சட்ட மறுப்பு இயக்கம் சர்க்காருடன் ராஜிசெய்து கொண்டபடிக்குக் காங்கிரஸ் தனது நிபந்தனைகளை நாணையமாய் நிறைவேற்றக் கருத்துக் கொண்டு காரியக் கமிட்டி அறிக்கையின் மூலம் தன்னுடைய கடமையைச் செய்துவிட்டது. அது போலவே சர்க்காராரும் தங்களது நிபந்தனைகளை நிறைவேற்றும் விஷயத்தில் தங்கள் கடமையைச் செய்ய மாகாணக் கவர்ன்மெண்டுகளுக்கு அறிக்கை அனுப்பி சட்ட மறுப்பு இயக்கத்திற்காக சிறைப்படுத்தப் பட்டவர்களை விடுதலை செய்யும்படி செய்து இருக்கிறார்கள். ஆனாலும், இந்த ராஜியானது சட்ட மறுப்பு இயக்கம் தோல்வி அடைந்து விட்டது என்று பொதுமக்களால் கருதும்படியானதாக ஆகிவிட்டதே என்று பயப்பட்ட சிலர் தாங்கள் தோல்வியடையவில்லை என்பதைக் காட்டுவதற்காக அங்குமிங்கும் மறுபடியும் மறியல் செய்வதாகக் காட்டிக் கொள்ள அவசியமுடையவர்களாக ஆகி விட்டார்கள்.

periyar 250அதுபோலவே சர்க்கார் தரப்பிலும், சர்க்காரார் சட்ட மறுப்பு இயக்கத்தைக் கண்டு பயந்து விட்டார்களென்று பாமர மக்கள் நினைத்து விட்டால் என்ன செய்வது என்கின்ற சந்தேகத்தின் மீதும் போலீசாரைப் பற்றி ஏதாவது கேவலமாய் ஜனங்கள் மதித்து விட்டால், என்ன செய்வது என்கிற கவலை மீதும் சர்க்காரர் தரப்பிலும் சில இடங்களில் போலீசாருக்குப் பட்டம், பதக்கம், சன்மானம் முதலியவை அளித்து வருவதின் மூலம் பொது ஜனங்களுக்குச் சர்க்காரிடமும், போலீசாரிடமும் பயம் உண்டாகும்படி செய்து வருவதுடன், சிற்சில இடங்களில் சிலரை பலாத்காரமென்னும் சாக்கால் விடுதலை செய்யாமல் வைத்திருக்கவும் ஏற்பாடுகள் செய்வதாய்த் தெரிகின்றது.

இவைகளைப் பற்றித் திருவாளர் காந்தியவர்களோ அல்லது திருவாளர் இர்வின் அவர்களோ இனிக் கவலை செலுத்தப் போவதில்லை. ஏனெனில் இர்வின் பிரபு “தான் தப்பினதே தம்பிரான் புண்ணியம்” என்று நினைத்து அடுத்த மாத வாக்கில் இந்திய விஷயங்களைப் பற்றிக் கை கழுவிவிட்டுக் கப்பல் ஏறிவிடுவார். திரு. காந்தியவர்களும் ஏதோ ஒரு விதத்தில் தொல்லை ஒழிந்தது என்று கருதி இன்னும் சிறிது காலம் மக்களுக்கு இனியும் அதிகமான ஆசை உண்டாகும்படியாக சுயராஜியத்திற்கு அர்த்தம் சொல்லிக் கொண்டு அஹிம்சை - கதர் பல்லவியுடன் கடவுள் பெருமையையும் பேசிக் கொண்டு முஸ்லீம்களுக்கு வலை வீசிக் கொண்டிருக்கும் வேலையில் இருப்பார்.

மற்றபடி இயக்கத்தில் கலந்து வேலை செய்த மற்றத் தலைவர்களோ சிலர் வட்டமேஜை மகாநாட்டில் எப்படிப் பெயர் வாங்குவது, என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் தேர்தல் விஷயத்தில் கவனம் செலுத்திப் பிளான் போட்டு வருவார்கள். சிலர் அங்குமிங்கும் அலைந்து தங்களை வெளியில் காட்டி விளம்பரங்கள் செய்து கொண்டு இருப்பார்கள். தொண்டர்களில் பலர் இனியும் இந்த மாதிரி ஒரு இயக்கம் வராதா என்றும், வராவிட்டால் நமது நிலை என்ன என்றும் எண்ணிக் கவலை கொண்டிருப்பார்கள். சிலர் ஏதோ ஒரு விதத்தில் நமது பெயரும் தேசீய வீரர்கள் லிஸ்டில் பதியப்பட்டு விட்டாய்விட்டது என்ற மகிழ்ச்சியோடு திருப்தி அடைந்து விடுவார்கள். சிலர் தங்களுடைய தனிப்பட்ட வீரப் பிரதாபத்தைப் பேசிக் கொண்டிருப்பதிலேயே திருப்தி அடைந்து கொண்டிருப்பார்கள்.

விடுதலையாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டவர்களும் ஏதோ பல காரணங்களால் இந்த இயக்க அபிப்பிராயத்தில் இருந்து மாறுபட வேண்டியிருக்கின்றவர்களும் ராஜியைப் பற்றி குற்றம் சொல்லிக் கொண்டும் திரு. காந்தியவர்களைப் பற்றி குற்றம் சொல்லிக் கொண்டும் தங்கள் நிலைமைக்கு ஒரு சமாதானம் தேடிக் கொண்டிருப்பார்கள். அதிக தண்டனையடைந்து விடுதலை செய்யப் படாமல் இருக்கின்றவர்களில் சிலர் மன்னிப்புக் கேட்டு வெளியில் போய் விடலாமா என்றும் யோசிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வெளியில் வந்தவுடன் காங்கிரசையும் திரு. காந்தியவர்களையும் வைது கொண்டு இருப்பார்கள்.

விடுதலையான பார்ப்பனரல்லாதார்களில் பலர் இனி சுயமரியாதை இயக்கம்தான் வேலை செய்வதற்கு ஏற்றது என்றும், சிலர் சமதர்மமே சிறந்தது என்றும், சிலர் பொதுஉடைமைக் கொள்கையே சிறந்தது என்றும் பேசிக் கொண்டிருப்பார்கள். சிலர் அதில் இறங்கி வேலையும் செய்வார்கள். ஒன்றுக்கும் உதவாமல் வெளியிலிருந்து வீண் பேச்சுப் பேசிக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தவர்களில் சிலர் அகிம்சா தர்மத்தையும் ஆத்ம சக்தியையும் காந்தி அவதாரத்தையும் பற்றி புகழ்ந்து புராணம் எழுதவும் பஜனை செய்துகொண்டு புதிய புதிய வியாக்கியானங்கள் சொல்லுவதில் வீரர்களாகவும் விளங்குவார்கள். மற்றொரு சிலர் சதி வழக்குக் கைதிகளையும் விடுதலை செய்தால்தான் ராஜி, கிரமமான ராஜி என்று சொல்லுவதன் மூலம் தங்களுக்கு சதி வழக்குக் கொள்கையில் அனுதாபமும் நம்பிக்கையும் இருப்பதாகக் காட்டுவார்கள். வேறு ஒரு சிலர் காந்தி ஜெயித்தாரா? இர்வின் ஜெயித்தாரா? என்று வாதம் செய்து கொண்டு இருப்பார்கள்.

கடைசியாக, வெளியிலிருந்த தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் பலர் தாங்களும் இயக்கத்தோடு கலந்திருந்ததாகச் சொல்லிக் கொண்டு மந்திரிகளாக வழி பார்த்துக்கொண்டு அதற்காகப் பல தொண்டர்களையும் தடவிக் கொடுத்துக் கொண்டும் அடிக்கடி தங்கள் பெயர் வெளியில் வரும்படியாக ஏதாவது ஒருவகை விளம்பரத்தில் கவலை செலுத்திக் கொண்டு இருப்பார்கள் மற்றும் நமது கவனத்திற்கு வர முடியாத வேறு சிலர் வேறு சில காரியங்களைப் பற்றிப் பேசிக்கொண்டும் யோசித்துக் கொண்டும் இருக்கலாம்.

நிற்க,

நம்மைப் பொறுத்தவரை நாம் இவ்வியக்கத்திற்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்பதை மனப்பூர்த்தியாய் ஒப்புக் கொள்வதுடன் நாம் இவ்வியக்கத்திற்கு எதிரியாய் இருப்பதாகக்கூட பலர் நினைப்பதில் தப்பில்லை யென்றும் சொல்லுவோம். நாமும் இயக்கத்தில் கலந்து வேலை செய்து இருந்தபோதிலும் இதைவிட வேறு என்ன விதமான பலன் அடைந்திருக்க முடியும் என்பதை யோசித்தால் நாம் சேராததால் ஒன்றும் முழுகிப் போகவில்லை என்பதும் புலப்படும். எப்படியெனில் 1921-ம் வருஷத்திய ஒற்றுழையாமை இயக்கத்தின் போது இன்றைய நமது முக்கிய கொள்கையாகிய தீண்டாமை விலக்கும், மதுவிலக்கும் முக்கிய திட்டமாக இருந்தும் அவ் விரண்டு திட்டமும் அரசியல் ஆயுதமாக இல்லாமல் உண்மையிலேயே தீண்டாமை ஒழிவதற்கும், மது விலக்கப்படுவதற்கும் என்று கருதியே வேலை செய்தும் இதைவிட எத்தனையோ மடங்கு பாமர ஜனங்களுடைய ஆதரவைப் பெற்று இருந்தும் ஒரு மாதம் கோடி ரூபாய் வசூலித்துச் செலவுசெய்து பிரசாரம் செய்து 3 மாதத்தில் 30000 பேர் சிறை சென்றும், அதுவும் ஆங்கிலம் படித்து அரசாங்க பதவியை எதிர்பார்த்து பிரதிப் பிரயோஜனமடைய என்று வியாபார தோரணையில் இல்லாமல் எவ்விதத் தியாகத்திற்கும் துணிந்த உண்மையான உறுதியான தொண்டர்களாகவே முக்காலே மூணுவீசம் பேர்கள் இருந்தும் சிறைக் கூடங்களில் இன்றைய தினம் உள்ள போக போக்கியங்கள் இல்லாமல் மிக்க மோசமான நிலையில் அதாவது திருட்டு, கொள்ளை, கொலை முதலிய குற்றங்கள் செய்த குற்றவாளிகள் அனுபவிப்பது போன்ற கடினமான கஷ்டங்களை யெல்லாம் அனுபவித்தும் ராஜியைப் பற்றியே சிறிதும்கூட கவலையில்லாமல் இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடுவது என்கிற முடிவு பலருக்கு இருந்தும், சர்க்காரால் வலிய வந்து “உங்களுக்கு என்ன வேண்டும் என்ன வேண்டும்” என்று கேட்டும் ராஜியைப் பற்றி பேசவோ தங்களுக்கு வேண்டியது இன்னது என்று சொல்லவோ கூட இஷ்டமில்லாமல் இருக்கக் கூடிய நம்பிக்கையும் தைரியமும் இருந்தும் கடைசியாக என்ன பலனை அடைய முடிந்தது என்று பார்த்தால் இயக்கத்தில் ஈடுபட்ட ஜனங்கள்மீது குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு யாருடைய மனப்பான்மையையும் லக்ஷியம் செய்யாமல் ஒருவருக்கும் தகவல் தெரிவிக்காமல் யாரையும் கேட்காமல் திடீரென்று நிறுத்தப்பட்டுப் போனதைத் தவிர வேறு ஒன்றுமே ஏற்படவில்லை. மற்றும் அந்த சமயம் ஆங்கிலம் படித்த ஆட்கள் எல்லாம் எதிரிடையாய் இருந்தார்கள். அந்தப்படி எதிரியாய் இருந்த ஆட்களே பெரிதும் இயக்கத்தின் பயனாய் பலனும் அடைந்தார்கள்.

ஆகவே, அப்படிப்பட்ட அந்த இயக்கமே நாம் கலந்திருந்த காலத்தில் அந்தக் கதியடைந்த பொழுது இந்த இயக்கம் மாத்திரம் நாம் கலந்து இருந்தால் இப்போது அதைவிட வேறு என்ன கதி அடைந்துவிட முடியும்? ஒரு சமயம் இனியும் கொஞ்சம் அதிகமான பேர் சிறை சென்றிருக்கலாம். இன்னும் ஒரு பத்து நாள், அல்லது ஒரு மாதம் பொருத்து ராஜிக்கு ஆசைப்பட்டு இருக்கலாம் என்பவைகளைத் தவிர வேறு என்ன பலன் அடைந்திருக்க முடியும்? என்று கேட்கின்றோம். தவிர வட்டமேஜை மகாநாட்டில் புதிதாகக் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்வதின் மூலம் இனியும் அதிகமாக என்று எந்தவித அரசியல் திட்டம் ஏற்படுவதானாலும் அதனால் நமக்கு என்ன பயன் ஏற்படக் கூடும்? என்பதுதான் நமது கேள்வி.

ஒரு சமயம் வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்துவிட்டு மற்றும் அவர்கள் சம்பந்தமோ, ஆதரவோ இல்லாமல் விலகிக் கொண்டு நேப்பாளம், பூத்தானம் முதலிய தேசங்கள்போல் ஒரு தனி ராஜிய பாரத்தை அதாவது இந்திய ராஜிய அரசாங்கம் என்பதாக ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப் போகிறோமா? அப்படியே ஏற்படுத்திக் கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும் மேல்கண்ட அந்த ராஜாங்கங்களின் யோக்கியதை நமக்குத் தெரியாததா? இன்னும் அங்கெல்லாம் அதாவது நேபாள தேசத்திலெல்லாம் அடிமை வியாபாரங்கள் நடப்பதும் மத ஆதிக்கமே அங்கு ஆக்ஷி செய்வதும் வருணாசிரமத்திற்கு விரோதமாய் நடப்பது கொலைக் குற்றத்தை விட கொடுமையாய் மதிக்கப்படுவதும் நமக்குத் தெரியாததா? என்று கேட்பதுடன் அவ்வளவு தூரம்கூட போகாமல் இந்தியாவிலுள்ள இந்திய சிற்றரசர்களின் யோக்கியதையை பார்த்தாலே இந்திய வெள்ளைக்கார சம்பந்தமில்லாத இந்திய அரசியல் அமைப்பு அதாவது இந்திய சிற்றரசாங்கமும் இந்திய பிரமுக மக்களும் செல்வ மக்களும் சேர்ந்து எழுத்து வாசனை அறியாத சாமானிய மக்கள் பேரால் அமைக்கப்படும் அரசியல் அமைப்பு எப்படி இருக்கும் என்பதும் அறிய யாராவது ஜோசியம் கூற வேண்டுமா? என்றும் கேட்கின்றோம்.

ஆஸ்திகம் என்பதை போலவே சுயராஜியம் என்கிற வார்த்தையும் அமைக்கப்பட்டு விட்டதால் சுயராஜியம் என்பதைப் பற்றிக் கிளறினால் மக்கள் கோபித்துக் கொள்ளவும், கடவுளைப் பற்றிப் பேசினால் எப்படி “கடவுளின் உண்மைகளையும் கடவுள் உண்மைகளை வெளியாக்கின பெரியார்களையும் குற்றம் சொல்லுகின்றான்” என்று புராணபிழைப்புக்காரரும் பகுத்தறிவற்றவர்களும் கூப்பாடு போடுகின்றார்களோ அதுபோலவே சுயராஜியத்தைப் பற்றி பேசினாலும் தேசத் துரோகி என்றும், “தேசீயத் தலைவர்களையும் சுயராஜியத்திற்கு வழிகாட்டிய பெரியார்களையும் குற்றம் சொல்லுகிறான்” என்றும் கோபித்துக் கொள்ளுகிறார்கள். இந்தப் படியே மக்களை இனியும் எத்தனை நாளைக்குத் தான் வைத்திருப்பது என்பது விளங்கவில்லை. இதனால் என்ன பயன் என்பதும் விளங்கவில்லை. ஆகையால் இந்த விஷயத்தை இனிக் கிளறிக் கொண்டிருக்காமல் சட்டசபை போக வேண்டியவர்களுக்கும் மந்திரிகளாக வேண்டியவர்களுக்கும் அதிகாரம் பதவி பெற்று வாழ வேண்டியவர்களுக்கும் வட்டமேஜை மகாநாட்டில் தொடர்ந்து பேச வேண்டிய வேலையையும் பூரண சுயேச்சை என்பதைப்பற்றி பேச வேண்டிய வேலையையும் விட்டுவிடுவதே நலமாகும்.

இந்த ஒரு வருஷ­ காலத்தில் தேசமக்களில் இயக்கத்தில் சேர்ந்தவர்களில் பலருக்கு பலவித கஷ்டம் விளைந்தது என்பதோடு மாத்திரமல்லாமல் இயக்கத்தில் சேராதவர்களுக்கும் பல கஷ்டம் நேர்ந்ததோடு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பல தடைகள் ஏற்பட்டது என்பது நம்மால் மறைக்க முடியவில்லை. ‘சுதேசமித்தரன்’ எழுதியது போலவே “போனது போகட்டும், நடந்தது நடந்துவிட்டது இனிப் பேசுவதில் பயனில்லை” ஆகையால் இனி மேலாவது நாட்டிற்கு உண்மையான வழியில் முன்னேற்றமேற்படும் படியாகவும் மக்களுக்கு உண்மையிலேயே விடுதலை உண்டாகும் படியாகவுமான வழியில் எல்லோருமே இறங்கி நமது நேரத்தையும், ஊக்கத்தையும், தியாகத்தையும் செலவழிக்க வேண்டுமென்றே ஆசைப்படுகின்றோம்.

சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்திருந்த பலருடைய நல்ல எண்ணத்தில் நமக்கு சந்தேகமில்லை என்பதை உண்மையாகவே தெரிவித்துக் கொள்ளுகிறோம். பலர் எவ்வித சுயநல எண்ணமும் இல்லாமலும் வேறு பல நாணையமான நிர்ப்பந்தங்களாலும் திரு. காந்தி யவர்களிடம் உள்ள பற்றுதலினாலும் அவருக்கு இந்த சமயத்தில் உதவி செய்ய வேண்டுமே என்கின்ற ஒரு தயாள குணத்தாலும் அதில் கலந்து கொள்ள வேண்டியவர்களானார்கள் என்பதையும் மனப்பூர்த்தியாய் அறிந்திருக்கின்றோம் என்பதோடு, அப்படிப்பட்ட கனவான்களையும் நாம் மனமாரப் பாராட்டுவதுடன் அப்படிப்பட்ட கனவான்களின் ஆதரவும் பொறுப்பும் சுயமரியாதை இயக்க விஷயத்தில் குறைந்து விட்டது என்றோ அல்லது அவர்களை நாம் எதிர்ப்பார்க்கவில்லை என்றோ சொல்ல வரவில்லை. எப்படியாவது சமீபத்தில் கூடவிருக்கும் விருதுநகர் மகாநாட்டில் கலந்து ஒரு முடிவுக்கு வர வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 15.03.1931)

Pin It