மத்தியத் தரைக் கடலின் வட கிழக்குப் பகுதியில் திட்டுத் திட்டாக இருக்கும் தீவுகளிலிருந்து உருவானது கிரேக்க நாகரீகம். இது நடைப்பெற்றது இன்றிலிருந்து சுமார் 3500 வருடங்களுக்கு முன்பு. இந்த நாகரீகம் தன் கலை செயல்பாடுகளுக்கு பெரிதும் சார்ந்திருந்தது எகிப்து நாகரீகத்தை. ஓவியம், கட்டிடக் கலை, இலக்கியம் என்று கிரேக்க நாகரீகம் பெரும் அளவில் சார்ந்திருந்தது அதை சுற்றியிருந்த எகிப்திய சுமேரிய நாகரீகங்களை. உலகின் முதல் நாவல் இலக்கியமாக இருக்கும் சுமேரிய நாகரீகத்தின் கில்காமேஷ் கிரேக்கர்களின் இலக்கிய கலைக்கும், எகிப்தியர்களின் கோயில் கட்டிடங்கள் மற்றும் ஓவியங்கள் கிரேக்கர்களின் கட்டிடக் கலை மற்றும் ஓவியக் கலைகளுக்கும் மூலங்களாக அமைந்தன. இன்றைய நவீன உலகின் கலை இயக்கங்கள் குறித்து அறிந்துக்கொள்ள நமக்கு இந்த நீண்ட வரலாற்று தடம் குறித்த அறிமுகம் தேவைப்படுகிறது.

greeceஇந்த அறிமுகம் இல்லாமல் கலை இயக்கங்களைக் குறித்து தெரிந்துக்கொள்ள நினைப்பது அறையும் குறையுமான காரியமாக முடிந்துப்போகும். உலகமயமாக்கல் கலாச்சாரமானது, பன்முகத்தன்மைக் கொண்ட உலக மக்களின் கலைக் கலாச்சார வெளிப்பாடுகளை மொன்னையான ஒற்றைத் தன்மையுடையதாக (பெரு மூலதனங்களின் இலாபத்திற்கு உதவி செய்யும் ஒற்றைத் தன்மை) மாற்றிக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் கலைகளின் வரலாற்று தடம் குறித்தும், கலைகள் மக்களின் சிந்தனைகளில் உருவாக்கிய கலகங்கள் குறித்தும் அறிமுக அளவிலாவது தெரிந்துகொள்வது நம்முடைய கலைகளை உலகமயமாக்கலின் மாயத்திற்கு பலிக்கொடுக்காமல் காப்பாற்றுவதற்கு உதவிகரமானதாக இருக்கும்தானே. உலகமயமாக்கல் ஊற்றெடுக்கும் மேற்குலகமும் அதன் கலைகளுமே உலக மக்களின் கலைகளாக இருப்பதுப்போல கட்டமைக்கப்படுவதாலும், மேற்குல கலைகளை பின்பற்றுபவர்களே நவீன நாகரீக மனிதர்களாக இருக்க முடியும் என்கிற போலி தோற்றம் தொடர்ந்து ஊடகங்களின் வழி உருவாக்கப்பட்டு வருவதாலும் மேற்குல கலைகளின் மூலம் என்பதை தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது.

மூன்றாயிரம் வருடங்களாக மேற்குலகின் கலைகளுக்கு பிறப்பிடமாக ஆதாரமாக இருப்பது கிரேக்கர்களின் கலைகளே. இங்கே கலைகள் என்கிற ஒற்றை வார்த்தைக்குள் ஓவியம், நாடகம், இலக்கியம், கட்டிடக் கலை மற்றும் சினிமா ஆகிய கலைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். மூவாயிரத்திலிருந்து இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய கிரேக்கர்களின் கலைகள் பெரிதும் எகிப்தியர்களிடமிருந்தும், கொஞ்சமே கொஞ்சம் சுமேரியர்களிடமிருந்து கடன் பெறப்பட்டது என்பதை முன்பேப் பார்த்தோம். கிரேக்க கலை வளர்ச்சிக் காலகட்டங்களை நான்கு காலப் பகுதிகளாக பிரிக்கிறார்கள். ஜியோமெட்ரிக் (900 – 700 BC), ஆர்காயிக் (700 - 480 BC), கிளாசிகல் (480 - 323 BC) மற்றும் ஹெலனிஸ்டிக் (323 - 31 BC). ஜியோமெட்ரிக் கலை வளர்ச்சிக் காலகட்டங்களிலேயே கிரேக்கத்தில் polis என்று அழைக்கப்பட்ட பெரும் நகரங்கள் உருபெறுகின்றன. இலக்கியம், வணிகம், கட்டிடக் கலை, ஓவியக் கலை மற்றும் சிற்ப கலை என்று அனைத்திலும் இந்த காலகட்டத்திலேயே கிரேக்க நாகரீகம் வளர்ச்சிப் பெறுகிறது. இந்த காலகட்டங்களிலேயே ஹோமரின் இலியாத் மற்றும் ஓடிசி எழுதப்பட்டது. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டு (கிறஸ்துவின் பிறப்பிற்கு பின்பு) ரோமானியர்களின் பிரம்மாண்டமான மார்பல் சிலைகளுக்கும், பதினைந்தாம் நூற்றாண்டு பின்நவீனத்துவ காலகட்ட பிரம்மாண்ட சிற்பங்களுக்கும் பிறப்பிடமாக விளங்கிய சிற்ப கலை கிரேக்கத்தின் ஜியோமெட்ரிக் கலை காலப் பகுதியிலேயே தோன்றியது.

ஆர்காயிக் காலப் பகுதியின் இறுதியில் இரண்டு முக்கிய வரலாற்று நிகழ்வுகள் கிரீசில் நடைப்பெற்றது. கிரிஸ் என்பது ஸ்பார்டா, ஏதேன்ஸ் மற்றும் கோரின்ந்த ஆகிய நகரங்களின் கூட்டையே இங்கே குறிக்கிறது. ஒன்று கிரேக்கர்களின் தலைமுறை பரம எதிரியான பெர்சியர்களின் இறுதி படையெடுப்பு இந்த மூன்று நகரங்களின் மீதும் நடத்தப்பட்டது. இந்த இறுதி பெர்சிய படையெடுப்புகளில் ஒன்றைக் குறித்தே 300 என்கிற ஆலிவுட் படம் பேசியது. இரண்டாவது வரலாற்று நிகழ்வு கிரேக்க சிற்பக் கலைஞர்கள், தாங்கள் உருவாக்கிய பார்பல் சிற்பங்களில் புதுமைகளை புகுத்தினார்கள். ஒருவகையில் இதை கலை கலகம் என்று குறிப்பிடலாம். அன்றைய எகிப்தியர்கள் கடந்த ஐந்தாயிரம் வருடங்களாக பின்பற்றி வந்த சிற்பம் வடிக்கும் முறையையே ஜியோமெட்ரிக் மற்றும் ஆர்காயிக் கால கிரேக்க சிற்ப கலைஞர்களும் பின்பற்றி வந்தார்கள். சிற்பங்கள் எத்தகைய சிறு மாற்றமும் இல்லாமல் விரைத்துக்கொண்டு நிற்கும் தன்மையிலேயே வடிக்கப்பட்டு வந்தது. பல ஆயிரம் ஆண்டுகளாக எகிப்திய சிற்ப கலைஞர்கள் தங்களின் சிற்பம் வடிக்கும் முறையில் எத்தகைய கலை சார்ந்த மாற்றம் தரும் முன்னேற்றத்தையும் புகுத்தவேயில்லை.

பல நூறுத் தலைமுறைகளாக அதற்கான அவசியமும் அவர்களுக்கு ஏற்படவில்லை. எகிப்திய கலைஞர்களைப் பொறுத்த வரையில் சிற்பங்கள் கல்லறை கோயில்களிலும், வழிபாட்டு கோயில்களிலும் வைக்கப்படவேண்டிய ஒன்று மட்டுமே. அதிலும் அந்த சிலைகள் இறந்தவரின் கா (ka) என்று அழைக்கப்படும் ஆன்மாவின் உறைவிடமாக இருக்கவேண்டிய ஒரே நோக்கத்திற்காக மட்டுமே படைக்கப்பட்டவைகள். எத்தகைய கலை சார்ந்த வெளிப்பாட்டு உணர்வுகளுக்காகவும் படைக்கப்பட்டவைகள் கிடையாது. அதாவது மந்திர மத கொள்கை சார்ந்த ஒன்றிர்காக மட்டுமே எகிப்திய கலைஞர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக சிலைகளை வடித்துவந்தார்கள். மதம் சார்ந்த விசயங்களில் நிகழ்த்தப்படும் கலைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி வளர முடியாது என்பதற்கு இது சிறந்த உதாரணம். கிருஸ்தவ சகாப்பத்தத்தில் மேற்குல கலைகளுக்கும் இதே நிலை ஏற்பட்டதை பிறகு பார்க்கலாம்.

கலைகள் எத்தகைய புற கட்டுப்பாடுகள் அற்ற நிலையில்தான் தன்னியல்பாக வளரக் கூடிய சக்தியைக் கொண்டவைகள். எகிப்திய கலைஞர்களுக்கு பாரோக்களின் மந்திர மத கொள்கைகள் பெறும் கடிவாளமாக இருந்தக் காரணத்தால் பல ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் வடித்த சிலைகளும், புடைப்பு சிற்பங்களும், ஓவியங்களும் எத்தகைய அடுத்தக் கட்ட வளர்ச்சித் தன்மைகளும், கலை வெளிப்பாட்டு தன்மைகளும் அற்று ஒரே வார்ப்பில் வார்த்து எடுத்தவைகளைப் போல காட்சியளித்துக்கொண்டிருக்கின்றன. எகிப்தியக் கலைஞர்கள் பழமை செயற்கையாக உண்டாக்கி வைத்திருந்த கட்டுப்பாடுகளை மீறாமல் தங்களின் கலைகளை வெளிப்படுத்தி வந்தார்கள். இதைத்தான் ஜியோமெட்ரிக் மற்றும் தொடக்க கால ஆர்காயிக் கிரேக்க கலைஞர்களும் பின்பற்றிக்கொண்டிருந்தார்கள். ஆனால் எகிப்திய கலைஞர்களுக்கு இருந்ததைப் போன்ற பழமை மதக் கொள்கை கட்டுப்பாடுகள் எதுவும் கிரேக்க கலைஞர்களுக்கு இல்லை. இதுவே அவர்கள் எகிப்தியர்களிடம் இருந்துக் கற்றுக்கொண்ட கலைகளில் பலப் புதிய சோதனை முயற்சிகளை செய்துப் பார்க்கும் பூரண கலை சுதந்திரத்தை அவர்களுக்கு வாய்ப்பாக அமைத்துக்கொடுத்தது.

கட்டுகள் அற்ற சுதந்திர சிந்தனைகளை தூண்டி மனித சமூகத்தை அடுத்தக் கட்ட வளர்ச்சி நிலைக்கு அழைத்துப் போவதுதானே கலைகளின் இருத்தல் இயல் செயல்பாடு. கலைகளை முடக்கும் சமூகம் அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி நகராமல் தேங்கி விடும் என்பதற்கு பண்டை கால எகிப்திய சமூகமே சிறந்த உதாரணம். பிரமிடுப் போன்று கட்டிடக் கலை சாதனைகளை நிகழ்த்திய ஒரு சமூகம் மேலும் அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து செல்லாமல் பல ஆயிரம் ஆண்டு காலமாக ஒரே இடத்தில் தேங்கி நின்று பிற இன மக்களின் படையெடுப்புகளுக்கு ஆளானதற்கும் கலைகளை முடக்கிய செயல்பாடுகளேக் காரணமாக அமைந்துப்போனது. ஆனால் கிரேக்க ஆர்காயிக் கால கலைஞர்கள் தங்களின் கலை சுதந்திரத் தன்மையை பயன்படுத்தி எகிப்தியர்கள் சிற்ப கலையை எந்த இடத்தில் வளர்ச்சியை நோக்கி நகர்த்தாமல் விட்டார்களோ அந்த இடத்திலிருந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தினார்கள். ஆர்காயிக் சிற்பக் கலைஞர்களின் இந்த புதுமை முயற்சியே இன்றைக்கு மேற்குலக கலைகள் உலகம் முழுவதிலும் பரவலாக ஒருவித பரவலையும், வரவேற்ப்பையும் பெறுவதற்கு காரணம்.

இதுதான் கலையின் வீரியம். சுதந்திரமாக சிந்திக்க கூடியக் கலைஞர்களும், அவர்களின் கலைகளை சமகாலத்தில் இல்லையென்றாலும் பிற்காலத்தில் ஏற்றுக்கொண்டு பாராட்டும் மனித சமூகங்களுமே உலக வரவேற்ப்பை பெறுகிறார்கள் என்பது இதிலிருந்து நாம் பெறும் மறுக்க முடியாத உண்மை வாழ்க்கைப் பாடம். ஆர்காயிக் கிரேக்க கலைஞர்கள் ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை என்று அனைத்திலும் புதுமைகளை முயற்சி செய்துப் பார்க்கத் தொடங்கினார்கள். அதற்கு உதாரணமாக ஜியோமெட்ரிக் கால குரோஸ் சிற்பங்களையும் ஆர்காயிக் கால குரோஸ் சிற்பங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். குரோஸ் என்றால் இளைஞனின் சிலை என்பதுப் பொருள்.

greek youth statue

(ஜியோமெட்ரிக் கால குரோஸ் சிலை)

பழமையின் கட்டுகளை உடைத்துக்கொண்டு, புதுமைகளை நோக்கிய தேடல் சிந்தனை என்பது அனைவருக்கும் வாய்த்துவிடும் ஒரு வரம் அல்ல. புதுமைகளை தேடி போவதில் அடங்கியிருக்கும் நிச்சயமற்றத் தன்மைகளையும் ஆபத்துக்களையும் எதிர்க்கொள்ளும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களுக்கே இந்த வரம் வாய்ப்பாக அளிக்கப்படுகிறது. இந்த வரம் அனைத்து கலைஞர்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான காரணிகள், வழி வழியாக தனக்கு கற்றுத்தரப்படும் கலையை எத்தகைய மாற்றமும் (முன்னேற்றத்தை நோக்கிய) அப்படியே வெளிப்படுத்த வேண்டும் என்கிற பழமைவாத பிடிவாத சிந்தனை அடுத்தது தனக்கு சொல்லித்தரப்பட்ட கலையில் தன்னுடைய தனிப்பட்ட கற்பனைகளை கலந்து சோதனை முயற்சிகளை நடத்திப்பார்க்கும் திறமை என்பது இல்லாதுப் போவது.
ஆர்காயிக் கால குரோஸ் சிலை

organic statues 400

(ஆர்காயிக் காை குபைாஸ் சிலை)

பழமை கட்டுக்களை உடைத்து எறியும், கட்டுக்கடங்காத கற்பனை வளமும் அதை தன்னுடைய கலையில் சோதித்துப் பார்க்கும் துணிவும் தன்னம்பிக்கையும் உடையவர்களே கலைகளில் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு பாதை அமைக்கிறார்கள். இத்தகையவர்களுக்குள் கலை என்பது கலகம் செய்யும் உணர்வுகளையும் கற்பனைகளையும் தூண்டிய படியே இருக்கிறது. இருந்திருக்கிறது. கலையானது ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க கலக உணர்வுகளையும் எதையும் கடந்துப்போகும் துணிச்சலையும் இத்தகைய கலைஞர்களின் உள்ளத்தில் விதைக்கிறது. பழமையின் கட்டுக்களை அறுக்கும் இவர்களே மனித கற்பனைகளுக்கான புதிய எல்லைகளை காலம்தோறும் வகுத்தப்படியும், முன்னோர்கள் வகுத்ததை திருத்திய படியும் இருக்கிறார்கள்.

ஆர்காயிக் கால கிரேக்க கலைஞர்களும் இந்த காரியத்தைதான் செய்தார்கள். ஆனால் அனைத்து கலைஞர்களும் அல்ல. குரோஸ் சிலைகள் ஒரே வெளிப்பாட்டுத் தன்மையில் இருப்பதையும் அதில் இருக்கும் செயற்கைத் தன்மையையும் விரும்பாத ஒரு சில கலைஞர்கள் தங்களின் கற்பனையில் சோதனை முயற்சிகளை கலந்து தாங்கள் வடிக்கும் சிலைகளில் புதிய வடிவங்களை கொண்டுவர முயற்சித்தார்கள். அதில் முதன்மையானது Zeus of Artemisium என்று அழைக்கப்படும் மார்பில் சிலை. அன்றைய கிரேக்க கலைஞர்களின் படைப்புக்கள் பழமையைப் பிடித்து ஊஞ்சலாடிக்கொண்டு புளித்த தயிரையே புளிக்க வைத்துக்கொண்டிருக்க, அவர்கள் மத்தியில் ஒரு கலகத்தை ஏற்படுத்தியது Zeus of Artemisium சிலை. இந்த சிலையை வடித்த அந்த கலககார கலைஞன் யார் என்பது இன்று வரைக்கும் தெரியாத ஒரு வரலாற்று புதைப் பொருளாக இருந்துவருகிறது. அந்த கலககாரனின் அடையாளம் தெரியாவிட்டால் என்ன அவனுடைய சிலை இன்றைக்கும் நம்மிடையே இருப்பது ஒன்றேப் போதுமானதுதானே.

Zeus of Artemisium 350

(Zeus of Artemisium)

இப்பொழுது இருக்கும் Zeus of Artemisium சிலையும் கூட அந்த கலககாரன் அவன் கைப்பட செதுக்கிய ஒரு சிலை அல்ல. அவனுடைய சிலையைப் பார்த்து ரோமானிய கால சிற்பிகள் அவனுக்கு பிறகு பல நூறு ஆண்டுகள் கழித்து படியெடுத்த மார்பில் சிற்பம் மட்டுமே. அதுவரை கிரேக்கம் கண்டுவந்த குரோஸ் சிலைகளின் அமைப்பை ஒரேடியாக கவிழ்த்துப்போட்டுவிட்டது இந்த சிலை. சிலையின் வெளிப்பாட்டுத் தன்மையில் (posing) பழமையே சீல் பிடித்துப் பழுத்துக்கொண்டிருக்க அந்த சீல் பழத்தை தெறிக்க வைத்த சிலை இது. பின்நவீனத்துவ கால கலைஞர்களுக்கெல்லாம் - முக்கியமாக மைக்கேல் ஆஞ்சிலோ போன்றவர்களுக்கு – கற்பனை ஊற்றுக்கான ஆதர்சமாக விளங்கியது Zeus of Artemisium. இன்றைய கலை வளர்ச்சியை மனதில் கொண்டுப் பார்த்தால் Zeus of Artemisium ஒன்றும் அதி அற்புதமான சிற்பம் கிடையாதுதான் ஆனால் கலையின் கலக தன்மையை வெளிப்படுத்துவதில் ஒரு மைல் கல்லாக இது என்றும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கிடையாது. இந்த கலைஞனின் கலகத்தை தொடர்ந்து ஆர்காயிக் கால கிரேக்கத்தில் சிற்ப கலையில் ஒரு புரட்சியே வெடித்துக் கிளம்பியது என்று சொல்லலாம். இதன் தொடர்ச்சியே கிளாசிக்கல் காலகட்டத்தில் உருவான Discus-thrower by Myron (இதை Discobolus என்றும் அழைப்பார்கள்) மற்றும் Spear-bearer by Polykleitos (இதை Doryphoros என்று அழைப்பார்கள்) போன்ற சிற்பங்கள்.

Discobolus 350

(Discobolus)

டிஸ்கோபலஸ் சிற்பத்தை உருவாக்கியவர் மைரன். இதை இவர் பார்பல் சிற்பமாக உருவாக்காமல் வெண்கல சிற்பமாக உருவாக்கியிருக்கிறார். இது இன்றை கிடைக்கவில்லை. இதன் ரோமானியர்கள் காலத்திய மார்பலில் படியெடுத்த சிற்பங்களே கிடைக்கிறது. டோரிபோரஸ் சிற்பத்தை வடித்தது பாலிகிலியோடஸ். இது உருவாக்கப்பட்டது மார்பலில் ஆனால் இதுவும் இன்று கிடைக்கவில்லை. இதன் ரோமன் காலத்திய படியெடுக்கப்பட்ட சிற்பங்களே கிடைக்கின்றன. இந்த இரண்டு சிற்பங்களையும் இந்த இரண்டு கலைஞர்களும் உருவாக்கி பல நூறு ஆண்டுகள் கழித்தும் கூட ரோமானியர்கள் இந்த இரண்டு சிற்பங்கள் வெளிப்படுத்திய கலைத் தன்மையில் தங்களின் மனங்களைப் பறிக்கொடுத்து வேறு சிற்ப கலைஞர்களைக் கொண்டு இந்த சிற்பங்களை படியெடுக்க வைத்து தங்களின் இல்லங்களில் வைத்து அழகுப் பார்த்திருக்கிறார்கள்.

Doryphorus 300(Doryphorus)

இந்த இரண்டு சிற்பங்களும் சிற்ப கலையின் அடிப்படைகளாக கருதப்படும் movement, action, proportion, harmony, rhythm மற்றும் balance ஆகியவைகளை மிகச் சரியாக கைகொண்டு மிக அற்புதமாக வெளிப்படுத்திய சிற்பங்கள். ஒலிம்பிக் போட்டிகளின் என்றும் அழியா நினைவு அடையாளங்களில் ஒன்றாக இருந்து வருவது டிஸ்கோபலஸ் சிற்பம்.

ஆர்காயிக் காலகட்டத்தில் சிற்ப கலை மாத்திரமே வளர்ச்சியை நோக்கி நகர்ந்தபடியில்லை. இலக்கியமும், ஓவியமும், கட்டிக் கலைகளும் கூட அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தன. ஹோமரின் இலியாத் மற்றும் ஓடிசி ஆகிய கிரேக்க காவியங்கள் இந்த காலகட்டத்திலேயே எழுதப்பட்டது. கிரேக்க சமூகத்தில் பிரபலமடைந்து வந்த இலியாத் மற்றும் ஓடிசி காவியங்களின் கதாநாயகர்களையும், அந்த காவியங்களில் வரும் சம்பவங்களையும் ஓவியக் கலைஞர்கள் அரண்மனை சுவர்களிலும் மண் சாடி பாத்திரங்களிலும் ஓவியங்களாக தீட்டி ஓவியக் கலையில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஓவியக் கலையின் உறுப்புகளாக இருக்கும் line, shape, form, texture மற்றும் color-கள் அனைத்தையும் உள்வாங்கிய ஓவியக் கலைஞர்கள் தங்களின் ஓவியங்களில் புதிய கற்பனை வெளிப்பாடுகளை கொண்டுவந்தார்கள்.

பின்னாட்களில் ஸ்பார்டன்ஸ் என்று அழைக்கப்பட்ட டோரியன் பழங்குடியை சேர்ந்த கட்டிடக் கலைஞர்கள் கட்டிடக் கலையில் மாற்றங்களையும் புதுமைகளையும் சாத்தியப்படுத்திக் காட்டினார்கள். கிரேக்க கட்டிடக் கலையின் பிரதான கட்டிடக் கலைகளில் ஒன்றான டோரியன் கட்டிடக் கலையை தோற்றுவித்தவர்கள் இவர்களே. ஆர்காயிக் கால பகுதியை பெரிதும் ஆளுமை செய்தது டோரிக் கட்டிடக் கலை. சரி இங்கே கலைகளின் அடிப்படைகள் குறித்து பார்த்துவிடுவது நல்லது. நாம் பேசிக்கொண்டிருப்பது கலை இயக்கங்களின் வரலாறு என்பதால் அதன் அடிப்படைகளை குறித்து தெரிந்துகொள்வது நல்லதுதானே.

கலையின் அடிப்படைகளாக மேற்கத்தியர்கள் வகுத்திருப்பது - rhythm, balance, emphasis, proportion, harmony, variety மற்றும் movement. ஓவியம், சிற்பம் மற்றும் கட்டிடக் கலை மூன்றுக்கும் இந்த அடிப்படைகள் பொருந்தும். இன்றைய நவீன புகைப்பட மற்றும் சினிமாக் கலைக்கும் இந்த அடிப்படைகள் பொருந்தும். கலையின் உறுப்புகளாக line, shape, form, space, color மற்றும் texture வகுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை குறித்து அறிந்துக்கொண்டுதான் ஒரு ஓவியப் படைப்பையோ, சிற்பத்தையோ, கட்டிடத்தையோ, புகைப்படத்தையோ அல்லது சினிமாவையோ ஒரு இரசிகன் இரசிக்க வேண்டுமா என்றால் நிச்சயமாக அப்படியே. ஒரு மொழியின் வரி வடிவம் தெரியாமல் ஒருவரால் எப்படி எழுதவோ படிக்கவோத் தெரியாதோ அதேப் போலத்தான் கலையின் அடிப்படைகளையும் அதன் உறுப்புகளையும் குறித்து தெரிந்துக்கொள்ளாமல் அவைகளை பற்றி பேசுவதும் விமர்சனம் செய்வதும்.

ஒரு மொழியின் வரிவடிவம் தெரியாமலேக் கூட ஒருவரால் அந்த மொழியைப் பேச முடியுமே என்று கேட்பது அகச் சிறந்த சிறுபிள்ளை கேள்வியாக இருந்தாலும் ‘படிப்பறிவுப் பெற்ற சிறுபிள்ளை’ படித்தவர்களின் இந்த கேள்வியை ஒதுக்கிவிடாமல் நாம் தரும் பதில். ஒரு மொழி தரும் அகச் சிறந்த தொடர்பு அனுபவத்தையும் அந்த மொழியின் இனிமையையும் சிறப்பாக உள்வாங்க நமக்கு அந்த மொழியின் வடிவடிவமும் அதன் இலக்கணமும் தெரிந்திருக்க வேண்டும் என்பதே. இது இரண்டும் தெரியாமல் நாம் என்னத்தான் ஒரு மொழியில் சிறப்பாக பேசினாலும் அந்த மொழி எழுதப்பட்ட காகிதம் நம்மை அந்த மொழியின் வரிவடிவமும் இலக்கணமும் தெரிந்த ஒருவரை தேட வைத்துவிடும். கண்ணிருந்தும் குருடர்போல. அதான் படமும், சிலயும், கட்டிடமும் கண்ணுக்கு தெர்தே அப்பாலைக்கு இன்னாத்துக்கு அதங்காட்டி தெரிஞ்சுக்கனும்னு படிப்பறிவுப் பெற்றவர்களே கேட்பது கண்ணிருந்தும் குருடர்போன்றதற்கு நிகராகும்.

முதலில் கலையின் அடிப்படைகளைப் பார்ப்போம். ரிதம். ஒரு கலைப் படைப்பில் இருக்கும் சமாச்சாரங்கள் அந்த படைப்பை பார்க்கும் பார்வையாளனின் கண்களை உறுத்தாமல், பார்வையை அந்த படைப்பு முழுவதிலும் பரவும்படி செய்வது ரிதம். இந்த ரிதமே அந்த படைப்பு வெளிப்படுத்தக் கூடிய உணர்வு எழுச்சியையும், மனநிலையையும் பார்வையாளனுக்குள் உண்டாக்க கூடியது. பெரும்பாலும் கோடுகள் (lines) இந்த ரிதமை உருவாக்க ஓவிய கலைஞர்களுக்கு உதவுகிறது. ஒரு படைப்பில் திரும்பத் திரும்ப காட்டப்படும் (reproduction or repeating) உறுப்புகள் பார்வையாளனின் கண்களை அந்த படைப்பு முழுவதும் பயணித்து படரும்படி செய்து அவனுக்குள் உணர்வெழுச்சிகளை உண்டாக்கும்.

waves reproducing 300புகைப்படத்திலிருக்கும் நீள் வட்டம் என்கிற உருப்பு திரும்ப திரும்ப - reproducing or repeating - காட்டப்பட்டு, நம் பார்வையை படத்தின் இடதுப் பக்கதிலிருந்து வலது பக்கத்திற்கு நகர்த்தி செல்வதைதான் ரிதம் என்பார்கள். இந்த நீள் வட்ட பிரதிபலிப்பு நமக்குள் ஒருவித குழப்ப உணர்வையை ஏற்படுத்துகிறதுதானே.......

Balance. ஒரு ஓவியப் படைப்பின் அல்லது சிற்ப படைப்பின் சரி நடுப்பகுதியில் ஒரு கற்பனை கோட்டை வகுத்துக்கொண்டு அந்த படைப்பின் இரண்டு பக்கங்களும் சரி சம நிலையில் இருக்கிறதா என்றுப் பார்ப்பதே பேலன்ஸ். இதில் மூன்று வகைகள் உண்டு symmetrical, asymmetrical மற்றும் radial. சிமெட்ரிக்கள் படைப்பில் நடுவிலிருக்கும் கற்பனைக் கோட்டின் இரண்டு பக்கங்களும் ஒத்த தன்மையுடன் இருக்கும். அசிமெட்ரிக்கள் படைப்பில் இந்த சமநிலை குலைக்கப்பட்டிருக்கும். ரெடியல் படைப்புக்கள் சிறிய வட்டத்திலிருந்து வலையம்போல வெளிப் படுவதாக இருக்கும்.

balance 350புகைப்படத்திலிருக்கும் மனித உருவம் சிமெட்ரிக் பேலன்சுக்கு உதாரணம் (இது லியானர்டோ டாவின்சி வரைந்த ஓவியம்). மனித உருவத்திலிருக்கும் நடுக்கோட்டுக்கு இரண்டு பக்கமும் எத்தகைய சிறு மாற்றமும் இல்லாமல் ஒத்த தன்மையுடன் (கண்ணாடி பிரதிபலிப்பு போல) இருப்பதை கவனிக்கவும். மரத்தின் உருவம் அசெமிட்ரிக் பேலன்சுக்கு எடுத்துக்காட்டு. மரத்தின் குறுக்கே இருக்கும் கற்பனைக் கோட்டு இரண்டு பக்கங்களையும் கவனிக்கவும். வலது பக்கம் கிளைகள் அதிகமாகவும் இடதுப் பக்கம் கிளைகள் குறைவாகவும் இருக்கின்றன. இந்த மர ஓவியத்தில் அதிக பேலன்ஸ் என்பது வலது பக்கமே இருக்கிறது. ரேடியல் பேலன்சிற்கு சூரியனின் ஓவியமே எடுத்துக்காட்டுக்கு போதுமானதாக இருக்கிறது. ஒரு ஓவியத்தையோ அல்லது சிற்பத்தையோ பார்வையிடும்போது கற்பனை நடுக்கோட்டை மனதிலிருத்தி அந்த படைப்பை உருவாக்கிய கலைஞன் எத்தகைய பேலன்சை தன்னுடைய படைப்பிற்கு அளித்திருக்கிறான் என்பதை கணிக்கவேண்டும்.

Emphasis. ஒருப் படைப்பில் பார்வையாளனின் ஓட்டுமொத்த கவனத்தையும் பார்வையையும் கவர்ந்திழுக்கும் பகுதியே (அல்லது அந்த படைப்பிலிருக்கும் உருவமோ, பொருளோ) அந்த படைப்பின் எம்பசிசைக் குறிக்கிறது. இதை focal point என்பார்கள். அந்த படைப்பிலிருக்கும் மற்ற அங்கங்கள் focal point-ன் முக்கியத்துவத்தை பெரிதுப்படுத்தும் விதமாக கட்டமைக்கப்பட்டிருக்கும்.

flower image 600 இந்த ஓவியத்தில் சிகப்பு நிற மலரே focal point-ஆக இருந்து இந்த ஓவியத்தின் எம்பசிஸ் ஆக செயல்படுகிறது. இந்த ஓவியத்தில் சிகப்பு மலருக்கே முக்கியத்துவம் அதிகம் என்பதை இதை வரைந்த ஓவியர் இந்த எம்சிஸ் மூலமாக நமக்கு வெளிப்படுத்திக்காட்டுகிறார். கருப்பு வெள்ளை நிறத்திலிருக்கும் மற்ற மலர்கள் சிகப்பு மலரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக இங்கே செயல்படுகின்றன.

Proportion. இது படைப்பிலிருக்கும் உருப்புக்களின் (ஓவிய படைப்பில் இருக்கும் பொருள்கள்) உருவ அமைப்பை வெளிப்படுத்தக் கூடியது. உதாரணமாக ஆறடி மனிதன் ஒரு மரச் சேரில் உட்கார்ந்திருப்பதைப் போல் ஒரு ஓவியம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மரச் சேரின் உருவ அமைப்பு (நீள, அகலம், உயரம்) சராசரி மரச் சேரின் உருவ அமைப்பில் வரையப்பட்டிருக்கவேண்டும். ஆறடி மனிதன் உட்கார்ந்திருக்கும்போது எந்த உயரத்தில் தோற்றமளிப்பான் என்பதும் சரியாக உயர அமைப்பில் காட்டப்பட்டிருக்கவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்திலேயே அந்த ஓவியம் பார்வையாளனின் பார்வைக்கு எத்தகைய உருத்தலையும் தராமல் ஒரு இயல்புத் தன்மையை உண்டாக்கும். மரச் சேர் மிகப் பெரியதாகவும், அதில் உட்கார்ந்திருக்கும் ஆறடி மனிதன் மிகச் சிறியதாகவும் இருந்தால் அந்த ஓவியத்தின் ப்ரோபோசன் பிசகி இருக்கிறது என்றுப் பொருள். ஒரு ஆரோக்கியமான மனிதனை வெளிப்படுத்தும் மனித சிற்பத்தில் இடதுக் கைப் பெரிதாகவும் வலது கை மிகச் சிறியதாகவும் வடிக்கப்பட்டிருந்தால் அதில் ப்ரோபோசன் தவறி இருக்கிறது என்றுப் பொருள்.

Harmony. ஒரு ஓவியத்திலிருக்கும் ஒத்த தன்மையுடைய உருவத்தையோ அல்லது கோடுகளையே அல்லது பொருளையோ ஒன்றினைத்து கண்களுக்கு இதம் தரும் வகையில் வெளிப்படுத்துவது ஹார்மோனி.

Variety. ஒரு படைப்பில் பலதரப்பட்ட உருவங்களையும் (பொருள்கள் அல்லது கோடுகள்), அந்த உருவங்களுக்கு இடையிலான வித்தியாசங்களையும் காட்டுவது வெரைட்டி.

Movement. பார்வையாளனின் பார்வையை ஒரு படைப்பில் வலதும், இடதும், குறுக்குமாக வழி நடத்தி செல்லும் அமைப்புகளை மூவ்மெண்ட் என்பார்கள்.

movement image 350இந்த ஓவியத்தில் காட்டப்பட்டிருக்கும் வேலியானது நம் பார்வையை ஓவியத்தின் கீழ் வலது மூலையிலிருந்து இடது பக்கத்திற்கு அழைத்து செல்வதையே மூவ்மெண்ட் என்பார்கள்.

மேலேப் பார்த்த அடிப்படைகள் இலக்கியம் தவிர மற்ற கலைகளுக்கு பொதுவானது. இசைக்கும் சேர்த்தே. ஓவியக் கலைக்கு மேலும் ஒரு அடிப்படைக் கொள்கை இருக்கிறது. அது கோணம் (perspective). இந்த அடிப்படை ஓவியக் கலைக்கு மட்டுமே உரியது. அந்த வகையில் புகைப்படக் கலைக்கும் இந்த அடிப்படை பொருந்தும். ஒரு ஓவியத்திலோ அல்லது புகைப்படத்திலோ வெளியையும் (space) பரப்பையும் (depth of field) முப்பரிமாணக் (Three Dimension: x, y & z axis) கோணத்தில் நம் கண்களுக்கு காட்டுவது பெர்ஸ்பெக்டிவ். ஓவியமும், புகைப்படமும் அடிப்படையில் இரண்டே பரிமாணங்களை உடையவைகள். அதாவது அவைகள் தட்டையான ஊடகத்தில் உருவாக்கப்படுபவைகள். அந்த ஊடகம் சுவராக, திரையாக, காகிதமாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவைகள் x மற்றும் y என்கிற இரண்டே பரிமாணங்களைக் கொண்டவைகள். அதில் தீட்டப்படும் காட்சிகளோ அல்லது புகைப்படமாக எடுக்கப்படும் காட்சிகளோ அடிப்படையில் முப்பரிமாணங்கள் கொண்டவைகள். இரண்டுப் பரிமாணங்கள் மட்டுமேக் கொண்ட ஒரு ஊடகத்தில் முப்பரிமாணக் காட்சிகளை காட்ட பெரிதும் உதவுவது vanishing point-வும், convergence line-களும்.

lines 350மூன்றாயிரம் வருடங்களுக்கு முந்தைய சிந்துவெளி தமிழர்களின் ஓவியங்களும், எகிப்திய மற்றும் சுமேரியர்களின் ஓவியங்களும் இந்த பெர்ஸ்பெக்டிவ் என்கிற விசயத்தைக் கண்டுக்கொள்ளவே இல்லை. இது குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லையா அல்லது வேண்டுமென்றே தவிர்த்தார்களா என்பது கலை வரலாற்று ஆராய்ச்சிகளில் சிக்கலான ஒன்றாக இருந்துவருகிறது. தொல்பொருள் ஆராய்ச்சிகளில் இனி வெளிப்படுத்தும் விசயங்களைக் கொண்டே இதை ஒரு முடிவிற்கு கொண்டு வர முடியும். இருந்தும், சில கலை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தமிழ் சிந்து, எகிப்திய மற்றும் சுமேரியக் ஓவியக் கலைஞர்கள் வேண்டுமென்றேத்தான் தங்களின் ஓவியங்களில் பெர்ஸ்பெக்டிவை பயன்படுத்தவில்லை என்கிறார்கள். அதற்கு காரணமாக அவர்கள் முன் வைப்பது விவசாய நாகரீகங்களான இவைகளில் நிலவிய நிலவுடமை சிந்தனையே என்பது.

ஓவியக் காட்சியில் பெர்ஸ்பெடிவ் (கோணமும் பரப்பும்) எப்படி உருவாக்கப்படுகிறது என்றால் ஓவியத்தின் முற்பகுதியில் (foreground) இருக்கும் உருவங்களும் பொருட்களும் பெரிதாகவும், பிற்பகுதியில் (background) இருப்பவைகள் சிறிதாகவும் காட்டப்படும். உதாரணமாக கீழே இருக்கும் புகைப்படத்தில் முன்னால் இருக்கும் மரங்களும், இரயில் தண்டவாளமும் உருவத்தில் பெரிதாக இருப்பதையும் அவைகள் போகப் போக உருவத்தில் சிறிதாகி ஒருப் புள்ளியில் சுருங்கி பார்வைக்கு தெரியாமல் போவதையும் தெளிவாக பார்க்க முடிகிறதுதானே. உருவங்கள் சுருங்கி பார்வைக்கு தெரியாமல் போகும் புள்ளியே வேனிசிங் பாயிண்ட்.

railway track 350தமிழ் சிந்து, எகிப்திய மற்றும் சுமேரியர்களின் ஓவியங்களில் உருவங்களை சிறிதாக காட்டுவது சமூகத்தின் கீழான நிலையில் இருப்பவர்களை குறிக்கும் ஆபத்தை உண்டாக்கலாம் என்கிற காரணத்தால் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே இந்த நாகரீகங்களின் ஓவியங்களில் அனைத்து உருவங்களும் சம அளவு மற்றும் உயரம் கொண்டவைகளாகவே இருக்கும். இப்படி வரைவது ஓவியத்தில் வெளியையும் பரப்பையும் உண்டாக்காது. இந்த ஓவியங்கள் தட்டையாகவே (flat) கண்களுக்கு புலப்படும்.

statues 350ஜியோமெட்ரிக் காலத்தின் தொடக்கம் மற்றும் இறுதிக் காலகட்டங்களில் கிரேக்கர்களின் ஓவியங்களும் இப்படி தட்டையாகத்தான் இருந்தன. குறிப்பாக அவர்கள் மண் சாடிப் பொருட்களில் தீட்டிய ஓவியங்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள்.

இவைகள் ஏறக்குறைய கோடுகளும் சதுரங்களும் கொண்ட ஓவியங்கள். இந்த ஓவியங்கள் வடிவியல் (geometry) தோற்றத்தில் இருந்த காரணத்தாலேயே இந்த ஓவியங்கள் பெரும்பான்மையாக வழக்கிலிருந்த காலகட்டத்தை ஜியோமெட்ரிக் காலகட்டம் என்று இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியிருக்கிறார்கள். மனிதர்களும் கூட கோட்டு உருவங்களாகவே (stick images) காட்டப்பட்டிருப்பார்கள்.

stick images 600ஆர்காயிக் காலகட்டத்தின் தொடக்கத்தில் ஓவியக் கலையிலும் அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்கிறார்கள் கிரேக்க கலைஞர்கள். சிற்பக் கலையில் எப்படி Contrasposto என்கிற உத்தியைக் கண்டுபிடித்து குரோஸ் சிலைகளை அடுத்த கட்டத்தை நோக்கி வளர்த்தெடுத்தார்களோ அதேப் போல ஓவியக் கலையில் வடிவியல் கோடுகளை விட்டுவிட்டு மனிதர்களையும் அவர்களின் அன்றாட செயல்பாடுகளையும் குறிக்கும் ஓவியங்களை தீட்டத் தொடங்கினார்கள். அதிலும் முக்கியமாக ஓமருடைய இலியாத் மற்றும் ஓடிசி காவிய நாயகர்களையும் அவர்களின் போர்கள செயல்பாடுகளையும் விவரிக்கும் ஓவியங்கள் அன்றைய கிரேக்க ஓவியக் கலைஞர்களிடையே பிரசித்திப்பெற்ற ஒன்று.

இலியத் மற்றும் ஓடிசி கதை சம்பவங்களையும், கதாபாத்திரங்களையும் ஓவியங்களாக தீட்ட அவர்கள் பயன்படுத்தியத் கருப்பு உருவங்களை (silhouettes). மனித உருங்கள் முழு கருப்பு நிறத்திலிருக்கும். வேறு எந்த வகை வர்ணமும் மனித உருவத்தில் தீட்டப்பட்டிருக்காது. மனிதர்கள் உடுத்தியிருக்கும் உடைகளும் கூட கருப்பு உருவத்தில் கோடுகளாகவே பிரித்துக்காட்டப்பட்டிருக்கும். இந்த உத்தி ஆர்காயிக் கால ஓவியக் கலைஞர்களுக்கு அவ்வளாக திருப்தி தரக் கூடியதாக இருக்கவில்லை. காரணம், ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனித உருவங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து வரையும்போது அது பார்ப்பதற்கு பெரும் குழப்பதை உண்டுப்பண்ணியது. மனித உருவங்களையும் அவர்களின் ஆடைகளையும் பிரிக்க மற்ற வர்ணக் கலவை பயன்படுத்தாதக் காரணத்தால் இந்த பிரச்சனையை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

silhouette jar 350அரிஸ்டனோதோஸ் என்கிற ஓவியர் வரைந்த ஓவியம். ஓடிசி கதைகள சம்பவத்தை விவிரிக்கும் கருப்பு உருவ (silhouette) ஓவியம். கி.மு. ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தது. புகைப்படத்தில் இருப்பது கிரேட்டர் என்கிற மண் பானை சாடி.

இந்த பிரச்சனையை சமாளிக்க மற்றொரு உத்தி கண்டுபிடிக்கப்பட்டது. அது பிளாக்-பிகர் டெக்னிக். இந்த உத்தி அடிப்படையில் கருப்பு உருவ (சில்லவுட்) உத்தியைப் போன்றதுதான் ஆனால் ஒரே வித்தியாசம் மனித உருவங்களின் ஆடைகளும், வெளிப்புற உடல் வலையு சுழிவுகளும் சிறிய கூரான கருவிக் கொண்டு செதுக்கப்பட்ட கோடுகளின் மூலம் பிரித்துக் காட்டப்பட்டது. அதோடு சேர்த்து வெள்ளை மற்றும் வெளிர் சிகப்பு நிற வர்ணமும் ஏற்ற இடங்களில் தீட்டப்பட்டது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கிளைடியஸ் என்கிற ஓவியர் வரைந்த ஓவியத்தை காட்ட முடியும். இந்த ஓவியம் இலியத் காவிய கதை மாந்தர்களான அஜாக்சையும், அக்கீலிசையும் சித்தரிக்கிறது. போரில் உயிர் இழந்த அக்கீலிசின் சடத்தை தன் தோலில் தூக்கி வைக்கும் அஜாக்சின் செயலை சொல்கிறது இந்த ஓவியம். அக்கீலிசின் உயிர் அற்ற உடல் இந்த ஓவியத்தில் இயல்பாக காட்டப்பட்டிருக்கிறது. சடத்திலிருந்து கீழ் நோக்கி தொங்கும் அக்கீலிசின் தலை முடியே இதற்கு மிகச் சிறந்த உதாரணம். மேலும் அக்கீலிசின் கதாபாத்திர குணாதிசயத்தை விளக்கும் ஒரு அம்சமும் இருக்கிறது. அது உயிரற்ற அக்கீலிசின் கால்கள். அக்கீலீஸ் மிகச் சிறந்த ஓட்டப்பந்தைய வீரன். படுவேகமாக ஓடக் கூடியவன் என்று ஓமர் குறிப்பிடுகிறார். ஓட்டப் பந்தைய வீரர்களின் கால்கள் உடலின் மற்ற பாகங்களைவிட பெரிதாகவும் கட்டுறுதியாகவும் இருக்கும் என்பது என்றும் மாறாத விசயம் இதை கிளைடியஸ் மிகச் சிறப்பாக இந்த ஓவியத்தில் வெளிப்படுத்திருக்கிறார். அஜாக்சின் கால்களுடன் ஒப்பிடும்போது அக்கீலிசின் கால்கள் பெரிதாக இருப்பதை சொல்லியும் விளக்கவேண்டிய அவசியம் இல்லைதானே. உடல் உறுப்புகள் அனைத்தும் மிகத் தெளிவாக செதுக்கிய கோடுகளின் மூலம் பிரித்தும், தனித்தும் காட்டப்பட்டிருப்பது இந்த ஓவியத்தின் சிறப்புகளில் ஒன்று.

classidics image 400(கிளைடியஸ் வரைந்த ஓவியம். அக்கீலிசின் சடலத்தை அஜாக்ஸ் தோலில் சுமந்திருக்கும் காட்சி. இது கி.மு. ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தது. கிரேட்டர் மண் சட்டியில் வரையப்பட்ட ஓவியம்)

கிளைடியசுக்கு அடுத்த தலைமுறையை சேர்ந்தவர் ஏசிக்கியாஸ். பிளாக்-பிகர் டெக்னிக் உத்தியின் மாஸ்டராக கருதப்படுபவர் ஏசிக்கியாஸ். ஆர்காயிக் காலகட்டத்தின் மிகச் சிறந்த ஓவியர் இவர். கிளைடியஸ் தன் ஓவியத்திற்கு எடுத்துக்கொண்ட அக்கீலிஸ் மற்றும் அஜாக்ஸ் கதாபாத்திரங்களைக் கூட ஏசிக்கியாஸ் தன் ஓவியங்களில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் ஒருப்படி அதி அற்புதமாக.

sadurangam game image 450(ஏசிக்கியாஸ் வரைந்த ஓவியம். அக்கீலிசும், அஜாக்சும் போர்களத்தில் சதுரங்க விளையாட்டு ஆடும் காட்சி. கி.மு. ஆறாம் நூற்றாண்டின் இறுதி கால் பகுதியை சேர்ந்தது. அம்போரா என்கிற மண் சாடி பாத்திரத்தில் வரையப்பட்டது)

இதை அம்போரா என்கிற மண் பாத்திரத்தில் ஏசிக்கியாஸ் தீட்டியிருக்கிறார். அக்கீலிசும், அஜாக்சும் போர்களம் ஒன்றின்போது பொழுதைப்போக்க சதுரங்க விளையாட்டு ஆடும் காட்சி அது. இது வரையப்பட்டது சுமார் கி.மு. 540 – 530 காலகட்டத்தில். அன்றைய காலகட்டத்தின் அதி உன்னத ஓவியப் படைப்பு இது. பிற்காலத்தில் பல ஓவியக் கலைஞர்களால் இந்த ஓவியம் படியெடுத்து வரையப்பட்டிருக்கிறது. ஆனால் ஏசிக்கியாசின் இந்த ஓவியம் தரும் கிளர்ச்சியை மற்ற ஓவியர்களால் படியெடுக்கப்பட்ட ஓவியங்களால் தர முடியவில்லை. ஏசிக்கியாஸ் மிக சமார்த்தியமாக தான் வரைய வேண்டிய காட்சியை தன்னுடைய ஊடகத்தின் வடிவத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்திருக்கிறார். அம்பாரா என்கிற மண் சாடியில்தான் இந்த ஓவியத்தை அவர் தீட்டியிருக்கிறார். அந்த சட்டியின் மேல் வலைவுகளுக்கு ஏற்ப அக்கீலிஸ் மற்றும் அஜாக்சின் முதுகுகளும் வலைந்திருப்பது இந்த ஓவியத்திற்கான மிக வலுவான அதே சமயத்தில் பார்வையாளனின் கண்களுக்கு உறுத்தல் இல்லாத கட்டமைப்பை (composition) தருகிறது. இருவரின் உடை அலங்காரமும் தலைமுடி, தாடி மற்றும் கவச அலங்காரமும் நேர்த்தியாக இதில் சித்தரிக்கப்பட்டிருப்பது இந்த ஓவியத்தின் அடுத்த அற்புதம். அவர்களுடைய தோல்களில் சரிந்திருக்கும் ஈட்டிகள் எத்தகைய வலையும் இல்லாமல் மேல் நோக்கி நீண்டு, இந்த ஓவியத்தை பார்ப்பவர்களின் பார்வையையும் அம்பாரா சாடியின் மேல்நோக்கி அழைத்து செல்வது இதன் அடுத்த ஓவிய சிறப்பு.

கருப்பு உருவ ஓவிய உத்திக்கு அடுத்து வந்தது சிகப்பு உருவ உத்தி. இந்த உத்தி ஏறத்தாழ கி.மு. 530-களில் வழக்கிற்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஓவிய உருவங்களைத் தவிர மண் சட்டி பொருளின் மற்ற பாகங்களை கருப்பு நிற வண்ணத்தால் அலங்கரிப்பது சிகப்பு உருவ உத்தி. ஓவிய உருவங்கள் மண் சட்டியின் இயற்கை வண்ணமான சிகப்பு வண்ணத்தில் அப்படியே விடப்பட்டிருக்கும். உடை மற்றும் உடல் பாகங்கள் மாத்திரம் கருப்பு வண்ணக் கோடுகளால் பிரித்துக்காட்டப்பட்டிருக்கும். இதே காலகட்டத்தில் மிக முக்கியமான ஓவிய கலை புதுமை ஒன்றையும் கண்டுபிடித்தார்கள் கிரேக்க ஓவியக் கலைஞர்கள். அது ஃபோர் ஷார்டனிங் (fore-shortening). இரண்டு பரிமாணம் கொண்ட ஊடகத்தில் ஓவியங்களை முப்பரிமாணம் கொண்டதாக மாற்றும் பெர்ஸ்பெக்டிவ் அடிப்படைகளில் ஒன்றாக இருப்பது ஃபோர் ஷார்டனிங்.

தமிழ் சிந்து, எகிப்து, சுமேரியர்கள் பெர்ஸ்பெக்டிவ் அடிப்படையை தங்களின் ஓவியங்களில் பயன்படுத்தாத காரணத்தால் ஆர்காயிக் கால கிரேக்க ஓவியர்கள் கண்டுப்பிடித்த ஃபோர் ஷார்டனிங் உத்தி ஓவியக் கலை வரலாற்றில் மிக முக்கிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு பல ஆயிரம் ஆண்டுகலாக எகிப்திய ஓவியங்களும், சுமேரிய ஓவியங்களும் மனித உருவத்தின் பக்கவாட்டு தோற்றங்களையே காட்டிவந்தன. ஒரு மனிதன் நேருக்கு நேராக நின்ற நிலையில் பார்வையாளனை பார்த்திருக்கும்படியான தோற்றத்தில் ஓவியங்கள் வரையப்பட்டதில்லை. இப்படி வரைவதற்கு பெர்ஸ்பெக்டிவ் அடிப்படையின் ஃபோர் ஷார்டனிங் குறித்த புரிதல் வேண்டும். புரிதல் மாத்திரம் போதாது அதை தன்னுடைய ஓவியங்களில் பயன்படுத்தும் துணிச்சலும் வேண்டும். வெகுசன மக்களுக்கு அதுப் புரியுமோ புரியாதோ அல்லது தன்னுடைய படைப்பு புரிந்துகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டுவிடுமோ போன்றத் தயக்கங்கள் அற்ற தன் படைப்பின் மீதான முழு நம்பிக்கையும் ஆளுமையும் கொண்ட கலைஞர்களாலேயே இத்தகைய துணிச்சல் மிக்க சோதனை முயற்சிகளை முன்னெடுக்க முடியும்.

அதிலும் பல ஆயிரம் ஆண்டுகளாக மனித இனம் பார்த்து வந்திருக்கும் ஒரு விசயத்தில் தீடிரென்று தனக்குத் தோன்றிய புதுமையை புகுத்துவது என்பது கத்தி மீது நடக்கும் காரியம். பார்த்த விசயங்களையே பலத் தலைமுறைகளாக கிணற்றுத் தவளைகளைப் போல திரும்பத் திரும்ப பார்த்து வரும் வெகுசன மக்கள் (இதில் கலைஞர்களும் அடக்கம்) மத்தியில் சோதனை முயற்சிகளை செய்துப் பார்ப்பது சுயத் திறமையை பந்தயம் வைப்பதற்கு நிகரானதும் கூட. அந்த காரியத்தை அன்று செய்தவர் யூதிமைடிஸ். கி.மு. ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் இவர். அன்றைய ஓவியக் கலைஞர்கள் மத்தியில் கலவரத்தை உண்டாக்கியவர். மற்ற ஓவியர்களின் ஓவியங்கள் இவருடைய ஓவியங்களுக்கு முன்னால் நிற்க முடியாமல் திணறின. இவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆசானாக கொண்டு பலப் புதிய ஓவியக் கலைஞர்கள் உருவாகி ஆர்காயிக் காலகட்ட ஓவியங்களில் புதுமை அட்டகாச அதகளம் செய்தார்கள். கிரேக்க ஓவிய வரலாற்றை யூதிமைடிஸ் காலம், அவருக்கு பின் என்று உட்பிரிவாக பிரித்துப் பார்க்கும் அளவிற்கு அவருடைய ஓவியத் திறமையும் ஆளுமையும் ஆளை அசத்தக் கூடியது. அவருடைய தன்னம்பிக்கைக்கும் ஆளுமைத் திறனுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அவர் வரைந்த அம்பாரா மண் சட்டி ஓவியம் ஒன்றில் பின்வருமாறு அவர் கையெழுத்திட்டிருப்பதை இங்கே குறிப்பிடுவது ஏற்றதாக இருக்கும். ‘யூப்பிரோனியஸ் இதைவிட சிறப்பாக எந்த ஒரு படைப்பையும் கொடுத்ததில்லை’. யூப்பிரோனியஸ் என்பவர் யூதிமைடிசின் சமகாலத்தில் இயங்கிய மற்றொரு ஓவியக் கலைஞர். பின்நவீனத்துவ காலகட்டத்தில் இத்தாலியில் சமகாலத்தில் இயங்கிய பல ஓவியக் கலைஞர்களுக்கு இடையே இருந்த திறமை போட்டியைப் போன்றதே அன்றைக்கு யூதிமைடிசுக்கும் யூப்பிரோனியசுக்கும் இடையே இருந்த போட்டி.

யூதிமைடிஸ் தான் வரைந்த ஓவியங்களில் செய்துக் காட்டிய புதுமைகள் சமூகத்தின் மற்ற அறிவுசார் செயல்பாடுகளிலும் தாக்கங்களை உண்டாக்கியது. ஓவியங்களில் ஃபோர் ஷார்டனிங் என்கிற உத்தியைப் புகுத்தி அதுவரையான பழமைவாத கட்டுக்களை தடம் தெரியாமல் தகர்த்தன அவருடைய ஓவியங்கள். கலையானது மனித சமூகத்தின் அடுத்தக் கட்ட சிந்தனைகளுக்கு வழி வகுக்க கூடியதாகையால் இதைத் தொடர்ந்து புதுமை சிந்தனைகள் பெருக்கெடுக்கத் தொடங்கின. பழமைவாதங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் எதிரான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அன்றைய கிரேக்க சமூகத்தின் அறிவியலும் தத்துவ இயலும் புதிய சிந்தனை மாற்றங்களை சந்திக்கத் தொடங்கியது இதற்குப் பின்பே. பிற்காலத்தில் வந்த அரிஸ்டாட்டில் மற்றும் புளுட்டோ போன்ற தத்துவ மேதைகளின் உலக சிந்தனைகளுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது யூதிமைடிஸ் தன் கலையில் புதுமைகளை செய்துக் காட்டி கலகத்தை உண்டாக்கிய இந்த காலகட்டத்திலேயே. இத்தனைக்கும் அன்றைய மேட்டுக் குடி கிரேக்க சமூகத்தால் சிற்ப கலைஞர்களும், ஓவியக் கலைஞர்களும் கீழானவர்களாகவே கருதப்பட்டிருக்கிறார்கள். கருதிவிட்டுப் போகட்டுமே. இதுதான் யூதிமைடிசின் எண்ணமாகவும் இருந்திருக்கவேண்டும்.

the warriors 450(தி வாரியர்ஸ் லீவ்டேகிங் ஓவியம்)

யூதிமைடிஸ் புகுத்திய அந்த ஃபோர் ஷார்டனிங் உத்திக்கான ஒரு உதாரணத்தை இங்கே பார்த்துவிடுவது நல்லது. கி.மு. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் யூதிமைடிஸ் வரைந்த ஓவியம் தி வாரியர்ஸ் லீவ்டேகிங். ஹோமரின் காவியங்களிலிருந்து ஓவியக் காட்சிக்கான கருவை எடுப்பதை யூதிமைடிஸ் அறவே ஓழித்துக்கட்டிவிட்டார் என்று சொல்லலாம். மனித வாழ்வின் எதார்த்தங்களையும் இயற்கையின் இயல்பான தன்மையையும் ஓவியங்களில் பிரதிபலிக்க வேண்டும் என்பது அவருடைய ஓவிய சித்தாந்தம். இந்த சித்தாந்தமே இன்றைய உலக ஓவியக் கலைஞர்களின் சித்தாந்தமாகவும் இருந்து வருகிறது. இது நமக்கு சொல்லும் செய்தி யூதிமைடிஸ் தன் காலத்தைவிட பல நூற்றாண்டுகள் முன்னோக்கி சிந்தித்திருக்கிறார் என்பதே. தன் சமகாலத்தைவிட பல தலைமுறைகள் முன்னோக்கிய சிந்தனை. இதுவே மேதைகளுக்கும், மேதமை என்கிறப் பெயரில் பழமை மாவு பிசைந்துக்கொண்டிருப்பவர்களுக்குமான வித்தியாசம். இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முந்தைய யூதிமைடிசின் ஓவியங்கள் இன்றைக்கும் புதுமையாக காட்சி அளிப்பதற்கு காரணமும் இதுவே. அவர் காலத்தில் இயங்கிய ஆயிரக் கணக்கான கலைஞர்கள் தடம் தெரியாமல் காணாமல் போனதற்கு காரணமும் இதுவே. அடிக்கும் காற்றை வைத்து கலை வியாபாரம் செய்து பல தலைமுறைகளுக்கு வயிற்றை நிரப்பிக்கொண்டால் போதும் என்று நினைப்பவர்கள் மனித வரலாற்றில் அடையாளம் இல்லாமல் அடித்துக்கொண்டு போய்விடுவதும் இதனால்தான்.

தி வாரியர்ஸ் லீவ்டேகிங் ஓவியத்தில் போர்களத்திற்கு செல்லும் மகனை தாயும் தந்தையும் தயார்படுத்தி அனுப்பும் காட்சியை சித்தரிக்கிறார் யூதிமைடிஸ். அன்றைய சமூகத்தின் எதார்த்த செயல்பாட்டு காட்சிகளில் ஒன்றையே அவர் இந்த ஓவியத்தில் தன்னுடைய ஓவியத்திற்கான கருவாக எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த ஓவியத்தில் தாயும் தந்தையும் வழக்கப்படியான பக்கவாட்டு நிலையில் காட்டப்பட்டிருக்க, புதுமைகள் அனைத்தும் குவிக்கப்பட்டிருப்பது போருக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மகனின் மீதே. அந்த மகன் நேரடியாக பார்வையாளர்களை பார்த்திருக்கும்படி நின்றிருக்கிறான். அவனுடைய வலது கால் பக்கவாட்டு நிலையில் இருந்தாலும் அவனுடைய இடது கால் மிகச் சரியாக பார்வையாளர்களை பார்த்தபடி இருக்கிறது. நன்றாக கவனித்தீர்களானால் இடது காலில் இருக்கும் விரல்களை ஐந்து சிறிய வட்டங்களாக யூதிமைடிஸ் காட்டியிருப்பது புலப்படும். இதுவே ஃபோர் ஷார்டனிங் உத்தி (படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கிறது). அன்றைய கிரேக்க ஓவியக் கலையை தலைகீழாக புணர் நிர்மானம் செய்வதற்கான கட்டாயத்தை பல ஓவியக் கலைஞர்களின் மத்தியில் உண்டாக்கிய ஓவியங்களில் இதுவும் ஒன்று.

சிற்பக் கலையைப் பொறுத்தவரையில் ஆர்காயிக் காலகட்டத்தின் உச்சத்தில் செம்பை உருக்கி செய்யப்படும் செப்புக் சிற்பக் கலை பல வளர்ச்சிகளைப் பெற்றது. இதுக் குறித்து நாம் முன்பே பார்த்திருக்கிறோம். அடுத்து நாம் பார்க்கவேண்டியது கட்டிக் கலை குறித்து. ஏறத்தாழ இரண்டாயிரம் வருடத்திய ஐரோப்பிய நாடுகளின் கட்டிடக் கலைக் குறித்து தெரிந்துக்கொள்ள நாம் செய்யவேண்டியது தொடக்க கால ஆர்காயிக் கால கிரேக்க கோயில் கட்டிடக் கலைக் குறித்து அறிந்துக்கொள்வது. ஆர்காயிக் கால கிரேக்க கோயில் கட்டிடக் கலையே ரோமானியர்கள் வழி பிற்கால ஐரோப்பிய கட்டிடக் கலையின் பிறப்பிடம். மத வழிப்பாட்டு சடங்குகளுக்காகவோ அல்லது வழிப்பாட்டு கூடுகைக்கான இடமாகவே ஆர்காயிக் கால கோயில்கள் கட்டப்படவில்லை. தாங்கள் செதுக்கிய கடவுளர் சிற்பங்களை மழை மற்றும் வெயில் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்து வைக்கும் ஒரு சிறப்பு இடமாகவே கிரேக்கர்கள் கோயில்களை கட்டினார்கள்.

தொடக்க கால கிரேக்க கோயில்கள் இரண்டே இரண்டு உறுப்புகளை மட்டும் கொண்டது. நாவோஸ் (naos) மற்றும் ப்ரோநாவோஸ் (pronaos). நாவோஸ் என்பது கடவுள் சிலை வைக்கப்பட்டிருக்கும் அறை. ப்ரோநாவோஸ் கடவுள் சிலை இருக்கும் அறைக்கு முன்பாக இருக்கும் அறை.

opisthodomos 450(Naos & Pronaos)

நாவோஸ் என்பதை பிற்காலத்தில் ரோமானியர்கள் சீலே என்று குறிப்பிட்டார்கள். சில வருடங்கள் கழித்து ஓபிஸ்தோடோமோஸ் (opisthodomos) என்கிற பின்பக்க உறுப்பையும் கிரேக்கர்கள் சேர்த்தார்கள். ப்ரோநாவோசும், ஓபிஸ்தோடோமோசும் இரண்டு தூண்களால் தாங்கப்பட்டிருக்கும் உயர்ந்த திண்ணைப் போன்ற பகுதிகள் (அல்லது மண்டபம் என்று சொல்லலாம்). மேலும் சில வருடங்கள் கழித்து ஆர்காயிக் கால கிரேக்க கட்டிடக் கலைஞர்கள் கோயில் கட்டிடக் கலையில் அடுத்த புதுமையைப் புகுத்தினார்கள். பல நூறு அடிகள் தொலைவிலிருந்து பார்க்கும்போது கோயிலின் கட்டிடமானது பிரம்மாண்டமாக தெரியவேண்டும் என்கிற காரணத்திற்காக பெரிஸ்டைல் (peristyle) என்கிற அமைப்பை கட்டிடத்தில் சேர்த்தார்கள்.

peristyle 450பெரிஸ்டைல் என்பது கோயிலை சுற்றிக் கட்டப்படும் பல தூண்களைக் கொண்ட ஓட்டுக் கூரைப் போன்ற மண்டபம். கட்டிடத்தின் பிரம்மாண்டத்தை மேலும் அதிகரிக்க டைப்பிட்ரல் (dipteral) அமைப்பையும் சேர்த்தார்கள். இது இரண்டு அடுக்கு தூண் வரிசையைக் கொண்டது.

dipitreal temple 450(டைப்பிட்ரல் அமைப்பு கோயில்)

சாதாரண கோயிலாக இருந்தாலும் சரி மற்ற இரண்டு வகை (பெரிஸ்டைல், டைப்பிட்ரல்) கோயிலாக இருந்தாலும் சரி அவைகள் மூன்று படிகட்டுகளின் மீதே கட்டப்பட்டன. இந்த மூன்று படிகட்டுகளையும் நம்முடைய கோயில் கட்டிடக் கலை உறுப்பான உப பீடத்துடன் ஒப்பிடலாம் (உப பீடம் பிற்கால சோழர் கால கோயில் கட்டிடக் கலையில் மிகவும் முக்கியமான உறுப்பு. தஞ்சைப் பெருவுடையார் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில்களின் பிரம்மாண்டத்திற்கு அடிப்படைக் காரணம் இந்த உப பீட உருப்பு). கீழிலிருந்து மேல் இருக்கும் மூன்றாவது படி ஸ்டைலோபேட் என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க கோயில் கட்டிடக் கலையில் மூன்று பிரதான அமைப்புகள் இருக்கின்றன. டோரிக், ஐயோனிக் மற்றும் கொரிந்தியன்.

டோரிக் அமைப்பு கோயில்களை உருவாக்கியவர்கள் டோரிக் கிரேக்க பழங்குடிகள். இவர்களிலிருந்தே ஸ்பார்டன் என்கிற பிற்கால கிரேக்க இனம் தோன்றியது. கி.மு. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் டோரிக் அமைப்பு கோயில்கள் கிரேக்க தீவுகள் முழுவதும் பரவலாக கட்டப்பட்டன. இந்த அமைப்பு கொஞ்ச காலமே கிரக்கத்தில் வழக்கிலிருந்தது. சுமார் ஆயிரம் வருடங்கள் கழித்து ரோமானியர்களும் கூட டோரிக் கட்டிட அமைப்பு தங்களின் கோயில் கட்டிடக் கலையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். விக்டோரியன் கால ஐரோப்பாவிலும் கூட பல கட்டிடங்கள் டோரிக் கட்டிட அமைப்பிலேயே கட்டப்பட்டிருக்கிறது.

Doric Ionic map 600

(இடது புறம் இருப்பது டோரிக் கட்டிட அமைப்பு. வலது புறம் ஐயோனிக் கட்டிட அமைப்பு)

கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் கிழக்கு ஏஜியன் பகுதியில் இருந்த ஐயோனியா என்கிற நகரத்தில் உருவானது ஐயோனிக் கட்டிட அமைப்பு. சென்னை ஜார்ஜ் கோட்டையின் தூண்கள் ஐயோனிக் கட்டிட அமைப்பைக் கொண்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிக் காலப் பகுதியில் கொரிந்தியன் நகரில் தோன்றியது கொரிந்தியன் கட்டிட அமைப்பு. இந்த மூன்று கட்டிட அமைப்புகளும் அடிப்படையில் ஒன்றுதான் என்றாலும் கட்டிட உறுப்புகளின் அமைப்புகளில் இவைகள் ஒன்றுக்கு ஒன்று மாறுபடக் கூடியவைகள்.

corinthian order 450(கொரிந்தியன் கட்டிட அமைப்பு)

கட்டிடத்தின் சில உறுப்புகளில் சிலைகளும் ஓவியங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. அந்த உறுப்புகள் பெடிமென்ட் (pediment), மீடோப் (metope) மற்றும் ஃப்ரெசி (frieze). பெடிமென்ட் என்கிற உறுப்பு டோரிக் மற்றும் ஐயோனிக் கட்டிட அமைப்பில் இருக்கும் உறுப்பு. கொரிந்தியன் அமைப்பில் இது கிடையாது. மீடோப் டோரிக் கட்டிட அமைப்பில் மட்டுமே இருக்கும் உறுப்பு. ஃப்ரெசி மூன்று அமைப்பிலும் இருக்கும் பொதுவான உறுப்பு.

(தொடரும்)

- நவீனா அலெக்சாண்டர்

Pin It