சமண சமயம் (சைனம்-Jainism):

சமண சமயத்தை தோற்றுவித்த மகாவீரர் காலம் கி.மு. 599-527. ஆனால் சமண மரபுப்படி சமண மதத்தைத் தோற்றுவித்தவர்கள் தீர்த்தங்கரர்கள். மகாவீரருக்கு முன்பு 23 தீர்த்தங்கரர்கள் இருந்ததாக சமண மரபு கூறுகிறது. மாகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர். மாகாவீரருக்கு முன்பு இருந்த 23ஆவது தீர்த்தங்கரர் மகாவீரருக்கு 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘பார்சுவநாதர்’. 22ஆவது தீர்த்தங்கரர் ‘அரிசுடநேமி’ புத்தருக்கு 84000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். 21ஆவது தீர்த்தங்கரர் ‘நாமி’ என்பவர் அரிசுடநேமிக்கு ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இப்படி தீர்த்தங்கரரின் காலங்கள் அளவிட முடியாதவைகளாக அதிகரித்துச் செல்கின்றன. ஆகவே சமண மதம் மீமிகப் பண்டைய காலத்தில் தோன்றியது என சமண மரபு கருதுகிறது. தீர்த்தங்கரர்கள் ஒவ்வொருவரும் காளை, யானை, குதிரை, வாலில்லாக் குரங்கு போன்ற தொல்லினக்குழுச் சின்னத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள். மகாவீரர் மகத அரசில் இருந்த ஒரு குறுநில அரசரின் இரண்டாவது மகன்.

கி.பி. 80 வாக்கில் சமண சமயம் இரு பிரிவாகப் பிரிந்து போனது. மகாவீரர் சந்நியாசிகள் ஆடைகள் அணியக் கூடாது என்றார். பார்சுவநாதர் ஆடை அணியலாம் என்றார். ஆடை அணிவதை ஏற்றவர்கள் சுவேதாம்பரர் எனவும் ஆடை அணியாதவர்கள் திகம்பரர் எனவும் பிரிந்தனர். ஆடையைச் சொந்தமாகக் கொண்டால் கூட முக்தி கிடைக்காது என திகம்பரர் கருதினர். ஆதலால் பெண்களுக்கு முக்தி இல்லை என்றனர். சுவேதாம்பரர்களின் புனித நூல்களையும் அவர்கள் ஏற்கவில்லை. மகாவீரரும் அவரது சீடர்களும் கூறிய உரைகள் நீண்ட காலமாக வாய் மொழியாகவே இருந்தன. பின் கி.பி. 57இல் அவை எழுத்துருவம் பெற்றன. சுவேதாம்பரர்களின் 84 புனித நூல்கள் கி.பி. 454 ஆம் ஆண்டுதான் தொகுக்கப்பட்டன. சமண மதத்தின் முறையான தத்துவ நூல் என்பது கி.பி. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாசுவாதி எழுதிய ‘தத்துவார்த்த ஆதிகம சூத்திரம்’ ஆகும். இந்நூலை இரு பிரிவினரும் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதன்பின் வந்த சமணத் தத்துவ நூல்கள் அனைத்தும் இந்நூலை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டன. அதில் அகலங்கர் என்பவரின் நூல்கள் புகழ் பெற்றவை. அவரை இரு பிரிவனரும் ஏற்கின்றனர். இவருக்கு முன்னும் பின்னும் பலர் வந்த போதும் சமண நூலாசிரியர்களில் ‘கேமச்சந்திரர்’ தான் நுண்மான் நுழைபுலம் மிக்க தர்க்க ஞானி. இவரது காலம் கி.பி. 11ஆம் 12ஆம் நூற்றாண்டு (1).

கடவுள், பரமாத்மா ஆகியவை இல்லை எனினும் ஆன்மா உண்டு என்கிறது சமணம். ஆன்மாவுக்கு இருப்பு உண்டு. அதாவது தோற்றம், மறைவு, நிரந்தரம் ஆகியன ஆன்மாவுக்கு உண்டு எனவும் சடப்பொருளைப் போலவே ஆன்மாவும் முதலும் முடிவுமின்றி நிரந்தரமாக இருக்கிறது எனவும் கூறுகிறது சமணம். கர்மவினை எனப்பட்ட இவ்வுலகப் பற்றுகளில் இருந்து ஆன்மா விடுதலை பெறுவதுதான் முக்தி. ஆன்மா விடுதலை அடைவது என்பது நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகியவற்றை அடைந்த நிலை. தூய்மையான ஆன்மா, கர்மவினைக்குக் காரணமான சடப் பொருளோடு கொள்ளும் பற்றுதான் பிறவிக்குக் காரணம். முற்பிறவியின் கர்மவினையால் வந்தது தான் இப்பிறவி. முற்பிறவியின் கர்மவினையை இப்பிறவியில் அனுபவித்தே ஆகவேண்டும். முற்பிறவியில் செய்த தீவினைகளை அனுபவித்து, இப்பிறவியில் நல்வினைகளைச் செய்வதன் மூலம் அடுத்த பிறவியில் துன்பங்களைத் தவிர்க்கலாம். உணர்வு பூர்வமாக ஆன்மவிடுதலை பெறவிரும்பி நல்ஒழுக்கத்தோடு நல்வினையைத் தொடர்ந்து செய்து வந்தால் ஆன்மவிடுதலை கிட்டும். இவை சமணசமயக் கருத்துக்கள். ஆகவே சமணர்களின் முக்கிய நோக்கம் என்பது முற்பிறவியின் தீவினைகளில் இருந்து விடுபட்டு, இப்பிறவியில் துறவின் மூலம் தீவினைகள் ஏற்படாமல் தடுத்து முக்தி பெறுவதாகும்.

ஒரு மனிதன் பிற உயிர்களின் மீது அன்பு காட்டுவதன் மூலமே ஆன்ம விடுதலையை அடைய இயலும் எனக்கூறும் சமணம் அகிம்சை நெறியை ஆன்ம விடுதலைக்கான முக்கிய வழிமுறையாக போதிக்கிறது. விடுதலை அடைந்த ஆன்மா பிரபஞ்சத்தின் உச்சிக்குச் சென்று விடுதலை அடைந்த ஆன்மாக்களின் உலகை அடைகிறது. ஆன்மாக்கள் அவற்றின் பிறப்பு இடத்தைக் கொண்டு, நரககதி, விலங்குகதி, மனிதகதி, தேவகதி என நான்காக ஆகின்றன. இந்த நான்கு கதியிலிருந்தும் ஆன்மா விடுதலை பெறுவதுதான் முக்தி. பிறவிச் சுழற்சியில் மனித கதியை அடையும்பொழுது மட்டுமே முக்தியை அடைய இயலும் என்கிறது சமணம். இவ்வகையில் மனிதர்கள் தேவர்களைவிட உயர்ந்தவர்கள் என்கிறது சமணம்.

புத்த சமயம்:

சாக்கிய குல அரசனின் மகனான புத்தர் தோற்றுவித்ததுதான் புத்தமதம். அவரது இயற்பெயர் சித்தார்த்தர். அவரது சீடர்கள் ஞானம் பெற்றவர் என்ற பொருளில் வைத்த பெயர்தான் புத்தர். புத்தர் நூல் எதுவும் எழுதவில்லை. ஆனால் பிடகம் எனப்படும் பண்டைய புத்த நூல்கள் மூன்று உள்ளன. அவை திரிபிடகங்கள் எனப்படுகின்றன. அவை 1. வினய பிடகம் - புத்த சங்கத்தை நெறிப்படுத்தும் ஒழுக்கநெறிகளைக் கொண்டது. 2. சுத்த பிடகம் – புத்த தருமம் குறித்தும் தொடக்க காலச் சீடர்கள் குறித்தும் கூறுகிறது. 3. அபிதம்ம பிடகம் – உயர்ந்த சமயக் கொள்கைகளின் தொகுப்பு. இவை பாலி மொழியில் உள்ளன. இவைபோக நாகசேனர் என்ற பௌத்த ஆசிரியருக்கும் கிரேக்க அரசன் மினாண்டருக்கும் (கி.மு.125-95) இடையே நடந்த உரையாடல்களைக் கொண்ட ‘மிலிந்தபண’ என்ற நூல் முக்கியமானது. இவை போக சமற்கிருத மொழியில் பிற்காலத்தில் எழுதப்பட்ட நிறைய நூல்களில் அசுவகோசர் எழுதிய புத்தசரிதம் ஒரு முக்கிய நூல். புத்தரின் 34 அவதாரக் கதைகளைக் கூறும் ‘சாதகமாலை’ என்ற நூல் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இந்நூல் சுத்தபிடகத்திலிருந்து பெறப்பட்ட 550 கதைகளைக் கொண்ட பாலி சாதக நூலில் இருந்து உருவானதாகும் (2).

பௌத்த மதத்தின் தொடக்க கால நூல்களில் தத்துவக் கருத்துக்கள் எதுவும் இல்லை. அவை அனைத்தும் புத்தர் காலத்திற்குப்பின் தோன்றியவை. புத்த மதத்தின் நான்கு புனித உண்மைகள் என்பன, 1. எல்லாமே துன்பகரமானது. 2. துன்பத்திற்குக் காரணம் உண்டு. 3. துன்பத்தை நீக்க முடியும். 4. துன்பத்தை நீக்குவதற்கான வழியும் உண்டு. எல்லாமே துன்பகரமானது எனப் புத்தர் கருதியதற்கு அக்காலச்சூழ்நிலையும் ஒரு காரணம் எனலாம். மகதம் கோசலம் போன்ற அரசுகள் தொல்லினக் குழுக்களின் அழிவுகளில் இருந்து தோன்றிக் கொண்டிருந்தன. அவ்வரசுகள் தொல்லினக்குழுக்களை அழித்தல், அடிமைப் படுத்துதல் ஆகியவற்றின் மூலமே தனது அரசுகளை விரிவுபடுத்தின. கோசல மன்னன் விதூபன் புத்தரின் சாக்கிய மக்களைத் தாக்கி கொடூரமாக அவர்களைப் படுகொலை செய்தான். அவர்களின் குழந்தைகளையும், பெண்களையும்கூட அவன் விட்டு வைக்கவில்லை. மகதத்தின் பிம்பிசாரரும் கோசலத்தின் பிரசேனசித்தும் புத்தரின் புரவலர்களாக இருந்தார்கள். பிம்பிசாரனை அவனது மகன் அசாத்சத்ரு பட்டினி போட்டே கொலை செய்தான். பிரசேனசித்துக்கு அவனது மகனே துரோகியாக ஆனான். அசாத்சத்ரு வச்சியர்களை படுகொலை செய்து அழித்தொழிப்பதற்கு புத்தரிடமே ஆசி கேட்டான். அரசர்களிடம் இருந்த இதுபோன்ற செயல்களும், அன்று மிக அதிக அளவில் இருந்த வரி, அடிமைமுறை, வன்முறை, சித்ரவதை, படுகொலை, கடுமையான வட்டி, பேராசை, துரோகம், போர்கள் போன்றவைகளும் புத்தரை மிகவும் வருத்தின (3). அதனால் தான் எல்லாம் துன்பகரமானது என்றார். இன்பங்களுக்கான, வாழ்வதற்கான, அதிகாரத்திற்கான ஆசை தான் இத்துன்பங்களுக்குக் காரணம் என்றார். ஆகவே துன்பத்திலிருந்து விடுதலைபெற ஆசையை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்றார். அதற்கு நன்னம்பிக்கை, நல்லுறுதி, நல்வாக்கு, நற்செயல், நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்சிந்தனை, இறுதியாக நற்தியானம் ஆகிய எட்டையும் பின்பற்றுவதுதான் ஒரே வழி என்றார்.

மனித உணர்வுகளும், சிந்தனைகளும் அவை உறையும் உடலும் உண்மையானவை எனவும் ஆனால் உடலுக்கு ஆன்மா இல்லை எனவும் உலகம் நிரந்தரமற்றது எனவும் எல்லாமே நிரந்தரமாக மாறிக் கொண்டிருக்கிறது எனவும் புத்தமதம் போதித்தது. பிற்காலத்தில் திரிபிடகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தேரவாதம் எனப்படும் கீனயானம் என்ற ஒரு பிரிவும், திரிபிடகத்தோடு புதிய சிந்தனைகளையும் ஏற்றுக்கொண்ட மகாயானம் என்ற இன்னோரு பிரிவும் புத்தமதத்தில் உருவாகின. மகாயானம் உடலுக்கு ஆன்மா உண்டு என்று கூறியதோடு, அதில் புத்தரே கடவுளாக ஆனார். ஆனால் தமிழகத்தில் தேரவாதமே செல்வாக்கு கொண்டதாக இருந்தது. வட இந்தியா, நேபாளம், திபெத், சீனா, கொரியா, சப்பான் ஆகிய நாடுகளில் மகாயானமே பின்பற்றப்படுகிறது.

புத்தமதத்தில் பிறவிச்சுழற்சியும், கர்மவினையும் உண்டு. ஆனால் ஆன்மா இல்லை. மரணத்திற்குப்பின் குணம் என்பது தான் அடுத்த பிறவியில் தொடர்கிறது. இறந்தவனின் கர்மவினையால் அடுத்தவன் இறந்தவனின் குணநலன்களோடு பிறக்கிறான் என புத்தமதம் கூறுகிறது. ஒருவனே மீண்டும் பிறப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. புத்தமதத்தில் முக்தி எனப்படும் நிர்வாணம் உண்டு. ஆசை, காமம், வெறுப்பு, அறியாமை போன்ற நெருப்புகள் அணைந்து போவதே நிர்வாணம். இந்த வாழ்க்கையிலேயே நிர்வாண நிலையை அடையலாம் என புத்தமதம் கூறுகிறது. புத்தர் தனது 35 ஆவது வயதிலேயே நிர்வாணம் அடைந்தார். அதன்பின் 45 ஆண்டுகள் அவர் வாழ்ந்தார். நிர்வாணம் அடைந்தவருக்கு பிறவிச்சுழற்சி இல்லை.

கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் மணிமேகலை காப்பியம் படைக்கப்பட்ட கால தமிழகத்தில் புத்த மதம் ஒரு சிறுபான்மை மதமாகவே இருந்தது என்பதை மணிமேகலை காப்பியம் உறுதி செய்கிறது (4).

பௌத்தம், சமணம் ஆகிய இருமதங்களும் கடவுள் குறித்தும் சடப்பொருள் குறித்தும், உலகத் தோற்றம் குறித்தும் கூறிய தத்துவார்த்த கோட்பாடுகள் அனைத்திற்கும் எண்ணியக் கோட்பாடுகளே அடிப்படை. இவை அவைகளை எண்ணியத்திலிருந்து தான் பெற்றுக் கொண்டன. இதனை உலகாயதம் நூலில் சட்டோபாத்தியாயா, “எண்ணியம் என்பது இந்தியத் தத்துவங்களில் மிகப் பழமையானது என்பதோடு இந்தத் தத்துவத்திலிருந்து தான் பௌத்தம் தோன்றியது என கார்பே கூறுவதை சாசுதிரியும் ஆதரித்தார் என்றும் ‘பௌத்தமதக் கோட்பாடுகள் சாங்கியத்திலிருந்து தோன்றியவை என அசுவகோசு விரிவாகக் கூறியுள்ளார் எனவும் புத்தரின் ஆசிரியர்களான ஆதாரகலமா, உத்தகா (இராமபுத்தர்) ஆகியோர் சாங்கியக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்கள்’ எனவும் சாசுதிரி கூறுகிறார்” என்கிறார் (5) மேலும் “இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு மெய்யியலும், ஒவ்வொரு சமய நிறுவனமும் கபிலர் என்ற மாமனிதருக்கு உளவியல் அடிப்படையிலும், மெய்யியல் அடிப்படையிலும் கடமைப்பட்டுள்ளன” என்ற விவேகானந்தரின் கூற்றும் (6) சமண பௌத்த மதங்கள் எண்ணியத்திலிருந்து பல கருத்துக்களை கடன் பெற்றுள்ளன என்பதை உறுதி செய்கிறது.

இந்த உலக வாழ்க்கை துன்பகரமானது. முன்செய்த தீவினைகளை இப்பிறவியில் மனிதன் அனுபவிக்க வேண்டும். இப்பிறவியில் தீவினைகளைச் செய்பவர்கள் அடுத்த பிறவியில் துன்பத்தை அனுபவிப்பார்கள். ஆசைகளை விடுத்து, நல்வினைகளைச் செய்வதன் மூலம் முக்தியடைந்து பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறலாம். அதாவது வீடுபேறு அடையலாம். இவைகளை சமண பௌத்த மதங்கள் இரண்டுமே கூறிவந்தன. ஆனால் தமிழர்கள் இவ்வுலக வாழ்வு துன்பகரமானது என்பதையோ அதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதையோ ஏற்கவில்லை. அவர்கள் உலக வாழ்க்கை இன்பமும் துன்பமும் கொண்டதுதான் எனினும் வாழ்வில் இனிமை காண முயலவேண்டும் எனவும் வாழ்வு இன்பகரமானது எனவும் இவ்வுலக வாழ்வை அறம் பொருள் இன்பம் ஆகியன கொண்டு மிகச் சிறந்த முறையில் வாழவேண்டும் எனவும் கருதினர். தமிழ்ச் சிந்தனை மரபின் பொருள்முதல்வாத எண்ணிய மெய்யியல், இவ்வுலகம், உயிரினங்கள், மனித இனம் ஆகியவைகளின் தோற்றம் வாழ்வு அழிவு ஆகியன குறித்த அறிவியல் அடிப்படையும், காரணகாரியத் தர்க்கவாதச் சிந்தனைகளும் கொண்ட தெளிவான திட்டவட்டமான கோட்பாடுகளைக் கொண்டிருந்தது. கடவுள் இல்லை எனத் திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இதன் வழிவந்த தமிழர்கள் இந்த உலகத்திற்கு அப்பாற்பட்ட வாழ்வு என்பதையோ, வீடுபேறு என்பதையோ ஏற்கவில்லை. இந்த சமண பௌத்த மதங்கள், எண்ணிய மெய்யியலின் உலகத்தோற்றம், கடவுள் ஆகியன குறித்தக் கோட்பாடுகளைப் பின்பற்றித் தான் தங்கள் கொள்கைகளை வடிவமைத்துக் கொண்டன என்பதையும் பழந்தமிழர்கள் அறிந்தே இருந்தனர்.

தமிழர்களின் வாழ்வில் அறம் பொருள் இன்பம்

தமிழ் மரபு, மனித வாழ்வின் அடிப்படைகளாக அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று கோட்பாடுகளை வகுத்திருந்தது. இதனை

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்போடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக் கூட்டம்.... (தொல்-களவியல்: 1038) என்பார் தொல்காப்பியர்.

அறத்தோடு நிற்றல் என்பது தமிழ் மரபிற்கே உரிய வாழ்க்கையின் இலக்கணம். உயிரின் இயற்கைப்பண்பு இன்பநாட்டம். இன்பத்திற்குத்தேவை பொருள். இந்தப் பொருளையும், இன்பத்தையும் அறத்தின் அடிப்படையில் தான் ஈட்டவும், துய்க்கவும் வேண்டும். இவை தொல்காப்பியர் தரும் வாழ்வின் இலக்கணம். தனி மனித வாழ்வு சமூக வாழ்வோடு இணையும் பொழுது அறம் முதலிடத்திற்கு வந்து அறம், பொருள், இன்பம் எனும் முறை உருவாகிறது. ஆனால் அகவாழ்வில் இன்பமும் பொருளும் அறமும் என ஆகி இன்பம் முதலிடத்தைப் பெறுகிறது.

இன்பம் துன்பம் இரண்டும் மனித வாழ்க்கையின் இயல்பு. எனினும் வாழ்க்கையில் இனிமை கண்டு சிறந்தமுறையில் வாழவேண்டும் என்பதே தமிழர்களின் கோட்பாடு. அதனை இந்திய அளவில் எண்ணியத்திற்கான மிகப்பெரும் சங்கத்தின் தலைவராக இருந்த, புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்த பக்குடுக்கை நன்கணியார் என்ற புறநானூற்றுப்புலவர்,

‘இன்னா தம்மஇவ் வுலகம்

இனிய காண்கிதன் இயல்புணர்ந் தோரே’ (புறம்-194). எனக் கூறுகிறார்.

இன்பம், துன்பம் இரண்டையும் தந்த இறைவன் பண்பற்றவன் என இறைவனை இப்பாடலில் அவர் கடுமையாகச் சாடுகிறார். இறுதியில் வாழ்க்கையில் இன்பம், துன்பம் இரண்டும் இயல்பானது எனவும் அதை உணர்ந்தவர்கள் வாழ்வில் இனிமை காண முயல்வர் எனவும் அவர் கூறுகிறார். இந்திய மொழிகளில் எண்ணியம், ஆசிவகம் ஆகியவற்றின் கடவுள் மறுப்பிற்கான சான்றாக இப்பாடல் சொல்லப்படுகிறது.

மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபில் மூலஎண்ணியத்திற்கும், தொடக்ககாலச் சிறப்பியத்திற்கும், நியாயவியல் என்ற அளவையியலுக்கும் ஓக, உலகாயத மெய்யியல்களுக்கும் உரியவை எனக் கருதுகிற

படிமுறைக்கோட்பாடு (THEORY OF EVOLUTION)

அண்டவியல் (ஐம்பூதக்) கோட்பாடு (THEORY OF UNIVERSE)

அளவை இயல் கோட்பாடு (THEORY OF REASONING & LOGIC)

காரண – காரியக் கோட்பாடு (THEORY OF CAUSE & EFFECT)

இன்பவியல் கோட்பாடு (THEORY OF HEDONISM)

ஆகிய அறிவியல் துறைகளைத் தொல்காப்பியம் விரிவாகவும் செறிவாகவும் கூறிச்செல்கிறது (7). தமிழர்களின் இன்பவியல் கோட்பாட்டை

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான மர்ந்து வரூஉம் மேவற் றாகும்”     -தொல்.பொருளதிகாரம்-219.

எனக் கூறுகிறார் தொல்கப்பியர். அதாவது எல்லா உயிர்களும் இன்பத்தைப் பெறுவதில்தான் நாட்டம் கொள்ளும். அதுவே இயற்கை. ஆகவே மனிதர்கள் இன்பத்தைப் பெற முயல்வது என்பது இயல்பானது.

அற அடிப்படையில் நிறையப் பொருளைச்சேர்த்து, தேவையானவர்களுக்கு பொருளுதவி செய்து, அற வழியில் இன்பத்தை அனுபவித்து சுற்றத்துடன் கூடி வாழும் வாழ்க்கையே ஒரு நிறைவான வாழ்வு என தமிழர்கள் கருதினர். பொருளதிகாரத்தின் 190ஆம் பாடலில், களவிலும், கற்பு வாழ்க்கையிலும், இன்பம் நுகர்ந்து, அறத்தோடு கூடிய பெருவாழ்வு வாழ்ந்த தலைவனும் தலைவியும், முதுமையில் தம் மக்களோடும் சுற்றத்தோடும் பாதுகாப்போடும், பெருமதிப்போடும் சிறந்த முறையில் வாழ்ந்து இறத்தலே பேரின்ப வாழ்வாகும் எனக் கூறுகிறார் தொல்காப்பியர்.

 “காமம் சான்ற கடைக்கோட் காலை

 ஏமம் சான்ற மக்களொடு துவன்றி

 அறம்புரி சுற்றமொடு கிழவனும், கிழத்தியும்

 சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (கற்பியல் – 51)

இப்பாடல் துறவறம் குறித்தோ, வீடு குறித்தோ பேசவில்லை. இந்த வாழ்வை மிகச்சிறந்த முறையில் வாழ்வதே பேரின்ப வாழ்வு எனக் கூறுகிறது. பழந்தமிழர்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் தங்கள் வாழ்க்கையின் இலக்கணமாகக் கொண்டு வாழ்ந்தனர். வாழ்க்கையில் பொருள் சேர்ப்பதையும், இன்பமாக வாழ்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்த தமிழர்கள், பொருள் சேர்ப்பதிலும், இன்பமாக வாழ்வதிலும் அறத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற கருத்தையும் தங்கள் வாழ்வின் இலக்கணமாகக் கொண்டிருந்தனர். அறமற்ற பொருள் சேர்க்கையும், அறமற்ற இன்ப நுகர்வும் ஏற்கத்தக்கதல்ல என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. வாழ்க்கையின் எல்லாச் செயல்களிலும் ‘அறத்தோடு நிற்றல்’ என்பது மிகமிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதனால்தான் தொல்காப்பியர் உலக வழக்கில் இருக்கும் அறம் சாராத நடைமுறைகள் இலக்கியப் படைப்புகளில் கூட இடம்பெறுவதை ஏற்கமுடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். இலக்கியப் படைப்புகளில் அறம் சாராத நடைமுறைகளைப் படைப்பது பழித்தலுக்குரியது எனக்கூறுகிறார்.

 அறக்கழிவு உடையன பொருட்பயன் வரினே

 வழக்கென வழங்கலும் பழித்தது என்ப (பொருளியல் – 22).

அறம் சாராத நடைமுறைகள் உலக வழக்கில் இருந்தாலும் அவற்றை மரபு எனக் கொண்டு இலக்கியம் படைப்பது பழிக் குறியதாகும் எனத் திட்டவட்டமாக தொல்காப்பியர் அறிவுறுத்துகிறார். ஆகவே அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றிலும் ‘அறத்தோடு நிற்றல்’ என்பது வாழ்வுக்கான மிக முக்கிய இலக்கணம் எனத் தமிழர்கள் கருதினர். அறம் இல்லாத பொருள் சேர்க்கையும், அறம் இல்லாத இன்ப நுகர்வும் பழிக்குறியது மட்டுமல்ல சமூக அளவில் புறக்கணிப்புக்கும் தண்டனைக்கும் உரிய கேவலமான அவமானகரமான தீயசெயலாகும் என தமிழர்கள் கருதினர்.

கர்மவினை மறுப்பு:

இன்பவியல் கோட்பாட்டைக் கொண்டிருந்த தமிழர்கள் கர்மவினைக் கோட்பாட்டுக்கு எதிராக இருந்தார்கள். தமிழர்களின் தற்செயல் கோட்பாடு என்பது இந்த கர்மவினைக்கு எதிரான கோட்பாடாகும். சமண, பௌத்த வைதிகம் ஆகிய மூன்று மதங்களும் கர்மவினைக் கோட்பாட்டைக் கொண்டிருந்தன. ஆகவே இவை தற்செயல் கோட்பாட்டைக் கடுமையாக எதிர்த்துப் போராடின. எண்ணியம்தான் இந்தத் தற்செயலியம் என்ற கருத்தியலை உருவாக்கியது எனினும் ஆசிவக மதத்தைத் தோற்றுவித்த மூவருள் ஒருவரும் தமிழருமான பூரண காயபர் இந்தத் தற்செயலியத்தை ஒரு தனி மெய்யியலாகவே வளர்த்தெடுத்தார்.

பழந்தமிழ் அகத்திணை மரபில் உரிய வயதில் ஆணும் பெண்ணும் சந்திப்பது என்பது மிகவும் ஒரு தற்செயலான நிகழ்வாகும். இந்தத் தற்செயல் நிகழ்வு ஒருசில முறை நடந்து அதுவே களவுக்காதலாகவும் பரிணமித்து இறுதியில் திருமணம் என்ற முடிவுக்கு இட்டுச்செல்கிறது. ஆகவே தமிழ் அகத்திணை மரபில் தற்செயலியம் என்பது மிக முக்கியப் பங்கை வகித்தது எனலாம். களவுக்காதலுக்கு மட்டுமல்ல மனிதவாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் அல்லது வினைக்கும் காரணம் தற்செயலியம் எனப்படும் தற்செயல் நிகழ்வுகளும் தேவையும் தான் காரணம் என தமிழ்மரபு கருதியது. ஆதலால் அதற்குக் கர்மவினைகள் காரணமல்ல என தமிழர்கள் கருதினர். கர்மவினை மறுப்பைச் சார்ந்த பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறம் 134 ஆம் பாடல் அதற்கு மிகச்சிறந்த சான்றாகும். இதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இறுதியாகும்.

 ‘இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்

 அறவிலை வணிகன் ஆய்அலன் பிறரும்

 சான்றோர் சென்ற நெறியென

 ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே’

‘இப்பிறப்பில் செய்யும் அறம் மறுபிறப்பிற்கு உதவுமென்று நினைத்து அறம் செய்யும் வணிகன் அல்லன் ஆய் அண்டிரன். சான்றோர் பலரும் சென்ற வழியிலேயே நம் செயலும் இருக்கவேண்டும் என்று கருதியே ஆய் அண்டிரன் எல்லோருக்கும் நல்லது செய்கிறான்’ என்பதே இதன் பொருள். இப்பிறப்பில் நல்லது செய்தால் அடுத்த பிறப்பில் நல்லது நடக்கும் என்ற கர்மவினை இங்கு மறுக்கப்படுகிறது. அன்றைய தமிழ்ச் சான்றோர்கள் கர்மவினையை மறுத்தவர்கள் என்பதையும் இப்பாடல் எடுத்துரைக்கிறது. இதே கருத்தில் பரணர் தனது புறம் 141ஆம் பாடலில் பாடியுள்ளார்.

‘மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண் மையே’ என்கிறார்.

பேகனின் கொடை என்பது மறுபிறப்பை நோக்கியதன்று, அவனது கொடை பிறரது வறுமையை மட்டுமே நோக்கியது’ என்பதே இதன் பொருள். இங்கும் கர்மவினை மறுக்கப்படுகிறது. பழந்தமிழர்கள் இப்பிறப்பில் நன்மை செய்தால் மறுபிறப்பில் நன்மை கிடைக்கும் என்ற கர்மவினையை ஏற்கவில்லை என்பதை இப்பாடல்களும், தமிழர்களின் கர்மவினைக்கு எதிரான தற்செயலியமும் உறுதி செய்கிறது. பரணரின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. தமிழர்களின் கர்மவினை மறுப்பு என்பது வீடுபேறு என்பதையும் மறுப்பதாகும். ஆகவே சங்ககாலத்திலேயே தமிழர்கள் கர்மவினை, வீடுபேறு போன்றவற்றை மறுத்தவர்கள். ஆக தமிழ்ச் சமூகம் சங்ககாலத்தின் தொடக்கம் முதலே ஒரு அறிவியல் சமூகமாக இருந்தது. அதற்கு எண்ணிய மெய்யியலே காரணம்.

பழந்தமிழகமும் சமண பௌத்த மதங்களும்:

கி.மு. 3300 ஆண்டுகளுக்கு முன்பே பழந்தமிழகத்தில் இரும்புக்காலம் தொடங்கிவிட்டது என்பதை சிவகளை அகழாய்வு உறுதி செய்துள்ளது. கி.மு. 1500 வாக்கில் ஆதிச்சநல்லூர் ஒரு தொழிற்துறை நகராக ஆகியிருந்தது. அன்றே தமிழர்கள் தமிழ்க் குறியீடுகளை தமிழ்மொழிக்கான எழுத்தாகக் கொண்டிருந்தனர். ஆதலால் அன்றே பழந்தமிழகத்தில் நிறையச் சிறுகுறு நகரங்கள் உருவாகியிருந்தன எனலாம். எனவே பழந்தமிழர் நாகரிகத்தின் தொடக்ககாலத்தை கி.மு. 1500 எனக்கொள்ளலாம். கி.மு. 1000க்கு முன்பே சேர சோழ பாண்டிய நகர அரசுகள் உருவாகியிருந்தன. கி.மு. 750க்கு முன்பே அவை வேந்தர்களாக உருவாகியிருந்ததோடு, தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியை உருவாக்கி தங்களைத்தவிர வேறு யாரும் வேந்தர்களாக ஆக முடியாது என்பதை நடைமுறைப்படுத்தியிருந்தனர். தொல்கபிலர் கி.மு. 750 வாக்கில் அறிவியல் அடிப்படையைக் கொண்ட பொருள்முதல்வாத எண்ணிய மெய்யியலை தோற்றுவித்திருந்தார் (8).

சங்ககாலம் எனப்பட்ட நகர அரசுகளின் காலம் கி.மு. 750-50 வரை எனவும், சங்கம் மருவிய காலம் எனப்பட்ட பேரரசுகளின் காலம் கி.மு.50-கி.பி.250 வரை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.பி. 250வரை பழந்தமிழ்ச்சமூகத்தின் அடிப்படையாக பொருள்முதல்வாத மெய்யியலே இருந்து வந்தது. சங்க காலத்தின் இறுதியிலும் சங்கம் மருவிய காலத்திலும் பழந்தமிழகத்தில் சமண பௌத்த மதங்கள் மிகச்சிறுபான்மை மக்களால் மட்டுமே பின்பற்றப்பட்டன. அன்று வைதீக மதம் என்பது ஒரு மத நிறுவனமாக உருவாகவில்லை. ஆகவே கி.பி. 250வரை அறிவியல் அடிப்படையைக்கொண்ட பொருள்முதல்வாத மெய்யியலே தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைக் கருத்தியலாக இருந்து வந்தது.

சமண பௌத்த மதங்கள் வாழ்க்கை துன்பகரமானது என்றன. ஆனால் தமிழர்கள் வாழ்க்கை இன்பகரமானது என்ற இன்பவியல் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள். வாழ்க்கை துன்பகரமானது என்ற கருத்தைக் கொண்டிருந்த சமண பௌத்த மதங்கள் அத்துன்பத்திற்கு இவ்வுலக வாழ்க்கை மீதும் இவ்வுலகப் பொருட்கள் மீதும் ஆசையும் பற்றும் வைப்பதும், கர்மவினையும் காரணம் என்றன. கர்மவினை என்பது முந்தைய பிறவிகளிலும் இன்றைய பிறவியிலும் செய்த நல்ல தீய செயல்களின் ஒட்டுமொத்த விளைவாகும் என்றன. ஆசையோ, பற்றோ இல்லாத நற்செயல்களைக் கொண்ட துறவு வாழ்வு கர்மவினையைப் போக்கி முக்தி அல்லது வீடுபேறை வழங்கும் என்றன. வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கருத்து கொண்ட தமிழர்கள், இந்த வாழ்வே வேண்டாம் என்பதையும், கர்மவினை, பிறவிச் சுழற்சி, வீடுபேறு போன்றவற்றையும் ஏற்கவில்லை. கர்மவினை மறுப்பு என்பதை ‘தற்செயலியம்’ என்ற கோட்பாடாக தமிழர்கள் வளர்த்தெடுத்தார்கள். ஒரு தலைவனும் தலைவியும் சந்திப்பது என்பது ஒரு தற்செயலான நிகழ்வு. இது போன்ற பல தற்செயல் நிகழ்வுகளால் அது களவுக் காதலாக வளர்ந்து இறுதியில் திருமணத்தில் முடிகிறது. இதுபோன்றே, வாழ்வில் நடக்கும் அனைத்துச் செயல்களுக்கும் தற்செயல் நிகழ்வுகளும் தேவைகளுமே காரணம் எனவும் கர்மவினை காரணமல்ல எனவும் தமிழர்கள் கருதினர். ஆகவே வீடுபேறு, கர்மவினை போன்றவற்றை தமிழர்கள் மறுத்தார்கள்.

தமிழ்ச் சிந்தனை மரபு இப்பேரண்டம், உயிரினங்கள், மனித இனம் ஆகியவைகளின் தோற்றம் வாழ்வு அழிவு ஆகியன குறித்த அறிவியல் அடிப்படையைக் கொண்ட தெளிவான மெய்யியல் கோட்பாடுகளைக் கொண்டிருந்தது. பழந்தமிழ்ச்சமூகம் சமயச்சார்பற்ற பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட சமூகமாக இருந்ததால் அவர்களிடம் முழுமுதற்கடவுள் என்ற கருத்து இருக்கவில்லை அதனை மறுப்பவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களின் சாங்கியம் எனப்படும் எண்ணிய மெய்யியல் ஆதிமூலப்பொருளில் இருந்துதான் இவ்வுலகம் தோன்றியது எனவும் இறுதியில் இவ்வுலகம் முழுவதும் ஆதிமூலப் பொருளில் ஒடுங்கி அடங்கும் எனவும் கூறியது. ஊழி ஊழிக் காலமாய் இருந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தைப் படைப்பதற்கு யாரும் தேவைப்படவில்லை எனவும் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தான் இவ்வுலகில் உயிரினமும் மனிதனும் தோன்றினர் எனவும் எண்ணியம் கூறியது. ‘இன்மை’ என்ற பழந்தமிழர்களின் கோட்பாடு, பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தும் கோட்பாடாக இருந்தது.

இன்மை என்பது ஒரு பொருளின் ஏழாவது பண்பாக, பொருளின் மறுதலையாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு பொருள் உருவாவதற்கு முன் இருந்த நிலைமைதான் இன்மை. ஒரு பொருள் அப்பொருளாக உருவாகுவதற்கு (இல்லாததற்கு) முன்பிருந்த நிலைதான் இன்மை. ஒரு செடி உருவாவதற்கு முன் அது ஒரு விதையாக இருந்தது. பெருவெடிப்பிலிருந்து இப்பேரண்டம் தோன்றுவதற்கு முன் அது ஒரு ஆதிமூலப்பொருளாக இருந்தது. ஒரு செல் உயிரினம் உலகில் முதலில் தோன்றுவதற்கு முன் அது ஒரு சடப்பொருளாக இருந்தது. இங்கு விதையும், ஆதிமூலப்பொருளும் சடப்பொருளும் இன்மை ஆகும். ஆகவே இன்மை என்பது விதையிலிருந்து செடி உருவாகுதல், ஆதிமூலப் பொருளில் இருந்து இப்பேரண்டம் உருவாகுதால், சடப்பொருளில் இருந்து ஒரு செல் உயிரினம் தோன்றுதல் ஆகிய ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறும் திரிவாக்கக் கோட்பாடு அல்லது பரிணாமக் கோட்பாட்டைக் குறிப்பிடுவதாகும். வெளி, காலம், இயக்கம், பரிணாமம் ஆகியவை குறித்த நவீனக் கருத்துகள் பலவற்றை எண்ணியம் அன்றே கூறிச் சென்றுள்ளது. ஆகவே கி.பி.250 வரை பொருள்முதல்வாத மெய்யியலே பழந்தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைக் கருத்தியலாக இருந்தது. பெரும்பாலோர் சமய நம்பிக்கை இல்லாதவர்களாகவும் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றை மட்டுமே கொண்டவர்களாகவும் இருந்தனர்.

அதே சமயம் பழந்தமிழர்களிடையே தெய்வங்களும் வழிபாடுகளும் இருந்தன. இந்த தெய்வங்கள் என்பன முன்னோர்கள். அதனால்தான் தொல்காப்பியர் தெய்வத்தை கருப்பொருளில் வைத்தார். முதற்பொருளில் வைக்கவில்லை. வள்ளுவன் தனது 50ஆவது குறளில் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்றான். ஆகவே சங்ககாலத் தெய்வம் என்பது முன்னோர்கள் ஆவர். அன்று முன்னோர் வழிபாடும் இயற்கை வழிபாடும் இருந்தன. அன்று இருந்த நில தெய்வ, குல தெய்வ, நடுகல் வழிபாடுகள் முன்னோர் வழிபாடுகளே. இவை போக இயற்கை வழிபாடாக ஐம்பூதங்களும் இன்ன பிறவும் வழிபடப்பட்டன. அன்று சேயோன், மாயோன் ஆகிய இருவருக்கும், ஐம்பூதங்களுக்கும் கோயில்கள் இருந்தன. ஆகவே பழந்தமிழர்களின் மெய்யியல் என்பது பொருள்முதல் வாத மெய்யியல். அவர்களின் வழிபாடு என்பது முன்னோர் வழிபாடும், இயற்கை வழிபாடுமாகும்.

களப்பிரர்கள் வைதீக பார்ப்பனியத்தின் ஆதரவாளர்கள்:

கி.பி.250 வாக்கில் ஏற்பட்ட களப்பிரர் படையெடுப்பு தமிழகத்தில் பேரழிவைக் கொண்டு வந்தது. தமிழக நகரங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. களப்பிரர் படையெடுப்பாலும் அதன்பிந்தைய அவர்களின் தொடக்ககால கொடுங்கோல் ஆட்சியாலும் தமிழ்ச்சமூகம் ஒரு பின்தங்கிய பிற்போக்கான சமயம் சார்ந்த கிராமச்சமூகமாக மாறிப்போனது. களப்பிரர்கள் குறித்து பூலாங்குறிச்சிக் கல்வெட்டும், வேள்விக்குடி செப்பேடும் பேசுகின்றன. கி.பி. 5ஆம் நூற்றாண்டு பூலாங்குறிச்சிக் கல்வெட்டு பார்ப்பனர்களுக்கு நிலதானம் வழங்கப்பட்டதை, அன்று பிரம்மதேயங்களும் பிரம்மதேயக் கிழார்களும் இருந்ததை உறுதி செய்கிறது (9). ஆகவே அக்காலகட்டத்தில் வைதீக மதம் அரச ஆதரவால் செல்வாக்கு மிக்க மதமாக ஆகியிருந்தது. சங்ககாலத்தில் பிரம்மதேய நிலதானங்கள் வழங்கப்படவில்லை. களப்பிரர் பல்லவர் காலத்தில்தான் பார்ப்பனர்களுக்கு அவை முதல்முதலாக வழங்கப்பட்டன. ஆனால் சங்ககாலத்திலேயே பார்ப்பனர்களுக்கு நிலதானங்கள் வழங்கப்பட்டன என்ற மாயையை உருவாக்குவதே வேள்விக்குடி செப்பேட்டின் நோக்கம். அச்செப்பேடு ஒரு பொய்யான செப்பேடு. ஆகவே களப்பிரர்கள் வைதீகத்துக்கும், பார்ப்பனர்களுக்கும் பேரளவான ஆதரவை வழங்கியவர்கள் என்பதே உண்மை.

மதச்சார்பான சமூகமாக மாறிய தமிழ்ச் சமூகம்:

களப்பிரர் காலத்தின் தொடக்ககாலத்தில் நடந்த வன்முறையாலும் பேரழிவாலும் கொடுங்கோன்மை ஆட்சியாலும், தமிழ்ச் சமூகத்தின் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளும் அதன் அடிப்படைக் கட்டமைப்புகளும் முழுமையாக அழிக்கப்பட்டு, சமயம் சார்ந்த பிற்போக்குச் சிந்தனைகள் மேலோங்கி வளர்ந்தன. அதற்கு அக்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் இருந்த பஞ்சம், பட்டினி, வறுமை, ஏழ்மை, இன்னபிற கொடுமைகள் போன்ற நிலைமைகளும், பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இல்லாது போனதும் காரணமாயின. இதுபோன்ற சூழ்நிலைகள் மனிதனுக்கு ஆறுதலைத்தரும் சமய நம்பிக்கையில் அவனை ஈடுபட வைக்கிறது. களப்பிரர் காலத்தில் அதுதான் நடந்தது. இக்காலத்தில் சமண பௌத்த மதங்களோடு வைதீகமும் ஆதரிக்கப்பட்டு பார்ப்பனர்களுக்குப் பிரம்மதேயங்கள் வழங்கப்பட்டன. நாளடைவில் சமயம் சார்ந்த சிந்தனைகள் வளர்ச்சியடைந்து, கி.பி. 5ஆம் 6ஆம் நூற்றாண்டில் திருமூலரின் திருமந்திரமும், காரைக்கால் அம்மையாரின் பக்திப் பாடல்களும் தமிழில் தோன்றின (10). கி.பி. 5 முதல் 7ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய பௌத்தமதத் தமிழ்ச் சிந்தனையாளர்களான தின்னாகர், தர்மகீர்த்தி, திக்நாதர், தருமபாலர், போதிதர்மர் போன்ற அனைவரும் தங்கள் நூல்களை சமற்கிருதத்தில் எழுதினர் (11). சமண சமயத்தை வளர்த்தெடுப்பதற்காக கி.பி. 470இல் வச்சிரநந்தி என்பவர் மதுரையில் திரமிளசங்கத்தை நிறுவினார் (12). ஆக, சங்கம் மருவிய காலம்வரை மதச்சார்பற்ற சமூகமாக இருந்த தமிழ்ச் சமூகம் களப்பிரர் காலத்தில் மதச்சார்பான சமூகமாக ஆகிப் போனது.

தமிழகத்தில் வடமொழிகளின் ஆதிக்கம்:

களப்பிரர்கள் பாலி மற்றும் பிராகிருத மொழியை ஆதரித்தார்கள். அன்று பல நூல்கள் அம்மொழிகளில் படைக்கப்பட்டன. கி.பி. 5ஆம் நூற்றாண்டில், சோழ நாட்டைச் சேர்ந்த புத்ததத்த மகாதேரர் என்னும் தமிழ் பௌத்த அறிஞர் பாலி மொழியில் புத்தவம்சாத்த கதா, அபிதம்மாவதாரம், உத்தரவினிச்சியம் போன்ற பல நூல்களைப் படைத்தார். களப்பிர அரசன் அச்சுத விக்கந்தன் ஆட்சிக் காலத்தில்தான் ‘வினய வினிச்சியம்’ என்னும் நூலை அவர் எழுதினார். களப்பிரர் காலத்தைச் சேர்ந்த தஞ்சை தருமபால ஆசாரியார் பாலிமொழியில் பல உரைநூல்களை எழுதியுள்ளார். இவரும் தமிழர் (13). ஆகவே களப்பிரரின் தொடக்க காலத்தில் பாலி, பிராகிருத மொழிகள் செல்வாக்கு பெற்றவைகளாக இருந்தன. ஆனால் இறுதியில் சமற்கிருதம் பெரும் செல்வாக்கு பெற்றதாக ஆகி சமற்கிருதமயமாக்கலும் நடைபெற்றது. பௌத்தமதத் தமிழ்ச் சிந்தனையாளர்களான தின்னாகர், தர்மகீர்த்தி திக்நாதர் போன்றவர்கள் தங்கள் நூல்களை சமற்கிருதத்தில் எழுதினர்.

களப்பிரர், பல்லவர் காலத்திற்கு முன்வரை கலை, இலக்கியம், அறிவியல் முதலான அனைத்திற்குமான மொழியாகத் தமிழ் இருந்தது. பரத நாட்டிய சாத்திரம் என்ற இசை நாட்டிய இலக்கண நூல், சரக சம்கிதை என்ற மருத்துவ நூல், மயமதம் மானசாரம் போன்ற கட்டடக்கலை, சிற்பக்கலை நூல்கள், வானவியல், கணிதம் சார்ந்த ஆரியபட்டியம் போன்ற பல நூல்கள் தமிழின் வழிநூலாக அல்லது அதன் மொழிபெயர்ப்பு நூலாக களப்பிரர் பல்லவர் காலத்தில்தான் சமற்கிருதத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன (14). இவ்வாறு பல கலை, அறிவியல், தொழில்நுட்பம் முதலான தமிழ் நூல்களை மொழி பெயர்த்துத் தன்வயப்படுத்திக்கொண்டு சமற்கிருதம் ஒரு அறிவியல் மொழியாக ஆனது. ஆனால் தமிழ்மொழி கீழ்மக்களின் மொழியாக மாற்றப்பட்டு, அறிவியல் மொழி, வணிகமொழி போன்ற தகுதிகளை இழந்து போனது. தமிழ் அறிவர்கள் அனைவரும் தொடக்கத்தில் பாலி, பிராகிருதத்திலும் பின் சமற்கிருதத்திலும் எழுதினர். இந்த மாற்றங்களுக்குக் களப்பிரர்காலப் பேரழிவும், அதன் கொடுங்கோன்மை ஆட்சியும் சமண, பௌத்த வைதீக மதங்களின் ஆதிக்கமும்தான் காரணம். சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்களையும், நூற்றுக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப நூல்களையும், அதற்கான பேரளவான சொல் வளங்களையும் கொண்ட, தன்னை மொழியால் அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு அறிவியல் சமூகம், பிற மொழிகளில் எழுதுவது என்பது வரலாற்றில் எங்கும் நடைபெறவில்லை.

பண்டைய காலத்திலேயே பெருவளர்ச்சி பெற்று, தங்களை மொழியால் அடையாளப்படுத்திக்கொண்ட சமூகங்களான, கிரேக்கம், சீனம், பாரசீகம், தமிழ் போன்ற செவ்வியல் மொழிச் சமூகங்கள் எந்தச் சூழ்நிலையிலும் பிற மொழிகளில் எழுதியதில்லை. உரோமர்கள் கிரேக்கத்தைக் கைப்பற்றிய பின்பும் கிரேக்க மொழி உரோமப் பேரரசின் ஒரு ஆட்சிமொழியாக ஆகியது. அது போன்றே அரேபியர்களால் கைப்பற்றப்பட்ட பாரசீகத்திலும் (ஈரான்), பாரசீகம் ஆட்சிமொழியாக ஆகியது. கிரேக்கர்கள் கிரேக்கத்திலும், பாரசீகர்கள் பாரசீகத்திலும் எழுதினர் என்பதோடு இரு மொழிகளும் பெருவளர்ச்சி பெற்றன. மங்கோலியப் படையெடுப்புக்குப் பின்பும் சீனர்கள் சீன மொழியில்தான் எழுதினர். சீனர்கள் பௌத்த மதத்தைத் தழுவியபோதும் சீனமொழியில்தான் எழுதினர். அதுபோன்றே பாரசீகர்கள் இசுலாம் மதத்தைத் தழுவியபோதும் பாரசீகத்தில்தான் எழுதினர். அதுபோன்றே களப்பிரர் காலத்திற்கு (கி.பி. 250க்கு) முன்வரை தமிழகத்தில் பிற மதத்தினர் உட்பட அனைத்துத் தமிழர்களும் அனைத்தையும் தமிழில்தான் எழுதினர்.

ஆனால் களப்பிரர் காலத்தில் தமிழறிவர்கள் பிறமொழியில் எழுத வேண்டிய கொடுஞ்சூழ்நிலை ஏற்பட்டது. உரோமால் கைப்பற்றப்பட்ட கிரேக்கத்திலோ, அரேபியர்களால் கைப்பற்றப்பட்ட பாரசீகத்திலோ, மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்ட சீனாவிலோ இக்கொடுஞ்சூழ்நிலை ஏற்படவில்லை. மேலும் மதமாற்றங்களும் இதற்குக் காரணமல்ல. ஆகவே களப்பிரர்களின் படையெடுப்பின் போது நடந்த கொடூர வன்முறையாலும், பேரழிவாலும், அவர்களின் தொடக்க காலக் கொடுங்கோன்மை ஆட்சியாலும், பழந்தமிழ்ச் சமூகம் ஒரு பின்தங்கிய பிற்போக்கான, பழைய நினைவுகளை மறந்துபோன, கல்வியறிவோ படிப்பறிவோ இல்லாத, ஒரு சமயம் சார்ந்த கிராமச் சமூகமாக ஆகிப் போனது. அதன் விளைவாக அரசு ஆதரவு பெற்ற பிற மொழிகளில் எழுதும் ஒரு கொடுஞ்சூழ்நிலை உருவாகியது. ஆகவே தமிழகத்தில் வடமொழிகளின் ஆதிக்கம் குறிப்பாக பாலி, பிராகிருத, சமற்கிருத மொழிகளின் ஆதிக்கம் ஏற்பட்டதற்கு களப்பிரர் படையெடுப்பும் அவர்களது தொடக்ககால கொடுங்கோன்மை ஆட்சியும் சமண பௌத்த வைதீக மதங்களும்தான் காரணம்.

தமிழ் மொழியின் வளமும் அதன் வீழ்ச்சியும்:

கி.மு. 1000 க்கு முன்பிருந்து கி.பி. 250 வரை பழந்தமிழகத்தின் மக்கள் மொழியாக, ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாக, வணிக மொழியாக, இலக்கிய மொழியாக, இசை, நாட்டியம் போன்ற கலைகளின் மொழியாக, இறையியல் மொழியாக என அனைத்துமாகத் தமிழ்மொழி இருந்து வந்தது. தொல்கபிலரின் எண்ணிய மெய்யியல் என்பது எண்கணிதம், வடிவியல், வானவியல், இசைக்கணிதம், இயற்கணிதம், மருத்துவம், அண்டவியல், அணுவியல் போன்ற பல பிரிவுகளைக் கொண்ட ஒரு முழுமையான அறிவியல் நூலாகும். ஆதலால் கி.மு. 750இல் அதன் தோற்றத்திற்குப் பிறகு நூற்றுக்கணக்கான தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் தமிழில் உருவாகியிருந்தன.

சிறப்பியம், அளவியல், பூதவாதம், உத்தேசவாதம், தற்செயலியம், அணுவியம் போன்ற பல்வேறு சிந்தனைப் பள்ளிகளும் அதன்பின் உருவாகின. கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் பழந் தமிழகத்தில் இருந்து வந்தது. இவை போன்ற காரணங்களால் கி.மு. 750 முதல் தொடக்க கால இலக்கியங்களும், கி.மு. 550 முதல் கி.பி. 250 வரை செவ்வியல் இலக்கியங்களும், இசை சார்ந்த இலக்கிய இலக்கண நூல்களும் தமிழில் பேரளவில் உருவாகி இருந்தன. சிற்பம், ஓவியம், மருத்துவம், வர்மம், போர்க்கலை, கட்டடக்கலை, கப்பற்கலை போன்றவை சார்ந்த நூல்களும், கள்வர் நூல், குதிரை நூல் போன்ற பல்வேறுவகைப்பட்ட நூல்களும், தொன்மங்களும், மாபுராணம், பூதபுராணம் போன்றவைகளும் நிறைய உருவாகி இருந்தன. பல்வேறுவகைப்பட்ட நூல்கள் உருவாகி இருந்ததால் நிறையச் சொல்வளம் கொண்ட மொழியாகத் தமிழ்மொழி ஆகியிருந்தது. தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்பத் துறைகளிலும், கலை இலக்கியத் துறைகளிலும் பேரளவான தொழில்நுட்பச் சொற்களைக் கொண்ட மொழியாக தமிழ்மொழி இருந்தது.

ஆனால் பிராகிருதம் பாலி ஆகிய வடமொழிகள் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தான் தமிழி எழுத்திலிருந்து தங்கள் மொழிக்கான அசோகன் பிராமி என்ற எழுத்தைப் பெற்றன. சமற்கிருத மொழி கி.பி. 150 வாக்கில்தான் அசோகன் பிராமி கொண்டு எழுதப்பட்டது. இம்மூன்றிலும் செவ்வியல் இலக்கியங்கள் உருவாகவில்லை. தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்களும் மிக அரிதாகவே உருவாகி இருந்தன. கி.பி. 2ஆம் நூற்றாண்டுவரை இதுதான் இம்மூன்று மொழிகளின் நிலைமை. ஆனால் களப்பிரர்கால பேரழிவாலும் அவர்களின் தொடக்க கால கொடுங்கோன்மை ஆட்சியாலும் அவர்கள் சமண பௌத்த வைதீக மதங்களுக்குத் தந்த ஆதரவாலும் தமிழ் அறிவர்கள் பலரும் முதலில் பாலி பிராகிருத மொழிகளில் எழுதினர். பின்னர் அனைவரும் சமற்கிருதத்தில் எழுதத் தொடங்கினர். புத்ததத்த மகாதேரர், தஞ்சை தருமபால ஆசாரியார் போன்றவர்கள் தமிழர் எனினும் பாலி மொழியில் எழுதினர். பௌத்தமதத் தமிழ்ச் சிந்தனையாளர்களான தின்னாகர், தர்மகீர்த்தி, திக்நாதர், தருமபாலர், போதிதர்மர் போன்ற அனைவரும் தங்கள் நூல்களை சமற்கிருதத்தில் எழுதினர் (15).

மிகச்சிறந்த செவ்வியல் இலக்கியத்தையும், பேரளவான தொழில்நுட்பச் சொற்களையும், இன்னபிற சிறப்புகளையும் கொண்ட தமிழ்மொழியை, 1000 வருடங்களாக பழந்தமிழகத்தின் அனைத்துமாக இருந்த தமிழ்மொழியை ஒதுக்கிவிட்டு, தமிழ்மொழி அளவு வளமோ, சிறப்போ இல்லாத பாலி, பிராகிருதம், சமற்கிருதம் போன்ற பிற வடமொழிகளில் எழுதவேண்டிய ஒரு கொடுங்கோன்மையான சூழ்நிலை களப்பிரர் காலகட்டத்தில் உருவானது. தமிழ்மொழி, தோற்றவர்களின் மொழியாக, கீழ் மக்களின் மொழியாக ஆகிப் போனதும் வெற்றிபெற்றவர்கள் தமிழ்நூல்களின் சிறப்பை அறியாததும்தான் காரணம். தமிழ் மொழியில் இருந்த பெரும்பாலான நூல்கள் அழிவுக்குள்ளாயின. அதில் ஒரு பகுதியை சமற்கிருதம், மொழி பெயர்த்து, அவற்றைத் தன்வயப்படுத்தி ஒரு தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாக ஆகியது. 1000 வருடங்களுக்கு மேலாக தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாக இருந்த தமிழ்மொழி, தன் சொந்த நிலத்திலேயே அவைகளுக்குத் தகுதி இல்லாத மொழி எனக் கருதப்பட்டு ஒதுக்கப்பட்டது என்பது வரலாற்றில் எங்கும் நடக்காத ஒரு மிகப்பெரும் சோக நிகழ்வாகும்.

களப்பிரர் காலத்தில் தமிழில் இருந்த மூல நூல்களில் பெரும்பாலானவை கவனிப்பாரின்றி அழிந்துபோயின. மீதி இருந்தவையும் பின்னர் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. அதற்கு அவை பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் அவற்றைச் சமண பௌத்த வைதீக மதங்கள் அழிக்க விரும்பியதும் ஒரு முக்கியக் காரணம். இலக்கியத்தில் ஒரு சிறுபகுதி மட்டுமே தப்பியது. மீதி அனைத்தும் இல்லாது போயின. சமண பௌத்த வைதீக மதங்களைச்சேர்ந்த தமிழறிவர்கள் தமிழில் எழுதாது முதலில் பாலி பிராகிருத மொழிகளிலும் பின் சமற்கிருத மொழியிலும் எழுதினர். ஆதலால் தமிழ் மொழியின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் களப்பிரர்கள் மட்டுமின்றி அவர்கள் ஆதரித்த சமண பௌத்த வைதீக மதங்களும் காரணம் என்பதோடு அதன்பின் நடைபெற்ற சமற்கிருதமயமாக்கலும் மிக முக்கியக் காரணம்.

சமண பௌத்த மாயைகள்:

அசோகன் பிராமி எழுத்திலிருந்துதான் தமிழ் பிராமி எனப்படும் தமிழி எழுத்து உருவானது எனவும் சமண பௌத்தத் துறவிகள்தான் அசோகன் பிராமியிலிருந்து தமிழி எழுத்தை உருவாக்கி, தமிழுக்கு எழுத்தை வழங்கினார்கள் எனவும் அதற்கு முன் தமிழுக்கு எழுத்து இல்லை எனவும் போன்ற மாயைகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் தமிழகத்தில் நடந்த அகழாய்வுகள் அவை அனைத்தும் உண்மையல்ல என உறுதி செய்தன. கீழடி அகழாய்வு தமிழி எழுத்தின் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு என உறுதி செய்துள்ளது. ஆகவே அசோகன் பிராமிக்கு 3 நூற்றாண்டுகள் முந்தையது தமிழி எழுத்து என்பதால் அசோகன் பிராமி எழுத்திலிருந்து தமிழி எழுத்து உருவாகவில்லை என்பதால் சமண பௌத்த மதங்கள் தமிழுக்கு எழுத்தை வழங்கவில்லை என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.

அடுத்ததாக பழந்தமிழகத்தின் பரவலான கல்வியறிவுக்கும் எழுத்தறிவுக்கும் சமண பௌத்த மதங்கள்தான் காரணம் என்ற ஒரு மாயையும் இருந்து வந்தது. ஆனால் இந்த மதங்கள் தோன்றுவதற்கு முன்பே கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே பழந்தமிழகத்தில் பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இருந்துவந்தது என்பதை கீழடி அகழாய்வு உறுதி செய்துள்ளது. ஆகவே பழந்தமிழகத்தின் பரவலான கல்வியறிவுக்கும் எழுத்தறிவுக்கும் சமண பௌத்த மதங்கள்தான் காரணம் என்பது ஒரு மாயை என தற்போது உறுதியாகியுள்ளது. தமிழி எழுத்து குறித்தும் பரவலான கல்வியறிவு குறித்தும் சொல்லப்பட்ட சமண பௌத்த மாயைகள் உண்மையல்ல என்பது இன்று ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருசில சமண பௌத்த மாயைகள் உண்மையல்ல என உறுதி செய்யப்பட்ட பின்னரும் அவை அனைவராலும் ஏற்கப்படாத ஒரு நிலை இருந்து வருகிறது. அவை குறித்துப் பார்ப்போம்.

சங்ககாலக் கற்படுக்கைகளும் அங்குள்ள கல்வெட்டுகளும் சமணத் துறவிகளுக்கானவை என்ற ஒரு மாயை இன்றுவரை இருந்து வருகிறது. சமணம் இந்தியா முழுவதும் பரவியிருந்த போதிலும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சமணர்களுக்கென கற்படுக்கைகள் வெட்டப்படவில்லை. வடஇந்தியாவில் வெட்டப்பட்ட ஓரிரு கற்படுக்கைகளும் ஆசிவகர்கட்கு என்றே திட்டமிட்டு வெட்டப்பட்டுள்ளன. பேரரசன் அசோகன் கூட ஆசிவகர்கட்கு மட்டுமே கற்படுக்கைகள் வெட்டித்தந்துள்ளான். ஆனால் இந்தியா முழுவதும் சமணர்களுக்கு என யாரும் கற்படுக்கைகள் வெட்டித் தரவில்லை. மேலும் தமிழகத்திலுள்ள சங்ககாலக் கற்படுக்கைகள் ஆசிவகர்கட்கு உரியன என பேராசிரியர் தி.வி. மகாலிங்கம் விரிவாக ஆய்வு செய்து உறுதி செய்துள்ளார். ஆகவே தமிழகக் கற்படுக்கைகள் ஆசிவகர்கட்கு அல்லது பழந்தமிழ்ச்சிந்தனை மரபின் அறிவர்க்கு மட்டுமே உரியன. அவை சமணர்களுக்கு உரியன என்பது ஒரு மாயை (16).

அதுபோன்றே பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் களப்பிரர் காலத்தில் சமண பௌத்த மதத்தினரால் எழுதப்பட்டது என்பதும் ஒரு மாயை ஆகும்.

பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள்:

ஆறு அகப்பாடல். ஒரு புறப்பாடல், இரு அறநூல்கள், ஒன்பது நீதி நூல்கள் என 18 நூல்கள். மொத்தம் 3255 பாடல்கள் (17). கடைச்சங்கத்திற்குப் (சங்ககாலம்) பின்னர் எழுந்த நூல்களை, சங்கத்தோடு தொடர்புடைய, சங்கக் கருத்தைத் தழுவிய நூல்களை சங்கம் மருவிய நூல்கள் எனவும் அந்த நூல்களின் பட்டியலில் சிலப்பதிகாரமும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் அடங்கும் எனவும் நம் முன்னோர் மரபு கூறுகிறது. நச்சினார்க்கினியர் பேராசிரியர் ஆகிய உரையாசிரியர்களின் கூற்றுப்படியும், கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குரிய பன்னிரு பாட்டியல் படியும், அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று மட்டுமே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இருக்கும் (18). பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அறிவியலும், காரணகாரியமும், தர்க்கவாதச் சிந்தனையும் கொண்டனவாக, மிகச் சிறந்த கருத்துகளை உடையவனவாக, சமயம் சாராத, ஐந்திணைப் பாகுபாடுகளையும், அகம்புறம் சார்ந்த கருத்தியலையும், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் கொண்டனவாக உள்ளன (19). ஆகவே முன்னோர் மரபுப்படி இந்நூல்கள் சங்ககாலக் கருத்தியலைக் கொண்டவை என்பதாலும், சங்கம் மருவிய காலம் என்பது சங்க காலத்தின் தொடர்ச்சி என்பதாலும், சங்கம்மருவிய கால நூல்களின் பட்டியலில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வருவதாலும் இவை சங்கம் மருவிய கால நூல்கள்.

களப்பிரர் காலத்தில் பொருள்முதல்வாதச் சிந்தனைகளும், ஐந்திணைப் பாகுபாடுகளும், அகம்புறம் சார்ந்த கருத்தியலும் இல்லாது போயின. இக்காலம் சமயச்சார்பான, சமய ஆதிக்கம் மேலோங்கிய காலம் என்பதால் இக்காலத்தில் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றுடன் வீடு என்பதும் சேர்க்கப்பட்டு, வீடு என்பது ஒரு முக்கியக் கருத்தியலாக ஆகியிருந்தது. சமண பௌத்த மதத்தவர்கள் இன்பம் என்பதை நிராகரித்தவர்கள். ஆகவே ஆறு அகப்பொருள் நூல்களையும், இன்பத்துப்பாக்களைக்கொண்ட இரு அறநூல்களையும் அவர்கள் எழுதியிருக்க முடியாது. மேலும் இக்கால சமண பௌத்தத் தமிழ் அறிவர்கள் அனைவரும் பாலி, பிராகிருத சமற்கிருத மொழிகளில் தான் எழுதினர். தமிழில் எழுதவில்லை. ஆகவே அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றை மட்டுமே கொண்ட சமயச்சார்பற்ற தமிழ் நூல்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் களப்பிரர் காலத்தில் சமண பௌத்த மதத்தவர்களால் எழுதப்படவில்லை.

மேலும் சங்ககாலம் (கி.மு.750-50), சங்கம் மருவிய காலம் (கி.மு.50-கி.பி.250), களப்பிரர்காலம் (கி.பி.250-575) ஆகியன குறித்தத் தெளிவு இல்லாததாலும், கி.பி. 250 வரை சங்ககாலம் இருந்தது எனக் கருதியதாலும் அதன் தொடர்ச்சியாக வந்த களப்பிரர்காலத்தை சங்கம் மருவிய காலம் எனவும் அதில்தான் பதினெண்கீழ்கணக்கு நூல்கள் உருவாகின எனவும் பலரும் கருதினர். ஆனால் எமது ஆய்வு முடிவின்படி, சங்ககாலத்திற்கும் (கி.மு.750-50), களப்பிரர்காலத்திற்கும் (கி.பி.250-575) இடைப்பட்ட, கி.மு.50 முதல் கி.பி.250 வரையான 300 வருடகால சங்கம் மருவிய காலத்தில்தான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் உருவாகின. ஆகவே அவை களப்பிரர் காலத்தில் சமணபௌத்த மதத்தவர்களால் எழுதப்பட்டன என்பதும் ஒரு மாயைதான்.

களப்பிரர் ஆட்சியின் விளைவு:

‘செங்கம்-தருமபுரி’ பகுதியைச் சேர்ந்த செங்கம், போளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வாணியம்பாடி, தருமபுரி, அரூர், ஊத்தங்கரை, கிருசுணகிரி, பாலக்கோடு, விழுப்புரம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் ஆகிய 14 பழைய வட்டங்களில் கிடைத்த 200 நடுகற்களையும் ஒப்பீட்டு அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பூங்குன்றன் பல கோணங்களில் விரிவாகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் ஆய்வு செய்துள்ளார். இவ்வாய்வின் முடிவில் இப்பகுதி மக்கள், சங்ககாலம் முதல் கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை பழங்குடி வாழ்நிலையில், மேய்ச்சல்நிலக் கால்நடை வளர்ப்புச் சமூகமாக (மிகவும் பின்தங்கிய பிற்போக்கான நிலை) வாழ்ந்து வந்தனர் எனவும் இங்கு ஊரக அரசியல் தான் (அரசு இல்லாத நிலை) நிலவியது எனவும் இங்கு பல்லவர் ஆட்சிக் காலத்திலும் (கி.பி. 550-850ல்) மாற்றம் ஏற்படவில்லை எனவும் சோழ அரசு இங்கு நிலைபெற்றபின் தான் மாற்றம் ஏற்பட்டது எனவும் அவர் கூறுகிறார். ஆனால் கி.பி. 250 முதல் கி.பி. 550 வரை இப்பகுதியில் நடைபெற்ற களப்பிரர் ஆட்சி குறித்து அவர் பேசவில்லை (20).

சங்ககாலத்தில் இப்பகுதியைச் சேர்ந்த தகடூரை (தருமபுரி) ஆண்ட அதியமான் மரபினர் மூவேந்தர்களுக்கு இணையாக அசோகன் கல்வெட்டில் குறிக்கப்பட்டவர்கள். இரும்பு எஃகு உற்பத்தியில் உலகப் புகழ்பெற்றவர்கள். அதியமான் வெளியிட்ட நாணயங்களும், அவனது மோதிரமும் கிடைத்துள்ளன. தற்போது கிருசுணகிரியில் நடைபெற்ற அகழாய்வு கி.மு. 2200 வாக்கிலேயே இங்கு இரும்புக்காலம் இருந்தது என்பதை உறுதி செய்கிறது. இப்பகுதியில் அன்று கால்நடை வளர்ப்பும், புன்செய் வேளாண்மையும் முக்கியத் தொழில்களாக இருந்த போதிலும், இரும்பு எஃகு, மணிகள் செய்தல், ஆடை உற்பத்தி போன்ற வேறுபல தொழில்களும் நடைபெற்றன. பல பெருவழிகள் தகடூர் வழியே சென்றன. வணிகம் பெரிய அளவில் நடைபெற்றது. அதியமான் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. அதன் பின் 450 ஆண்டுகள் கழித்துத்தான் களப்பிரர் படையெடுப்பு கி.பி. 250இல் நடந்தது. இந்த இடைப்பட்ட 450 ஆண்டுகளிலும் நல்ல வளர்ச்சி இருந்தது. கி.மு. 50 முதல் கி.பி. 200 வரையான காலகட்டத்தில் தொழில், வணிகம் ஆகியன பேரளவில் வளர்ச்சி பெற்றன. ஆகவே மிகவும் வளர்ச்சி அடைந்திருந்த இப்பகுதி மிகவும் பின் தங்கிய பிற்போக்கான பழங்குடி நிலையை அடைந்ததற்கு களப்பிரர் படையெடுப்பின்போது நடந்த பேரழிவும், அதன் பிந்தைய அவர்களது கொடுங்கோன்மை ஆட்சியுமே காரணம். இதே போன்ற பேரழிவு தான் களப்பிரர் படையெடுப்பு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நடந்தது.

சமண பௌத்த மதங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்:

மௌரியப்பேரரசன் சந்திரகுப்த மௌரியர் கி.மு. 300 வாக்கிலும் அசோகன் கி.மு. 250 வாக்கிலும் முறையே சமண பௌத்த மதங்கள் தமிழகத்தில் பரவக் காரணமாகினர் எனக் கருதப்படுகிறது. மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற ஒருசில இலக்கியங்களில் அவை பேசப்படுகின்றன எனினும் அவை தமிழகத்தில் பெரிய அளவில் பொதுமக்களிடம் பரவவில்லை. அறம் பொருள் இன்பம் என்ற மூன்றை மட்டுமே கொண்டவர்களாகவும் இவ்வுலக வாழ்க்கை இன்பகரமானது எனக் கருதியவர்களாகவும் இருந்த தமிழர்கள், வாழ்க்கை துன்பகரமானது, கர்மவினை, வீடுபேறு போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதால் சமண, பௌத்த மதங்களை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் புத்த சமயத்தைவிட ஒப்பீட்டளவில் சமண மதம் தமிழகத்தில் அதிகமாக பரவியிருந்தது. இந்த நிலை கி.பி. 250 வரை நீடித்தது. சங்ககாலக் கல்வெட்டுகள் சமணத் துறவிகளுக்கு உரியது எனத் தவறாகக் கருதப்படுகிறது. ஆனால் அவை தமிழ்ச் சிந்தனை மரபுக்குரிய எண்ணியம், சிறப்பியம், பூதவாதம் போன்ற மெய்யியல் பள்ளிகளைச் சேர்ந்த அறிவர்களுக்கும் ஆசிவகத் துறவிகளுக்கும் மட்டுமே உரியது என்பது முன்பே கூறப்பட்டுள்ளது.

சங்கம் மருவிய காலத்தில் (கி.மு.50-கி.பி.250) வழிபடும் இடங்களை ஒட்டி ஓவியம் போன்ற நுண்கலைகள் பேணப்பட்டு, ஆடல்-பாடல் போன்ற போட்டிகள் நடைபெறும் களங்களாக கோயில்கள் விரிவடைந்து உயர்நிலையை எய்திய பிறகும் கூட அங்கு பூசாரிகள் இருக்கவில்லை. என்பதைப் பரிபாடலும், திருமுருகாற்றுப்படையும் உறுதி செய்கின்றன. கோயிலுக்கு வந்த அந்தணர்கள் இறையை வழிபட வந்தவர்கள் எனவும் அவர்கள் பூசாரிகளாக இருக்கவில்லை எனவும் அவை தெரிவிக்கின்றன. இதனால்தான் கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்கு முன் வரை ஆரியவயப்பட்ட கோயில்கள் எதுவும் பழந்தமிழ்நாட்டில் இருக்கவில்லை என பி.டி. சீனிவாச அய்யங்கார் போன்றவர்கள் முடிவுக்கு வந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இந்நிலையே நீடித்தது என்று கூற முடியும். எனவே இக்காலம் வரை பழந்தமிழகக் கோயில்களில் பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக இருந்திருக்க முடியாது என மே.து. இராசுக்குமார் கூறுகிறார் (21).

பழங்காலக் கோயில்கள் நிலம் போன்ற உடைமைகளைப் பெற்றிருக்கவில்லை. வேறு எந்த வகையான பெருமதிப்புக்குரிய சொத்துக்களையும் அவை கொண்டிருக்கவில்லை. களப்பிரர் பல்லவர் காலத்தில்தான் அதற்கான முதல் விதைகள் போடப்பட்டன. மக்களுக்கும் இறைவனுக்கும் இடையே பூசாரிகள் என்ற இடைத்தரகர்களாக பார்ப்பனர்கள், அவர்கள் காலத்தில்தான் முதல் முதலாகத் தமிழகக் கோயில்களில் நுழைந்தனர். பல்லவ அரசர்கள்தான் முதலில் கோயிலில் வழிபாடு செய்யும் உரிமையை பார்ப்பனர்களுக்கு வழங்கினர் (22).

கி.பி. 600க்குப்பின் சமண பௌத்த மதங்கள் வீழ்ச்சியுறத்தொடங்கின. சமணத்துறவிகள் ஆடையின்றி நீராடாமல் அழுக்குடன் தனித்துத் திரிதலும், கடுமையான நோன்புகள் இருத்தலும், இசை, நடனம் போன்ற நாகரிகக் கலைகளை நிராகரித்தலும், பெண்களை, அவர்களின் தாய்மைப்பண்பை நிராகரித்தலும் போன்ற செயல்கள் தமிழர் மரபுக்கு ஏற்புடையதல்ல. அதே சமயம் சைவ வைணவ சமயங்கள், உலக வாழ்க்கை இன்பமானது; ஆண்-பெண் சேர்ந்து வாழ்வதே இயற்கை வாழ்வு; அதுவே இன்ப வாழ்க்கை; அதுவே இறைவன் ஆணை; உலக இன்பங்களை நுகர்ந்து கொண்டே இறைவன்மேல் பக்தி பூண்டு அவரவர் நிலைக்கு ஏற்ப திருப்பணிகளும் தூயவாழ்வும் வாழ்தலே போதும் என்றனர். கோவில்களில் ஆடல்பாடல்கள் தோன்றின; நாடகங்கள் நடிக்கப்பட்டன; இறைவன் மீது உள்ளத்தை உருக்கும் பதிகங்கள் இசையுடன் பாடப்பட்டன. ஆதலால் மக்கள் சைவ வைணவ மதங்களை நாடினர். அதன் காரணமாக சமண பௌத்த மதங்கள் செல்வாக்கை இழக்கத்தொடங்கின.

அப்பர் என்ற திருநாவுக்கரசரின் காலம் கி.பி. 580-661. இவர் சமண மதத்தில் இருந்து சைவ மதத்துக்கு மதம் மாறியவர். பல்லவ மன்னனாக இருந்த மகேந்திர பல்லவனை (கி.பி. 600-630) சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர். திருநாவுக்கரசரின் முதுமைக்காலத்தில் இளைஞராக இருந்தவர் திருஞானசம்பந்தர் என்கிற சம்பந்தர். இவரது காலம் 7 ஆம் நூற்றாண்டின் இடைக்காலம். இவர் கூன்பாண்டியன் என்ற சுந்தர பாண்டியன் நெடுமாறன் அரிகேசரியை (கி.பி. 640 – 670) சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மதம் மாற்றியவர். இவர்கள் இருவரும் சேர்ந்து பாண்டிய பல்லவ நாடுகளில் இருந்த பெரும்பாலான சமண சமயத்தாரை அழித்து ஒழித்தவர்கள் அல்லது மதம் மாற்றியவர்கள் எனச் சொல்லப்படுகிறது. இதற்கு வடக்கே இருந்த மகேந்திர பல்லவனும், தெற்கே இருந்த கூன் பாண்டியனும் பேருதவி செய்துள்ளனர் (23). கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சம்பந்தர், அப்பர் ஆகிய இருவரும் இணைந்து செயலாற்றி சைவ மதத்தைப் பரப்பியுள்ளனர். அன்று தமிழகத்தில் இருந்த வலிமைமிக்க பல்லவ அரசனும், பாண்டிய அரசனும் சைவ மதத்துக்கு மதம் மாறியதால் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்த இரு மதங்களும் செல்வாக்கு இழந்தன. சைவ மதம் வளர்ந்தோங்கியது.

புத்த சமயமானது பனிப்போர்வைக்குள் மறைந்து கிடக்கும் சூரியன்போல அன்றைய தமிழகத்தில் இருந்தது எனக் கூறுவதன் மூலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் மணிமேகலை காலத்தில் பௌத்தமதம் ஒரு சிறுபான்மை மதமாகவே இருந்துள்ளது என உறுதியாகிறது ஆகவே களப்பிரர் காலத்தில் கூட பௌத்தமதம் ஒரு சிறுபான்மை மதமாகவே இருந்துள்ளது. இதனை சீனப்பயணி யுவான் சுவாங் அவர்களின் கூற்றும் உறுதி செய்கிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில் (கி.பி. 640) தமிழகம் வந்திருந்த யுவான் சுவாங் (Hiuen-Tsang), மலைக்கோட்டைப் பாண்டிய அரசில் இருந்த பொது மக்களின் சமயநிலை குறித்து, “சிலர் உறுதியான கோட்பாடுகளை நம்பினார்கள்; சிலர் சமய மறுப்பாளர்களாக இருந்தனர்; அவர்கள் ஆன்மீக விடயங்களைத் தெரிந்து கொள்வதை உயர்வாகக் கருதவில்லை; வணிக நோக்குடனும் இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டும் இருந்தனர். பெண்களின் கன்னிகா மடங்கள் (Convents) பல இங்கு (இடிபாடுகளுடன்) காணப்படுகின்றன. இவற்றின் சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மத நம்பிக்கை உள்ள ஒருசிலர் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான பார்ப்பனக் கோயில்கள் (Deva Temples) இருக்கின்றன. அதிக எண்ணிக்கையில் நிகிரத்தப் பிரிவைச் சேர்ந்த சமணத்துறவிகள் உள்ளனர். நகரத்தின் (மதுரை) கிழக்குப்பகுதியில் ‘சங்காராமா’ எனப்படும் பௌத்தப்பள்ளி காணப்பட்டது. இதன் தலைவாயிலும் கூடமும் மட்டுமே எஞ்சியுள்ளன. இவற்றிலும் புதர்கள் மண்டி அடித்தளம் மட்டுமே எஞ்சியுள்ளது. இது அசோக மன்னரின் இளைய சகோதரர் மகேந்திரரால் கட்டப்பட்டது. இதன் கிழக்கில் தூபம் ஒன்று காணப்படுகிறது. இதன் பெரிய மதில்கள் மண்ணில் புதைந்துள்ளன. கவிந்த கூரைப்பகுதி மட்டுமே எஞ்சி உள்ளது. இது அசோக மன்னரால் கட்டப்பட்டது” எனச் சொல்வதாக வின்சென்ட் சுமித் (Vincent A. Smith) கூறுகிறார் (24).

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் முக்கியமாக பாண்டிய நாட்டில் இருந்த நிலைமை இது. இக்காலகட்டம் பக்தி இயக்கம் தீவிரமாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம். எனினும் மக்கள் இன்னும் பொருள்முதல்வாதக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது. ‘மத நம்பிக்கை உள்ள ஒருசிலர் இருக்கிறார்கள்’ என்கிறார் யுவான் சுவாங். அதாவது பொதுமக்களில் ஒருசிலர் மட்டுமே மத நம்பிக்கையோடு இருக்கின்றனர் என்கிறார். அதே சமயம் ‘சிலர் சமய மறுப்பாளர்களாக இருந்தனர்’ என்கிறார். இந்தச் சமய மறுப்பாளர்கள் என்பவர்கள் பண்டைய பூதவாதம் (உலகாயதம்) போன்ற நாத்திகக் கொள்கை கொண்டவர்கள் எனலாம். ‘சிலர் உறுதியான கோட்பாடுகளை நம்பினர்’ என்கிறார். அவர்கள் மத நம்பிக்கை உடையவர்கள் அல்லர், ஆனால் உறுதியான கோட்பாடுகளை நம்பினர் என்கிறார். உறுதியான கோட்பாடுகள் என்பது, எண்ணியம் (சாங்கியம்) சிறப்பியம் (வைசேடிகம்), அளவியல் (நியாயவியல்) போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கோட்பாடுகளாக இருக்கலாம். பொதுமக்களில் பலர் வணிக நோக்கோடும், இலாப நோக்கோடும் இருந்துள்ளனர். நூற்றுக்கணக்கில் பார்ப்பனக் கோயில்கள் இருந்தன என்கிறார். பக்தி இயக்கத்தின் விளைவாகக் கோயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி விட்டது. சமணத்துறவிகள் அதிகளவில் இருந்தனர் என்கிறார். பௌத்தம் தமிழகத்தில் அழிந்த பின்னரும் 14ஆம் நூற்றாண்டுவரை சமணம் தமிழகத்தில் இருந்து வந்தது. கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில் சமணம் ஓரளவு வலுவாக இருந்ததன் காரணமாகவே அதனை அழிப்பதில் பக்தி இயக்கம் தீவிரம் காட்டியது.

பக்தி இயக்கம் தமிழ்ச் சமூகம் முழுவதும் பரவி, தமிழகத்தில் வலுவாகக் காலூன்றிய காலமான 8ஆம், 9ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் தான் இந்நிலை மாறி வைதீகச் சிந்தனையின் ஆதிக்கம் தமிழகம் முழுவதும் பரவி நிலைத்து விடுகிறது. ஆனால் 7ஆம் நூற்றாண்டிலேயே பௌத்த மத நிறுவனங்கள் அழிந்துவிட்டன என்பதைப் பௌத்தப் பள்ளிகளும் அதன் கன்னிகா மடங்களும் புதர்கள் மண்டி இடிபாடுகளுடன் இருப்பது காட்டுகிறது. அதே சமயம் சமண மதம் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஓரளவு செல்வாக்கு பெற்ற மதமாக இருந்தது எனலாம்.

பத்தாம் நூற்றாண்டு வரையிலும் அதன்பின்னரும் கூட சமண சமயம் ஓரளவு செல்வாக்குடன் இருந்தது என்பதைக் கழுகுமலைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சமண சமயத்தில் பெண்களும் சமயக்குறத்தி என்ற பெயரில் ஈடுபட்டார்கள். அதனால்தான் சமண மதம் 14ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. ஆனால் பௌத்தமதம் தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் செல்வாக்கு பெற்ற மதமாக இருக்கவில்லை என்பதை மணிமேகலை காப்பியம் உறுதி செய்கிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் அம்மதம் முழுமையான அழிவுக்குள்ளாகி இருந்தது. ஆகவே சங்க காலத்தில் மிகச்சிறிய அளவில் இருந்த பௌத்த மதம் கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் வளரத் தொடங்கியது எனினும் அது ஒரு சிறுபான்மை மதமாகவே 7ஆம் நூற்றாண்டுவரை இருந்துள்ளது. அதன்பின் அம்மதம் முழுமையாக இல்லாமல் போயுள்ளது.

பார்வை:

1. இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா தமிழில் வெ. கிருசுணமூர்த்தி, படைப்பாளிகள் பதிப்பகம், 2010, பக்: 229-237 & தமிழரின் தத்துவ மரபு, அருணன், பகுதி-1, வசந்தம் வெளியீட்டகம், 2004, பக்: 96-98, 105.

2. இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா தமிழில் வெ. கிருசுணமூர்த்தி, படைப்பாளிகள் பதிப்பகம், 2010, பக்: 217-219.

3. “ “ “ பக்: 219-223.

4. தமிழரின் தத்துவ மரபு, அருணன், பகுதி-1, வசந்தம் வெளியீட்டகம், 2004, பக்: 178, 179.

5. உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, தமிழில் எசு. தோதாத்திரி, NCBH, 2010, பக்: 485-486.

6. சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், க. நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், 2009, பக்: 66.

7. “ “ “ பக்: 34.

8. தொல்கபிலர் – தமிழ் அறிவு மரபின் தந்தை, கணியன்பாலன், தொல்கபிலர் பதிப்பகம், 2024, பக்:18-20.

9. www.tamilvu.org › tdb › inscription › html › pulankuricci_inscriptions) மா. பவானி.

10. மு. அருணாசலம், தமிழ் இசைஇலக்கிய வரலாறு, கடவு, 2009, பக்:97-100.

11. நா. வானமாமலை, தமிழர் பண்பாடும் தத்துவமும், அலைகள் வெளியீட்டகம், சூலை – 2008, பக்: 96, 126-130.

12. தேவ.பேரின்பன், தமிழர் தத்துவம், NCBH, 2006, பக்:97.

13. களப்பிரர், நடனகாசிநாதன், தமிழ்நாடு அரசு, 1981, பக்: 16-19.

14. பழம்பெரும் தமிழ்ச்சமூகம், கணியன்பாலன், தொல்கபிலர் பதிப்பகம், 2023, பக்: 245-250.

15. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், NCBH வெளியீடு, 2023, புத்தகம் – 1, பக்: 111.

16. சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், க. நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், 2009, பக்: 17, 44.

17. பதினெண்கீழ்க்கணக்கு 1, 2, 3. மாணவர் பதிப்பகம், 2014.

18. பதினெண்கீழ்க்கணக்கு, மாணவர் பதிப்பகம், 2014, பக்: xxxiii-xxxvi.

19. சாதியின் தோற்றம், கணியன்பாலன், தொல்கபிலர், 2023, பக்: 218-232.

20. பண்டைய தமிழ்ச் செவ்விலக்கியங்களும் நடுகற்களும் முனைவர் பூங்குன்றன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2023.

21. சோழர்கால நிலவுடமைப் பின்புலத்தில் கோயில் பொருளாதாரம், மே.து.இராசுக்குமார், NCBH, 2023, பக்: 116.

22. பல்லவர் வரலாறு, மா. இராசமாணிக்கனார், பாரதி பதிப்பகம், 2022, பக்: 293.

23. தமிழகத்தில் வைதீக சமயம், தி.சு.நடராசன், NCBH, 2008, பக்: 187-191.

24. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், NCBH, சனவர்-2023 புத்தகம் -1, பக்: 106.