உலகம் ஆகஸ்ட் இருபதாம் தேதியை அடையாளப்படுத்துவது பூமியின் வரலாற்றில் மிக அதிக மனித மரணங்களுக்கு காரணமான ஓர் உயிரினத்தின் பெயரிலேயே! நம் சுண்டு விரல் நகம் அளவிற்கு மட்டுமே வளரும் கொசுக்களே அந்த பயங்கர உயிரினங்கள்! பூமியில் இதுவரை தோன்றிய மனித உயிர்களில் பாதியை அதாவது 5,200 கோடி மனித உயிர்களைக் கொன்றொடுக்கியது கொசுக்கள் பரப்பிய நோய்களே என்று கருதப்படுகிறது.

இலண்டன் சுரங்கப் பாதை கொசுக்கள்

கொசுக்கள் பூமியில் தோன்றி இருபது கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். வாழும் சூழலுக்கேற்ப பல பரிணாம வழிகளில் பயணித்து மூவாயிரத்திற்கும் அதிகமான உயிரினங்களாக நூறு இலட்சம் கோடி கொசுக்கள் பூமியில் இன்று நம்முடன் சுகமாக வாழ்கின்றன. ஆனால் இவற்றில் க்யூலெக்ஸ் மொலெஸ்ட்டஸ் (Culex molestus) என்ற ஓர் இனத்தின் பரிணாம வரலாறு அசாதாரணமானது. இலண்டன் சுரங்கப்பாதை கொசுக்கள் (London underground mousquitos) என்று அறியப்படும் இவற்றின் கதை சுவாரசியமானது.Culex Molestusஇரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் 1940 செப்டம்பர் 7 முதல் 1941 மே 11 வரை ஹிட்லரின் தலைமையில் படைகள் இலண்டன் நகரத்தில் தி ப்ளிட்ஸ் (The blitz) என்ற பெயரில் குண்டு மழை பொழிந்தது. தாக்குதல் தொடங்கிய நாள் முதல் தொடர்ச்சியாக 57 நாட்கள் மக்கள் வாழ்ந்த இடங்களிலும் முக்கிய கட்டிடங்களின் மீதும் ஒரு இலட்சம் குண்டுகள் வீசப்பட்டன.

இலண்டன், காவெண்ட்ரி (Coventry), பர்மிங்ஹாம், லிவர்பூல், மான்செஸ்ட்டர் போன்ற மாநகரங்களில் மரணத்தின் பெரு விளையாட்டு! பக்கிங்ஹாம் அரண்மணை, செயிண்ட் பால் கதீட்ரல் தேவாலயம், பாலங்கள், அருங்காட்சியகங்கள், பள்ளிகள், சாலைகள் அழிந்தன. எட்டாயிரம் வீடுகள், அதே அளவிற்கு குழந்தைகள், நாற்பதாயிரம் மனித உயிர்களின் பேரிழப்பு! கூரைக்கு கீழ் நிம்மதியாக படுத்துறங்க முடியாமல் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இலண்டனின் புகழ்பெற்ற சுரங்கப் பாதைகளில் அடைக்கலம் புகுந்தனர்.

இலண்டன் சுரங்கப் பாதை இரயில் அமைப்பு பூமிக்கடியில் அந்த காலத்தில் விரிவான வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருந்தது. சுரங்கப் பாதைகளில் மக்கள் தஞ்சம் புகுந்தது பற்றிய புகைப்பட வடிவ ஆதாரங்களை இன்றும் இம்பீரியல் போர் அருங்காட்சியகங்களில் காணலாம். மனிதர்கள் மட்டும் இல்லாமல் கொசுக்களும் குண்டுகளின் நெருப்பு மழையில் இருந்து தப்ப சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்தன.

க்யூலெக்ஸ் மொலெஸ்டஸ் பரிணாமமும் உடலமைப்பும்

க்யூலெக்ஸ் மொலெஸ்ட்டஸ் என்ற புவியின் வட கோளப்பகுதியில் காணப்படும் சாதாரண வீட்டுக் கொசுக்களில் ஓர் இனம் அப்போது நிலவிய சாதக பாதக சூழ்நிலைகளில் பக்குவமடைந்து க்யூலக்ஸ் பிப்பியன்ஸ் (Culex pipiens CX Pipiens) என்ற பொதுப்பெயரில் இரண்டு சூழல் தனித்துவம் மிக்க நோய் பரப்பும் புதியதொரு இனம் பரிணாமமடைந்தது. தரைக்கு மேல் வாழும் பிப்பியன்ஸ் டயாபாஸஸ் (pipiens diapauses) என்ற இனம் குறிப்பாக குளிர்காலத்தில் பறவைகளைக் கடிக்கின்றன.

தரைக்குக் கீழ் வாழும் மற்றொரு இனமான மொலஸ்ட்டஸ் ட்ரைப்ஸ் (molestus thrives) சுரங்கப் பாதைகள், அடித்தளங்கள் மற்றும் மனிதனால் எழுப்பப்பட்ட நிலத்தடி வாழிடப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பாலூட்டிகளைக் கடிக்கின்றன. இரத்தம் குடிக்காமல் இவை முட்டையிடுகின்றன. இந்த இரு இனங்களும் சில இடங்களில் மட்டும் மரபணு மாற்றம் அடைந்துள்ளன. இதனால் இவை இரண்டையும் கணிப்பது கடினம். மேலும் தரைக்குக் கீழ் வாழும் இந்த இனத்தின் தோற்றம் இப்போதும் சர்ச்சைக்குரியது.

என்றாலும் விரைவான, நகரமய வாழ்க்கை தகவமைப்பிற்கு உயிரினங்களுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது பற்றிய நூறாண்டுக்கும் மேற்பட்ட மரபணு மற்றும் சூழல் ஆய்வுகளில் இருந்து இவை வட ஐரோப்பாவில் இப்போது காணப்படும் இனம் உருமாறிய, வட ஆப்பிரிக்க இனங்களுடன் கலந்ததால் தோன்றியுள்ளது என்று நம்பப்படுகிறது. மேலும் தரைக்கு மேல் வாழும் இனத்தில் இருந்தே தரை கீழ் வாழும் இனம் பரிணாமம் அடைந்தது என்ற வாதம் தவறு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உண்மையில் இலண்டன் சுரங்கப் பாதை கொசுக்களின் இனம் மத்திய கிழக்கு பகுதியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உண்டான மனிதர்களைக் கடிக்கும் இனத்தில் இருந்து மாற்றம் அடைந்து உருவாகியிருக்கலாம் என்று அமெரிக்க தேசிய மருத்துவ நூலக அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவை கடிப்பதால் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது.

பொதுவாக மற்ற வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய மனித இரத்தம் அவசியம். ஆனால் இவை அவ்வாறு இல்லை. மாலை வேளையில் மட்டுமே சாதாரண கொசுக்கள் கடிக்கும்போது இவை இரவு பகல் வேறுபாடு இல்லாமல் கடிக்கின்றன. பல பத்தாண்டுகளாக ஐரோப்பாவில் வெஸ்ட்நைல் போன்ற நோய்கள் ஏற்பட இவையே காரணம் என்று நம்பப்படுகிறது.

சுரங்கப் பாதை கொசுக்களின் வேறுபட்ட பண்புகள்

க்யூலெக்ஸ் மொலஸ்ட்டஸ் கொசுக்கள் இப்போதும் நகரப்பகுதிகளில் கழிவுநீர் உள்ள இடங்கள், கட்டிடங்களின் அடித்தளங்கள் போன்றவற்றில் பெரும் எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மனிதர்களைத் தாக்குகின்றன. மற்ற இனங்களுடன் ஒன்றுசேர்ந்து புதிய தலைமுறைகளை உருவாக்கும் இனப் பண்பு (speciation) இவற்றிடம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பருவ காலங்களில் மட்டுமே மற்ற இனத்தைச் சேர்ந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. நம் ஊர்களில் மழைக்காலங்களில் மட்டுமே கொசுக்கள் முட்டையிட்டு பெருகுகின்றன.

மேலைநாடுகளில் கொசுக்களின் இனப்பெருக்கம் குளிர்காலத்தில் நடைபெறுவதில்லை. ஆனால் இந்த கதையின் கதாநாயகனான மொலஸ்ட்டஸ் கொசுக்கள் எல்லா காலங்களிலும் முட்டையிட்டு பெருகுகின்றன. இரயில் சுரங்கப் பாதைகளில் கோடையும் குளிரும் இலையுதிர்காலமும் வசந்தமும் இல்லை. எப்போதும் ஒரே காலநிலை. வெளிச்சம் குறைவு. ஏராளமான மனித இரத்தம். இவற்றின் ஆக்ரோஷம் மிக்க வேதனை தரும் கடியில் இருந்து மனிதர்கள் எங்கே தப்பியோடுவது?

இவை பரிணாமம் அடைந்து உண்டான சுரங்கப் பாதைகளில் பறவைகள் இல்லை. அதனால் பறவைகளைக் கடிப்பதில்லை. இரத்தத்தைக் குடிப்பதில்லை. பூமியின் சில நிலப்பகுதிகளில் தனித்துவமான சூழ்நிலைகளில் ஒற்றைப்பட்டு வாழ நேரிடும் உயிரினங்களின் பரிணாம கதைகளுக்கு வடக்கு கேரளாவில் செங்கல் குன்றுகளில் கிணறுகள், அவற்றை இணைக்கும் நீர் மூலங்களில் மட்டுமே காணப்படும் விசித்திர மீனினங்கள், காலப்பகோஸ் தீவில் பயமில்லாமல் வாழும் குருவிகள், கழுத்து நீண்ட ஆமைகள், பல வகை குகை மீன்கள் போன்ற எடுத்துக்காட்டுகள் உலகம் முழுவதும் உள்ளன.

கடந்த ஒரு நூற்றாண்டில் மொலஸ்ட்டஸ் கொசுக்கள் பரிணாம வேறுபாடு அடைய மனிதனும் ஒரு சாட்சி என்பதால் இவை தெற்கு வடக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியாவில் எல்லா இடங்களிலும் இந்த இந்த இனம் வாழ்கிறது.

போர் முடிந்தது… ஆனால்…

ஜெர்மனியின் ப்ளிட்ஸ் குண்டுத் தாக்குதலில் சகலமும் நஷ்டப்பட்டு இலண்டன் இரயில்வே சுரங்கப் பாதைகள், மற்ற இடங்களில் அபயம் தேடிய மனிதர்களுக்கு அன்று “அமைதியாக இருங்கள். தொடர்ந்து செல்லுங்கள்” (Keep calm and carry on) என்ற ஒரு முழக்கம் நம்பிக்கையளிக்கும் பிரபல வாசகமாக இருந்தது.

பிரிட்டிஷ் தெருக்கள், விமான நிலையங்கள், பரிசுப் பொருட்கள் விற்கும் இடங்கள், சாவி கொத்துகள், காஃபி கோப்பைகள், T ஷர்ட்களில் அச்சிடப்பட்ட இலண்டனின் நம்பிக்கை நட்சத்திரமான அந்த புகழ் பெற்ற முழக்கம் இப்போதும் அங்கு நடைமுறையில் உள்ளது. இரத்தக்களறியான இரண்டாம் உலகப்போர் முடிந்தது. மக்கள் மறைவிடங்களில் இருந்து வெளியில் வந்து வாழத் தொடங்கினர். ஜெர்மன் சாம்ராஜ்யம் வீழ்ந்தது.

ஆனால்… கொசு என்ற பயங்கர உயிரினத்துடன் நாம் நடத்தும் தீவிர போர் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எடி செயிலர் Eddie Seiler), சால் மார்க்கஸ் (Sol Marcus), பெனி பெஞ்சமின் (Bennie Benjamin) ஆகிய இசைக்கலைஞர்கள் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எழுதிய ஒரு பாடல் புகழ் பெற்றது.

“உலகம் முழுவதும் விளக்குகள் மீண்டும் அணைக்கப்படும்போது

சிறுவர்கள் அனைவரும் மீண்டும் வீடு திரும்பிய பிறகு

மேலிருக்கும் வானில் இருந்து மழையோ பனியோ மீண்டும் பெய்யும்போது

ஒரு முத்தம் என்பதற்கு பொருள் விடைபெறுவதில்லை …

மாறாக அது அன்பிற்கு ஹலோ சொல்வதே”

“When the lights go on again all over the world

And the boys are home again all over the world

And rain or snow is all that may fall from the skies above

A kiss won't mean "Goodbye" but "Hello to love”

ஆனால் கொசுக்களின் முத்தம் மரணத்திற்கான முத்தம்! நினைவில் வைத்துக் கொள்வோம்.

** ** **

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/features/about-all-you-need-to-know-about-culex-molestus-and-blitz-1.8839705

&

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC9108678/

&

https://rarehistoricalphotos.com/london-blitz-underground-photos/

சிதம்பரம் இரவிச்சந்திரன்