டைக்ரீஸ் யூப்பிரடீஸ் நதிகள் வடக்கு தெற்காக பல பலம் மிக்க நகரங்களை உருவாக்கி, அதன் மூலம் மெசபட்டோமிய பகுதியில் பேரரசிற்கான ஓயாத போர்களை உருவாக்கிய சங்கதி இதுவரையில் நாம் அறிந்ததுதானே. அந்த வகையில் ஊர், ஊர்க், கிஷ், அக்கேட், பாபிலோனியா போன்ற பலமிக்க நகரங்களின் வரிசையில் வரும் அடுத்த நகரம் அசூர். இது டைக்ரீஸ் யூப்பிரடீஸ் நதிகளின் வடக்குப் பகுதியில் இருந்த நகரம். இந்த நகரில் மனித குடியிருப்புகளுக்கான தொடக்க கால தொல்லியல் ஆதாரங்கள் கி.மு. 3000 தொடங்கியே கிடைக்கத் தொடங்கிவிடுகிறது. இந்த நகரால் உருவாக்கப்பட்டது அசீரிய நாகரீகம். அசீரிய நாகரீகத்தை மூன்று நிலைகளாக பிரிக்கிறார்கள். பழைய அசீரிய காலகட்டம் (கி.மு. 3000 – 1364) (சில ஆராய்ச்சியாளர்கள் கி.மு. இருபதாம் நூற்றாண்டிலிருந்துதான் பழைய அசீரிய காலகட்டம் தொடங்குவதாக கருதுகிறார்கள்), இடை அசீரிய காலகட்டம் (கி.மு. 1365 – 1077) மற்றும் புதிய அசீரிய காலகட்டம் (கி.மு. 1076 – 935). பழைய அசீரிய காலகட்டம் முழுவதும் அசூர் நகரம் சுமேரிய மற்றும் அக்கேடிய அரசுகளுக்கு அடங்கியிருந்தது. இடை அசீரிய காலகட்டம் தொடங்கியே அசூர் நகரம் மெசபட்டோமிய ஒருங்கிணைந்த பகுதியின் வல்லரசாக மாற்றமடைகிறது.

assyria map

அசூர் நகரில் முதல் அரசு தோற்றத்திற்கான முறையான வரலாற்றுத் தகவல்கள் கி.மு. இருபதாம் நூற்றாண்டு முதல் கிடைக்கத் தொடங்கிவிடுகிறது என்றாலும், பதினைந்தாம் நூற்றாண்டு வரையான ஐந்நூறு நூற்றாண்டு காலம் அசீரியா, மிட்டானிய இனக் குழு மக்களின் வல்லாட்சியின் கீழே இருந்து வந்தது. கலை, அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளில் அசீரிய நாகரீகத்திற்கான தனித்துவம் என்பது இல்லாமல், அனைத்தும் மிட்டானிய மயமாகவே இருந்தது. கி.மு. பதினான்காம் நூற்றாண்டு முதலே அசீரியாவின் எழுச்சி தொடங்குகிறது.

அசீரிய கலை காலகட்டம்

அசீரிய கலை வரலாறும் பல நிலைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பழைய அசீரிய காலகட்டம், இடை அசீரிய காலகட்டம் மற்றும் புது அசீரிய காலகட்டம்.

பழைய அசீரிய காலகட்டம் (கி.மு. 1900 - 1364)

முன்பே பார்த்ததைப் போல பழைய அசீரியக் கலைகள் மிட்டானிய கலைகளின் நகல்களாகவும் பிரதிபலிப்புகளாகவுமே இருந்தன. மிட்டானிய கலைகள் குறித்து போதுமான அளவிற்கான தொல்லியல் மற்றும் கலை வரலாற்று ஆதாரங்கள் இன்னமும் கிடைத்தபாடில்லை. மிட்டானிய கலைகளை ஆராய்வதன் வழியாகவே பழைய அசீரிய கலைகளைக் குறித்து நாம் அறிந்து கொள்ள முடியும் என்கிற நிலை இருக்கிறது. கிடைத்திருக்கும் சொற்ப ஆதாரங்களைக் கொண்டு பார்க்கும்போது, மிட்டானிய கலைகள் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசத்தை சிற்ப மற்றும் ஓவியக் கலைகளில் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் கலைகளின் பேசுபொருள் குறித்த புரிதல்களுக்கு பல ஆதாரங்கள் நமக்குக் கிடைக்க வேண்டியிருக்கிறது.

இடை அசீரிய காலகட்டம் (கி.மு. 1365 - 1077)

எரிபா அடாட் I மற்றும் அசூர் உபாலிட் I ஆகிய அரசர்களின் ஆட்சியின்போதே அசீரியா மிட்டானிய வல்லாதிக்கத்தை மீறி, தனிப் பெறும் சுதந்திர நாடாக நிலைமாற்றம் அடைகிறது. இந்த நிலைமாற்றம் கலைகளிலும் எதிரொலித்தது. வேறு வகையில் சொல்வதென்றால் கலைகள் எதிரொலிக்கத் தொடங்கி, சுதந்திர சிந்தனையையே பிற்பாடு அரசியல் துறை முன்னெடுத்துச் சென்றது என்று சொல்லலாம். கொச கொசவென்று உருவங்களை வைத்து படைப்பு வெளியை நிரப்பும் மிட்டானிய கலைகளின் பாணி சுத்தமாக கைவிடப்பட்டது.

சிற்பக் கலை

மெசபட்டோமிய கலை படைப்பின் கட்டமைப்பில் (கம்போஷிசன்) இயங்கியலை (மூவ்மெண்ட்) அதிகபட்சமாகவும், அழகியல் தன்மையுடனும் வெளிப்படுத்தியவர்கள் அசீரியக் கலைஞர்கள். மெசபட்டோமிய மேஜிக்கல் ரியலிசக் கலைகள் என்றாலே அமோரைட் பாபிலோனிய கலைஞர்கள் நினைவிற்கு வருவதைப் போல இயங்கியல் கட்டமைப்பின் அடையாளமாக இருந்தவர்கள் அசீரிய கலைஞர்கள். சிற்பங்களில் மனித மிருக உருவங்கள் உறைந்துபோய் ஒரு நிலையில் நின்றுகொண்டு பார்வையாளர்களை வெறிப்பதை அசீரியக் கலைஞர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. அவர்கள் வடித்த புடைப்புச் சிற்பங்கள், முழு உருவ சிற்பங்கள் என்று அனைத்தும் தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை இந்த உலகம் இருக்கும் அளவிற்கும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அமைப்பில் இருக்கும்படியே வடிக்கப்பட்டிருக்கின்றன.

உருளை முத்திரை, சதுர முத்திரை என்று படைப்பிற்கான ஊடகம் எதுவாக இருந்தாலும், எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதில் அகலமான இயற்கை வெளியையும் (ஸ்பேஸ்), இயங்கியலையும் உருவாக்குவதில் அசீரிய சிற்பக் கலைஞர்களின் கற்பனை வளம் கொடிகட்டிப் பறந்திருக்கிறது. படைப்பு ஊடகத்தின் நிறை குறைகள் அவர்களின் கற்பனை வளத்தையும், படைப்பு சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லை.

assyria sculpture

(அசீரிய புடைப்பு சிற்பம். போர்க்களத்தில் ஆயுதம் தயாரிக்கும் கொல்லர்.)

ஓவியக் கலை

இந்த காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியங்கள் துண்டுத் துணுக்குகளாகத்தான் நமக்குக் கிடைக்கின்றன. அவைகளை வைத்து ஒருவர் அனுமானம் செய்வதென்றால், ஓவியக் கலையிலும் இயங்கியலுக்கு அதிக முக்கியத்துவத்தை ஓவியக் கலைஞர்கள் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

புது அசீரிய காலகட்டம் (கி.மு. 1076 – 935)

இடை அசீரிய காலகட்டத்தில் அசீரியா, மெசபட்டோமிய நிலப் பகுதியில் பேரரசு நிலைக்கு வந்துவிட்டிருந்தாலும், அந்த நிலையை தக்க வைத்துக்கொள்ள ஓயாத படையெடுப்புகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிலை. மனித வளம், இரத்தம் என்று இரண்டையும் சேர்த்து உறிஞ்சும் போர் நடவடிக்கைகள் நூற்றாண்டுகளுக்கு நீடித்துக் கொண்டிருந்தது. அசீரிய அரசர்கள் அசராமல் தலைமுறை தலைமுறையாக அக்கம் பக்கம் நாடுகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள். போதாததற்கு நாடோடி இனக் குழு மக்களின் ஊடுருவல்கள் வேறு. அதையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த நாடோடி இனக் குழுவில் மெசபட்டோமிய, அனட்டோலிய (இன்றைய துருக்கி) அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது அரமேய இனக் குழு. அசீரிய அரசர்கள் இவர்களின் பரவலையும் தடுக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். படையெடுப்பு, போர்கள், பேரரசு விரிவாக்கம், உலகப் பேரரசு கனவு என்று அசீரிய அரசர்கள் பூட்டன், முப்பாட்டன், பாட்டன், அப்பன், பேரன், கொள்ளுப்பேரன் என்று ஓடிக்கொண்டே இருந்தார்கள். இதன் காரணமாக கலைகளை ஆதரித்து வளர்த்தெடுப்பதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமும் பொருளாதாரமும் இல்லாமல் போயிற்று. ஒருவழியாக இந்த ஓட்டத்திலிருந்து விடுபட்டு, அவர்கள் அக்கடா என்று பெருமூச்சு விட்டது புது அசீரிய காலகட்டத்தில்தான்.

கட்டிடக் கலை

அசுர்-நசிர்பல் II, தலைநகரான நிம்ரூதில் கட்டிய அரண்மனை இந்த காலகட்டத்து கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டு. அசீரிய அரசர்கள் வென்று அடக்கிய அரமேய அடிமை மக்களைக் கொண்டே அசுர்-நசிர்பல் II இந்த அரண்மனைக் கட்டிடத்தை மேலும் விரிவுப்படுத்தியிருக்கிறான். பின்னர் அந்த மக்களை அவன் விடுதலை செய்துவிட்டது வேறு கதை.

nimruth palace

(நிம்ரூத் அரண்மனையின் எஞ்சிய பகுதி)

பின்னால் வர இருக்கும் பிரம்மாண்ட அசீரிய அரண்மனைக் கட்டிடங்களுக்கெல்லாம் முன்னோட்டம் நிம்ரூத் அரண்மனை. அரசு, அரசன் குறித்த கோட்பாடு அசீரிய நாகரீகத்தின் உயிர் மூச்சுப் போன்றது. பல நூற்றாண்டுகள் அசீரிய அரசர்கள் சளைக்காமல் போர்க்களங்களில் அவர்களின் ஆயுசுகளைக் கழித்ததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். அசீரிய நாகரீகத்தின் எழுச்சி முன்பான காலகட்டம் வரை மெசபட்டோமியாவில் அரசுக் கோட்பாடு பெரிதும் மதத்துடன் கட்டுண்டதாகவே இருந்தது. சுமேரிய, அகேடிய, அரோமைட் பாபிலோன் பேரரசுகள் என்று எதுவும் இதில் விதிவிலக்கானது கிடையாது. ஆனால் அசீரியப் பேரரசு இதில் முற்றிலும் விதிவிலக்காக இருந்தது. அரசு, அரசின் தீமைகளை எதிர்த்து போர் புரிபவர்கள், போர் புரிபவர்களாக இருக்க வேண்டும். எந்த நிலையிலும் தீமைக்கு எதிராக போர் புரிந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது இடைக்கால மற்றும் புது அசீரிய நாகரீகத்தின் அரசியல் சமூகக் கோட்பாடு. இதுவே முதன்மையாக அவர்களின் கலைகளிலும் பிரதிபலித்தது. இதில் ஒன்று கட்டிடக் கலை.

சிற்பக் கலை

மெசபட்டோமிய நிலப் பகுதி அதுவரை கண்டிராத ஒரு புது வகை சிற்ப வகையை இந்த காலகட்ட அசீரிய சிற்பக் கலைஞர்கள் அசீரியாவில் அறிமுகப்படுத்தினார்கள். அது ஆப்லிஸ்க் சிற்பங்கள். மேலும் சிற்பங்கள், அரண்மனை மற்றும் கோயில் கட்டிடங்களின் அலங்கார உறுப்புகள் மட்டுமே என்கிற நிலையையும் உடைத்து, சிற்பங்கள் அதன் இயல்பில் தனித்துவம் கொண்டவைகள் என்பதையும், மெசபட்டோமிய நிலப்பகுதிக்கு உணர்த்தியவர்கள் இந்த காலகட்ட சிற்பக் கலைஞர்கள். இதற்கு முழு சுதந்திரமும் அசீரிய அரசர்கள் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அசீரிய சிற்பக் கலைக்கே உரிய தனித்த அடையாளமாக இருப்பது லாமாசு என்கிற புடைப்பு சிற்பங்கள். இது மேஜிக்கல் ரியலிச வகை புடைப்புச் சிற்பம். இந்த புடைப்பு சிற்பத்தின் அடிப்படை மந்திர காத்தல் கோட்பாடு. எருது அல்லது சிங்கத்தின் உடலில் மனிதனின் தலையும், ஆந்தையின் விரிந்த சிறகுகளும் கொண்ட உருவம் லாமாசு. லாமாசு புடைப்பு சிற்பங்கள் அசீரிய அரண்மனை மற்றும் கோயில் கட்டிடங்களின் நுழைவாயிலில் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டிருக்கும். அரண்மனையில் அல்லது கோயிலுக்கு வருபவர்களை இந்த வினோத உருவம் தீய சக்திகளிடமிருந்து காக்கும் என்பது அசீரியர்களின் நம்பிக்கை. மேலும் தீய சக்திகளை உள்ளே நுழையவிடாது என்பதும்.

assyria lamasu sculpture

(எருது உடலில் மனித தலையும் ஆந்தையின் சிறகுகளும் கொண்ட அசீரிய லாமாசு புடைப்பு சிற்பம்)

lamasu palace sculpture

(அரண்மனை வாயிலை காத்து நிற்கும் லாமாசு புடைப்புச் சிற்பங்கள்)

லாமாசு புடைப்புச் சிற்பங்கள் மற்றொரு அம்சத்தையும் கட்டிடக் கலையில் அறிமுகப்படுத்தியது. இதை பிற்காலத்தில் கிரேக்க கட்டிடக் கலைஞர்கள் அப்படியே பயன்படுத்தி, அதன் வழி நவீன மேற்குலகின் கட்டிடக் கலையிலும் இது அங்கமாக நீடித்து வருகிறது. அது கட்டிடச் சிற்பம் (ஆர்கிடெக்சுறல் ஸ்கல்ப்சர்). கட்டிடத்தின் கட்டுமானக் கற்கள், புடைப்புச் சிற்பங்களாக இருப்பது கட்டிட சிற்பம். இதை மீசோஅமெரிக்க கட்டிடக் கலையிலும் காண முடியும். ஹிட்டைய்ட் கட்டிடக் கலையின் அங்கமாகவும் இது இருந்திருக்கிறது. அசீரியாவில் கற்கள் கிடைப்பது கடினம் என்பதால் கட்டிட சிற்பங்களுக்கு அசீரிய கலைஞர்கள் களிமண்ணை பயன்படுத்திக் கொண்டார்கள். களிமண்ணை பெரும் சதுர பாறை கல்போல செய்துகொண்டு, பிறகு அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தக் காலகட்ட அசீரிய புடைப்புச் சிற்பங்களின் புதையலாக இருப்பது நிம்ரூத் அரண்மனை. அசுர்-நசிர்பல் II நிம்ரூத் அரண்மனையை வளைத்து, வளைத்து கலைக் கூடமாகவே மாற்றிவிட்டிருக்கிறான். அரண்மனைக்குள் எங்கு திரும்பினாலும் அங்கு அசீரிய புடைப்புச் சிற்பங்களோ அல்லது ஓவியங்களோ நம்மை அசத்தும்.

namruth palace sculpture

(நம்ரூத் அரண்மனையில் இருக்கும் புடைப்புச் சிற்பங்களில் ஒன்று. சிற்பத்தில் அசுர்-நசிர்பல் II உட்கார்ந்திருப்பது காட்டப்பட்டிருக்கிறது.)

இதில் குறிப்பிட வேண்டிய புடைப்புச் சிற்பம் (புது அசீரிய காலகட்ட கலைகளுக்கான கருப்பொருளுக்கு உதாரணமாக இருக்கும் புடைப்புச் சிற்பம்) அசுர்-நசிர்பல் II தெய்வீக மரத்தை பணிவுடன் பராமரிக்கும் காட்சியை விளக்கும் சிற்பம். (கீழே இருக்கும் புகைப்படம்).

namruth palace sculpture 1இந்த புடைப்புச் சிற்பத்தில் தெய்வீக மரமானது அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசக் கருத்தை வெளிப்படுத்தும் கருவியாக இருக்கிறது. சுமேரிய நாகரீகம் தொடங்கி மெசபட்டோமியாவில் தெய்வீக மரம் பெருவாழ்வு (இம்மார்டல்) மற்றும் மரணத்தை குறிக்ககூடிய ஒரு குறியாக இருந்துவருகிறது. இந்த மரத்தின் வேர்கள் மரணத்தையும், இதன் வான் நோக்கிய கிளைகள் பெருவாழ்வையும் சிம்பாலிசமாக உணர்த்தக் கூடியவைகள். அதை அசீரிய சிற்பக் கலைஞன் இங்கே சித்தரித்துக் காட்டியிருக்கிறான். மேலும் அசுர்-நசிர்பல் II-வும் மேஜிகல் ரியலிச அமைப்பில் இங்கே சித்தரிக்கப்பட்டு அவனுக்கும் தெய்வீகத் தன்மை கொடுக்கப்பட்டிருக்கிறது. உடற் கூற்றியலைப் பொருத்தவரையில் தோள்களும், கைகளும், கால்களும் சிறப்பாக தசை அமைப்புகளுடன் செதுக்கப்பட்டிருக்கிறது. சிமிட்டிரிக்கல் பெலன்சை சிற்பி பயன்படுத்தியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக இந்த புடைப்புச் சிற்பம் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிச சிந்தனையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

இந்த காலகட்டத்தின் தொடக்க ஆண்டுகளில் இதுவே புது அசீரிய காலகட்ட கலைகளின் தன்மை. கலைஞர்கள் கலை பாணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசு மற்றும் மதம் சார்ந்த சிந்தனைகளை படக் குறியீடுகளின் (அப்ஸ்டிராக்ட்) வழியே சித்தரிக்கவே முனைந்திருக்கிறார்கள். ஆனால் அசீரிய நாகரீகத்தின் இறுதி ஆண்டுகளில் - குறிப்பாக அரசன் சென்னாசெரிப் மற்றும் அசுர்பனிப்பல் ஆட்சிக் காலங்களில் – அப்ஸ்டிராக்ட் ரெப்ரசன்டெஷனை கைவிட்டு நேச்சுரலிசத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்கள் அசீரியக் கலைஞர்கள். இது உடனடியாக நடந்துவிடவில்லை. அப்ஸ்டிராக்ட் ரெப்ரசன்டெஷனிலிருந்து, ரிதமிக் மூவ்மெண்டுக்கு மாறி அதிலிருந்து நேச்சுரலிசத்திற்கு வந்திருக்கிறார்கள்.

assyria sculpture 1

மெசபட்டோமிய கலைகள் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுமேரியாவில் சிம்பாலிசத்தில் தொடங்கி அசீரிய நாகரீகத்தின் வீழ்ச்சியில் நேச்சுரலிசத்தில் முடிவடைகிறது. இதற்குப் பின்பு மெசபட்டோமியா பெர்சியர்கள் மற்றும் மாசிடோனிய, கிரக்கர்களின் கைகளுக்குள் சென்றுவிட்டது.

(தொடரும்)

- நவீனா அலெக்சாண்டர்