1. மூன்றாம் இராசேந்திர சோழன்

பாறையிலிருந்து கசிந்த குளிர் நீர் சிற்றோடையாக உருமாறி சமணர்கள் தங்கியிருக்கும் மண்டபத்திலிருந்து மெல்லிய சலசலப்புடன் வெளியேறிக் கொண்டிருந்தது. சமணர்கள் வசிக்கும் குன்றுகளில், மலையைத் துளைத்துக் கொண்டு வரும் இயற்கையான நீர் ஊற்றுகள் இருக்கும். மனிதன் உயிருடன் வாழ உணவில்லாவிட்டாலும், தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என்பதை அறிந்து அதற்கேற்ப நீர் ஊற்றுகள் அமைந்திருக்கின்ற மலைகளிலேயே வாசம் செய்தார்கள். அவர்களைத் தேடி மக்களும் மன்னர்களும் வந்தார்கள். அவர்களது தவவலிமையைக் கண்ட மன்னர்கள் சமணர்கள் வாழும் மலைக் குகைகளில் கல் படுக்கைகளை அமைத்துக் கொடுத்தார்கள். வயதில் மூத்த தலைமைத் துறவி ஒரு சிறிய பாறையில் அமர்ந்து தியானத்தில் இருந்தார். ஒரு கருப்புப் பூனை அசையாமல் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. காலைப் பரிதியின் கிரணங்கள் சமணப்பள்ளி முழுவதிலும் நிறைந்திருந்தது. அனைத்து துறவிகளும் அவரவர்களுக்கான காலைக் கடமைகளில் மும்முரமாக இருந்தார்கள்.

மூன்றாம் இராசராச சோழனின் சாயலில் இருந்த ஒரு இளவயதுத் துறவி கிழக்குப் பகுதியில் இருக்கும் பாறையில் ஓவியம் வரையத் தயாராக இருந்தான். ஏற்கனவே முன் மண்டபத்தின் இடதுபக்கத் தூணில் நடன மங்கையின் ஓவியத்தை அவன் வரைந்திருந்தான். மங்கையின் இடக்கை பெருமிதத்துடன் மார்புகளின் குறுக்கே நீட்டிக் கொண்டிருக்கிறது. வலக்கையில் உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்கிறது. இலைகள், பூக்களின் சாறு நிறைத்த சிறிய மண் குவளைகளில் தூரிகையைத் தோய்த்து நிறங்களை பரிசோதித்துக் கொண்டிருந்தான். அவனுடைய நளினமான கைதேர்ந்த விரல்களில் இருந்த தூரிகையின் ஒவ்வொரு அசைவும் அவன் ஆழ்மனதில் இருக்கும் மௌனமான கனவை ஓவியமாக தீட்டிக் கொண்டிருந்தது. ஓவியத்தை பார்த்துக் கொண்டே சில சமணத் துறவிகள் புன்முறுவலுடன் ஓவியனைக் கடந்து போனார்கள். ஓவியனின் வயதையொத்த ஒருவன் ஓவியத்தின் முன் ஒரு கற்சிலையைப் போல தன் நிலை மறந்து சிலை போல உறைந்திருந்தான். ஓவியனின் தூரிகையின் அசைவிற்கேற்ப அவனுடைய கண்கள் மட்டும் பல விதமான உணர்வுகளைப் பிரதிபலித்தது.

முதலில் ஒரு இளவயது வேடன் பாறையை நோக்கி அமர்ந்து கொண்டு முற்றிய கோரைப்புல்லின் நுனியில் மேல் அமர்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய பறவையின் அழகை ரசிப்பதாக இருந்த அந்த ஓவியம் ஓவியனின் தூரிகையின் அசைவால் உருமாறி ஒரு அழகிய பெண்ணாக உருமாறியது. அதிலும் திருப்தியடையாத ஓவியன் மேலும் அந்த ஓவியத்தை மேம்படுத்த இப்போது அந்த அழகி வண்ண மேகங்களாக உருமாறி அடிவானில் கரைந்து கொண்டிருந்தாள். “இது ஆணா, இல்லை பெண்ணா?” என்று ஓவியனின் ரசிகன் வியந்து கேட்க, குரல் வந்த திசையைக்கூடத் திரும்பிப் பார்க்காமல் “அனைத்தும்” என்று பதிலளித்தான் ஓவியன்.

பரிவாரங்களுடன் நெடுந்தூரத்திலிருந்து வந்த மூன்றாம் இராசேந்திர சோழன் சமணப்பள்ளி அமைந்திருக்கும் குன்றின் அடிவாரத்தை அடைந்தான். எதிர்பாராமல் மன்னனைக் கண்ட சமணர்கள் துணுக்குற்று தலைமைத் துறவியிடம் தெரிவிக்க ஓவியனைத் தவிர அனைவரும் ஒரு இடத்தில் பதட்டத்துடன் குழுமினார்கள்.

மன்னன் வருவதை குன்றின் அடிவாரத்திலிருந்தே பார்த்த ஓவியன் ஏற்கனவே தான் வரைந்த படத்தின் பின்புலத்தை உடனே ஒரு பெரும் பாலைவனமாக மாற்றினான். மன்னர் வருவதைப் பார்த்துக் கொண்டே அந்தப் பாலையின் நடுவில் மன்னரை வரைய ஆரம்பித்தான். முதலில் அவரின் கிரீடத்திலிருந்து தொடங்க தன்னையும் அறியாமல் மூன்றாம் ராசேந்திர சோழன் சிறிது சிறிதாகக் கரைந்து ஓவியத்தில் ஒருபடிமனாக தோன்ற ஆரம்பித்தான். முழுவதுமாக ஓவியத்தில் சிக்குண்ட மன்னன் ஓவியத்திலிருந்து தன்னை முழுவதுமாக வெளியேற்றும் அனைத்து முயற்சிகளிலும் தோற்றுப் போக நிர்க்கதியாக ஓவியனையே மிரட்சியுடன் பார்த்தான். ஓவியத்தின் பின்புலம் பரந்து விரிந்து கொண்டே போக நெடிய பாலையில் ஒரு சிறிய புள்ளியாக மன்னன் மறைந்து போனான்.

திடுக்கிட்டு மூச்சுத் திணற கட்டிலிலிருந்து எழுந்த மூன்றாம் இராசேந்திர சோழன் சுற்றும் முற்றும் பார்த்தான். தான் கண்டது கனவு என்று சற்றே சமாதானப்பட்டு அருகில் வைத்திருந்த குவளையிலிருந்த நீரை அருந்தினான். எழுந்து சாளரத்தின் வழியே கங்கைகொண்ட சோழபுரத்தை முதன் முதலாகப் பார்ப்பது போலப் பார்த்தான். அப்போது அவன் கனவில் கண்ட அதே கருப்புப் பூனை சாளரத்தின் வழியே தாண்டிப் போக துணுக்குற்ற மன்னன் நாளை எப்படியும் அரண்மனை தலைமை ஜோதிடரிடம் தான் அடிக்கடி காணும் இந்தக் கனவிற்கான காரணத்தையும், பலனையும் கேட்க தீர்மானித்துக் கொண்டான்.

கங்கைகொண்ட சோழபுரம் ஐப்பசி மாத பௌர்ணமி இரவில் ஜொலித்தது, முதலாம் இராசேந்திர சோழன் கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை அமைத்து அங்கு கங்கைகொண்டசோழீச்சரம் எனும் சிவன் கோவிலையும் சோழ கங்கம் எனும் ஏரியையும் நிர்மாணித்தான். தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில்தான் முடிசூட்டிக் கொண்டார்கள்.

நகரத்தில் ஆங்காங்கே காணும் வன்னி மரங்கள் காற்றில் அரை மனதுடன் அசைவதும் பிறகு ஒரு யோகியைப் போல சலனமற்று நிலைப்படுவதுமாக இருந்தது. கங்கைகொண்ட சோழீசுவரர் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பூஜைகள் முடிந்து நடையை சாற்றியிருக்க வேண்டும். சுற்றியமைந்த கோட்டைச் சுவர்கள் மீது சில சேவகர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சிதறியிருந்த கரிய நிற மேகங்கள் ஒன்று திரண்டு முழுநிலவை மறைக்க கங்கைகொண்ட சோழபுரம் தற்காலிகமாகத் தன் பொலிவை இழந்தது போல மூன்றாம் இராசேந்திர சோழனிற்குத் தோன்றியது. விரைவில் தன் நாடு பாண்டிய நாட்டுடன் எதிர்கொள்ளப் போகும் போரைப் பற்றி எண்ண ஆரம்பித்தான். எவ்வளவு நேரம் அப்படியே நின்றான் என்று தெரியவில்லை. மீண்டும் சுய நினைவிற்கு வரும்போது நாரைகள் கிழக்கிலிருந்து மேற்கு திசை நோக்கி கூட்டமாகப் பறந்து சென்றன.

அரசரின் கட்டளைக்கு இணங்க தலைமை ஜோதிடர் அரண்மனைக்கு வந்து மன்னரைச் சந்தித்தார். தான் கண்ட கனவினைப் பற்றி மன்னர் கூற பொறுமையுடன் அனைத்தையும் கேட்டு சிறிது நேரம் மௌனமாக இருந்தார். மன்னரின் கனவுக்குக் காரணம் முந்தைய சோழ மன்னர்கள் சமணர்களுக்குச் செய்த அநீதியின் பிரதிபலிப்பே என்று கூறத் தயங்கினார். மூன்றாம் இராசராச சோழனைக் கொன்றுவிட்டு மூன்றாம் இராசேந்திரன் அரியணை ஏறியதிலிருந்து அனைத்தையும் அறிந்த ஜோசியர் மன்னரின் கனவிற்கான காரணத்தை எப்படிக் கூறுவது என குழம்பித் தவித்தார். கனவில் வந்த ஓவியன் மூன்றான் இராசஇராச சோழன்தான் என்றும், அவனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி வாங்கவே வந்திருக்கிறான் என்றும் அறிந்து கொண்ட தலைமை அரண்மனை ஜோதிடர் பெரும் முயற்சியுடன் உண்மையை மறைத்து மெதுவாகப் பேச ஆரம்பித்தார்.

பாண்டியர்களுடன் மீண்டும் ஒரு போரைத் தவிர்க்க சாத்தியமேயில்லை என்றும், எதற்கும் போர் முடிந்த பிறகே அனைத்தையும் ஆரூடம் பார்த்து சரியாகக் கணிக்க முடியுமென்றார். அப்போது ஜோசியரின் ஒளியிழந்த கண்களைக் கண்ட மூன்றாம் இராசேந்திரன் சற்றே துணுக்குற்றான். எனினும் உடனே சுதாரித்துக் கொண்டு தனக்கேயுண்டான மிடுக்குடன் தலைமை ஜோசியரை நோக்கி “நான் தங்களிடம் அதிகம் எதிர்பார்த்தேன். தாங்கள் கூறியபடி போர் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறி வழியனுப்பினான்.

மக்கள் அதிகம் கூடும் அந்த இடத்திலிருந்த கல் மண்டபத்தில் ஒரு இளைஞன் குரல் எழுப்பி அனைவரையும் அருகில் அழைத்தான். திடமான கரிய தேகம். படர்ந்த நெற்றியில் கீற்றாக திருநீரு. திடமான தோள்கள். பல நிறங்களைக் கொண்ட அவனுடைய தலைப்பாகையில் ஒரு அழகிய மயிலிறகு அவனுடைய அசைவிற்கேற்ப முன்னும் பின்னும் ஒயிலாக அசைந்தது. வலது கை மணிக்கட்டில் பல நிறங்கள் கொண்ட மணிகள் கோர்த்த கருப்புக் கயிற்றினை அணிந்திருந்தான், அவனைப் பார்த்ததும் அங்கு திரண்டிருந்த விவசாயிகள், வியாபாரிகள், பொது மக்கள் அனைவரும் கல் மண்டபம் நோக்கி வர ஆரம்பித்தார்கள். சோழர்களின் ஆட்சி முறைகேட்டையும், அதிக வரி வசூலிப்பையும், பெரும் நிலச் சுவாந்தார்களின் உழைப்பு சுரண்டலைப் பற்றியும், கூறியவன் நிலத்தின் உரிமைப் பதிவுகளை அந்தப் பேராசைக்காரர்கள் கோயிலில் வைத்திருப்பதால், முதலில் அனைவரும் திரண்டு விரைவில் கோயிலைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறினான். அங்கு இருந்த அனைவரும் கைகளை உயர்த்தி அந்த இளைஞனுடன் தாங்கள் இறுதி வரை உடன் இருப்போமென்று சூளுரைத்தார்கள். இதைக் கவனித்த அரண்மனைச் சேவகர்கள் அந்த இளைஞனை சிறைபிடிக்க விரைந்து வந்து அவனைச் சூழ ஒரு மாயாவி போல அவன் கூட்டத்தில் மறைந்து போனான்.

“எப்போது கோயிலைத் திறந்து ஆவணங்களை கைப்பற்றப் போகிறாய் கருணா?”

பனை ஓலையில் கிரீடம் போல ஒரு தலைப்பாகையை பின்னிக் கொண்டிருந்த அந்த முதியவர் தலையை உயர்த்தாமல் இளைஞனிடம் கேட்டார்.

“விரைவில் அதற்கான நாளை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும் தாத்தா. உனக்கு ஒன்று தெரியுமா? மக்கள் அனைவரும் நம் இயக்கத்தை ஒருமனதாக ஆதரிக்கிறார்கள். ஒரு சிலர் நம் புனித இயக்கத்திற்காக தங்களாலான பொருள் உதவியைக் கூடத் தருவதாக வாக்களித்திருக்கிறார்கள். விரைவில் நம் முயற்சி வெற்றியடையப் போகிறது தாத்தா” என்றவன், முதியவர் பின்னிக் கொண்டிருந்த பனை ஓலைக்கிரீடத்தை தலையிலணிந்து கொண்டு இரு கைகளையும் கட்டி கம்பீரமாகப் புருவங்களை உயர்த்தி மன்னரின் மிடுக்குடன் அபிநயித்தான். இதைக் கண்ட முதியவர் தன் பேரனை இறுக அணைத்துக் கொண்டார்.

910 முதல் பராந்தக சோழன் பாண்டியர்களை தோற்கடித்து சோழ சாம்ராஜ்ஜியத்தை முதலில் நிறுவியதிலிருந்து பாண்டியர்களுக்கும் சோழர்களுக்குமான போர் ஏதாவது ஒரு காரணத்திற்காகத் தொடர்ந்து கொண்டே இருந்தது. பாண்டியர்கள் சோழனின் ஆளுமையின் கீழ் வர மறுதலிக்க மூன்று முறை போர் தொடர்ந்தது. ஒவ்வொரு முறையும் சோழர்கள் மதுரையைக் கொள்ளையிட்டு பிறகு பாண்டிய மன்னர்களை மன்னித்து முன்பு போல சோழர்களுக்குக் கட்டுப்பட்டு ஆள அனுமதித்தார்கள்.

அரசரின் அவசர அழைப்பிற்கிணங்க தலைமைச் சேனாதிபதி, முக்கிய மந்திரி, கருவூல நிர்வாகிகள், அரசரின் ஓரே மகன் சோமாப்பிள்ளை மற்றும் பல முக்கிய தலைமை அலுவலர்கள் அவையில் கூடினார்கள். அங்கு பேரமைதி சூழ்ந்திருந்தது.

“பாண்டியர்களுக்கும் நமக்குமான தொடர் போர்களில் வெற்றி தோல்வி மாறி, மாறி கிட்டியிருக்கிறது. தோற்றவர் மீண்டும் வென்றவரை மீண்டும் போருக்கு அழைப்பதும். வென்றவர் தங்களின் வெற்றியை நிலைப்படுத்திக் கொள்ள மீண்டும் போரிடுவதுமான போட்டி முடிவின்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருபது ஆண்டு காலத்தில் பாண்டியர்கள் இருமுறை நம்மை வென்றிருக்கிறார்கள். தற்போது நடக்க இருக்கும் இந்தப் போர் அனைத்தையும் ஒரு முடிவிற்குக் கொண்டு வரப் போகிறது”.

மூன்றாம் இராசேந்திரன் கூறுவதை அவையினர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போது தூதுவன் ஒருவன் வருவதைப் பார்த்த தலைமைச் சேனாதிபதி அவனை உள்ளே வர அனுமதி கொடுத்தார். மன்னர் உத்தரவிட தூதுவன் மடலை விரித்து உரக்கப் படித்தான். இந்த முறை ஹொய்சால மன்னன் வீரராமநாதன் நடக்க இருக்கும் போரில் சோழர்களின் பக்கம் இருப்பதாக செய்தி வந்திருந்தது. இதைக் கேட்ட மூன்றாம் இராசேந்திரன் அரங்கமே அதிரும் வண்ணம் சப்தமாகச் சிரித்தான்.

“சேனாதிபதி அவர்களே, ஹொய்சாளர்கள் நம்முடனும், பாண்டியர்களுடனும் பெண் உறவு கொண்டவர்கள் என்பதைத் தாங்கள் அறியாததில்லை. நாம் பாண்டிய மன்னன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுடன் போரிட்ட போது ஹொய்சாள மன்னன் வீரசோமேச்வரன் பாண்டியர்களுக்கு துணை போனார். இப்போது அவருடைய மகன் வீரராமநாதன் நமக்கு ஆதரவாக வருகிறான். ஒவ்வொருவரின் மனநிலையையும் காலத்திற்கேற்ப எப்படி மாறுகிறது பார்த்தீர்களா?” விழிகளை உயர்த்தி அரசர் சேனாதிபதியைப் பார்த்தார்.

தலைமை மந்திரி உடனே குறுக்கிட்டு “வீரராமநாதனை நம் நாட்டில் உள்ள கண்ணனூருக்கு மன்னராக்கி விடுவோம் அரசே. பாண்டியர்கள் நம்மை நெருங்க கண்ணனூரைத் தாண்டித்தான் வர வேண்டியிருக்கும் என்பதால் நம்முடைய முதல் அரணாக கண்ணனூர் இருக்கும்” என்றார். இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மன்னர் வீரராமநாதனின் முடிசூட்டு விழாவிற்கான நாளை அரண்மனை ஜோசியரிடம் கேட்டார். விரைவில் முடிசூட்டு விழாவும் விமர்சியாக நடந்தேறியது. இப்படியாக போருக்கான காலமும், காரணமும் இணைந்தே வந்தது.

பாண்டியர்களின் படையை முன்னின்று நடத்தும் சடையவர்மன் சுந்தர பாண்டியன் மிகவும் வலிமை பொருந்தியவன். பெரும் ஆற்றல் கொண்டவன். சோழர்களின் படையும் தயார் நிலையில் இருந்தது. போர் தொடங்குவதற்கான எக்காள ஓசை பேரிடியாக மேகங்களை கலைத்துப் போட்டது. காலாட்படையினர்களால் எழுப்பப்பட்ட புழுதி சீறி எழும்பி அனைவரின் பார்வையை மறைத்தது. எங்கும் எழுட்சியான கூக்குரல்கள். ஒவ்வொரு முறை போர் நடக்கும் போது அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்னவோ துங்கபத்திரை நதியின் இரு கரைகளில் வாழ்ந்த மக்கள்தான். இத்தகைய தொடர் போர்களால் பல தலைமுறைக்கு தாங்க முடியாத துயரங்களை அங்கு வாழ்ந்த மக்கள் எதிர்கொண்டார்கள். போருக்கான விதிமுறைகளையும், உயர்ந்த மரபுகளையும், கண்ணியத்தையும் கடைபிடிக்காததால் இந்த அப்பாவி மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளானார்கள். என்றாலும் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் சோழ மக்களின் அர்ப்பணிப்பை யாரும் மறுக்கமுடியாது. ஒருவழியாகப் போரும் முடிவிற்கு வந்தது. ஆனால் இந்த முறை சடையவர்மன் சுந்த பாண்டியன் வெற்றி வாகை சூடினான். இதைத் தொடர்ந்து மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டியர்களுக்கு அடங்கிய சிற்றரசாக இருக்க ஒப்புக்கொண்டு கப்பம் கட்ட சம்மதிக்க வேண்டியதாயிற்று.

சடையவர்மன் சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு உதவும் ஹொய்சாளர்களையும், தெலுங்குச் சோழர்களையும் வென்றான். ஹொய்சாளர்களின் மன்னன் வீர சொமேஸ்வரனைக் கொன்று, அவன் மகன் வீர ராமநாதனை கண்ணனூரை விட்டு விரட்டினான். இந்தப் போரினால் சடையவர்மன் சுந்தர பாண்டியன் தென் இந்தியாவில் ஒரு மிகப் பெரிய பாண்டிய சாம்ராஜியத்தை நிர்மானித்தான்.

இப்படியாக மூன்றாம் இராசராச சோழனின் காலத்தில் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருந்த சோழப்பேரரசு கடைசி மன்னன் மூன்றாம் இராசேந்திர சோழனின் காலத்தில் முதலாம் மாறவர்மன் குல சேகர பாண்டியனால் ஒரு முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது. திருச்சிக்கும் தஞ்சைக்குமிடையே நடந்த இருவருக்குமான போரில் மூன்றாம் இராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் தலைமறைவானான். முதற் பராந்தகன் காலத்தில் பாண்டிய நாடு தன்னாட்சி இழந்து சோழப் பேரரசில் கலந்துவிட்டது போலவே, கி.பி. 1280-இல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தோற்றுவித்த பாண்டியப் பேரரசில் சோழநாடு முழுவதும் கலந்து விட்டது.

இந்தப் போரிற்குப் பிறகு கங்கை கொண்ட சோழபுரம் பழைய பொலிவினை இழந்து தோற்றமளித்தது. சிதைந்தன அரண்மனை கோட்டைச் சுவர்கள். பாண்டியர்கள் சோழர்களால் தங்களுக்கு ஏற்பட்ட முந்தைய தோல்விகளுக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்நகரை அழித்தனர். இந்நகரின் அரண்மனைகள் உள்ளிட்ட பிற யாவும் அழிக்கப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்ட வானளாவிய மாளிகைகள். அனைத்து இல்லங்களிலும் ஏதாவது ஒரு இழப்பு பீடிக்கப்பட்டு சோகத்துடன் காட்சி அளித்தது. சோழர்களின் செல்வம் சூறையாடப்பட்டது அனைத்திற்கும் மௌன சாட்சியாக கங்கைகொண்டசோழீச்சரம் என்ற அந்த சிவன் கோவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டும் போரினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருந்தது. .

ஒரு சிறுவன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தான். அவனே இடம் மாறி அமர்ந்து காய்களை நகர்த்தி விளையாடுவதை அந்த வழியாகச் சென்ற யாத்திரிகன் பார்த்து “ஆட வரவா?” என்று கேட்க சிறுவனும் சிரித்துக் கொண்டே உற்சாகமாகக் கையை ஆட்டினான். யாத்திரிகனை பார்த்த மாத்திரத்திலேயே சிறுவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. யாத்திரிகன் அருந்த பானம் கொண்டு வர வீட்டினுள்ளே இருக்கும் தாத்தா கேட்குமாறு சிறுவன் குரல் எழுப்பினான். ஆட்டம் தொடர்ந்தது. சிறுவன் மிகவும் சாதுர்யமாக விளையாடினான். யாத்திரிகன் சிரித்துக் கொண்டே சிறுவனின் ஒவ்வொரு நகர்விற்கும் அவன் தோளினைத் தட்டி தொடர்ந்து பாராட்டினான். யாத்திரிகனின் ஒவ்வொரு காய்களையும் வெட்டி வீழ்த்தி அடுத்த நகர்விற்கான நிழல் ஓத்திகை பார்த்தான் சிறுவன்.

இறுதியில் யாத்திரிகனின் ராஜாவை சிறைபடுத்தி தன் ராஜாவால் யாத்திரிகனின் ராஜாவை சதுரங்கப் பலகையிலிருந்து தட்ட எத்தனிக்க அங்கு விரைந்து வந்த சிறுவனின் தாத்தா அவன் கைகளைப் பிடித்துத் தடுத்தார். சிறுவனின் சார்பாக மன்னிப்புக் கோரி கைகளைக் கூப்பி யாத்திரிகனை வணங்கினார். எதுவும் புரியாமல் சிறுவன் குழம்பித் தவிக்க அவனிடம் தாத்தா “சாம்ராஜ்ஜியங்கள் வீழலாம். ஆனால் மன்னர்கள் வீழக்கூடாது” என்று கூறி தான் கொண்டுவந்த பானகத்தை இருவருக்கும் கொடுத்தார். தன்னை அடையாளம் கண்டுவிட்டாரோ என்று துணுக்குற்ற யாத்திரிகன் பாதி முகத்தை மூடிய பட்டுத் துணியை சரிசெய்தார். தன் கழுத்தில் அணிந்திருந்த தங்கப் பூண் போட்ட ருத்ராட்ச மாலையை சிறுவனுக்கு அணிவித்தான். இதைப் பார்த்த முதியவர் சிறுவனிடம் ருத்ராட்ச மாலையை கண்களில் ஒற்றிக் கொள்ளக் கூறினார். எதுவும் பேசாமல் யாத்திரிகனை வணங்கி வழியனுப்பிய முதியவர் கொள்ளுப் பேரனிடம் சோழர்களின் கதையை முதலில் இருந்து கூற ஆரம்பித்தார். போராட்டத்தில் உயிர் துறந்த சிறுவனின் தந்தை கருணா ஓவியமாக ஜன்னல் வழியாக மூன்றாம் இராசேந்திரன் செல்வதை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

(சோழ சாம்ராஜ்ஜியத்தின் கடைசி மன்னனான மூன்றான் ராசேந்திர சோழனை பாண்டிய மன்னனான முதல் மாறவர்மன் குல சேகர பாண்டியன் திருச்சிக்கும் தஞ்சைக்குமிடையே தோற்கடித்தான். போரில் ராசேந்திரன் மடிந்ததிற்கான ஆதாரம் எதுவுமில்லை. போருக்குப் பிறகு கங்கை கொண்ட சோழபுரத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தான் என்று எண்ணுகிறார்கள்)

- பிரேம பிரபா