தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் - விபச்சார ஒழிப்புச் சட்டம் - பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் - பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம்-என பெண்ணுரிமைக்கான சட்டங்கள் கொண்டுவரக் குரல் கொடுத்தவர். ‘நகராட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்க உரிமை வேண்டும்-பெண்களுக்குத் தனியாகக் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுக் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும்-பெண் நீதிபதிகள் நிறையப்பேர் நியமனம் செய்யப்பட வேண்டும்-குழந்தைத் திருமணம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்’- பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவென்றே தனது வாழ்க்கையை அர்பணித்தவர். அவர்தான் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி!

Muthulakshmi Reddiபுதுக்கோட்டை நகரில் நாராயணசாமி-சந்திரம்மாள் இணையருக்கு 30.07.1886 ஆம் நாள் மூத்த மகளாகப் பிறந்தார் முத்துலட்சுமி. தனது நான்காவது வயதில், திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிக்கத் தொடங்கினார்; பின்னர் பள்ளியில் சேர்ந்து ஆறாம் வகுப்பை முடித்தார். வீட்டிலேயே தனது தந்தையாரிடம் பாடங்கள் பயின்றார். தனியாக மெட்ரிக்குலேசன் தேர்வை எழுதித் தேர்ச்சியும் பெற்றார். இவர் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சியடைந்ததை புதுக்கோட்டை நகரமே கொண்டாடியது.

முத்துலட்சுமி கல்லூரிக்குச் சென்று கல்வி கற்க விரும்பினார். ஆனால், அந்நாளில் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற விதி இருந்தது. முத்துலட்சுமியின் தந்தையார் புதுக்கோட்டை மன்னரிடம் சிறப்பு அனுமதி பெற்று மகளைக் கல்லூரியில் சேர்த்தார். அங்கே படிப்பிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார். கல்லூரியின் முதல்வரிடமும் பேராசிரியர்களிடமும் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் 1907 ஆம் ஆண்டு சேர்ந்தார். அவரது மருத்துவப் படிப்பிற்கு புதுக்கோட்டை அரசர் உதவிப்பணம் அளித்து ஆதரவு நல்கினார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில், முதன்மை மாணவராக விளங்கினார். பாராட்டுச் சான்றுகளும், பதக்கங்களும் அவரைத் தேடி வந்தன. தனிச் சிறப்போடு தேர்ச்சி அடைந்து 1912 ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார். இந்தியாவிலேயே மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண் பட்டதாரி என்னும் தனித்தன்மையையும், ‘டாக்டர் முத்துலட்சுமி’- முத்திரைப் பதித்தார்!

டாக்டர் நஞ்சுண்டராவ் என்கிற தேசிய இயக்கத் த‌லைவரின் இல்லத்தில் 1908 ஆம் ஆண்டு மகாகவி பாரதியாரை முத்துலட்சுமி சந்தித்தார் என்பதும் பாரதியார், டாக்டர் முத்துலட்சுமியிடம் பெண்ணுரிமை பற்றிய கட்டுரைகள் எழுதும்படி கேட்டுக் கொண்டார் என்பதும் சரித்திரச் செய்திகள்.

மருத்துவப் படிப்பை முடித்து சென்னை எழும்பூரிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர் சுந்தரரெட்டி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மருத்துவ ஆற்றலையும், திறமையையும் அறிந்த இந்திய அரசு, அவரை மேல் படிப்பிற்காக லண்டனுக்கு அனுப்பியது. லண்டனில் தனது மேல் படிப்பை சிறப்பாக முடித்தார்.

ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில், இந்தியப் பெண்கள் கழகத்தின் சார்பாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

தாயகம் திரும்பிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெண்களின் நிலையை உயர்த்த அரும்பணியாற்றினார். பெண்களும் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடலாம் என 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யப்பட்டார். முதன் முதலில் சட்டமன்றத்தில் ஒரு பெண் உறுப்பினர் இடம் பெற்றது தமிழ் நாட்டில் தான். மேலும், சட்டமன்றத் துணைத் தலைவராகவும் இவர் பொறுப்பு வகித்தார். இந்த பொறுப்பையும் இந்தியாவில் முதன் முதலில் வகித்த பெண்மணியும் இவரே.

“தமிழ்நாட்டில் கோவில்களில் நடனமாடும் பெண்களே தாசிகள் அல்லது தேவதாசிகள் எனப்படுவோர் ஆவர். இவர்கள் நடனமாடியும் பாட்டுப் பாடியும் வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களுடைய தொழில் உலகிலேயே மிகத் தொன்மையான தொழில் என்று கருதப்படுகிறது. தொடக்கத்தில் வேற்றுச் சாதிகளைச் சேர்ந்த ஆண் பெண்களின் கூடா ஒழுக்கத்தின் மூலம் பிறந்த பெண்களே கோயில்களில் தேவதாசிகளாக்கப்பட்டனர். ஆனால், நாளடைவில் மற்ற வகுப்பினர் கோயில்களுக்குப் பெண்களைத் தானமாக வழங்கியதாலும், பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்டதாலும் ‘தேவதாசிகள்’ குலம்- உருவாகியது”- என 1901-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேவதாசிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் தேவதாசிகள் கோவில்களில் பணிப்பெண்களாக இருந்தார்கள். விழாக் காலங்களில் இறைவன் வீதி உலா செல்கிறபோது தேவதாசிகள் வெண் சாமரங்கள் வீசினர். விளக்குகளை ஏந்திச் சென்றனர். நடனமாடினர். இறை இசைப் பாடல்களைப் பாடினர். அவர்கள் பரதம் பயின்று அக்கலையில் வல்லவர்களாக விளங்கினர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இழிவான இத்தேவதாசி முறை, பெண்களின் மரியாதையையும், உரிமையையும், மனத் திண்மையையும் பெரிதும் பாதிக்கக் கூடியது; குறிப்பிட்ட சாதிப் பெண்களை பாலியல் தொழிலில் கொண்டு சேர்த்தது; பின்னர், அவர்களையே இழிந்த சமூகத்தவராகக் கருதச் செய்தது! இது பெரும் சமூகக் கொடுமை மட்டுமல்ல, பெண்களுக்கான சனநாயக உரிமைகளையும் தகர்ப்பதாகும்.

“தேவதாசிகள் தொழிலை இந்து சாத்திரங்கள் யாவும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றன. அதேசமயம் இந்துக் கோவில்கள் அத்தொழிலுக்கு எப்போதும் ஊக்கமளித்து வந்துள்ளன. இந்து சமயத்தில் காணப்படும் பல முரண்பாடுகளில் இதுவும் ஒன்று” – என்று ஆய்வாளர் எட்கார் தர்ஸ்ட்டன் தெரிவித்து உள்ளார்.

அரசின் சார்பாக முதன் முதலாக தேவதாசிகள் முறைக்கு ஆதரவு அளிக்க மறுத்தவர் சென்னை ஆளுநராக இருந்த வென்லாக் ஆவார்.

தேவதாசிகள் முறை ஒழிப்புச் சட்ட முன் வரைவு ஒன்றினை 1929-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 2-ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தாக்கல் செய்தார். இந்தச் சட்ட முன் வரைவு பலத்த விவாதத்திற்கிடையில் நிறைவேறியது. அதன் மீது அப்போதைய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் பேசியபோது, “தாசிக் குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. நாமும் அந்தக் குலத்தைத் தோற்றுவிக்கவில்லை. வியாசர், பராசர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக் கள்ளன் என்றும் கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. சமூகத்திற்குத் தாசிகள் தேவை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோயில் பணிக்கென்று படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்பந்தமானது. தாசிகளை ஒழித்து விட்டால், பரத நாட்டியக் கலை ஒழிந்துவிடும். சங்கீதம் அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாதச் செயலாகும், அநியாயமாகும்” – என்று குறிப்பிட்டார்.

மனிதத் தன்மையற்ற, கேவலமான இப்பேச்சுக்கு தந்தை பெரியார், கடும் கண்டனம் தெரிவித்தார். “ஒரு குலத்தில் மட்டும்தான் தாசிகள் தோன்ற வேண்டுமா? இதுதான் ஆண்டவன் கட்டளையா? முற்றக் குலத்துப் பெண்களும் மாறி மாறிப் பொட்டுக் கட்டிக் கொள்ளக் கூடாதா?”-என்று பெரியார் பதிலடி கொடுத்தார். தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிலைவேற முழு ஆதரவும் அளித்தார்.

இந்தச் சமூகக் கொடுமையை ஒழிக்க 1868-ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சி நடைபெற்று வந்தது. ஆனால், தமிழக சட்டமன்றத்தில் 1922-ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டு 1924-ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டு, 1925-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் அமலுக்கு வந்தது.

இந்தியாவில் 1929-ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, அப்போராட்டத்திற்கு ஆதரவாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தனது சட்ட மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.

பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ‘ஸ்திரி தர்மா’ என்ற இதழை நடத்தினார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. பெண்கள் நலனுக்காக பாடுபட அனைத்து இந்தியப் பெண்கள் சங்கத்தைத் தோற்றுவித்துப் பாடுபட்டார்.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேறியபின் அப்பெண்களைக் காப்பகத்தில் சேர்த்துக் கொள்ள விடுதிக் காப்பாளர்கள் இடம் தர மறுத்துவிட்டனர். அதனால், அப்பெண்களைத் தம் வீட்டிலேயே இவர் தங்க வைத்தார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1930-ஆம் ஆண்டு ‘அவ்வை இல்ல’த்தைத் தொடங்கினார். அந்த இல்லம், தொடக்கப்பள்ளி – உயர்நிலைப் பள்ளி – ஆசிரியர் பயிற்சிப் பள்ளி – கைத்தொழில் பயிற்சிப் பிரிவு – செவிலியர் பயிற்சிப் பள்ளி – பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதி – முதியோர் இல்லம் - என பல்கிப் பெருகி வளர்ந்து உள்ளது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிகாகோவில் 1933-ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, பெண்ணுரிமை குறித்து அரியதோர் உரை நிகழ்த்தினார்.

சென்னை மாநகராட்சியின் நியமனக் குழு உறுப்பினராக 1937 முதல் 1939 வரை மிகச் சிறப்பாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பணியாற்றினார். புற்றுநோய் மருத்துவ நிலையத்தை ஆரம்பித்தார். அம்மருத்துவ நிலையத்திற்கு 1952-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் ஜவகர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். அம்மையாரின் தீவிர முயற்சியால் சென்னையில் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் உருவானது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியாரின் தொண்டைச் சிறப்பித்து, இந்திய அரசு ‘பத்மபூஷன்’ விருதை அளித்துச் சிறப்பித்தது. தமிழ் நாடு சமூக நல வாரியத்தின் தலைவராகவும், இரண்டாவது முறையாக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டார்.

இவரது நினைவைப் போற்றும் வகையில், தமிழக அரசு 1989-ஆம் ஆண்டு முதல், ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்ட’த்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கருவுற்ற ஏழைப் பெண்களுக்கு அரசு நிதி உதவி அளித்து வருகிறது.

பெண்கள் நலன், பெண்கள் உரிமை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்காகப் பாடுபட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 22.07-1968-ஆம் நாள் இயற்கை எய்தினார். பெண்ணுரிமைக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட விடிவெளி மண்ணில் மறைந்தது.

- பி.தயாளன்

Pin It