(சென்ற இதழ்த் தொடர்ச்சி)

ஆட்சிக் கவிழ்ப்பு:

1958ஆம் ஆண்டில் இராக்கில் ஏற்பட்ட தேசியப் புரட்சிக்கு ஆரம்பத்தில் பாத் கட்சி உள்ளிட்ட பல்வேறு தேசியக் குழுக்களின் ஐக்கிய முன்னணி ஆதரவு அளித்தது. இந்த ஒன்றுபட்ட முன்னணி காலப்போக்கில் பிளவுற்றது. காசிம் பதவிக் காலத்தில், காமல் அப்தெல் நாசர் தலைமையிலான ஐக்கிய அரபுக் குடியரசில் இராக் சேர வேண்டுமா என்பது குறித்துப் பெரிய விவாதம் மூண்டது. நாசரின் பேரரபியக் கொள்கைகளை ஆதரித்து ஐக்கிய அரபுக் குடியரசுடன் இராக்கை இணைக்க விரும்பினார் ஆரிஃப். அதற்கு மாறாக காசிமோ பேரரபியத்தை ஆதரிக்காமல் இராக்கையே முன்னிலைப்படுத்தும் வதானியக் கொள்கையில் உறுதி கொண்டு, சமயச் சார்பின்மையையே உயர்த்திப் பிடித்தார். இராக்கின் கம்யூனிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் அவருக்கு பக்கபலமாக இருந்தனர்.

இராணுவ அதிகாரிகளில் பெரும்பகுதியினர் வடமேற்கு நகரங்களிலிருந்து சன்னி மரபில் வந்தவர்கள். பேரரபியம் மீதான அவர்களது ஆர்வத்தை காசிம் பகிர்ந்து கொள்ளவில்லை: அவர் தென்கிழக்கு இராக்கில் சன்னி-ஷியா பெற்றோரின் கலப்பு மரபில் வந்தவர். ஆகவே, அவரால் அதிகாரத்தில் நீடிக்க முடியுமா என்பது கம்யூனிஸ்டுகளுக்கும் பேரரபியர்களுக்கும் இடையே இணக்கம் ஏற்படுத்த முடியுமா என்பதைப் பொறுத்ததாயிற்று. தனது பதவிக் காலத்தில் காசிம் இராணுவத்தில் வளர்ந்து வந்த பேரரபியப் போக்கை மட்டுப்படுத்த முயன்றார். அவரால் இறுதி வரை இராணுவத்தின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. குர்திய இன மக்களுடன் இணக்கமான உறவைப் பேணவே காசிம் இறுதி வரை போராடினார்.

எகிப்திய-சிரிய ஒன்றியத்தில் சேருவது குறித்து காசிம், ஆரிஃபிற்கிடையே ஒருவகை அதிகாரப் போராட்டம் உருவானது. ஆரிஃப்பின் நாசரிய, பேரரபியச் சார்பை பாத் கட்சி ஆதரித்தது, அதே நேரத்தில் காசிமின் கொள்கைகளுக்கும் ஐக்கிய எதிர்ப்பு நிலைக்கும் இராக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தந்தது. ஐக்கிய முன்னணியிலிருந்து பாத் கட்சி உள்ளிட்ட பேரரபிய ஆதரவாளர்கள் வெளியேறினர்.

பல மூத்த அதிகாரிகள் துணைப் பிரதமரிடமிருந்தே நேரடியாக அதிகாரத்தைப் பெற்றனர். பொதுச் சொற்பொழிவுகளில் பங்கேற்பதன் மூலம் ஆரிஃப் புதியதொரு செல்வாக்கைப் பெற்றார். ஐக்கிய அரேபியக் குடியரசுடன் இணைவதை வற்புறுத்தினார். காசிமைக் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆரிஃபின் சீர்குலைக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மட்டுப்படுத்த காசிம், ஆரிஃபை துணைத் தளபதி பதவியிலிருந்து நீக்கினார். நவம்பர் 5ஆம் தேதி ஆரிஃப், காசிமை படுகொலை செய்து ஆட்சியை அகற்ற முயற்சித்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்டார். ஆரிஃப் தேசத் துரோகத்திற்காக விசாரணை செய்யப்பட்டு 1959 ஜனவரியில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் 1962 டிசம்பரில் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. ஆரிஃப்பின் அச்சுறுத்தல் நீங்கிய பின் 1941இல் இராக்கிலிருந்து தப்பி ஓடிய முன்னாள் பிரதம மந்திரி நாஜி ஆதரவாளர் ரஷீத் அலி வடிவத்தில் மற்றொரு அச்சுறுத்தல் வந்தது. அவர் காசிமிற்கு எதிராக மேற்கொண்ட சதி முயற்சிகளும் இறுதியில் முறியடிக்கப்பட்டன.

காசிமின் அமைச்சரவையின் 16 உறுப்பினர்களில் 12 பேர் பேரரபியத்தில் நம்பிக்கை கொண்ட பாத் கட்சி உறுப்பினர்கள். காமல் அப்தெல் நாசரின் ஐக்கிய அரபுக் குடியரசில் சேர காசிம் மறுத்ததால் பாத் கட்சி அவருக்கு எதிராகத் திரும்பியது. அரசு இயந்திரத்தில் தனது நிலைப்பாட்டை வலுப்படுத்திக் கொள்ள, காசிம் இராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (ஐ.சி.பி.) ஒரு கூட்டணியை உருவாக்கினார், இந்தக் கூட்டணி பேரரபியத்தின் எந்தவொரு கருத்தையும் ஏற்கவில்லை. அந்த ஆண்டின் பிற்பகுதியில், பாத் கட்சியின் தலைமை காசிமைப் படுகொலை செய்வதற்கான திட்டங்களை வகுத்தது. இந்த நடவடிக்கையில் சதாம் உசேன் ஒரு முன்னணி உறுப்பினராக இருந்தார்.

1959 அக்டோபர் 7ஆம் நாள் அல்-ரஷீத் தெருவில் காசிம் மீது திடீர்த் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர்: ஒரு நபர் காரின் பின்புறத்தில் அமர்ந்திருந்தவர்களைக் கொல்ல வேண்டும், மீதமுள்ளவர்கள் முன்னால் இருப்பவர்களைக் கொல்லத் திட்டமிடப்பட்டது. பதுங்கியிருந்த போது சதாம் முன்கூட்டியே சுடத் தொடங்கியதால் திட்டம் தோல்வியடைந்தது. காசிமின் ஓட்டுநர் கொல்லப்பட்டார், காசிம் கையிலும் தோளிலும் காயமுற்றார். கொலையாளிகள் அவரைக் கொன்று விட்டதாக நம்பி விரைவில் தங்கள் தலைமையகத்திற்குத் தப்பிச் சென்றனர், ஆனால் காசிம் உயிர் தப்பினார்.

கம்யூனிஸ்டுகளுடனான காசிமின் நெருக்கத்தின் காரணமாக வடக்கு இராக் நகரமான மொசூலில் இராணுவப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அரபு தேசியவாதிகள் தலைமையில் ஒரு எதிர்க் கிளர்ச்சி ஏற்பட்டது. அதன் சதித் திட்டத்தைத் தணிக்கும் முயற்சியாக, காசிம் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுடன் 1959 மார்ச் 6ஆம் நாள் மொசூலில் ஓர் அமைதிப் பேரணி நடத்த ஊக்குவித்தார். சுமார் 250,000 கம்யூனிஸ்டுகளும், அமைதிப் போராளிகளும் அன்றைய தினம் மொசூலின் தெருக்களில் அணிதிரண்டனர், அன்றைய தினம் அமைதியாய்ப் பேரணி நடந்திருந்தாலும் அடுத்த நாள் கம்யூனிஸ்டுகளுக்கும் அரபுத் தேசியவாதிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. வளர்ந்து வரும் கம்யூனிச அலையைத் தடுத்து நிறுத்த ஒரே வழி காசிமைப் படுகொலை செய்வதுதான் என்ற முடிவுக்கு பாத் கட்சியினர் வந்தனர்.

கம்யூனிசத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கு நாடு முழுவதும் உணரப்பட்டது. மொசூல் கிளர்ச்சியை அடுத்து கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு ஆயுதப்படைகளில் களையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. பல கம்யூனிச ஆதரவாளர்கள் அமைச்சரவையில் பதவிகளைப் பெற்றதால் இராக் அமைச்சரவை இடது சார்பு பெற்றது. கம்யூனிஸ்டுகளால் கிர்குக்கில் ஜூலை 14ஆம் நாள் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். . அதில் குர்துகளுக்கும் (அந்த நேரத்தில் ஐ.சி.பி உடன் தொடர்புடையவர்கள்), இராக்-துர்க்மென் ஆகியோருக்கும் இடையில் பரவலான இரத்தக்களரி ஏற்பட்டது, இதனால் 31 முதல் 79 பேர் வரை இறந்தனர். இது பெரும்பாலும் முன்பே நிலவிய இனப் பதட்டங்களின் விளைவாக இருந்தபோதிலும், கிர்குக் "படுகொலை" இராக்கிய கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகப், பயன்படுத்தப்பட்டதால் காசிமிற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே இணக்கமின்மை ஏற்பட்டது.

இராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியுடனான காசிம் ஆட்சியின் உறவு எப்போதும் எளிதானதாக இருக்கவில்லை. காசிமின் ஆட்சி மாற்றத்தின் இராணுவத் தன்மை, அரபு தேசியவாதிகளை அவரது அமைச்சரவையில் சேர்ப்பது, தேர்தலில் போட்டியிடுவதில் விருப்பமின்மை ஆகியவற்றை கம்யூனிஸ்டுக் கட்சி முழுமையாக ஆதரிக்கவில்லை. ஜூலை புரட்சிக்குப் பின்னர் காசிம் தலைமையிலான புரட்சிகர ஆட்சியைக் காக்க கம்யூனிட் கட்சி கட்டமைத்த மக்கள் இயக்கம் முக்கியப் பங்காற்றியது. இருப்பினும், பல குறிக்கோள்களைப் பகிர்ந்து கொண்டாலும், காசிம் ஐ. சி. பியின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த முயன்றார். மேலும் அதைக் கலைக்கவும் உத்தரவு பிறப்பித்தார். தடையை மீறி, கட்சி பாக்தாத்தில் பெரும் செல்வாக்கைப் பெற்றது. அதனால் காசிம் கம்யூனிஸ்டு கட்சியை "கணக்கிற் கொள்ள வேண்டிய சக்தி" என்று மறுபரிசீலனை செய்யும் நிலை ஏற்பட்டது.

இராக்கிய அரபுத் தேசியவாதிகளை திருப்திப்படுத்த காசிம் மேற்கொண்ட முயற்சிகள் அவருக்கு எதிராகத் திரும்பி, இறுதியில் அவரை அழிப்பதற்கே பங்களிப்புச் செய்தன. உதாரணமாக, காசிம், தடுப்புக் காவலில் இருந்த சாலிஹ் மஹ்தி அம்மாஷை விடுவித்து அவரை இராக் இராணுவத்தில் மீண்டும் பணியில் அமர்த்தினார். இதனால் பாத் கட்சியின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்கு இராணுவத் தொடர்பாளராக அம்மாஷ் செயல்பட வழியமைந்தது.

மேலும், குர்துகள் மீதான வெளிப்புற நட்பு நிலைப்பாடு இருந்த போதிலும், காசிமால் இராக்கிற்குள் குர்திஸ்தானின் தன்னாட்சி அதிகாரத்தை வழங்க முடியவில்லை. இது 1961 முதல் இராக்-குர்திஷ் போர் வெடித்ததற்கும் குர்திஷ் ஜனநாயகக் கட்சிக்கும் (கேடிபி) காசிமின் பாத்திஸ்டுக்கும் இடையிலான இரகசியத் தொடர்புகளுக்கும் வழிவகுத்தது. 1962, 1963ஆம் ஆண்டுகளில். பாத் கட்சியினர் ஆட்சிக் கவிழ்ப்பு செய்தால் காசிமுக்கு உதவ மாட்டோம் என்று பேரரபிய சித்தாந்தத்தின் மீதான நீண்டகால விரோதப் போக்கை புறக்கணித்து குர்திஸ் ஜனநாயகக் கட்சி உறுதியளித்தது. காசிம், இராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, குர்திஸ் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட வெற்றிடத்தை 1963 பாத் கட்சியின் ஒரு "சிறிய" குழு பயன்படுத்திக் கொண்டது.

இராக்கில் புரட்சியின் வெற்றியை மேற்கத்திய நாடுகள் மிகுந்த பீதியுடன் பார்த்தன. பனிப்போர்க் காலத்திய மத்திய கிழக்கு சோவியத் எதிர்ப்பு இராணுவக் கூட்டமைப்பின் மையமான பாக்தாத் ஒப்பந்தம் இராக் இல்லாமல் அர்த்தமற்றதாக இருந்தது. ஐக்கிய அமெரிக்க அரசு மற்றும் பிரிட்டிஷ் அரசைப் பொறுத்த வரை, முடியாட்சிக் கவிழ்ப்பு ஒரு பெருந்துன்பமாக இருந்தது. ஆங்கிலேயர்கள் திகைத்துப் போனாலும், தங்கள் இழப்பைக் குறைத்து, காசிமுடன் ஒரு புதிய உறவை உருவாக்குவதில் உறுதியாக இருந்தனர். இராக் பெட்ரோலிய நிறுவனத்துடனான அவர்களின் பொருளாதார நலன்கள் பராமரிக்கப்படும் வரை, அவருடைய ஆட்சியை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தனர்.

இராணுவப் பிரமுகர் அஹ்மத் ஹசன் அல்-பக்ர், காசிமின் "இராக்கை முதன்மைப்படுத்தும்" பாணியிலான ஆட்சியைக் கண்டு சோர்வடைந்து அதிருப்தி அடைந்த சன்னி பழங்குடியின ஷேக்குகள், நடுத்தர வர்க்க இராக்கியர்கள் மற்றும் பேரரபியர்களுடன் கூட்டணி அமைத்தார். பிப்ரவரி 1963 "ரமலான் புரட்சி" என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சதியால் காசிமின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. காசிமிற்கு கம்யூனிஸ்டுகளின் ஆதரவு இருந்த போதிலும், உள்நாட்டுப் போரைத் தவிர்ப்பதற்காகக் கம்யூனிஸ்டுகளை ஆயுதம் ஏந்த வேண்டாம் என்று அவர் முடிவு செய்ததால், இரு தரப்புகளிக்கிடையே நிலவிய சமமற்ற ஆயுத வலிமையால் காசிம் வானொலி நிலையத்தில் தடுக்கப்பட்டுச் சிறைபிடிக்கப்பட்டார், ஜூலை 14 புரட்சி உண்மையில் கர்னல் அப்துல் சலாம் ஆரிப்பின் திட்டம்தான் என்று ஒப்புக்கொள்ள காசிமுக்கு உத்தரவிடப்பட்டது. காசிம் அதற்கு மறுத்துவிட்டார், பாத் கட்சியினர் அவரை நாடு கடத்துவதற்கும் மறுத்தனர். தலைவர் காசிமைத் தூக்கிலிட்டு, அடையாளம் இல்லாக் கல்லறையில் அடக்கம் செய்தனர். இந்த சதி கணிசமான சிஐஏ ஆதரவுடனே மேற்கொள்ளப்பட்டது. பாத் கட்சி உறுப்பினராக இருந்த சதாம் ஹுசைன் சதித்திட்டத்தில் நெருக்கமாக ஈடுபட்டார்.

இதற்கு முன்னரே காசிமைக் கொலை செய்ய சிஐஏ தீவிரமான சதி வேலைகளில் ஈடுபட்டது. ஒரு முறை காசிமைக் கொல்ல, விசங்கொண்ட கைக்குட்டையை அனுப்பியது, ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்தது.

இராக் கம்யூனிஸ்ட் கட்சியை இராக் அரசியலிலிருந்து அகற்றுவதற்கான விரிவான திட்டத்தை செயல்படுத்த அமெரிக்கா முன்பே தயாராய் இருந்தது. அதன் படி காசிம் ஆட்சியின் ஆதரவாளர்கள், கம்யூனிஸ்டுகள் என 5,000 பேர் வேட்டையாடப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். அவர்களில் மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்குவர். அவர்களில் கர்ப்பிணிப் பெண்களும் வயதான ஆண்களும் இருந்தனர், அவர்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு முன்னால் சித்திரவதை செய்யப்பட்டனர். பாக்தாத் மற்றும் இலண்டனில் பிரிட்டிஷ் அதிகாரிகள் இப்படுகொலைகளை அறிந்திருந்தனர் புரட்சியின் முதல் இரண்டு நாட்களில் இராக்கிய வானொலி அறிக்கைகளைக் கண்காணித்து வந்தனர். புதிய ஆட்சியின் அறிவிப்புகள், ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரையும் அழித்தொழித்துத் துடைத்தெறிய மக்களை அழைத்தன. ‘குற்றவாளிகளை அழிக்கவும்’, ‘அவர்கள் அனைவரையும் கொல்லவும், குற்றவாளிகள் அனைவரையும் கொல்லவும்’ என மக்களிடம் வலியுறுத்தின. இவை யாவும் பல முறை மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டது.

இராக்கின் எண்ணெய் வளத்தை நாட்டுடைமையாக்க காசிம் மேற்கொண்ட முயற்சிகளே அவரை அழிப்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்தன. 1961ஆம் ஆண்டில் காசிம் இராக்கிலிருந்த பிரிட்டிஷ் அமெரிக்க எண்ணெய் ஏற்றுமதியிலிருந்து இராக் அரசிற்கு 50 சதவீதம் பங்கு கோரினார். அதற்கு அவர்கள் உடன்படவில்லை. நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக விலை நிர்ணயிப்பதாகவும் புகார் தெரிவித்தார். அந்த நிறுவனத்தின் 99.5 சதவீதப் பங்குகளை நாட்டுடைமையாக்கவும் ஒரு புதிய இராக்கிய தேசிய எண்ணெய்க் கழகத்தை அமைப்பதற்கான வரைவுச் சட்டம் அக்டோபர் 1962 இல் வெளியிட்டார். ஆனால் பிப்ரவரி 1963இல் காசிம் கொலை செய்யப்பட்டதால் அதை நடைமுறைப்படுத்த இயலவில்லை.

காசிமைக் கொலை செய்த பாத் கட்சியின் ஆட்சி அந்த நவம்பர் வரை நீடித்தது, அதை சதியால் வீழ்த்தி நாசரிய சார்பு இராணுவ அதிகாரிகளின் குழு ஆட்சிக்கு வந்தது. இன்னொரு ஆட்சிக்கலைப்புச் சதியால் பாத் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 2003இல் அமெரிக்காவின் சதியால் சதாம் ஹுசைன் கொல்லப்படும் வரை பாத் கட்சியே ஆட்சியில் நீடித்தது. அன்று ஆரம்பமான அமெரிக்க ஆக்கிரமிப்பு இன்றும் நீடிக்கிறது. இன்றைய இராக்கின் சூழலிலும் அமெரிக்கத் தலையீடு, அமெரிக்காவை எதிர்த்து ஈரானின் தலையீடு, நிலையற்ற சமூகப் பொருளாதார நிலை, போராபத்து என இராக்கிய தேசியத்தின் இறையாண்மை தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறது. இராக்கை முன்னிலைப்படுத்தும் புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிமின் வழியில் மீண்டும் ஒரு தேசிய விடுதலைக்கான போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை உள்ளது. காசிமின் ஆட்சி நான்கு ஆண்டுகள், ஆறு மாதங்கள் மட்டுமே நீடித்த போதிலும் அவரது ஆட்சி சமூக சீர்திருத்த நடைமுறைகளால், சமூக நீதிக்கான ஒரு முன்னுதாரண ஆட்சியாகத் திகழ்ந்தது போற்றுதலுக்குரியது.

இராக்கை நாசரிய ஆதிக்கத்திலிருந்தும் அமெரிக்க ஆதிக்கத்திலிருந்தும் விடுவித்த காசிம் இராக்கில் நாட்டுப்பற்றின் தேச அடையாளமாக போற்றப்படுகிறார். மதச்சார்பற்ற இடதுசாரி இராக்கியர்களிடையே காசிமின் நீடித்த புகழ், என்றென்றும் தொடர்கிறது.

இராக்கின் கடந்த கால வரலாறு சதாம் மற்றும் இராக் பாத்திஸ்டுகளின் நீண்டகால ஆட்சியால் மூழ்கடிக்கப்பட்டிருந்தாலும், நவீன இராக்கில் காசிமின் வரலாற்றை இன்றைய தலைமுறையினருக்கு நினைவூட்டும் வகையில், ஃபிர்டஸ் சதுக்கத்தில், இராக் கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டுதோறும் பேரணிகள் நடத்துகிறது, அங்கு ஜூலை 14 புரட்சியின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக ஆதரவாளர்கள் காசிம் ஆட்சியின் கொடியையும் ஆட்சியாளரின் பெரிய உருவப் படங்களையும் கையிலேந்திச் செல்கின்றனர். காசிம் யார், அவரது புரட்சி இராக்கை எவ்வாறு மாற்றியது? இன்றைய சூழலில் ஜூலை 14 புரட்சியிலிருந்து என்ன படிப்பினைகளை எடுக்க முடியும்? என்பதை இன்றையத் தலைமையினருக்குக் கொண்டுசேர்க்கும் வகையில் நிகழ்வுகளை ஒருங்கமைக்கிறது.

காசிமின் கல்லறை 2005இல் கண்டுபிடிக்கப்பட்ட போது, நீண்டகாலமாக மறக்கடிக்கப்பட்ட நினைவுகள் முன்னுக்கு வந்தன. இராக்கிய சிற்பி கலீத் ரஹால் வடிவமைத்த காசிமின் சிலை, இப்போது பாக்தாத்தில் அல்-ரஷீத் தெருவில். நினைவுச் சின்னமாக உயர்ந்து நிற்கிறது. அந்த நினைவுச் சின்னத்தை அர்ப்பணித்த நாளில் ஃபதேல் முகமது அல்-பயாட்டி அதை “புகழ்பெற்ற ஜூலை14 புரட்சியின் நினைவுச் சின்னம்” எனப் போற்றினார்.

“இது அழியாத ஜூலை 14
பெருமிதமிக்க சிப்பாயின்
உயர்ந்த, திகைப்பூட்டும் பாய்ச்சல்,
மீட்பரின் வலிமையாக உருவெடுத்தது
மக்களுக்காகக் கிளர்ந்தெழுந்த புரட்சித் தலைவர் 
முறுக்கேறிய தசைகளுடன் அவரது, கைமுட்டி
எல்லா திசைகளிலுமுள்ள சிறைச்சாலைக்
கம்பிகளையும் உடைத்தெறிகிறது...
ஒரு வெடிப்பாக மக்களிடமிருந்து
வெடித்து வந்தது அவரது உடல்
துப்பாக்கியைப் பிடிக்கும் கை
மக்களின் கைகளால் வலுப்பெற்றது.
புரட்சியின் விடியல் ஆண்டாண்டு
துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து
இராக் மக்களின் சக்தியை
ஆக்க ஆற்றலாகப் பெயர்த்தது
இருளுக்குப் பிறகு ஒளியாக மேலே ஒரு வட்டாக சூரியன், .
இது இராக்கின் பழஞ் சின்னங்களில் ஒன்று.
அங்கே [பண்டைய மெசொப்பொத்தேமியாவில்]
உலகை ஒளிரச் செய்ய சூரியன் முதலில் உதித்தது
இங்கே புரட்சியின் சூரியன் முதலில் உதித்தது,
அதன் அச்சமற்ற சிப்பாயின் [அப்துல் கரீம் காசிம்]
தலைமையில்.
சிப்பாய் அவரது காலால்
தீமையைக் குறிக்கும் கவசத்தை மிதித்தார்.
அந்தக் கேடயத்தின் பின்தான்
கொடுங்கோன்மை, ஊழலின் அனைத்து ஆட்சிகளும்
அடைக்கலம் பெற்றிருந்தன…. ”

சில புரட்சியாளர்கள் குறைந்த காலமே வாழ்ந்தாலும் வரலாற்றின் மிகப்பெரும் உந்துசக்தியாக நீக்கமற நிறைந்து பெருந்தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். பல முற்போக்கான புரட்சியாளர்களை நீண்ட காலம் வாழ எதிரிகள் விட்டு வைப்பதில்லை. அவர்களின் வாழ்க்கை முழு மலர்ச்சி அடைவதற்குள் உயிர் பறிக்கப்படுகிறது, அவர்களின் பேரிழப்பால் ஏற்படும் கோபக் கனல், எதிரிகள் எதற்கு அஞ்சி அவர்களை அழிக்க நினைத்தார்களோ அதை இன்னும் மும்முரத்துடன் நிறைவேற்றுவதற்கான ஆயுதமாகிறது. அவர்களின் புரட்சிகர சாதனைகள் எழுச்சி தரும் வரலாற்றுச் சின்னங்களாக முழு மலர்ச்சி பெற்று நம் நினைவிலும் செயல்பாட்டிலும் நீங்காது நிறைந்துள்ளன. வரலாற்றிலும் மக்கள் மனதிலும் அவர்களே என்றென்றும் வாழ்கிறார்கள்.

இராக்கிய மக்களின் நினைவில் வாழும் புரட்சியாளர் அப்துல் கரிம் காசிமிற்கு புகழஞ்சலி செலுத்தி நம் வீரவணக்கம் உரித்தாக்குவோம்.

Pin It