பள்ளியில் சமைத்த மதிய உணவை தலித் மாணவி தொட்டு விட்டதாகக் கூறி அதனை நாய்க்குக் கொட்டிய அராஜகம் நடந்துள்ளது. இராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் கிராமத்திலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள அரசுப் பெண்கள் ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மதிய உணவாக ரொட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. கமலா வைஷ்ணவ் என்ற பெண் உதவியாளர் இந்த உணவை சமைத்துள்ளார். இந்நிலையில், உணவை வாங்கும்போது ரொட்டி இருந்த பாத்திரத்தை தலித் மாணவி ஒருவர் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உதவியாளர் கமலா வைஷ்ணவ், தலித் மாணவியை மிக மோசமான முறையில் திட்டி அவமானப்படுத்தியதுடன், தலித் மாணவி தொட்ட உணவு தீட்டுப்பட்டு விட்டதாகக் கூறி, உணவு முழுவதையும் நாய்க்குக் கொட்டி யுள்ளார்.

பள்ளி உதவியாளரின் இந்த தீண்டாமையால் தலித் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால், அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதனிடையே, மதிய உணவை நாய்க்கு கொட்டப்பட்டதை வீடியோ எடுத்திருந்த ஒருவர், அதனை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியதால், தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகே கல்வித்துறை அதிகாரிகளும் இப்பிரச்சனையில் தலையிட்டுள்ளனர். தீண்டாமையைக் கடைப்பிடித்த உதவியாளரை தற்போது இடை நீக்கம் செய்துள்ளனர்.

Pin It