atrai thingal 350 copyஎழுத்தாளர் கலைச்செல்வி அவர்களை எனக்கு அவரின் படைப்புகளின் வழியாகவே அறிமுகம்.  குறிப்பாகப் பெரியாயி என்கிற கதையொன்றின் அதீத ஈர்ப்பின் காரணமாக அவரது எழுத்துகளின் மேல் கவனம் செலுத்தவேண்டும் என்கிற ஒன்றின் விளைவாகவே வாசிக்கத் தொடங்கினேன்.  அவரின் கணையாழி சிறுகதையொன்று குறித்த விமர் சனத்தை எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமாரின் தஞ்சைக் கூடலில் வாசித்தேன். அலங்காரம் எனும் அக்கதை சீதையின் வனவாசம் பற்றிய வேறு பரிமாணத்தைத் தருவதாகும்.  அதன் வழியாகவே அவரின் மூன்று படைப்புகள் என்னை வந்து சேர்ந்தன.  இரவு எனும் சிறுகதைத் தொகுப்பு மற்றும் அவரின் இரண்டாவது, மூன்றாவது நாவல்கள் புனிதம் மற்றும் அற்றைத்திங்கள்.

அற்றைத்திங்களை வாசிக்கத் தொடங்கும் போது தொடர்ந்து வாசித்துவிடவேண்டும் என்கிற உந்துதலைத் தரவே காலையிலும் மாலையிலுமான ரயில் பயணத்திலும் கடைசியாக வீட்டிலுமாக வாசித்து முடித்தேன்.  பயணம் என்பது ஓர் அற்புத மான கொடுப்பினையான வரமாகவே நான் கருது கிறேன்.  எனக்கு வாய்த்திருக்கிறது.  அதிகாலையிலும் அந்தந்த நாளின் மாலையிலுமாக வாசிப்பின் அறுபடாதத் தருணத்தைத் தந்து கொண்டிருக்கிற பயணம் அது.  ஆகவே பயணம் வரமே.

நாவலின் சிறப்பு விரல்விட்டு எண்ணக்கூடிய பாத்திரங்கள், பரணி, குணா என்கிற குணசேகரன், செரா என்கிற செண்பகராஜன் இவை மையங்கள்.  இவற்றின் தொடர்ச்சியான சில துணைப் பாத்திரங்கள் செராவின் மனைவி கோமதி, கலியன் அவரின் கூட்டம் என.  இரண்டாவது நாவலின் கதைப் பின்னல், வெகு எளிமையானது.  ஒரு தொலைக் காட்சியின் இரண்டு நபர்கள் தாங்கள் பயணம் போகும் ஒன்றின் படக்காட்சியாக அமைக்கப் பட்டது.  மூன்று எளிமையான சொற்கள், சொல் லொழுங்கு, கருத்தொழுகு, தொடர்பழகு எனப் படிப்போரைத் துன்புறுத்தாத நடை. சிலவிடங்களில் சொற்களின் ஆழமான பொருண்மை ரசிக்க வைக்கிறது கூடவே கசிய வைக்கிறது.  இலக்கியத் திறனாய்வு குறித்த லேசான அறிமுகம் உள்ளோர்க்கும் இவ்விஷயங்கள் புரியும்.

இனம், குலம், பண்பாடு, இயற்கை, வாழ்விடம், வாழ்தல் போன்ற சொற்கள் ஒரு நாட்டின் உருவாக்கத்தில் மிகமுக்கியமான சொற்கள்.  இவை அந்த நாடு தோன்றி அழியும் வரையில் நிழல் போலத் தொடர்ந்திருப்பவை.  இப்படியான மேற்குறிப்பிட்ட சொற்களுக்கான பொருளுக்கு உரிமையாளர்கள் ஒவ்வொரு நாட்டின் பழங்குடிகள் என்பதை எந்த இன வரலாற்றை எடுத்துப் படித்தாலும் உறுதி செய்துகொள்ளமுடியும்.  அவர்களால்தான் நிலம், அவர்களால்தான் காடு, அவர்களால்தான் இயற்கை இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.  வரலாறு என்பது நீட்டித்து உரைப்பதாக இருந்தாலும் அது உண்மையின் வடிவத்தை நிலைநிறுத்துவதாகும்.  இப்படியான பழங்குடிகளின் இருப்பைத் தகர்க்கிற கொடூரத்தின் பன்முகங்களைப் பயணம்போகிற இரண்டு ஜர்னலிஸ்ட்டுகள் காட்சிப்படுத்துவதாக அற்றைத்திங்கள் எழுதப்பட்டிருக்கிறது.

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பாரியின் வள்ளன்மை உலகறிந்த இலக்கிய வரலாறாகும்.  ஆனால் உலகின் மனித இதயத்தை நேசித்தவனின் மகள்கள் பட்ட துன்பம் ஒருபாட்டில் உயிருருக்குவ தாகும்.  அவனின் வண்கைத் தன்மையைப் பல பாடல் களில் கபிலர் விதந்து பாடியிருப்பார்.  இந்த உலகத்தில் வள்ளல் தன்மையில் சிறந்து விளங்குவதில் பாரி மட்டுமல்ல மாரியும் (மழையும் காலங்காலமாக உலகு புரக்கிறது) உண்டு என்றும், அவனை இரந்து கேட்டால் குன்று, குதிரையும், மலையும், பொன்னும் மணியும் அள்ளி அள்ளித் தருவான்.  வலிந்து கேட்டால் அவனை வெல்வது யாராலும் முடியாது எதிர்த்தவன் அழிவது உறுதி என்று பாடுவார்.  அந்தப் பாடல்கள் என்றைக்கும் சாகா வரம் பெற்றவை.  அத்தகைய சால்புடைத்தோனின் மகள் களின் வாழ்வை நிலைப்படுத்த கபிலர் படும் அவத்தை சொல்லில் அடங்காத துயரத்தைப் பெருக்குவது.

நிலவு என்றைக்கும் மாறுவதில்லை.  அது சாத்திய மானது.  உலகின் அசத்தியமான உயிரினம் மனித இனமே.  அன்றைக்கிருந்த நிலவுதான் இன்றைக்கும் இருக்கிறது.  எல்லாவற்றையும் பார்த்துக்கொண் டிருக்கிறது.  எங்கள் தந்தை உடனிருக்க, எங்கள் பறம்புமலையும் அரண்மனையும் உடனிருக்க நிலவை ரசித்தோம்.  இன்பத்தில் கள்ளங்கபடமற்ற வாழ்வில் திளைத்திருந்தோம்.  ஆனால் இன்றைக்குப் பகை மன்னர்களின் பண்பற்ற செயலால் எங்களின் தந்தை உயிரிழந்துபோனார்.  எங்கள் நாடும் மலையும் எல்லாமும் இழந்துவிட்ட துயரத்தில் மிதந்து கொண்டிருக்கிறோம்.  ஆனால் அதே நிலவுதான்.  பாரி என்கிற ஒருவனின் மரணம் பற்றியதல்ல பாடல்.  ஓர் இனத்தின், வள்ளல் தன்மைமிக்க ஒரு பாரம்பரியத்தின் அழிவைப் பற்றிய பாடல் இது.  இதுதான் கலைச்செல்வியின் உள்ளக்கிடக்கையில் நாவலாகப் பரிணமித்திருக்கிறது ஏகமான கேள்வி களுக்கு விடைதெரியாத கோபத்தில்.  மண்ணின் வேர் மக்களை வேரறுப்பது எந்தவிதமான நியாயம்? இயற்கை காப்போர்களை அழிப்போர்கள் என்கிற பலிபீடத்தில் காட்சிப்படுத்தியது யார்? அதற்கான அரசியல் யாருடையது? இதன் ஒட்டுமொத்த சிதைவின் விளைவு யாது? இந்த நாவலில் எடுத் துரைத்துப் போகிறார் சத்தியப் பிரமாணம்போல கலைச்செல்வி அவர்கள்.

மண்ணோடும் இயற்கையோடும் இயைந்து கிடக்கும் மனிதர்களை வேரோடு பிடுங்கி வீசி யெறிகிற வன்மத்தைக் கட்டவிழ்க்கையில் தங்களின் இருப்பைக் காக்கப் போராடும் அந்த மனிதர்களின் எண்ணவோட்டங்கள், மன நடுக்கங்கள், உடல் அதிர்வுகள் எல்லாவற்றையும் நாவலில் வெகு இயல்பாகப் பதிவுசெய்கிறார் கலைச்செல்வி.  உலக மயமாக்கல் எனும் நரகம் சமைத்தலில் இயற்கையைப் புதைத்துவிட்டு சாம்பல்களில் சரித்திரங்களை உருவாக்கும் புதைகுழிக்குள் இனத்தையும் இனங் காத்தோரையும் பண்பாடு உடுத்தியோரையும் மூச்சு முட்ட முட்ட அமிழ்த்துவதான அந்த உயிர்ப் போராட்டக் குரல்கள் நாவலில் எங்கும் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன.

சராசரியான குடும்பத்தில் பிறந்த பரணிக்கு இதெல்லாம் தாண்டிப் போராடுகிற குணம் இருந் தாலும், மனிதத்தைக் காக்கும் அடிப்படை மனிதாபி மானம் இருந்தாலும் அது கட்டறுக்கப்பட்டு கணவன், மனைவி, குடும்பம், பிள்ளை, வாழ்வதான வாழ்க்கை எனும் ஒரு சூத்திரத்திற்குள் இழுக்க நடக்கும் போராட்டத்தில் பரணியின் மனச் சஞ்சலங்கள் நாவலின் உயிர்ப்பான கணங்கள்.  கலைச்செல்வி படைப்பாளி என்பதினும் ஒரு பெண் என்பதால் பரணியின் பாத்திரப்படைப்பு ஜீவனோடு ஆன்ம சுத்தியோடு இயங்குகிறது.

குணசேகரன், செரா இவர்களின் உயிர்ப்பையும் பரணி பாத்திரமே இயக்குகிறது.  பரணியின் கேள்வி களே குணசேகரனின், செராவின் செயற்பாடு களுக்குக் களம் அமைக்கிறது நாவலில்.  எத்தனைய இழப்பாயினும் அது வலி நிறைந்ததுதான்.  அதுவும் உயிர்த்த இடத்தில் வேரறுக்க விரட்டப்படும் உயிர் வாழ ஓடும் இருப்பின் இழப்பு ஏற்படுத்தும் வலி உச்சமானது.  இது நாவலின் சொற்களெங்கிலும் உறைந்துகிடக்கிறது.

பரணி சுயசார்பில் சொல்வதுபோல நாவல் தொடங்கி முடிகிறது.  சிறந்த கள ஆய்வின் சரியான தொகுப்பாகவும் நாவல் பரிணமிக்கிறது.  பயணம் போகிற சாக்கில் பரணியின் இயற்கையைக் கண் காணித்தல் அற்புதமான காட்சியாக விவரிக்கப் படுகிறது.  மரங்கள், மரங்களின் பெயர்கள், செடிகள் செடிகளின் பெயர்கள், சிறுசிறு பூச்சிகள், விலங்குகள், மரங்களின் தன்மைகள், அமைந்துள்ள சூழல்கள் இவற்றைச் சித்திரிக்கையில் நாமும் கூடவே இருந்து அவற்றைப் பார்த்து உணர்வதுபோன்ற விளைவு நிறைவாகப் படிப்போர்க்கு ஏற்படுத்துகிறது.  இது நாவலின் நோக்கத்தைப் படிப்போரின் உள்ளத்துள் பதிய வைப்பதும் எளிதாகிறது.  பரணி பார்க்கிற காட்சி நாம் பார்ப்பது போலவே உள்ளது. பரணி வருத்தப்படும் சூழலில் நம்மையும் வருத்தப்பட வைக்கிறது.  பரணி நேரில் கண்டு அனுபவிக்கிற வலியை வாசிப்போருக்கும் அப்படியே ஏற்படுத்துவது நாவலின் சத்தியத்தைப் புலப்படுத்துகிறது.

நாவலின் படைப்பாளுமையில் அல்லது மொழிநடையில் எளிமையும் புரிதலும் சிக்கலின்றி அமைந்துள்ளன.  எந்த ஒன்றையும் தொடர்பு அறுபடாமல் இயைந்துகொடுப்பதில் கலைச் செல்வியின் பொறுப்புணர்ச்சி தெரிகிறது.  உரை யாடல்கள் நாவலின் கதையின் வலியை உறுத்த வைக்கிறது.  சிறு உரையாடலாக இருந்தாலும் நீண்ட உரையாடலாக இருந்தாலும் சரி இதனை உணர முடிகிறது.  சித்திரிப்புகளிலும் நாவலின் பயணம் இடையறாது கொண்டிருக்கும் நோக்கத்தை நிறைவு செய்கிறது.

இவங்க பக்கத்து நியாயத்தை எடுத்துச் சொல்ல பழங்குடி மக்களுக்குன்னு யாருமேயில்லை... யாருமேன்னா... சிந்தனையாளர்கள்... எழுத் தாளர்கள்... பேராசிரியர்கள்... இப்படி கூட யாருமில்லை.  (ப.35)

உண்மைதான்... பழங்குடியினர் பற்றிப் பேசியும், ஆய்வுக் கட்டுரைகள் எழுதியும், முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு பெற்றும் அத்துடன் முடித்துவிடுகிறோம்.  உறுத்தலாகத்தான் இருக்கிறது.  இந்த மண்ணையும் இயற்கையையும் சமைத்தவர் களுக்காகச் சண்டையிட யாருமில்லை.  விலங்கு களுக்காக இவர்களை விலங்கைப்போல விரட்டி யடிப்பது என்ன நியாயமாக இருக்க முடியும்? இயற்கை சமநிலையைப் பாதுகாப்பதில் இவர்களின் பங்கும் கணிசமானது என்பதை யார் எடுத்துக் கூறுவது? யாரிடம் கூறுவது? உணரும் நிலையில் யார் உள்ளார்? இப்படிப் பல கேள்விகள் கேள்விகளாகவே நிற்கின்றன.

நாம் இந்த விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் கலைச் செல்வி அழகாக ஓர் இடத்தில் எண்ணக் காட்சிப்படுத்துகிறார்.

செரா அங்கிள் சொன்னதுபோல சிறிய அருவி தான்.  தாவரங்களை விலக்கி, கரிய பாறையை வெண்மையாக்கிய திருப்தியோடு பூமியில் இறங்கி, வழியில் மறித்துக் கிடந்த சிறு பாறைகளையும் பெரிய கூழாங்கற்களையும் தழுவித் தழுவி நாணங் கொண்டு ஓடியது.  அந்தச் சிற்றோடை மீன்கள் கண்ணாடி குடுவைக்குள் நடமாடுவதுபோல அத்தனை துல்லியமாகத் தெரிந்தன... (ப.54)

இது ஓர் காட்சி என்றாலும், பரணிக்கு காடு அறிமுகமில்லை.  அதன் இயற்கை அறிமுகமில்லை.  ஆகவே இயற்கையாகப் பார்க்கிற ஒன்றைப் புரிந்து கொள்ளக்கூட செயற்கையான ஒரு செயற்பாடு வேண்டியுள்ளது.  மீன்களைத் தண்ணீரில் பார்க்கிற மனம் வீட்டின் கண்ணாடிக் குடுவைக்குள் நீந்தும் மீன்களை ஒப்பிட்டுக் கொள்கிறது.  அடைத்து வைத்துப் பார்க்கிற வாழ்வில் இருக்கிற நாம் எப்படி இயற்கையான வாழ்வின் வலியைப் புரிந்துகொள்ள முடியும்?

நாவலின் கூறுகளுள் ஒன்றாக வருணனை உத்தியைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள் திறனாய் வாளர்கள்.  அது இடம், ஆள், சூழல், காட்சி என வகைப்பட்டு அமையும்.  இந்த வருணனை உத்தி இந்நாவலில் மனதுக்கு இதமாக உள்ளது.  அந்த இயற்கையோடு ஒன்றிவிடும் உணர்வை நிலை நிறுத்துகிறது.

குரங்குகளின் தாவலில் சற்றே துளிர்ப்பருவம் மீறிய இலை விழுகிறது.  அதனைக் குறிப்பிடுகையில் “புத்தம் புதிய சருகு ஒன்று பழுதின்றி விழ அதன் பின்னோடு என் கண்களை நகர்த்தினேன்...” (ப.56)

இடைவெளியின்றிப் பசுமையைப் போர்த்திக் கிடக்கும் புல்வெளியில் யாரை வேண்டு மானாலும் மன்னித்துவிடலாம்... பிரபஞ்ச வெளியெங்கும் அகமாக மாறி உடலென்ற வடிவு நீர்த்துவிட்டது போலிருந்தது... (ப.60)

சரிகையை அவிழ்த்துவிட்டதுபோலக் காட்டாறு நுரைத்துக் கொண்டோடியது (ப.60)

வீட்டு நினைப்பை உதறிக்கொண்டு எழுந்தேன்.  அங்கிருந்த புளிய மரத்திலிருந்து சொட்... சொட்... எனக் காய்கள் உதிர்ந்தன (ப.63)

நினைவுகள் உதிர்ந்துவிட்டாலே அது புளித்துப் போன ஒன்றுதானே?

குதித்தோடிய பச்சை நிறத் தவளைகள் நகரத்துத் தவளைகளை விடக் கால்களை அதிகமாக விரித்தன (ப.77)

நீர்த்துப்போன மனதின் மீதிருக்கும் செயல் களுக்கான நம்பிக்கைதானே கடவுள்.  விழுமி யங்கள் அறத்திலிருந்து நழுவாமல் இருக்கத் தான் மதம் (ப.87)

வயதாயிடுச்சு... இனிவே வேண்டாத குப்பை தானே... பேசிப்பேசி வெளியே அள்ளிக் கொட்டிடுங்க... (ப.108)

மழைநீர்த் தடங்களில் மாமிசக் கதுப்புபோல மணல் வரிகள்... (ப.123)

நீர்மத்தி மரங்களில் தாவியோடிய மந்திகள் அதன் இலைகளை மான்களுக்கு உதிர்த்துக் கொண்டிருந்தன (ப.139)

அணிலைப் பார்த்தால்கூட பதட்டமடைகிற மனம்... (ப.156)

வெளச்சவன் தின்னது போக... வந்தவன் தின்னது போக... வறண்டுனவன் தின்னதுபோ... செழிப்பா வெளயணும்... (ப.156-157)

இவை பரணி இயற்கையின் வசீகரத்தில் தன்னை அமிழ்த்திக்கொண்டு வெளிப்படுத்திய மனத்தின் அழகான உணர்வுகள்.  ஒரு முறை பயணம் போனவளுக்கே காடும் இயற்கையும் பிடித்திருக்கக் காலங்காலமாக அவற்றையே வாழ்வாகக் கொண்ட பழங்குடி மக்களை இருப்பி லிருந்து வெளியேற்று வன்மம்... அதனைத் தாங்க முடியாத பழங்குடியின் துன்பம்.

நாவலின் உச்சத்தில் ஓர் இடத்தில் குணா கேட்கிறான் காடு யாருக்குத்தான் சொந்தம்? அந்தக் கணம் குணாவைப் பிடித்திருந்தது என் கிறாள் பரணி.  எங்களுக்கும் தான்.

இதற்கான தீர்வுதான் என்ன?

விடை பெறமுடியாத கேள்வி பதிலுக்கான போராட்டத்தை வடிவமைக்கும் கேள்வி.  என்றைக்கு மான தொடரும் வலிகளை உள்ளடக்கியது.

நாவலை வாசித்த கணம் ஏற்படுத்திய வலி நீண்டு கிடக்கிறது.

அற்றைத் திங்கள்
ஆசிரியர்: கலைச்செல்வி
வெளியீடு : யாவரும் பதிப்பகம்
சென்னை
விலை: ` 175/-

Pin It