“தமிழிற் பெரும்பாலோர், சிறு தொழில்களையும், சின்னீரவாகிய இன்பத்தினையும் நாடுபவர்களாய், வாழ்க்கையின் சிறந்த குறிக்கோள்களை அறியாதவர்களாய் கீழ்நிலையை எய்தியிருக்கின்றனர். உலகர் போற்றிப் புகழும் உச்சநிலையில் இருந்த தமிழ் மக்கள், ஆற்றல் குன்றி, அறிவிழந்து, கல்லா மாக்களாய் ஆனதன் பொருட்டு என்னை? தாய் மொழிப் பயிற்சியை நெகிழவிட்டோம்; தமிழ் மூதறிஞர் கூறிய உறுதிப் பொருள்களை மறந்தோம்; அன்னியர் நடை, உடை, பாவனைகட்கும், அன்னிய மொழிகட்கும் அடிமைப்பட்டோம்... இக்குறைகளைத் தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை அமைப்பது கடன்!” - இக்கூற்று தமிழ் வேள் உமாமகேசுவரனாரால் 1934-ஆம் ஆண்டு கூறப்பட்டது.

uma makeshwaranar“மூச்செல்லாம் தமிழ் மூச்சு; பேச்செல்லாம் தமிழ்ப் பேச்சு; பெற்றதெல்லாம் தமிழ்த் தாயின் வெற்றி” என வாழ்ந்து காட்டியவர் தமிழ் வேள் உமாமகேசுவரனார். தஞ்சைக் கரந்தையில் வேம்பப்பிள்ளைக்கும் - காமாட்சி அம்மையாருக்கும் 07.05.1883-ஆம் நாள் மகனாகப் பிறந்தார் உமாமகேசுவரனார்.

பள்ளியில் கல்வி பயிலும்போதே, ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பதற்கேற்ப வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். மூன்றாம் படிவம் வரை வல்லத்திலும், கும்பகோணத்திலும் படித்து, அரசினரால் நடத்தப் பெற்ற தேர்வில் வெற்றி பெற்றார். தஞ்சைத் தூய பேதுரு கல்லூரியில் நான்காம் படிவத்தில் சேர்ந்தார். ஆசிரியர் சண்முகம் பிள்ளையிடம் ஆங்கிலம் கற்றார். தமிழறிவுடன், ஆங்கிலமும் கற்று இருமொழியிலும் திறன் பெற்று விளங்கினார்.

பள்ளி நேரம் தவிரப் பிற நேரங்களில் ஏதாவது ஒரு நூலைப் படித்துக் கொண்டே இருப்பார். வீண் பொழுது போக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவராக விளங்கினார்.

தஞ்சைத் தூய பேதுரு கல்லூரியில் இளங்கலை வகுப்பு வரை படித்து வெற்றி பெற்றார். பின்னர், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். நேர்மையின் உறைவிடமாக விளங்கிய உமாமகேசுவரனாருக்கும், மாவட்டத் துணை ஆட்சியருக்கும் மனத் தாங்கல் ஏற்பட்டது. உடனே, தம் வேலையை உதறித் தள்ளினார்.

சட்டம் பயில விரும்பினார். சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து பயின்று சட்டக் கலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தஞ்சை திரும்பி, கே. சீனிவாச பிள்ளையிடம் பயிற்சி பெற்று, பின்னர் தாமே வழக்குரைஞர் தொழிலை மேற்கொண்டார்.

திருச்சியைச் சேர்ந்த அண்ணாமலைப் பிள்ளையின் மகளான உலகநாயகி என்பவரை மணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். பிற்காலத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உலகநாயகி காலமாகிவிட்டார்.

தனது இடையறா உழைப்பினாலும், உண்மையைக் காண வேண்டுமென்ற அவாவினாலும், அச்சம் சிறிதும் இல்லாமையாலும், பணத்தைவிடப் புகழை அடைய விரும்பியதாலும், வழக்கறிஞர் தொழிலில் பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்றுச் சிறந்து விளங்கினார் உமாமகேசுவரனார்.

தஞ்சை மாவட்டத்திலேயே உரிமையியல் வழக்குகளைத் திறம்பட நடத்தி வெற்றி பெறுவதில் முதன்மையானவராகப் புகழ் பெற்றார். மேலும், பணம் கொடுக்க முடியாத ஏழ்மை நிலையிலுள்ளோருக்கு எவ்விதத் தொகையும் பெறாமல் வழக்காடி வெற்றி தேடித் தருவார். அரசு கூடுதல் வழக்குரைஞராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

தஞ்சை மாவட்டத்தில் நீதிக் கட்சியின் தூண்களில் ஒருவராக விளங்கியவர் உமாமகேசுவரனார். தஞ்சை வட்டக் கழகத்தின் முதல் அலுவல் சார்பற்ற தலைவராகவும், மாவட்டக் கழகத்தின் உறுப்பினராகவும், மாவட்டக் கல்விக் கழகத்தின் உறுப்பினராகவும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறப்புடன் பணியாற்றினார். சிற்றூர்களுக்கு, சாலைகள் போட நடவடிக்கை எடுத்தார். தஞ்சை மாவட்டத்தில் துவக்கப்பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளாக உயர்த்தினார். கட்டிடம் இல்லாதப் பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டி வழங்கிட ஏற்பாடு செய்தார். நன்றாகக் கடமை உணர்வுடன் பணிபுரியும் ஆசிரியர்களைப் பாராட்டினார். பணி செய்யாது ஏமாற்றுவோரை அடையாளம் கண்டு தண்டனையும் அளித்தார்.

தஞ்சை அரசர் அறநிலையங்களின் வருவாயிலிருந்து ஒரத்தநாட்டிலும், இராசாமடத்திலும் உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வந்தன. அப்பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவும் உறையுளும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. ஆனால், பிராமண வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இந்த வசதிகளை அனுபவித்துக் கொண்டு வந்தனர். உயர் சாதியினரின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே, இந்த அவல நிலையை அறவே மாற்றினார். ஏனைய தமிழ் மாணவர்களுக்கும் இத்தகைய சலுகைகள் கிடைத்திடச் செய்தார். நீதிக் கட்சித் தலைவர் சர். ஏ. டி. பன்னீர் செல்வத்துடன் இணைந்து உமாமகேசுவரனார், இம்மாற்றத்துக்கு அரும்பாடுபட்டார்.

கரந்தையில், நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் தலைமையில் 14.05.1911-ஆம் நாள் ‘கரந்தைத் தமிழ்ச் சங்கம்’ தோற்றுவிக்கப்பட்டது. அத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை உமாமகேசுவரனார் ஏற்றார்.

‘தமிழின் நிலையையும், தமிழரின் நிலைமையும் சீர்பெறச் செய்து உயர்த்துவது; உறுப்பினர்களின் உடல்நிலை, ஒழுக்க நிலை, சமூக நிலை, கல்வி நிலை ஆகியவை ஒருசேர உயர வசதிகள் அளிப்பது; தமிழரின் தொழிலும், பொருளாதாரமும் வளம் பெறச் செய்வது; ஆகியவை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களாக உமாமகேசுவரனார் அறிவித்தார்.

சொற்பொழிவுகளும், சொற்போர்களும் நடத்துதல் – படிப்பகங்களையும் நூல்நிலையங்களையும் அமைத்தல் – நூல் வெளியிடுதல் – தமிழ் நூல் ஆராய்ச்சிகள், தமிழர் நாகரிகம் குறித்த ஆராய்ச்சிகள், இலக்கண - இலக்கிய அறிவு நூல்கள், பிறமொழியில் உள்ள சிறந்த நூல்களைத் தமிழில் வெளியிடல் – உடற்பயிற்சிக் கூடங்கள் நடத்துதல் – தமிழ்க் கல்லூரிகளை ஆரம்பித்து நடத்துதல் – மாணவர்களிடத்தில் நல்லொழுக்கம், தூய்மை, பரந்த மனப்பான்மை ஏற்படுத்துதல் – அனாதை இல்லங்கள், ஏழை இல்லங்கள், மருத்துவமனைகள் நடத்துதல் – அறக்கட்டளைகள் நிறுவுதல் - மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்துதல் – போன்றவை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பணிகளாக அறிவித்தார்.

தமிழ் மக்களையும், தமிழ் மொழியினையும் இழிவுபடுத்தி, வரலாற்று நெறிபிறழ உண்மைக்கு மாறாக எழுதிவரும் கருத்துக்களை நேரிய முறையில் கண்டித்தல், மேல்நாட்டு வரலாற்றைத் தமிழில் மொழிபெயர்த்தல் ஆகிய உயரிய நோக்கங்களோடு உமாமகேசுவரனார் ‘தமிழ்ப் பொழில்’ எனும் திங்கள் இதழைத் தொடங்கினார். அந்த இதழில், அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆங்கில மொழி பெயர்ப்புகள், கவிதைகள், தமிழ்க் கலைச் சொல்லாக்கங்கள், வரலாற்றுப் படைப்புகள் ஆகியன இடம் பெற்று வந்தன. தனித் தமிழ் இதழாக ‘தமிழ்ப் பொழில்’ வெளி வந்தது.

‘மனோன்மணியம்’ சுந்தரம்பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோரின் நூல்களையும், யாழ் நூல், தொல்காப்பியம் - சேனா வரையம் - தெய்வச்சிலையார் உரை, நெல்லை வருக்கக் கோவை, சிந்தரந்தாதி, சுருதி வீணை, தமிழரசி, குறவஞ்சி, பரத சரித்திரம், கவியரசு நினைவுமலர், சிவமும் செந்தமிழும், சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம், கச்சிக் கலம்பகம், பாரத சாரவெண்பா, யவன மஞ்சரி, இந்தியத் தல யாத்திரை, புலவராற்றுப் படை, கரந்தைக் கட்டுரைக் கோவை - ஆகிய நூல்களை கரந்தைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது.

கரந்தைத் தமிழ்க் கல்லூரி 16.04.1938-ஆம் நாள் திறக்கப்பட்டது.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15-17 வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், சங்கத் தலைவர் உமாமகேசுவரனாருக்குத் ‘தமிழ் வேள்’ என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தார்.

தமிழ் நாட்டு மக்கள் கல்வியில் முன்னேற வேண்டுமாயின், தாய் மொழியிலேயே அனைத்தையும் கற்றல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார் உமாமகேசுவரனார்.

நற்றமிழ் நாவலராய் விளங்கிய உமாமகேசுவரனார், சிந்தனையில் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.

தமிழ் நாட்டுப் பள்ளிகளில் 1938-ஆம் ஆண்டு இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்பட்டபோது அதனை முழு மூச்சாக எதிர்த்தார். இந்தி மொழித் திணிப்பைக் கண்டித்துச் சொற்பொழிவுகள் ஆற்றியும், கட்டுரைகள் எழுதியும் தமிழ் மக்களை விழிப்புணர்வு பெறச் செய்தார்.

பள்ளிகளில், தமிழாசிரியர்கள் தலைமையாரியர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்தார். தம், தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியராகத் தமிழாசிரியர் ஒருவரையே, அமர்த்தினார் உமாமகேசுவரனார்.

‘அரசியல் தேர்தல் எனில் சிறு பதவிக்கும் அளவற்ற பொருள்களை அள்ளியிறைக்கும் தமிழ் நாட்டுச் செல்வர்களே! தாய் மொழியாம், தமிழின் வளர்ச்சிக்கு உதவி செய்யுங்கள்’ என்று அறைகூவல் விடுத்தார்.

“சாந்தி நிகேதனம் போல், தம்மால் உருவாக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கமும் திகழ வேண்டும்” என்று எண்ணிப் பாடுபட்டார். உமாமகேசுவரனார், வட இந்திய சுற்றுப் பயணத்தின் போது அயோத்தியின் அருகே பைசாபாத் என்னுமிடத்தில் தங்கினார். அங்கு 09.05.1941-ஆம் நாள் இவ்வுலகைவிட்டு மறைந்தார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இல்லாத ‘ஆங்கில மோகம்’ பொங்கிப் பரவி மேலோங்கி நிற்கும் இன்றையத் தமிழகத்தில் ‘தமிழின் வாழ்வே தம் வாழ்வு’ என வாழ்ந்த ‘தமிழ் வேள்’ உமாமகேசுவரனார் போல் மீண்டும் பலர் இங்கே தோன்ற வேண்டும்.

தாழ்ந்து கிடக்கும் தமிழகம் தலை நிமிரவும், அலமந்து திரியும் தமிழர்கள் அண்ணாந்து பார்க்கும்படி உயரவும், தாய்மொழியாம் தமிழ், தளராது வளர்ச்சி பெற வேண்டும், அதற்கு உண்மையோடு பாடுபடுவதே உமாமகேசுவரனாருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.

- பி.தயாளன்

Pin It