உலகிலேயே போதை மருந்து கடத்தலுக்கு அடுத்ததாக அதிகப்படியான பழம் புழங்கும் தொழில் விலங்குகளை கள்ள வேட்டையாடி கடத்துவதுதான். அரசின் அலட்சியம், நிர்வாகத்தின் பொறுப்பின்மை, மக்களின் விழிப்புணர்வு குறைவு காரணமாக நமது காட்டுயிர்கள் கணக்கு வழக்கின்றி அழிகின்றன. இந்தக் கூற்று எவ்வளவு தூரம் உண்மை? கீழே உள்ள விவரங்களைப் படியுங்கள்:

இந்தியாவில் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த புலிகளின் எண்ணிக்கை சராசரியாக 40,000. 70களில் புலி பாதுகாப்பு செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பிறகும்கூட, தற்போது புலிகளின் எண்ணிக்கை 1500க்கும் குறைவு என்பதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரே ஒப்புக்கொள்கிறார். ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா, மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா போன்ற புலி சரணாலயங்களிலேயே அவை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. புலிகளின் அழிவுக்குக் காரணம் அவற்றின் தோலுக்கு சர்வதேச சந்தையில் கிடைக்கும் விலை. புலித் தோல் ஒன்றின் அதிகபட்ச விலை ரூ. 10 லட்சம். சீன மருத்துவ முறையில் புலியின் உறுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. –

சர்வதேச சந்தையில் சிறுத்தைப் புலி தோலின் விலை ரூ. 3 லட்சம். நேபாளத்தில் ரூ. 30,000. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கும், அங்கிருந்து மற்ற ஊர்களுக்கும் சிறுத்தைகள் கொல்லப்பட்டு கடத்தப்படுகின்றன. –

ஒரு காலத்தில் மத்திய கிழக்கு ஆசியாவிலுள்ள ஈரான் வரை பரந்த பரப்பில் வாழ்ந்த ஆசிய சிங்கங்கள் இன்றைக்கு குஜராத்திலுள்ள கிர் என்ற ஒரே ஒரு காட்டுப் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 360 வரை எஞ்சியுள்ளன. உள்ளன இனப்பெருக்கத்தால் இவை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. –

இந்தியாவில் யானைத் தந்தம் ஒரு கிலோ விலை ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை. அதே நேபாளத்தில் ரூ. 25,000. இதற்காக யானைகள் நாடு முழுவதும் கொல்லப்படுகின்றன. –

சர்வதேச சந்தையில் இந்திய காண்டாமிருக கொம்பு ஒன்றின் விலை ரூ. 4 முதல் 7 லட்சம். சீன மருத்துவம், பாரம்பரிய மருத்துவத்தில் மூடநம்பிக்கை காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் வடகிழக்கு மாநில காடுகளில் பெருகிக் கிடந்த இவை, இன்றைக்கு அவை அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் காசிரங்கா சரணாலயத்தில் 1855 காண்டாமிருகங்களே உள்ளன. –

இந்தியாவில் 78 பறவை வகைகள் அழியும் ஆபத்தில் உள்ளன. அவற்றில் 13 அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவை: இமாலய காடை, பிங்க் ஹெடட் டக், வெள்ளை வயிற்றுக் கொக்கு, மஞ்சள் திருடிக் கழுகு, வெண்முதுகு பிணந்தின்னிக் கழுகு, இந்திய பிணந்தின்னிக் கழுகு, சிறிய அலகு பிணந்தின்னிக் கழுகு, வங்க வரகுக் கோழி, சைபீரிய கொக்கு, (சோஷியபிள்) ஆள்காட்டி, கரண்டி மூக்கு உள்ளான், ஜெர்டான் கல்குருவி, காட்டு ஆந்தை –

நாம் பயன்படுத்தும் அனைத்து மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில் பெரும்பாலானவை குரங்கு, முயல், எலி போன்றவற்றிடம் முதலில் பரிசோதிக்கப்பட்ட பிறகே நமது பயன்பாட்டுக்கு வருகின்றன.

- ஆதி

(பூவுலகு நவம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

Pin It