தினார்.

அமெரிக்க வேதிப்பொருள் கழகம், இராயல் வேதியியல் கழகம், அமெரிக்க உயிரியல் வேதியாளர் கழகம், அமெரிக்கன் மருந்தியல் கழகம், அமெரிக்க மருந்தியல் அறிவியலாளர்கள் அமைப்பு முதலிய பல அமைப்புகளில் முக்கிய பங்காற்றினார்.

இவரது மருத்துவ சேவைக்காக உலகின் மிக உயர்ந்த நோபல் பரிசு இவருக்கு 1988 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவர் ஜார்ஜ் ஹிட்சிங், டபிள்யூ-பிளாக் முதலியவர்களுடன் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்.

தமது வாழ்நாள் முழுவதும் மருத்துவ ஆராய்ச்சிக்காக பாடுபட்ட ஏலியன் 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாள் மறைந்தார். அவர் மறைந்தாலும், அவரது மருத்துவ கண்டுபிடிப்புகள் என்றும் மக்களுக்கு பயனளித்துக் கொண்டே இருக்கும்!

- பி.தயாளன்

Pin It