ஈழத்துக் கல்விப் பாரம்பரியத்தில் ஆறுமுக நாவலர் மரபு வழிவந்த கல்வி மரபென்றும், இலங்கைப் பல்கலைக் கழகம் வழிவந்த கல்வி மரபென்றும் கூறுவர். விஞ்ஞான, தொழில்நுட்ப விரிவுரைகளின் தாக்கம் ஆறுமுக நாவலர் காலத்தில் ஈழத்தில் அவ்வளவாக உணரப்பட்டவை அல்ல. அதனால் அதன் கூறுகள் ஆறுமுக நாவலரின் கல்விச் சிந்தனையில் இடம்பெறவில்லை. ஆறுமுக நாவலரின் கல்வி மரபு சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர், புன்னாலைக் கட்டுவன் கணேசையர், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஆகியோரூடாக வந்து சேர்ந்தது.
வட்டுக்கோட்டையில் அமைந்த அமெரிக்க மிசனரியின் ‘ வட்டுக்கோட்டைச் செமினரி ’ ஒரு பல்கலைக் கழகக் கல்வி பாரம்பரியத்தை ஈழத்திலே தொடங்கி வைத்தது. விஞ்ஞான தொழில் நுட்ப விரிவுகளின் தாக்கம் இச்செமினரிக் கல்வியில் செறிவுற்றிருந்தது. மேலும் இந்த கல்வி நிறுவனம் பல்கலைக்கழக அந்தஸ்துடைய கல்லூரியாக அமைந்தது. 1905 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 1921 ஆம் ஆண்டு கொழும்பில் பல்கலைக்கழக கல்லூரி நிறுவப்பட்டது. இது 1942 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகமாக மாறியது. இப்பல்கலைக்கழக கல்வி மரபு சுவாமி விபுலாநந்தர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வி.செல்வநாயகம், பேராசிரியர் சு.வித்தியானந்தன்,பேராசிரியர் ஆ.சதாசிவம் ஆகியோரூடாக வந்து கொண்டிருக்கிறது .
பேராசிரியர் வி. செல்வநாயகம் மேற்குறிப்பிட்ட இரு கல்வி மரபுகளையும் சார்ந்தவராக அமைந்தார் . இவர் ஆறுமுக நாவலர் கல்வி மரபிலே வந்த வித்துவசிரோமணி சி. கணேசையரிடம் கல்வி கற்றதுடன், பல்கலைக் கழகக் கல்வி மரபுடைய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிஞர். நீ கந்தசாமிப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோரிடமும் கல்வி பயின்றார். இவ்விரு கல்வி மரபுகளும் பேராசிரியர் வி.செல்வநாயகத்தின் ஆளுமையினை உருவாக்கின என்பது ஆய்வாளர்களின் பதிவாகும்.
பேராசிரியர் வி. செல்வநாயகம் 1907 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் தேதி கொழும்புத்துறையில் வினாசித்தம்பி-அலங்காரம் வாழ்விணையருக்கு மகனாகப் பிறந்தார். அவர் தமது ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியையும் யாழ்ப்பாணப் புனித ஜோன்ஸ் கல்லூரியில் பயின்றார். பின்னர் கொழும்பு பல்கலைக் கழகக் கல்லூரியில் சேர்ந்து பயின்று, லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று கலைமாணிப் பட்டம் பெற்றார். இவர் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றமைக்காக சர். பொன். அருணாசலம் நினைவுப் பரிசைப் பெற்றார். பட்டம் பெற்ற பின்னர் சில ஆண்டுகள் இடைக்காடு இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பொழுது வித்துவசிரோமணி சி. கணேசையரிடமும், பண்டிதர் வேதநாயகத்திடமும் மரபுவழிக் கல்வியைப் பெற்றார் .
1932 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு மூன்று ஆண்டுகள் பி.ஏ. சிறப்புக் கற்கை நெறியைப் பயின்றார். 1935 ஆம் ஆண்டு இலங்கை திரும்பினார்.
பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராக பணியாற்றினார். அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் போது 1942 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகி பணியாற்றினார்.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாடமாக பயின்ற எவரும் பேராசிரியர் வி. செல்வநாயகத்தை எளிதில் மறந்துவிட முடியாது. தமிழிலே புலமை பெற்றவர். தூய தமிழ்ப் பாரம்பரிய உடையுடுத்துபவர். சரளமாக ஆங்கில மொழியும் பேசுபவர். வகுப்புகளுக்கு உரிய நேரத்தில் வருகை புரிந்து, பாடங்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கற்பிப்பதுடன், மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் அவர்களிடம் கேள்விகளைக் கேட்டு வகுப்புகளை நடத்துவார். தமிழ்ப் பாடல்களைச் சரியாக வாசிக்க வேண்டும் என்பதில் அக்கறையோடு செயல்பட்டார்.
தமிழ் இலக்கியப் பாடல்களையும், தொல்காப்பிய இலக்கணத்தையும், இலக்கிய விமரிசனத்தையும் இவர் கற்பிக்கும்போது மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் ஏற்படவும், அதையொட்டி மேற்கொண்டு சிந்திக்கத் தூண்டும்படியும் விரிவாகக் கூறி கற்பிப்பார்.
தொல்காப்பியம் பொருளதிகாரத்துக்கு நச்சனார்க்கினியருடைய உரையினை நுண்ணாய்வு செய்து அவர் கற்பித்தார். நச்சனார்க்கினியர் எழுதிய பொருளதிகாரச் சூத்திரங்கள் சிலவற்றுக்கு எழுதப்பட்டுள்ள முரண்பட்ட உரைகளைச் சுட்டிக் காட்டி விளக்கம் அளிப்பார். மேலும், உரைகளிலே உள்ள சிறப்புப் பண்புகளையும் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பிப்பார். ஆசிரியருக்குரிய துணிவு, சிந்தனைத் தெளிவு, கண்டிப்பு, தான் கருதியவற்றை மறைக்காமல் கூறுதல், மாணவர் கருத்து வளர்ச்சியைத் தூண்டுதல் எனப் பல்வேறு பண்பு நலன்களைக் கொண்டு விளங்கினார். மரபுவழிச் சிந்தனையும், நவீன சிந்தனையும் கொண்ட மிகச் சிறந்த பல்கலைக்கழகத் தமிழ் பேராசிரியராக செல்வநாயகம் போற்றப்பட்டார்.
“ தமிழ் இலக்கிய பரப்பினை தெளிவாகத் தெரிந்து கொண்டு, அதன் வளர்ச்சிக் கட்டங்களைப் பாகுபாடு செய்து, அப்பாகுபாட்டுக்கான அடிப்படைகளுள் அரசியல் மாற்றங்களை முதன்மைப்படுத்தி, ஒவ்வொரு பகுதியினையும் சார்ந்த இலக்கியங்களின் பொருளமைதிக்கான காரணிகளைச் சுட்டி, அவ்விலக்கியங்களின் வடிவ அமைதி, மொழிப் பிரயோகம் ஆகியவற்றையும் விளக்கி எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கிய வரலாற்று நூலுக்கு ஆசிரியராக அமைந்தவர் பேராசிரியர் வி. செல்வநாயகம் ” என பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்கள், பேராசிரியர் வி.செல்வநாயகம் நினைவுப் பேருரையில் பதிவு செய்துள்ளார் .
இவர் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு ’ என்னும் நூல் தமிழ்நாட்டில் பலரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுக்கு முன் மாதிரியாக அமைந்தது. ஆனால், தமிழ்நாட்டு தமிழ் அறிஞர்கள் எவரும், எவ்விடத்திலும் இவ்வுண்மையைத் தங்கள் நூல்களில் குறிப்பிடவில்லை.
தமிழ் கற்கும் மாணவர்களுக்காக ‘தமிழ் இலக்கிய வரலாறு ’ எழுதினார். இந்த வரலாற்றின் மூலமாக தமிழ் இலக்கியங்கள் எவையவை என அறிவதுடன், இலக்கிய இரசனையும் பெற முடியும்.
தமிழ் இலக்கிய வரலாறு பற்றி முதன் முதல் சிந்தித்தவர் சி.வை. தாமோதரம்பிள்ளை. அவருடைய பாகுபாடு, அபோத காலம், அஷரகாலம், இலக்கண காலம், சமுதாய காலம், அநாதார காலம், சமணர் காலம், இதிகாச காலம், ஆதின காலம் என அமைந்துள்ளது. இவருக்குப் பின்னர் எழுந்த இலக்கிய வரலாற்று நூல்களின் காலப்பகுப்பு பின்வருமாறு நோக்கப்படுகிறது
- பொதுவாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கினை ஆதிகாலம், மத்திய காலம், நவீன காலம் என வகுத்தல், கமில் சுவலபில், அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.வரதராசன், தேவநேயப் பாவாணர் ஆகியோருடைய எழுத்துக்களில் இத்தகைய பாகுபாடு காணப்படுகின்றது.
- சமய நோக்கினை முக்கிய அடிப்படையாகக் கொண்டு காலப்பகுதியினை மேற்கொள்ளுதல். எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை, எம் .சீனிவாச ஐயங்கார், மறைமலையடிகள், கா. சுப்பிரமணியபிள்ளை ஆகியோருடைய காலப்பகுதி இவ்வகையில் அமைகின்றது.
- தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையான சில நிறுவனங்கள், இயக்கம், போக்குகள், இலக்கிய வடிவங்கள் ஆகியவற்றின் பின்னணியில் எஸ்.வையாபுரிப்பிள்ளை, ஜேசுதாசன், ந. சுப்பிரமணியம் ஆகியோர் காலப் பாகுபாட்டினைச் செய்துள்ளனர்.
- அரசியல், சமயம், நிறுவனம், இலக்கிய வடிவம் என்னும் அடிப்படையில் மு.அருணாசலம் காலப் பாகுபாட்டினை மேற்கொண்டுள்ளார்.
- இலக்கியத்தின் வழி வரலாறு என்ற அடிப்படையில் கா.சிவத்தம்பி, (அ). ஆரம்பம் முதல் கி.பி. 600 வரை, (ஆ) கி.பி. 600 முதல் 1400 வரை (இ) கி.பி.1400 முதல் 1800 வரை, (ஈ) கி.பி.1800 முதல் இன்று வரை என நான்கு பிரிவுகளாக வகுத்துள்ளார்.
மேற்கண்டவர்களிலிருந்து வேறுபட்ட நோக்கினை உடையவராகப் பேராசிரியர் வி. செல்வநாயகம் விளங்கினார்.
அவர் ‘ சங்கம் ’ என்னும் நிறுவனத்தையும், தமிழ்நாட்டு அரசியல் மாற்றங்களையுமே தன்னுடைய தமிழிலக்கிய வரலாற்றுக் காலப் பகுப்புக்கு அடிப்படைகளாகக் கொண்டார். கி.பி. ஆறாம் நூற்றாண்டுடன் தொடங்கும் பல்லவ மன்னர்களுடைய ஆட்சி போன்று, அதற்கு முன்னர் சேரரோ, சோழரோ, பாண்டியரோ, களப்பிரரோ நீண்ட கால நிலையான ஆட்சியினை அமைக்கவில்லை. அத்துடன் சங்க இலக்கியச் செய்யுட்களை ஆராய்ந்தால், அவற்றிலே குழுத் தலைவர்கள் நிலையிலிருந்து அரசர் என்ற நிலைக்கு மாற்றமடையும் அரசியல் வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். எனவே, பல நூற்றாண்டுகளுக்கு முன் இறையனார் களவியல் உரைகாரர் குறிப்பிட்ட சங்கம் என்னும் நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டு கி.பி. 600 வரையிலான தமிழிலக்கிய வரலாற்றுக் காலத்தைச் ‘ சங்க காலம் ’ என்னும் ‘சங்கம் மருவிய காலம் ’ என்னும் பாகுபாடு செயதுள்ளார். ஏனையவை பல்லவர் காலம், சோழர் காலம், விஜயநகர நாயக்கர் காலம், அய்ரோப்பியர் காலம் என அரசியல் மாற்றத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட பாகுபாடுகளாகும். நவீன நோக்கினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுக்கெல்லாம் ‘ தமிழ் இலக்கிய வரலாறு ’ காலத்தால் முந்தியதாகும். இந்நூல் பின்வந்த பல தமிழிலக்கிய வரலாற்று ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
‘தமிழ் இலக்கிய வரலாறு’ நூல் மாணவர்களுக்கு ஒவ்வொரு காலப்பகுதியின் இலக்கியங்களையும், அவை தோன்றிய காலப் பின்னணியையும், அவ்விலக்கியங்களுடைய பொருள், செய்யுள், மொழி ஆகியவற்றை தெளிவாக விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
அ. சங்ககாலம் :- 1. முச்சங்கங்கள் 2. சங்கச் செய்யுளும் பொருள் மரபும் ; அன்பினைந்திணை, கைக்கிளை- பெருந்திணை, புறத்திணை 3. எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும்,
- சங்கப் புலவரும் சங்க இலக்கியப் பண்பும்.
ஆ. சங்கம் மருவிய காலம் : 1. அரசியல் நிலை, 2. பண்பாட்டு நிலை, 3. சமயநிலை, 4.நூல்கள், 5. உரைநடை இலக்கியம் 6. இலக்கியப் பண்பு.
இ. பல்லவர் காலம் : 1. பல்லவர் காலத்துத் தமிழ்நாடு, 2. சமய நிலை, 3. கலை வளமும் இலக்கியப் பண்பும், 4. பக்திப் பாடல்கள், 5. பிறநூல்கள், 6. உரைநடை நூல்கள்.
ஈ. சோழர் காலம் : 1. அரசியல் நிலை, 2. சமய நிலை, 3.இலக்கியப் பண்பு, 4.திருமுறைகளும் நாலாயிர திவ்யப்பிரபந்தங்களும், 5. காவியங்கள், 6. சிற்றிலக்கியங்கள், 7. இலக்கண நூல்கள், 8. சைவசித்தாந்த நூல்கள் 9. உரைநூல்கள்
உ. நாயக்கர் காலம் : 1. அரசியல் நிலை, 2. சமய நிலை, 3. இலக்கியப் பண்பு, 4. பிரபந்தங்கள், 5. இலக்கியங்கள், 6. உரையாசிரியர்கள் 7. தமிழை வளர்த்த அரசர்களும் ஆதினங்களும் .
ஊ. அய்ரோப்பியர் காலம் : 1. அரசியல் நிலை, 2. சமய நிலை, 3. இலக்கியப் பண்பு, 4. உரை நடையிலக்கியம், 5. செய்யுள் இலக்கியம், 6. நாடக இலக்கியம்.
எ. இருபதாம் நூற்றாண்டு : மக்கள் வாழ்க்கை முறையிலே மாற்றம், பொது மக்களுக்குரிய காலம், பாரதி முதலான கவிஞர்கள், தமிழ் உரை நடை வளர்ச்சி, நாவல், சிறுகதை, இலக்கிய விமர்சனம், நாடக இலக்கியம்.
ஈழத்திலிருந்து முதன் முதல் வெளிவந்த தமிழ் இலக்கிய வரலாறு என்ற பெருமையும், தமிழகத்து அறிஞர்கள் பலருக்கு வழிகாட்டியாக அமைந்தது என்னும் சிறப்பும் இவர் எழுதிய ‘ தமிழ் ’ இலக்கிய வரலாறு ’ நூலுக்கு உண்டு.
‘தமிழ் இலக்கிய வரலாறு ’ என்னும் நூல் தமிழ் இலக்கிய வரலாறு பற்றி எழுதப்பெற்ற நூல்களுள் முக்கியமான ஒன்றாக போற்றப்படுகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றினைத் தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்ச்சிகளின் பின்புலத்தில் எடுத்துக் கூறிய முதல் பாடநூல் இதுவாகும். இந்நூலின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் வையாபுரிப்பிள்ளை முதல் ஜேசுதான் வரை பல தமிழிலக்கிய அறிஞர்கள் போற்றியுள்ளனர்.
‘கலாசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழைக் கற்க விரும்பும் மாணவர்கள் முதலில் தமிழிலக்கிய வரலாற்றினை ஓரளவிற்காயினும் அறிந்திருத்தல் வேண்டும். அதனைச் சுருக்கமாக அறிந்திருந்தாற்றான் விரிவான நூல்களை அவர்கள் மனங்கொண்டு படிக்க விரும்புவார்கள். மாணவர்களுக்கு உதவும் பொருட்டே இந்நூலை யான் எழுதத் துணிந்தேன். சுருக்கமான இந்நூலின் கண் தமிழிலக்கிய வரலாற்றிலுள்ள எல்லா விஷயங்களையும் கூறுதல் முடியாது. இலக்கியப் பண்பினை மட்டும் இதன்கண் சுருக்கமாகக் காட்டியுள்ளேன். அதனோடு தொடர்புடைய மக்கள் வாழ்க்கை, நாட்டின் அரசியல், சமயநிலை முதலியவற்றைப் பற்றியும் ஆங்காங்கு சுருக்கமாகக் குறித்துள்ளேன்.” என ‘ தமிழ் இலக்கிய வரலாறு ’ நூலின் முன்னுரையில் பேராசிரியர் வி. செல்வநாயம் கூறியுள்ளார்.
தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அறிவியல் பூர்வமான தமிழின் இலக்கிய வரலாற்றையும் உரைநடை வரலாற்றையும் பற்றிய அழியாப் புகழ்கொண்ட நூல்களைத் தந்த பேராசிரியர் விநாசித்தம்பி செல்வநாயம் ” எனப் புகழ்ந்துரைத்துள்ளார் பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி.
இவர் எழுதிய தமிழ் உரைநடையின் வரலாறு என்னும் நூல், தக்க சான்றுகளுடன் உரைநடை வளர்ச்சிப் படிகளை இனங்காட்டி, அவற்றை நல்ல தமிழ் நடையிலே விளக்கி எழுதப்பட்டுள்ளது.
“ உலகிலுள்ள எந்த மொழியிலாயினும் இலக்கியம் தோன்றும் பொழுது அது செய்யுள் வடிவத்திலேயே முதலில் தோன்றுகின்றது. பாட்டைத் தொடர்ந்து உரைநடை வெளிவருகின்றது. எனவே, தமிழ் மொழியிலும் முதலில் தோன்றியது பாட்டு என்றும் அதனைத் தொடர்ந்து உரைநடை தோன்றியது என்றும் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும் ” என ‘தமிழ் உரை நடை வரலாறு ’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் உரைநடைப் பரப்பினை ஐந்து கால கட்டங்களாகப் பகுத்து ஆராய்கின்றார். 1. சங்ககாலம், 2. களவியலுரைக் காலம், 3. உரையாசிரியர்கள் காலம், 4. அய்ரோப்பியர் காலம், 5. இருபதாம் நூற்றாண்டு.
ஓவ்வொரு காலத்து உரைநடை வகைகளை இலக்கியச் சான்றாதாரங்கள் மூலம் வகைப்படுத்திக் காட்டுகின்றார். ஒவ்வொரு வகை நடையின் தனித்துவமான பண்புகளை இனங்கண்டு, அத்தகைய நடையினாலே ஏற்படக்கூடிய பயன்களையும் விளக்கிக் கூறியுள்ளார்.
“ பாட்டினோடு ஒப்புநோக்கும் பொழுது அதிலிருந்து வேறுபட்டு நிற்கும் ‘ உரை ’ தமிழ் இலக்கியத்தினுள் எவ்வாறு வந்து சேர்ந்ததென்ற வரலாற்றை எடுத்துக் கூற முனையும் பேராசிரியர் அந்த வருகையின் வளர்ச்சி வரலாற்றைப் படிநிலைப்படித்திக் கூறுகின்றார். அவ்வாறு கூறும் பொழுது, தமிழ் இலக்கியத்தில் ‘ உரை ’ யானது எவ்வெவ் கட்டங்களில் இலக்கிய நிலைபெற்று வந்துள்ளது என்பதையும் அப் ‘ பேறு ’ எத்தகையனவாக அமைந்து வந்திருக்கின்றதென்பதையும் எடுத்து விளக்குவதுடன் அவ்வவ் காலங்களில் பயன்படுத்தப்பட்ட உரையின் ‘ நடை ’ முறைமையும் எடுத்துக் கூறியிள்ளார் ” என ‘ உரைநடை வரலாறு ’ நூலின் பின் குறிப்பில் பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார்.
இவர் எழுதிய ‘ உரைநடை வரலாறு ’ என்ற நூலில் தமிழில் உரை எவ்வாறு இலக்கிய வாகனமாக படிப்படியாக வளர்ச்சி பெற்றது என்ற வளர் நெறியினை மிக்க தெளிவுடன் எடுத்துக் கூறியுள்ளார்.
இவர் இலக்கியத் திறனாய்வு குறித்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்க மலரான இளங்கதிர் இவரது பல கட்டுரைகளை வெளியிட்டது. ‘ சொல்லும் பொருளும் ’, ‘ பாட்டும் ஓசையும் ’, ‘ வழக்குஞ் செய்யுளும் ’ ‘ கடலோசை ’, ‘ கடல் ’, ‘ ஞானப்பிரகாச சுவாமிகள் ’ ‘ கண்ணுற்றான் வாலி ’, ‘ தமிழிலக்கியமும் பக்திப் பாடல்களும் ’, ‘ கம்பனில் ஒரு பாட்டு ’ ‘ புறநானூற்றில் ஒரு பாட்டு ’, ‘ பழந்தமிழ் செய்யுள் மரபு ’ ‘ பாஞ்சாலி சபதத்தின் புதுமையும் பழமையும் ’ ‘ உவமையும் உருவகமும் ’ முதலிய இலக்கிக் கட்டுரைகள் சிறப்புடையதாகும். ‘பேராசிரியர் வி. செல்வநாயகம் கட்டுரைகள்’ என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.
சங்க இலக்கிய மரபினை ‘Tradition in Early Tamil Poetry ’ (University of Cyclone Review) என்னும் கட்டுரையை ஆங்கிலத்தில் படைத்து உலகம் முழுவதும் தமிழ் இலக்கி பெருமையை பறைசாற்றியுள்ளார்.
“இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் கேரளப் பல்கலைக் கழகத்திலும் தான் அறிவியல் ரீதியான தமிழிலக்கிய ஆய்வுகள் நடைபெறுகின்றன. ” என்று 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கமில் சுவலபில் குறிப்பிட்டார். அந்தளவுக்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழிலக்கிய ஆய்வுகள் அறிவியல் பூர்வமாக நடைபெற்றது என்பதை அறியமுடிகிறது.
“சங்க இலக்கிய திணைக் கோட்பாடு பற்றி இக்கட்டுரையே முதன் முதலாகப் புதியதொரு கருத்தினை முன் வைத்ததெனலாம்” எனப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் பதிவு செய்துள்ளார்.
சிலப்பதிகாரம், மணிமேகலையின் காலம் என்னும் ஆங்கிலக் கட்டுரை சிலப்பதிகாரம் மணிமேகலையிலும் பார்க்க காலத்தில் முற்பட்டது எனக் கூறியுள்ளார்.
“பேச்சு வழக்கில் உள்ள மொழி தான் வாழும் மொழி ; அதற்கு உள்ள ஆற்றலை அவதானித்து அறிந்து, அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றவனே சிறந்த எழுத்தாளனாகின்றான் ” என்று வழக்குஞ் செய்யுளும் ” என்னும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தில் முக்கியமான இலக்கிய விமர்சகர்களை உருவாக்கியவர். இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் தலைவராகவும் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணை வேந்தராகவும் பதவி வகித்தார்.
தமிழிலக்கிய வரலாற்றாசிரியராகவும் தலைசிறந்த இலக்கியத் திறனாய்வுக் கட்டுரையாசிரியராகவும் திகழ்ந்தவர். பல ஆண்டு காலம் இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்கத்தில் இணைந்து செயல்பட்டதுடன், அதன் தலைவராகவும் பணியாற்றினார்.
பேராசிரியர் வி. செல்வநாயகம் 1973 ஆம் ஆண்டு சூன் மாதம் 14 ஆம் தேதி தமது 66 வது வயதில் காலமானார்.
- பி.தயாளன்