ஈ… பறக்க முடியாத ஈ! பூச்சியியல் நிபுணர்கள் அரிய வகை ஈக்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஈயின் மாதிரியை லெசோட்டோ (Lesotao) நாட்டின் ஆஃஃப்ரிஸ்க்கி (Afriski) மலைத்தொடரில் கண்டுபிடித்துள்ளனர். இது வளர்ச்சி குன்றிய இறக்கைகளுடன் உள்ள, பறக்க முடியாத ஈயின் மாதிரி. தென்னாப்பிரிக்க ஆய்வாளர்கள் ஜான் மிஜ்லி (John Midgley) மற்றும் பெர்கர்ட் முல்லெர் (Burgert Muller) ஆகியோர் இணைந்து இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஈயின் மாதிரியைத் தேடி ஒரு பயணம்
2021 டிசம்பரில் பூச்சியியலில் ஈக்கள் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளான (dipterologists (entomologists specialising in flies)) மிஜ்லி மற்றும் பெர்கர்ட் ஆகியோர் இதன் மாதிரியைச் சேகரிக்கும் ஆய்வுப் பணிக்காக உலக வரைபடத்தில் மிக உயரமான இடத்தில் தனித்துவமாகக் காணப்படும் லெசோட்டோவிற்குச் சென்றனர். இந்த நாட்டின் மொத்த நிலப்பரப்பும் ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
“லெசோட்டோவின் உயரமான வடகிழக்கு பீட பூமிப் பகுதியை ஆராய்வது சுவாரசியமானது. சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஒரு தீவு நிலப்பரப்பால் துண்டிக்கப்பட்டு தனியாக அமைந்திருந்தால் அங்கு அதிசயிக்கத்தக்க உயிரினங்கள் வாழ்வது இயல்பு. இப்பகுதியும் அது போன்றதே. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே இங்கு ஆய்வுகள் நடந்துள்ளன” என்று மிஜ்லி கூறுகிறார்.முதலில் இந்த ஆய்வுகள் 3050 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஆஃப்ரிஸ்க்கி மலை வாசஸ்தலத்தில் நடந்தன.
துரதிர்ஷ்டவசமாக ஆய்வாளர்கள் தங்கியிருந்த அன்று முழுவதும் பெய்த மழையால் பூச்சிகள் பறக்கும்போது அவற்றைச் சேகரிக்க ஆய்வாளர்கள் பயன்படுத்தும் பொறிகள் செயல்படவில்லை. மழையால் பூச்சிகள் அரிதாகவே பறந்தன. வலிமையான வலைகளைப் பயன்படுத்தி புதர்களில் மறைந்திருக்கும் வித்தியாசமான பூச்சிகளை அவர்கள் சேகரித்தனர்.
இரண்டாவது நாள் சேகரிப்பில் கிடைத்த ஒரு மாதிரியை இத்தகைய உயரமான இடங்களில் வாழக் கூடிய இறக்கையில்லாத அந்திப்பூச்சி (moth) இனத்தைச் சேர்ந்த ஒன்று என்று பெர்கர்ட் கருதினார். அவர் அதை தன் உபகரணத்தால் உறிஞ்சி எடுத்து சேகரிப்பு பாட்டிலில் பத்திரப்படுத்தினார்.
பெண் ஈயினத்தின் மாதிரி கண்டுபிடிப்பு
அன்று மாலை அதை உற்றுநொக்கி ஆராய்ந்தபோது பறத்தலின்போது பின் இறக்கைகளால் உடலை சமநிலைப்படுத்த உதவும் உறுப்புடன் கூடிய (halters) உறுதியான சிறிய இறக்கைகளைக் கொண்ட ஒரு ஈயின் மாதிரியே அது என்பது தெரிய வந்தது. அதன் தலைப்பகுதி ஒரு ஈயின் தலை போலவே தெளிவாக இருந்தது. இந்த ஆய்வுகள் தென்னாப்பிரிக்கப் பகுதியில் உயிர்ப் பன்மயத் தன்மை செழுமையுள்ள மகரந்தச் சேர்க்கை செய்யும் ஈ இனங்களை (Diptera) ஆராயும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
ஆத்தரிமோர்ஃபா லாட்டைபெனிஸ் (Atherimorpha latipennis) என்ற இந்த அதிசய ஈயினத்தைக் கண்டறிய ஆய்வாளர்கள் தங்களுடன் நுண்ணோக்கியை எடுத்துச் சென்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த ஆண் ஈ 1950களில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதன் பெண் இனம் இதுவரை அறியப்படாமலிருந்தது. இப்போதே கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஈயின் குடும்பத்தில் இதற்கு முன் எந்த மாதிரியும் கண்டறியப்படவில்லை. இப்போது சேகரிக்கப்பட்டது பெண் மாதிரியே என்பது மலையடிவாரத்தில் உள்ள பையெட்டமேரிட்ஸ்பெர்க் (Pietermaritzburg) என்ற இடத்தில் இருக்கும் இந்த வகைக் குடும்பத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கான மாதிரிகள் உள்ள க்வாஜூலூ நேட்டல் அருங்காட்சியகத்திற்கு (KwaZulu-Natal Museum) கொண்டுசெல்லப்பட்டது. அங்குள்ள மாதிரிகளுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டது.
புதிய மாதிரி பாதுகாப்புடன் வைக்கப்பட்ட பின் ஆய்வாளர்கள் அடுத்த இரண்டு வாரங்கள் லெசோட்டோ முழுவதும் இருக்கும் பன்மயச் செழுமையுள்ள ஆறு இடங்களுக்குச் சென்று ஆராய்ந்தனர். இந்த இனத்தின் ஆண் பூச்சி பெண் ஈக்கு மாறாக நரம்புகளுடன் கூடிய பெரிய செயல்படும் இறக்கைகளைக் கொண்டுள்ளது. இந்த இறக்கைகள் ஆண் ஈக்களுக்கு விரிவான பரப்பில் பெண் ஈக்களைத் தேட உதவுகின்றன.
பெண் ஈயின் உருவ அமைப்பு மாறுபட்டிருந்தாலும் வாய்ப்பகுதி மற்றும் அதன் உணர்வு நீட்சிகள் முன்பு சேகரிக்கப்பட்ட ஆண் ஈக்களைப் போலவே உள்ளன. இந்த உருவவியல் மாறுபாடுகள் இதன் தனிச்சிறப்புப் பண்புகள் என்று முந்தைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். புதிய மாதிரியை டிஎன்ஏ பகுப்பாய்வு செய்தால் இருக்கும் ஒரே ஒரு மாதிரி சேதமாகி விடும் என்பதால் அவ்வாறு செய்யவில்லை.
உயிரினங்களில் “செயல்திறனுள்ள பறத்தல் என்னும் பண்பில் பரிணாம மாற்றம் கடந்த 3 பில்லியன் ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே நடந்துள்ளது. இதனால் ஒரு இனம் அதன் பறக்கும் திறனை இழப்பது பற்றி ஆராய்வது சுவாரசியமானது. என்றாலும் பறக்க இயலாத இது போன்ற உயிரினங்கள் வியப்புக்குரியவை இல்லை. ஆனால் ஒரு குடும்பத்தில் பறத்தல் திறன் பெண் பாலைச் சேர்ந்த உயிரினத்திற்கு இல்லாமல் போனது இதுவே முதல் முறை” என்று கலிபோர்னியா உணவு மற்றும் வேளாண் பிரிவின் பறக்கும் உயிரினங்கள் பற்றிய மூத்த ஆய்வாளர் மார்ட்டின் ஹாஸர் (Martin Hauser) கூறுகிறார்.
இந்த ஈயினத்தின் வாழ்க்கைச் சுழற்சி பற்றி எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் விஞ்ஞானிகள் பெண் இனத்தின் பறத்தல் திறன் இழக்கப்பட்டது பற்றிய ஊகங்களை மட்டுமே வெளியிட முடியும். “பறத்தலால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக 0.05 செண்டிமீட்டர் நீண்ட கால்களைப் பெற்றுள்ள உயிரினங்கள் நடப்பதை விட பறத்தல் அவற்றுக்கு வேகமாக செயல்களைச் செய்யும் ஆற்றலைத் தருகிறது. எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும் பறத்தல் உதவுகிறது.
ஆனால் பறத்தலில் ஈடுபட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இறக்கைகளை இந்த உயிரினங்கள் வளர்க்க வேண்டும். நடப்பதை விட பறத்தலுக்கு அதிக ஆற்றல் செலவாகிறது. பல்வேறு உயிரினங்களில் பறத்தல் மூலம் கிடைக்கும் ஆற்றல் பயன்பாடு வேறுபடுகிறது” என்று மிஜ்லி கூறுகிறார். “பல பெண் உயிரினங்களுடன் இணை சேர ஒரே ஒரு ஆண் உயிரினம் இருந்தால் போதும்” என்று ஹாஸர் கூறுகிறார்.
“பறக்கும் திறன் பெற்றவை பறவைகள், இரை பிடி உயிரினங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம். இதனால் மலைப்பகுதியில் உயிர் தப்ப ஓடும் இவை பெண் உயிரினமே இல்லாத பகுதியில் சென்று சேர்ந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் காடுகள், குகைகளில் பெண் இனங்கள் இறக்கைகள் இல்லாமல் தோன்றியிருக்கலாம். அங்கு பறத்தல் இவற்றிற்கு உதவுவதில்லை.
பரிணாமம் நாம் கருதுவது போல செயல்படுவதில்லை. விரைவான திடீ ர்மாற்றங்களுடனேயே பரிணாம மாற்றங்கள் தொடங்குகின்றன. அதில் இருந்து இயற்கைத்தேர்வு தோன்றுகிறது. இதனால் பல உயிரினங்களிலும் பறத்தல் பண்பை நம்மால் காண முடிவதில்லை” என்று மிஜ்லி கூறுகிறார். பறத்தலை பூச்சி வகையைச் சேர்ந்த உயிரினங்கள் மட்டும் இழக்கவில்லை.
நெருப்புக் கோழிகள், கிவிகள் மற்றும் ஈமுக்கள் போன்ற தட்டையான மார்பெலும்புகள் உடைய பறக்கும் திறனற்ற (ratites – flightless birds) பறவைகள் டைனசோர்களின் இன அழிவிற்குப் பிறகு தங்கள் வாழிடத்தை நிலப்பரப்பிற்கு விரிவாக்கின.
இவற்றை வேட்டையாட பெரிய எதிரிகள் என்று எந்த உயிரினமும் இல்லை. அதனால் பறத்தல் இந்த உயிரினங்களில் மிகச் சில பயன்களையே தருகிறது.
பெங்குயின்கள் இப்போதும் நீரில் நீந்த மட்டுமே தங்கள் இறக்கைகளைப் பயன்படுத்துகின்றன. பறத்தலை தக்க வைத்துக் கொள்ள உயிரினங்கள் அதிக ஆற்றலை செலவழிக்க வேண்டியுள்ளது. பஃபின் (Puffins) போன்ற பறவைகள் நீரிலும் காற்றிலும் பறக்கக் கூடியவை. என்றாலும் அவை பெங்குயின்கள் போல பறப்பதில் திறமைசாலிகளோ சூப்பர் சுறுசுறுப்பானவையோ இல்லை.
“இவ்வகை உயிரினங்களைப் பற்றி புரிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும். சூழல் மாற்றங்களுக்கேற்ப இவை எவ்வாறு பதில் வினை புரிகின்றன என்பதை எல்லை வரையறுக்கப்பட்ட இது போன்ற உயிரினங்களின் உருவவியல் மூலம் நம்மால் கணிக்க முடியும்” என்று மிஜ்லி கூறுகிறார். காலநிலை மாற்றத்திற்கேற்ப சுலபமாக இடம்பெயர்ந்து செல்லும் இந்த ஈயின் ஆண் உயிரினத்தின் அமைப்புடன் ஒப்பிட்டு பெண் உயிரினத்தின் அமைப்பை கணிக்க முடியும்.
என்றாலும் இது அழியும் ஒரு சூழல் மண்டலத்தைப் பாதுகாக்க உதவாது. “பரிணாமத்தில் பெரிய கேள்விகளை ஆராயும்போது இது போன்ற எடுத்துக்காட்டுகளை நம்மால் புதிதாகக் கண்டுபிடிக்க முடியும். இது பல செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு வீடு போன்றது. ஒவ்வொரு தனிச்செங்கலும் முக்கியமானதில்லை. ஆனால் செங்கற்கள் இல்லாமல் ஒரு வீடு உருவாக முடியாது” என்று ஹாஸர் கூறுகிறார்.
ஒவ்வொரு சூழல் மண்டலத்திலும் உயிரினங்கள் அனைத்தும் முக்கியமானவை. அந்த வகையில் பறக்க முடியாத இந்த பெண் ஈயின் கண்டுபிடிப்பு உயிரினங்கள் பற்றிய மனிதனின் புரிதலில் ஒரு திருப்புமுனை.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்