தந்தை பெரியார் அவர்கள் பிறப்பதற்கு பதினாறு ஆண்டுகளுக்கு முன்னரே 1863ல் கல்கத்தாவில் பிறந்து தனது நாற்பதாவது வயதிலேயே மறைந்தவர் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை தனது குருநாதராக ஏற்று இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பியவர்.

"கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்"

"ஒரு விதைவையின்  கண்ணீரைத் துடைக்க முடியாத , ஓர் அனாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ,சமயத்திலோ எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது"

Vivekanandaஎன சில நேரங்களில் அவர் பேசியது அவரை ஒரு முற்போக்காளரோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு ஒரு மயக்கத்தை உண்டாக்கும்.

பார்ப்பனர்களுக்கு எதிரான கருத்துகளையும் அவ்வப்போது வெளிப்படுத்தியவர்.

அயோக்கியப் புரோகிதர்கள்!

"இந்தியாவிலுள்ள ஏழை மக்களிடையில் முகமதியர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அதற்குக் காரணம் என்ன? கத்தியையும், வாளையும் காட்டிப் பயமுறுத்தி இந்துக்கள் முகமதியர்களாக மாற்றப்பட்டார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது. நம் நாட்டிலுள்ள ஜமீன்தார்களிடமி ருந்தும், புரோகிதர்களிடமிருந்தும் சுதந்திரம் பெற்று வாழ்வதற்குத்தான் இந்துக்கள் முஸ்லீம் மதத்துக்கு மாறினார்கள்."

"வங்காளத்தில் விவசாயிகளுக்கிடையில் இந்துக்களைவிட முஸ்லீம்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? அக்காலத்தில் விவசாயிகளுக் கிடையிலிருந்த ஜமீன்தார் களுடைய கொடுமையிலிருந்து விலகிக் கொள்வதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்கள்."

"தோட்டிகளையும், பறையர்களையும் இன்றைய இழிநிலைக்குக் கீழே இறக்கிக் கொண்டு வந்தவர்கள் யார்? அவர்கள் கீழ்மை அடைவதற்குப் பொறுப்பாளிகள் யார் ? அவர்கள் கீழ்நிலை அடைவதற்கு ஆங்கிலேயர்கள் பொறுப்பாளிகள் அல்லர். அவர்கள் கீழ்நிலைக்கு வந்ததற்கு நாமே பொறுப்பாளிகளாவோம். நம்முடைய துன்பத்துக்கும் நம்முடைய கீழ்மைக்கும் நாம் தாம் பொறுப்பாளிகள், மதத்தில் போலிகளும், அவநம்பிக்கை உடையவர் களும் இருக்கிறார்கள்.அத்தகைய நயவஞ்சகர்கள், மதத்தின் உட்கருத்தை வலியுறுத்தாமல் வெளி ஆசாரங்களைப் பிரமாதப்படுத்திச் சுய நலத்தை வளர்ப்பவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் பாரமார்த்திகம், வியவகாரிகம் என்ற கொள்கைகளின் வடிவங்களில் கொடுமையான செயல்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார்கள். அவை அவர்களுடைய குற்றங்களாகும். ஏழைகள் என்று கூக்குரலிடுவதற்குப் பலர் இருக்கிறார்கள். ஏழைகளின் நலனுக் காக ஏதாவது செய்வதற்குச் சங்கங்கள் எத்தனை இருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளுடைய துன்பத்திலும் துக்கத்திலும் பங்கு கொண்டு உண்மையாகவே உருகி அழுபவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்? மக்கள் இனத்துக்காகப் பாடுபடும் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? மனிதர்களாகப் பிறந்துள்ள நாம் மனிதர்களுக்காக உருகா விட்டால் நம்மை மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? பசியின்றி பட்டினியின்றி மக்களினம் வாழ நாம் என்ன செய்கின்றோம்? மக்களையெல்லாம் மகேசுவரன் நிலைக்கு உயர்த்த நாம் என்ன செய்கின்றோம்?"

என்று, தான் சார்ந்த இந்து மதத்தவர்களை நோக்கியே சாட்டையைச் சுழற்றினார். ஆயினும் காந்தியாரைப்போலவே இந்து மதத்தின் மீது தீராத காதல் கொண்டவராகவே இருந்தார்.

குறிப்பாக இந்துமதத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த பார்ப்பனர்களை அவர் கடுமையாக சாடினார். இதில் ஆதி சங்கரரும் தப்பவில்லை.

"வேதாந்தத்துக்கு ஆதாரமாய் இருப்பவை உபநிடதங்கள்; வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள் க்ஷத்திரியர்களால் இயற்றப்பட்டவை .வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணையின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது. உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்கவில்லை.

குமரிலர், சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், பிராமணர் சக்தியை மீண்டும் நிலைநாட்ட முயன்றனர். சிறிது காலம் அச்சக்தி இராசபுத்திர அரசரது வாளின் ஆதரவையும் பெற்றது. சமண புத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப்பின், அது தனது அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது ஆட்சியின் கீழ் என்றைக்கும் உறங்கும்படி செய்யப்பட்டது.

பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களி லும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது. மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன! இந்த அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை. கலியுகத்துப் பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சசர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை, இறைவா! காத்து இரட்சிப்பாயாக!

சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர். இக்காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார்போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராமணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார்! அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக் கிடமாகின்றன.

விதுரன் பிரம்மஞானத்தை அடைந்தான்; அது முற்பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தினால், என்ற சங்கரரைப்பார்த்து இந்நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தையடைந்தால், அவன் முற்பிறப்பிலே பிராமணனாயிருந்த காரணத்தினால் அத்தகைய ஞானத்தை அடைந்தானென்று சொல்ல வேண்டுமா? அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்? வேதப் பிராம்மணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில் தமது புத்தி சாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப் படாத தொன்று"

என்றார் விவேகானந்தர்.

வெறிபிடித்த நம்பூதிரிகள்!

"நான் மலையாளச் சீமையிற் பார்த்ததைவிட அற்ப காரிய மிருக்குமோ? உயர்ந்த ஜாதியான் செல்லும் தெருவிற் பறையன் போதல் கூடாதாம். ஆனால் அப்பறையன் தன் பெயரை மாற்றி ஆங்கிலேய அல்லது துலுக்கப் பெயர் பூண்டு கொள்வானாகில், அவ்வீதியிற் பேகலாமாம். இதனால் மலையாளத்தாரை வெறி-பிடித்தவர்களென்று கொள்ளாமல் வேறெவ்வாறு அவர்களை மதிக்கக் கூடும்? இப்படிப் பட்ட துராசாரங்களை அநுசரிக்கும் அவர்களை மற்றைய இந்து தேசத்தில் ஞானமுள்ள வகுப்பினரெல்லாரும் இகழக்கடவர். தனக்கு உரிமையான குழந்தை-யாய் இருக்கும்போது அதைப் பட்டினி போடுவதும். அதுவே வேறொருவனுக்குச் சொந்தமானால் அதற்கு வெண்ணெயூட்டி வளர்ப்பதும் போலிருக்கிறது" என நம்பூதிரிப் பார்ப்பனர்களைச் சாடினார்.

சங்கராச்சாரி!

"சங்கராச்சாரியார் முதலிய பெரியோர்கள் ஜாதிகளை ஏற்படுத்தினவர்கள். அவர்கள் செய்தனவெல்லாம் சொல்வேனாகில் நீங்கள் சிலர் என்மீது கோபம் கொள்வீர்கள். ஆனாலும், என்னுடைய யாத்திரைகளிலும், என் அனுபவத்திலும் ஏற்பட்டவரையில் அவர்கள் செய்த காரியங்களின் முடிவு வெகு விரோதமாகவே தோற்றுகின்றது. அவர்கள் கும்பல் கும்பலாய் பெலுச்சிஸ்தானம் தேசத்தாரைப் பிடித்து ஒரே நிமிஷத்தில் ஷத்திரியராக்கிவிடுவதும், வலையர் கூட்டத்தை ஒரே ஷணத்திற் பிராமணராக்கிவிடுவதுமாகிய இவையெல்லாம் செய்தார்கள்." என்று சங்கராச்சாரிகள் மீது சாட்டையைச் சொடுக்கினார்.

இந்து மதத்தைப் பரப்புவதற்காக அமெரிக்கா சென்ற இடத்திலும் விவேகானந்தர் பார்ப்பனர்களை தோலுரிக்காமல் விடவில்லை.

"ஏ, பிராமணர்களே, சர்ப்பம் கடித்துவிட்டால், மந்திரத்தால் அந்தச் சர்ப்பமே விஷத்தை இழுக்குமாம் - அதுபோல, நீங்கள் நம் தேசமெல்லாம் கெடுக்கும் வைதிக விஷத்தைப் பரப்பி விட்டீர்கள். நீங்களே இந்த விஷத்தை திருப்பி வாங்கிட வேண்டும். உங்கள் வைதிகக் கொடுமையை உங்கள் மதத்தினின்றும் எடுத்து விட்டீர்களே யானால் உங்கள் மதமே உயர்ந்தது"

என்று பேசி திரும்பினார்.

"கல்வியறிவு பரம்பரையாய் வரவேண்டும் என்றும் திடீரென்று ஒருவனுக்கு அதைப் புகட்டினால் அவன் விருத்தியடையான் என்றும் அவர்கள் (பார்ப்பனர்கள்)வாதம் செய்கிறார்கள். இஃது உண்மையல்ல என்பதற்கு என் கண்ணில் கண்ட நிதர்சனம் கூறுகிறேன். கேளுங்கள்! அமெரிக்காவில் நடந்த சர்வ மத சபைக்கு வந்திருந்த பலருள் ஒரு நீக்ரோ ஜாதி இளைஞனும் வந்திருந்தான்.அவன் நாகரிகமற்ற ஆப்ரிக்கா கண்டத்தில் பிறந்த நீக்ரோவன்.அவன் அந்தச் சபையில் அழகிய பிரசங்கமொன்று செய்தான். அது முதல் அவனிடத்தில் நான் குதூகலம் கொண்டு அடிக்கடி அவனிடம் பேசினேன். நீங்கள் சொல்லும் பரம்பரை வாசனை வாதத்தைப் பற்றி நான் என்ன நினைப்பது? ஓ பிராமணர்களே! பிராமணர்களுக்குப் பரம்பரை வாசனையின் காரணமாகப் படிப்பில் பறையனுக்கிருப்பதைவிட அதிக தகுதி இருக்குமாயின், பிராமணன் படிப்புக்காக கொஞ்சம் கூடப் பணம் செலவிட வேண்டாம். அதையெல்லாம் பறையனுக்கே செலவிடுங்கள்! " என்றுச் சொல்லி பார்ப்பனர்களின் நரித்தனத்தை நாடு கண்டுகொள்ளச் செய்தார்.

இன்றைக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு புகுத்த நினைக்கும் புதியக் கல்விக் கொள்கை வரைவுத்திட்டத்திலே கூட ஒரு இடத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்கற்றல் திறன் இயற்கையாகவே குறைவாகவே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாம். அப்படியானால் விவேகானந்தர் குறிப்பிட்டதைப்போல பார்ப்பனர்களுக்குப் பரம்பரை வாசனையின் காரணமாகப் படிப்பில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை விட அதிக திறன் இருக்குமானால் அவர்களின் படிப்புக்கு அந்த பணம் பயன்படாத வகையில் அதை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காக மட்டுமே செயல்படுத்தப் பட வேண்டும். விவேகானந்தரின் 150 வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய மத்திய பாஜக அரசு அதைச் செய்ய முன்வருமா?

கோவணக்கயிறு பூனூலான கதை!

"குருவானவர் தன் சிஷ்யனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது" என்று பூனூல் உருவான கதையைச் சொல்கிறார் விவேகானந்தர்.

மாட்டுக்குப் பிறந்தவவர்கள்!

மத்தியப்பிரதேசத்தில் கடுமையான பஞ்சம் நிலவிய நேரத்தில், பசுப்பாதுகாப்பு என்ற போர்வையிலே நன்கொடை கேட்டு வத்வர்களிடம் "ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்று இந்திய அரசாங்கத்தார் செய்தி வெளியிட்டிருக்கின்றனர். இதற்கு உதவி புரிவதற்கு உங்களுடைய சபை ஏதாவது செய்திருக்கின்றதா?" எனக் கேட்டார்.

"இந்தப் பஞ்சம் மக்களுடைய பாவகருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!" என்று அதற்கு அவர்கள் அலட்சியமாக அளித்த பதிலைக்கேட்டு ஆத்திரமடைந்து

"தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒருபிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை. மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடை கிறதென நான் எண்ணவில்லை.

மனிதர் தம் கருமத்தினால் இறக்கின்றனரென்று நீர் வாதிப்பீராயின், இவ்வுலகத்திலே எதைக் கருதியும் முயல வேண்டுவதில்லை என்பது தீர்மானமாகின்றது. விலங்குகளைப் பரிபாலிப்பதற்காக நீர் செய்கிற வேலையும் இவ்விதிக்குப் புறம்பாகாது. பசுத்தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்காரர்களுடைய கையிலகப்பட்டு இறக்கின்றன வென்று சொல்லிவிட்டுச் சும்மா இருக்கலாமே?" என்று சொல்ல

பிரசாரகர் சிறிது நாணி, "ஆம்! நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், பசு நம் அன்னை என்று சாத்திரங்கள் சொல்லு கின்றனவே?" என்றார். விவேகானந்தர் நகைத்துக் கொண்டே, "ஆம், பசு நம் அன்னை என்பதை நான் அறிந்து கொண்டேன்; இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்!" என்றாராம்.

கீதை கட்டுக்கதை!

"கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடலாம்" என்று சொன்னவர் விவேகானந்தர்.

கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா?

கீதையில் கூறப்படும் குருக்ஷேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?

குருக்ஷேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன், அர்ஜுனனுடன் நடத்திய நீண்ட விவாதம் பக்கத்தில் சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டு நடந்ததா?

என விவேகானந்தர் கீதையை நார்நாராக கிழித்ததை தனது "கீதையைப் பற்றிய கருத்துகள்" என்ற நூலில் சிறப்பாக பதிய வைத்துள்ளார் ஏ.எஸ்.கே அய்யங்கார் .

சமஸ்கிருதம்!

செத்த மொழியான சமஸ்கிருதத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. ‘‘மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமைக் கலகங்களும், பல்குவதற்கு பெருங்கருவியாய் இருந்ததும்; இருப்பதும் சமஸ்கிருதமே! சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகு மேயானால், இப்போராட்டங்களும் தொலைந்து போகும்!’’ என்றார்.

பார்ப்பனர்களைப் பற்றியும், பசுப்பாதுகாப்பு பற்றியும், பகவத்கீதையைப் பற்றியும், சமஸ்கிருதத்தைப் பற்றியும் இப்படியெல்லாம் விலாசித் தள்ளியிருப்பதை பார்க்கும் பொழுது விவேகானந்தர் மீது நம்மவர்க்கே ஒரு மயக்கம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் தந்தை பெரியார் அவர்களின் மொழியில் சொல்லுவதானால் இதை மலத்தில் அரிசி பொறுக்கும் செயல் என்றுதான் கொள்ளவேண்டும்.

"ஜாதி முறையினை சமன்படுத்த வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். ஜாதி என்பது மிக நல்ல காரியம். நாம் பின்பற்ற வேண்டிய முறைக்கு உரிய திட்டமே ஜாதி என்பது. ஜாதி என்றால் என்ன என்பதை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஜாதி இல்லாத நாடே உலகில் இல்லை" என்றவரும் இதே ஆசாமிதான்.

மாறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட புத்தமும் சமணமும் தனித்திருக்கையில், அவை இந்துமதத்தின் அங்கங்கள் என்று சொன்ன ஆதிசங்கரரை பின்பற்றி இந்துமதத்தை தூக்கி நிறுத்த வரிந்து கட்டியவர் விவேககானந்தர்.

இந்து மதத்தை தூக்கி நிறுத்தவேண்டி பார்ப்பன மதவாதக் கூட்டம் விவேகானந்தரின் 150 வது பிறந்தநாளை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெகஜோதியாக கொண்டாடி மகிழ்ந்தது . இதே போல் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரும் விவேகானந்தரின் நூறாவது பிறந்த நாள் விழாக்கள் 1963ல் கொண்டாடப்பட்டதுண்டு. அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையை கவனித்தால் விவேகானந்தர் மீதான சரியான புரிதல் நமக்கு கிடைத்துவிடும்.

தோழர்களே!

இப்போது விவேகானந்தர் விழா என்று கொண்டாடுகிறார்கள். அவரிடம் என்ன அய்யா அதிசயமானக் கொள்கை இருந்தது? என்ன விசேஷக் கருத்தைப் போதித்தார்? அதனால் நாட்டுக்கு மனித சமூதாயத்திற்கு ஏற்பட்ட நன்மை தான் என்ன? என்று சிந்திக்க வேண்டாமா? 1963- இல் கூடவா இப்படிப்பட்ட விழாக் கொண்டாட வேண்டும்? அவருக்கு ஒரு குரு இராமகிருஷ்ண பரமஹம்சர் - அவர் ஒரு சுத்த காட்டுமிராண்டி. இந்த விவேகானந்தர் என்ன செய்தார் என்றால், அமெரிக்காவில் போய் இந்து மதத்தைப் பரப்பினாராம். நாம் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்கிறோம். இந்தக் காலத்திலா இதைக் கொண்டாடுவது?

இந்த இந்து மதத்தினால் தானே நாம் இழிமக்கள் - சூத்திரர்கள்? இதனால் தானே காமராஜர் காலம் வரைக்கும் நாம் 100-க்கு 87– தற்குறிகளாக இருக்கின்றோம்?

சிந்திக்க வேண்டாமா? யாருக்காவது இந்து மதம் என்றால் என்ன என்று தெரியுமா? இந்து மதம் என்றால் சங்கராச்சாரிக்கும் தெரியாது, பண்டார சன்னதிகளுக்கும் தெரியாதே. சங்கராச்சாரியார் கூறுகிறார்:"இந்து மதம் என்று ஒன்று இல்லை, இதற்கு ஆரிய மதம் வைதிக மதம் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார்."

"பண்டார சன்னதியைக் கேட்டால் எனக்கு சைவம் தான் பெரியது. இந்து மதம் வேறு என்கிறார்கள்." பட்டிக்காட்டில் வாழும் பாமரன் கொண்டாடும் மாரியத்தா விழாவிற்கும், இன்று கொண்டாடும் விவேகானந்தர் விழாவிற்கும் என்ன வித்தியாசம்?

விவேகானந்தர் என்ன கூறினார், சாதித்தார்? ஜாதியை நிலை நிறுத்தும் வகையில் தானே பாடுபட்டு வந்து இருக்கின்றார்? இவர் தொண்டு என்ன? மங்கிக் கொண்டு வந்த இந்து மதத்தையும், அதன் வருணாசிரம கோட்பாட்டையும், மீண்டும் மீண்டும் புத்துயிர் கொடுத்து நிலை நிறுத்துவது தானே!

ஜாதி இல்லாத நாடே கிடையாது என்று கூறுகின்றார். நான் கேட்கிறேன், எந்த நாட்டில் பார்ப்பான் இருக்கிறான்? தொடக்கூடாத "பறையன்" இருக்கிறான்? எந்த நாட்டின் மனிதனை மனிதன் தொட்டாலோ- தொட்டதை அருந்தினாலோ – "தீட்டு" என்ற நியதி இருக்கின்றது?

எனவே விவேகானந்தர் செய்த தொண்டு நமது இழிவு நிலையை வளர்க்கவும், வளர்ச்சிக்கும் தடையாக இருந்து வரும் இந்து மதத்தை வலுப்படுத்தவும் பிரசாரம் செய்தது தானே?

பவுத்தமும் சமணமும் இந்து மதத்தின் அங்கங்கள் என்று ஆதிசங்கரர் பேசியதையும், அவற்றை ஒழித்துக்கட்ட ஆதிசங்கரர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்ததையும், முதன்முதலில் நாளாதிசைகளிலும் மடங்கள் அமைத்து ஆள் திரட்டியதையும் திட்டமிட்டு மறைத்தார். இன்றளவும் பவுத்தமும், சமணமும் உலகில் தனித்தனி மதங்களாகத்தான் இயங்குகின்றன எனும் நடப்பு யதார்த்தத்தைக்-கூட கணக்கில் கொள்ளவில்லை மனிதர்.

இந்து மதம் ஜாதியை ஓர் அங்கமாகக் கொண்டிருக்கிறது எனும் விஷயம் அமெரிக்கா வரை போயிருந்தது. அந்த உண்மையை ஒப்புக்கொண்டு பேசவில்லை விவேகானந்தர். மாறாக முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்தார்.

இந்த ஆள் என்ன அதிசயமாகப் பாடுபட்ட ஆள்? எதற்காக விழாக் கொண்டாட வேண்டும்? இந்து மதத்தை மேல் நாட்டுக்குப் போய் பரப்பினார் என்கிறார்கள். மேல் நாட்டக்குப் போய் இங்க நாறுகிற இந்துமதத்தை "நாலு முட்டாள் பசங்கள் நம்பும்படி" செய்து விட்டு வந்ததற்காகவா விழா? இந்த ஆள் உருவம் போட்டு தபால் ஸ்டாம்பு வெளியிட்டு இருக்கின்றார்கள். இது நமக்கு அவமானம் அல்லவா?

நமது மடமைக்கும், இழிவுக்கும், இந்த இந்து மதம் தானே காரணம்?"இந்து மதம்" என்றே ஒரு மதம் உண்டா? சங்காராச்சாரியாரே "இந்து மதம்" என்று ஒன்று இல்லை. இதற்கு வேண்டுமானால் "ஆரிய மதம்" என்று கூறலாம், அல்லது- வைதிக மதம் என்று கூறலாம் என்று தானே கூறியுள்ளார். இந்த ஆள் விழாவிற்கு மத சார்பற்ற சர்க்கார் உதவி செய்யலாமா?"

தோழர்களே! விவேகானந்தர் யார் என்று இப்பொழுது புரிகிறதா?

Pin It