கட்டிடக் கலை
சுமேரியாவின் தொடக்க கால உபேயத் மற்றும் ஜம்தத் நசுர் காலகட்ட கலைகளை ப்ரோட்டோ-ஹிஸ்டாரிக் கால எல்லைகளைச் சேர்ந்ததாக இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் பிரித்திருக்கிறார்கள். ப்ரோட்டோ-ஹிஸ்டாரிக் கால எல்லை என்பது மொழிக்கான எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டம். சுமேரியாவைப் பொருத்தவரை இது கி.மு. 7000-6000-க்குள் வருகிறது. ஊருக் (இன்றைய வார்க்கா நகரம்) நகரில் இனானா கடவுளுக்கான கோயில் இந்த வருடங்களில் கட்டப்பட்டிருக்கிறது. இதுவே சுமேரிய கட்டிடக் கலையின் தொடக்கம். சுமேரியாவின் தொடக்க கால கட்டிடக் கலைக்கு உதாரணமாக இன்றைக்கு நமக்கு கிடைப்பவைகள் கோயில் கட்டிடங்களே. இவைகளும் முழுமையான உருவத்தில் கிடைப்பதில்லை. இதற்கு ஆயிரமாயிரம் ஆண்டு கால இயற்கையின் செயல்பாடுகள் ஒரு காரணம் என்றாலும் சுமேரியக் கட்டிடக் கலை அமைப்பும் மற்றொரு காரணமாக இருக்கிறது. சராசரியாக நூறு வருட இடைவெளியில் பழைய கோயிலுக்கு மேலேயே பல புதிய கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள் விரிவாக்கம் செய்து.
இப்படியாக சில ஆயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றிருக்கிறது. இன்றைக்கு நமக்குக் கிடைக்கும் தொடக்க கால சுமேரிய கோயில்களின் அடித்தளத்திற்கு கீழே சுமார் ஆறிலிருந்து பத்து காலத்தால் முந்தைய பழைய கோயில்களின் கட்டுமான அமைப்புகள் இருக்கின்றன. இதன் காரணமாக தொடக்க கால சுமேரியக் கட்டிடக் கலையை ஓரு தெளிவான வகைப்பாட்டிற்குள் கொண்டுவருவதில் பிரச்சனை இருக்கிறது. இன்றைக்கு கிடைக்கும் அந்தக் கோயில்களின் அமைப்புகள் குழம்பம் தரும் வகையிலும் இருக்கின்றன. ஆனாலும் தொடக்க கால சுமேரிய கட்டிடக் கலையை இரண்டு வகைகளில் பிரிக்கலாம். ஒன்று தரைமட்டத்தில் கட்டப்படும் கோயில்கள்; அடுத்தது உயரமான மண் மேடுகளின் மீது கட்டப்படும் கோயில்கள். உயரமான மண் மேடுகளின் மீது கட்டப்பட்ட கோயில்களே பிற்காலத்தில் ஷிகுராத் வகை கட்டிடக் கலைக்கு முன்மாதிரிகளாக இருந்திருக்கின்றன.
தொடக்க கால சுமேரியாவின் கட்டிடக் கலையை சொல்லும் கோயில்களாக இருப்பவைகள், லைம்ஸ்டோன் டெம்பில், டெம்பில் ஆப் தவுஸண்ட் ஐய்ஸ், இனானா சேன்க்சுரி, வையிட் டெம்பில், டெம்பில் ஓவல், சாரா டெம்பில், அபு டெம்பில், சின் டெம்பில், ஸ்கொயர் டெம்பில், ஹை டெம்பில், ஸ்டோன் கோன் டெம்பில். இந்தக் கோயில்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஒரு அடுக்கின் மேல் பல அடுக்குகளாக திருத்தி, திருத்தி கட்டப்பட்டவைகள் என்பதை நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். தொடக்க கால, இடைக்கால மற்றும் இறுதிக் கால சுமேரிய கட்டிடக் கலைகளுக்கு உதாரணம் இந்தக் கோயில்களின் வளாகத்திற்கு உள்ளேயே நமக்கு கிடைக்கிறது. இவற்றின் கட்டிடக் கலை குறித்த அனுமானங்களையே இன்றைய ஆராய்ச்சி உலகத்தால் முன்வைக்க முடிகிறது.
(ஊர்க் நகரில் இருக்கும் அனு கடவுளின் கோயில் இது. சிதிலமடைந்திருக்கும் கோயிலின் மீது இன்றைய ஆராய்ச்சியாளர்கள் வரைந்திருக்கும் அனுமானக் கட்டிட ஓவியம்.)
(ஊர்க் நகரில் இருந்த ஓவல் டெம்பிலின் மாதரி அனுமான ஓவியம்)
(ஊர்க் நகரிலிருக்கும் ஒயிட் டெம்பில்)
தொடக்க கால சுமேரியக் கட்டிடக் கலையின் சிறப்பான அம்சங்களில் ஒன்று உருளை வடிவக் கற்கள். இந்தக் கற்களை சுவர்களின் அலங்காரத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள் தொடக்க கால சுமேரிய கட்டிடக் கலைஞர்கள். இது ஒருவித மொசைக் டிசைன் போன்ற சுவர் அலங்காரத்தை வெளிப்படுத்த உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. கோயில் கட்டிடங்கள் சுட்ட செங்கற்களாலேயே கட்டப்பட்டிருக்கிறது. மெசபட்டோமியாவின் தெற்குப் பகுதிகளான ஊர்க், ஊர் மற்றும் ஈரிடு போன்ற நகரங்கள் வண்டல் மண் சமவெளிப் பகுதியில் அமைந்தவைகள். இங்கு பாறைகளைக் கொண்ட குன்றுகளோ அல்லது மலைகளோ கிடையாது. தோப்பு என்கிற பெயருக்கு அர்த்தம் காட்டக் கூட இந்தப் பகுதியில் தொடர்ந்தார்போல நான்கு ஐந்து மரங்கள் வளர்ந்திருப்பது அதிசயம். ஆக கட்டிடக் கலைக்கு தேவையான கற்களும் மரங்களும் தெற்கு சுமேரியர்களுக்கு மிகவும் விலை உயர்ந்த கட்டுமானப் பொருட்கள். வடக்கு சுமேரியப் பகுதி அல்லது ஈரான் போன்ற பகுதிகளில் இருந்துதான் இவைகளை இந்த நகரங்களுக்கு கொண்டு வரவேண்டியிருந்தது. எடை மிகுந்த கற்கள் மற்றும் மரங்களை தொடர்ச்சியாக தங்கள் பகுதிகளுக்கு கொண்டு வருவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக தொடக்க கால சுமேரியர்கள் சுட்ட செங்கற்களையே தங்களின் கட்டிடக் கலைக்கு பெரிதும் பயன்படுத்தினார்கள். செங்கற்கள் காலத்தை தாண்டி நிற்க கூடியவைகளாக இல்லாத காரணத்தாலேயே தொடக்க கால சுமேரியர்கள், சராசரியாக நூறு ஆண்டுகள் இடைவெளியில் தங்களின் கோயில்களை மீண்டும் மீண்டும் புதுப்பித்து கட்டும் நிர்பந்தத்திற்கு ஆளானார்கள். சுமேரிய நாகரீகம் வீழ்ந்த பிறகு அவர்களின் கோயில்களை புதுப்பித்துக் கட்ட ஆள் இல்லாததால் அவர்களுடைய செங்கற் கட்டிடங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து இன்றைக்கு செம்மண் மேடுகளாகவும் குன்றுகளாகவும் காட்சியளிக்கின்றன.
பொதுவாக இந்த கோயில் கட்டிட வளாகத்திற்குள் வேறு சில கட்டிடங்களும் கோயில் கட்டிடத்துடன் சேர்ந்தே இருந்திருக்கிறது. தங்கும் வசதி கொண்ட வீடு போன்ற கட்டிடங்கள், நிர்வாக அலுவலக கட்டிடங்கள் மற்றும் பலி செலுத்தும் இடங்கள். இவைகளை உள்ளடக்கியபடியான சுற்றுச் சுவரும் கட்டப்பட்டிருக்கிறது.
சிற்பக் கலை
சுவர் புடைப்புச் சிற்பங்கள், கல்பலகை புடைப்புச் சிற்பங்கள், முழு உருவச் சிற்பங்கள் என்று சிற்பக் கலையை மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். தெற்குப் பகுதியின் நிலவியல் அமைப்பு சிற்பக் கலையிலும் முட்டுக் கட்டைகளைப் போட்டது. கற்கள் அரிதான விசயம் என்பதால் களிமண் சிற்பங்களையே தொடக்க கால சுமேரிய சிற்பக் கலைஞர்கள் வடித்திருக்கிறார்கள். இதில் முக்கியமானது சிலிண்டர் சீல்கள். சிலிண்டர் சீல்கள் ஜிப்சம் மற்றும் அலபாஸ்டர் கற்களில் செதுக்கப்பட்டவைகள். இந்த சிலிண்டர் சீல்களை களிமண் கட்டைகளில் உருட்டி அலங்காரப் பொருட்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் பொருட்களை கோயில்களிலும் வீடுகளிலும் அலங்காரத்திற்கு சுமேரியர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஜிப்சம் கற்களில் செதுக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் உருவச் சிலைகளும் நமக்குக் கிடைக்கின்றன. மத வழிப்பாட்டு சடங்கின் ஒரு பகுதியாக இந்தச் சிலைகள் சுமேரியக் கோயில்களுக்கு பொது மக்களால் காலம் காலமாக அர்ப்பணிக்கப்பட்ட சிலைகளாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இவைகள் உட்கார்ந்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ வடிக்கப்பட்டிருக்கின்றன. கைகள் இரண்டும் முன்பக்கமாகக் கோர்த்து மரியாதை செய்யும் அல்லது வேண்டுதல் செய்யும் தோரணையில் இருக்கின்றன. இவைகள் சிமெட்டிரிக்கள் சிலைகளாகவே வடிக்கப்பட்டிருக்கின்றன. தொடக்க கால சுமேரிய சிற்பங்களில் கான்டிரபோஸ்டா உத்தி காணப்படவில்லை. (முழு உடல் எடையையும் ஒரு காலில் தாங்கிக்கொண்டு மற்றொரு காலை தளர்ந்த நிலையில் வைத்திருப்பதே கான்டிரபோஸ்டோ என்று அழைக்கப்படுகிறது. இப்படி மொத்த உடல் எடையையும் ஒரு காலில் தாங்கி நிற்பதன் மூலம் நிற்கும் மனித உருவத்தில் S போன்ற வளைந்த தன்மை தோன்றும். மேலும், உடல் எடையைத் தாங்கும் பகுதி தசைகள் சற்று விறைப்பாக மேல் நோக்கி உயர்ந்தும், தளர்ந்தப் பகுதி தாழ்ந்தும் இருக்கும்).
உபேயத் கால ஜிப்சம் சிலைகள்
சுமேரிய சிற்பக் கலையிலும், ஓவியக் கலையிலும் நேச்சுரலிசமும், அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசமும்தான் (அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசம் என்பது ஓவியக் கலையின் அடிப்படைகளான வட்டம், கோடு, சதுரம், முக்கோணம், வர்ணம் ஆகியவைகளைக் கொண்டு சமூகத்தில் பரவலாக அறியப்பட்ட அடையாளக் கோட்பாடுகளையோ அல்லது குறிகளையோ வெளிப்படுத்துவது) அடிப்படை கலைக் கொள்கைகள். தொடக்க கால சுமேரிய சிற்பக் கலைஞர்கள் இதில் கரை கண்டிருக்கிறார்கள். உருளை வடிவம் கொண்ட சிறிய ஊடகத்தில் (சிலிண்டர் சீல்) சிற்பங்களை நேச்சுரலிசத் தன்மையுடன் வெளிப்படுத்துவது என்பது சவாலான விசயம். அதை சுமேரிய சிற்பக் கலைஞர்கள் உன்னதத் தன்மையுடன் செய்து காட்டியிருக்கிறார்கள். படைத்துக் காட்டியிருக்கிறார்கள் என்று சொல்வது தகும். தொடக்க கால சுமேரிய சிற்பக் கலைஞர்கள் மனித உடற் கூற்றையும் (அனாட்டமி), மனித முக அமைப்பை குறித்தும் (பிசியோகாமி) மிக நன்றாகவே அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. தொடக்க கால சுமேரிய சிற்பக் கலையை, கலைஞர்களை வளர்த்தெடுக்கும் நகரமாக ஊருக் நகரம் இருந்திருக்கிறது. சுமேரிய நாகரீகத்தில் கலைகளின் தலைநகரமாக இருந்தது ஊருக் நகரம். இந்த நகரின் கலைத் தாக்கம் எகிப்து மற்றும் சிந்து வெளி நாகரீகங்கள் வரை எதிரொளித்திருக்கிறது.
ஓவியக் கலை
தொடக்க கால சுமேரிய ஓவியக் கலை மண்பாண்டங்களை அலங்கரிப்பதற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் கோயில்களின் சில கட்டிட உறுப்புகளை அலங்கரிக்கவும் சுமேரியர்கள் ஓவியங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். கோயில்களில் இருக்கும் ஓவியங்கள் நேச்சுரலிசத் தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. தொடக்க கால சுமேரி ஓவியக் கலைஞர்கள் ஓவிய உருவங்களை உருவாக்கும் மாஸ் மற்றும் ஷேப்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள். (ஓவிய உருவத்தில் மாஸ் என்பது கன பரிமாணத்தையும் ஷேப் என்பது வடிவத்தையும் குறிக்கிறது). இதன் காரணமாக அவர்களின் ஓவியங்கள் நேச்சுரலிசத் தன்மையுடன் காட்சியளிக்கின்றன. வன விலங்குகளே தொடக்க கால சுமேரிய ஓவியங்களின் பேசுபொருள்கள். சிற்பக் கலை அளவிற்கு தொடக்க கால சுமேரியாவில் ஓவியக் கலை முதன்மை பெற்றதாக இருக்கவில்லை.
ஜம்தத் நசுர் காலக்கட்டத்தின் தொடக்கத்தில் கட்டிடக் கலை திடுதிப்பென்று பின்னோக்கி நகர்வது குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மதக் கொள்கைகள் தொடர்பாக மிகப் பெரிய மாற்றம் அல்லது புரட்சி இந்த காலகட்டத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அனுமானம் செய்கிறார்கள். இந்த சமூக மாற்ற சிந்தனையானது அடுத்து வந்த சுமேரிய நாகரீகத்தின் இடைக்காலமான மெசிலிம் காலகட்டக் கலைகளில் எதிரொலிப்பதை நம்மால் மிகத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இதன் காரணமாக சுமேரியக் கலைகளைப் பொருத்தவரையில் மெஸ்லிம் காலகட்டம், பர்ஸ்ட் டிரான்ஷிசன் பீரியட் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. சிற்பக் கலையைப் பொருத்தவரையில் பல கனிமங்களைக் கலந்து சிற்பங்களை வடிக்கும் முறை அறிமுகமாகிறது. ஒரு சிற்பத்தின் உறுப்புகளை கல், செம்பு, தங்கம், ஜிப்சம் மற்றும் அலபாஸ்டர் போன்ற பல கனிமங்களைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள் ஜம்தத் நசுர் காலகட்ட சிற்பக் கலைஞர்கள். ஸ்டீலே என்று அழைக்கப்படும் புடைப்புச் சிற்பங்கள் கொண்ட கல் அல்லது செம்புப் பட்டயங்கள் அறிமுகமானதும் இந்த காலக்கட்டத்தில்தான்.
(தொடரும்)
- நவீனா அலெக்சாண்டர்