நெருங்கிச் செல்லச் செல்ல இயற்கை நம்மை அற்புதப்படுத்தும். இயற்கையின் படைப்பில் வாழும் ஏராளமான உயிரினங்களில் தவளைகளும் ஒன்று. பூமியில் அழிவை சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலில் ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினங்களே முன்னணியில் உள்ளன. 41% ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினங்கள் இன அழிவின் விளிம்பில் வாழ்கின்றன. கேரளாவின் பல பகுதிகளில் 190 ஊர்வன வகை விலங்குகள் வாழ்கின்றன. மழைக்காலம் வந்துவிட்டால் தொடர்ச்சியாக இடைவெளி விடாமல் பாட்டு பாடும் தவளைகள் இதில் ஒன்று.

இவற்றில் மிக மோசமான இன அழிவை மலபார் தவளையினம் (Anaimalai Flying Frog/ False Malabar Gliding Frog) எதிர்கொள்கின்றன. இந்த சின்னஞ்சிறிய உயிரினங்களைக் காக்க கேரளா இடுக்கி மூணாறில் வாழும் ஹேட்லி ரஞ்சித் (Hadlee Renjith) என்பவர் ஒரு குளத்தையே உருவாக்கியிருக்கிறார். இப்போது இதில் இந்தத் தவளையைத் தவிர பூமியில் இருந்தே அழியும் ஆபத்தில் இருந்த 6 தவளையினங்கள் வாழ்கின்றன. இவற்றின் இரை தேடல், இணை சேர்தல், இனப்பெருக்கம் இங்கு நடக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் தவளையினங்கள் அதிகம் வாழும் செழுமையான பகுதி.

ஐம்பதிற்கும் மேற்பட்ட புதிய தவளையினங்கள் மூணாறில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல இனங்களும் பூமியில் இங்கு மட்டுமே காணப்படுபவை. 2000ம் ஆண்டில்தான் ரஞ்சித் இயற்கையை அறிந்தார். ஊரில் வேலையில்லாமல் இருந்தபோது சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிய ஒரு நிறுவனம் அவரை அழைத்தது. வெறுமனே போய்ப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் சென்றார். இயற்கையை, மூணாறைப் பற்றி அப்போது அவருக்கு எதுவும் தெரியாது.renjith and frogவருகை தந்தவர்களில் பெரும்பாலோனோரும் வெளிநாட்டவரே. ஆரம்பத்தில் தகவல்களை கூகுளில் இருந்து எடுத்தே ரஞ்சித் இடங்கள் பற்றிய விவரங்களைக் கூறி வந்தார்.

அப்போதும் அவருக்கு அதிக காலம் அந்த வேலையில் இருப்போம் என்ற நம்பிக்கை இல்லை. இதற்கு இடையில் ஏராளமான ஆய்வாளர்கள் மூணாறுக்கு வருகை புரிந்தனர். இவர்களில் பலர் சொல்லி ரஞ்சித் தவளைகளைப் பற்றி புரிந்து கொண்டார். பறவைகள், பாலூட்டிகள் பற்றித் தெரியும் என்றாலும் தவளைகள் பற்றி எதுவும் தெரியாது. வழிகாட்டிகளில் இருந்தும் விவரங்களைச் சேகரித்தார். சிறிய உயிரினங்களைப் பற்றிய அறிவும் தவளைகள் பற்றிய ஆர்வமும் இதனால் ஏற்பட்டது.

தவளையினங்களும் மூணாறும்

மூணாறில் மிக மோசமான இன அழிவை சந்திக்கும் 15 தவளையினங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. பாம்புகள், புழுக்களும் இங்கு அதிகமாக வாழ்கின்றன. இங்கு ஏலத்தோட்டத்திற்கு நடுவில் பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்தப்படாத 60 ஏக்கர் பரப்பில் விண்ட்மயர் எஸ்டேட்டுக்குள் தவளைகளுக்கான இரண்டு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு தவளைகளின் எண்ணிக்கை அதிகம்.

வழிகாட்டியாக பணி புரியும்போது ரஞ்சித் முதல்முறையாக மலபார் தவளையைப் பார்த்தார். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த குளத்தில் நீர்வரத்து குறைந்தபோது அங்கு வாழ்ந்த தவளைகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இதன் பிறகு தவளைகளுக்காக தனியாக ஒரு குளம் உருவாக்க ரஞ்சித் திட்டமிட்டார். முதல் குளத்திற்கு தவளைகள் வரத் தொடங்கின. இதைத் தொடர்ந்து அடுத்த குளத்தையும் இவர் வெட்டினார். தார்ப்பாலின் விரிப்பைப் பயன்படுத்தியே இந்த இரு குளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 

பறக்கும் தவளை

பறக்கும் திறன் உடையவை என்பதால் இவை பறக்கும் தவளைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பச்சை நிறத்தில் இருக்கும் இதன் உடலின் மேற்பகுதியில் சிறிய கறுப்புநிறக் கோடுகள் காணப்படுகின்றன. மற்ற இனத் தவளைகளுடன் ஒப்பிடும்போது இவை அளவில் பெரியவை. இவற்றில் பெண் தவளைகள் 7 முதல் 8 செண்டிமீட்டர் நீளமுடையவை. இவை இணைசேரும் இயல்பு சுவாரசியம் நிறைந்தது. நீண்டது. மாலை ஆறு மணிக்குப் பிறகு பெரும்பாலான ஆண் தவளைகளும் பெண் தவளைகளை கவர்வதற்காகப் பாடத் தொடங்கி விடும்.

பெண் தவளைகள் இலைகளிலேயே பெரும்பாலும் முட்டையிடுகின்றன. முட்டையிட வசதியாக பெரிய இலைகள் கிடைக்கவில்லை என்றால் சிறிய இலைகளை பரப்பி வைத்து பெரிதாக்கி அதன் மீது முட்டையிடுகின்றன. பெண் தவளை ஒரு திரவத்தை சுரந்து அதன் மீது தன் காலை வைத்து பரப்பியபிறகு அதில் முட்டையிடுகிறது.

முட்டைக்குப் பாதுகாப்பு

சுமார் இரண்டு மணிநேரம் பெண் தவளையின் உடலைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆண் தவளை பிறகு பிடியை விட்டுவிட்டு நகர்ந்து செல்கிறது. பெண் தவளை இலையில் முட்டையிட்டு வேறு இலைகளை எடுத்து அதை மறைத்து வைக்கிறது. மெல்ல இதை மூடி ஒரு புனல் போலாக்குகிறது. ஆறேழு மணிநேரம் இந்த இரண்டு இலைகளும் நன்றாக ஒட்டியிருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு பெண் தவளை அந்த இடத்தை விட்டு செல்கிறது.

தலைப்பிரட்டையாக இருக்கும்போது இதன் தலை ஒரு கடுகின் அளவே உள்ளது. இதனுடன் வெள்ளை நிறத்தில் ஒரு வால்பகுதியும் உருவாகிறது. இது இலைக்கூட்டில் இருந்து விடுபட்டு மெதுவாக நீரில் விழுகிறது. ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து குளத்தில் இருக்கும் இவை வெளியில் வருகின்றன. முதலில் பின்னங்கால்களும் பிறகு முன்னங்கால்களும் உண்டாகின்றன. ஒரு மாதத்தில் இவை தவளையாக மாறுகின்றன.

பச்சைப்புலி

புதிதாகப் பிறந்த தவளைக் குஞ்சின் வெளிப்பகுதியில் இலையின் வெளிப்புறத்தில் காணப்படுவது போல சிறிய கறுப்பு கோடுகள் இருக்கும். வயதிற்கு வரும்போது இந்த கோடுகள் நுணுக்கமாகப் பார்த்தால் மட்டுமே தென்படும். இவை மங்கலானதாக இருக்கும். இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பச்சை நிறத்தில் கறுப்புக் கோடுகள் உள்ளதால் இது பச்சைப்புலி (green tiger) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்திய வன உயிரிகள் அறக்கட்டளையின் (WTI) தவளைகளுக்கான முதல் திட்டம் இது. இதுவே ரஞ்சித்தின் முதல் திட்டமும். பறவைகள், பாலூட்டிகளைப் பாதுகாக்க இந்த அறக்கட்டளை ஏற்கனவே பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. பறக்கும் மலபார் தவளை போன்ற அழிந்துவரும் தவளையினங்களைக் காப்பாற்ற வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி ரஞ்சித் அறக்கட்டளையின் உதவியை நாடினார். திட்டம் வெற்றி பெறுமா என்று அறக்கட்டளையினர் கேள்வி எழுப்பினர்.

கடைசியில் நிதியுதவி கிடைத்தது. ஒரு வார கால உழைப்பின் முடிவில் குளம் வெட்டப்பட்டது. அருகில் இருக்கும் அருவியில் இருந்து நீர் எடுத்து வரப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு தவளை குளத்திற்கு வந்தது. பிறகு குளத்தைச் சுற்றி வண்ணத்துப்பூச்சிகள், புழுக்கள், சிலந்திகள் போன்றவை வரத் தொடங்கின. குளம் வெட்டப்பட்டு ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் கழித்து மலபார் தவளையினமும் குளத்திற்கு வந்து சேர்ந்தது. இப்போது குளத்தைச் சுற்றி வேறு பல இனங்களைச் சேர்ந்த தவளைகள் இங்கு வாழ்கின்றன.

காணாமல் போகும் இயற்கையும் உயிரினங்களும்

இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறக்கட்டளையினர் இப்பகுதியில் வாழும் தவளைகளைக் கண்காணித்து அறிய மூன்று ஆய்வாளர்களை அனுப்பியுள்ளது. வாழிட இழப்பே பெரும்பாலான தவளையினங்களின் அழிவிற்குக் காரணம். காடுகள் பல துண்டுகளாக மாறிவிட்டன. தேங்கிக் கிடக்கும் நீர் இல்லை. அப்படியே இருந்தாலும் அது அசுத்தமான நீரே. இதனால் தவளைகளின் அடைக்கல பூமியாக ஒரு காலத்தில் இருந்த இடங்கள் இப்போது இல்லாமல் போய்விட்டன.

மூணாறில் முன்பு பல புல்வெளிப்பிரதேசங்கள் இருந்தன. ஆனால் இப்போது அவற்றில் பல அழிக்கப்பட்டு அந்த இடங்களில் பல தேயிலைத் தோட்டங்கள் செயல்படுகின்றன. இதனால் இங்கு வாழ்ந்து வந்த பல தவளையினங்கள் காணாமல் போயின. இது தவிர இப்பகுதியில் சிறியதும் பெரியதுமான பல சோலைவனங்கள் இருந்தன. இந்த வனங்கள் அழிக்கப்பட்டு பல யூகலிப்டஸ் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதுவும் இந்த உயிரினங்களின் வாழிட இழப்பிற்குக் காரணம்.

காலநிலை மாற்றம், வாழிட இழப்பு போன்றவற்றால் இதுபோன்ற சின்னஞ்சிறிய உயிரினங்கள் பூமியில் இருந்தே ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுகின்றன. இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் இவை சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றன. இவை காட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வதும் இத்தகைய விபத்துகளால் குறைகிறது. இதனால் இவற்றின் நடமாட்டம் குறைக்கப்படுகிறது.

புறக்கணிக்கப்படும் சிறிய உயிரினங்கள்

சாலையின் குறுக்கே யானை இருந்தால் வாகன ஓட்டிகள் கவனிக்கின்றனர். ஆனால் தவளை, பாம்புகளை எவரும் கவனிப்பதில்லை. இலட்சியம் செய்வதுமில்லை. இரவு பயணம் செய்யும்போது சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்த தவளைகளை ஏராளமாகக் காணலாம். இப்பிரச்சனைகள் சிறிது கவனம் வைத்து செயல்பட்டால் தீர்க்கப்படும்.

பூச்சிக்கொல்லிகள் மற்றொரு பிரச்சனை. இந்த உயிரினங்கள் அவற்றின் தோல் வழியாகவே சுவாசிக்கின்றன. இதனால் நீர் அவற்றிற்கு அவசியம் தேவைப்படும் ஒன்று. மழைக்காலங்களில் இவை சுறுசுறுப்பாக செயல்படக் காரணமும் இதுவே. ஆனால் தேயிலைத் தோட்டங்கள், மற்ற இடங்களில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவது அதிகமாக இருந்தால் அவற்றை சுவாசிப்பதன் மூலம் தவளைகள் கொல்லப்படுகின்றன.

இந்த நச்சுப்பொருட்களின் பயன்பாடு ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கிறது. மாதத்திற்கு மாதம் புதிது புதிதான நச்சுப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது இந்த உயிரினங்களை வெகுவாகப் பாதிக்கிறது. பகல் நேரத்தில் இவை அதிகம் வெளியில் காணப்படுவதில்லை. செடிகளுக்கு இடையில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. நச்சுப் பூச்சிக்கொல்லிகள் இந்த உயிரினங்களின் உடலில் நேரடியாகச் சென்று பாதிக்கின்றன. உடன் மழை பெய்தால் இவை அதிகம் பாதிக்கப்படுவதில்லை. இல்லையெனில் இவை உயிரிழக்க நேரிடுகிறது.

சிறிய உயிரினங்களும் பாதுகாக்கப்படவேண்டும். இன்று புலிகளுக்கு பாதுகாப்பு திட்டம் இருக்கிறது. புலிகள் இப்போது மூவாயிரத்திற்கும் கூடுதலாக உள்ளன. ஆனால் கேரளாவில் புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் ஒரு தவளையினம் இப்போதும் வெறும் 300 மட்டுமே இருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது.

வருமானத்தில் ஒரு பகுதி

புலிகள் போல உள்ள பெரிய உயிரினங்களைப் பாதுகாப்பது போல தவளைகள் போன்ற சிறிய உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். சுற்றுலா மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் பல செயல்கள் இயற்கையை அழிக்கிறது என்று கூறும் ரஞ்சி தன் வருமானத்தில் ஒரு பகுதியை இயற்கையைப் பாதுகாப்பதற்காக ஒதுக்கி வைக்கிறார்.

நாம் அலட்சியமாகக் கருதும் தவளைகளைப் பாதுகாக்க பாடுபடும் இந்த மனிதர் தன் செயலால் சூழல் பாதுகாப்பில் உயர்ந்து நிற்கிறார். சூழலையும் உயிரினங்களையும் பாதுகாக்கப் போராடும் இவர் போன்ற போராளிகள் இருக்கும்வரை இயற்கைக்கு அழிவில்லை என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் ஏற்படுகிறது.

** ** **

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/special-pages/world-environment-day-2023/hadlee-renjith-the-man-who-made-sustainable-environment-for-frogs-1.8617351

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It