ஏதன்ஸ் நகரில் கட்டப்பட்ட (கட்டப்பட்டுக் கொண்டிருந்த என்று சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்) பார்தினான் என்கிற கோயில் கிரேக்க கட்டிடக் கலைக்கு பெயர் போனது. கி.மு. ஆறாம் நூற்றாண்டு முடியும் ஆண்டுகளில் இதன் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். டோரிக் கட்டிட அமைப்பில் இந்த கோயில் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. கடவுள் ஏதினாவுக்கான கோயில் இது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்க காலப் பகுதியில் பெரிசியர்கள் கிரேக்க நகரங்களின் மீது படையெடுத்தார்கள். இந்தப் பெரும் படையெடுப்பு குறித்து ஹிரடோடஸ் தன்னுடைய ஹிஸ்டிரிஸ் புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். (ஹிரடோடஸ் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த வரலாற்று அறிஞர். வரலாற்றின் தந்தை என்றும் மேற்கில் சிறப்பிக்கப்படுபவர்). கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெர்சியப் பேரரசன் டேரியஸ் ஐரோப்பிய நிலப்பரப்பிற்குள் தன்னுடைய ஆட்சியை விரிவாக்கும் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். ஐயோனியா, திரேஸ் மற்றும் மாசிடோனியா போன்ற கிரேக்க நகரங்கள் இந்த படையெடுப்பின் மூலம் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் வந்தன. அவனுடைய அடுத்த குறி ஏதென்ஸ், ஸ்பார்டா மற்றும் கொரிந்த்.

ஏதென்சும் ஸ்பார்டாவும் கூட்டு சேர்ந்து டேரியசின் படைகளை வெற்றிக் கொள்கின்றன. இது நடந்தது சுமார் கி.மு. 486 வாக்கில். டேரியசைத் தொடர்ந்து பெர்சியப் பேரரசனாக வந்த ஸிரக்சஸ் கி.மு. 480 வாக்கில் மீண்டும் கிரேக்க நகரங்களான ஏதன்ஸ், ஸ்பார்டா மற்றும் கொரிந்த் மீது படையெடுத்தான். ஸிரக்சஸ் முற்றிலுமாக தன்னுடைய படையெடுப்பில் வெற்றி பெறவில்லை என்றாலும் கிரேக்க நகரங்களான ஏதென்ஸ், ஸ்பார்டா போன்றவைகளை முற்றிலுமாக எரித்து நிர்மூலமாக்கினான். ஸிரக்சசின் படையெடுப்பால் கிரேக்க நாகரீகம் அழிவின் எல்லைக்கே சென்றுவிட்டது. ஸிரக்சஸால் அவனுடைய வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. கிரேக்கத்தின் பல போர் முனைகளில் அவனுடையப் பெர்சியப் படை தோற்று பின்வாங்கி ஓடியது. ஸிரக்சஸின் பின்வாங்கலின் மூலம் கிரேக்க நகரங்கள் தப்பிப் பிழைத்தன. ஸிரக்சஸின் போர் நடவடிக்கைகளில் ஒன்றில்தான் நாம் மேலே பார்த்த ஏதென்சின் பார்தினான் கோயில் தரைமட்டமாக நிர்மூலமாக்கப்பட்டது. இன்றைக்கு இருக்கும் பார்தினான் கோயில் பெர்சியப் போர் முடிந்து கிரேக்கத்தில் தொடங்கிய கிளாசிக்கல் காலகட்டத்தின் தொடக்கத்தில் மீண்டும் கட்டப்பட்டக் கோயில்.

பெர்சியப் படையெடுப்பே ஆர்காயிக் காலகட்டத்தின் முடிவும் கிளாசிக்கல் காலகட்டத்தின் தொடக்கமும். போரின் அழிவுகளிலிருந்து மீண்டு வர கலைகள் கிரேக்கர்களுக்கு பெரும் உந்துதலாக இருந்தது. ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, இலக்கியங்கள் என்று கிரேக்க கலைகள் அதன் பொற்காலத்தை நோக்கி நகர்ந்தது இந்த காலகட்டத்தில்தான். அதன் காரணமாகவே இந்த காலகட்டத்திற்கு கிளாசிக்கல் காலகட்டம் என்று இன்றைய ஆராய்ச்சி உலகம் பெயர் தந்திருக்கிறது. மேற்கத்திய ஓவியக் கலையின் தொடக்கம் கிளாசிக்கல் காலகட்டம். ஓவியக் கலையின் பெர்ஸ்பெக்டிவ் அடிப்படை முழுதுமாக கண்டுபிடிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது இந்த காலகட்டத்தில்தான். ஆர்காயிக் காலகட்டத்தில் யூதிமைடிஸ் விட்ட இடத்திலிருந்து கிளாசிக்கல் காலகட்டத்தின் தொடக்கத்தில் ஓவியக் கலையை அடுத்த புரட்சிகரமான நகர்வை நோக்கி நடத்திச் சென்றவர் போலிக்னோடஸ் (சுமார் கி.மு. 500 – 440). மேற்கத்திய ஓவியக் கலையில் பெர்ஸ்பெக்டிவை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தவர் என்கிற சிறப்பு இவருக்குத் தரப்பட்டிருக்கிறது. போலிக்னோடஸ் மண் பாண்டப் பொருள்களில் வரையும் ஓவியர் அல்ல, மாறாக அவர் சுவரில் வரையும் ஓவியக் கலைஞர். இவருடைய எந்த ஓவியங்களும் இப்போது கிடைக்கவில்லை.

ஆனால் இவருடைய ஓவியக் கலை மேதமையின் தாக்கம் பல பிற்கால ஓவியர்களின் படைப்புகளில் படியெடுக்கப்பட்டிருக்கிறது. போலிக்னோடஸ் மனிதர்களின் குணாதிசயங்களை அதை அவர்கள் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உடல் மொழி மூலம் வெளிப்படுத்தும் தருணங்களை தன்னுடைய ஓவியங்களில் முழுக்க இயல்பான தன்மையில் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். ஒலிம்பியாவில் இருக்கும் ஷூயஸ் கடவுள் கோயிலின் கிழக்கு பக்க பெடிமெண்ட் உறுப்பிலிருக்கும் சிற்பத் தொகுதி இவருடைய ஓவியக் கதாபாத்திரங்களின் தாக்கம் என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். வெனிசிங் பாயிண்டிற்கு அருகிலிருக்கும் உருவங்கள் உருவத்தில் சிறிதாகவும் ஓவியத்தின் முன் பகுதியில் இருக்கும் உருவங்கள் உருவத்தில் பெரிதாகவும் இருக்கும்படி ஓவியங்களை தீட்டத் தொடங்கிய, முதல் கிரேக்க ஓவியர் இவரே. பிறந்தது கிரேக்க ஓவியக் கலையில் பெர்ஸ்பெக்டிவ். ஓவியக் கலையின் முழுமையான அடுத்தக் கட்ட பாய்ச்சலுக்கு வழி செய்து கொடுத்தார் போலிக்னோடஸ். இலுப்பெர்சிஸ் மற்றும் நெகியா ஆகிய காவியங்களின் கதை வடிவக் காட்சிகளில் சில டெல்பி கோயில் சுவர்களில் வரையப்பட்டிருந்ததாகவும், அவைகள் போலிக்னோடசின் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட (அல்லது படியெடுக்கப்பட்ட) ஓவியங்கள் என்றும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்கப் பயணி பவுஸ்சானியஸ் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார். போலிக்னோடசின் ஓவியப் படைப்புகள் குறித்து மிக விரிவாகப் பேசுவது இவருடைய புத்தகம் ஒன்று மாத்திரமே. இவரின் புத்தம் வழியாகவே இன்றைய ஆராய்ச்சியாளர்கள் போலிக்னோடசின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொண்டிருக்கிறார்கள்.

இவரைத் தொடர்ந்து ஓவியக் கலையின் அடுத்த பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டியவர் அகத்தார்கஸ். இவர் போலிக்னோடஸின் சமகாலத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. பெர்ஸ்பெக்டிவ் அடிப்படையைக் கொண்டு சுவரிலோ அல்லது கேன்வாசிலோ வரையப்படும் சீனிக் பெயின்டிங் உத்தியைக் கண்டுபிடித்தவர் இவரே. இன்றைய நிலையில் மனித முகத்தையோ அல்லது உருவத்தையோ மட்டும் காட்டும் போர்ட்ரெயிட் ஓவியங்களைத் தவிர மற்ற அனைத்து ஓவியங்களையும் சீனிக் பெயின்டிங் வகைக்குள் கொண்டுவந்துவிட முடியும். நவீன கால ஓவியத்தின் முழுமையான பிறப்பு இதிலிருந்தே தொடங்குகிறது.

(முற்றும்)

- நவீனா அலெக்சாண்டர்

Pin It