நைல் நதியின் இரு கரை நெடுகத் தோன்றிய நாகரீகம் எகிப்திய நாகரீகம். மெசபட்டோமிய நாகரீகத்தைப் போலவே இதுவும் பல நகரங்கள் தோற்றுவித்த (சிட்டி ஸ்டேட்ஸ்) பல அரசுகளைக் கொண்ட நிலமாகவே இருந்தது. இந்த அரசுகளுக்கு இடையிலான - ஒட்டு மொத்த எகிப்திய நிலப்பகுதிகளை ஓர் அரசின் கீழ் கொண்டுவரும் - அதிகாரப் போட்டிகளும் போர்களுமே தொடக்க கால எகிப்தின் வரலாறு. இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள எனது ‘எகிப்தின் மர்மங்கள்’ புத்தகத்தைப் படிக்கவும். நகரங்களுக்கு இடையிலான இந்த அதிகாரப் போர்களில் வெற்றி பெற்று ஒட்டு மொத்த எகிப்தின் முதல் பாரோவாக தன்னை அறிவித்துக்கொண்டவன் நார்மர். இவன் தொடங்கி கிளியோப்பாட்டிரா முடிய நூற்றுக்கணக்கான பாரோக்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியாக எகிப்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். கிளியோப்பாட்டிராவின் வீழ்ச்சியுடன் எகிப்திய நாகரீகமும் வீழ்ச்சி கண்டுவிட்டது. இது நடந்தது கிருத்தவ சகாப்தம் தொடங்குவதற்கு ஒரு சில பத்தாண்டுகளுக்கு முன்பு.
எகிப்தின் மூவாயிரம் வருடத்திய வரலாறு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. தொடக்க வம்சாவளி காலகட்டம் (கி.மு. 2950 –2575), பழைய வம்சாவளி காலகட்டம் (கி.மு. 2575 - 2125), முதல் இடைக் காலகட்டம் (கி.மு. 2125 – 2010), இடை வம்சாவளி காலகட்டம் (கி.மு. 2010 – 1630), இரண்டாவது இடைக் காலகட்டம் (கி.மு. 1630 – 1539), புதிய வம்சாவளி காலகட்டம் (கி.மு. 1539 – 1069), மூன்றாம் இடைக் காலகட்டம் (கி.மு. 1069 – 664), இறுதிக் காலகட்டம் (கி.மு. 664 – 332). இறுதிக் காலகட்டத்தின் முடிவில் எகிப்து அலெக்சாண்டரின் கைகளுக்கு சென்றுவிட்டது. இதன் பிறகு எகிப்தில் மாசிடோனிய தாலமிகள் வம்சம் தொடங்குகிறது. தாலமிகள் தங்களை எகிப்தின் பாரோக்களாக அறிவித்துக்கொண்டார்கள். தாலமிகளின் கடைசி பாரோவான கிளியோப்பாட்டிராவின் (கி.மு. 51- 30) தற்கொலையுடன் எகிப்திய நாகரீகம் முடிவிற்கு வந்துவிட்டது.
எகிப்திய கலைக் கோட்பாடு
தொல் பழங்கால எகிப்திய எழுத்துக்களை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் புரிந்துக்கொண்டுவிட்டதால் மூவாயிரம் ஆண்டுகால எகிப்தின் கலை வளர்ச்சிகளை கோர்வையாக நம்மால் கட்டமைக்க முடிகிறது. அகழ்வாராய்ச்சி முடிவுகளும் அதன் பங்கிற்கு போதுமான தகவல்களை தருவதால் எகிப்திய கலைகளை அதன் வேரிலிருந்து புரிந்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கிறது. எகிப்தி நாகரீகத்தின் கலைகள் கற்காலம் முதற்கொண்டேத் தொடங்கிவிடுகிறது. கற்கால மனித சமூகத்தின் கலைகளை நாம் தனியாக முன்பேப் பார்த்துவிட்டதால் எகிப்தின் பாரோனிக் காலகட்ட கலைகளை பின் தொடரலாம் என்று நினைக்கிறேன். கட்டிடக் கலை, ஓவியக் கலை, சிற்பக் கலை என்று மூன்றிலும் பிரம்மாண்டத்தை காட்டியவர்கள் பாரோனிக் கால எகிப்திய சிற்பிகள். உலக அதிசயங்களில் இன்றைக்கும் ஒன்றாக இருக்கும் கீசா பிரமிட் பாரோனிக் கட்டிடக் கலை பிரம்மாண்டத்திற்கு வாயடைத்துப்போக வைக்கும் அளவிற்கான எடுத்துக்காட்டு.
எகிப்திய நாகரீகத்தின் கலைகளுக்குப் பின்னால் இருக்கும் அடிப்படை சித்தாந்தத்தை புரிந்துகொள்ள நமக்குத் தெரியவேண்டியது மரணத்தைக் குறித்து. மரணத்தைக் குறித்தேதான் ஆனால் மேலோட்டமாக அல்ல. எகிப்தியக் கலைகளை போகிற போக்கில் பார்ப்பவர்களுக்கு, எகிப்திய கலைகள் மரணத்தை சுற்றியேப் பிண்ணப்பட்டிருப்பதைப் போலிருக்கும். உண்மையில் மரணத்தை கடந்த பெரு வாழ்வையே அவைகள் கருப் பொருளாக கொண்டவைகள். மரணத்தை தவிர்த்த என்றென்றைக்குமான பெருவாழ்விற்கு தொல் பழங்கால எகிப்தியர்கள் பேராசைப்படவில்லை. மரணத்தை ஏற்றுக்கொண்டு அதை கடந்துவிட்டால் பிறகு பெருவாழ்வுதான்(இம்மார்டல்) என்பது அவர்களின் நம்பிக்கை. இது மத நம்பிக்கை அல்ல பூமியில் மனித வாழ்வைக் குறித்த அவர்களின் சித்தாந்தம். மரணத்தை ஏற்றுக்கொண்டு அதை கடந்துப்போக அவர்கள் கையில் எடுத்துக்கொண்டது கலைகளை. கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை ஆகியவைகளின் துணைக்கொண்டு அவர்கள் மரணத்தை ஏமாற்ற நினைத்தார்கள். மரணத்தின் போது மனித உடலை விட்டுப் பிரிந்துப்போகும் உயிரை (எகிப்தியர்கள் உயிரை ‘கா’ என்று அழைத்தார்கள்) அப்படியே அண்ட வெளிக்கு போகவிட்டுவிடாமல் மீண்டும் பழைய உடலுக்கு கொண்டுவந்து மரணத்தை வென்றுவிடலாம் என்பதும் இதன் மூலம் மரணத்தை கடந்துவிடலாம் என்பதும் அவர்களின் எண்ணம். இதன் காரணமாகவே அவர்கள் இறந்தப் பிறகு உடலை மம்மியாக்கினார்கள். இறந்தவனின் உயிரைப் பிடித்து வைக்க அவனைப் போன்ற உருவம் கொண்ட சிற்பங்களையும், இறந்த உடலை பாதுகாத்து வைக்க பிரமிட் போன்ற கட்டிடங்களையும், இறந்தவனின் உயிர் தங்கியிருக்கும் சிலை தினப்படி மூன்று வேலையும் உணவு உண்டு உயிர் வாழ தேவைப்படும் உணவுப் பொருட்களையும், உணவு சமைக்கும் பொருட்களையும், உணவு உற்பத்தி செய்யும் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளையும் ஓவியங்களாக வரைந்துவைத்தார்கள். தீட்டப்பட்டிருக்கும் உணவுப் பொருள் ஓவியங்களில் இருந்து இறந்தவனின் உயிர் தங்கியிருக்கும் சிலை உணவை எடுத்துக்கொள்ளும் என்றும் பலமாக நம்பினார்கள்.
இந்த நம்பிக்கையே எகிப்திய கலைகளின் கருப்பொருள். இந்த கருப்பொருளே எகிப்திய கலைகளின் முட்டுக்கட்டையும் கூட. மூவாயிரம் வருடத்திய எகிப்திய கலைகள் பல சோதனை முயற்சிகளை மேற்க்கொள்ள முடியாததற்கு காரணம் எகிப்தியர்களின் இந்த நம்பிக்கை. எகிப்தில் கலைகள் பயன்பாட்டு பொருள் போலப் பார்க்கப்பட்டதால், கட்டுப்படுத்தப்பட்ட கற்பனை வளத்திற்கே அங்கே இடமிருந்தது. கட்டுபாடுகளற்ற சுதந்திர படைப்புக்கான கலம் அங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. மேலும் கலைகள் பாரோக்கள் மற்றும் அதிகார வர்கத்தின் தயவில் இருந்ததால் எகிப்திய கலைஞர்களால் அவர்கள் விருப்பத்திற்கு செயல்படுவது என்பது முடியாத காரியமாக இருந்தது. எகிப்திய கலைகளைப் பொறுத்தவரையில் மற்றொரு வினோத அம்சம் இருக்கிறது. சிற்ப, ஓவியக் கலைகள் பொது மக்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக படைக்கப்பட்டவைகள் கிடையாது. பிரமிடுகளிலும், கல்லறை கோயில்களிலும், தி வேலி ஆப் தி கிங்ஸ் மற்றும் தி வேலி ஆப் தி குயின்சிலும் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்களும், முழு உருவ சிற்பங்களும், சுவர் ஓவியங்களும் பொது மக்களின் பார்வைகளுக்குப் படாமல் இழுத்துப் பூட்டி வைக்கப்பட்டவைகள். மெசபட்டோமியாவைப் போலவே மூன்று கலைகளும் கோயில்களுடனும், பாரோக்களின் பிரமிடுகள் மற்றும் கல்லறைக் கோயில்களுடனுமே தொடர்புக்கொண்டவைகளாக இருந்தன. சரி அதுபோகட்டும் எழுந்து வாருங்கள் ஒரு நீண்ட கலைப் பயணத்திற்கு நாம் போக வேண்டியிருக்கிறது.
தொடக்க வம்சாவளி காலகட்டம் (கி.மு. 2950 –2575) – முதல் மற்றும் மூன்றாம் அரச வம்சாவளி முடிய
கட்டிடக் கலை
முதல் அரச வம்சாவளி காலத்தில் எகிப்தின் அபைடோஸ் நகரமே பாரோக்களின் பிரதான நெக்ரோபோலிசாக இருந்தது. நெக்ரோபோலிஸ் என்றால் கல்லறை நிலம் என்றுப் பொருள். சக்குரா நகரிலும் பாரோக்களின் நெக்ரோபோலிஸ் இருந்தது. ஆனால் இந்தக் காலகட்ட பாரோக்களில் பெரும்பாலோர் அபைடோசிலேயே தங்களின் மம்மி உடல் மஸ்தபாக்களில் வைக்கப்படவேண்டும் என்று விரும்பியிருக்கிறார்கள். மஸ்தபா கல்லறை கட்டிடம் பிரமிடுகளின் பாட்டன் போன்றது. நீள் சதுர வடிவில் சிறிய குன்றுப்போலக் கட்டப்பட்டவைகள். சுட்ட களிமண் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. தொடக்க கால மஸ்தபாக்களில் பாரோக்களின் உடல்கள் தரைக்கு அடியில் தோண்டப்பட்ட பாறைக் கல் அறைகளில் வைக்கப்பட்டிருக்கிறது. உடல் வைக்கப்படும் அறையை சுற்றி மேலும் இரண்டு அறைகள் பாறையில் செதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேலேயே மஸ்தபா கட்டப்பட்டது. இரண்டாம் அரச வம்சாவளி காலம் தொட்டே பாரோவின் உடல் வைக்கும் அறை தரைக்கு அடியில் பாறையில் செதுக்கப்படாமல் தரைக்கு மேலே அறைகளாக கட்டப்பட்டு அதற்கு மேலே மஸ்தபா கட்டும் வழக்கம் தோன்றியிருக்கிறது.
(மஸ்தபா)
(தரைக்கு அடியில் பாறையில் செதுக்கப்பட்ட பாரோவின் உடல் வைக்கும் அறை)
உயிருடன் இருக்கும்போது அனுபவித்த அனைத்து பொருள்களையும் மரணத்தின்போதும் மறு உருவாக்கம் செய்வதன் மூலம் மரணத்தை கடந்துவிடலாம் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை என்பதால் மஸ்தபாக்களும் பாரோக்களின் அரண்மனை கட்டிடங்களின் தோற்றத்தை பிரதிபலித்தன. வரலாற்றின் புரண்நகை, பாரோக்கள் உயிருடன் இருந்தபோது வசித்த அரண்மனைகள் இன்றைக்கு நமக்கு கிடைக்கவில்லை ஆனால் அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை அரண்மனைகள் (மஸ்தபாக்கள்) பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றைக்கும் அழிந்துபோகாமல் நம் கண் முன்னே நின்றுக்கொண்டிருக்கின்றன.
சிற்பக் கலை
சுவர் புடைப்பு சிற்பங்கள், கல்பலகை மற்றும் பூண் தலை (கைத்தடி ஆயுதத்தின் தலைப் பகுதியில் பொறுத்தப்படும் பூண்) புடைப்பு சிற்பங்கள், முழு உருவ சிற்பங்கள் என்று வழமைப் போல எகிப்திய சிற்பக் கலையை மூன்று வகைகளாகப் பிரித்துக்கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தை சேர்ந்த சுவர் புடைப்பு சிற்பங்களைக் குறித்து அறிந்துக்கொள்ள முடியவில்லை. கல்லறைகளும், கோயில்களும் மணல் மேடுகளாக காட்சியளிப்பதால் அவைகளுக்குள் இருந்த புடைப்பு சிற்பங்கள் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் கல்பலகை புடைப்பு சிற்பங்கள் கிடைக்கின்றன. கல்பலகைகள் காணிக்கை பொருளாக கோயில்களுக்கு வழங்கப்பட்டவைகள். முதல் பாரோவான நார்மர் தொடங்கி எகிப்தின் அனைத்துப் பாரோக்களும் இத்தகைய கல்பலகைகளை அவர்கள் இஷ்ட தெய்வ கோயில்களுக்கு காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள். இந்த கல்பலகைகளில் அந்த பாரோவின் போர் நடவடிக்கைகளும் அரசியல் நடவடிக்கைகளும் புடைப்பு சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.
இந்த காலகட்ட கல்பலகை புடைப்பு சிற்பக் கலைக்கு உதாரணமாக முதல் பாரோ நார்மரின் கல்பலகையே இன்றைக்கு கிடைத்திருக்கிறது. எக்பதிய இரு-பரிமாண கலை (புடைப்பு சிற்பமும், ஓவியமும் இரு-பரிமாண கலையை சேர்ந்தவைகள்) பாணிக்கு எடுத்துக்காட்டாக இருப்பது நார்மரின் கல்பலகை. இந்த கல்பலகையின் முன் பக்கத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சி, நார்மர் அவனுடைய அரசியல் எதிரிகளை தலையில் அடித்து கொல்கிறான். எதிரியின் தலைமுடியை கொத்தாக இடதுக் கையில் பிடித்துக்கொண்டு உயர்த்திய வலது கையிலிருக்கும் கைத்தடி ஆயுதத்தால் எதிரியின் உச்சந்தலையில் அடிக்கிறான். அவன் கைப்பிடியில் இருக்கும் எதிரியின் உடல் குத்துயிரும் குலை உயிருமாக துவண்டுப்போய் கிடக்கிறது. கீழ் பகுதியில் ஏற்கனவே இரண்டு எதிரிகளின் உயிரற்ற உடல்கள் கிடக்கின்றன. வலதுப்பக்கத்தில் மனித கரங்கள் கொண்ட பருந்து துண்டான எதிரியின் தலையை கயிறால் இறுக்கி பிடித்திருக்கிறது. நார்மருக்கு பின்னால் நார்மருக்கு சேவகம் செய்யும் வீரன் நின்றுக்கொண்டிருக்கிறான். மேல் பகுதியின் இரண்டுப் பக்கமும் மனித முகம் கொண்ட எருதின் தலைகள். கல்பலகையின் பின்ப் பக்கத்தில் கழுத்து நீண்ட இரண்டு சிங்கங்களை கட்டுப்படுத்தும் வீரர்கள், கீழ் பகுதியில் எருது ஒன்று ஒரு மனிதனை முட்டிபோதி அவனைக் கொல்லும் காட்சி. மேல் பகுதியில் நார்மரின் வெற்றி ஊர்வலம் காட்டப்பட்டிருக்கிறது. கூடவே நார்மரின் பெயரும் செதுக்கப்பட்டிருக்கிறது.
(முதல் பாரோ நார்மரின் கல்பலகை புடைப்பு சிற்பம்)
சரி இனி இந்த புடைப்பு சிற்பத்திற்கு பின்னால் இருக்கும் கலை சித்தாந்தகங்களை பார்ப்போம். கல்பலகையின் முன் பகுதி குறுக்கு வாட்டில் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பிக்ச்டோரியல் ரெப்பிரஷன்டேஷனாக காட்சிகளை விளக்கவேண்டி இந்த புடைப்பு சிற்பத்தை செதுக்கிய கலைஞர்கள் இப்படி மூன்று பகுதிகளாக பிரித்திருக்கிறார். எகிப்திய புடைப்பு சிற்பத்தின் பிக்ச்டோரியல் ரெப்பிரஷன்டேஷன் அடுத்து வந்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இப்படித்தான் குறுக்கு வாட்டில் பிரிக்கப்பட்டது. படைப்பு ஊடகத்தை இப்படி பகுத்துக்கொள்வதின் மூலம் கதை சொல்லும் வடிவில் காட்சிகளை சம்பவக் கோர்வையாக வெளிப்படுத்த முடியும். அடுத்தது நார்மர் இடது பக்கத்திலிருந்து வலதுப் பக்கமாக பார்க்கும்படி வடிக்கப்பட்டிருக்கிறான். இடது பக்கமிருந்து வலது பக்கம் பார்க்கும்படி ஓவிய உருவங்களையும் புடைப்பு சிற்ப உருவங்களையும் வடிப்பது எகிப்தியக் கலைகளின் பண்பு. அதேப் போல இடதுக் கால் ஒரடி முன்னால் இருக்கும்படி சித்தரிப்பதும் எகிப்திய கலைகளின் பண்பு. இந்த கல்பலகையிலும் நார்மர் இடதுக் காலை ஓரடி முன்னால் வைத்திருப்பதை கவனிக்கலாம்.
அடுத்து ஸ்பேட்டியல் ரிலேஷன்ஷிப்பும் (இரு-பரிமாணக் கலைகளில் ஸ்பேட்டியல் ரிலேஷன்ஷிப் என்பது உருவங்களின் உயரப் பண்பைக் குறிக்கும். பொதுவாக இரு-பரிமாணக் காட்சிகளைப் புரிந்துகொள்ள பெரிய உருவத்தை மையமாக வைத்துக்கொண்டு சிறிய உருவங்களை பார்ப்பது மனித பார்வைக் கோணத்தின் பண்பு. இதைய ஸ்பேட்டியல் ரிலேஷன்ஷிப் என்று சொல்வார்கள்) இந்த சிற்பக் கலைஞரால் பின்பற்றப்பட்டிருக்கிறது. நார்மரின் உருவம் பெரிதாக காட்டப்பட்டு மற்றவர்களின் உருவங்கள் சிறிதாக காட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நார்மரின் உருவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கல்பலகை ஓட்டுமொத்தமாக ரெப்ரஷன்டேஷனல் (கண் முன்னால் நடைப்பெற்ற காட்சிகளை அப்படியே இரு-பரிமாணக் கலையாக படைப்பதை ரெப்ரஷன்டேஷனல் ஆர்ட் என்பார்கள்) பாணியை அடிப்படையாக கொண்டிருக்கிறது. இதுவே அடுத்து வந்த மூவாயிரம் ஆண்டுகால எகிப்திய இரு-பரிமாணக் கலைகளின் பாணி. அதேப் போல எகிப்திய ஓவியம் மற்றும் புடைப்பு சிற்பக் கலையின் அடுத்த நிலையான பண்பு, மனித உருவத்தின் கால்களை பக்கவாட்டிலும், தோள்கள் வரையிலான உடலின் மேல் பகுதியை ஆளைப் பார்த்திருக்கும்படியும், முகத்தை பக்கவாட்டிலும் அமைப்பது.
இந்த கல்பலகையின் அடிப்படை கலைப்பாணி ரெப்ரஷன்டேஷனல் என்றாலும் இதில் சிம்பாலிச பாணியும் பின்ப்பற்றப்பட்டிருக்கிறது. மனித கரங்கள் கொண்ட பருந்து எகிப்தியக் கடவுள் ஹோரசைக் குறிக்கிறது. பூமியை ஆள்பவர் கடவுள் ஹோரஸ். (எகிப்திய கடவுளர்கள் குறித்து தெரிந்துக்கொள்ள எனது ‘எகிப்தின் மர்மங்கள்’ புத்தகத்தை படிக்கலாம்). அதேப் போல கல்பலகையின் பின் பக்கத்தில் இருக்கும் எதிரியை முட்டும் காளை பாரோ நார்மரை குறிக்கிறது. இரு புறமும் மேல் பகுதியில் இருக்கும் மனித முகம் கொண்ட எருது கடவுள் ஹத்தோரைக் குறிக்கிறது.
நான்கு பக்கங்களில் இருக்கும் கடவுள் ஹத்தோரின் தலைகள் சிமெட்டிரிக் பேலன்சில் வடிக்கப்பட்டிருக்கிறது. பனி பக்கத்திலிருக்கும் பாம்பு போல நீண்டக் கழுத்துக்கொண்ட சிங்கங்களும் அதை அடக்கும் வீரர்களும் சிமெட்டிரிக் பேலன்சிலேயேக் காட்டப்பட்டிருக்கிறார்கள்.
இதேக் காலகட்டத்தை சேர்ந்த மற்றொரு காலத்தால் அழியாத மற்றொரு கல்பலகை புடைப்பு சிற்பம் பாரோ வஜ்ஜினுடையது. இந்த பாரோ முதல் அரச வம்சாவளியை சேர்ந்தவன். இந்த கல்பலகையின் காலம் சுமார் கி.மு. 2850. எகிப்திய ரியலிச மற்றும் சிம்பாலிச பாணி சிற்பத்திற்கு உதாரணம் இந்த கல்பலகையில் இருக்கும் புடைப்பு சிற்பங்கள். கடவுள் ஹோரஸ் பருந்தின் வடிவிலும், பாரோ வஜ்ஜி பாம்பின் வடிவிலும் சிம்பாலிக்காக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
(பாரோ வஜ்ஜியின் கல்பலகை புடைப்பு சிற்பம்)
இந்த புடைப்பு சிற்பத்தில் பாம்பு உருவத்திலிருக்கும் பாரோவும், பருந்து வடிவில் இருக்கும் கடவுள் ஹோரசும் வலது பக்கமிருந்து இடது பக்கம் பார்க்க காரணமிருக்கிறது. மேற்கில் சூரியன் மறைவது எகிப்தியர்களைப் பொறுத்தவரையில் மரணத்தின் குறியீடு. கிழக்கில் சூரியன் உதிப்பது உயிர்தெழுவதின் குறியீடு. பருந்தின் தலைக்கு மேல் இருக்கும் வலைவு கிழக்கிலிருந்து மேற்கு திசைக்கு சூரியன் பயணிக்கும் பாதையை குறிக்கிறது. அதுவே சுவர்கத்தின் குறியீடும் கூட. பாம்பு இருக்கும் பகுதி பாரோவின் அரசையும் அவனுடைய அரண்மனையையும் குறிக்கிறது. இரண்டாம் அரச வம்சாவளி காலகட்டத்தில் மஸ்தபா அறைகள் தரைக்கு மேலக்கட்டப்படத் தொடங்கிய நேரத்தில் சுவர் புடைப்பு சிற்பங்களுக்கு வர்ணம் பூசும் புதிய வழக்கமும் எகிப்தில் தோன்றியது. கருப்பு, வெள்ளை, சிகப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை நிற வர்ணங்கள் புடைப்பு சிற்ப உருவங்களுக்கு தீட்டப்பட்டிருக்கிறது.
பழைய வம்சாவளி காலகட்டம் (கி.மு. 2575 - 2125) – நான்கு முதல் எட்டாம் அரச வம்சாவளி முடிய
கட்டிடக் கலை
அடுத்து வர இருக்கும் மூவாயிரம் வருட எகிப்திய கலைகளின் முதல் பொற்காலம் இந்த காலகட்டம். கல்லறை கட்டிடக் கலை அடுத்தப் பாய்ச்சலை நிகழ்த்தியது. உலக கட்டிடக் கலை வரலாற்று சிறப்பு மிக்க பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டிய எகிப்திய பொறியியலாளர் ஈமோதெப். ஈமோதெப்பின் அசாதாரணமான கட்டிடக் கலை முயற்சிக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுத்த பாரோ, பாரோ ஜோசர். (இவர்கள் இருவர் குறித்தும் விரிவாக தெரிந்துக்கொள்ள எனது ‘எகிப்தின் மர்மங்கள்’ புத்தகம் படிக்கவும்). பாரோக்களின் நெக்ரோபோலிஸ் அதுவரைக் கண்டிராத கட்டிடக் கலை பிரம்மாண்டம் அது. அன்றைய உலகின் மிகப் பெறும் கட்டிடமும் அதுவே. பாரோ ஜோசரின் ஸ்டெப் பிரமிட். ஒன்றின் மீது ஒன்றாக ஆறு தளங்களை கொண்ட கட்டிடக் கலை இராட்சன். உருவத்தில். இதை வடிவமைத்து கட்டிய ஈமோதெப் பிற்காலத்தில் எகிப்திய சகாப்த நாயகனாக மாறிப்போனார். பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் எகிப்தில் ஈமோதெப் புகழ்பாடப்பட்டிருக்கிறது. சதுர வடிவ கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட முதல் கல்லறை கட்டிடமும் இதுவே. பல ஆயிரம் டன் எடை கொண்ட இந்த கருங்கள் மலை – இதை விட இதன் பிரம்மாண்டத்தை வார்த்தைகளில் விளக்க வாய்ப்பில்லை – இன்றைக்கும் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் திணறவைக்கக் கூடியது.
இதற்கு வடக்குப் பக்கத்தில் பாரோ ஜோசரின் ஒரு கல்லறை கோயிலும் இருக்கிறது.
- நவீனா அலெக்சாண்டர்