flower against guns2021 அக்டோபர் மாதத்திலிருந்து உக்ரைனின் எல்லைப்பகுதிகளில் ரஷ்யா தனது படைகளைக் குவித்து வந்தது. செயற்கைக்கோள் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இந்தச் செய்திகள் உலகுக்குக் கிடைத்தன. அப்போதிருந்து எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யாவின் போர் தாக்குதல், பிப்ரவரி 24 2022 அன்று தொடங்கியது.

ஆனால் ரஷ்ய அதிபர் புடின் இதனைப் போர் என்றோ படையெடுப்பு என்றோ குறிப்பிடவில்லை. ‘a special military operation’ அதாவது ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு மக்களின் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 2014ஆம் ஆண்டு, ரஷ்யா உக்ரைனின் கிரிமியா என்னும் பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து, எப்போது வேண்டுமானாலும் இப்படிப்பட்ட ஒரு போர் நடக்கலாம் என்கிற நிலை நீடித்து வந்தது.

1991இல் சோவியத் யூனியன் உடைந்தபோது உக்ரைன் தனிநாடாக விடுதலை பெற்றது. உக்ரைன் ஐரோப்பாவில் ரஷ்யாவிற்கு அடுத்த பெரிய நாடாகும். அன்றிலிருந்து உக்ரைனை நேட்டோ (NATO) எனப்படும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகளின் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பும், ரஷ்யாவும் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிகள் எடுத்து வருகின்றன.

உக்ரைனை ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே அதனுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள ரஷ்யா தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனை உக்ரைன் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. யார் ஒருவரும் இன்னொரு நாட்டினர் தங்களுடைய இன மொழி அடையாளத்தை நசுக்கும்போது அதனை அனுமதிக்க மாட்டார்கள்.

உக்ரைன் ரஷ்யாவின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான நாடு என்றும், உக்ரைன் மேற்குலகின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருகிறது என்றும், அது ஒரு தனி நாடு இல்லை என்றும் ரஷ்ய அதிபர் புடின் கருத்துகளைத் தொடர்ந்து முன்வைத்தார்.

ரஷ்யாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு, அய்ரோப்பிய ஒன்றியத்துடன் பொருளாதார ஒன்றிணைதலை நிராகரித்த அன்றைய உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச்சை எதிர்த்து 2013ஆம் ஆண்டு உக்ரைனில் பெரிய அளவில் போராட்டம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து விக்டர் யனுகோவிச் உக்ரைனிலிருந்து தப்பி ரஷ்யாவிற்குச் சென்றார். பின்னர் ரஷ்யா கிரிமியாவை வாக்கெடுப்பு மூலம் கைப்பற்றியது.

அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பில் உக்ரைன் இணைந்துவிட்டால், ரஷ்யாவின் எல்லைகளுக்கு அமெரிக்காவால் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதாலும், அய்ரோப்பாவில் ரஷ்யாவின் செல்வாக்குப் பின்னுக்குத் தள்ளப்படும் என்பதாலும், உக்ரைன் NATOவுடனோ, அய்ரோப்பிய ஒன்றியத்துடனோ இணைந்துவிடுவதை ரஷ்யா விரும்பவில்லை. ஆனால் உக்ரைன் அதிபர் வொலொடிமர் ஜெலென்ஸ்கியோ அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் NATOவில் உக்ரைன் இணையும் வகையில் செயல்பட்டார்.

இப்போது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது. இரு தரப்பிற்கும் ஆதரவாக நாடுகள் அணி சேருகின்றன.

அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கும் ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கும் இடையில் பந்தாடப்பட்டது உக்ரைன். உக்ரைனின் உரிமைப் பிரச்சினைகளை ரஷ்யா சீண்டிப் பார்த்தது என்றால், அமெரிக்கா உக்ரைனைப் பகடைக்காயாய்ப் பயன்படுத்தி ரஷ்யாவைத் தூண்டிப் பார்த்தது.

இப்போது இந்த நாடுகளின் ஆளும் வர்க்கத்தினரும், பொருளாதாரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் முதலாளித்துவ வர்க்கத்தினரும், ஒன்றும் அறியாத பொது மக்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்கியுள்ளனர். அதிகார வேட்கை கொண்ட நாடுகளால் மக்கள் அகதிகளாக்கப் பட்டிருக்கின்றனர்.

இன்று உலக நாடுகள் ஒவ்வொன்றும் சங்கிலித் தொடராய்ப் பிணைக்கப்பட்டிருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான போர் என்பது, அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்கும். கொரோனா என்னும் நோய்த் தொற்றால் பல கோடி மனித உயிர்களை இழந்து, பல கோடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, மனித இனம் மீண்டு முன்னேறி வரும் வேளையில், அதிகாரப் பசிக்கு மீண்டும் உயிர்களையும், உடைமைகளையும் இழந்து மனித குலம் குமுற வேண்டுமா?

அய்க்கிய நாடுகள் அவையில், ரஷ்யா உடனடியாகவும், முழுமையாகவும், நிபந்தனையற்றும் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், அனைத்துப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், ரஷ்யாவிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இது நல்ல விளைவுகளை ஏற்படுத்த வேண்டும்.

போரின் கொடுமைகளை நேரில் கண்டவர்கள் எவரும் மீண்டும் போருக்கான சூழல் உருவாகுவதைக் கற்பனைகூட செய்து பார்க்க மாட்டார்கள். இந்தச் சூழல் பல நாடுகளுக்கு இடையேயான போராக மாறிவிடாமல், பதற்றம் தணிய வேண்டும், பக்குவம் அடைய வேண்டும், அமைதி நிலைக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமும் ஏக்கமும் ஆகும்.

எல்லைகளை விரிவாக்க உயிர்வாங்கும் மனிதர்களே, உங்கள் மனதில் வெள்ளைப் பூக்கள் மலரட்டும்!

Pin It