"ஐயா, நான் திருவையாற்று அரசர் கல்லூரியில்..." என்று சொல்லி முடிப்பதற்குள் "சொல்லவேண்டாம்' என்று பேச்சுக்குப் பேராசிரியர் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். என்னவோ போலாகி விட்டது! இவ்வளவிற்கும் நான் அவரிடம் பாடம் படித்ததில்லை. பேராசிரியர் செ.வை.சண்முகம் நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்திற்குப் படிக்கச் சென்றபோது அங்குப் பணியில் இல்லை. இந்தோனேசியாவின் ஜகார்த்தா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றச் சென்றுவிட்டார்.

se vai sanmugamபேராசிரியரைச் சந்தித்தபோது சொல்லியல் ஆய்வுகள்(2000), காலங்கள்(2000), எழுத்தியல் ஆய்வுகள் (2001) என்னும் மூன்று இலக்கண-மொழி­யியல் தொடர்பான நான் எழுதிய நூல்கள் சிதம்பரத்திலுள்ள மெய்யப்பன் தமிழாய்வகம் வழி வெளிவந்திருந்தன.

கூட்டம் முடிந்தபிறகு அழைத்துப் பேசினார். இன்னும் ஆழமாகப் படித்து நிறைய எழுதுமாறு அறிவுரை கூறினார். தமிழ் இலக்கண நூல்களையும் சங்க இலக்கியங்களையும் ஆராய்ந்து எழுதுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் பேராசிரியர் செ.வை.சண்முகம் நெறிப்படுத்தினார். சில ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் என்னுடைய பெயரும் குறிக்கப்பட்டிருந்தது. அதைப் படித்தபோது வசிட்டர் வாய்ச்சொல் என்பார்களே, அந்த மனநிலை ஏற்பட்டது! விரல்விட்டு எண்ணத்தக்க தமிழ் இலக்கண-மொழியியல் அறிஞர்களுள் ஒருவர்.

20ஆம் நூற்றாண்டு எழுத்ததிகார ஆய்வைப் பொறுத்தவரை வேங்கடராஜூலு ரெட்டியார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், க.பாலசுப்பிரமணியன், க.முருகையன், செ.வை.சண்முகம், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் மறுவருணனை ஆய்விலும் கோட்பாட்டு ஆய்விலும் குறிப்பிடத்தக்கவர்கள் (2014:108).

படைப்பிலக்கியங்களைத் தொடர்ந்து எழுதி அனைவர் மனதிலும் இடம்பெற்ற படைப்பாளர்கள் பலரைத் தமிழ் இலக்கிய வரலாற்றுவழி அறிந்து கொள்ளலாம். இலக்கியத் திறனாய்வுவழிப் புகழ்பெற்ற அறிஞர்களும் பலர் இருக்கின்றார்கள். இலக்கண-மொழியியலில் கரைகண்ட சான்றோர்களும் பலர் இருக்கின்றார்கள். ஆனால், பரவலாக அறியப்படாதவர்களாக இருப்பார்கள். அவர்கள்மேல் குறையில்லை. இலக்கண-மொழியியல் சார்ந்து படிப்பவர்கள், ஆய்வு செய்பவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். இருப்பினும், பேராசிரியர் செ.வை.சண்முகம் தாம் செய்த ஆய்வுகளில் ஒரு மாமேதையாகவே மிளிர்கின்றார்.

அண்மையில் ஒரு செய்தியைப் படிக்கும்போது அருவருப்பாக இருந்தது. வாழ்விடம், தொழில், உறவு போன்றவற்றில்தான் சமுதாயம் சாதி, மதச் சாக்கடைகளில் மூழ்கிக் கிடக்கின்றது. அறிவுப் புலத்திலுமா பார்க்கப்படும்? ஒருவரின் ஆகச் சிறந்த ஆற்றல் வெளிப்படும்போது அவரின் சாதி, மதம் எல்லாம் கருகிக் காணாமல் போய்விடும். நம் கல்விக் கண்ணைத் திறந்தவர்களின் இனத்தை நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இருந்தாலும், அதையும் கிண்டிக் கிளறிப் பார்ப்பவர்களும் இருக்கின்றார்கள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்(திருக்.972) என்னும் முற்போக்குச் சிந்தனை பிறந்த தமிழ் மண்ணில் படைப்பாளரை மூன்று இனங்களாகப் பிரித்துப் பார்க்கும் நிலை ஒன்று இருப்பதை நினைத்து வருத்தமாக இருந்தது.

இடைநிலை இனத்தில் குறிப்பிடத்தக்க அளவில் கல்வியாளர் யாரும் இல்லை என்றொரு பதிவைப் பார்த்து "ஏனில்லை? இருக்கிறார்கள்" எனத் 'தமிழ்-இந்து-திசை' நடுப்பக்க எழுத்தாளர் இளவேனில் பலரைக் குறிப்பிடும்போது சுபாஷ் சந்திரபோஸ் என்னும் பெயரும் இருந்தது.

தஞ்சையைச் சேர்ந்த மற்றொரு பேராசிரியரான ச.சுபாஷ் சந்திரபோஸ் தமிழிலக்கணத்தில் பெரும்புலமை பெற்ற அரிதான அறிஞர்களில் ஒருவர். (இந்து-தமிழ்-திசை, 21.12.2021, ப.6)

               இளவேனில் (செல்வ புவியரசு) பதிவைப் படிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. தன் பெயரைச் செய்தித்தாளில் பார்க்கும்போது யாருக்குத்தான் உவப்பு இருக்காது! எழுதப்பட்ட சூழல் வருத்தத்தைக் கொடுத்தது. இளவேனில் குறிப்பிடாத இன்னும் நூற்றுக்கணக்கான அறிஞர்கள் இருக்கின்றார்கள் என்பது தகவலுக்குத்தான். பெருமைப்பட அன்று.

நால் வருணத்தில் எங்களுக்கே மூளை அதிகம் என்று பேசுவோர் இன்றும் இருக்கின்றார்கள். மகாகவி, உ.வே.சாமிநாதையர் போன்றோரை எண்ணும்போது வருணம் தெரிவதில்லை. அது அவர்களின் எழுத்துகளில் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருந்தாலும் அவர்களின் புலமையே வெளிப்படும். இந்த வகையில் இனம் பாராமல் மதிக்கத்தக்க இலக்கண-மொழியியல் அறிஞரே பேராசிரியர் செ.வை.சண்முகம்.

அந்நியரின் ஆட்சியால் மக்களுக்குக் காலங்காலமாகத் தீங்கு செய்தவை ஒழிக்கப்பட்டன; நல்லவை வளர்ந்தன. அவர்கள் இந்நாட்டு வளங்களைச் சுரண்டினார்கள் என்பதில் கருத்து வேறுபாடில்லை. இங்கு மட்டும் என்ன வாழ்ந்தது? அவர்கள் வெளிநாட்டிற்குச் சுரண்டினார்கள் என்றால் இங்கு உள்நாட்டுச் சுரண்டல் நடந்தது.

இடைக்காலத்திலிருந்து கிடைக்கும் கல்வெட்டு, செப்பேடு, பிற குறிப்புகள்வழிப் பார்த்தால் தமிழகப் பொருளாதாரம் முழுவதும் பெருவாரியான மக்களுக்குப் பயன்படாமல் கோயில் கட்டுவது, தானம் செய்வது, யாகம் செய்வது என்றே செலவழிக்கப்பட்டுள்ளது.

ஊழல், மோசடி, கருப்புப்பணப் பதுக்கல், திருட்டு என இவற்றில் எல்லாம் சாதி, வருணப் பாகுபாடே இல்லை. வங்கிகளில் பல்லாயிரம் கோடிகளைக் கடன் வாங்கிக்கொண்டு பாதுகாப்பாகத் தப்பித்து வெளிநாடு போகின்றார்கள். கருப்புப் பணத்தைப் பல்லாயிரம் கோடிகளாகப் பதுக்கி வைத்துள்ளார்கள்.

எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லது? எந்தக் கொள்ளி கெட்டது? என வினா எழுப்புவார்கள். இரண்டுமே இறக்குமதி செய்யப்பட்டவையே. முன்னது உழைக்கும் மக்களின் உரிமை எல்லாவற்றையும் எரித்துக் கரியாக்கியது; பின்னது, இருளைப் போக்க வழி காட்டியது.

அந்நியர்கள் அவர்கள் படித்தறிந்து கொள்ளத் தமிழ் மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றிற்கு இலக்கண நூல்கள் எழுதினார்கள். அவை பற்றி இலக்கண-மொழியியல் அறிஞர்களே அதிகம் அறிந்திருப்பார்கள். பேராசிரியர் செ.வை.சண்முகமும் அவர்களைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கின்றார் (கிறித்துவ அறிஞர்களின் இலக்கணப்பணி, 1993).

மேலை நாட்டினரின் ஆய்வுகள் நூற்றாண்டு காலப் பழமை உடையவையாக இருந்தாலும் அவை முழுமையாகத் தமிழ் இலக்கணக் கல்வியில் பயன்படுத்தப்படாமை வரலாற்றுப் பிழையாகும். மாணவர்கள் விருப்பத்தோடு மொழியைப் படிக்கப் பொது மொழியியல், தமிழ் மொழியியல், திராவிட மொழியியலில் நிறைய நுட்பங்கள் உள்ளன. இவற்றில் புலமை பெற்ற பேராசிரியர் செ.வை.சண்முகம் ஆகச்சிறந்த தமிழ் இலக்கண - மொழியியல் அறிஞர் என்பதை அவரின் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் பறைசாற்றிக் கொண்டே இருக்கும்.

செ.வை.சண்முகம் ஆய்வுகள்

மொழியியல் கோட்பாடுகளை அறிந்துகொண்டு மரபிலக்கணங்களை ஆராய்ந்தால் நிறைய ஐயங்கள் தோன்றும். சிலவற்றுக்கு ஏதாவது ஓர் உரையில் விளக்கம் இருக்கும்; நமக்குத் தெரியாமல் இருக்கும். உயிர், மெய் என இலக்கணம், மொழியியல் இரண்டுமே எழுத்துகளைப் பாகுபாடு செய்கின்றன.

மரபிலக்கணங்களில் உயிர்கள் குறில்-நெடில் என்றும் மெய்கள் வல்லினம், மெல்லினம், இடை­யினம் என்றும் பாகுபாடு செய்யப்பட்டிருக்கும். பொதுவாக, பிறக்கும் இடத்தாலும் பிறக்கும் முறையாலும் வேறுபட்டிருக்கும். மரபிலக்கணங்களில் விளக்கப்படும் முறையிலேயே பெரும்பாலும் மொழியியலிலும் விளக்கப்பட்டிருக்கும். மொழி­யியல் இன்னொரு முக்கியமான விளக்கத்தையும் எழுத்திற்குக் கொடுக்கும்.

மொழியியல் எழுத்தை ஒலியன் (Phoneme) என்று குறிப்பிடும். பொருள்வேறுபாட்டை உணர்த்த எவை அடிப்படையாக இருக்கின்றனவோ அவை ஒலியன்கள் எனப்படும் (The individual phonemes are thenThe individual phonemes are thenthe smallest units in which word that distinguish meaning). அலை-இலை (a-lai; i-lai) என்பவற்றில் குற்றுயிர்களும் ஆட்டம்-ஈட்டம் (a:-TTam; i:-TTam) என்பவற்றில் நெட்டுயிர்களும் வேறுபட்டு வேறுவேறு பொருளை உணர்த்தக் காரணமாக இருக்கின்றன. கல்-பல் (k-al;k-al;p-al) என்பவற்றிலும் க்-ப் வேறுபடுவதால் பொருளும் வேறுபடும். அஃதாவது, எல்லாம் ஒன்றாக இருந்து எவை வேறுபடுகின்றனவோ அவை ஒலியன்கள் எனப்படும். மரபிலக்கணத்தில் எழுத்துகள் எனப்படும்.

விளக்கினாலும் விளக்காவிட்டாலும் பொருள்தரக் கூடியவை எழுத்து-ஒலியன் எனப்படும். மொழி­யியல் படிக்கும்போதே இதை அடிப்படையாக விளக்கிவிடுவார்கள். மரபிலக்கணத்தில் தேடித் தேடிப் பார்த்தாலும் தெரியவே இல்லை.

பலர் தாங்கள் படித்த பேராசிரியர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். நாமும் அவர்களிடம் படிக்கவில்லையே என்ற ஏக்கம் வரும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல்(1975-77) படிக்கும்போது பேராசிரியர் செ.வை.சண்முகம் வெளிநாடு சென்றுவிட்டார். பாடம் கேட்கும் வாய்ப்பு நழுவிவிட்டது. அவரது நூல்கள், கட்டுரைகளைப் படிக்கும்போது நேரடியாக அவரிடம் பாடம் கேட்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்னும் எண்ணம் அடிக்கடி தோன்றும். புத்தொளிப் பயிற்சிக்காகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது ஒருநாள் பேராசிரியரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அப்போது எனக்கு மரபிலக்கணத்தில் ஏற்பட்ட ஐயத்தைக் கேட்டேன். மரபிலக்கணத்தில் எழுத்தை வேறுபடுத்தப் பொருள் அடிப்படையானது என்பதைத் தெளிவாக விளக்கவில்லை என்றாலும் குறிப்பு உள்ளது என்று குறிப்பிட்டார். சிவஞான முனிவர் ‘தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தி' என்னும் நூலில் குறித்திருப்பதைக் கூறினார்.

இந்நெட்டெழுத்துக்கள் மொழிக் காரணமாய் வேறுபொருள் தந்து நிற்றலின் அதுபற்றி வேறு எடுத்து எண்ணி உயிர் பன்னீர் எழுத்து எனப்பட்டன. (ப.32)

மரபிலக்கணத்திலும் மொழியியலிலும் ஆழங்காற்பட்ட பேராசிரியர் செ.வை.சண்முகம் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களையும் இருநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். மரபிலக்கணத்தை மொழியியல் கோட்பாட்டுவழி ஆராயத் தொடங்கிய பேராசிரியரின் ஆய்வுக்களம் பல தொடர்புடைய கிளைகளாகப் பல்கிப் பெருகுகின்றது. இலக்கண-மொழியியல், தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ் வளர்த்த சான்றோர், திராவிட மொழியியல், கவிதையியல், பதிப்பு எனப் பல பகுதிகளாகப் பகுத்து அவரது ஆய்வு நூல்களையும் கட்டுரைகளையும் ஒரு நூல் அளவிற்குக் கூட விளக்கி எழுதலாம். அண்மைக் காலத்தில், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், கல்வெட்டு, இலக்கியம், திராவிட மொழியியல், பதிப்பு எனப் பல பிரிவுகளிலும் ஆளுமை பெற்ற ஒருவர் இவரே எனத் துணிந்து கூறலாம்.

இலக்கண-மொழியியல்

தமிழின் எழுத்தியல் (Phonology), சொல்லியல் (Morphology), தொடரியல் (Syntax) பற்றிய ஆய்வுகளே அதிகமாகக் காணப்படுகின்றன. பேராசிரியர் செ.வை.சண்முகம் அவர்களிடம் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால் இம்மூன்றிலும் மரபிலக்கணம், மொழியியல் என்னும் இரண்டு கோட்பாடுகளிலும் ஆழங்காற்பட்டவர் என்பதை அவரது ஆய்வுவழி அறிந்து கொள்ளலாம். மொழியியல் என்பது மற்றைய அறிவியல் துறைகளைப் போலப் பல பாடப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. எழுத்தியலில் ஆழங்காற்பட்டவர்கள் சொல்லியல், தொடரியலைத் தெளிவாக அறிந்திருப்பார்கள்; அதிகமாக ஆய்வு மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால், செ.வை.சண்முகம் இம்மூன்றிலும் புலமை பெற்றவர்.

தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியரின் எழுத்திலக்கண ஆய்வு தொடர்பான நூல் (Naccinarkkiniyar's conception of Phonology,1967) அவர்தம் எம்.லிட் பட்டத்திற்கு அளிக்கப்பட ஆய்வேடாகும். 'எழுத்திலக்கணக் கோட்பாடு (1980)' என்னும் நூல் தமிழ் இலக்கணங்கள் எழுத்திலக்கணத்தை எவ்வாறு விளக்குகின்றன என்பதை விளக்கும் நூலாகும்.

தொல்காப்பியம், பிற இலக்கண நூல்கள், உரைகள் போன்றவற்றின் சொல்லிலக்கணக் கோட்பாட்டைப் பேராசிரியர் செ.வை.சண்முகம் மூன்று தொகுதிகளில் ஆராய்கின்றார். அனைத்துச் சொல்லிலக்கணக் கூறுகளும் மொழியியல் கோட்பாட்டு வழிப் பட்டைத் தீட்டப்படுகின்றன. சொல்லிலக்கணக் கோட்பாடு-1 (1984), சொல்லிலக்கணக் கோட்பாடு-2 (1986), சொல்லிலக்கணக் கோட்பாடு-3 (1992) என்னும் பெயரில் அம்மூன்று நூல்களும் வெளியாகியுள்ளன.

மொழியியல் விளக்கும் மொழி பற்றிய கோட்பாடுகள் புதுமையாக இருந்தாலும் அவற்றில் உள்ள பல கருத்துகள் உரையாசிரியர்களின் உரைகளிலேயே தெளிவாகவும் இலைமறை காயாகவும் விளக்கப்பட்டிருக்கும். மொழியியல் புரிதலோடு படிக்கும்போது உரையாசிரியர்களின் நுண்மாண் நுழைபுலம் பளிச்சென்று வெளிப்படும். பேராசிரியர் மரபிலக்கணங்களின் சொல்லிலக்கணம் தொடர்பான நிறை-குறைகளை மூன்று தொகுதிகளிலும் தெளிவாக விளக்குகின்றார்.

தொல்காப்பியத் தொடரியல்(2004) என்பது தமிழ்த் தொடரமைப்புகளை மொழியியல்வழி விளக்கும் நூலாகும். பொதுவாக, மரபிலக்கணங்கள் சொல்லிலக்கணத்தையும் தொடரிலக்கணத்தையும் தெளிவாக வரையறை செய்வதில்லை. இரண்டையும் சேர்த்தே சொல்லதிகாரம் விளக்கும். 'வா' என்பது சொல் நிலையில் ஒரு வினையடி. (நீ) வா என்னும்போது ஒரு தொடர். எழுவாய் தோன்றா எழுவாயாக மறைந்துள்ளது. மொழியியல் வளர்ச்சி அடைந்தபிறகு எல்லா மொழிகளிலும் எழுத்தியல், சொல்லியல், தொடரியல் என்னும் மூன்றுமே தனித்தனியாக விளக்கப்படுகின்றன.

தமிழ்மொழி வளர்ச்சி

மொழி இல்லை என்றால் மானுடம் தற்போதும் மேலும் வளர்ச்சி பெற்ற ஒரு குரங்கினமாகவே வாழ்ந்துகொண்டிருக்கும். ஓர் இனத்தை அழிக்க மக்களை அழிக்க வேண்டியதில்லை; அவர்கள் பேசும் மொழியை அழிக்க வேண்டியதில்லை; செல்லாக்காசு ஆக்கிவிட்டால் போதும். தானாகவே அழிந்துவிடும். இதனால்தான் மக்கள்தொகை அதிகமாக உள்ளவர்கள் மற்ற இனம் பேசும் மொழியை ஆளும் வர்க்கத்தின் ஆதரவோடு அழிக்க முற்படுகின்றார்கள்.

தம் தலையைக் கொள்ளிக்கட்டையால் சொறிந்துகொள்வது போலத் தாய்மொழியை, மொழியில் படிக்காமல் அன்னநடை நடக்கப் போய் மக்கள் தம் நடையையும் இழந்து விட்டார்கள். மனப்பாடம் செய்து கக்குவதிலேயே காலம் ஓடுகின்றது. தாய்மொழியை ஒதுக்கிவிட்டு ஆங்கிலம் கற்பதால் இந்த நிலை; இச்சூழலில் மூன்றாவதாக ஒரு மொழியைப் படிக்க வேண்டுமாம். படிப்பதில் தவறில்லை; திணிப்பதில்தான் சிக்கல் ஏற்படுகின்றது.

பல்லாயிரம் கோடிகளை வராத போருக்காக இராணுவத் தளவாடங்களை வாங்கச் செலவிடுகின்றார்கள். மாநில மொழிகளை வளர்க்கத் தாராளமாகச் செலவு செய்யலாம். புதிய கண்டுபிடிப்புகளைத் தாய்மொழியில் கற்றுத்தரவேண்டும். தாய்மொழியை வளர்க்கவும் அறிவியல் தமிழை வளர்க்கவும் அறிஞர்கள் வழிகாட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 1930களிலேயே மருத்துவத்தைத் தமிழ்வழிக் கற்றுக் கொடுக்க இலங்கையில் முயற்சி செய்துள்ளார்கள். பேராசிரியர் செ.வை.சண்முகம், இராம. சுந்தரம் போன்றோர் ஊதுகின்ற சங்கை ஊதிக் கொண்டுதான் இருந்தார்கள். மொழி வளர்ச்சியும் மொழி உணர்வும்(1989), அறிவியல் தமிழாக்கம்(1994), இலக்கண உருவாக்கம்(1994), இலக்கண ஆய்வு(2004), மொழி ஆய்வு(2005) போன்ற நூல்களிலும் பல கட்டுரைகளிலும் தமிழ்மொழி வளர்ச்சிக்காகப் பேராசிரியர் செ.வை.சண்முகம் பல அரிய கருத்துகளையும் கோட்பாடுகளையும் வழங்கியுள்ளார். மேலும், மொழி, அது பேச்சுமொழி, வரிவடிவமொழி என எப்படி இருந்தாலும் ஒலிப்பில் வேறுபடும், வரிவடிவில் வேறுபடும். இவற்றை விளக்கப் பேராசிரியர் எழுத்துச் சீர்திருத்தம்(1978), மொழியும் எழுத்தும்(2013) போன்ற நூல்களையும் சில ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

தமிழ் வளர்த்த சான்றோர்

பள்ளிக்கூடம், கல்லூரிகளில் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள், துறை சார்ந்த சான்றோர், மானுட விழுமியங்களைக் காக்கப் பாடுபட்டோர் என அறிவை வளர்க்க உதவிய சான்றோர்கள் மனதிற்குள் அடிக்கடி கிளர்ந்து எழுவார்கள். பேராசிரியர் செ.வை.சண்முகம் தமக்குப் படிக்கவும் பணியாற்றவும் வாய்ப்பளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நினைவுகூர்வார். இப்பல்கலைக்கழகமே முதன்முதலாகத் தமிழுக்குத் தனித்துறை நிறுவியதையும் மொழியியல் துறை தொடங்கியதையும் நன்றியுணர்வுடன் கூறுகின்றார் (மொழியியல், 8:3-4, ப.24).

கிறித்துவ அறிஞர்களின் இலக்கணப் பணி(1993), நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்(2017) என்னும் இரண்டு நூல்களில் இலக்கணம், இலக்கியம் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட சான்றோர்கள் சிலரைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாகக் கிறித்துவப் பாதிரியார்கள், அறிஞர்களின் பணி அளப்பரியதாகும்.

அவர்கள் மதம் மாற்றியதைக் காலங்காலமாகப் பேசுகின்றார்கள். அவர்கள் இங்கு வாணிபம் செய்ய வந்தவர்கள். எப்படி இந்தியாவை ஆள முடிந்தது? மதம் மாற்ற முடிந்தது? வருணத்தால் மக்களைப் பிரித்து, அவர்களின் உழைப்பை உறிஞ்சி, உரிமையைப் பறித்தன இங்குள்ள ஆளும் வர்க்கங்கள். கல்வி, மருத்துவம், வேலை, உணவு கொடுத்தால் மக்கள் ஏன் மதம் மாறப் போகிறார்கள்?

மானுடத்தில் உயர்வு-தாழ்வைப் போதித்ததற்காக வெட்கப்படவேண்டும். அதை விட்டுவிட்டு மதமாற்றச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று துடிக்கின்றார்கள். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தொழில், உணவு, ஆசாரம் என எல்லாவற்றையும் மாற்றிக் கொள்பவர்கள் மதமாற்றத்தைப் பெரிதுபடுத்துபவர்கள் மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சிலைத் துப்புகிறவர்கள். அவர்கள் மட்டும் துப்பிக்கொள்ளவில்லை. பேதங்களை வளர்த்த முன்னோர்களின் முகத்திலும் துப்பி விடுகின்றார்கள்.

திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட்டு கால்டுவெல்லைப் பற்றியும் தம்நூலில் ஒரு கட்டுரையைப் பேராசிரியர் செ.வை.சண்முகம் எழுதியுள்ளார். வடமொழியாகிய சமஸ்கிருதமே தமிழ் மற்றுமுள்ள திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி என்று உண்மைக்குப் புறம்பாகக் கூச்சம் இல்லாமல் தமிழ் மண்ணில் விளைந்ததை உண்டு வாழ்ந்து கொண்டு கூறி வந்துள்ளார்கள். ஆரியர்-திராவிடர் என்ற பாகுபாட்டைச் செய்தவர் கால்டுவெல் எனக் குறை கூறுகிறார்கள். இந்தோ - ஆரியம் இந்த மண்ணுக்கு உரியதன்று என்று உண்மையைச் சொன்னால் கசக்கத்தான் செய்யும்.

சங்க காலத்தில் இல்லாத மதமும் கடவுளர்களும் கோயில்களும் உயர்வு-தாழ்வை வளர்க்கும் சாதி பேதங்களும் இடைக் காலத்திற்குப் பிறகு எப்படி வந்தன? உண்மையை எல்லீஸ், கால்டுவெல் மட்டும் வெளிப்படுத்தவில்லை; 18ஆம் நூற்றாண்டிலேயே வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones, 1788) என்பவர் சமஸ்கிருதம் இந்தோ-ஐரோப்பிய மொழிகளாகிய கிரேக்கம், இலத்தின் மொழிகளோடு தொடர்புடையது என்று கூறிவிட்டார்.

எல்லாச் சீரழிவிற்கும் ஆரியர் நுழைவே காரணம் என்பதை விட்டுவிட்டுத் திராவிடம்-தமிழ் என்று எதிர்மறையாகப் பேசுகின்றார்கள். திராவிட மொழிக் குடும்பம் தொடர்பாக 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நூற்றுக்கணக்கான நூல்களும் கட்டுரைகளும் வந்துள்ளன. டி.பர்ரோ (T.Burrow), எம்.பி.எமனோ (M.B.Emeneau) போன்ற மேலை நாட்டுப் பேராசிரியர்கள் எழுதிக் குவித்துள்ளார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் அவர்கள் இருவரும் சமஸ்கிருதப் பேராசிரியர்கள்!

திராவிட மொழிக் குடும்பத்தை மீட்டுருவாக்கம் செய்வதால் அனைவரும் ஒருதாய் மக்கள் என்பதை அறியலாம். ஆரியர் வேறு இனத்தவர் என்பதை உணரலாம். அதனால்தான் பெரும்பான்மையானவர்கள் தமிழரின் தொன்மை, பெருமை அகழாய்வு வழியாக வெளிப்படும்போது எரிச்சல் அடைகின்றார்கள். பானை ஓடும் மண்டை ஓடும் தானே கிடைக்கின்றன என்கின்றார்கள். அகழாய்வில் சொர்க்கலோகமா கிடைக்கும்? உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்பவர்களைக் காணத் தேடிப் போக வேண்டியதில்லை.

மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்றவை தமிழோடு தொடர்புடையவை. இருப்பினும் இம்மொழிகளைப் பேசும் மக்களை ஒன்று சேர்க்கமுடியாது. தவித்த வாய்க்குத் தண்ணீர் தர மறுக்கிறார்கள். கடலில் கலந்தாலும் தமிழகத்திற்குள் பாய விரும்பமாட்டார்கள்.

கால்டுவெல் உண்மை நிலையை A Comparative Grammar of Dravidian or South Indian Family of Languages(1856) என்னும் நூலில் விளக்கியுள்ளார். பேராசரியர் செ.வை.சண்முகம் தேவைப்பட்ட இடங்களில் எல்லாம் தம் நூல்கள், கட்டுரைகளில் கால்டுவெல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

திராவிட மொழியியல்

நூற்பா, செய்யுள் போன்றவற்றுக்கு உரைகள்வழி நயம் காண்பதைவிட அவற்றைப் பல்வேறு துறை சார்ந்த கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு ஆராயும்போது அவற்றின் நுட்பம் வெளிப்படும். இந்தியா ஆன்மீக பூமி என்று சொல்லியும் எழுதியும் மகிழ்கின்றார்கள். இதிகாசம், புராணம் நிறைந்த வடநாட்டுக்கு அந்தப் பெருமை போய்ச்சேரலாம். இடைக் காலத்திற்குப் பிறகு தென்னாட்டிற்கு அந்தப் பெருமை சேர்ந்ததே தவிர, சங்க காலத்தில் அதற்கு இடமில்லை என்பதைத் தொல்பொருள் குறிப்பாக அகழாய்வுவழி அறிந்து கொள்ள முடிகின்றது. வரலாறு, சமுதாயவியல், மானுடவியல், ஒப்பியல் போன்றவை சார்ந்த கோட்பாடுகளைத் தொடர்புபடுத்தி ஆராயும்போதுதான் சங்க இலக்கியங்களின் மேன்மை வெளிப்படும்.

மண் சார்ந்து இயற்கையோடு இயற்கையாகப் பழந்தமிழர் வாழ்க்கைப் பதிவு போன்று உலக மொழிகளில் குறிப்பாகச் செவ்வியல் மொழிகளில் இல்லை என்று துணிந்து கூறலாம். தொல்காப்பியம் விளக்கும் மொழி இலக்கணமும் அப்படிப்பட்ட பெருமை வாய்ந்ததே. பொது மொழியியல், திராவிட மொழியியல் கோட்பாடுகள் அதன் நுட்பத்தை மேலும் வெளிப்படுத்துகின்றன.

பேராசிரியர் செ.வை.சண்முகம் அவர்களின் ஆளுமை மொழிப்புலம் சார்ந்ததால் பொது வெளியில் அதிகம் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவர் தமிழக அரசு இறுதி மரியாதை அளித்துப் பெருமைப்படுத்தி இருக்கவேண்டிய ஆன்றவிந்து அடங்கிய சான்றோர் ஆவார்.

கால்டுவெல்லைத் தொடர்ந்து டி.பர்ரோ, எம்.பி.எமனோ போன்றோர் திராவிட மொழி­யியலுக்குப் பெரும் பங்காற்றியுள்ளார்கள். இந்திய அளவில் பிஎச். கிருஷ்ணமூர்த்தி (The Dravidian Languages, 2003), பி.எஸ்.சுப்பிரமணியம் (Dravidian Verb Morphology,1971; Dravidian Comparative Grammar-1,2008) போன்றோரைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அன்மையில் தமிழக முதல்வர் வெளியிட்ட நூலும் (P.S. Subrahmanyam, Dravidian Comparative Grammar - II) குறிப்பிடத்தக்கது. திராவிட மொழியியல் தொடர்பாக ஏராளமான ஆய்வு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்கள். இவர்களுக்கு நிகராகப் பேராசிரியர் செ.வை.சண்முகமும் எண்ணத்தக்கவர்.

Dravidian Nouns (A Comparative Study, 1971) என்னும் நூலைத் திராவிடவியல் கோட்பாட்டை மறுப்பவர்கள் படித்துப் பார்க்க வேண்டும். பால் பாகுபாடு, எண்ணுப் பெயர்கள், மூவிடப் பெயர்கள், சுட்டுப் பெயர்கள், சாரியைகள், வேற்றுமை உருபுகள் போன்ற இலக்கணக் கூறுகளில் திராவிட மொழிகளுக்குள் எவ்வளவு ஒற்றுமை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். ஒன்றிரண்டு திராவிட மொழிகளில் அன்று; இந்தியாவின் தெற்கு முதல் வடக்கு வரையுள்ள இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த ஒற்றுமை இருக்கின்றது.

மலையாள மொழியின் முதல் இலக்கணம்(1992) என்னும் நூல் மலையாள மொழியின் முதல் இலக்கண நூலாகிய லீலாதிலகம் பற்றியது. பதினான்காம் நூற்றாண்டில் எழுத்தச்சன் என்பவரால் இந்நூல் இயற்றப்பட்டது. இந்நூலை ஆய்வு செய்யப் பேராசிரியருக்குத் துணிவைக் கொடுத்தது அவருடைய மொழியியற் புலமையே எனலாம்.

கவிதையியல்

மொழி பற்றிய ஆய்வை மொழியியல் அறிஞர்கள் மேற்கொள்வர். இலக்கிய ஆய்வைத் தமிழ்ப் பேராசிரியர்களும் பிற ஆய்வாளர்களும் செய்வார்கள். இந்நிலை மொழியியல் வளர்ச்சியடைந்த காலத்திலிருந்து நடைமுறையாக இருந்தது. இலக்கியங்களைப் படித்துப் பாராட்டுவது அல்லது திறனாய்வு செய்வது என்னும் முறையைக் கடந்து அவற்றின் அமைப்பை விளக்கும் முறை அண்மைக் காலத்தில் வளர்ந்துள்ளது. பேராசிரியர்கள் ச.அகத்தியலிங்கம், செ.வை.சண்முகம் போன்றோர் இவ்வகையான ஆய்விற்கு வழிகோலியிருக்கின்றனர். அதாவது மொழியின் கட்டமைப்பை மொழியியல் விளக்குவதைப் போன்று இலக்கியங்களையும் அணுகலாம் என்பது அடிப்படைக் கருத்தாகும்.

யாப்பும் நோக்கும்-தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள்(2006), கவிதை ஆய்வு(2009), அழகின் சிரிப்பு(2016), குயில்பாட்டுத் திறன்(2019), பொருளிலக்கணக் கோட்பாடு-1 (2011), பொருளிலக்கணக் கோட்பாடு-2(2012), பொருளிலக்கணக் கோட்பாடு-3(2019) போன்றவை இலக்கண-மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் அவர்களின் இலக்கிய ஆய்விற்கான பங்களிப்பாகும். அகழாய்வுகள் தமிழர்தம் தனித்தன்மையை விளக்கச் சான்றாக அமைகின்றன. அவ்வாறே மொழியியல் வழியிலான இலக்கிய ஆய்வும் தமிழர்தம் இலக்கியக் கோட்பாடுகளை மேலும் விரிவுபடுத்த உதவும்.

பதிப்பு

பேராசிரியர் செ.வை.சண்முகம் பல கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்புகளுக்குப் பதிப்பாசிரியராக இருந்துள்ளார். ஓர் அரிய இலக்கண நூலை(சுவாமிநாதம்) வெளிநாட்டில் கண்டறிந்து கொண்டுவந்து பதிப்பித்தது குறிப்பிடத்தக்க பணியாகும்.

இலண்டன் சென்றிருந்தபோது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் கையெழுத்துப் பிரதியாக இருந்த சுவாமிநாதம் என்னும் இலக்கண நூலை எடுத்து வந்து விரிவாக ஆராய்ந்து பதிப்பித்துள்ளார். சுவாமி கவிராயரால் 19ஆம் நூற்றாண்டில் யாக்கப் பெற்ற சுவாமிநாதம் ஐந்திலக்கணங்களையும் விளக்கும் நூலாகும்.

இப்படிப் பேராசிரியர் செ.வை.சண்முகம் அவர்களின் தமிழ்ப் பணியை எழுதிக்கொண்டே போகலாம். தமிழ் இலக்கணத்தையும் சங்க இலக்கிய மொழியையும் அவர் விளக்கியிருக்கும் பாங்கு வியப்பூட்டும்.

அரியலூர் மாவட்டம் செயங்கொண்ட சோழபுரத்தில் 23.11.1932இல் பிறந்த செ.வை.சண்முகம் அப்பகுதியிலேயே பள்ளிக் கல்வியைக் கற்றுக் கும்பகோணத்தில் அரசு கலைக் கல்லூரியில் இடைநிலை (Intermediate) வகுப்பை முடித்துள்ளார். பிறகு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்படிப்பைப் படித்துள்ளார் (B.A. Honours). பணியாற்றிக் கொண்டே எம்.லிட், முனைவர் பட்டம் போன்ற ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்திலும் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பணி ஓய்விற்குப் பிறகும் பல்வேறு உயராய்வு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அண்மையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களில் பேராசிரியரின் Historical Grammar of Tamil-Noun Morphology என்பதும் ஒன்றாகும்.

கி.ராஜநாராயணன்(99 வயது), இரா.இளங்குமரனார்(91 வயது) போன்று பேராசிரியர் செ.வை.சண்முகமும் 91 வயதுவரை வாழ்ந்து இறுதி மூச்சு உள்ளவரை தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளார். அவரது நூலாக்கம் பெறாத கட்டுரைகளை எல்லாம் தொகுத்து வெளியிட வேண்டும். தமிழ் உயராய்விற்கும் பழந்தமிழரின் அறிவுப் புலத்தை அறிந்துகொள்ளவும் பேராசிரியரின் ஆய்வுகளை ஒட்டுமொத்தமாக வெளியடவேண்டும்.

தமிழை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லுதல், அண்மையில் தமிழக முதல்வர் அறி­வித்த திசைதோறும் திராவிடம் என்பவை தமிழ் வளர்ச்சிக்கும் திராவிடவியல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும். மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசுவோர் திராவிடக் கோட்பாட்டின் அருமையை உணர்வதைவிடத் தமிழ் பேசுவோர் அதிகம் உணரவேண்டும். தமிழரே திராவிடத்தின் தலைமை மாந்தர்.

தமிழ் நூல்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்ப்பதைப் போன்று திராவிட மொழி­யியல் தொடர்பாக நூற்றுக்கணக்காக வெளிவந்துள்ள நூல்களையும் கட்டுரைகளையும் மறுபதிப்பாகக் கொண்டு வரவேண்டும். பேராசிரியர்கள் டி.பர்ரோ, எம்.பி.எமனோ தொகுத்து வெளியிட்டுள்ள A Dravidian Etymological Dictionary, அவர்களின் திராவிட மொழிகள் தொடர்பான ஆய்வு நூல்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையம் வெளியிட்டுள்ள நூல்கள், கேரளப் பல்கலைக்கழக வழி வெளியிடப்பட்டவை, பூனா டெக்கான் கல்லூரிவழி வெளியிடப்பட்டவை எனப் பல நூல்கள் முதற்பதிப்போடு நின்றுவிட்டன.

திராவிட மொழியியல் தொடர்பாக வெளிவந்து மறுபதிப்பைக் காணாதவை எல்லாம் தமிழ் ஆய்விற்குப் பெரிதும் உதவும். இவற்றை எல்லாம் தேடித் தொகுத்து வெளியிட்டால் மேலும் தமிழ் வளர்ச்சி அடையும். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் போன்றவற்றைப் பிற துறை சார்ந்த புரிதலோடு படிக்கும்போதுதான் தமிழர்தம் அறிவுப்புலம் புராணம், இதிகாசம் சார்ந்தது அன்று; வாழ்வியலோடு தொடர்புடையது என்பதை அறியமுடியும். மொழி­யியல், தொல்லியல், மானுடவியல், சமுதாயவியல், வரலாறு போன்ற துறைகளின் கோட்பாடுகள் தமிழரின் தொன்மையை அறிய மேலும் உதவும்.

தமிழக அரசு வழங்கிய கம்பர் விருது, ஒன்றிய அரசு வழங்கிய தொல்காப்பியர் விருது போன்றவை பேராசிரியரின் தமிழ்ப் பணிக்குக் கிடைத்த மகுடங்களாகும்.

பேராசிரியர் செ.வை.சண்முகம் அவர்களின் தமிழ்ப் பணியை அறிந்தபோது மறுபதிப்பிற்கு வராத தமிழ்-திராவிடக் களஞ்சியங்கள் எல்லாம் நினைவிற்கு வந்தன. தமிழக அரசு இதனையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் பேராசிரியர் செ.வை.சண்முகம் போன்ற ஆன்றவிந்து அடங்கிய சான்றோரின் தமிழ்ப் பணிக்கு மேலும் மகுடம் சூட்டுவது போலாகும்.

- ச.சுபாஷ் சந்திரபோஸ்

Pin It