பெண்கள் சிசுக்கொலை என்ற வடிவத்திற்குப் பதில், கருவிலேயே பெண்களைக் கொல்வது என்ற நிலை இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 150 லட்சம் முதல் 200 லட்சம் வரை கருக்கலைப்பு நடப்பதாகவும், அதில் 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை பெண் குழந்தைகள் கருவிலேயே கண்டறியப்பட்டு அழிக்கப்படுவதாக இந்திய மருத்துவக்குழுமம் தெரிவிக்கின்றது. ஒட்டு மொத்தமாக இந்தியாவைப் பொருத்தவரை 1991ம் ஆண்டு ஆறுவயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் 945ல் இருந்து 2001ல் 927 ஆகக் குறைந்து விட்டது.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், இமாச்சல பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை விகிதம் 900க்கும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் 1991ல் 948 ஆக இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2001ல் 942 ஆக குறைந்துள்ளது. மதுரை, தேனி, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 6 வயதிற்குட் பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 900க்கும் குறைவாகவே உள்ளது.
இயற்கையிலேயே பிறக்கும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதாச்சாரம் 952 ஆக வேண்டும். ஆனால், தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2007ம் ஆண்டுவரை தர்மபுரி, ஈரோடு, சேலம், பெரம்பலூர், திருவள்றுவர், விருதுநகர், திருச்சி, மதுரை, தேனி, காஞ்சிபுரம், கடலூர், நாமக்கல், திருவண்ணாமலை, தூத்துக்குடி, சிவகங்கை, சென்னை, நாகபட்டினம், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய 19 மாவட்டங்களில் பெண்குழந்தைகள் கருவிலேயே கண்டறியப்பட்டு அழிக்கப்படுகின்றன. சென்னை, மதுரை ஆகிய மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஆறு ஆண்டுகளாக பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.
பாலினத்தைத் தெரிந்து கொள்ளும் சோதனைக் கூடங்கள் (ஸ்கேன் சென்டர்கள்) தமிழகம் முழுவதும் 2008ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி அரசு மற்றும் தனியார் மொத்தம் 3522 உள்ளன. அதில் தனியார்வசம் மட்டும் 2979 ஸ்கேன் சென்டர்கள் உள்ளன. 8 வாரத்தில் பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்ற பாலினத் தெரிவைக் கண்டறியும் விஞ்ஞானம் அதிவேகமாக வளர்ந்து வருவது பெண்குழந்தைகளை கருவிலேயே அழிப்பதற்கு உதவியாக உள்ளது. மாவட்ட அளவில் இந்த ஸ்கேன் சென்டர்களைக் கண்காணிக்க குழுக்கள் அமைத்தாலும், தனியார் ஸ்கேன் சென்டர்களில் பாலினத் தெரிவு என்ற பெயரில் நடக்கும் கருக்கோலைகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லமுடியும்.
உதாரணத்திற்கு 2001ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டியில் 803 ஆக இருந்த பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் 2006 ம் ஆண்டு 771 ஆக குறைந்துள்ளது. அதே போல் கீழவளவில் கடந்த 2005ம் ஆண்டுமு 932 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2006ம் ஆண்டு 797 ஆக குறைந்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு எம்.சுப்புலாபுரத்தில் 1007 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2006ம் ஆண்டு 897 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு 917 ஆக இருந்த பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் 911 ஆக குறைந்துள்ளது. கருக்கொலை என்ற பயங்கரம் இன்னும் குற்றமாக பார்க்கப்படவில்லை. இதுவரை கருக்கொலைக்காக யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், பெண் குழந்தைகள் பிறப்புவிகிதம் மட்டும் குறைந்து வருவது குறைந்தபாடில்லை.
கொள்ளிப்போட ஆண்வாரிசு வேண்டும் பெயர் சொல்ல இவன் ஒரு பிள்ளை போதும் என்ற பேதமை நிறைந்த பிதற்றதல்கள் சமூகத்தில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கையை கருவறுத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்படி பெண்குழந்தைகளின் எண்ணிக்கை குறைய, குறைய பெண்கள் மீதான குற்றங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயரும் என்று மனநல ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மகளிருக்கான இடஒதுக்கிடு மசோதாவிற்கு குரல் கொடுக்கும் நாம் கருக்கொலைக்கு எதிரான குரலையும் இணைப்போம்.