பகுத்தறிவும் மூடநம்பிக்கையும் ஒரு காந்தத்தின் இருவேறு துருவங்கள் போன்றது; இரண்டும் இணைய வாய்ப்பென்பது இல்லவே இல்லை. பகுத்தறிவு எதையும் கேள்விக்கு உள்ளாக்கும் காலத்திற்கு தகுந்தாற் போல் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். மூடநம்பிக்கையோ கண்மூடித்தனமாக எதையும் நம்பும் அதையே பரப்பவும் செய்யும். பகுத்தறிவாதிகள் ஒரு மனத்தினராக தன்னம்பிக்கையோடு செயல்படுவர். ஆனால் மூடநம்பிக்கை உடையவர்களோ; ஒருபுறம் தாங்கள் நம்புகின்ற ஒரு நம்பிக்கையை கடவுள் நிலைக்கு உயர்த்தி கொண்டாடுவார்கள் மறுபுறம் அதனை துன்புறுத்தி கீழான நிலைக்கு கொண்டு செல்லவும் துணிவர். மூடநம்பிக்கையாளர்களின் இத்தகைய இருநிலை போக்கானது பெண்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. எவ்வாறெனில் பெண்களை சக்தி வடிவமாக கொண்டாடும் கூட்டமே பெண்களுக்கு எதிரான சுரண்டல், குடும்ப வன்முறை, பலாத்காரம் போன்ற கீழான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த இருநிலை மனத்தினரால் பாதிப்புக்குள்ளாவது மனித இனம் மட்டுமின்றின் சில விலங்கினங்களும் தான், அவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் உயிரினங்களில் முதன்மையானவை பாம்புகள்.மனித இனம் பூமியில் தோன்றுவதற்கு முன்னே தோன்றிய "மூத்த குடி" உயிரினம் பாம்புகள். பாம்புகள் இயற்கையை சமநிலையில் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனித இனம் பரிணமித்த போது பாம்பிற்கும் மனிதனுக்குமான மோதல் தொடங்கியிருக்கலாம். ஆதி மனிதர்களின் உள்ளத்தில், பாம்பு கடியால் இறக்கும் சக மனிதர்களைக் கண்டு, பாம்பின் மீது ஒருவித பயமும் வெறுப்புணர்வும் தோன்றியிருக்கக் கூடும். பாம்பின் மீதுள்ள பயத்தின் காரணமாக இயற்கையை வணங்கும் மக்கள் கூட்டம் பாம்புகளை கடவுளாக வணங்கத் தொடங்கியது. இந்திய, மேற்குலக மற்றும் பழங்குடியின கலாச்சாரங்களில் பாம்புகளின் தாக்கம் வெகுவாகக் காணப்படுகிறது. யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்கள் பாம்பினை சாத்தான் எனும் தீமையின் வடிவமாக சித்தரிக்கின்றன. இஸ்லாமிய மார்க்க வழிகாட்டியான ஹதீசில் (திர்மிதி) பாம்புகளை எங்கு கண்டாலும் கொல்லுங்கள் என்று பதியப்பட்டுள்ளது. அதே யூத, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வேதங்கள் மோசஸ் (மூஸா) அவர்கள் அற்புதம் நடத்திய ஒரு கருவியாக பாம்புகள் பயன்பட்டதாக உயர்த்தி கூறுகின்றன.
இந்தியா என்றாலே ஒரு காலத்தில் மேலை நாட்டினரின் பார்வையில், பாம்புகளும் பாம்பாட்டிகளும் நிறைந்த ஏழை நாடு என்ற மதிப்பீடே இருந்தது. பெரும்பான்மை இந்தியர்கள் பாம்புகளை தெய்வமாக வழிபாடும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் காணப்படும் ஆதி பழங்குடி வாழிபாடுகளில் தொடங்கி முக்கிய வேத இதிகாசங்கள் மற்றும் பவுத்த மரபுகள் அனைத்திலும் பாம்பு வழிபாடு குறித்த குறிப்புகள் கணக் கிடைக்கின்றன. இந்தியர்களால் வணங்கப்படும் பெரும் தெய்வங்களான சிவன் தன்னுடைய கழுத்தில் பாம்பினை அணிந்து காட்சியளிக்கிறார், விஷ்ணுவோ தன்னுடைய படுக்கையாகவே பாம்பினை கொண்டுள்ளார். தவிர நாகர் சிலை வழிபாடு மற்றும் புற்று கோவில் வழிபாடு என்பது தென்னிந்தியாவில் பரவலாக காணப்படும் ஒரு வழிபாட்டு நம்பிக்கையாகும். திருமண தோஷம் நீங்குதல் மற்றும் குழந்தை வரம் வேண்டி நாகர் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. வாசுகி, ஆதிசேஷன், காளிங்கன், மானசா, ராகு, கேது போன்ற பாம்புகள் இந்திய ஆன்மீக வெளியில் முக்கிய பாத்திரங்களாக விளங்குகின்றன. குணமடைதல், ஞானம் மற்றும் யோகா குண்டலினி சக்தியின் சின்னமாக பாம்புகள் உருவகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு சமூகத்தில் உயர்வான இடத்தில் பாம்புகளை வைத்து கொண்டாடும் "நம்பிக்கையாளர்கள்" பலர், பாம்புகளைக் குறித்த பல பொய்யான அறிவியல் ஆதாரமற்ற புரளிகளை பரப்பி, அதன்காரணமாக பாம்புகளைக் கண்டால் அடித்து கொல்லவும் செய்கின்றனர்.
இந்திய சமூகப் பரப்பில் பாம்புகளைக் குறித்த மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகள் அறிவியல் சாராத தகவல்கள் அதிகம். பாம்புகளை குறித்த மூட நம்பிக்கைகளில் முக்கியமானது மந்திரித்தல் மூலம் பாம்பு கடி விஷத்தை முறிக்க முடியும் என்பதாகும், ஆனால் இது ஒரு தவறான நம்பிக்கை. பாம்புக்கடிக்கு சரியான முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு உடனடியாக மருத்துவரை அணுகி பாம்புக்கடிக்கு உரிய எதிர்ப்பு மருந்தினை எடுத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். பாம்புகள் குறித்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பரப்பப்படும் மூடநம்பிக்கையானது பாம்புகள் பழிவாங்கும் தன்மை கொண்டவை என்பதாகும். ஆனால் பாம்புகளின் மூளை-நரம்பு மண்டலமானது மனிதர்களையோ அவர்களின் செயல்களையோ நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை என்பதே உண்மை. இதன்மூலம் பாம்பு ஜோடிகளில் ஒன்றை கொன்றால் மற்றோரு பாம்பு துணையானது தேடிவந்து பழிவாங்கும் என்பது அப்பட்டமான பொய் என அறிவியல் கூறுகிறது. சில பாம்புகள் (தண்ணீர் பாம்பு அல்லது மண்ணுளி பாம்பு) மனித உடலில் பட்டால் வெண்குஷ்டம் போன்ற சரும நோய் ஏற்படும் என்பது அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கையாகும். நாகப்பாம்புகள் யாரையும் கடிக்காமல் தன்னுடைய விஷத்தை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் நாளடைவில் அந்த விஷமானது நாகமணியாக மாறும் என்பது கடைந்தெடுத்த மூடநம்பிக்கை. ஏனெனில் பாம்பின் விஷம் என்பது மனித உடலில் சுரக்கும் எச்சில் மற்றும் இந்திரியம் போன்ற ஒரு திரவ வடிவ சுரப்பே ஆகும்.
பாம்புகளை குறித்த பழமையான மூடநம்பிக்கை, பாம்புகள் (மகுடி) இசைக்கு மயங்கும் தன்மை கொண்டவை என்பது. பாம்புகளால் பெரிய சத்தம், வெப்பம் மற்றும் அதிர்வினை மட்டுமே உணர்ந்து கொள்ள இயலும். எனவே பாம்புகள் தலை அசைத்து சீறுவது மகுடி ஓசைக்காக அல்லாமல், அதனை இசைப்பவரின் கைகளின் அசைவிற்கே ஆடுகின்றன என்பதே உண்மை. பாம்புகள் பால் குடிக்கும் என்று கருதி மக்கள் புற்று கோவிலில் பால் ஊற்றுவார்கள் ஆனால் பாம்புகள் பால் குடிக்கும் வழக்கம் கொண்ட உயிரினங்கள் இல்லை. இவ்வாறு பாம்புகளைக் குறித்த பல்வேறு மூடநம்பிக்கை தகவல்களானது அறிவியல் தொழிநுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்திலும் கூட மக்கள் மத்தியில் உலவுகின்றது.
பாம்புகளை இறைவன் என்கிற நிலைக்கு உயர்த்தும் சமூகமானது, பாம்புகளைக் கண்டால் கல்லால் அடித்து துன்புறுத்தவும் கொல்லவும் முற்படுகின்றது. இத்தகைய முரணான செயல்பாட்டிற்கான காரணங்களாவன; அதீத மூடநம்பிக்கை மற்றும் போதிய அறிவியல் விழிப்புணர்வு இல்லாததேயாகும். உண்மையில் பாம்புகள் பயந்த சுவாபம் கொண்ட உயிரினங்களாகும். பாம்பினக்களில் மிகக் குறைவானவை மட்டுமே விஷம் கொண்டவையாக கண்டறியப்பட்டுள்ளன. இவை இரையை வேட்டையாடுவதற்கும் தற்பாதுகாப்பிற்காக மட்டுமே மற்ற விலங்கினங்களையோ மனிதர்களையோ தாக்குகின்றது. உயிர் மண்டலத்தில் கொல்லுதல் மற்றும் கொல்லப்படுதல் என்ற உயிர்சங்கிலியின் முக்கிய கண்ணியாக பாம்புகள் விளங்குகின்றன. பாம்புகளிலிருந்து எடுக்கப்படும் விஷமானது புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது. பாம்புகளானது; பயம், மருந்து தயாரிப்பு மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பிற்காக தொடர்ச்சியாக கொல்லப்படுகின்றது. இவற்றில் பயத்தின் காரணமாக பாம்புகள் கொல்லப்படுவதை போதிய விழிப்புணர்வின் மூலமே தடுக்கமுடியும். இறுதியாக, பாம்புகளை தெய்வநிலைக்கு உயர்தவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் அவற்றை தேவையின்றி கொல்லாமல் இருப்பது உயிர்சூழலை சமநிலையில் வைப்பதற்கும் பூமியில் மனித இனம் நிலைபெற்று வாழ்வதற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதே பகுத்தறிவாதிகளின் வேண்டுகோள்.
(16 சூலை - உலக பாம்புகள் தினம்)
- Dr. ரமேஷ் தங்கமணி, விஞ்ஞானி, ஜி.எஸ். கில் ஆய்வு நிறுவனம், வேளச்சேரி - 42