வலதுபக்கம் தென்படும் பெரிய பாறை மேட்டில் தேனடைபோல் பறவைகள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன. இடதுபக்கமுள்ள மேட்டில் டப்பா படம் காட்டப்படும் சினிமா கொட்டையில் உட்கார்ந்திருக்கும் கூட்டம்போல ஏதோ கொஞ்சம் இருக்கிறது. இவை ஒதுக்கப்பட்டவை. இவை ஜோடி கிடைக்காத ஒண்டிக்கட்டைகள். காதலில் தோல்வியடைந்ததால் இனப்பெருக்கம் செய்துகொள்ளும் தகுதியையிழந்தவை. இந்த சோதாக்களுக்கு சந்ததிகள் இல்லாது போவது ஒருவகையில் நல்லதாகப் போய்விடுகிறது. மேலும் பல சோதாக்கள் உருவாகாமல் இருக்குமல்லவா.

Birdsமாதமொருமுறை சலூனுக்குப் போகாவிட்டால் தலைமுடி காடுபோல வளர்ந்துவிடுகிறதல்லவா. மக்கள்தொகையும் அப்படித்தான். கட்டுப்பாடு இல்லாவிட்டால் வச வசவென்று பெருகிவிடும். இதற்காகத்தான் குடும்பக்கட்டுப்பாடு அது இது என்று பல வரம்புகள் வைக்கப்படுகின்றன.

ஆனால் என்றைக்காவது காகங்கள் ஏன் பெருகுவதில்லை, குருவிகள் எப்போதும் ஒரே எண்ணிக்கையில் உள்ளன என்று யோசித்துப் பார்த்ததுண்டா? அவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறதே தவிர அதிகரிப்பதாகக் காணோம்.

கரப்பான் பூச்சி, எலி, போன்றவை சிலநேரங்களில் பெருகி தொல்லை கொடுப்பதுண்டு. தானாகவே அவை ஒரு கட்டுக்குள் அடங்கிவிடுகின்றன. விலங்குகள் எப்படியோ தம் இனத்தொகையை எப்போதும் ஒரே சீராக வைத்துக் கொள்கின்றன.

மிருகங்களின் எண்ணிக்கை உயர்ந்துவிடாமல் எப்போதும் ஒரு அளவில் இருப்பதற்கு கிடைக்கும் தீனியின் அளவு, இயற்கையாக ஏற்படும் நோய், இன்னொரு விலங்கு அடித்துச் சாப்பிட்டுவிடுவது, அல்லது விபத்து போன்றவை காரணம் என்று நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை.

சிங்கத்துக்கு மேலே ஒரு வேட்டை மிருகம் இல்லாதபோது அது எப்படி சாகிறது? புலி, சிறுத்தை, ராஜாளி, கழுகு, பருந்து போன்ற வேட்டையாடிப்பிழைக்கும் மிருகங்ககள் தாமாகவே செத்தால்தான் உண்டு. அவற்றை அடித்துக்கொல்ல வேறு எதற்கும் துணிச்சல் கிடையாது. பின் எப்படி அவற்றின் எண்ணிக்கையும் காடுகளில் மிகாமலிருக்கிறது?

சொல்லுவீர்கள்..... கிடைக்கின்ற தீனியின் அளவுக்கேற்ப அவற்றின் எண்ணிக்கை அமையும் என்று. அதாவது பசி, பட்டினியால் குறிப்பிட்ட அளவு செத்துப்போகின்றன என்று நினைக்கிறீர்கள். அதுவும் இல்லை. வேட்டை மிருகமோ, ஏன் பொறுக்கித் தின்று பிழைக்கும் மிருகம்கூட பட்டினியால் செத்ததாகச் சரித்திரமே இல்லை. தொடர் வறட்சி, காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாக வேண்டுமானால் பஞ்சம் ஏற்பட்டு பசியால் செத்திருக்கலாம். அது எப்போதாவதுதானே!

நோய் முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லமுடியாது. மனிதர்கள் வளர்க்கும் கோழிப்பண்ணைகளில்தான் கொள்ளை நோய் ஏற்படுகிறது. ஆனால் காட்டில் கொள்ளை நோய்தாக்கி மொத்தமாக அழிவதென்பது கேள்விப்படாத விஷயம். எனவே மிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் கட்டுக்கோப்பாக இருப்பதின் இரகசியம் என்ன என்பதை புதிய கோணத்திலிருந்து பார்ப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

எல்லைப்போராட்டம்

உங்களுக்குத் தெரியுமா ஏன் நாய்கள் நிற்கின்ற பொருள் வாகனமாக இருந்தாலும் மரமாக இருந்தாலும் அதன் மேல் பின்னங்காலைத் தூக்கி சிறுநீர் கழிக்கின்றன என்று? ஒவ்வொரு நாய்க்கும் சொந்தமாக தெரு உண்டு அந்தத் தெருவில் வேறுநாய் அதன் அனுமதியில்லாமல் நடமாட முடியாது. நாய் தன் பேட்டையை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் இப்படி சிறுநீர் தெளித்த அடையாளம் செய்தாக வேண்டும். மிருகங்களும், பறவைகளும் இப்படி நில உரிமையைக் காப்பாற்றுவதில் பயங்கரமாகப் போராடினாலும் தேவைக்கு அதிகமாக நில வரம்பை அதிகரிப்பதில்லை. ஒவ்வொரு மிருத்திற்கும் அல்லது மிருகக் கூட்டத்திற்குமென்று வாழ்விட எல்லை உள்ளது. அதை அவை எப்பாடுபட்டாவது காப்பாற்றியாகவேண்டும். குட்டிகளுக்கும் குஞ்சுகளுக்கும் போதிய தீனி கிடைக்கவேண்டுமானால் அதற்கான வேட்டைத் திடலும் வேண்டுமல்லவா!

கடற்கரையில் பறந்து திரிந்து கடலில் மீன்பிடித்து வாழும் பறவைகள், கடல் மணலிலேயே பள்ளம் பறித்து கூடுகளைக் கட்டுகின்றன. ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம் கூட்டமாக கடற்கரையில் மணலைக் குவித்து கோபுரமாக்கி நடுவே பள்ளமிட்டு அதில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. ஒரு பறவையின் மணல் குவியலுக்கு சற்றுத் தள்ளித்தான் மற்றது கூடுகட்டுகிறது. நெரிசல் மிகும்போது கூடுகளுக்கிடையே உள்ள இடைவெளி கொஞ்சம் குறையலாம். ஆனால் நிச்சயமாக கூடுகளுக்கிடையே இடைவெளி இருந்தே தீரும்.

கூடுகட்ட இடம் பிடிப்பதில் பறவைகளிடையே போராட்டம் ஏற்படும்போது, வல்லமையுள்ளவை வெல்கின்றன. கூடுகட்ட இடம் கிடைக்காத பறவைகளுக்கு பிழைக்க தீனி கிடைத்தாலும், தமக்கென்று சந்ததிகளை உருவாக்கிக்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. உண்மையில் தீனி கிடைக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை, அங்கே கிடைக்கும் ‘ரியல் எஸ்ட்டேட்’ தான் விலங்கின் இனத்தொகையை நிர்ணயிக்கிறது.

கூட்டமாக வாழும் பழக்கமுடைய பறவைகளும், மிருகங்களும் தனித்தனியாக ரியல் எஸ்டேட் அமைப்பதில்லை. கூட்டமாகத்தான் இடம் பிடிக்கின்றன. எனவே கூட்டத்தில் அங்கத்தினராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தால்தான் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஒரு மந்தை அல்லது கூட்டத்தில் இத்தனை உறுப்பினர்கள்மட்டும்தான் இருக்கவேண்டும் என்ற எழுதப்படாத ஒரு குழுதர்மம் பறவைகளிடம் காணப்படுகிறது. உதாரணமாக, ஒரு கூட்டத்தில் 300 பறவைகள்தான் இருக்கமுடியும் என்று வைத்துக்கொண்டால், 301 ஆக வரும் பறவைக்கு அக்கூட்டத்திற்குள் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்காது. அது கூட்டத்திற்குள் சேர முயலும்போது வேறொன்றை விரட்டியடிக்க வேண்டும். அப்போது போட்டி ஏற்படும். போட்டியில் தோற்றுப் போய் கூட்டத்தில் சேர இயலாவிட்டால் ஜோடிப்பறவை கிடைக்காது.

ஒவ்வொரு கூட்டத்திலும் தலைவர் ஒருவர் இருப்பார். அவருக்குக்கீழே இரண்டாம் நிலை மூன்றாம் நிலை தலைவர்களும் இருப்பார்கள். மீதமுள்ள உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து வரையறை செய்யப்பட்ட எண்ணிக்கையுடைய குழு ஏற்படும். குழுவில் இடம்பிடிப்பதும் ஆட்சி வரிசையில் குறிப்பிட்ட இடத்தைப் பிடிப்பதும் திறமையைப் பொறுத்து அமைகிறது. இதை பெக்கிங் ஆர்டர் (Pecking Order) என்கிறார்கள்.

குழுவில் தனது அந்தஸ்த்து என்ன, வரிசையில் எங்கிருக்கிறோம் என்கிற நினைப்பும் அறிவும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இருக்கும். இந்த அமைப்பு எப்போதும் குழுவின் அளவை ஒரே சீராக வைக்கிறது. குழுவுக்குள் சேர்க்கப்படாமல் வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களுக்குத் தனி குழு அமைக்க வாய்ப்பிருக்கிறது. அது காட்டின் அளவுவைப் பொருத்தது. காடு பெரிதாக இருந்தால் இன்னொரு என்ன எத்தனை குழு வேண்டுமாலும் அமையலாம். இது குரங்குகள், மான்கள், சிங்கங்கள், மீன்கள், பறவைகள் போன்ற சகல உயிரிகளனைத்துக்கும் பொருந்தும்.

ஒவ்வொரு விலங்குக்கும் அனைத்து உறுப்பினர்களின் அடையாளமும் அத்துப்படி. அடிக்கடி உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் கணக்கிட்டுக் கொள்கின்றன.

காகங்கள், தவிட்டுக்குருவிகள் சில சமயம் தந்திக்கம்பிகளில், அல்லது புதர்களில் மாநாடு போட்டுக்கொண்டு சள சளவென்று கத்திக் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ‘காக்கா ஸ்கூல்’ என்று தாத்தா சொல்லுவார். அவை பள்ளிக்கூடம் படிப்பதில்லை தமது குழுவின் கூட்ட நெரிசலை எடை போடுகின்றன.

காலை அல்லது மாலை போன்ற சந்திநேரங்களில் மரங்களில் பறவைகளின் ஒலி பேரிரைச்சலாகக் கேட்கும். ஏன் இப்படி சத்தம் போடுகின்றன என்று நான் நினைத்ததுண்டு. அவை தம் குழுவின் அடர்த்தியைக் கணித்துக் கொள்ள இப்படி சத்தம் செய்கின்றன. உண்மையில் நிலத்தகராறுகள் அங்கு நடைபெறுகின்றன. குழுவிலிருந்து வெளியேற்றம், அல்லது ஆள் சேர்ப்பு ஆகியவை அப்போது நடைபெறுகின்றன.

விலங்குகள் ஆண்டு முழுவதும் இப்படி நிலத்தகராறில் இறங்குவதில்லை. சுமுகமாக சுதந்திரமாக வாழ்ந்து வந்தாலும் இனப்பெருக்கத்திற்கென்று ஒதுக்கப்படும் ஒரு சில மாதங்களில் மட்டுமே ரியல் எஸ்ட்டேட் பிரச்சனை தலைதூக்குகிறது.

கிடைக்கும் வாழ் ஆதார நிலஅளவே உயிரினங்களின் இனவிருத்தியின் அளவைக் கணிக்கிறது. நில ஆதாரம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதால் உயிரினங்களின் எண்ணிக்கையும் இயற்கையில் சீராகவே பராமரிக்கப்படுகிறது. ஜனநெரிசல், பார்க்கிங் பிரச்சனை, பட்டா கேட்டு சாலை மறியல், தர்ணா, தொற்று நோய், கலாச்சார கேடுகள், லா ஆண்டு ஆர்டர் பிரச்சனைகள் ஏதுமில்லை. கோர்ட்டுமில்லை, வழக்குகளுமில்லை.

Birdsஇயற்கை ஒரு தானியங்கி இயந்திரம் போன்றது. தன்னைத்தானே சமச்சீராக காத்துக்கொள்கிறது. மனிதன் வேட்டையாடி வாழ்ந்தபோது, அவனது ஜனத்தொகை ஒரே சீராக இருந்தது. என்றைக்கு மனிதன் வேளாண்மை, மாட்டுப் பண்ணை போன்றவற்றை ஏற்படுத்திக்கொண்டானோ அன்றிலிருந்து இயற்கையின் கட்டுப்பாட்டிலிருந்து அவன் விலகிவிட்டான். அதன் விளைவாக கட்டுப்பாடற்ற மக்கள் வெள்ளத்தில் சிக்கி அவதிப்படுகிறான்.

மாலை வேளைகளில் ஸ்டார்லிங் என்ற பறவைகள் இப்படி வானத்தில் திருவிழா நடத்துகின்றன. சொந்தங்கள் சந்தித்துக்கொள்ளும் நேரம். ஒவ்வொரு பறவையும் தன் இனத்தின் அங்கத்தினரைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு. நெரிசல் அதிகமாக இருக்கும்போது இனப்பெருக்க ஆசை அவற்றிடையே குறைகிறது. நெரிசல் குறையும்போது இனப்பெருக்க ஆவல் அவற்றிடையே மீதூறுகிறது. இதன் மூலம் இப்பறவைகள் ஜனத்தொகையை கிடைக்கும் தீனியின் அளவுக்கு ஏற்றாற்போல் காப்பாற்றிக் கொள்கின்றன.

‘பிளாக் பக்’ எனப்படும் மான்களில் இரண்டு காளைகள் ஒத்தைக்கு ஒத்தை என்று பலப்பரிட்சை நடத்துகின்றன. வென்ற மானுக்கு இடம் சொந்தமாகிறது. தோற்றது இடத்தை காலிபண்ணிவிடுகிறது. சொந்தமாக இடமில்லாத மானுக்கு பெண்மான் கிடைப்பதும் அரிது. இதன் மூலம் இனப்பெருக்க வாய்ப்புகள் கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது.

பிளாக் கிரௌஸ் என்ற காட்டுக்கோழிகளில், ஆண்கள் அடிக்கடி இப்படி சடங்கு முறையில் முறைத்துக் கொள்கின்றன. இதில் தோல்வியுறும் ஆண்கள் விரட்டப்படுகின்றன. அவை ஒதுங்கியிருப்பதால் சந்ததிகளை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பினை இழக்கின்றன. 

- முனைவர் க.மணி
பயிரியல்துறை, பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்